Thursday 14 May 2015

அமைதிக்குப் பெயர் ...

அந்தக் காலம் , மனிதர்கள் , சம்பவங்கள் எல்லாமே ஒரு கனவுபோல மறைந்துவிட்டது . சிலது நிரந்தரமாக மறந்த போதும் , சிலது மறக்கவில்லை. அதில ஒன்று யாழ்பாணத்தில எங்களின் வீட்டுக்கு அருகில் ஆனந்தன் அண்ணை எண்டு ஒருவர் இருந்தார் . அவர் பாக்கிறதுக்கு மார்க்கண்டேயர் போல கருப்பா இருந்தாலும் , நல்ல வாட்ட சாட்டமான எழும்பின ஆம்பிளை.


                                              சாந்தி அக்காவை, எல்லா ஆம்பிளைகளும் ரெம்ப நல்லவங்கள் போல,  நேரம் கெட்ட நேரத்தில விதி விளையாடும் போது விடுற " உன்னைக் கண் கலங்காமல் கடைசிவரை காப்பாற்றுவேன் " எண்டு டயலக் பேசி ,  நல்லாப் படிசுக்கொண்டு கம்பஸ் போற கனவில இருந்த அவாவை காதலித்து கலியாணம் கட்டி , அவாவின் பட்டதாரிக் கனவில மண்ணை அள்ளிப்போட்டுக் குடியும் , குடித்தனமுமா வாழ்ந்தார் !

                                 சாந்தி அக்கா தான் அந்த வீட்டில ஒரே ஒரு பெண் பிள்ளை, மற்ற அஞ்சு பேரும் ஆம்பிளைகள். அதில நாலுபேர் ஜெர்மனிக்கும், பிரான்சுக்கு
ம்,  போயிட்டாங்க,  ஒருவர் …..... என்ற இயக்கத்துக்கு " தமிழ் ஈழம் எடுக்காமல் திரும்பி வரவே மாட்டேன் " எண்டு  போனவர் !  போனவர் போனவர்தான் ,



                                    அவர் எடுக்கப் போனது எடுத்துக் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை அவர் சும்மா தன்னும் வீட்டுக்கு உயிரோடு திரும்பி வந்ததே இல்லை. அவர் பற்றி யாருக்கும் ஒண்டும் தெரியாது.


                                        அரசாங்க வேலை செய்து கொண்டு இருந்த அவாவின் அப்பா, சாந்தி அக்கா சின்னதா இருந்த போதே, அவரோட நடு வயசில் குடியால ஒரு நாள் இதயம் இறுக்க , ரெண்டு தரம் இருமிப் போட்டு இறந்திடார்,

                                     

நாலு அண்ணன்களும் சாந்தி அக்காவை ஏ எல் வரை நல்லா படிக்க வைக்க, எப்படியோ ஆனந்தன் அண்ணை அவாவை எங்கயோ விதியின் விளிம்பில் சந்திச்சு, என்னவோ சிலப்பதிகாரக் கானல் வரிகள் சொல்லி மயக்கி, என்னத்தையோ மன்மதன் அம்புபோலக் காட்டி இளக வைத்து


                                                " படிச்சு என்னத்தைக் இனிக் கிழிக்கப் போறாய்,நீ இல்லாட்டி பொலிடோல் குடிப்பேன் "


                                                         எண்டு எப்படியோ பெண்களின் பலவீனத்தை சாதகமாக்கி மனம் மாற்றி ஒரு நாள் ஊருக்கு அதிகம் தெரியாமல் அவர்கள் கலியாணம் நடந்தது.

                               " தங்கச்சி கட்டும் வரை நாங்கள் கலியாணம் கட்ட மாட்டோம், அவளுக்கு டாகுத்தர் அல்லது எஞ்சினியர் அல்லது அக்கவுன்டன் மாப்பிள்ளை பார்த்து , வீடு வளவு சீதனம் கொடுத்து , நகை நட்டு அள்ளிப் போட்டு , கலியான வீடுக்கு வீதிவரை பந்தல் போட்டு , ஊருக்கு வெத்திலை பாக்கு வைச்சு, வாற எல்லாருக்கும் ரோசாப்பு பன்னீர் தெளிச்சு, புதுத் தம்பதிகள் கால்கள் பூ மியில் படாமல் கோவிலில் இருந்து வீடு வரை நடை பாவாடை விரிச்சு,  பத்மநாதன் மேளக் கோஸ்டி பிடிச்சு, இரவு ரங்கன் கோஸ்டியின் பாட்டுக்கோஸ்டி கூப்பிட்டு ஊரை அதிர வைச்சு .....ராசாத்தி போல வாழ வைப்போம் ...." 


                            எண்டு உறுதிமொழி கொடுத்த நாலு அண்ணன்களும் வெறுத்துப்போய் அதுக்கு பிறகு அவாவோட தொடர்பையே துண்டித்து விட்டார்கள்.

                                     

ஆனந்தன் அண்ணை கலியாணம் கட்டின நேரம் மிக மிக நல்ல மனிதர். பிறகு கொஞ்சம் அவர் வேலை அவரை உலைக்கத் தொடங்கின நேரமும் மிக நல்ல மனிதர் . கொஞ்சநாள் சாந்தி அக்காவோட கதவழிப் பட்டுக்கொண்டு இருந்த நேரமும் நல்ல மனிதர் .


                              அதன் பின் என்ன நடந்ததோ தெரியாது குடிக்காத நேரத்தில மட்டும் அவர் கொஞ்சம் நல்ல மனிதரா இருந்தார். !

                                   

அவர் யாழ்பாணத்தில இருந்து சங்கானை மனியதிண்ட இசுசு லோரியில புகையிலை ஏற்றிக்கொண்டு கொழும்புக்குப் போகும் லோரியில டிரைவரா வேலை செய்தார்.


                                                   மாசத்தில ஒரு கிழமைதான் சாந்தி அக்காவோட வீட்டுக்கு வந்து நிற்பார் ,மற்ற நாட்கள் எல்லாம் நேரம் ,காலம் இல்லாமல் , யாழ்ப்பாணம் - கொழும்பு இரண்டையும் இணைக்கும் கண்டி ரோடில , அந்த இசுசு லோறியக் கலியாணம் கட்டின மாதிரி அதோட தான் அவரோட சீவியம் போகும்.

                                                 

ஆனந்தன் அண்ணை வீடுக்கு வார அந்த ஒரு கிழமை நாட்களில் , கையோட அவர் ஓடுற இசுசு லொறியையும் கொண்டு வந்து எங்களின் வீடுக்கு பக்கத்தில இருந்த பால்ப் பண்ணை இருந்த வெறும் பள்ளக் காணிக்கை விட்டுட்டு , அதை, வேண்டுமெண்டே ஏறக்குறய மறந்த மாதிரிதான் இருப்பார்.


                                                   நான் அதில ஏறி விளையாடுவான் ,கியர் மாத்துவன் ,கோன் அடிப்பன் , அச்சிலேடரை அமத்துவன், அங்கால இன்காலா கையால சிக்னல் போடுவேன் , சில நாட்கள் அந்த லொறியை யாழ்பாணத்தில இருந்து கொழும்புக்கு ஒரு அக்சிடண்டும் படாமலே கண்டி ரோட்டில ஒட்டிக் கொண்டு போய், முருகண்டியில் சயிட் எடுத்து நிற்பாட்டி, இறங்கி பிள்ளையாருக்கு தேங்காய் உடைச்சுப்போட்டு ஒரு சேதாரமும் இல்லாமல் கொழும்புக்கே கொண்டு போயிருக்கிறேன் .

                        ஆனந்தன் அண்ணை நான் லொறி ஓடுறதை பாத்திட்டு , ஒருநாள்

                           " உமக்கு என்ன லொறி ஓடுற டிரைவர் ,வேலை வளர்ந்து செய்ய விருப்பம் போல இருக்கு , ஆனால் அந்த நசல் வேலை மட்டும் செய்யவேண்டாம் , நான் ரோட்டு ரோட்டா வீடு வாசல் இல்லாமல் , பொஞ்சாதி முகத்தைப்பார்த்து மாதக்கணக்கில் சீரளியிர கேவலத்தை பாரும் , நல்லாப் படிச்சு கதிரையில் இருந்து உத்தியோகம் பார்க்கிறதுக்கு படியும், வாகனம் ஓடுறது ஆபத்தான வேலை, சறுக்கினா சில நேரம் சவுக்காலையில் தான் வாழ்க்கை முடியும் "

                                             எண்டு அடவைஸ் போல சொன்னார் ,



                                          அவர் சொன்னது எனக்கு நடந்தது ,அதை  முடிவில் சொல்லுறன் .

                                         

ஆனந்தன் அண்ணை வீட்டுக்கு வந்த முதல் இரண்டு நாளும் ,தலை கரணமாக் குடிப்பார். குத்துவிளக்குப் போல எந்த முக்கியமான சமய நாட்களின் நல்ல நேரமெல்லாம் சாமி அறையில அபிராமி அந்தாதி பாடிக்கொண்டு இருக்கிற சாந்தி அக்காவைப் போட்டு அடிப்பார்.


                                              அயல் அட்டை வீடுகளுக்கு அடிச்சு நொறுக்குற, சத்தம் கேடகாமல் இருக்க ,டேப் ரெகொர்டரில் " ஆனந்தம் விளையாடும் வீடு ,இது அன்பாலே உருவான கூடு ,,,,," என்ற பாடலை உரத்துப் போட்டுடுதான் ,சாந்தி அக்காவுக்கு போட்டு விளையாடுவார் ,


                                              சாந்தி அக்கா ,பிறந்ததே கணவனிடம் உதை வேண்டவும் , காதலித்துக் கலியாணம் கட்டினதே அடி வேண்டத்தான் என்பது போல ,ஒண்டும் சொல்லாமல் , நல்ல அடக்க ஒடுக்கமான குடும்பப்பெண் போல அடி வேண்டுவா !

                                

 இரவு நல்லா வெறி ஏற, அவர்கள் வீடுக்கு முன்னால , எங்களின் வீட்டு மதிலோட ஒட்டிக்கொண்டு நின்ற வேப்பமரத்துக்கு கீழ, ஓலைப் பாயைப் போட்டு , ஆனந்தன் அண்ணை அண்ணாந்து கிடந்து கொண்டு

                            " அமைதிக்குப் பெயர் தான் சாந்தி ,,எடியே சாந்தி , எடியே சாந்தி , என் அமைதியில் ஏதடி சாந்தி ,எடியே சாந்தி ,எடியே சாந்தி ,,உன் உறவினில் ஏதடி சாந்தி,,எடியே சாந்தி ..... "

                                 எண்டு கோவமாப் பாடுவார் , சாந்தி அக்கா சத்தமில்லாமல் அவர்கள் வீட்டு வெளி விறாந்தையில் இருந்து அன்புக் கணவன் மனமுருகிப் பாடுறதைக் கேட்டுக் கொண்டிருப்பா. அவர் படுத்து கிடக்கும் வேப்ப மரம் காத்தில ஆட

                              " ஆரடா அவன் வேப்ப மரத்தை ஆட்டுறவன் , எடியே சாந்தி உன்ற கள்ளப் புருஷன் வந்து மரத்தில ஒளிஞ்சு நிக்குரான் போல "

                                                      எண்டு பேசுறது எங்களின் வீடுக்கு கேட்கும் ,நான் அம்மாவிடமே கேட்டிருகேறேன்

                    " ஏனம்மா ஆனந்தன் அண்ணை , சாந்தி அக்காவை வாய்க்கு வந்தபடி திட்டுறார் ?"

என்று  , அம்மா அதுக்கு

                                          " சாந்தி பாவமடா , சிவானந்தனும் நல்ல பொடியன் தான் , வேலை கஸ்ரத்தில ரெண்டுநாள் குடிச்சுப் போட்டு உளறுறான் , உலகத்தில இப்படி பல வீடுகளில் நடக்குது தானே, குடி மனுசரை நிதானமாய் ஜோசிக்க விடாது , புத்திசாலி நரியே கள்ளைக் குடிச்சுப் போட்டு ஓட்டைப் பானைக்க விழுந்த மாதிரி ஒருநாள் கஷ்டத்தில விழுத்தும்,  நீயும் இந்த குடி வெறியப் பழகி சீரளியாதையடா!"

                                    எண்டு சொன்னது நினைவு இருக்கு !.



                                                 அம்மா நரி ஓட்டைப் பானைக்க விழுந்த மாதிரி ஒருநாள் கஷ்டத்தில விழுத்தும் எண்டு சொன்னதும் எனக்கு நடந்தது ,அதையும் கதையின் முடிவில் சொல்லுறன் .

                                       

ஆனந்தன் அண்ணை தூங்கின பிறகுதான் சாந்தி அக்கா ,அவாவுக்கு விரும்பின , எப்பவுமே பாடும் ஒரு பாடலை பாடுவா ! சும்மா சொல்லவில்லை சாந்தி அக்கா நல்லாப் பாடுவா .  அவா சங்கீதம் படித்தவர்கள் போல " கமகம் , சங்கதி " எல்லாம் வைத்து பாடுவா ,அவா பாடிய அந்த ஒரே ஒரு பாட்டு , அவா அந்த யாழ்ப்பான இரவின் அமைதியில் பாடியதால் மட்டு மே இப்பவும் 25 வருடங்களின் பின்னும் எனக்கு நினைவு இருக்கு ,

                               "ஊரெங்கும் தேடினேன் ஒருவனைக் கண்டேன் , அந்த ஒருவனுக்குள் தேடினேன் உள்ளதைக் கண்டேன் " என்ற அந்த
பாடலின் சரணத்திலவரும்


                     " காண வந்த மாளிகையின் கதவு திறந்தது ,அங்கு கருணையோடு தெய்வம் ஒன்று காத்திருந்தது ,.." 


                                      என்ற வரிகள் அவா படிக்கும் போது விக்கி விக்கி அழுவா ,,அந்த பாடலின் கடைசி வரிகளான 

                           " வாழ எண்டு நீங்கள்சொன்னால்  வாழ சம்மதம் , இல்லை மறைய எண்டு நீங்கள் சொன்னால் அதுக்கும் சம்மதம் ....." 

                                என்ற வரிகளை திருப்பி திருப்பி வேப்ப மரத்தைப் பார்த்துப் பாடிப்போட்டு ,கொஞ்சம் அமைதியாகி , அந்த கடைசி வரியை கொஞ்சம் மாற்றி "

                                        " வாழ எண்டு நீங்கள் சொன்னால்   வாழ சம்மதம் , இல்லை சாக எண்டு நீங்கள் சொன்னால் அதுக்கும் சம்மதம் ....."

                                     எண்டு பாட்டிப்போட்டு, வேப்ப மரத்துக்கு கீழ குறட்டை விடும் ஆனந்தன் அண்ணையை , ஒரு " பெட் சீட் " எடுத்துக்கொண்டு வந்து , காலையில குளிரும் எண்டு நினைச்சோ என்னவோ , இழுத்து மூடிப் போட்டு , வீட்டுக்குள் போய்ப் படுத்துருவா!






காலையில ஆனந்தன் அண்ணை ,வேற மாதிரி இருப்பார் . சாந்தி அக்கா அதேபோல இருப்பா .பொதுவா இப்படி சம்பவங்கள் இரவில நடக்கும் வீடுகளில் அடுத்தநாள் காலை "தாய்குலம்களின் " சூரன் போர் நடக்கும் ! ஆனால் சாந்தி அக்க ஒண்டுமே சொல்லமாட்டா , ஒண்டுமே நடக்காத மாதிரி

                                      " இண்டைக்கு கூனி இறால் வேண்டியந்து , முருங்கை இலை போட்டு சுண்டுவமாப்பா ? "

                                           எண்டு கேட்க ஆனந்தன் அண்ணை , மூலயில் ஒரு பூனைக் குட்டி போல பதுங்கிக்கொண்டு இருந்து , அந்த கேள்விக்கு வாயைத் திறந்து பதில் சொல்லவே சக்தி இல்லாத மாதிரி தலையை மட்டும் ஆட்டுவார் , சாந்தி அக்கா

                                     " மட்டுவில் கத்தரிகாயும் வேண்டிக்கொண்டு வாறன் , உங்களுக்கு விரும்பின வெள்ளக் கறி வைப்பம் ,என்னப்பா !" 


                       எண்டு போட்டு ஒரு பிளாஸ்டிக் கூடை யை எடுத்துக்கொண்டு

                                   " தலை இடிகுதென்டா, நேற்றையான் மிச்சம் கொஞ்சம் கிடக்குதெல்லோ , அதை மட்டும் சாப்பிட முதல் குடியுங்கோ , என்னப்பா "

                                         எண்டு சொல்லி போட்டு சந்தைக்குப் போவா ! ஆனந்தன் அண்ணை தலையைக் குனிஞ்சுகொண்டு இருப்பார்.



ஆனந்தன் அண்ணையையும் ,சாந்தி அக்காவையும் பற்றி ,20 வருடங்களின் பின் ,யாழ்ப்பாணத்தில. சின்ன வயசில்......" நடந்த சம்பவத்தை நினைவில்த் தொடக்கி எழுவதில் ஒருவித அலாதியான இன்பம் கிடைகிறது , தொலைந்து போன ஒரு தொடர்கதையை தொடர்வது போல இருக்கு அதுதரும் நினைவுகளின் இரைமீட்டல்....

                                   
சாந்தியக்கா  போன்ற யாழ்ப்பாணக் ..,"...கதைகளுக்கு "அவுட் லைன் ஸ்கெட்ச் "எழுதி வைத்து ,இன்னும் எழுத நேரம்கிடைக்கவில்லை .  அந்தக் கதைகள் எல்லாம் சாந்தியக்கா வீட்டு வேப்பமரம் போல ஏக்கமா என்னைப் பார்த்துக்கொண்டு இருக்குதுகள் . முதல் பிரசினை எனக்கு கொம்புடரில் தமிழ் எழுதுவது .  அதைவிட தமிழ் இலக்கணம் உதைக்குது.. ஒழுங்கா தமிழ் மொழியில் பூனைக்குட்டி போல பூந்து விளையாடி எழுதமுடிவதில்லை . எப்படியோ

                              ஆனந்தன் அணையையும் ,சாந்தி அக்காவையும் பற்றி நினைவு வந்ததே ...ஒரு முறை பிரான்ஸ் பாரிஸில் இருந்து வைனைக் குடிச்சுப்போட்டு , 


                " வைன் குடிச்சா காத்துப்படத்தான் வெறி ஏறும் " 

                                      எண்டு ஒரு வெறிக் குட்டி சொன்ன அட்வைசை நம்பி , காத்துப் படாமல் இருக்க காரின் ஜன்னல்களை இறுக்கி மூடிப் போட்டு , கார் ஓடிக்கொண்டு பல மணித்தியாலம் பிரான்சில் இருந்து சுவீடன்க்கு , ஜெர்மன் நாட்டு அதிவேக ஓட்டோபான் நெடுஞ்சாலையில் அசராமா , போர்மிலா வன் டிரைவர்  ,மைகள் சூமெகர் போல ஓடிக்கொண்டு வந்து ,பெல்ஜியத்தில் ஒரு சின்ன குறுக்குப் பாதையில் இறக்கி , மெதுவாக ஓடிவந்து , கார் பார்கிங்கில் நிறுத்தி வைத்திருந்த ஒரு காருக்கு ,பின்னால அடிச்சு ,என்னோட கார் எஞ்சின் தீப்பிடிச்சு எரிய ,மயிரிழையில் உயிர் தப்பினேன் !


                                                     20 வருடங்களின் பின், உபதேசம் உறைத்த அதுக்குப் பிறகு இன்று வரை கார் ஓடுவதில்லை !

                                      சின்ன வயசில் அம்மா சொன்ன அட்வைசிலும் , ஆனந்தன் அண்ணை சொன்ன அட்வைசிலும் வாழ்க்கைப் பாடத்தை யாரும் தியரியாப் படிக்கவே முடியாத விசியம் இருக்கு எண்டு விளங்க எனக்கு 20 வருடங்கள் எடுத்து இருக்குது !.


.



1 comment :

  1. ஹம்ம்ம்ம்ம்..
    விளங்கிக் கொண்டாலும் பல விசயங்கள் வெளியே சொல்ல முடியாமல் அமுங்கிப் போகின்றன.
    நல்லாயிருக்கு எழுதிய விதம்.

    ReplyDelete