Tuesday 11 August 2015

சிதைவின் ராகங்கள்.....

யாழ்பாணத்தில இருந்த புனித யாகப்பர் கோவில் பொம்பர் குண்டு போட்டு அழிந்ததை, திருப்பிக்கட்ட நிதி சேகரிக்க "சிதைவின் ராகங்கள் " என்ற ஒலிநாடா "90"களில்  அந்தக் கோவிலின் பங்கில் உள்ள இறை அடியார்கள் எல்லாரும் சேர்ந்து தயாரித்தார்கள்! கெசட் வடிவில் வந்த  அதை ஆணைக்கோட்டையில் இருந்த,கிறிஸ்தவப் பாடல் இசை அமைப்பாளர் ஜேசு..... மாஸ்டர்,கிடத்தட்ட பத்து பாடல்கள் இசைஅமைத்தார். 

                                                       நான் அந்த நாடாவுக்கு "ரிதம்" கிடார் வாசித்தேன் . இனி நான் சொல்லப்போறது  " சிதைவின் ராகங்களுக்குள் " நான் இசைத்த கிட்டார் வாசிப்பு சிதையாமலே தொலைந்து போன ஒரு காலம் விழுங்கிய  கதை.இது முழுவதும் உண்மைக்கதை போலிருக்கு என்று நீங்கள்  நம்பினால் அது  என் கதைசொல்லி உத்திக்குக் கிடைத்த வெற்றி . அப்படி இல்லை இது சும்மா உடான்ஸ்  உல்டா என்று நினைத்தால் அதுவும் என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் .

                                                   அந்த நாட்களில் சுமாரான தூறல் போல இசை மழை பொழியும் ஒரு இசைக்குழுவில் Bass கிடார் வாசித்த என்னை, அந்த இசைக் குழுவுக்கு "சவுண்ட் சிஸ்டம் " கொடுக்கும்  நாவாந்துறை  "தொம்சன் சவுண்ட்ஸ்" பாலச்சந்திரன், அந்த நாடாவுக்கு "ரேகோர்டிங்கில் " Rytham Guitar வாசிக்க கேட்க, உலக இசை வரலாற்றில் முதல் முதல் ஒரு ஒலிநாடாவில் என்னோட கிட்டார் சத்தம் இரைச்சல் கலந்த சத்தம் ஆகி வந்தது!

                                                      எனக்கு அப்போது  ரிதம்  கிட்டார்  ஸ்டைலா வாசிக்க தெரியும், ஆனால் ஹர்மோனி ஸ்ட்ரக்சர் டெக்னிகல் , அரிதான  கோர்ட்ஸ் அரன்ச்மெண்ட்ஸ், ரிதமிக் ஒர்கேச்ற்றசன் போன்ற  ஒரு ரெக்கோர்டிங் ஆர்டிஸ் இக்கு விளங்க வேண்டிய  சிக்கலான கோட்ஸ் விசியங்கள் தெரியாது,ஆனாலும் மாஸ்டர் பல விசியங்கள் சொல்லி தந்ததால் ஒரு மாதிரி புனித யாகப்பர் புண்ணியத்தில் வாசித்து ஒப்பேற்றினேன். 

                                   ஜேசு....மாஸ்டர் மீசையில்லாத  எழுபதுக்களின் தமிழ் சினிமாவில் வரும் வில்லன் போல இருப்பார். என் எஸ் கிருஷ்ணன் போல பின்னுக்கு சுருட்டி நீவிவிட்ட சுருள் முடி. ஆறடிக்குக்  கிட்ட  நெருங்கும்  உயரமான தோற்றம். அகலமான வட்ட முகம் ,கண்களில் பணிவும் கருணையும் பேசவைக்கும்   அன்பான மனிதர். அவர் பத்து விரல்களில் கறுப்பு வெள்ளைப் பியானோக் கட்டைகள் தவண்டு உருண்டு ஓடிப்பிடித்து விளையாடும் 
                                                               
                                  அந்த இசைப்பதிவு O.L .R சேர்ச்சுக்குப் பின்ன இருந்த அடைக்கல மேரி பாதிரிமாரின் பங்களாவில் நடந்தது. ஆரம்பத்தில் அந்த ரெக்கோர்டிங் ரிகர்சல் ஒத்திகையில் ஆர்மோனியத்தை வைத்து நோண்டி மெட்டுப் போட்ட ஜேசு.... மாஸ்டர், கடசியா ,ரெகொர்டின்கில் பாதிரிமாரின் கிளாசிகல் ஜெர்மன் மரப் grand piano வில அழகாக பூந்து விளையாடுவதை பார்க்க அவரின் பியானோ அறிவு கைகளில்  நடனம் செய்யும் சரஸ்வதி கடாச்சம் உண்மையில்  ஆச்சரியமா இருந்தது !

                      நான்  ஒரு நேரம் தெரியாமல்  ஆர்வக்கோளாறு அதிகமான டும்மாங்குள்ளி. அதால கிட்டாரில் காலநேரம் இல்லாமல் புதுமையாக இசை  யாசிக்கிறேன்  பேர்வழி என்று  எப்பவும் எதையாவது வைச்சு நோண்டுறது . நான் அவர்கள் படிய பாடல்களை இடையே ஓய்வு நேரத்தில "லீடில் " கிடாரில் சும்மா பொழுது போக  வாசிப்பதைக் கேட்டு கொண்டு இருந்த ஜேசு.....மாஸ்டர், ஜோசிச்சுப் போட்டு 

                              " அப்ப ,நான் கொஞ்சம் இண்டர்டக்சன் ,இண்டர்ளு ,பில்லிங்க்ஸ் , லீடில போடுறன் கவர்-அப் பண்ணுரறீரா, டெம்ப்போ எல்லாம் நீர் பிடிப்பீர் போல இருக்கு, மற்றப்படி அதுகள் எங்க வருகுது எண்டு நோட் சீட்டில எழுதித்தாரன்  அதையும் பாடல்கள் இடையில் வரும் பிறி இன்டர்லூட்களில் சேர்க்கலாம் போல இருக்கு   ?"

                          எண்டு கேட்க , ஆரவக்கோளாரில ,நான் மண்டைய ஆட்ட, அந்த மனுஷன் ,  சடார் புடார் எண்டு ,  கிளாசிகல் "BAR NOTATION " எழுதித்தந்தார் ,நான் அதை இங்கிலீசுப் பேப்பரை பார்க்கிறமாதிரி பார்த்துக் கொந்டிருந்தன் ,ஜேசு...மாஸ்டர் பொறுமையானவர்  இல்லாட்டி  என்னைப்போல  ஒரு  அல்லக்கையை  வைச்சு  அவளவு துன்பத்தை அனுபவித்திருக்க மாட்டார்.

                                நான் "போர்மல் சிலபஸ் தியரி" முறைப்படி கிற்றார் படிக்கவில்லை. இப்பவும்தான், அப்பவும்தான் " பார் " என்டா என்னண்டு நல்லா விளங்கும். அதுக்குள்ள நல்லா பூந்து விளையாடுவேன் ,ஆனால் இசைக் குறிப்புகளை நோட் வடிவில் தாள லயம் எல்லாம் தெளிவாக குறியீடுகள் வண்ணாத்திப்பூச்சி முள்ளுக் கம்பிக்கு மேலயும் கீழயும் பறக்கிற மாதிரி  ராகம்,  தாளம், பல்லவியை  வெஸ்டர்ன் கிளாசிகல் இசை வடிவில் எழுதும் "BAR NOTATION "  என்றால் விளங்காது,!

                              நான் முளிகிரத்தை பார்த்திட்டு மாஸ்டர், மென்மையாக 

                          " உமக்கு , பார் நோடேசன் விளங்காது போல கிடக்குது, 

                          "  ஓம்  சேர்  எனக்கு  டப் வடிவில் கிட்டார்  நோட்ஸ் ஓரளவு  விளங்கும் ,,,கிளாசிக்கல் பார் நோடேசன் சுத்தமா விளங்காது "

                             " எனக்கு டப் வடிவில் எழுதத் தெரியாது,,என்ன  செய்யலாம், ஹ்ம்ம்,,,,ஹ்ம்ம்,,,,அதுதான் வேற என்னவும் ஒரு  மாத்து  வழி   இருக்குமோ  என்று ஜோசிக்கிறேன் "

                              "  அப்ப  பின்ன விடுங்க  மாஸ்டர்,,ரிதம்  கிட்டார்  மட்டும்  வாசிக்கிறேன்,எதுக்கு உங்களுக்கு வீண் சிரமம்     "
                                                                          
                              " இல்லை    நீர்  நல்லா  வாசிக்கிரீர்  ஆனால் நோட்ஸ் போட்டால்தான் ரெகொர்டிங்கில் மற்ற வாத்தியக்காரர்  சரியான டைமிங்கில் இடத்தைப் பிடிச்சு  உமக்கு முன்னுக்கும் பின்னுக்கும் டெம்போ விட்டு ஒர்கெஸ்ஸ்டேசன் செய்ய லேசா  இருக்கும், இல்லையா "

                              " ஓம்,,சேர்  அது  உண்மைதான்,,நானும்  அதைக்  கவனித்து இருக்கிறேன் "

,                              " இல்லையோ,,சொல்லும் பார்ப்பம் , இல்லாட்டி  ரெக்கொர்டிங்கில் கேப் விழும்  எல்லோ,,அதுதான்  ஜோசிக்கிறேன்..ஹ்ம்ம் "  

                                 "அதுதான்  நானே  சொல்லுறேன்  என்னை விடுங்க  மாஸ்டர்,  நான் ,ரிதம்  கிட்டார்  மட்டும்  வாசிக்கிறேன் " 
                                              
                                    " இல்லை    நீர்  நல்லா  வாசிக்கிரீர்,   சில  விசியங்கள்  லீட் கிட்டாரில் போட்டால்  கொஞ்சம் ரிச் ஆக  வரும்  பாடல்கள். ஹ்ம்ம் ,,அப்ப  பேசாம , நாளைக்கு வீட்ட வாரும் ,சாருமதி ,வயலினில வாசித்து காட்டுவா" எண்டார் ,"

                 "சாருமதி யார்? "

                              எண்டு கேட்க வாய் வந்தது,  மாஸ்டருக்கு கோபம்வந்து,  சிலநேரம் அதால எனோட எதிர்கால இசைப் பிரபலமாகி மைகள் ஜாக்சன் போல வரும் கனவு பாதிக்கப்படலாம் எண்டு கேட்கவில்லை!

                               மாஸ்டரே  நான் மனதில நினைத்ததை வாசித்தது போல , நெஞ்சில பாலை வார்த்து  ,  

                     " சாருமதி ,என்னோட மகள், அவள்தான்  பைனல் ரெக்கோர்டின்கில் வயலின் வாசிக்கப் போறாள், அவள் கர்நாட்டிக் ஸ்டைலில்  சொல்லி தருவாள்,,நான்  நோட்ஸ்  எழுதி அவளிட்டக் கொடுக்கிறேன்,,அவள்  பொறுமையா சொல்லிதருவாள்,,நீர்  பிடிசிடுவீர்,,பிறகு  உமக்கு  ஏற்ற  மாதிரி  அதை டப்  ஸ்டில்  குறிச்சு  வையும்,,என்ன  நான்  சொல்லுறது  ஓகே  தானே  " என்றார்!

                           அடுத்தநாள் காலையில கிற்றாரை A .K 47போல தோளில கொழுவிக்கொண்டு , ஆணைகோட்டைக்கு சைக்கிளை மிதிசுக்கொண்டு போனால்,அங்க வீட்டில ,மாஸ்டர் இல்லை,சாருமதி மட்டும்தான் நிண்டாள்! அவளைப் பார்க்க சாருகேசி  ராகம் போலவே அழகா,இளமையா ,அம்சமா,அடக்கமா,வேதகாரருக்கே உரிய நட்பான,பந்தா போடாத இயல்பில் வீட்டு வாசலில் வந்து நின்று ,

                                " நான் தான் சாருமதி ,,அப்பா நீங்க வருவிங்க எண்டு சொன்னார் ,,தேத்தண்ணி ஒண்டு குடிச்சுப்போட்டு  நோட்ஸ் அரேஞ்மென்ட்ஸ்  பார்ப்பமா...உங்களுக்கு ஓகே யா  , 

                                     "    ஓம்,,ஓம்.,,,எனக்கு  பிரசினை  இல்லை ,,,உங்க வீடு  சோலைக்கு நடுவில உள்ள மாதிரி குளிர்ச்சியா இருக்கு    "       

                                    "  அப்படியா...நன்றி ..  உங்கட  வீடு  எங்க இருக்கு,,,நெறையத் தூரமா  இருந்து  சைக்கிள்  மிதிசுக்கொண்டு வாறிங்களா "

                                  "    ஓமோம்,,,என்னோட  வீடு  நல்லூர்  கோவிலுக்கு  கிட்ட  இருக்கு. அங்க  இப்படி  வீடுகள்  ஐதாக  இருக்காது,,நெருக்கம்  அதிகம் ."

                                "  ஒ ,,அப்படியா,,நீங்க  சைவைக்காரரா...எப்படி  அப்பாவைத்  தெரியும், பாதர்  மரிய சேவியரின் ,கலா மன்றத்துக்கு  போறனிங்களா    "                                
                                   
                                                "  இல்லை,,,ஜேசு  ..மாஸ்டரை,,தொம்சன்  பாலச்சந்திரன் தான்  அறிமுகம் செய்து வைத்தார்,,ஒரு  இசைக்குழுவில்  கிட்டார் வாசிப்பேன்,,,அதுக்கு தொம்சன்ஸ்  தான் சவுண்ட்ஸ் சிஸ்டம்  கொண்டுவருவார்கள்  "

                                       "  எந்த தொம்சன்ஸ்,,,,,பாலா  மாமா  அவரா,,கொம்போறிமூக்கன் பாம்புபோல  தலையை  ஆட்டுவார்  அவரா...ஹஹஹஹ "

                             " ஓம்,,ஓமோம்,,அவர்தான்  "                                                                                                                              
                                 "   ஹ்ம்ம்,,,அவர் அப்பாவின்  நல்ல  பிரெண்ட்,,நான்  அவரை  வைச்சு  முசுப்பாத்தி விடுவேன்,,எல்லாத்துக்கும்  ஹெக்கே ஹெக்கே  என்று சிரிப்பார் "

                                   "   அப்படியா , பாலா  என்னோடும்  நல்ல  ஒட்டு , நல்ல ஒரு  சவுண்டிங் டெக்னிசியன் ... ஹ்ம்ம்   "       

                                    "  வீடில அம்மா இல்லை உலை வைச்சுட்டு  ,பார்த்துகொள் பிள்ளை என்டுட்டு  ,ஆறுகால் மடம் சந்தைக்குப் போயிட்டா .. "

                             "   சரி,,நீங்க  சமையல்  முடிய  வாங்க,,ரிகர்சல்  பார்க்கலாம்,,நான்  இருப்பேன்,,,நல்ல  காத்து  அடிக்குது  இந்த  வீட்டுக்கு  முன்னாலே     "                    

                                    " அப்பா மறைக் கலா மன்றத்தில் ஏசுவின் பாடுகள் நாடகத்துக்கு மூசிக் பழகப் போயிட்டார் கொஞ்சம் இங்க இருங்க நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன் . ஆனைக்கோட்டைக்கு முதல் வந்து இருகுரின்களா ..."    

                 எண்டு ஏதோ வருசக் கணகில என்னைத் தெரிஞ்ச மாதிரி தன்னை அறிமுகம் செய்தாள் .

                           நான் அவர்கள் வீட்டு வாழவில நிண்ட செவ்விழனி மரங்களை பார்த்துக்கொண்டு வெளிய விறாந்தையில் இருந்தேன் , கல்லுண்டாய் வெளிக் காற்று மானிப்பாய் வீதியைக் கடந்து மெலிதாக அவர்கள் வீட்டு வேப்ப மரம் எல்லாத்தையும் தடவ ,அவர்கள் வீட்டு  வாசலில்,வெளிக் கதவுக்கு மேலே  தேவ மாதாவின் படம் கொழுவி ,அதுக்கு மேல குருத்தோலை போல என்னவோ காய்ந்து போன ஒரு ஓலையை செருகி ,

                      "  ஜீவிதத்தில்  கர்த்தரை மறவாதிரு ...நான் உன்னுடனே எப்போதும் வருவேன் ,

                          எண்டு பைபிளின் வேத வாசகம் எழுதி இருந்தது.  கொஞ்ச நேரத்தில சாருமதி சட்சம சுருதியில் பாடுவது போல இயல்பாக 

                                        "சோறு வடிசிட்டன் ,இனி அம்மா வந்து மிச்சத்தைப் பார்க்கடும், உங்களுக்கு பால் டீயும் எனக்கு, பிளேன் டீயும்  போட்டேன் ,சீனி காணுமா பாருங்க,,, "

                          எண்டு சொல்லிக்கொண்டு வந்து  , முதலில் கொஞ்சம் குழப்பாமா ஜோசிதுப்போட்டு ,

                                " எனக்கு எங்க இருந்து தொடங்கிறது எண்டு தெரியவில்லை , அப்பா நோட்ஸ் எழுதிய பேபரில இருக்கிற பல்லவி ,சரணத்துக்கு இடையில் வார பில்லிங்க்ஸ் கொஞ்சம் பார்ப்பம் "

               எண்டுபோட்டு

                          " முதல் பாடல் ஆபேரி ராகத்தில ,அதுக்கு என்ன கோர்ட்ஸ் பிடிக்கப் போரிங்க? "

                           எண்டு இயல்பாகக் கேட்க அன்றுதான் முதல் முதல் என்னோட வாழ்கையில்  ஒரு அழகான இளம் பெண்ணுக்கு முன்னால என்னோட விதி விளையாட தொடங்கியது....

                      எனக்கு அந்த ராகம் என்ன நாசமறுப்பு எண்டே தெரியாது , ஒரு குத்து மதிப்பில ,உலகத்து கடவுளை எல்லாம் கும்பிட்டு போட்டு  Cm என்ற கோர்ட்ஸ் ஐப் பிடிசன் ,

               அவள் சடார் எண்டு

                           " இது சண்முகப்பிரியா ராகதுக்குதான் பொருந்தும் ,

                           " என்னது "

                         " ஓம் ,,அவரோகணம்  நோட்ஸ்  அப்படிதானே  வரும் "

                            "  அதென்ன "

                             " அய்யோ கடவுளே  அப்பா  போட்டுள்ள நோட்ஸ்  ஹரிகாம்போதி  போல எனக்கு  இருக்கு "

                           "  அய்யோ கடவுளே அதென்ன  "

                          "  போச்சுடா,,அப்பா  விபரம் ஒன்றும் குறிக்கவில்லை ,எனக்கும் குழப்பமா  இருக்கு "

                            " எனக்கு உயிரே போறமாதிரிக் குழப்பாமா  இருக்கே "

                    " ஹஹஹ ,,குழம்ப வேண்டாம்,,நான் சொல்லித்தாரேன் "

                                  "  பிளிஸ்..சொல்லித்தாங்க "

                               "  சரி, ஆனால்  நீங்க  கிட்டார் பிடிக்கிற விதம் ஸ்டைலா இருக்கு. "

                                   " ஹ்ம்ம்,அப்படி ஸ்டைலா பிடிக்க மட்டுமே  எனக்கு  தெரியும் போல இருக்கு,,அதுவும்  உங்களை இப்படி இடக்குமுடக்கா  சந்தித்த பிறகு   "

                                 " இதில என்ன இருக்கு,  எல்லாருமே ஒருவிதத்தில் கத்துக் குட்டிகள் தானே,,நான் உட்பட "

                                       " நான்  என் விதி எப்படிப்போகும் என்ற காலக்கொடுமை தெரியாமல் ,,வந்து உங்களிடம் மாட்டிக்கொண்டேன் போல இருக்கே "

                              " ஹ்ம்ம்,, பிரசினை இல்லை  நான் சொல்லித்தாரேன் "

                     "  பிளிஸ்,,சொல்லுங்க  நீங்க சொல்லுறபடி வாசிக்கிறேன்

                             "முதலில் உங்கள் கிடார் சரியா சட்ஷமம் சுருதியில்  இல்லையே  , சுரங்கள்   பிழைக்குதே, நான் நினைக்கிறன் சரியா  Tune பண்ணப்படவில்லை , முதலில் அதை சரிசெய்யுங்கள்"    என்றாள்  ,

                      நான் கிடாரில் தட்டிய முதல் தட்டிலேயே ,என்னோட கிடாரில் சரியாக சுரங்கள் ஹர்மொனியா சத்தம் வரவில்லை எண்டதை சொன்னது ஆச்சரியமா இருந்தது, அவளின் இசை புலமை அதிரவைக்க , இவளிட்ட சடையல் பருப்பு ஒண்டும் வேகாது எண்டதை நினைக்கப் பயம வந்து  பால் டீயைக் குடிச்சும் நாக்கில தண்ணி வறண்டு போச்சு !

                                வெட்கத்தை விட்டு

                   " சட்ஷமம் என்றால் என்ன நோட் வார கம்பி கிடாரில் " எண்டு கேட்டேன்,,,

                               அவள் " எனக்கும் கிட்டார் பற்றி அதிகம் தெரியாது ,வயலின் தான் தெரியும் அப்பா சொல்லி இருக்குறார்,சட்சமம் தான் Open E நோட் வார கம்பி எண்டு, E Mjor சட்ஷமம் வார கம்பியோட B Major பஞ்சமம் வார கம்பியை ஒரே நேரம் சேர்த்து தட்டினால் ஹர்மோனியா சிங்கரனைசிங் செய்யும் "   என்றாள் 

              எண்டு போட்டு

                 " இதுவும் அப்பாதான் சொல்லித் தந்தார் "

                               எண்டு வஞ்சகம் இல்லாமல் வாயெல்லாம் சூரியகாந்திப் பூப் போல சிரித்தாள்.  , என்ன சீவியமடா இது இந்த சின்னப் பெண்ணிடம் இவளவு வழிந்து கேட்டுக் கற்க வேண்டி இருக்கே எண்டு வந்த வெறுப்பில

                      " பேசாம உங்க அப்பாவுக்கே பிள்ளையாப் பிறந்து தொலைச்சு இருக்கலாமே "

                      எண்டு சொல்ல நினைச்சேன் ,,ஆனால் அவை அடக்கத்தால் சொல்லவில்லை..  

                               கடைசியில் நான் Open E கம்பியை Open B  கம்பியோடு சேர்த்து தட்ட அவள் சொன்ன மாதிரியே ஹர்மோனியா சிங்கரனைசிங் பண்ணி நாதம் கிளம்ப,நான் அவள் முகத்தை முதல் முதல் முழுவதும் பார்க்க  , மாதுளம்பூப்  போல மென்மையான கன்னத்தில் , இரண்டு பெரிய ஜன்னல் போன்ற விழிகளில் சங்கத் தமிழ் மொழி எழுதி, பல்லவ காலச் சிற்றன்ன வாசல்  ஆயிழைச்  சிற்பம் போன்ற அமைதியான முகத்தில் ஒரு வித பணிவு இருக்க,  வகிடு பிரித்து பின்னுக்கு ரெட்டைப் பின்னல் பின்னிய தலை மயிரில் ,கொஞ்சம் முரண்டு பிடித்து முன்னுக்கு சுருண்டு விழுந்த சில  மயிர்க் கற்றைகள் நெற்றியில்

                                  " வேம்பின் அமலை வான் பூச் சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,குன்று தலைமணந்த கானம்சென்றனர் கொல்லோ சேயிழை! நமரே..... "

                         என்று குறுந்தொகைக் கவிதை எழுத,  அவளை நிமிர்ந்து பார்க்காமலேயே வேப்ப மரக்காற்றின் வாசத்தில் வழுக்கி வழுக்கி நான்  விண்வெளியிற் பறந்தேன்......

                                                 அதுக்கு பிறகு சாருமதி வயலினை கொண்டுவந்து, மாஸ்டர் எழுதின நோட்ஸ்களை " சா ,பா ,ரி ,நி ,அரை இடம்,கால் இடம் , அபேரி, இந்தோளம் " எண்டு கார்நாடகதில முழங்க, எனக்கு வயித்தக் கலக்கத் தொடங்கிவிட்டது ,நாசமாப்போன கர்நாடக சங்கீதமும் எனக்கு ஒழுங்காத தெரியாது, முழுமையா அதைப் படிக்க சந்தர்ப்பம் இருந்தும் அதை நான் முழுமையா படிக்கவேயில்லை. அதைவிடக் கேவலம்,ஒரு அழகான பெண்ணிடம் அதை தெரியாது எண்டு சொல்வது,அனுபவித்துப் பார்த்தாதான் அது தெரியம் அந்த அவலம்  !

                 நான் அவள் வயலினை இழுத்து, இழுத்து வாயல கட கட எண்டு யாழ்தேவி போன மாதிரி ,

                                          " இதில ஆதிதாளம் திஸ்ர நடைக்கு மாறுது ......இதில ஒரு சின்ன எட்டுக்கு எட்டு இடைவெளி வருகுது .........இந்த அனுபல்லவி சங்கராபரணம் ,,,,  இதில ஒரு ஹால்ப் நோட் இடைவெளி வருகுது.....இதை அரை இடத்தில தொடங்குங்க .. கடைசிப் பாடல் நீலாமணி ராகத்தின் ஜென்ம ராகம் சிவரஞ்சனி இல வரும் ஆனால் அதில அதிகம் தாய் ராக சாயல் இல்லைப்போல இருக்கே எண்டு  "

                              எண்டு  என்னைக் கேட்டாள் , எனக்கு நீலாமணி சிவரஞ்சனியே தெரியாது,,இதில அதிண்ட ஜென்ம ராகம்,தாய் ராகம் வேற தெரியுமா எண்டது போல  கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் அவள் கேட்கிறள்,,நான் சும்மா இருந்தேன் அவள்  சொல்லுறதை, வெறுமே TV இல் இங்கிலீசு நியூஸ் சொல்லுறதைப் போல பார்துக்கொண்டு இருந்தேன்! அவளுக்கு எப்படியோ அதுகள் எனக்கு விளங்கவில்லை எண்டு தெரிந்து , கொஞ்சம் ஜோசிதுப்போட்டு , சாருமதி கதிரைய கிட்ட இழுத்துப்போட்டு எனக்கு கிட்ட இருந்து சிம்பிளான 1/2/3/ ஸ்டைலில் சொல்லிதர அவளின் தலைமயிரில் இருந்து சந்தனாதித்தைலம் வாசம் வந்தது!

                                          "   அப்பா  போட்டுள்ளா  ராகங்களைக்  கவனிச்சிங்களா ,,கடைசிக்கு  முதல்  பாடல் சிமேந்திரமதிமம் ,,எப்படி  அழகா  இருக்கு அந்த  பாடலின் அனுபல்லவி  கேட்டிங்களா ,,அதைக்  கவனிச்சிங்களா "

                                        "   நான்  உங்களைதான்  இவளவு நேரமும் கவனிசுக்கொண்டிருந்தேன்  "  

                                     " என்ன என்ன சொல்லுரிங்க , சத்தமா  சொல்லுங்க ,சரியாக் கேட்கவில்லை,நீங்களே  வாயுக்க  உங்களுக்கு  மட்டும்  கேட்கிற மாதிரி  முணுமுணுக்காமல் ,இன்னொருக்கா உரத்து சொல்லுங்கோ "

                                  "  நான்  நீங்க  சொல்லிக்கொண்டு இருந்த கிட்டார்  நோட்ஸ் விசியங்களைதான்   இவளவு நேரமும் கவனிசுக்கொண்டிருந்தேன் என்று  சொன்னேன் "

                                      "   அட அட அட ...ஹ்ம்ம்           ஆனந்தராகம் கேட்கும்  நேரம் ,,, ஆனந்தராகம்  கேட்கும் நேரம் "

                                      "  இதென்ன ,,,இது  ஒரு  சினிமாப்பாடல்  எல்லா,,,ஏன்  இதை  இப்ப பாடுறிங்க "

                                         "இந்தப்பாடல்  சிம்மேந்திரமத்திமம்  ராகம்,,,,எனக்கு  நல்ல  விருப்பம் அந்தப்  பாடல்  அதுவும்  அது சிம்மேந்திரமத்திமத்தில் உள்ளதால் "

                                     " அப்படியா ,,நல்லது   "                                                                                                                                                                   
                               கட்டுப்பாடு மீறிப்போன ஆத்தில  நாட்டுக்கோட்டை செட்டியார்  ஒரு மரத்துண்டைப் பிடிச்சுக்கொண்டு குழறிக்கொண்டு போன மாதிரி  "ரிகர்சல்"  ஒருமாதிரி முடிய , சாருமதி கொஞ்சம் களைத்துப்போய் , ஆனால் உற்சாகம் இழக்காமல் ,

                       "உங்களுக்கு களைப்பாக இல்லை என்றால், எனக்கொரு பாடல் கிடாரில வாசிசுக்  காட்டுங்கோ "

                எண்டு சின்னப் பிள்ளைகள் போல சிரிக்க ,

                          நான் அவளுக்கு "இளையநிலா பொழிகிறது " ஐ வைச்சுப் பொழிஞ்சன்!

               அதுக்குப் பிறகு ரேகோர்டிங்கில் சாருவும் பிஸி, நானும் பிஸி , ஒரு நாள் முழுவதும் நடந்த அந்த ரேகொர்டிங்கில் , இசை அமைப்பில் வரும் டெக்னிகல் விசியம் மட்டும் சைகையால பாடல்களுக்கு நடுவே ரேகொர்டிங் தொடங்க முதலும் ,இடையிலும் பேசினோம் ,,,வேற  எந்த விசியமும் பேச சந்தர்பம் கிடைக்கவே இல்லை!,

                                          ,"சிதைவின் ராகங்கள் " ஒலிநாடா யாழ்ப்பான புனித யாகப்பர் கோவிலில் வெளியிட்டு, எனக்கும் அதில வந்து கலந்துகொள்ளச்  சொல்லி ஒரு தகவல் அனுப்பினார்கள் , அதில் இசைக்கருவி வாசித்த எல்லாரையும் தலைமைக் குருவானவர் சந்தித்து கவுரவித்தார். நான் அந்த நிகழ்வு பார்க்கப் போனேன் , அந்த ரெக்கொர்டிங்கில்  சம்பந்தப்பட்ட யாரையும் சந்திக்கவில்லை ! 

                                                            முக்கியமா நான் மேடைப் பக்கமே போகவில்லை, ரோட்டு வெளியே , ஓரமாக இருட்டில நிண்டு "லவுட் ஸ்பீகரில்" இல முதல் முதல் அந்த ஒலிநாடாவைத்  தலைமைக் குருவான பாதிரியார் வெளியிட்ட போது  அவர்கள் போட்ட "சிதைவின் ராகங்கள் " களைக் கேட்டேன். வழமையாகக்  கேட்கும்  கிறிஸ்தவ தவக்காலப் பாடல்கள் போலத்தான் இருந்தது 

                                      லைட் போஸ்ட்டில தலைக்கு மேல கட்டி இருந்த "லவுட் ஸ்பீகரில்" ,சத்தம் காதைக் கிழித்துக்கொண்டு வர ,நான் வாசித்த என்னோட கிடார் சத்தம் அந்தப் பாடல்களில் வருகுதா எண்டு உன்னிப்பாகக்  கேட்டேன் , அந்த "லவுட் ஸ்பீகரில்" ஒரே நேரத்தில எல்லா இசைக்கருவிகளின் சத்தமும் கும்பலில்  கோவிந்தா போல வர நான் வாசித்த என்னோட கிடார் சத்தம் அதில மேல் எழுந்து வரவேண்டிய இடங்களில் கூட அந்த சத்தம் வரவே இல்லை . 

                                                    தகரப் பேணியுக்க சல்லிக் கல்லைப் போட்டுக் குலுக்கின மாதிரி "சிதைவின் ராகங்கள் " அந்த "லவுட் ஸ்பீகரில்" கொஞ்சம் சிதைந்துதான் வந்தது ! மண்ணெண்ணைப் புனல் போல இருக்கும் லவுட் ஸ்பிகரில்  இசை என்பது எப்பவும்  கதைக்கிழிக்க வைப்பதுபோல வரும் ஆனால் இனிமையாக வரவே வராது  என்பதும் முன்னமே தெரியும் 

                              சில வரங்களின் பின் மாஸ்டரை கண்டன் அவர்

                                " அரசன்,ஏன் வெளியிடுக்கு வரவில்லை,பாதர் ,ரிதம் வாசித்த உம்மைப் பார்க்க ஆசைப்பட்டார், அவருக்கு உம்மட ரிதம் பிடித்துவிட்டது, அவரும் ஒரு கிளாசிகல் பியானோ வாசிப்பவர் " என்றார்.

                                                   நான் என்னத்த சொல்லுறது , நீங்களே சொல்லுங்க பார்ப்பம் வந்து வெளியில நிண்டு "லவுட் ஸ்பீகரில்" நான் வாசித்த என்னோட கிடார் சத்தம் தந்த இசைமழையில் நனைத்தேன் எண்டு பொய் சொல்ல விரும்பாமல் , அமைதியாகா அவரிடம் இருந்து ஒரு "சிதைவின் ராகங்கள் " ஒலிநாடாவை வேண்டிக்கொண்டு

                  " நன்றி மாஸ்டர் "

                               எண்டுபோட்டு நைசா வீட்டை வந்திட்டன் 

                                வீட்டை வந்து முதல் வேலையா வீட்டில இருந்த டேப் ரெகார்டரில் அந்த "சிதைவின் ராகங்கள் " கேசட்டை போடுக் கேட்ட நேரம் , சிதையாமல் அருமையான சத்தம் அகோச்டிக் லெவலில் வந்தது , என்றாலும் டெக்னிகலா அதில நான் வாசித்த சில கோர்ட்ஸ் , சில ரிதம் பிழைகள் இருந்தது, அது டெக்னிகலா கிடார் ரேதம் அரென்மென்ஸ் விளன்கியவர்களுக்தான் தெரியும் ,,அதாலா நான் அதை ஒரு பெரிய பிழையா நினைக்கவில்லை ,அதைவிட நானும், டெக்னிகலா சொன்னால் , சும்மா ஒரு கத்துக்குட்டி கிடாரிஸ்ட் தான் அந்தநேரம் .

                                          வீட்டில இருந்த டேப் ரெகார்டரில் அந்த "சிதைவின் ராகங்கள் " கேசட்டை போடுக்கேட்ட நேரம் என்னோட அம்மாவுக்கு கோபம் வந்திட்டுது, 

                                                   "  டேய் நிப்பாட்ரா , இந்த அல்லோலோயா பரம பிதா , பாவ மன்னிப்பு பாட்டை, "

                                           "  ஏன் அதுவும் பக்திப் பாட்டுதானே "

                                          " என்ன பக்திப் பாட்டு  சொல்லு   கண்டறியாத வேதகாரரிண்ட பாட்டை இங்க என்னத்துக்கு போட்டு, அதை எதோ , சினிமா பாடுப்போல ரசித்து கேட்கிறியே,"

                                       "   நல்லா இல்லையா "

                                        " போற போக்கில வேதக்காரனாய் மாறி கழுத்தில குருசை மாட்டிக்கொண்டு, எங்கயும் ஒரு சேர்சில பங்க்குத்  தந்தைக்கு பின்னால நிண்டு சுவிஷசம் சொல்லுவாய் போல இருக்கே ,"

                            " ஹ்ம்ம்,,அதுவும்  நல்லா இருக்கும் போல "

                            "  பொத்தடா வாயை  ,உனகென்ன விசரா?"  எண்டா.

                       என்னோட அம்மா வீடில சைவசமய பக்திப் பாடல்கள் ,அதுவும்  சூலமங்கலம் சகோதரிகளின் "கந்தசஷ்டி கவசம் ", சீர்காழி கோவிந்தராஜன் ,M ,S ,சுப்புலட்சுமி பாடிய சங்கீதம்  சந்தனம் போலத் தடவிய பாடல்கள்,கீர்த்தனைகள், மட்டும்தான் கேட்பா, வேற ஒண்டுமே கேட்கமாட்டா , சினிமாப் பாடலே எழுவத்தி  அஞ்சுக்கு முன் வந்த கறுப்பு வெள்ளைப்  படப் பாடல்கள் மட்டும் தான் விரும்பிக் கேட்பா.   

                              அந்த "சிதைவின் ராகங்கள் " இசை நாடவுக்கு நான் கிடார் வாசித்ததை நான் அம்மாவுக்கு அதுவரை சொல்லவே இல்லை ,,சிலநேரம் அவா கிறிஸ்தவர்களோட நான் அள்ளுப்பட்டு போயிடுவானோ எண்டு பயந்தாலும் என்றோ அல்லது அவாவுக்கு சொல்லி என்ன வரப்போகுதோ எண்டோ சொல்லவில்லை !

                                  முதல் முறையா இனி என்ன வரப்போகுது எண்டு நினைச்சு  

                               " இந்த பாடலுக்கு நான்தான் அம்மா ரிதம் கிட்டார்  வாசித்தேன் " என்றேன்,

                          அம்மா அதிர்ந்து ,திடுக்கிடு, கிட்டவந்து என்னை கொஞ்சநேரம் பார்த்திட்டு,

                           "  அதென்ன ரசம் வைக்கிற கிட்டார் , என்னவோ சொல்லுறாய் எனக்கு விளங்கவில்லை , ஆனாலும் இதை முதலில சொல்லி இருக்க கூடாதா "

                                       எண்டு போட்டு, அந்தக் கேசட்டை முதலில் இருந்து போடசொல்லி ,முழுவதையும் கேட்டுப்போட்டு , முழுவதையும் ஒரு பாடல் விடாம கேட்டுப்போட்டு , என்னையும் டேப் ரேக்கார்டரையும் மாறி மாறி நம்ப முடியாமல்ப் பார்த்தா. நான் அவாவுக்கு அமைதியாக  இதை அவாவுக்கு சொல்லியே ஆக வேண்டும் என்பது போல ..

                                " இல்லையம்மா,  இது  புளி கரைச்சு ஊத்தி உள்ளி மிளகு சீரகம் குத்திப் போடுற ரசம் இல்லை அம்மா,  இது ரிதம் கிட்டார்,ஒரு பாடலுக்கு பிண்ணனியில் ஒத்திசைவா தாள கதியில் இணைந்து கோர்ட்ஸ் பிடிச்சு இசைப்பது "

                           எண்டு முடிந்தவரை சுருக்கமா சொன்னேன், அதுக்கு அம்மா ,

                         " நீ  கிட்டார் அடிச்ச பாடல்கள் எங்கட  கந்தசஷ்டி கவசத்தைவிட அருமையா இருக்கே "

                            எண்டு, என்னைக் கொஞ்சநேரம் நம்பவே முடியாமல் பார்த்துக்கொண்டு நிண்டுபோட்டு

                             "  இந்த கேசட்டை சீர்காழியின் கேசட்டோட வையடா ,நான் பிறகும் கேட்க வேண்டும் " என்டுடு போயிட்டா . 

                               அதுக்கு பிறகு ஊருக்குள்ள வந்தவை, போனவை, கண்டவை , நல்லூர் திருவிழாக்கு எங்கடை வீட்டை வந்த சொந்தக்காரர் எல்லாருக்கும்

                                " என்னோட மகன் வேதக்காரருக்கு இசை அமைத்து (?)  கிற்றார் அடிச்சு  இருக்குறான் "

                                     எண்டு கொஞ்சநாள் அமளி துமளி!  நான் ஒருவருக்குமே வாயைத் திறந்து சொல்லவே இல்லை அடுத்த சில வருடங்களில் , குடாநாட்டு "சூரிய கதிர் " இடம்பெயர்வில் நாங்கள் ஒரே இரவில் போற இடம் தெரியாமல் இடம் பெயர , நாங்கள் அடையாளம் இல்லாமல்ப் போனது போல எப்படியோ அந்த  ஒலி நாடாக் கெசட்டும்  காணமல்ப் போயிட்டுது...

                                                     விசர் நாய்க்குத்  தண்ணிய ஊத்தின மாதிரி அடிபட்டு, இடிபட்டு , நாட்டுக்குள்ள இடம்பெயர்ந்து,  நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து , தாறுமாறாய் வாழ்க்கை வந்த வழி, போன வழி முழுவதும் வலி தந்து 22 வருடங்கள் ஓட்டமாய் ஓடியபின் ஜோசிக்கிறன் " சிதைவின் ராகங்களுக்குள் " நான் இசைத்த கிட்டார் வாசிப்பு சிதையாமலே தொலைந்து போன அந்த "ஒலி நாடா "யாரிடமாவது இருக்குமா எண்டு  , யாரும் அதை எனக்கு தேடித் தந்தால், என்னோட சொத்துப் பத்தில் அரைவாசியை உங்க பெயரில எழுதி வைப்பேன், இது எல்லாம் வல்ல ஆண்டவர் மேல உறுதியா சொல்லுறன்!.
.
.

3 comments :

  1. Awesome ... உங்களுடைய சொற்களும்.. எழுத்துநடையும் தனித்துவம்...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. உங்கள் எழுத்து நடையின் சரளம் , ஒரு பண்பட்ட எழுத்தாளர் என்பதை அடையாளம் காட்டுகிறது. யாழ் தமிழில் அப்படி ஒரு கலக்கல் பதிவு, அருமை

    ReplyDelete