Monday, 2 April 2018

அப்படியொரு லயம், .....!

நேரடியாக முகத்துக்கு முன்னும் மறைமுகமாக முதுகுக்குப் பின்னாலும் நமக்கெல்லாம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் விமர்சகர்கள் இருக்கிறார்கள். பொதுவெளியில் என்னைப்போல எழுதுகிறேன் பேர்வழி என்று அடிக்கடி எழுதிக்கொண்டு இருக்கும் அத்துப்பூச்சிகளுக்கு கொஞ்சம் வில்லங்கமான விமர்சகர்கள் எப்போதும் இருப்பார்கள்.

                                                   ஆங்கிலத்தில் solicitations என்று சொல்கிறார்களே அந்தமாதிரியான விரும்பத்தகாத மயக்குமொழிப் பரிந்துரைகளில் சிலர் இருப்பார்கள். அவர்கள்தான் கழுதைப்புலிகள் .
                                                                 என்னோட பள்ளிக்கால நண்பன் சொப்ட்வார் எஞ்சினியர் ஒருவன் நாளொரு வெப் சைட்டும் பொழுதொரு ஒன்லைன் கேம்ஸ்ஸுமாக மணிக்கணக்கில் கணனியில் நேரம் செலவிடுபவன். அவனின் விமர்சனங்கள் எப்போதும் மேலே சொன்ன ஆங்கில வார்த்தையின் அரத்தப்படுத்தலுக்குரியவை. ஆனாலும் தனிப்பட என்னுடைய வளர்ச்சியில் கவனிப்புக்கு உரியவை.
                                                                 அண்மையில் கவிதை பற்றி ஒரு உரையாடல் வெளிக்குள் படைப்பிலக்கியத்துக்குக் கிஞ்சித்தும் சம்பந்தமில்லாத வெல்வேறு துறைசார் அறிவியலில் வெள்ளியாகப் பிரகாசிக்கும் நான்கு நண்பர்களோடு " கொன்பிரன்ஸ் கால் " என்பதில் சங்கமித்து அதில் என்னையும் இழுத்துக்கொண்டு போய் விட்டு கூழுக்குத் தேங்காயா அல்லது குரங்குக்குத் தேங்காயா என்பது போல அநியாயத்துக்குப் போய் மாட்டிய என்னை வைச்சே நாலுபேர் வேடிக்கை பார்க்கும் சம்பவம் நடந்தது.
                                                               எப்போதும்போல நான் வைரவரோட நாய் போல சிவனே என்று நாடிக்கு முண்டு கொடுத்துக்கொண்டு அமைதியாக இருந்து என்ன ஆரியக்கூத்து நடக்குது என்று கேட்டுக்கொண்டு இருந்தேன். ஒரு முடிவோடு என் கால் ரெண்டையும் லெக் போட்டு விழுத்தி வார்துறதுக்குத்தான் வந்திருக்கிறாங்கள் என்று சிவசத்தியமா தெரிந்தாலும் ஒன்றாகக் குட்டையில் ஊறின மட்டைகள்தானே என்பதில் என் கால்களுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது.
                                                           உண்மையில்ப் " படைப்பிலக்கியத்துக்குக் கிஞ்சித்தும் சம்பந்தமில்லாதவர்கள் " சொல்வதை அதிதீவிர எழுத்து முயட்சிகளில் இருக்கும் யாருமே ரெண்டு காதையும் கொடுத்துக் கேட்பதில்லை. மிகச் சரியாகச் சொன்னால் " படைப்பிலக்கியத்துக்குக் கிஞ்சித்தும் சம்பந்தமில்லாதவர்கள் " தான் நேர்மையான வாசகர்கள் என்று நான் நினைப்பது. 
                                            அவர்களின் சாதாரணமான உலகத்துக்குள் நம்மால் ஒரு சில எழுதுவடிவங்களை எடுத்துச் சென்று அவர்களை பாதிக்க வைக்கமுடியுமென்றால் அதுதான் உண்மையான ஆக்க இலக்கிய வெற்றி என்று எப்போதும் நம்புபவன் நான்,நீங்கழும் என்னை மாதிரி நினைச்சால் உங்களுக்கு அந்த சாவல்களின் அர்த்தம் புரியும், நீங்க வேற  என்ன மாதிரி நினைக்கிறீங்களோ , அது என்னோட பிரச்சினை இல்லை !

                                                     " டேய் மச்சான் கவிதை என்றால் என்ன ? சொல்லு ,உண்ணானத்தான் கேட்க்கிறேன், எது மச்சான் கவிதை ?, சரி இதுக்காவது பதில் சொல்லு,மச்சான் எதுக்காகக் கவிதை எழுதவேண்டும் ? " சொல்றாப்பா, அதை எதுக்காக மற்றவர்கள் வாசிக்க வேண்டும் ?"

                                                          என்று ஆரம்பத்திலேயே பொறுத்த இடத்தில கையை வைச்ச மாதிரி கேள்வியுடன் அவன் வந்தான்...இந்தக் கதையை தொடர்ந்து எழுதுகிறேன்,,,, இப்போதைக்கு முகநூலில் எழுதியவைகளை உங்களோடு இங்கே தொகுப்பாகப் பகிர்ந்து கொள்கிறேன் 


ஒரு
கதகதப்பான கனவு,
அதில்
காத்திரமான நிகழ்வுகளோ
அழுத்தமான 
நெருக்கங்களோ இல்லை ,
மிகப் பிரியமான
சினேகிதி.
தன்னை நம்பச்சொல்லி
நாலாவதுமுறையாக
இரங்கிக் கேட்க்கிறாள் !
என்
பிடிவாதம்
ஆதிக்கம் செலுத்துகிறது,
அவள்
ஆதங்கங்கள்
வலுவிழந்துகொண்டிருக்க
ஐந்தாவதில்
ஜன்னல் வெளிச்சம்
விழித்து எழுந்துவிட்டேன் !

.........................................................................

வாசல்க் கோலத்தில்
வானவில் நிறங்கள்,
மார்கழியில்
மிகப் பெரிய மழை,
பஜனைகளில் 
ஊதுவத்தி வாசனை ,
இளம் தென்றலும்
இளவேனிலக்காலமும் ,
பூசி மெழுகிய
தாழ்வாரங்கள்,
இன்று
பிரதோஷமாயிருக்கலாம் !
ஒரு
நொடிப்பொழுதில்
இன்னொரு வாழ்வியலுக்குள்
கடத்திவிடுகிறது
மனப்பிரமை !

..................................................................

ஒரு
குருட்டு நம்பிக்கை
தொலைந்து விட்டது.!
அவ்வளவுதான் !
எப்படித் தொலைந்தது?
எதிராகச்
செயல்ப்பட்ட .
எல்லாரையும்
விருப்பு வெறுப்பற்று
அணுகிக்கொண்டிருந்ததால்
காற்றில்
பரப்பப்பட்டு
வட்டத்தைத் தாண்டி
நினைவிலிருந்து
மீறத்துணிந்தவர்களோடு
எல்லைகளை விஸ்தரிப்பதில்த்
தொலைந்துபோய்விட்டது.!

......................................................................

மேகங்களை
நோட்டமிட்டுக்கொண்டு
வாசலோரம் நின்று
புகைபிடித்த
வளையங்களை 
பலூன்களாக்கி
சுழறவிட்டுக் கொண்டிருந்தேன்
நான் ,
எதிர் வீட்டுத்
தொடர்மாடி ஜன்னலில்
ஒரு நீள்வட்ட
முகம்பார்க்கும் கண்ணாடியில்
தனது இளமை
திருத்தமாக இருக்கிறதாவென
சோதிக்கிறாள்
வெள்ளைப்பெண் ,
உள்மனப்
போராட்டங்களின்
குறுக்குவெட்டுத் தோற்றங்களுக்கு
அறிமுகங்கள்
தேவையில்லை !

.........................................................................

நீதான்
யாரேனுக்கும்
முகம் கொடுத்துக்
கதைக்க மாட்டாயே !
உன்னைப் பற்றி 
என்ன எழுதி விளக்க முடியும்?
அவர்கள்
வித்தியாசமாகிப்போன
அணுகுமுறையின்
உலகங்களைச் சேர்ந்த
கேலிச் சித்திரங்கள் !
நானும் நீயும்
பிரக்ஞை ஜீவிக்க
பிறக்கும்போதே
நமக்குள்
நிர்ணயிக்கப்பட்டவர்கள்!

.................................................................

தனக்குரியதுபோல 
காத்திருந்து 
பின்முதுகில் கடித்தது,
விளக்கைப் போட்டு 
படுக்கை 
மடிப்புஉறைகளைக்
காற்றில் உதறி விசுக்கினேன்,
ஒரு
மூட்டைப்பூச்சி
அற்ப ஜீவன்
ஆனால் புத்திசாலி !
இருட்டு நோக்கி ஓடமுன்
"விளக்கை அணைத்துவிடு "என்றது
பெருவிரலால்
ஒரேயொரு நசி !
சூடான
சிவப்புப் புள்ளி
அது எனக்குரிய ரத்தம் !


................................................................

சப்பாத்துக்
கால்களில் கீழே
உறைபனிப்பாளங்கள்,
உச்சிக்கு மேலே
துர்வாச சூரியன் 
தன்னை
முழுமையாக
ஒப்புக்கொடுத்தது போல
உஸ்ணம் இல்லாவிடாலும்
வியர்துக்கொட்டும்
வாசனைகள்
இன்னும் வெளிப்படவில்லை, .
அப்படி ஓர் அழகு;
அப்படி ஒரு பாவம்.
அப்படியொரு லயம், !


.....................................................................

ஏதோவொரு திருப்தி
உன்
பதில்கள்
தன்நிகழ்வாக
எவ்வளவு 
வெளிச்சம் வெளிப்படுத்தவேண்டுமோ,
அவ்வளவு வெளிப்படுத்துகிறது !
உன்
சமரசங்கலற்ற
கேள்விகள்
அடர் இருட்டிலும்
மிகவும் எச்சரிக்கையாக
ஒரு
மிகப்பெரிய பரப்பை
எனக்குள்
விரித்துவைக்கப்
போதுமானதாயிருக்கிறது !.


.................................................................

திறப்புப்போட்டு
அறைந்து மூடவேண்டிய
அவசியங்களில்லை ,
இந்த
மேசை இழுப்பானுக்குள் 
சில
தீராக் கடன் கடிதங்கள்,
ஏதோ சில
காகிதங்களில் ஒப்பந்தங்கள்,
ஒரு
செல்லரித்துக்கொண்டிருக்கும்
சிறுகதைத்தொகுப்பு,
ஒரு
நொடிக்கொரு நேரம் தவறும்
கைக்கடிகாரம் ,
இவைதவிர
பத்திரப்படுத்துவதற்கென்று
வேறெதுவுமேயில்லை !
ஆனாலும்
சாவி போடுவதுக்கு
ஒரு எலித் துளையும்
உபரியாக ரெண்டு சாவிகளுமிருப்பதால்
சம்பிரதாயமாகவெப்போதும்
அடித்துப் பூட்டிப்போட்டு
உறுதிப்படுத்த இழுத்துப்பார்க்கிறேன் !


..............................................................................

பலவீனமான
பங்குனி மாதக்கடைசி
வெய்யிலில்
நிழல்கள்
வரிசைகளைத் 
தவறவிடுகின்றன,
மேதாவித்தனங்களை
அவிழ்த்து வைத்திருக்கு
ஊசிக்குளிர்,
காட்டிக்கொள்ளாமல்
பூட்டியிருக்கும்
வயதான
வீட்டுக்கு வெளியேயும்
காத்திருக்கிறது
உறைபனி !


.......................................................................

உன்னதமான
ஒழுங்கமைவுகளுக்கு
முக்கியத்துவம் கொடுக்கும்
ஒருவராயிருக்கலாம்
அந்த ஓய்வூதியர், 
என்னோடு
பேருந்துத் தரிப்பிடத்தில்
காத்திருந்தார்.
வந்தேறிகள்
அதிக எண்ணிக்கையில்
ஒழுக்கங்கெட்டவர்கள்போல
என்னைப்
அசட்டையாகப் பார்த்தார்.
அவருடன்
பயணிக்க வந்திருந்தாள்
ஒரு சின்னச் சிறுமி,
நிறுத்தத்தில்
வந்து நின்ற நீள்வண்டியில்
நான் அவரைக்
மேல்லெனக் கைத்தாங்கலாகப்
படியேற்றி விட்டேன்.
அவரை முந்திக்கொண்டு
குழந்தை நன்றி சொல்கிறாள். !
வளர்ச்சியடையாத
மனமொன்றில்
எளிதில்
அமிழ்ந்து போகக்கூடியது
நிறத்துவேசம் !


.......................................................................

நேரமொதுக்கி
லயித்திருந்து
பூங்காவொன்றில்
இரைச்சலிலிருந்து நிசப்தத்தை
மொழிபெயர்க்கும் 
அவசியங்கள் எனக்கில்லை !
மனம்
எழுந்து நடமாடும்
நாளொன்றின்
பாதி இரவுகளில்
மலர்களின்
சருகுகளின்
இலை அசைவுகளின்
ஆத்மாவின் ராகங்கள்தானே
கேட்டுக்கொண்டிருக்கு !


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


இதனை வருடங்களில்
இதைத்தானே
கற்றுக்கொண்டேன்.!
இது
மறைக்கப்பட்ட
குற்றவுணர்வாயிருக்கலாம்
ஆனால்
மறுக்கப்படுவதெற்கென்று
சபல நிராகரிப்புகள்
இதிலொன்றுமில்லை .
தூண்டப்படும்
மெல்லுணர்வுகள்
குளிரிரவின்
அதிகாலைத் தூக்கத்துக்கு
அவசியமாயிருக்கிறது !


..............................................................

ஒரு
இரயில் பயணம்,
முன்னிலைப்படுத்துகிறது
முன்னிருபவள்
உள்ளிறங்கி வாசிக்கும் 
தினசரி செய்தித்தாளில்
முன்பக்கமாக
வெகுண்டெழும்
இரண்டு முக்கிய செய்திகள் !
ஒன்று
முறைதவறிய
அரசியல்வாதியொருவர்
பெண்ணிடம் அடிவேண்டியது !
இரண்டாவது
பாதிரியாரொருவர்
ஓரினப் பாலினச் சேர்க்கையை
ஒத்துக்கொண்டது !
பரவசம் அவள் முகத்தில்
மின்னி மறைகிறது ,
அவள்
உள்பக்கத்தில்
எதைப்பற்றி வாசித்திருப்பாள் ?
முகம் சோர்ந்துபோய்
சலித்துக்கொள்கிறாள் ,
இப்போது
எதைப்பற்றி வாசித்திருப்பாள் ?
அவள்
நாலாய் மடித்து
குப்பைத் தொட்டியில்
விசிறி வீசியெறிந்து போது
அச்சொட்டாக
நிறுத்தம் வந்தது !
சொல்லாமல்ச் சொல்லி
எல்லாருக்கும் புரியக்கூடாதென்று
பயணங்களும்தான்
வடிவமைக்கப்படுகின்றன !
1 comment :