Tuesday 11 August 2015

பால் வீதி நட்புக்கள் ...!

இருட்டியும் இருட்டாத இரவில் நட்ச்சத்திரங்களை அண்ணாந்துபார்த்து அதிசயித்த நிகழ்வுகள்தான் இப்பவும் அழகாக நினைவு இருக்கு. அந்தப் பால்வீதியில் பருவ வயது  எல்லாவிதமான கனவுகளையும் சந்தோசங்களையும் இரவிரவாகத் தந்தது. அதிகாலையில் உயிரோடு எழும்புவது ஒரு அதிசயமாக இருக்காத வயதில் நிறைய நினைவுகள் கரை ஒதுங்கவிடமால் காலம் அலைக்கழித்தது இன்னும் அலாதியாகவே இருந்தது.

                               அன்ரனிப்பிள்ளை மாஸ்டர் வீடுதான் எங்கள் வீட்டுக்கு அயலில் இருந்த, வீடுக்கு முன்னால சின்ன ஒரு வேளாங்கன்னி மாத சுருவம் சுவரில வைச்சு, அதுக்கு செவ்வாக்கிழமை மெழுகுதிரி கொளுத்தி  ,  " சர்வேசுவர மாதவே,கன்னி மரியாயே, பாவிகளான எங்கள்......"   எண்டு மாஸ்டரின் ஒரே மகன் ஜேசுதாசனும், ஒரே மகள் மேரியும் செபம் சொல்ல , மாஸ்டரின் மனைவி ஜோசப்பின் அக்கா அந்த செப முடிவில்

                     " கர்த்தரின் கிருபை மாம்சத்தின் ஜீவனை ,,,, "   எண்டு  பைபிளின் வாசகம் வாசிக்க, எங்கள் "குளத்தடிக் குழப்படி குருப் " நண்பர்கள், அதை விடுப்புப்  பார்க்கவும், கொஞ்சம் எக்ஸ்ட்ராவா மேரியை மெழுகுதிரி வெளிச்சத்தில் சாட்டோட சாட்டா கிட்டத்தில விபரமாகக் கவனிக்கவும் வாய்ப்புக் கிடைத்த ஒரே ஒரு வேதக்கார வீடு.

                              இனி நான் சொல்லப்போற கதை கர்த்தர் மேல் ஆணையாக, ஆங்கில ஆசிரியராக அரசாங்க உத்தியோகம்  பார்த்த அன்டனி மாஸ்டர், பெரியாஸ்பத்திரியில் நேர்ஸ் ஆகவேலை செய்த  ஜோசப்பின் அக்கா, செமினரியில் பாதருக்கு படிக்கப்போறதா சொல்லிக் கொண்டு இருந்த ஜேசுதாசன் பற்றியது அதிகம் இல்லை. பதிலாக " வானம்பாடிக்"  கவிஞ்சர்களின் புதுக்கவிதைகள்  விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்த, மேரி பிலோமினா அமலோற்பவ ரதி என்ற மேரி, வானம் பாடிப் பாதை மாறிப் போன சம்பவம்  நிறையவே உள்ள கதை . 

                                    பைபிள் படி வாழ வேண்டும் எண்டு வாழ்ந்த அன்ரனிப்பிள்ளை மாஸ்டர் பற்றி அதிகம் சொல்ல ஒண்டுமில்லை, அவரின் அந்த சமய நம்பிக்கைகளை நடைமுறையில் செய்து காட்டிக்கொண்டு இருந்த  ஜோசப்பின்  அக்கா எங்களைப் பொறுத்தவரை உள்ளூர் மதர் தெரேசா. அவா பற்றி சொல்ல கொஞ்சம் இருக்கு, 

                                ஜோசப்பின் எங்கள் வீட்டுக்கு வருவா,ஆனால் எங்களோடு பைபிள் கதைக்க மாட்டா. சிரிச்சு சிரிச்சு எப்பவும் எல்லாப் பெண்கள் கதைப்பது போல குடும்ப சந்தோஷ,துக்க  விசியங்கள் கதைப்பா, எங்கள் வீட்டில எப்பவும் நாங்கள் கையைக் காலை ஒழுங்கா வைச்சுக்கொண்டு இருக்காமல் விழுந்து,உருண்டு,பிரண்டு உடைப்பதால், நாவல்க் கலர்ல இருக்கும் கொண்டிஸ் என்ற பொட்டாசியம் பெர்மங்கனட் என்ற புண் வந்தா போட்டுக் கழுவுற  மருந்து ,சவரின் பார் சவுக்காரம் போல பூசுற களிம்பு எப்பவும் ஆசுப்பத்திரியில இருந்து எடுத்துக்கொண்டு கொண்டு வந்து தருவா. சில நேரம் அவாவே போட்டு உரஞ்சி கழுவி மருந்து போட்டு விடுவா.

                               அம்மச்சியா குளக் கரையில தனிய இருந்து அலைஞ்ச தாடி பாலாவுக்கே காலில சிரங்கு வந்த நேரம் அவதான் கொண்டிஸ் போட்டு கழுவி விடுவா. தாடிபால அவா உரஞ்சிற உரஞ்சலில்

                            " எண்ட அம்மாளாச்சி என்னைக் காப்பாற்று ,,உயிர் போகுதே  அம்மாளாச்சி " 

                                எண்டு கத்துவார், ஜோசப்பின் அக்கா இப்படி ஒவ்வொருநாளும் அவாவிண்ட வேலையில் பார்க்கிறதால் ஒண்டும் சொல்லாமல்

                                       " நான் தான் அம்மாளாச்சி,உன்னைக் காப்பாற்ற வந்து இருக்கிறேன், உயிர் போற மாதிரி இப்ப என்னத்துக்கு கிடந்தது குளறுறாய்  " 

                                        எண்டு சொல்லி உரஞ்சி உரஞ்சி மருந்து போட்டே தாடி பாலாவைக்  காப்பாற்றினா. 

                                     இந்த சம்பவம்  கேள்விப்பட்ட  அம்மாவே ஒருநாள் ஜோசப்பின் அக்காவை  இழுத்து வைச்சு 

                                 " என்ன ஜோசப்பின்,உனக்கு வேற வேலை இல்லையே, பால பாஸ்கரன் காலில சிரங்குக்கு மருந்து போடிறியாம்.அவன் விசரன் , ஜோசிச்சு ஜோசிச்சு சொறிச்ச சொறிய சிரங்கு வரும்தானே,உனக்கேன் இந்த நாய் வாலை நிமித்துற வேலை " 

                                 எண்டு சொல்ல, அதுக்கு  ஜோசப்பின் அக்கா, 

                                   " அப்படி சொல்லாதயுங்கோ மனோன்மணி அக்கா, எங்கட பைபிளில் ஜேசுநாதர்,குஸ்டரோகி ஒருவரின் காலைக் கழுவி விட்டவர், அவர் தேவ மைந்தன் அவரே செய்து இருக்குறார், இம்மையில் நான் செய்யுறது மறுமையில் எங்களுக்கு கிடைக்கும் அக்கோய், " 

                                  எண்டு சொன்னா. அவா அப்படிதான் தேவை அதிகம் இல்லாத இடத்திலையும் அவாவின்  சேவை அதிகம் இருக்கும்,,,   

                                  செமினரிக்கு போய்ப் பாதருக்குப்  படிக்கப் போறேன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்த ஜேசுதாசன் என்ற ஜேசுதான் எங்கள் குளதடிக் குழப்படிக் குரூப்பில் குழப்படி செய்யாத ஒரே ஒரு மெம்பர். அவளவு உலகம் தெரியாத வெள்ளாந்தியான அப்பாவி.  வெள்ளைச் சொண்டன் வீட்டில் கள்ள மாங்காய் பிடுங்க போகப் பிளான் பண்ணினாலோ,பண்ணை வளவில கள்ள இளனி இறக்க திட்டம் போட்டாலோ ஆரம்பத்திலேயே அதை

                           " சத்துருக்களுடன் ஜீவிதம் செய்வோர் பாவிகள்.... " 

                                        எண்டும் பைபிள்ப் படி இதெல்லாம் பிழை எண்டு சொல்லுவான். புளியமர இருட்டில பித்துக்குளி என்ற எங்கள்  வயசிலேயே வெம்ப்பிப் பழுத்த அறிவுஜீவி தலைமையில் நடக்கும் பெண்களின் அந்தரங்க உறுப்புக்கள் பற்றிய பின் இரவு " மிட்நைட் மசாலா " ஆராய்ச்சி உரையாடல்களில் பங்கு பெறவே மாட்டான்.

                                        குளத்தடிக் குரூப் சட்ட திட்டத்தில் முக்கியமா அதில உள்ள மெம்பர்கள் மற்ற மெம்பர் வீடுகளுக்குள்ள கேட்டுக் கேள்வி இல்லாமல் திறந்த வீட்டுக்குள்ள நாய் போன மாதிரி போகலாம், வரலாம் எண்டுதான் உறுதி மொழி எடுத்து இணைந்து இருந்தோம். ஆனால் ஜேசு மட்டும் எங்களில் என்னைத் தவிர மற்ற ஒருவரையும் , ஒரே ஒரு நாள்த் தவிர அவன் வீட்டுக்கு உள்ள கூப்பிடமாட்டன், வாசலோடு வைச்சுக் கதைச்சு சலாப்பி அனுப்புவான். இவன் எங்க வாழ்கையில் முன்னேறப் போறான் எண்டு நாங்களும் அவனை ஒண்டிலையும் வற்புறுத்தி இழுத்து வாழ்க்கைப் பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை. 

                                            நான் அடிக்கடி அவன் வீட்டுக்கு ஏதாவது ஒரு சாட்டில எட்டிப் பார்க்கப் போனாலும், ஜேசு டிசம்பர் மாதம் வரும் கிறிஸ்மஸ் கொண்டாட்டதுக்கு மட்டும் எங்கள் குரூப் மெம்பர்கள் எல்லாரையும்  அவன் வீட்டின் ஹோலில ஒரு மூலையில் சவுக்கு மரம் வைச்சு, அதுக்கு கீழ ஜேசுநாதர் மாட்டு தொழுவத்தில் பாலனாகப் பிறந்து உள்ள சம்பவத்தை, சின்ன சின்ன பிளாஸ்டர் பரிஸ் சிலைகளில் அலங்கரித்து, அதுக்கு மின்னி மின்னி மறையும் சின்ன சின்ன பல்ப் போட்டு,

                                 " பைபிளின் பழைய ஏட்பாட்டில் ஜோசுவா தீர்க்கதரிசி சொன்ன மாதிரி கர்த்தர் பாலனாய் ஜெருசலாமில் பிறக்க,வெள்ளிப் போளங்களுடன் பரிசேயர் வர, அந்தக் குழந்தையைக் கொலை செய்ய ரோம வீரர்கள் வீடு வீடாக தேடி வர, ஜோர்டான் ஆற்றம் கரையில் வால் வெள்ளி தோன்றியது...  " 

                                   எண்டு கண்ணை உருட்டி உருட்டி விளக்கம் வேறு சொல்லி எங்களுக்கு அந்த சோடிணையைக் காட்டுவான்.

                                      நாங்கள் அதை ஆர்வமாகப் பார்க்காமல்,கதவில அரைவாசியை மறைஞ்சு அதிகாலை விடி வெள்ளி போல மின்னும் அவனோட தங்கச்சி மேரியைக்  கண்ணை நல்லா விரிச்சு வைச்சு ஆர்வமாகப் பார்ப்போம். அதுதான் நான் முன்னமே சொன்னேனே ஜேசுதாசன் எவளவு வாழ்கையில் முன்னேறத் தெரியாத உலகம் தெரியாத அப்பாவி எண்டு.

                            மேரி எல்லா இளம் பெண்கள் போலதான் அம்சமா அடக்கமா வத்தகப் பழம் போல சிவப்பாக இருப்பாள்., தேவமாத போல நெற்றியில் சுருள் முடி விழ , சுண்டங்காய் போல சின்ன மூக்கு அமுங்கிப்போய் இருக்க வெள்ளரிக் கன்னத்தில் குறும்பு எப்பவும் ஒரு சின்னக் குழி விழித்திக்கொண்டு இருக்க  ,முக்கியமாப் பேசும் போது காற்றுக்கே அதிராமல் மென்மையாகப் பேசுவாள்.கழுத்தில ஒரு மெல்லிய சிங்கப்பூர் செயின் போட்டு அதில ஜேசுநாதரை அறைந்த சிலுவை பென்டன் போட்டு அதோட ஒரு சிகப்பு குண்டுமனியும் சேர்த்தே தொங்கவிட்டு இருப்பாள்.

                                   அவள் நந்தியா வெட்டைக் கண்கள் அன்புக்கு இலக்கணம் எழுத, நீரோடைப்  பார்வை கருணைக்குப் பாயிரம் எழுத ,மொத்தமாக அவள் முகத்தில் பாசத்துக்கு ஏங்கும் இதயத்தின் வாசம் இருந்தது அந்த சின்ன வயசிலேயே.  டவுனில இருந்த கன்னிகாஸ்திரிகளின் கொன்வென்ட்  பள்ளிக் கூடத்தில படித்த அவள் படிப்பில புலி ,ஆனால் அந்த வீடிலேயே எல்லாருக்கும் ஓடின மாதிரி அதிகம் கிறிஸ்தவ சிந்தனையில் அவள் மனம் ஓடவில்லை. வேற என்னதில ஓடினது எண்டு நீங்க கட்டாயம் கேட்பிங்க, காரணம் இந்தக் கதையே மேரியின் கதை அதால சொல்லுறேன். 

                                          மேரி அந்த சின்ன வயசிலேயே அதிகம் வாசிப்பது கவிதைகள், அது எப்படி  வெளிய தெரியும் என்றால் கவிஞ்சர் கந்தப்பு எங்கள் ஊர் வாசிக்க சாலையில் நடத்திய " கை எழுது " என்ற சின்ன மாட்டுத்தாள் பேப்பர்  கையெழுத்துப்  பத்திரிகையில் அவள் அதிகம் எழுதுவாள். வானம்பாடிக் கவிஞ்சர்களின் காதல் நனைந்த கவிதை போல இல்லாமல், அதிகம் நா. பிச்சமூர்தி,ஆத்மாநாம் போறவர்களின் பாதிப்பில் அவர்கள் போலவே  கொஞ்சம் எளிமையா எழுதுவாள் என்று கவிஞ்சர் கந்தப்புவே ஒரு முறை இலக்கிய சந்திப்பு கூட்டத்தில அவளைப் பற்றி சொன்னார்.

                               உண்மையா எண்டு அதை உறுதிப்படுத்தும் அளவுக்கு எங்களுக்கு அப்ப அறிவு இருந்ததில்லை. ஜேசுதாசன் சில நேரம் அந்தப் பேப்பர் கொண்டு வந்து காட்டுவான். ஜேசு ஒத்துக்கொண்டது போலவே எங்களுக்கும்  அதிகம் அதன் அர்த்தம் விளங்காது.  ஆனாலும் ஜேசு

                       " நான்  பாதருக்கு படிச்சு பங்குத்  தந்தை ஆகினாலும் அவள் கட்டாயம் இலக்கிய உலகத்தில் ஒரு நாள் பிரகாசிப்பாள் "  

                                 எண்டு சொல்லுவான். எங்களுக்கு அந்த நேரம் தெரியாமலே போன ,விதி திரை போட்டு மறைச்சு வைச்ச மிகப்பெரிய சோகம், பல  நிகழ்வுகள்  எதிர்காலத்தில் நடக்காமலே போகப் போறது தெரியாமல் நாங்கள் ஒவ்வொரு நாளும் வளர்ந்தது ... 

                        ஒரு நாள்......வேரோடி விளாத்தி முழைச்சாலும் தாய்வழி தப்பாது யாரோடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பென் என்பது போல

                                        என்னோட அம்மா ,சுப்பிரமணியம் கடையில, ஆனைக்கோட்டை நல்லெண்ணெய் போத்தல் வேண்டிக்கொண்டு வந்து ,கொஞ்சம் முட்டைகளையும் ஒரு கடுதாசி பையில போட்டுக்கொண்டு

                                     " ஜோசப்பின் வீட்டை போட்டு வாறன் "

                      எண்டு சொல்லிப்போட்டு போனா. போய் சில மணித்தியாலங்களில் திரும்பி வந்து வீட்டு வெளி வாசலில் நிண்டு கொண்டு,  

                                        "  தீட்டுத் துடக்கு வீட்டுக்குப்  போட்டு வாறன்,பின்னால வா, வந்து கிணத்தில மூன்று வாளித் தண்ணி அள்ளி தலையில ஊத்தடா "  

                                      எண்டு சொன்னா,நான் போய் ஒண்டுமே விடுப்பு கேட்காமல் அள்ளி ஊத்திப் போட்டு வந்து வீட்டுக் ஹோலில இருந்தேன். அம்மா தலையில ஒரு துவாயைச் சுற்றிக்கொண்டு வந்து,முதல் வேலையா என்னட்ட வந்து,

                                     " இனி ஜேசுதாசன் வீட்டுக்கு தேவை இல்லாமல் நத்தார் பாப்பா பார்க்கப் போறேன்,அது இது எண்டு சொல்லிக்கொண்டு போனி எண்டால் முழங்காலை அடிச்சு முறிப்பேன் "

                              என்றா,நான் என்னோட முழங்காலைத் தடவிப் பார்த்தேன்,அது பிற்காலத்தில் எனக்கு எவளவு முக்கியம் எண்டு நினைச்சுப் போட்டு ஒண்டுமே சொல்லாமல் பேசாமல் இருந்தேன். அம்மா  

                                      " ஜோசப்பின் ஆட்கள் வேதக்காரர் அவயல் எங்களைப்போல பால் அறுகு, மஞ்சள் வைச்சு தலைக்கு தண்ணி ஊத்த மாட்டுதுகள், என்றாலும் என்னோட கடமைக்கு நான் வேண்டிக் குடுக்கிறதைக் குடுத்திட்டேன் "

                                    எண்டு எனக்கும் கொஞ்சம் நடக்கிற சம்பவங்களின் விபரம் சொல்ல வேண்டும் போல சொல்லிக்கொண்டு இருந்தா.  

                                     அதுக்கு பிறகு நான் ஜேசுதாசன் வீட்டை போறது இல்லை, மேரியும் அதிகம் வெளிய வாறது இல்லை,பள்ளிக் கூடம் போறது தெரியாமல்ப் போவாள் ,வாறது தெரியாமல் வருவாள்.கவிஞ்சர்  கந்தப்புவின் மாட்டுத்தாள் பேப்பரிலும் அவளின் கவிதைகள் அதன் பின் வரவில்லை. அவள் படிச்சுக்கொண்டு இருந்த பின்னேர  டுயுஷன் இக்கு போறதை நிற்பாட்டிப்  போட்டு அவர்கள் வீட்டுக்கே ஒரு மாஸ்டர் வந்து சொல்லி கொடுத்தார் எண்டு தான் குளத்தடியில் நியூஸ் அடிக்கடி கசிந்து கொண்டு இருந்தது. ஆனால் ஜேசு  எங்கட வீட்டை வந்து

                                       " வீட்டை வாட , அப்பா ஒரு எக்கோடியன் வாங்கி வைச்சு இருக்கிறார்,வா வந்து பார்,மேரியும் கொஞ்சம் கொஞ்சம் அதை இப்ப வாசிக்க பழகிறாள் ,வாட வாட "

                                              எண்டு இழுப்பான், எக்கோடியன் வாத்தியம் எப்படி இருக்கும் எண்டதை விட மேரி இப்ப எப்படி இருப்பாள் எண்டு பார்க்க ஆவலா இருந்தது. ஒரே ஒரு நாள் அவளை வீராளி அம்மன் கோவில் தேர் முட்டியடியில் என்னோட பெரிய மாமாவின் கடைசி மகள் ஜெயந்தியோட சும்மா கதைச்சுக்கொண்டு நிண்ட நேரம்,மேரி சைக்கிளில் ஓடிக்கொண்டு எங்களைத் திரும்பி திரும்பி வடிவாப் பார்த்துக்கொண்டு போனாள்.ஜெயந்தி மேரியோட  டூஷனில் ஒன்றா படித்தவள். நான் அவளைப் பார்க்காத மாதிரி வடிவாக் கவனித்தேன்.....

                                       சொல்லி வைச்ச மாதிரி அந்த வருடமும் டிசெம்பர்  மாதம்  கிறிஸ்மஸ் அமளி துமளியா வந்தது.......

                                                    அம்மாவே வந்து " இந்த முறையும் ஜோசப்பின்  வீட்டை நத்தார் இக்கு போகப்போறியா, போறது எண்டாப் போ,ஒழுங்கா போய்ப் பேசாமல் கேக்கை திண்டு போட்டு ஒழுங்கா திரும்பி வாறது எண்டா போயிட்டு வா " ,

                          எண்டு எனக்கே ஆச்சரியமா சொன்னா,நான் என்னோட முழங்காலைப் பார்த்த்துக் கொண்டு இருந்தேன்.

                     " பரவாயில்லை ஜேசுதாசன் வந்து வரச் சொன்னால் போட்டு வா "

                              எண்டு மறுபடியும் சொன்னா, ஜேசு முதலே எனக்கு மட்டும் சொல்லி இருந்தான் வர சொல்லி அதைப் பயத்தில நான் சொல்லவில்லை. மற்ற குளத்தடி குரூப் மெம்பர்களுக்கு இந்த வருடம் சொல்லவில்லை எண்டும் சொல்லி இருந்தான். ஆனால் நான் மற்ற பிரெண்ட்ஸ் உம் வந்தால் தான் வருவேன் இல்லாட்டி வரமாட்டேன்,என்று ஜனநாயக வழி முறையில் அவனுக்கு சொன்னேன்,அவனும் ஜோசித்துப் போட்டு ஓகே எண்டு சொல்லி இருந்தான்.

                                  கிறிஸ்மஸ் இரவு நாங்கள் ஜேசுதாசன் வீட்டுக்குப் போன நேரம், ஏறக்குறைய ஜேசு பாலன் பிறக்கும் சின்ன சோடினையில் லைட் சுற்றி சுற்றி சோம்பலா ஓடிக்கொண்டு இருக்க, டேப் ரெகொர்டரில் ஜிம் ரிவிஸ் பாடின " ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல்... " பாடல் அதிகம் சத்தம் இல்லாமல்ப் பாடிக்கொண்டு இருக்க , மாஸ்டரின்,ஜோசப்பின் அக்காவின் அவர்களின் உறவினர் பலர் வந்து இருந்தார்கள்,ஜோசப்பின் அக்கா ஓடி ஓடி எல்லாருக்கும் கேக் குடுத்துக்கொண்டு இருக்க,ஜேசு நல்ல வடிவா உடித்திக்கொண்டு எப்பவும் போல அவன் சவுக்கு மரத்துக்கு கீழே சோடினை செய்த அலங்காரங்களை  எங்களுக்கு காட்டி எங்களை வியக்க வைத்துக்கொண்டு இருக்க, அன்டனிப் பிள்ளை மாஸ்டர் பைபிளை எடுத்துக்கொண்டு வந்து

                     " இண்டைக்கு பொடியள் உங்களுக்கு ஒரு கதை சொல்லுறேன்... "

                         எண்டு சொல்ல தொடங்க, இதென்ன இம்சை இந்தாள் இந்த நேரம் அறுக்கப் போகுதே எண்டு நாங்க மண்டையச் சொறிய , நெஞ்சில பாலை வார்த்த மாதிரி , பிரில் வைச்ச வெள்ளை நீண்ட கவுன் போட்டுக் கொண்டு  மேரி மெல்ல மெல்ல தேவதை போல மிதந்து வெளிய அவர்களின் ஹோல் இல நாங்க இருந்த இடத்துக்கு வந்தாள், 

                                                   வந்து எங்கள் எல்லாரையும் பார்த்து மின்னல் எறிஞ்சு  பொதுவாக சிரிச்சுப் போட்டு, ஜேசுக்கு பக்கத்தில போய் இருந்தாள். அந்த இருட்டு நிறைந்த இடத்திலையும்  நிறைய வித்தியாசமா இருந்தது அவளின் திடீர் வளர்ச்சி.முகத்தில ஒரு ஜென்மத்துக்குப் போதுமான ஏக்கம் இருந்தது. சரியா சொல்ல முடியவில்லை அது எந்த வகை ஏக்கம் எண்டு.   

                           மாஸ்டர் ஜோசப் ஒவ்வொரு வருடமும்  போல அந்த வருடமும்  பழைய ஏட்பாட்டு கால பைபிள் கதையான , " ஜோசப்பும்  அவனோட கடவுள் நம்பிக்கையும்   " என்ற  கதையைச்  சொன்னார், 

                                          அதில ஜோசப்பின் உடன் பிறந்த சகோதரர்கள் அவனை எபிரேய வியாபாரிகளுக்கு அற்ப விலைக்கு அடிமையாக விற்க,ஜோசப்பை அந்த வியாபாரிகள்  பண்டி வளர்க்கும் கொட்டகையில் அடைத்து, குதிரைக்கு வைக்கும் கொள்ளைத் தின்னக் கொடுத்து கொடுமை எல்லாம் செய்தும், அரண்மனை எடுபிடி  வேலைக்காரனாகச் சேர்ந்த ஜோசப் கடைசியில் அந்த நாட்டுக்கே அரசன் ஆக,  அவனை விற்ற பின் நாட்களில் குடித்துக் கும்மாளம் போட்டு ஏழைகள் ஆகிப்போன  அவனோட உடன் பிறப்புக்கள் ஜோசப் அரசன் ஆனது கேள்விப்பட்டு வந்து பார்க்க,அவன் அவர்களை மனமுவந்து மன்னித்து, தன்னோட வயதான தகப்பனையும்  அழைத்து சாகும்வரை அவரை அன்பாக வைத்துப் பார்க்க,சாகும் போது அவனோட அப்பா  கடைசி வாக்கு மூலம் போல இறை நம்பிக்கையின் சாட்சியாக,   

               " தேவனோட வாழும் பிள்ளைகள் தேவப் பிள்ளைகள்,அவர்கள் நீர் அண்டையில் நடப்பட்ட மரங்கள்,அவை எப்போதும் செழித்து கிளை பரப்பி வளரும்...."  

                                   எண்டு சொல்லிப்போட்டு செத்துப்போனாராம் எண்டு மாஸ்டர் சொல்லி முடிய, நாங்கள் மவுனமாக இருந்தோம்,ஜேசுதாசன்  தலையை குனிந்து கொண்டு கையை இறுக்கி பிடித்துக்கொண்டு ஜபம் சொல்லிக்கொண்டு இருந்தான்,மேரி " இதெல்லாம் உண்மையா,அல்லது பொய்யா "   எண்டது போல ஒண்டும் அதிகம் உணர்ச்சி காட்டாமல் இருந்தாள்.

                                         கவிஞ்சர் கந்தப்புவின் மாட்டுத்தாள் கையெழுத்து பத்திரிகையில் ஒருமுறை மேரி கிரிஸ்மஸ் கொண்டாத்தைக் விமர்சித்து கவிதை எழுதி இருந்தாள். அந்தக் கவிதையைக் கிழித்து எறிந்து  கண்டபடி திட்டிக்கொண்டு இருந்தார். அந்தோனிப்பிள்ளை மாஸ்ட்டர். மேரிக்கு அது மிகவும் மனச்சோர்வாக இருந்தது என்று சொன்னாள், அந்தக் கவிதை இதுதான் ,

கர்த்தருக்கு 
மகிமையுள்ள ஸ்தோஸ்திரங்கள் ,
இந்த வருடமும் 
வாடிப்போன ஊசியிலை மரம் ,
மின்சார இணைப்பில் 
சுடரும் மெழுகுதிரி ,
பரிசேயர்களின் 
வெள்ளிப்போளங்கள் 
அலுமினியத்தில் ,
திசைத்துருவ நட்ச்சத்திரங்கள் 
ஜிகினாப் பேப்பரில் ,
ஆட்டுத் தொழுவத்தில் 
பிளாஸ்டர்பரிஸ் இடையர்கள், 
மேரியும் ஜோசேப்பும் 
பிளாஸ்டிக்கில் ,
பாலன்பிறகும் இன்றைய இரவில் 
நீர் ஒருவராவது 
இயற்கையாகவிரும் பிதாவே ! 

                                               ஜேசுதாசன் எக்கோடியன் வாத்தியத்தை தூக்க முடியாமல்த் தூக்கிக் கொண்டு வந்து அதை நெஞ்சில கொழுவ வளம் தடுமாறிக்  கொழுவிப்போட்டு, பிங் குரோஸ்பி பாடினா " வட் எ வொண்டர்புல் நைட்.. " பாட்டு வாசிக்கவா எண்டு கேட்டான், மேரி அதைக் கேட்டு சிரிக்க தொடங்கினாள், 

                                                        மற்ற நண்பர்கள் எல்லாரும் கும்பலா அவனோட சேர்ந்து அந்த அக்கொடியனை ஒவ்வொரு பக்கத்தால அதன் கட்டைகளை அமுக்க, ஜேசுதாசன் அவன்கள் எல்லாரையும் இழுத்துக்கொண்டு முன்னுக்கு வெளி விறாந்தைக்கு போக,மேரி மட்டும் எனக்கு முன்னால இருந்தாள், மேசையில் கனக்க புத்தகங்கள் கிடந்தது, ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கிறது போல நடிச்சுக் கொண்டு 

                  " எப்படி சுகம், ஏன் எங்கள் வீட்டுக்கு இப்ப அடிக்கடி வாறதே இல்லையே,என்ன நடந்தது " எண்டு மெதுவா கேட்டாள்,

                   " மேரி  ..நீ  இப்ப  பெரிய  பொண்ணு,,நாங்க  முன்னம் போல எல்லாம் உன்னோட  பேச முடியாது,,பழக முடியாது "

                           "  அப்படி  யார் சொன்னது "

                         "  அம்மா சொன்னா ,,மேரி , நீ ஏன்  உங்க அப்பா சொன்ன பைபிள் கதையை ஆர்வமாக் கேட்கவில்லை "

                           "   உனக்கு எப்படி  தெரியும்  அது "

                       " மேரி,  நான் உன் முகத்தைக் கவனிச்சேன்,,அதில  ஆர்வம்  இருக்கவில்லை "

                        "  ஹ்ம்ம்,,ஏன்  பைபிள் கதையை  நான்  ஆர்வமா கேட்க வேண்டும்,,சொல்லு,,என்ன காரணம் "

                               "அது  எனக்குத்  தெரியாது, மேரி ,,நீங்க  எல்லாம் வேதக்காரர்கள்  உங்களுக்கு  பைபிள் தானே கடவுளே வேத வாக்கியம் "

                              "   பைபிள்  ஒரு  வரலாற்றுக்  கதை , இரண்டாயிரம் வருடம் நடந்த  கதை "

                              " அவளவுதானா ,மேரி ,,என்ன இப்பிடி  சுருக்கமா சொல்லுறாய் "

                               "   எனக்கு அவளவுதான் , போதுமா விளக்கம் "

                             "  ஆனால் உன் அப்பா அதில இருந்து எப்பவுமே அழகான வாழ்க்கைப் படிப்பினை, கடவுளின் நம்பிக்கை பற்றி நல்ல நல்ல கதைகள் சொல்லுறார் "

                           "  அப்பா  ஓரளவு பரவாயில்லை,,அவர்  லொயிக்  ஆக ஜோசிப்பவர்,,அம்மாவுக்கு பைபிள் நம்பிக்கை,,ஒவ்வொரு  வாக்கியமும் கடவுளின் வாயில் இருந்து வந்து விழுந்த மாதிரி நம்பிக்கை "

                           "    அது ,நல்ல விசியம் தானே "

                       "  ஹ்ம்ம்,,இப்ப  என்னத்துக்கு பைபிள் பைபிள் என்று சாகிறாய்,,இப்பிடி  கதைக்க  சந்தர்ப்பம் கிடைப்பதே அருமை  ,,அதில வேற என்னவும் உருப்படியா கதைப்பமா "

                        "    அதென்ன,,நீயே  சொல்லு,,மேரி ,,படிப்பைப் பற்றியா "

                         "    அது  அடுத்த அறுவை,,,"

                         "   அப்ப வேற என்ன, மேரி,,நீயே  சொல்லு "

                          " நான் தான்  எல்லாம் தொடக்கிக் கதைக்க வேணுமா,,ஏன் நீயே ஏதாவது சுவாரசியமா சொல்லன்,,உன்னோட  காதல்  ரொமான்ஸ்  ,,உன்னோட  லைன்கள்  ,,சொல்லு ,,"

                              "ஹஹ  ஹஹ  ஹஹா       " 

                             " இப்ப எதுக்கு அம்மசியா  குளத்தடி  விசரன்  பாலா போல சிரிக்கிறாய்    "

                        " உன் கேள்வியில் சிரிப்பு வந்தது,  ஹ்ம்ம்,,உண்மையில் அப்பிடி  ஒன்றும்  இல்லை..மேரி "                 

                          "  அட அட அட அட அட அட....என்ன ஒரு  வளர்ப்பு "
                    

                          நான் பதில் சொல்லாமல் இருந்தேன், மேரி கையில வைச்சு இருந்த புத்தகத்தை காட்டி "  இது என்ன புத்தகம் தெரியுமா " எண்டு கேட்டாள், 

              " எனக்கு எப்படி தெரியும் ,நீயே சொல்லு " என்றேன், 

               " பால் வீதி,அப்துல் ரகுமான் எழுதியது " எண்டு சொன்னாள் சொல்லிப்போட்டு ,

                  " வேலிக்கு மேலாக வளரும் கிளைகளை வெட்டும் தோட்டக்காரனே ,,என் கால்களில் வேலிக்கு  கீழே ஓடும் வேர்களை என்ன செய்வாய் .....என்ற கவிதையை வாசித்தாள்.. வாசிச்சுப் போட்டு அதைப் படார் எண்டு மேசையில் வைச்சுப் போட்டு...

                    " தேர்முட்டியடியில் ஜெயந்தியோட என்ன கதை வசனம் அண்டைக்கு ஓடினது " எண்டு கேட்டாள். 

                      நான் " எண்டைக்கு,....எந்த ஜெயந்தி..... " எண்டு கேட்டேன்,,  

                    " ஹஹஹா , ஹ்ம்ம், அவள் தான்  உங்க மச்சாள், ரெட்டைச் சிலுப்பி,  வெத்திலை போட்ட கிளவியால் போல மஞ்சள் காவி பிடிச்ச பல்லால ஈஈஈஈ எண்டு இழிப்பாலே அவள்தான்..." என்றாள்,

                   " ஜெயந்தி கொமர்ஸ் பாடத்தில ஐந்தொகை பலன்ஸ் செய்யுறது எப்படி எண்டு டவுட் கேட்டாள் சொன்னேன்..." என்றேன், அதுக்கு அவள்.

               " ஹஹஹஹாஹ் ,  அடிடா சக்கை எண்டானாம், டவுட் என்னத்துக்கு தேர்முட்டியில் பதுங்கி நிண்டு சொல்லிக் கொடுக்க வேண்டும்,  எனக்கும் தான் ஐந்தொகை பலன்ஸ் செய்ய வருதில்லை,,,,சொல்லி தரலாமே, அதென்ன ஜெயந்திக்கு மட்டும் பதுங்கி பதுங்கி ஸ்பெஷல் டவுட் கிளியரன்ஸ் நடக்குதே,,"  என்றாள் 

                 நான்,, " மேரி ,நீ கேட்கவில்லை அதால சொல்லவில்லை, அதைவிட அம்மா உங்க வீட்டுக்கு போக வேண்டாம் எண்டு சொல்லி இருக்கிறா அதால இங்கே வாரதில்லை,சரி அதை விடு நீ ஏன் இப்ப கவிதை எழுதுறது இல்லை  " 

                             " ஹ்ம்ம்,, இப்ப அதுவா முக்கியம், அப்பாவுக்கு படிப்பு முக்கியம் அவருக்கு ரிப்போர்ட் இல் எப்பவும் முதல் மூன்று இடதுக்க வரவேண்டும் ,அம்மாவுக்கு பைபிளும்,செபமும் முக்கியம் ,,ஹ்ம்ம் இதுக்குள்ள கவிதை எழுத எந்த உற்சாகமும் கிடைக்குதில்லை, "

                    "  உனக்கு என்ன என்ன தோன்றுதோ அதை அதை அப்பப்ப எழுது "

                      " கிழிஞ்சுது  என்னக்கு என்ன தோன்றுது என்று சொல்லவா,,,,ஹ்ம்ம்,,,சொன்னா  மட்டும் எல்லாரும் என்ன கேட்டா கிழிக்கப் போகினம் "

                    "  இல்லை, மற்றவர்களின் வாழ்கையை நீ ஒருநாளும் வாழாதே,,உனக்காக வாழு "

                     "   அட அட அட  ,,தத்துவத்துக்கு ஒரு குறைச்சலும் இல்லை,,,சரி,,ஜெயந்தி இப்ப என்ன செய்யுறாள் ,,உன்னோட கதைப்பாளா இப்பவும்,,,இன்னும் அவளுக்கு டவுட் கிளியர் செய்யுறியா, "

                  " இல்லை,,அவளைக்  கண்டே ஒரு வருசத்துக்கு மேலே,,கடைசியா வீராளி அம்மன் துர்க்கையம்மன் திருவிழாவில பார்த்தேன்,,,வெளிவீதி உலாவில் பயனைக் கோஸ்டியோடு பக்திப் பரவசமா பாடிக்கொண்டு போனாள்.."

                   " பொய் சொல்லாதே,,,ஹ்ம்ம்,,அவள்  பக்திப் பரவசமா பாடிக்கொண்டு போனாள்..,,ஹ்ம்ம்,,நல்ல விபரமாதான் விடுப்புப் பார்த்த மாதிரித் தெரியுதே...ஹ்ம்ம் ,,"

                          " இல்லை, உண்மையதான்  சொல்லுறேன்,,அவளவுதான் தெரியும்,,பெரியமாமா அவளை அவுஸ்த்ரேலியாவுக்கு படிக்க அனுப்ப போறதா அம்மா வீட்டில சொன்னா.."

                        " ஒ,,,அது  வேறையா,,அவள் எண்ணத்தைப் படிசுக் கிழிப்பாள்...உன்னையும் வரச்சொல்லி இருப்பாளே ..அவள்தான் உன் மச்சாளே,,பிறகென்ன மற்றாக்கள் என்ன சொல்லி என்ன வரப்போகுது "

                         " மேரி,,என்னோட  என்னைப்பற்றி மட்டும் கதை,,சும்மா கிடந்தது அலட்டாதே   " எண்டு கொஞ்சம் கோபமாச் சொன்னேன்.

                                                   ஜோசித்துப் பார்த்தா எல்லா இளம் பிள்ளைகளின் இளம் வாழ்கையில் உள்ளது போல  இதில தெளிவான காதல் இல்லை, கவர்ச்சியான கனவுகள் ஹோர்மோன் குளறுபடியால எகிறினாலும் வெறும் பரஸ்பர நட்புதான் அடித்தளமா இயங்க வைக்குது போல இருந்தது  , அதிலும் வயசுக் கோளாறு கொஞ்சம் அதிகமா இருக்கு போல தான் உணர்ச்சி வசப்படாமல் ஜோசிக்கும் போது இருந்தது.. ...

                      ஜேசுதாசன்  "  வட் எ வொண்டர்புல் நைட்..வட் எ வொண்டர்புல் நைட்.. " எண்டு பாடிக்கொண்டு உள்ளுக்க வந்தான்,மேரி நெற்றியில் கையை வைச்சு தேச்சுப் போட்டு, " தலை இடிக்குது...."  எண்டு சொல்லிக்கொண்டு எழும்பிப் போயிடாள்,ஜேசு கிட்ட வந்து ,

                               " என்னடா ஒரு மாதிரி இருகிறாய்,மேரி ஏதும் சொன்னவளா ,  அவள் அப்படிதான் எப்பவும் குழம்பிக்கொண்டு இருக்கிறாள், வா வெளிய வா நொள்ளைக்கண்ணன் குரலை மாற்றி கண்டசாலா போல காவியமா ஓவியமா ...பாட்டுப்  பாடுராண்டா, ஒரே கலாட்டாவா இருக்கு வெளிய,  நீ இங்க தனிய மேரியோட அறுவையைக் கேட்டுக்கொண்டு இருகிறாயே.,,,"

                                      எண்டு சொல்லி வெளிய இழுத்துக்கொண்டு போனான்...அதுதான் அன்டனிப் பிள்ளை மாஸ்டர் வீட்டுக்கு நான் போன கடைசி கிறிஸ்மஸ் நாள் எண்டு நினைக்கிறன். 

                               அதுக்குப் பிறகு சில வருடங்களில் நிறைய விசியங்கள் வீட்டிலையும், நாட்டிலையும் நடக்க,குளத்தடிக் குரூப் மெம்பர்களே ஒவ்வொருவர் ஒவ்வொரு பக்கமா பிரிந்து போய்விட்டோம்.  அதில முக்கியமா நடந்த சம்பவம் ஜேசுதாசன் வீட்டில தான் நடந்தது எண்டு பின் நாட்களில்த் தெரிய வந்தது,  பாதருக்கு படிக்கப் போறேன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்த ஜேசுதாசன் அது படிக்கப் போகவில்லை,  பதிலாக " அங்கொடை " எண்டு நாங்க சொல்லும் புவனேஸ்வரியை ஒரு நாள் மாஸ்டருக்கும் ,ஜோசப்பின் அக்காவுக்கும் கொண்டு வந்து தன் காதலி அவளைத் தான் கலியாணம் கட்டப்போறேன் எண்டு சொல்ல,மாஸ்டர்

                          " ....இனி உனக்கும் எங்களுக்கும் ஒரு உறவும் இல்லை, ....சேர்ச் பக்கமே இனிப் போக முடியாதே , ....இப்பிடி சொந்தம், உறவுகள் முகத்தில முழிக்க முடியாமல் செய்து போட்டியே, ...வீட்டு வாசல்ப் படி இனி மிதிக்காத வெளிய போடா,....உன்னை வளர்ததுக்கு ரெண்டு தென்னம் பிள்ளையை தண்ணி ஊற்றி வளர்த்து இருக்கலாம்,கடைசிக் காலத்தில தேங்காயாவது பிடுங்கி இருக்கலாம், ....உன்னோட கூ ட்டாளிமாரோட குளத்தடியில் இழுபடும் போதே தெரியும்,  நீ இப்படி என்னவும் ஒரு நாள் செயப்போறாய் எண்டு....,    "

                                   எண்டு சொல்லி அவனை அடிக்கப் போக,ஜேசுதாசன் அவளைக் அன்றே கூட்டிக்கொண்டு மன்னார் மடு மாதா கோவிலுக்கு கிட்டத்தில இருந்த ஒரு இடத்துக்கு கூ ட்டிக்கொண்டு போனானாம்...ஜோசப்பின் அக்கா மாஸ்டருக்கு தெரியாமல் மன்னார் போய்த் தேடிய போதும் அவனைக் காண முடியவில்லை எண்டும் சொன்னார்கள்.....அவளவுதான் அதுக்கு பிறகு ஒரு தகவலும் இல்லை..

                              வீட்டில இந்த அவலம் நடந்த கொஞ்ச நாளில் ,மேரி படிக்கிறதை நிட்பாட்டிப்போட்டு ,கண்டியில் உள்ள சிஸ்டர்மாரின் செமினரிக்கு கன்னிகாஸ்திரியாகப்  போயிட்டாளாம்........... 

.

1 comment :

  1. பால் வீதி நட்புகள் ...
    கதையா .. உண்மை சம்பவமா ... அழகா அனுபவமா எழுதியிருக்கிறீங்க. கட்டாயம் புத்தகப்பதிவாக வேண்டிய பதிவிது ... வியக்கிறேன்.

    ReplyDelete