Monday, 2 April 2018

இரவல்த் தாய்மண் !

சென்ற ஈஸ்டர் விடுமுறையில், நாடு கொஞ்சம் வெறுத்து போனதால்,மூன்று நாட்கள் காடு,மலை எண்டு மைனஸ் குளிரில உசிர் உள்ள நோர்வேயியன் நண்பர்களுடன் இயற்கைக்கு சிநேகமகா அலைந்ததால், ஆன்லைன் இலற்றோனிக் நண்பர்களுடன் தொடர்பில இருக்கவில்லை, மறுபடியும் பழைய வாழ்க ஆரம்பித்து அரைத்த மாவையே இனி அரைக்கப் போறான்,,

                                              எனக்கு நெருக்கமான ,பணக்கார நோர்வேயிய நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். மிகவும் வசதியான வாழ்க்கை வாழும் அவர்கள் இயற்கையின் அதிசயங்களை நேரடியாகவே சென்று பார்த்து உணரும் அலாதியான ஆர்வமும் உள்ளவர்கள் ,ஒருநாள்

                                                " இந்த ஈஸ்டர் விடுமுறையில் என்ன செய்யப்போறாய், பியரைக் குடிச்சுக்கொண்டு நாசமாப் போகாமல் , பிரயோசனமா ஏதாவது செய்யலாமே, நாங்கள் காடுமலை நடந்து சுற்றி அலைய மவுண்டின் ஹைக்கிங் போறம் நீயும் வாறியா? வாறதெண்டால் சொல்லுப்பா " எண்டு கேட்டார்கள், 

நான் இதுக்கு முதல் மவுண்டின் ஹைக்கிங் போனதேயில்லை, வாழ்கையில் போகாத பாதைகளில் ஒரு நாள் புதுமையாகப் போய்ப் பார்ப்பதுதான் சுவாரசியம் என்று நினைச்சுப்போட்டு , சரி இதையும்தாண்டி என்ன வரப்போகுது என்று ஜோசிதுப்போட்டு ,

"பெண்கள் வருகிறார்களா?"

                                              எண்டு அப்பாவியாக , வாழ்க்கைக்கு முக்கியமான அந்தக் கேள்வியைக் கேட்டேன்,

"பெண்கள்தான் அதிகம் வருகின்றார்கள், "

" யார் யார் எல்லாம் வருகினம், "

" ஜோசிக்காதை,உன்னோட பெஸ்ட் ப்ரென்ட் சிசிலியாதான் ஹைக்கிங் லீடர் , "

என்று  சொன்னார்கள். சிசிலியா வாறாள் என்றால் அதுவே ஒரு தீபாவளிக் கொண்டாட்டம் , அதனால அவளிடமே கேட்டேன் 

" ஓ, என்ன எல்லாம் கொண்டு வர வேண்டும்,சிசிலியா  "

" பியர் அல்கஹோல் தவிர வேற என்ன விருப்பமோ ,எல்லாம் கொண்டு வரலாம் "

" ஹஹஹஹா, அய்யோ, என்னோட வீக் பொயிண்டில பிடிச்சு அடிக்கிறிங்களே "

" இல்லைப்பா. மவுண்டின் ஹைக்கிங் உண்மையில் எப்படி கடுமையான பாதகமான வெளியில் நிலைமைகளைச் சாதகம் ஆக்கி தப்பி வாழ்வது என்பது பற்றியது "

" அப்பிடியா, சரி முக்கியமா என்ன எல்லாம் கொண்டுவர சிசிலியா"

" தோளில கொழுவுற ட்ரவலிங் பையில் நொறுக்குத்தீனியும் ,தண்ணிப் போத்திலும் மட்டும் கொண்டுவா, "

"அட, இவளவு சிம்பிளா இருக்கே  சிசிலியா"

"ஆமாம், இயற்கையோடு வாழுறதே சிம்பிள் தானே "

" வேற ஒன்றும் தேவையில்லையா "

" உன் கால்களில் திடம் இருந்தால் போதும் மிச்சம் நாங்க காடுகளில் உனக்கு எப்படி வாழுறது என்று காட்டுறோம் "

" காட்டுக்குள்ளே அப்படி என்னதான் இருக்கு உயிர் வாழ, சிசிலியா"

" எல்லாமே இருக்கு,, காடு சொல்லித்தரும் எல்லாம்  முதலில இறங்கடா கழுதை ,, வீணாப்போன விளக்கம் கேட்டுக்கொண்டு இருக்கிறாய் "

" ஹ்ம்ம்,முன்னம் பின்னம் காடு மலை ஏறி ,பழக்கம் இல்லையே சிசிலியா"

" டேய் நாங்கள் எல்லாருமே ஒருகாலத்தில் காட்டுக்கு இருந்துதான்டா நாட்டுக்குள்ள வந்தோம் ,,அதை நினை "

" சரி  உன்னை நம்பி வாறன் சிசிலியா"

" இல்லை  என்னை நம்பாதே,,உன்னை நம்பு,,உன் மனோதிடத்தை நம்பு செம்மறி "


                                               எண்டு சொல்ல ,இதுக்குமேல என்ன ஜோசிக்க இருக்குது எண்டு போட்டு ,"நானும் ரெடி என்றேன் ",

காடுகள் மலைகள் சுற்றி அலையும் இந்த இயற்கைக்கு நெருக்கமான இந்த "mountain hiking" என்பது தலைமுறைகளாக ஸ்கண்டிநேவியர்களின் கலாச்சாரம், அவர்கள் ரத்தத்தில் ஊறி உள்ள விசியம்! இளையவர்களே அதில் தங்களை இணைத்துக்கொண்டு தங்கள் இருப்பின் அடையாளங்களைத் தேடுவார்கள்
                     
                                                       அப்புறம் நோர்வே நீண்ட பெரிய நாடு. இங்கே காடுகள் மலைகள் தான் முக்கால்வாசி நிலப்பரப்பை ஆக்கிரமித்து அழுக்கான காபனீர் ஒக்சைட்டை உள் இழுத்து தூய்மையான ஓட்சிசனை வெளிவிட்டு சுத்தமாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் முல்லைக் கொடியுடை வேந்தனின் நாடு.

                                                     மலைகள் என் தாவணியை விலக்கி என்னை நன்றாகவே ரசித்து விடு எண்டு முகடுகளை முகில்களுடன் உரச விட்டு நீட்டி நிமிர்ந்து படுத்துக்கொண்டிருக்கும் அழகை அனுபவிக்க விரும்புபவர்களின் லிஸ்ட் இல் ஆர்டிக் வட்ட வட துருவத்தில் இருக்கும் நோர்வே முக்கியமான ஒரு நாடு.

சிசிலியா என்னோட பெஸ்ட் ப்ரென்ட். என்னை எப்போதும் கோவேறு கழுதை, மோட்டு எருமை,உருப்படாதவன், மட்டி,மடையன் என்று அன்பாக அழைப்பாள். ஆனாலும் என் அம்மாவின் அன்புக்கு நிகரானவள். அவளோட மட்டும் காரைக்கால் அம்மையார் போல தலையால நடந்து இந்த உலகத்தை சுற்றினாலும் அலுக்கவே அலுக்காது .

                                                          அந்த அலைச்சல் முழுவதும் சிசிலியா காடுகளில் நின்ற மரங்களின் பெயர்கள், பறவைகளின் பெயர்கள் ,புதர்களின் பெயர்கள்,மலர்களின் பெயர்கள் எல்லாம் எனக்கு சொல்லிக்கொண்டு வந்தாள் .அவள் பாடசாலை நாட்களில் அவற்றின் பெயர்களை மனப்பாடம் செய்து படித்ததாகக் சொன்னாள்

                                                              " கரக் புறக் "எண்டு கற்கண்டு போல காலுக்குள் நெரிபடும் உறைபனியை மிதித்துக் கொண்டு பல மைல் நடந்து நடுக்காடுக்குள் போனபோது, பாதைத்தடம் இரண்டாகப் பிரியும் ஒரு இடத்தை வந்தடைய ,மனவெளி எங்கும் கவிதை பாய,அருகில் வந்த சிசிலியாவின் கையை பற்றிப் பிடித்தேன் ,அவள் திடுக்கிட்டு

" இப்ப எதுக்கு என் கையை பிடிச்சே,சொல்லு உருப்படாத கழுதை , என்னவோ ஜோசிக்கிறாய்,சொல்லு பா என் கோவேறு கழுதை ?" 
                                                  
                                                என்றாள்,நான் அதுக்கு

" இந்த பாதை பிரிவதைப் பார்க்கும்போது ரொபேர்ட் பிரெஸ்ட் எழுதிய Less travelled path கவிதை நினைவு வந்தது ,சிசிலியா,,வேற நீ நினைக்கிற மாதிரி வில்லங்கமா ஒன்றும் இல்லை, சிசிலியா "

                                                         என்றேன் . அவள் என்னோட கைய இன்னும் இறுக்கிப்பிடித்து

" ஹஹஹஹா, வில்லங்கமா என்னவும் இருந்தாலும் ,காட்டுக்குள்ளே அதிலயும் ஒரு ரொமாண்டிக் திரில் இருக்கு மடையா ,,அது உனக்கு தெரியுமாடா,மோட்டுக் கழுதை, "

" ஹ்ம்ம்,,அதுவும் தெரியும் ,கொஞ்சம்போல "

"சரி ,விடு எனக்கும் அந்தக் கவிதை ரெம்பப் பிடிக்கும்,

" ஹ்ம்ம்,,அப்புறம் அந்தக் / கன்றுக்குட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தேன் / கவிதை மறந்துவிட்டியா? சிசிலியா "

" எருமை மாடு, உனக்கே தெரியும் ரொபேர்ட் ப்ரெஸ்ட் கவிதைகள் ஒரு முறை வாசித்தாலும் மறக்கவே முடியாது தெரியுமா "

" ஹ்ம்ம்,,அது உண்மைதான் சிசிலியா "

" ஆனாலும் காட்டுக்குள்ளே ரெண்டு பாதை பிரிவதைப் பார்த்தவுடன் ரொபேர்ட் ப்ரெஸ்ட் இன் கவிதையை நினைவுக்குக் கொண்டு வந்த ஒரே ஆள் நீ தாண்டா "

                                                   என்றுசொல்லி,தொடர்ந்தும் கையை பிடித்துக்கொண்டு ,கொஞ்சம் விலங்கமான விசியம் சொல்ல தொடங்கினாள் ........

ஆனாலும் இந்தப் பாதையில் கோடைகாலத்திலும் ஒருமுறை வந்திருக்கிறேன்," காடெல்லாம் பிச்சி ,கரையெலாம் செண்பகப் பூ ,நாடெல்லாம் மணக்குதடி நல்லமகன் போறபாதை " என்ற நாட்டார் பாடல்போல அது ஜவ்வனமாக அப்போது இருந்தது...

                                                          இப்ப உறைபனி குளிரிலும், பறவைகள் பட்டுப்போன மரங்களின் அடியில் புழுக்கள் தேட,அவைகளை மர அணில்கள் பூசாண்டி காட்ட, எங்களைப் பார்த்து திடுக்கிட வெள்ளை நரி "இப்ப எதுக்கு எங்க ஏரியாவுக்குள்ள வாரிங்க?"எண்டு அதிர அதுக்கு பக்கத்தில நிண்ட ஒரு குள்ள நரி "இவங்கள் எல்லாம் சும்மா ஜுஜுபி "எண்டு சமாதானம் சொல்ல

                                                            கிளைகளிலும் ,இலைகளிலும் இயற்கை உறைபனிய அள்ளி எறிய , அந்த மரங்களின் கீழே " நானும் இருக்கிறன் " எண்டு சிற்றோடைகள் சத்தமில்லாமல் ஓட, இதமான வடதுருவ சூரியன் மிதமாக சூடு கொடுக்க, வடதுருவக் குளிர் காற்று காது நுனியைக் கடிச்சு " லாலி லாலி லல்லோ லாலி லாலி லல்லோ "என்று கோரஸ் பாட ..

                                                                    சும்மா சொல்லக்கூடாது , உண்மையை அஷ்டாங்க நமஸ்காரமா அடைக்கலம் தந்த இந்த இரவல்த் தாய்மண்ணின் மீது விழுந்து வணங்கிச் சொல்லுறேன் நோர்வேயின் காடுமலைகளில் இயற்கை இன்னும் தலை வாழை இலை போட்டு விருந்துக்கு வரச்சொல்லி நிறைகுடம் தழும்பாத இயற்கையாகவே இருக்கிறது !

.
../// 02. 04. 2013 ////


1 comment :