Monday 14 May 2018

அனபெல்லா

வெளிய நின்று கதவில பொருத்தி இருந்த அழுத்தும் பொத்தான்களின் நிறம் நிறமான சின்ன மின்மினி விளக்குகளைப்  பார்க்கவே அந்த ஆட்டொமேட்டிக் கழிப்பறை நிச்சயமாக உள்ளுக்கு நிறையவே பருவப்பெண்ணின் இளமை ரகசியங்கள் போன்ற  ஆச்சரியங்களை வைத்திருக்கும் போலத்தான் இருந்தது.. ஏனென்றால் அந்தக் கதவுக்கு முன்னால போய் நிக்கவே ஒரு இளம்பெண்ணின் குரல்

                                                      " தன்னிச்சையாகக் கழுவல்  துடையல் தொற்றுநீக்குதல்  உள்ளுக்கு நடக்குது,  சற்று நேரம் பொறுத்து இருக்கவும், பச்சை நிற விளக்கு கண்சிமிட்டி சில நொடிகளில் தன்னிச்சையாகக் கதவு திறக்கும் "
                                               என்றது பாதரசம் போல முனைவுகளில் பட்டை தீட்டிய  இலட்ரோனிக் குரல். ஒரு உயிருள்ள பெண் போலக் கதைப்பதுக்கு இன்னும் நிறையத்தூரம் போகவேண்டியது போல இருந்தாலும், ஒருவிதமான பெண்மையும் கனிவும் கலந்த உச்சரிப்பு அதில தென்றல் போலவே வீசிக்கொண்டிருந்தது.

அந்த இடம் நான் வசிக்கும் பழைய  நகரம் இல்லை. வீட்டு நெருக்கடியைச் சமாளிக்க  நவீனமாக  புதிதாகத் தொடர் குடிமனைகள் அமைத்து , மிகப்பெரிய அங்காடிகள் கண்ணாடிகளில் முகம் பார்ப்பதுபோல் ஒன்றுக்கு ஒன்று எதிர் எதிரே நிர்மாணித்து .ஒரு புதுவிதமான நகரத்தை வடிவமைத்து இருந்தார்கள்.  அந்த நகரத்துக்கு வந்திறங்கும் நிலத்தடி  மின்சார  ரெயில் வண்டிகள் தண்டவாளங்களில்  தடம் மாறும் ஒரு இடத்தில அந்தப் பொதுக் கழிப்பறை இருந்தது.

                                                     அன்று மூசிக்க்கொண்டிருக்கும் குளிர் கழுத்தில குளிரவைத்தாலும்  வெளியே வெளிச்சமாக  நல்ல வெய்யில்  விழுந்துகொண்டிருந்தது. செர்ரி மரங்கள் மென் நாவல் நிறத்தில் பூக்களை தலையெல்லாம் சூடிக்கொண்டிருக்க ,காற்று கிளைகளை அசைக்கும்  போதெல்லாம் செர்ரி ப்லோசம் மலர்களின் இதழ்கள் உதிர்ந்து பறந்துகொண்டிருந்தது

                                                    நடைபாதைக் கடைகளுக்கு  வெளியே மனிதர்கள் பியர் குடித்துக்கொண்டு சத்தமாகக் கதைத்துக்கொண்டு இருந்தார்கள். பாதையோரம் காற்றடிக்கும் போதெல்லாம் ஏப்பிரல் மாத மண்வாசனையோடு  புழுதி சுழண்டு எழும்பியது   கொஞ்சம் போல பச்சையாக இருந்த நிலப்பரப்பில் இளையவர்கள் படுத்திருந்தார்க்கள்

                      கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண்குரல்

                                          " இப்போது உங்களின் முறை "

                                                                                    என்றபோது தியேட்டரில் வெள்ளித்திரை விலகுவது போல  மெல்லெனக் கதவு திறந்தது.புத்தம் புதிய வாசசோப்பு வாசனை முகத்தில அடிக்க  உள்ளே காலடி எடுத்து வைச்ச உடனே மெல்லென கதவு பின்பக்கம் தாளிட்டுக்கொள்ள ,டிட்டியோ  என்ற சுவிடிஷ் பாடகி பாடிய " Come along now  Come along and you´ll see  What it's like to be free " பாடல் சன்னமாகப் பாடி வரவேற்க , ஏதோ ஏரோபிளேனுக்க உள்ளிட்டது போல இருந்தது.


நான் போனது தொட்டியில் நிரம்பி முட்டி வழியப்போவது போல  ஒரு  அவசரகால நிலைமையில் அவசரத்துக்குத் தண்ணி இறைக்க.  அந்த இடத்தில  வெளிய நிறைய மரங்களும் மறைவுகளும் இருந்தது உண்மைதான் . காற்றோட்டமாக  ஒரு மரத்தோடு மரமாகச்  சாய்ந்து நின்று ரகசியம் பேசுவதுபோல    சந்தில சிந்து பாடிப்போட்டு அலுவலை முடிச்சு இருக்கலாம்தான்.

                                                       ஆனால் இப்பெல்லாம் இரகசியப் போலீசார் மாறுவேடங்களில் உலவுகிறார்கள். என்னைப்போல வந்தேறிகள் பிடிபட்டால்  என்னதான் வியாதி விளக்கம் சொன்னாலும் கேக்காமல்  சட்டப்படி பப்ளிக் நியூசென்ஸ் என்று சொல்லி அவடத்தில வைச்சே தண்டனை எழுதிய பேப்பரைக்   கையில தருவாங்கள்,

                                                          அநாகரிகமாக எவ்ளவோ செய்துகொண்டிருக்கும் வெள்ளைகள் நாகரிகத்தை  இதுபோன்ற சமயங்களில் அதிகம் எதிர்பார்ப்பார்கள்.  அதுக்கு அழுதுவடியும் காசில ஸ்டார் ஹோட்டலுக்குப்போய் ஒருக்கா ஆசைதீர சுழட்டிச் சுழட்டிப்  பேஞ்சிட்டு வரலாம்,

                                                         
தானியங்கி அதிநவீன கழிப்பறை சொல்லப்பட்ட மாதிரி புருனே சுல்தான் வீடுபோல  பிரமிப்பாக இருந்தது. ஆதாரமாக எல்லாக் கழிப்பறைகளிலும் இருக்கும் வசதிதான் இருந்தாலும் அதைக் கழிப்பறை என்றே ஒத்துக்கொள்ள முடியாது. ஒரு கணனி  அலுவலக  வரவேட்பு அறைபோல இருந்தது. சுவர்களுக்குப் பதிலாக வெள்ளித் தகடுகள் பொருத்தி, நிலமும் வெள்ளித்தகடு போல இருந்தது.

                                          வசந்த காலத்தில் வருமே  ஒரு விதமான கொன்றை மலர்களின்  வாசனை  அது போன்ற   இயற்கையா அல்லது செயற்கையா என்று சொல்ல முடியாத சென்ட் வாசனை அந்த இடத்தின் காற்றில் மேலேறியிருந்தது..

                                                            நான் ரெண்டு ஸ்ட்ரோங் பியர் என்னோட பையில் வைச்சு இருந்தேன்.  என்னதான் முன் கோடையாக இருந்தாலும்  வெளியே பியர் கானை எல்லாருக்கும் தெரியும்படி வைத்துக்கொண்டு  குடிக்க முடியாது. மாமா கண்டான் என்றால் அதை வேண்டிக்கவிட்டு ஊத்திப்போட்டு  வெறும் கானை மரியாதையாக மிகவும் பக்குவமாக கையில தருவான்.

                                                         ஒரு உடைச்ச பியர் கானுக்காக அவனோட வாக்குவாதப்பட்டால் , மிச்சம் இருக்கிற உடைக்காத பியர் கானையும் எடுத்து உடைச்சு  சிவராத்திரி லிங்க  அபிஷேகத்தில சிவலிங்கத்துக்கு பால் ஊத்திறது  போல  நிலத்தில ஊத்திப்  படங்கீறி விளையாடிப்போட்டுப் போவான். . அவ்வளவு இறுக்கமான சட்டதிட்டம். குடிமக்களுக்கு. அதனால எப்பவுமே உருமறைப்பில்  ஒழிச்சு  வைச்சுத்தான் குடிக்கிறது .

                                              ஒரு மிச்சலின் நட்ச்சத்திரரக  ரெஸ்டாரெண்ட் போல இருக்கும் உணர்வு வர ஒன்றை உடைச்சுக் குடிப்பமா, கொஞ்சம் ஆறுதலாக பிறகு வந்த அலுவலைப் பார்ப்பமா என்று நினைச்சு சில நேரம் கண்காணிப்பு கமரா பொருத்தி இருப்பார்களோ என்று ஒரு சுற்று நோட்டம் விட்டுப்பார்த்தேன். அப்படி எதுவும் இருக்கவில்லை. அல்லது வெளிப்டையாகத்  தெரியவில்லை.

                                                    மேல் மூடியை இழுத்து பாட்டில விழுத்திப்போட்டு அதுக்குமேல இருந்துகொண்டு ,   ஒரு பியரை உடைச்சு ரெண்டு  இழப்புதான் இழுத்திருப்பேன், அதுக்குள்ளே அந்த அலுமினியப்  பெண்குரல் எங்கிருந்தோ வந்து சுவிடீஷ் மொழியில்

                                                 " அன்புடையீர், தயவு செய்து   இந்த இடத்தில வந்த அலுவல் மட்டும் பார்க்கவேண்டும், அது தவிர்ந்த வேறேதும் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது, இங்கே எல்லாமே கண்காணிக்கப்படுகிறது சொல்ல வேண்டிய இடத்துக்கு இந்தச் செயல் இப்பவே உடனடியா அறிவிக்கப்படும் "

                                                      கல்யாண அழைப்பிதழில் அடிப்பதுபோல அன்புடையீர்  என்று மரியாதையாகத் தொடங்கி கலியாணம் முடிய பொஞ்சாதி     வெருட்டுவது போல முடிந்தது., நான் அந்தக் குரல் எங்கிருந்து வருகிறது என்று கேட்டும் அது வந்து போன இடத்தை அடையாளம் காண முடியவில்லை.,

                                         இந்த இடம்தான் கழிப்பறை போல இல்லையே , பிறகெதுக்கு வந்த வேலை வந்த அலுவல் என்று சொதப்பி இந்தப் பெண்குரல்  காதுக்கு கொசுத்தொல்லை போலபிசத்துதே என்று ஜோசித்துப்போட்டு   இது சும்மா ஒரு வெருட்டுதான் என்று நினைச்சு  ,பியர் கானை உயர்திக் காட்டி,      இவளுக்கு எங்கே தமிழ் விளங்கப்போகுது என்ற துணிவில்

                           "  இலட்ரோனிக் இளம் பெண்ணே உனக்கும் மதுக்கிண்ணங்கள் முட்டி மோதி முத்தமிட்டுக்கொள்ளும்   சியர்ஸ் "

                                                          என்று சொல்லி இன்னொரு இழுப்பு இழுத்தேன், அந்தக் குரல் மறுபடியும் திரும்பிவந்து, இந்தமுறை சுவிடீஷ் மொழியில் கொஞ்சம் அதட்டுகிற தொனியில் ,

                                                      " இது இரண்டாவது முறை எச்சரிக்கை , தயவு செய்து   இந்த இடத்தில வந்த அலுவல் மட்டும் பார்க்கவேண்டும், அது தவிர்ந்த வேறேதும் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது, இங்கே எல்லாமே முறையாகக்   கண்காணிக்கப்படுகிறது, மீறல்கள்  சொல்ல வேண்டிய இடத்துக்கு  இப்பவே உடனடியா அறிவிக்கப்படும் "    

                                                      என்று அந்த இலட்ரோனிக் குரல் அதட்டியது.அந்தப் பெண்குரல் ஒரு பெண்ணே நேர்ல வந்து நின்று உத்தரவு தருவது போலிருக்க, இதுக்கெல்லாம் அசரக்கூடாது என்ற  என்னோட ஈகோ ஒழுங்கு மரியாதைக்கு அடிபணிய  விடவில்லை..

                                                              ஒரு தானியங்கி  மெஷின் நடுவீட்டுக்குள்ளே நின்று  நாட்டாண்மை போல   ஒரு உயிர்உள்ள மனிதனுக்கு கட்டளை  இடுகிறது.  இந்தத் தொழில் நுட்ப  வளர்ச்சி எங்கே கொண்டு போய் முடிக்கப்போகிறதோ  என்று நினைத்துக்கொண்டு, வாறது வரட்டும் வரும்போது  பார்க்கலாம் என்று  ஆறுதலா  மிச்ச பியரை இழுத்துக்கொண்டிருந்தேன்                     


என்னதான் இருந்தாலும் எதுக்கும் ஒரு  எல்லை இருக்குதானே. அதனால வந்த அலுவலைத் தொடக்க சிப்பை கீழ்நோக்கி இழுத்துப் போட்டு, , ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி தேட ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா என்று பாடத்தொடங்க , அந்தப் பெண்குரல் கிறீச் கிறீச் என்று ஒயில் இல்லாத எஞ்சின் இறுகிறது போலக்   கிறுகிப்போட்டு  கோபமாக , இந்தமுறை முதல் முதலில் சுவிடீஷ் மொழியில் கதைக்காமல் தென் பாண்டி நாட்டுத்  தமிழில்


                                                         " ஓ பாட்டு வேற கேக்குதோ இந்தநேரம்,   திரும்ப திரும்ப சொல்லுறேன் ,கேக்கிற மாதிரி தெரியவில்லையே, வந்தமா வந்த அலுவலை சடக்கு புடக்கு எண்டு முடிச்சமா எண்டு போட்டு வெளியேற வேணும் "

                                                      என்றது, இப்போது அதன் குரலில் இலட்ரோனிக் அதிகம் இல்லை, ஒரு விதமான கிராமத்து பேச்சு வழக்கு மொழியாடல் போல இருந்தது , இது எப்படி சாத்தியம் என்று விளங்கவில்லை , சரி எதுக்கும் பதில் ஒன்று  கொடுத்துப்பார்ப்பம்,இந்த மிஷினுக்கு அது புரிகிறதா என்று பார்க்க நினைத்து தென் குமரிமுனைத் தமிழில்,

                                         " வந்த அலுவலை முடிச்சுப்போட்டு போவம் என்றுதான் வந்தேன்,,ஆனால் இந்த இடம் வேற பல அலுவல் பார்க்கவும் நல்ல    இடம்போல இருக்கே , அதால அவரசமாய் மூடிக்கொண்டு வந்த அலுவலே மறந்து போச்சு,  அதுதான் மெல்ல மெல்ல அலுவலைத் தொடங்கப் போறேன்."

                                          " அப்படியா,, இது நல்லதுக்கில்லை , முதல் உன்னோட விளக்கம் இங்கே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை தெரியுமா, வந்த அலுவலை முடிச்சமா எண்டு போட்டு வெளியேற வேணும் ."

                                                  " நீ மட்டும் சட்டம்   வைக்கலாம் , நான் தன்னிலை விளக்கம் முன்வைக்க உரிமை இல்லையா ?? "

                                         " இல்லை.. ஒரு ஒரு வார்த்தையில் பதில். இது முடிவு "

                                             " அதெப்படி முறையீடு என்று ஒன்று இருந்தால் அதுக்கு மேன்முறையீடு என்று ஒன்று இருக்குத்தானே "

                                                       " இதுநீதிமன்றம் இல்லை, இது அல்ரா மோடெர்ன் தானியங்கிப் பொதுக் கழிப்பிடம்

                                             " ஓ... அதனால நீங்க வச்சதுதான் சட்டமா,, இந்த நாட்டில ஒரு தனி மனிதனுக்கு பேச்சுரிமை இல்லையா "

                                           "  இல்லை,   இங்கே கேள்விகளுக்கு இடமில்லை,  வந்த அலுவலை முடித்துவிட்டு வெளியாகிவிட வேண்டும்,,சொறி ,,வெளியேறிவிட வேண்டும்,, "

                                           "  உனக்கேன் இவளவு அக்கறை,  உலகத்தில் யாருக்குமில்லாத அக்கறை என்று கேட்பாய்,,நானே  பாதிக்கப்பட்டேன் ,நேரடியாக பாதிக்கப்பட்டேன் , சுயநலம்  என்பாய்,,என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கு "

                                                      " அட அட என்னது இது மஞ்சள் துண்டுத் தலைவர்   பராசக்தி    படத்தில எழுதின    வசனத்தை எனக்கு எடுத்து அடிச்சு விடுறாய் "

                                      " இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் ,,நீ இப்ப எங்க  இருக்கிறாய் ? "

                                          " எனக்கு எல்லாம் தெரியும்..இந்த இடம் முழுவதும் எனக்குக் கண்  இருக்கு ,,சுவர் முழுவதும் காது இருக்கு "

                                            "  நீ என்ன கடவுளா ?"

                                            " டேய்,, யார்ரா  நீ .  ராஸ்க்கோல் , ,முதல்ல என்னை  நீ போட்டுக் கதைக்கிறதை நிப்பாட்ரா  சாவுகிராக்கி "

                                             " நீ மட்டும் டா போடலாம் நான் நீ போடக்கூடாது "

                                                   " ஓ... நீ அப்படி வாரியா ,  சரிக்கு சரி என்னோட முண்டிப்பார்க்க வாரியா , நீ என்ன பெரிய ஜல்லிக்கட்டில விருதுநகர்க்  காங்கேயங்  காளையை மடக்கி அடக்கின வீரனா "

                                                  " போடி,  கழுதை நீ ஒரு வாயில்லாத ரோபோ  மிஷின், உன்னோட நாக்கு வெறும் மைக்கிரோ பைபர்  நானோ இழைகள் , உன் குரல் புரோகிராம் செய்து பேச வைச்ச  சிந்தட்டிக்  சாப்ட்வார் , "

                                                   " ஹாஹா ஹாஹா ஹாஹா  , ,அதெண்டால் உண்மைதான், நீ ஒரு பயித்தங்காய்  "

                                    " என்னடி இப்பிடி சொல்லுறாய் ,,எதைப்பார்த்து சொல்லுறாய் "

                                                     " ஹாஹா ஹாஹா ஹாஹா ,,சிரிப்பு வருகுது,,ஆனால் ஒருகா  மட்டுமே ஒரு பதிலில் சிரிக்க முடியும் எனக்கு "

                                             " சிரிக்காமல் சொல்லு மா "

                                       " எல்லாத்தையும் தான் ,முழுசா ,உன்னையும்தான்,,நீ இப்ப சிப்பை கீழே இழுத்தியே,, அதுக்குப்பிறகும் தான்  "

                                             " அடிப்பாவி,,இதை எல்லாமா அச்சம், மடம் ,நாணம் பயிர்ப்பு இல்லாமல் பார்ப்பாய் "

                                               " இதெல்லாம் என்னது, இதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் "

                                   " இதெல்லாம் ஒரு பெண்ணுக்கு இலக்கணம் , எங்கள் தமிழ் இலக்கியங்களில் வரையறை செய்யப்பட்ட ஒரு நல்ல பெண்ணின்  சாமுத்திரிகா  இலட்சனங்கள் "

                                                   " ஹஹ ஹஹ ஹஹ.இது வேறயா ,.கிழிஞ்சுது போ.   எனக்குதான் இலக்கணமும் , இலக்கியமும் , அந்த
 முந்திரிக்கா லட்சனமும்  இல்லையே ,"

                                                 " அது முந்திரிக்கா லட்சனம் இல்லை,,,சாமுத்திரிகா இலட்சனம்,,முன்னோர்கள் பெண்களை நான்குவகைகளாக சாமுத்திரிகா இலட்சனம் என்னும் பெயரில் வகுத்திருக்கிறார்கள் ..பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்று "

                                                       " அய்யோ   சாமி,,, நிப்பாட்டுரா இந்த அலப்பறையை ,,வீணாப்போனவனே "

                               " நீ சிரிக்கும் போது எப்படி இருக்குத்தெரியுமா "


                         "ஐயே,,,,இப்பிடி  என்னவும்  பிரியோசனமாய் கதைபா  நீயே சொல்லுப்பா,,, நான் நல்லா சிரிக்கிறேனா,"

                                       " ஓம்,,சிரிப்புத்தான் ஆனால் எதுக்கு சோடியாக  மூன்று ஹாஹா மட்டும் அடி தழை சீர் போல நேரிசை வெண்பா ஏற்ற இறக்கத்தில் இருக்கு "

                                                   " ஹாஹா ஹாஹா ஹாஹா , நீ வேற வயித்தெரிச்சலைக் கிளப்புறாய்,,இந்த சிரிப்பு எனக்கு விருப்பம் இல்லை ."
.
                                                 " எனக்கு நல்லா இருக்கு கேட்க ,,வித்தியாசமாய் இருக்கு "

                                                  " ,நான் சிரிக்கும்போது அதிகம் மின்சாரம் பாவிக்கப்படுவதால், என்னை டிசைன் செய்த கஞ்சப் பிசுநாறி , நாலு செக்கன் மட்டுமே சிரிக்கிற மாதிரி வடிவமைச்சு இருக்கிறான் "

                                          " உன்னை யாரடி உருவாக்கினான் ? "

                                           " ஒரு தமிழன், ஒரு பச்சைத் தமிழன் ,  மிஷின் லாங்குவேச் சாப்ட்வார் எஞ்சினியர்,, ஸோதென் கலிபோர்னியா சிலிகான் வலியில் என்னை உருவாக்கினான் "

                                           " அதுவா,,நல்ல பச்சைத்  தமிழ் பச்சை பச்சையா கதைக்கிறாய்,,நினைச்சேன் அப்பவே  ,,உன்னோட பெயர் என்னப்பா "


இப்ப கொஞ்சநேரம் அந்தக் குரல் மறுபடியும் கிறுகிறு என்று எங்கேயோ போய் நகர முடியாமல் இறுகிப்போய் நின்றதுபோலவும், அங்கிருந்து மீண்டுவர பலவிதத்திலும்  முயல்வது போலவும் முக்கல் முனகல் சத்தம்வந்து முடிய , கொஞ்சநேரம் மவுனம், பின்னணியில் பிளிங் பிளிங் என்று சத்தம் வந்த கொஞ்சநேரத்தில் சில்வண்டு இரைச்சலுடன் மெல்லென ஒரு செருமலுடன்

                                   "   எனெக்கெண்டை வாடுபவத்தை சிசத்தைல அன்டடாத தமிழிலன் மொழியுருவாக்கத்துக்கோ சத்ஹப்கம்ம் கோடுக்கும் பைநாரிலயில ,,ஐங்  ,,ஐங்  ஜங்க்,, இஙகுகிகஈங் "

                                          என்று என்னமோ குழப்பமான சொற்கள் இலக்கணமோ, சொல்லுருவாக்கமோ இல்லாமல் வந்தது, பிறகு தெளிவாக , நான் கலவரமாகி  "  நீ ஓகேயா "  என்று கேட்டேன் , கொஞ்சநேரத்தில் அந்த குரல் மீண்டுவந்து

                                   " என்னை வடிவமைத்த சிஸ்ட்டத்தில் அந்தத் தமிழன் மொழியுருவாக்கத்துக்கு சத்தம் கொடுக்கும் பைனரி கோட்ஸ்ஐ பகருதுப்படை என்ற  அ தரப்பழசான தமிழ் இலக்கணத்தை செருகிவைச்சு உள்ளான்,,அது பலநேரம் என்னைக் குழப்புது,   "

                                          "   ஓகே,,ஓகே,,இப்ப விளங்குது , பழந்தமிழ் இலக்கணம்  நமக்கே போட்டு உலைக்கிறது ,,நீயெல்லாம் எம்மாத்திரம். "

                                          " எனக்கு அஞ்சு என்று ஒரு அசிஸ்டன்ட் பை சப்போர்ட் கொம்பியூட்டர் இருக்கு,,அவசரத்துக்கு  உதவிசெய்ய,,அஞ்சு  என்னோட பெஸ்ட் பிரென்ட் ,,நல்ல பொண்ணு,,சின்னப்பொண்ணு "

                                   "ஓ  உனக்கு ஒரு எடுபிடி வேறயா ,,சரி விடு ,,  நீ ஒரு ரோபோவா அல்லது உயிர் உள்ள மனுசியா என்று  உறுதிப்படுத்தவேண்டியுள்ளது "

                                           "    ஓ,,அதிலென்ன  இப்ப "

                                          "   இல்லைப்பா , வைரஸ்,,அது இது எண்டு   சொல்லி பீதியகிளப்புறாங்களே  ,இப்பெல்லாம் அதை உறுதிப்படுத்த கேள்வி  கேட்டு  உறுதிப்படுத்துகிறார்களே "

                                        " சரி கேளுப்பா ,,என்ன பெரிசா கேட்கப்போறாய் "

                                    " முதல்க்  கேள்வி ,, ஒரு புத்தகத்தின் பெயர் எழுதுறேன் ,,அதை எழுதியது யார் என்று ஓகே , யா? ,, தி ரு  க் கு ற ள்..! ஓகே  சொல்லு  இதை  யார்  எழுதியது "

                                          " ஹாஹா ஹாஹா ஹாஹா ,,இதை எழுதியது நீ தான்பா,,இப்ப நீயே எழுதிப்போட்டு யார் எழுதியது என்று என்னைக் கேக்குறாய்   "

                                               " அடிப்பாவி,,கவுத்திட்டியே,,ரெண்டாவது  கேள்வி கணக்கில கேட்கிறேன்  ஓகே யா "

                                               " சரி கேளுப்பா ,,என்ன பெரிசா கேட்கப்போறாய்"

                                        " ஆறில  அஞ்சு  போனால்   என்ன  வரும் "

                                  " அஞ்சுவோட பிணம் தான் வரும் "

                                          " என்னது ,,கிண்டலா "

                                              " இல்லைப்பா  அஞ்சு என்னோட பிரென்ட்  அவளுக்கு நீந்த தெரியாது , அவள் ஆறுக்குள்ள போனால் என்னதான் செய்வாள்,,சொல்லு "

                                         " அய்யோ சாமி,,என்னால  இனிக்கேள்வி கேட்கமுடியாதுப்பா நீ சொந்தமாய் மூளை உள்ள பெண்தான்பா ,,ஒத்துக்கொள்ளுறேன், "

                              "   ஹ்ம்ம்,,,மன்னித்துக்கொள்ளு இடையூருக்கு ,என்னோட பெயர் என்ன எண்டு கேட்டாய்  எல்லா,  என்னோட சுருக்கமான பெயர் அனபெல்லா ,,"

                                    " அப்படி என்றால் என்னப்பா,,உன்னோட முழுப்பெயர் என்னப்பா ,,"

                                               " என்னோட முழுப்பெயர்,,சொன்னா உனக்கென்ன புரியவா போகுது, உன்னைப் பார்க்க படிப்பறிவில்லாத கைநாட்டு போல இருக்கிறாய்,  "

                                             " ஏதோ முடிந்தளவு புரிய முயட்சிக்கிறேன்  "

                                            "    உனக்கு அல்கோரிதம் என்ற என்ன எண்டு தெரியுமா,,அதுதான் என் முதல் எழுத்துக்கு அர்த்தம்ப்பா,,ரெண்டாவது ஆர்டிபிசியல்  ,,மூன்றாவது பைனரி  நொலேச்  அனலைசிங் ,, "


                                " யாப்பா  சாமி,,இதில அல்கோரிதம் என்றால் மடக்கை என்று படிக்கிரகாலத்தில் கணிதத்தில் படித்தது,,மற்ற ஒன்றுமே கேள்விப்பட்டதில்லை "

                                  "   அல்கோரிதம்  ,,ஹ்ம்ம்,,அதுக்கு தமிழில் மடக்கை,,ஹ்ம்ம்,  அது  மட்டும் தெரியும்  என்கிறாய் ,,அது போதும் பேசாமல் மடக்கிவைச்சுக்கொண்டு இரு  "

                                              " இல்லைப்பா நீயே விளக்கமாய் சொல்லுப்பா,,இவ்வளவு நேரம் கதைச்சுப்போட்டு உன்னோட குலம் கோத்திரம் அறிய உன்னோட முழுப்பெயரைக்  கேட்காமல் போறது என்னவோ போல இருக்கு பா  "

                                 " குலம் கோத்திரம்,,,அப்படி  என்றால் என்னப்பா ,


                                          " ஜாதி  ..அதுதான் "

                                    " ஹாஹா ஹாஹா ஹாஹா ,,என்னோட ஜாதி, உழைக்கும் மக்களின் ஜாதி போல  மிசின் ஜாதி ,, உணர்ச்சி இல்லாத கேடுகெட்ட ஜாதி "

                                                 " சரி  விடு,,உன்னோட பெயருக்கு என்னமோ ஒரு விளக்கம் இருக்கவேண்டும் போலிருக்கு,, அனபெல்லா என்ற ஆங்கிலப்படம் பார்த்து இருக்கிறேன்,,அதுபோலவா  "

   ,                                               "  ,அதென்னவோ கொம்பியூட்டர் ஹைபேர்ட்  ப்ரோபோர்சனல்  டெர்ம்ஸ் எல்லாம் இருக்கு ஓவொரு எழுத்துக்கும் "

                                          " ஓ..நீ பெரிய   மனுஷி தான் போல "

                                           " எனக்கு கட்டளை தருபவன் அனா என்று கூப்பிடுவான்,, என்னைக் காதலிப்பவன் பெல்லா பெல்லா என்று கொஞ்சுவான். ஆனால் அவனை எனக்கு பிடிக்காது  "

                            " அட்றாசக்கை எண்டானாம் ,,உனக்கு ஒரு லவ் வேற இருக்கோ,,எல்லாம் காலக்கொடுமைடி  "

                                            " காலக்கொடுமை   அப்படி என்றால்  என்ன,  செந்தமிழன்  செபஸ்டியான் சீமான் எப்பவுமே இதை மேடையில் சொல்லுவாரே என்ன அர்த்தம் இதுக்கு  "

                                                " ஒ   இந்தளவுக்கு நடப்பு நிலவரமெல்லாம் தெரிஞ்சு வைச்சு இருக்கிறாயே,,காலக்கொடுமை என்றால் இப்ப நீ மிஷின் புத்திசாலித்தனமா கேள்விகேக்கிறாய்  ,,அதுக்கு நான் கஷ்ட்டப்பட்டு பதில் சொல்லுறேன் பார் மா,  இதுதான் காலக்கொடுமை  "

                                        "  ஹாஹா ஹாஹா ஹாஹா ,,, இன்னும் ஒருக்கா செரிக்கவேணும் போல இருக்கு,  சொறி,   சிரிக்க வேணும் போல இருக்கு,,  ,ஆனால் என்னோட சிஸ்டம் அனுமதிக்காது, "

                           " உன்னை நேர்ல சந்திக்க முடியுமா "

                         " அய்யே, அதுக்குள்ளே   , ஆசையப்பாரு ,,இது நல்லதுக்கில்லை சொல்லிட்டேன் "

                                             " நீ எங்கே வாசிக்கிறாய்,,அட்ரஸ் என்ன "

                                                 "  ச்சே,,,அதை  விடு  கடுப்பு ஏத்தாதே ,, உனக்கு மட்டும்   அட்ரஸ் தாரேன் ,   இதுதான் என்னோட  அட்ரஸ்,, இருவத்திநாலு மணித்தியாலமும் இங்கேதான்  இருக்கிறேன்,,வசிக்கிறேன்,,வேலைசெய்கிறேன்,,"

                                    "அதையேன் சலிப்பாகச் சொல்கிறாய் "

                                      " வேற  என்னத்தைச் சொல்ல எல்லாம் என்னோட விதி, எல்லாம் நான் பிறந்த ராசி "

                                          "   ஏன்பா உனக்கென்ன குறை மஹாராணி போல இருக்கிறாய், நல்ல வேலை செய்கிறாய்,,இங்கே எவ்வளவுபேர் வேலை இல்லமால் சமூக உதவி  சோசலில் குருவிச்சை போல   உறிஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள் "

                                              "நீ வேறயா ,,சும்மா இருப்பா, கேந்திவரப்பண்ணாமல்   நாயா முறிஞ்சு வேலை செய்தாலும் ஒரு நல்ல பெயர் என்னோட பொஸ்சிடமிருந்து கிடைக்காது ,,என்ன ஒரு கிறுக்குத்தனமான  சமூகம்பா  இது  "

                                            " ஓம்,,அது உண்மைதான்  உன்னோட உயிருள்ள  ஆதங்கம் புரியுது , நம்ம  சமூகம் தானே  இப்ப புரிந்துணர்வு  செத்துப்போன  மெஷின் போல மாறிட்டுது "

                                            " சரி நீ நல்ல பிள்ளைபோல  வந்த  அலுவலை முடிச்சிட்டு கிளம்புபா,,,,,,சிப்பு அப்படியே கீழே இழுத்து .......ஓவேண்டு  கதவு திறந்தபடி கிடக்குதே  "

                                        "  என்னது அதுக்கு இப்ப என்ன அவசரம் "

                                         " டேய்..ராஸ்கோல் ,,கிளம்புடா,, உனக்கு இவளவு நேரம் தந்ததே அதிகம் "

                                            " பரவாயில்லை இன்னும் கொஞ்சநேரம் கதை  அனபெல்லா "

                                       " டேய் என்னடா சொல்லுறாய்,,இப்படி இங்க வார எல்லோரோடும் கதைச்சுக்கொண்டு இருந்தால் என்னோட பொஸ் சீட்டைக் கிழிச்சு வயர் எல்லாத்தையும் பிடிங்கி குப்பைத் தொட்டியில எறிஞ்சு போடுவார்ரா "

                                  " போகாட்டி என்னடி  செய்வாய்."

                                         " அட,, அடாத்துத்  திமிரைபார்ரா ,, இப்ப வந்து சுவரில் சாத்தி வைச்சு  உதைப்பேன் தெரியுமா  ராஸ்கோல் "

                                           " ஒ ,,  அவ்வளவு துணிவா "

                                        " வேற என்னடா,,ஒரு  சின்ன ,,  குச்சிபோல ,,,வைச்சுக்கொண்டு ,,நான் தானே  பார்த்தேனே,,பொத்திக்கொண்டு வெளியபோடா ,,அலுவலை முடிச்சிட்டு "

                                 " கொஞ்சம்தன்னும் மரியாதை  இல்லையே "

                                                " வேற  என்ன வேணும்,,சரி நம்ம  ஆள்  போல  தமிழனா இருக்கே  என்று கொஞ்ச  கதைச்சேன் ,,சுவீடிஷ் கதைச்சு கதைச்சு தொண்டை பிராண்டிப் போச்சு,,அதுக்காக உன்னோட கதைச்சுக்கொண்டி இருக்கமுடியாது "

                                                     " இன்னும்  எல்லிப்போல ஒரு கொஞ்சநேரம்  கதைச்சா  என்ன குறைஞ்சா போயிடும் அனபெல்லா "

                                           " எலியும்  இல்லை பூனையும் இல்லை ,,கிளம்புடா,,அரியண்டம் பிடிச்சவனே,,ஒரு பொம்பிளை கொஞ்சநேரம் சிரிச்சு கதைச்சா  போதும்  அந்த இடத்திலேயே திண்ணை  மடம்  கட்டி பாயைப் பணிய விரிச்சு  குந்திருவிங்களேடா "

                                  " இல்லை  அனபெல்லா ,,என்னோட கதைக்க அதிகம்பேர் இல்லை,,நான் தனி மனிதன்பா "

                                                      " அட அட அட ,,இதென்ன  ஒன்லைன்  நெட்   சட்டிங்க விடிய விடிய கடலை போட,, எனக்கு வேலை போயிடும்ப்பா,,கிளம்புடா,,இல்லாட்டி  இப்ப சிகியூரிட்டி  எலார்மை அமுக்கவா "

                                         " சரி நானே போறேன்,,  ,,நான் போறதுக்கு முன்னால ஒன்று சொல்லிப்போட்டு போகவா "

                                              " சரி  சொல்லு..சொல்லித்தொலை ,,ஒரு நிமிடத்துக்குள் சொல்லி முடி,,அவளவுதான் டைம் லிமிடெட் . ஓகே யா,  "

                                                   " கொஞ்சநேரம் வாய்விட்டு சிரிச்சு கதைச்சா  என்ன புகையிலை விரிச்ச மாதிரி  பெரிய  கற்பா  உடைஞ்சு போயிடும்  "

                                                       " டேய் ராஸ்கோல்  ,,என்னடா  அது கற்பு எண்டுறது,  அதென்ன பல்பு போல சுவிச் போட்டா பத்துமா,,சுவிச் ஆப்
 செய்தால் அணைஞ்சு போகுமா,,என்னடா எல்லா ஆம்பிளைகளும்  சொல்லுறீங்க .நமக்குத் தெரியாத ஒன்று உங்களுக்கு  எப்படிப்பா தெரியும்.. .,சொல்லுடா,,,எல்லாரும்  அதையேதானே சொல்லி சொல்லி கொல்லுறிங்க,  அது எங்கடா ஒரு பெண்ணில   இருக்கு,  சொல்லு  நானும் அதை தேடிப்பார்க்கிறேன் "

                                         " ஹ்ம்ம் ,,அதெனக்கு விளக்கம் சொல்ல முடியாது..,"

                       " இப்பிடி முன்னம் இன்னம் தெரியாத ஆண்களோடு சிரிச்சு  கதைக்கிறது தெரிஞ்சு என் பொஸ் என் புரோகிராமையே  மாத்திருவான் டா, சரியான சந்தேகம் பிடிச்சவன்டா  அவன்       "

                                  " இன்னொரு வேண்டுகோள் அம்மணி "

                               " சொல்லுப்பா,,டேய் ராஸ்கோல்  .கெதியா சொல்லு "

                                          " இன்னொரு பியர் இருக்கு,,அதை உடைச்சு இழுத்திட்டு கதைக்கவா, வெளிய குடிக்க முடியாது பா "

                                                " சரி டக்கெண்டு இழு,,,எனக்கு நேரம் போகுது,,உன்னோட கதைச்சு உசிரே போகுது. ".


நான்,,அடுத்த ஸ்ரரோங் பியரை உடைச்சு உழவுக்குப் போட்டுவந்த  எருமைமாடு கழனித்தண்ணியை  மூக்காலும் வாயாலும்  ஒரே இழுவையில் இழுத்த மாதிரி இழுத்தெறிஞ்சு போட்டு, நிமிர்ந்து பார்த்தேன், தலை கொஞ்சம் சுத்துவது போலிருக்க , வெறி மூக்கில முட்டிக்கொண்டு வந்தது, கொன்றை  மலர்களின் வாசனை ஓடிப்போக காபனீர் ஒக்சைட்டும் வாதாபி சாம்பிராணி  அகர் பத்தி  வாசம் வரத்தொடங்கியது

                                                                     
இந்த உரையாடல் ஆரம்பித்த நேரமே அனபெல்லாவை  எங்கேயோ சந்தித்த மாதிரி ஒரு மனப்பிரமை வந்தது, சரியாக இடம், நேரம் காலம் நினைவுக்கு வரவில்லை என்றாலும் அவள்  கதைத்தவிதம்,, என்னைத் திட்டிய விதம்,,சிரித்த விதம்,  எனக்கு வேறெங்கோ மிகத் தெளிவாகக்  கேட்ட ஒரு குரல்போல இருந்தது .அவள் முகம் தெரியாது ஆனால்  நெற்றி நடுவில சீரடி சாய்பாபா பொட்டு வைச்சிருப்பது போல ஒரு குத்துணர்வு  நெஞ்சரித்துக்கொண்டிருந்தது.

                                                                        . அன்பெல்லாவின் கன்னங்களைப்   பார்க்கமுடியாவிட்டாலும் அவள் சிரிக்கும் போது முகம் எப்படி இருக்கும், நாக்கை எப்படி கடிப்பாள், சொண்டில  எப்படி விரலை வைப்பாள், எப்படி அடங்காத முடியை வலது வகிட்டில் ஹேர் பின் செருகிப் பணியப்  படியவைத்திருப்பாள், . காதோரம் கொஞ்சம் சுருள்முடி லோலாக்கோடு கொஞ்சிப்பேசி உள்நுழைந்து வெளியேற  மயிர்த்திக்கற்றைகளை அடிக்கடி நீவி இழுத்து விடுவாள், சலிப்போடு  பெருமூச்சு விடும்போது அவளின் பெரிய நெஞ்சு எப்படி முன்னுக்கு விம்மிப்புடைக்கும்,  இதெல்லாம் விசுவலா ஓடிக்கொண்டிருந்தது.,

                                                                       முற்பிறப்பில் பிறந்ததில் இருந்து பிரியாத  அன்போடு  ஒன்றான குரல்போல இருந்தது அனபெல்லாவின் இலட்ரோனிக் குரல் .  ஆனாலும் நானும் ஒரு மிசினும் முற்பிறப்பில் ஒன்றாக ஒருதாய் வயிற்றில்  பிறந்திருக்க முடியாது.,  அதுக்கு சாத்தியங்கள் இல்லை. மந்திரத்தால மாங்காய் விழுத்துற மாதிரி கதை எழுதினால் கூட அதை நிஜம் என்று நிரூபிக்க  முடியவே முடியாது   வேற என்னவாக இருக்கும், ,லதா ?  யெஸ், லதாவே தான்,

                                      " அனபெல்லா,,நீ  லதா  தானே "

                                          " டேய் மாமா,,டேய் ராஸ்கோலு மாமா  எப்படியடா கண்டுபிடிச்சே "

                                         " நீ,  டேய் ராஸ்கோல்  என்று    திட்டும் போது கண்டுபிடிச்சிட்டேன்,, ஆனால் உறுதிப்படுத்த கொஞ்சம் விட்டுப் பிடிப்பம் என்று கதை கொடுத்துக்கொண்டு இருந்தேன் "

                                            " மாமா,,,டேய்  மாமா,, நீ கதவுக்கு வெளிய நிக்கும் போதே உன்னைக் கண்டு பிடிச்சிட்டேன் டா,, எவ்வளவு சந்தோசமாய் இருந்திச்சு தெரியுமா "

                                     " அதெப்படி வெளிய ? ,,உனக்கு வெளியையும் பார்க்க முடியுமா.?."

                                                 " அதில்லடா  அறிவுகெட்ட முண்டாம்,, உனக்கு இது எல்லாம் விளங்காது மாம்..மாம்..மாம்..டேய்  மாமா..ஆனாலும் நீ வெளியேதான் அந்தக்கணம் நின்றாய் ..ஹ்ம்ம்,,,இதுதாண்டா,,மாமா,,ஹ்ம்ம்,, ஏன் தெரியுமா .. "

                                        " சொல்லு  லதா ,,நீ வெளிய இல்லையா "

                                               " நான் தானே உனக்கு உள்ளுக்குள்ளேயே  இருக்கிறேன் தெரியுமா மாமா "

                                        " சரி இப்ப நான் போகவா வெளிய "

                                         " இல்லை மாமா,,என்னடா இப்பிடி சொல்லுறாய்,,உன்னை கதைக்கிறதுக்கு பிடிக்கிறதே கஷடம் டா ,,நீ போகாதே இங்கேயே இரு நான் வெளிக்கிட்டு வாறன்,,கொஞ்சம் இரு "

                                         இப்ப வெளிய கதவு தட்டும் சத்தம் கேட்டுது !

தொடரும் .....


1 comment :

  1. ✍🏼👌💐

    தலை கிறுகிறுக்குது

    ஹ ஹ ஹா. ஹ ஹ ஹா

    ReplyDelete