Monday 30 November 2015

Kaathirunthu Kaathirunth





தமிழ் சினிமா கிராமங்களில் கால்ஊன்றி நிஜத்துக்கு வெகு அருகில் இருந்த எண்பதுக்கள் என் போன்ற இளையவர்களின் இளமைக்கால இசைவரம். அதை இன்னுமொருபடி மேலே காதலோடு கொண்டு போனவர் இசைஞானி இளையராஜா, அதை சொல்லிச் சொல்லியே நினைவுகளின் நதிக்கரையில் கால்களை நனைத்தவர்கள் எல்லாருமே கிறங்கிப்போன பாடல்கள் வந்த ஒரு படம் ‘வைதேகி காத்திருந்தாள்’. 

அந்தத் திரைப்படம் வெளிவந்த நாட்களில் காதல் தோல்விக்கு இன்னுமொரு விதமான அரிதாரம் பூசி வைத்தார் டைரக்டர் ஆர்.சுந்தரராஜன். மிச்ச வேலை முழுவதையும் இசைஞானி இளையராஜா பாடல்களில் சொல்லாமலே சொல்ல வைத்தார். அந்தத் திரைப்படம் வெளியாகி அதில் இசைந்த பாடல்களால் அது ஒரு மிகப்பெரிய ஹிட்டானது.

‘காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போகுதடி ’இந்தப் பாடல் இசைஞானி இளையராஜா போல்க் என்ற folk music கிராமிய இசைவடிவ டெம்போவில் மிக எளிமையாக ஒரு பாடல் இதயத்தை பூத்திருந்து புன்னகை செய்ய வைத்த அதிசயங்களில் ஒன்று. இந்தப் பாடலை பி.ஜெயச்சந்திரனை தொடக்கத்திலும், இடையிலும் ஹம்மிங் கொடுத்துப் பாடவைத்து நாட்டார் பாடல் வரிகளுக்கு ஒருவிதமான கிராமிய அடையாளத்தை இடையில் செருகி அந்தப் பாடலைப் படத்தில் பார்க்காமலே நிறைவாகக் கற்பனை செய்ய வைத்தார்.

அண்மைக்காலமாக சினிமாப் பாடல்கள் இன்ன இன்ன ராகங்களில் வந்திருக்கு என்று பலர் எழுதுகிறார்கள். நானும் கொஞ்சக்காலம் அப்படி பாடல்களைக் தெரிந்த சங்கீத இசை அறிவில் வைச்சுக் கிண்டி, அதை வெஸ்டேர்ன் கிட்டார் ஸ்கேல் உடன் ஒப்பிட்டுக் குழம்பி ,முடிந்தவரை சில பாடல்களின் சுர அமைப்புகளை ராகங்களோடு ஒப்பிட்டு, அது என்ன இராகம் எண்டு கொஞ்சம் சந்தேகத்தில் தான் எழுதி இருக்கிறேன். பலருக்கு கர்நாடிக், வெஸ்டர்ன், ஸ்கேல், கிட்டார் ,போன்றவற்றில் அதிகம் விசியம் தெரியாததால் நான் என்னமோ பெரிய அறிவுக்கு கொழுந்து என்று நினைத்து வாசித்தும் இருக்கிறார்கள்.

ஆனால் இப்பெல்லாம் பாடலின் இராகம் பற்றி சொல்லப் பயமா இருக்கு,அதுக்கு நிறையக் காரணம் இருக்கு ,ஆனால் ஸ்கேல் போன்ற வெஸ்டர்ன் விசியங்கள் சொல்ல முடியும். காத்திருத்தலின் சோகத்தை இசைஞானி இளையராஜா எவளவோ பாடல்களில் பதிவு செய்து இருக்கிறார். நான் நினைக்கிறன் அவரின் மிகச்சிறந்த காதல் ரசம் பிழியும் பாடல்கள் கர்ணரஞ்சினி, தர்பாரிகானடா இரண்டு ராகத்திலும் காலங்களைத் தாண்டி நிக்கவைத்தார். ஆனால் அந்த ரெண்டு ராகமும் மிகவும் கடினம்,ஜோசிக்கவே கடினம், ஆனால் இந்தப் பாடல் சிவரஞ்சனி ராகத்தின் சுர சாயலில் உள்ளது. உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

சிவரஞ்சனி ராகம் பெயரைப்போலவே அழகான, ஆனால் சுரங்கள் குறைவான குறை ராகம், முழுமையான ஏழு சுரங்களும் அதில ஆரோஹணம், அவரோஹணம் இரண்டிலும் இல்லை.அதனால் அதன் வீச்சு எப்பவுமே குறைவு .ஒரு நல்ல இசைஅமைப்பாளர் அந்த சின்னச் சுரஞானக்கோவைக்குள் இறங்கி significant orchestration இக்குத் தேவையான முத்துக்களை எடுத்துக் கோர்த்து ஒரு மாணிக்க மாலை செய்ய முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் இசைஞானி இளையராஜா, அவரைப் பொறுத்தவரை significant orchestration என்பதெல்லாம் சிம்பிள்.

வெஸ்டர்ன் harmonies and string arrangements இல் சொன்னால் ‘காத்திருந்து, காத்திருந்து ’ பாடல் ஒரு மைனர் ஸ்கேல் பாடல். சிம்பிளான Fm என்ற ஸ்கேல் இல இங்கே நான் வாசித்துள்ளேன், இந்தப் பாடலின் தொடக்க ஹம்மிங் வாற இடத்தில ஒரு கோட்ஸ் இடையில் வரும். அப்படி ஒரு கோர்ட்ஸ் தமிழ் சினிமா பாடலில் இன்றுதான் வருவதைக் கவனித்தேன்.

முக்கியமா இந்தக் கரோக்கி பிண்ணனியில் வாசித்த இந்த வீடியோ ஒரியினல் பாடல் போல முழுவதும் இல்லை. இப்படிக் குழப்பங்கள் நிறைய கரோக்கி பிண்ணணியில் பாடல் வாசிக்கும் போது ஏற்படும்.அதனால் தாழ்மையுடன் சொல்லுகிறேன், இதை ஒரிஜினல் பாடல் என்று நினைத்து யாரும் கிட்டாரில் வாசிக்கப் பழக வேண்டாம்.சும்மா என்னமோ கிட்டாருக்க இருந்து என்னமோ சத்தம் வருகுது என்று நினைத்துக் கேளுங்க .
.

No comments :

Post a Comment