Thursday 14 May 2015

" சொல்வதெல்லாம் பொய் "

விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்தில், தமிழ்மொழி எல்லைகளை வரையறுக்க, தமிழ் ஈழம் ஒரு தேசமாக, சுதந்திரமாக போக வர முடியாத சுற்றிவளைப்புகள், கண்களைக் கட்டிக் கடத்தும்  நடு இரவுக் கைதுகள் , இராணுவச் சீருடைகளை  வெறுக்கும் இறுதிக் கனவாக, விடுதலைதான் ஒரே வழி என்று தலைமறைவாகத் தத்துவம் சொன்ன முன்னொரு காலத்தில் " இருந்தால் உசிர் போனால் மசிர் " என்று எல்லா இளையவர்களும் திடீர் திடீர் என்று சொல்லாமல்க் கொள்ளாமல் இயக்கங்களுக்குப் போனார்கள். அதில யார் யார் எந்த எந்த இயக்கத்துக்குப் போனார்கள் என்று அந்த நேரம் சரியாத் தெரியாது, அதுக்குக் காரணம் எல்லாருமே இருட்டில் தான் ஏதோ ஒரு இயக்கத்துகு திசை தெரியாத பறவைகள் போலப்   போனார்கள்.

                                   இளவயதில் எங்களின் குளத்தடிக் குழப்படிக் குருப்பில் இருந்த பலரருக்கு  மீசை அரும்பா முளைச்சு, தோள்ப் பட்டை நடு விலா எலும்பால் விரிஞ்சு, கசகச எண்டு சூரைப் பத்தை போல மயிர் கண் காணாத இடத்தில வளரத் தொடங்கின நேரம் ,நெஞ்சை நிமித்திக்கொண்டு எல்லா இயக்கத்துக்கும் அரசியல் அடிப்படை தெரியாமல் வெளிக்கிட்டுப் போன வீராதி வீரன்களில் முக்கியமான ஒருவன்  கொழுவி குமாரு, முப்பது வருட விடுதலைப் போராட்டத்தில் சிதறு தேங்காய் ஆகாமல் தப்பி இப்பவும் மாதுளம்பூ  நிற  வீராளி அம்மாளாச்சியின் அண்டமெல்லாம் காக்கும் கடைக்கண் பார்வையால்த் தப்பி  யாழ்பாணத்திலயே இருக்கும் ஒரு அதிசய பிறவி அவன்.

                                 கொழுவி குமாரு எப்படி தப்பி இருக்கிறான் என்பது எனக்கு தெரியவில்லை. அதுக்குக் காரணம் துவக்கைக் காட்டி எல்லாரையும் பாப்பா மரத்தில ஏத்தின இயக்கத்துக்கு  ,மலிபன் பிஸ்கட் வேண்டிக் கொடுத்து, முடக்கொத்தான் வேலிக்கை மடக்கி வைச்சு நெஞ்சுச் சட்டைக்கை கையைப் போட்டுத் துலாவி லவ் பண்ணிக்கொண்டு இருந்த, கொழும்பில பிறந்து வளர்ந்து எண்பத்து மூன்று கலவரத்தில்  கப்பலில் அகதியா யாழ் வந்த  சாருலதா என்ற  லைனுக்கும் சொல்லாமல் ஒரு இரவு நாகர்கோவிலுக்கு வான் ஏறி, மணல்காட்டில் வள்ளம் ஏறி , மரவள்ளிக்  கிழங்கு திண்டு ட்ரைனிங் எடுத்து , தேசவிடுதலையை வெறும் காலில் செருப்பும் இல்லாமல் சொல்லிக் கொடுத்த இயக்கத்துக்குப் போனவன், குறைநினைக்க வேண்டாம் ,  சொறி இப்படி சொல்வது பிழை ,அவன் தேசியத்தில்   உள்வாங்கப்பட்டவன் எண்டு தான் சொல்ல வேண்டும் ,இல்லாட்டி வரலாறு என்னை இந்த நுற்றாண்டு முழுக்கவும்  மன்னிக்காது.

                                அவன் போன இயக்கம் தான் அதி நவீன ஆயுதங்கள் வைச்சு இருந்த இயக்கம். மற்ற இயக்கங்கள் எல்லாமே இந்தியா கொடுத்த AK 47 துவக்கை வைச்சு  " பனை மரத்தில வவ்வாலாம் சிங்களவன் சவாலாம்  " எண்டு நேர்சறிப் பிள்ளைகள் போல நோண்டிக் கொண்டு இருந்த நேரம் , கொழுவி குமாரு அவன் இருந்த இயக்கம் வைச்சு இருந்த ஜெர்மன் நாட்டு ஹெக்ளர் அண்ட் கொச் நிறுவனம் தயாரிச்ச G3A3 துவக்கை கொழுவிக் கொண்டு முதல் முதல் படம் எடுத்து எல்லாருக்கும் காட்டினவன். அதுக்காக தான் அவனுக்கு கொழுவி குமாரு என்று பெயர் வந்தது என்று நினைக்க வேண்டாம், அது வேற ஒரு காரணம் சாருலதா கதையில் இருக்கு . பிறகு அதை எழுதுறேன்..

                         குமாரு இப்பவும் யாழ்பாணத்தில் இருக்கிறான். அவன் இயக்க அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கிறான்.  நான் ஐரோப்பாவில் அரசியல் அகதி என்று டமால் டுமில் விட்டு, வெள்ளைக்காரனின் சுதந்திர நாட்டில்  கொக்கத்தடியில் கொம்பு வைச்சு, அதில கோவணத்தைக் கொடி போலக் கட்டித் தொங்கவிட்டு வாழ்கையை  ஒட்டிக்கொண்டு  வசிப்பது அறிந்து, எங்கயோ தேடிபிடித்து ,யார் மூலமாகவோ என் தகவல் பெற்று ஒரு மெயில் என்னைபோல தப்பி ஓடிவந்து வெளிநாட்டில் வசித்துக்கொண்டு, சொத்தி ஆடு எட்டிப் பார்த்ததுக்கு  அடியடா படலையில் எண்டானாம் போல  அது மலருது ,,இது  மலருது .,தேசம் விடியுது ,,கொடி  ஏறுது என்று உசுப்பு ஏற்றும் கோஸ்டிகளை  நார் நாராகக் கிழித்து அனுப்பி இருந்தான்.   அதில அவன் ஏதோ ஒரு சண்டையில் வலது காலை இழந்து, இப்ப ஜெய்பூர் செயற்கை பிளாஸ்டிக் கால் போட்டு இருப்பதாக சொல்லி, அதை உறுதிசெய்ய படமும் அனுப்பி இருந்தான்.

                குமாரு எழுதின , " எடேய்  வம்பில பிறந்த தேவடியாள்  மக...... . ஒருநாள் இல்ல ஒருநாள்  மாட்ட வேண்டி வரும்  அப்ப......... கருக்கு மட்டையால ......விளாசுவேன் ....ஓடிப்போய் நிண்டு......இக்க   குசு குசுதுக்கொண்டு ... முதுகெலும்பு இல்லாத  பச்சோந்தி பரதேசிகள் ,,,,,,அம்பிட்டா .......இழுத்து வைச்சு   அரிஞ்சு  போட்டுதான்  மற்ற  வேலை   பார்ப்பேன்...... ஒருநாள்....... நீங்கள்...... எல்லாம்....க்க ..,,,ஐப்  பிடிச்சுக்கொண்டு . இங்கே வந்து தானே   ஆகவேண்டும் ..  " என்று  எழுதி இருக்கும் உணர்ச்சிப் பிழம்பான அந்த  மெயில் தனியா ஒரு நாள் இங்கே போடுறேன். என்ன அவன் பச்சை பச்சையா படு தூசனத்திலேயே பச்சையா எழுதியுள்ளதால் அதை எடிட் செய்யாமல்  போட முடியவில்லை.

                                        மூன்று தசாப்த காலத்தின் பின் குமாரு உசிரோடு இருப்பது எவளவு ஆச்சரியமோ அவளவு ஆச்சரியம் அவன் தன்னோட அனுபவங்களை எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டுருப்பது. கொழுவி குமாரு எங்களோட குளத்தடிக் குழப்படிக் குருப்பில் இருந்த நேரமே சூடு சொரணை இல்லாதவன், அவனோட கமக்கட்டில காஞ்சோண்டி இலையை சும்மா விளையாட்டாக தடவினாலே, பழங்கிணற்றடிப் பிள்ளையார் போல ஒரு அசுமாத்தமும் இல்லாமல் இருப்பான், அப்படி அவன் கழுவுற மீனில நழுவுற மீன் போல இருந்ததால் ,ஒருவேளை  குளறுபடிகளில் குத்துக்கரணம் போட்டு தப்பி இருக்கலாம் என்று நினைக்கிறன்.

                                   கதை புனைவதில் தயிர் கடைவதைப் போலக் கில்லாடியான கொழுவி குமார எழுதி அண்மையில் வெளி வந்த " சொல்வதெல்லாம் பொய் " புத்தகம் எப்படியோ எனக்கும் வாசிக்கக் கிடைத்தது. யாழ்பாணத்தில ஒரு சின்ன வாசிகசாலை அறையில் தொடக்க நிகழ்வாக  குத்துவிளக்கும் கொழுத்த மனசாட்ச்சி விடாததால் தலைமை தாங்கியவர் நுளம்புத்திரி ஒன்று பத்த வைச்சுப் போட்டு , வெளியீட்டு விழாவிற்கு பெருந்திரளாக வந்திருந்த வாசகர்கள் முன்னால் வாயத் திறந்தால் இன்னும் அதிகம் பொய் வரும் என்பதால், தலைமை தாங்கிய விழாத்  தலைவர் விநாயகமூர்த்தி விதானையார் ,

                       " இது உண்மைக் கதை இல்லை, முழுவதும் கற்பனை. முடிவில் யாவும் கற்பனை என்ற முடிவை  நீங்களே போட்டுக்கொள்ளுங்கள் என்ற சிந்தனையின் போக்கில் வரிக்கு வரி எழுதப்பட்ட புத்தகம் ,ஆனாலும்  எல்லாக் கதைகளில் வரும்  உண்மை மனிதர்களின் கற்பனைக் கதை போல கொழுவி குமாரு  ஆதரங்களுடன் எழுதிய புத்தகத்தைப் பற்றி தன்னடக்கத்துடன் இன்று ஒன்றும் பேசமாட்டார்...."

                                     என்று விநாயகமூர்த்தி விதானையார் , சொல்லி அந்த நிகழ்வு அதோடு முடிந்தது என்று கேள்விப்பட்டேன் .  ஆனால் கொழுவி குமாரே மனசாட்சிக்கு விரோதம் செய்யாமல் நடு நெத்தியில நாராயணா நாராயணா என்று நாமம் போட்டு, கொஞ்சம் ஒத்துக் கொல்லும்படி,  நியாயமா கொஞ்சப் பொய்கள் தான் அதில தேர்ந்தெடுத்து எழுதி இருக்கிறான். அப்படிதான் அந்த இயக்கத்தில் இருந்து காசைச் சுருடிக்கொண்டு அல்வா கொடுத்திட்டு வந்து  ,பின்நாட்களில் சர்வதேசப் பொறுப்பாளர் என்ற பதவியில் இருந்த நேரம் இன்னும் கொஞ்சம் காசை சுருட்டிக்கொண்டு ஓடிய ஜே ,கே . கருத்து சொல்லி இருக்கிறார்.

                                  " சொல்வதெல்லாம் பொய் " புத்தகம் பற்றி எனக்கு விமர்சன ஜாம்பவான்கள் போல விமர்சனம்  செய்ய தெரியாததால் ஒன்றுமே எழுத முடியவில்லை,ஆனாலும் பல கதைகளில் பனை மரங்களுக்கு நடுவால பட்டாம்பூச்சி பறக்குது, கொலை விழுத்திய துவக்குகளின் நுனியில் நாவூறு  படாமல் இருக்க தேசிக்காய் நேர்ந்து தொங்கவிட்டு இருக்கு ,பொம்மைவெளி  பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட சம்பவக் கதையில் ஒரு சின்ன சொப்பின் பாக்குக்க கொத்துரொட்டி கொத்தும் தண்டவாள தகட்டை வைச்சே குமாரு கதைவிட்டு இருக்கிறான். கப்பல் தண்ணியில ஓட்டிச்சா,,அல்லது தண்ணி கப்பலுக்க ஓடிச்சா என்று புரியமுடியாமல் உளுந்துவடையில உளுந்து இல்லாமல் சிந்தாமணிக் கடலை தெரியுது. அப்புறம் குமாரே மண்டையில் போட்ட என்று நாங்கள் கேள்விப்பட்ட சுக்குட்டி, நடுவில், தனபாலசிங்கம் , கொலைகள் பற்றி குமாரு நல்லா ஜட்டியை இறுக்கிப் போட்டு மறைச்சிட்டான் போல இருக்கு.  

              தகடு வைச்சுச், காத்து இறக்கிறதுக்கு முதலே சண்டையில் கால் இழந்ததால் விலத்திப்போக அனுமதிக்கபட்டு , நொண்டி நொண்டி வெளிய வந்து,  இயக்கத்துக்கு போன நேரம் ,காதலும் கத்தரிக்காயும் என்று விட்டுப்போட்டுப் போன பழைய  சாருலதாவைத் தேடி இருக்கிறான்  அவள் ,

                      " நீ செத்தா அடுத்தநாளே மண்ணெண்ணெய் ஊதிக் கொழுத்திப் பத்த வைச்சுப் போட்டு செத்துப்போவேன் "

                                         என்று காதலித்த நேரம் சொன்ன  வசனம்  " சொல்வதெல்லாம் பொய் " என்ற புத்தகம் போலவே உறுதியாகச் சொல்லி அழுது குழறிய   அவள்,   ஹொலண்டுக்கு இன்னொருத்தனோடு கலியாணம் கட்டிப் போனது கேள்விப்பட்டு உடைந்து போய்..... எப்படியோ குமாரு பாவம்,  அவனும் எல்லா உண்மைகளையும் போட்டு எழுதி இருக்கிறான். அதால  பல்லு இருக்கிற நேரம் தானே பகோடா சாப்பிட முடியும் என்று மனித உரிமைகளை மதிக்கும் மனிதாபிமானிகள் அவனுக்காகப் பரிந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அந்தப் புத்தகத்தில் வரும் பாத்திரங்கள் பலரோட பெயர் உண்மையாக இருப்பதால் அதை ஒரு வரலாற்று ஆவணம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வரலாற்று அறிஞர் கறிக்கடை கந்தசாமி சொல்லியுள்ளார்.

                                       ஆனால் அந்தப் புத்தகத்தை பற்றி கொம்புடர் குத்து மன்னன்களில் விமர்சன விசர்த்தனத்தில் அளவுக்கு அதிகமாக பொய் கலந்திருக்கு. பெட்டிசம் பாலசிங்கம் போன்ற நேர்மையான விமர்சகர்கள் தற்சமயம் உசிரோடு இல்லாததால் இதில எது உண்மை,எது பொய் என்று பிரித்தறிய முடியவில்லை என்று இன்னுமொரு பின்கதவால புகழ் பெற்ற  விமர்சகர் அவரோட வயிதெரிச்சல் இணயத் தளத்தில் அற்புதமாக எழுதி இருக்கிறார்.

                           குமாரு அவன் இயங்கிய, அல்லது அவனை வைச்சு இயக்கிய இயக்கத்தின் அலங்கோலத்தை மட்டுமில்லை ,வேற இரண்டு இயக்க அலங்கோலத்தையும் எழுதியுள்ளான், அதில ஒரு இயக்கம் பற்றி வாசிப்பவர்களின் தோளில ஏறி நின்றே ஜேம்ஸ் பொன்ட் படங்களில் வரும் றோயர் மூர்  செய்த சாகச சம்பவங்களை விட , வாயில ஈ போறது தெரியாமல் ஆவெண்டு பார்க்க வைச்சு  காதில பூ சுத்தியுள்ளான்.

                                        பெண்களைப் பற்றிய கதைகள் சிலதில் கொழுவி குமார ஆதரங்களுடன் தக்காளித் தொக்குக்கு கடுகு, சின்ன வெங்காயம் போட்டு தாளிச்ச மாதிரி நல்லாத் தாளிச்சு எடுத்து, சார்லஸ் புயுகொஸ்கி போன்ற  ஒரு சிறந்த கதை சொல்லி போலவே எழுதி இருகிறான்.ஆனால் அந்தக் கதைகள்  ஆணுறை போட்டு பாதுகாப்பாக எழுதப்பட்டு இருந்தாலும்  விரசம் அதிகமா இருக்கு என்று அவனைப் பலர் போட்டு உருட்டவும் இணுவில் அண்ணாக்கோப்பி கம்பனி  நல்லூர் கோவில் திருவிழாவில் அவர்கள் கோப்பி விளம்பரத்துக்கு ஒரு குண்டு மனிதர் சிரித்துக்கொண்டு நிற்கும் படம் போல அதை எல்லாம் அசட்டை செய்யாமல் " அலைஸ் இன் வோண்டர் லான்ட் " கதையில வாற "லூயிஸ் கரோல்  " பூனை போல அவன் இருப்பது ஒரு இலக்கிய ஆச்சரியம்.

                                            உங்களுக்கு மட்டும் உண்மையைச்சொன்னால் என்ன , வாசிக்கிற சராசரி  வாசகனுக்கு என்னமோ  நரிக்குக்  கடைசிப் பல்லு இருக்கும் வரை ஞானம் வராது என்று சொன்ன மாதிரி,  கொழுவி குமாரு உரிச்சு எடுத்து எழுதியிருக்கிற கதைகள் விளக்குமாத்துக்கு குஞ்சரம் கட்டித் தொங்க விட்டு, தென்னம் கள்ளில கோதுமை மாவை வைச்சு  மாவிளக்கு போட்டு அதைத் தீத்தியது போல உள்ள அந்த புத்தகத்தை   , புலனாய்வுப் பின் தொடர்வு ,  நெத்திப்பொட்டில டொக்கு டொக்கு , மின்கம்ப மரணதண்டனை போன்ற சாமானிய மனிதர்கள் கொட்டாவி விட வாயைத் திறந்தாலும் கிடைத்த வீரசுவர்க்க வரலாற்றுச் சாவுக்கும் பயப்பிடாமல் துணிந்து  " சொல்வதெல்லாம் பொய் "  களை   எழுதியுள்ளதை வரவேற்கத்தான் வேண்டும் போல இருக்கு.

.

1 comment :

  1. விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்தில், தமிழ்மொழி எல்லைகளை வரையறுக்க, தமிழ் ஈழம் ஒரு தேசமாக, சுதந்திரமாக போக வர முடியாத சுற்றிவளைப்புகள், கண்களைக் கட்டிக் கடத்தும் நடு இரவுக் கைதுகள் , இராணுவச் சீருடைகளை வெறுக்கும் இறுதிக் கனவாக, விடுதலைதான் ஒரே வழி என்று தலைமறைவாகத் தத்துவம் சொன்ன முன்னொரு காலத்தில் .......

    ReplyDelete