Tuesday, 10 April 2018

சமாளித்துக்கொண்ட விசாரிப்புகள்,!

"சமாளித்துக்கொண்ட. விசாரிப்புகள்,! "  புலம்பலும் பினாத்தலும் கலந்த  வகையில் கொஞ்சம் கொஞ்சமாக அன்றாடம் சேர்ந்துகொண்டு நெஞ்சறிய பொக்கிஷமாகிய அனுபவங்களை அதிகாலைக் கனவுகள் கலையுமுன்  கடைசிப் பக்கங்களில் எழுதிய எண்ணங்களின் வண்ணங்கள் .

                                                    ஆங்கிலத்தில்  " first-person style  " என்று சொல்லுகிறது இதைப் போலவே இருண்ட நாடகளில் எழுதப்பட்ட நாட்குறிப்பு அல்லது அத்தை பையன்கடைசியாக   மாமன் மகளுக்கு எழுதிய காதல் கடித  வடிவம் என்று சொல்லலாம். கொஞ்சம்போல " Confessional poetry " க்கும் இதுக்கும் கொடுக்கல் வாங்கலில்  ஒரு பஞ்சாயத்து அளவில் சம்பந்தம் இருக்கு .
                                                " ம் " என்றாலே " தும்மிப்போட்டுப் போகும் " ஒருவிதமான முரண்பாடான வாழ்வியலில் நாமெல்லாம் காலங்கடந்து போய்க்கொண்டிருக்கும் வேகத்தில் , எங்கிருந்து தொடங்குவது என்பது ஒரு குழப்பமாகவே இருந்தது. அதனால் என்ன பிடித்தமான கவிதைகளில் இருந்தது ஆரம்பிப்போம் என்று நினைத்து எழுதுகிறேன்.

                                                      சோர்வின்றி மெய்வருத்தி நிறைய எழுதும்போதுதான் மொழியில் உள்ள உணர்ச்சி வார்த்தைகளின் சூட்ச்சுமங்கள் பிடிபடுகுது, அதே நேரம் மற்றவர்கள் எழுத்துவதைப் பார்த்து நிறைய வாசிக்கும்போது மொழியின் சாத்திய எல்லைகளை எப்படி மற்றவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று ஜோசிக்கும்போது இன்னொருவிதமான அனுபவம் கிடைக்கிறது.

                                               இது இரண்டையும் ஜோசித்தபோது " மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது " என்று எங்கள் முன்னோர்கள் சொல்லிவைத்த முதுமொழிதான் நினைவு வந்தது . வசந்தகாலத் தென்றலை நிறுத்திவைத்து விசாரித்தது போன்றது புத்தகப்பதிப்பில் கவிதைகளின் தொகுப்புகளைப் படித்த அந்தக்காலம். 

                                      இப்போது எழுத்து என்பது எல்லாருக்குமே சாத்தியமாக அமைந்து அந்தத் திசையில் பயணிக்கவிரும்பும் ஒருவர் யாராக இருந்தாலும் முன்னோடியான அறிமுகங்கள் இல்லாமல் மரபை உடைத்து புதியபாணியில் எழுதிக்குவிக்க ஏகப்பட்ட இலத்திரனியல் ஊடக வாய்ப்புகள் வாசல்களைத் திறந்து வைத்திருக்கின்றன.அவற்றைப் பற்றி, அதன் வீச்சு பற்றி எனக்கு விளங்கிய வரையில்  இது ஒரு வரவேற்கத்த காலமாற்றம் .

                                             வழக்கம்போல முகநூலில் எழுதிய என் சொற்கட்டமைப்பு  முயட்சிகளைத் தொகுத்து உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.


பரபரப்பான 
விவாதக் குரல்கள் 
முகங்களில் 
நினைவுக் கலக்கம் 
பழக்கமான 
மரணவாசனை அடித்தது
யுத்தம் நினைவுக்கு வர
உள்ளே
எட்டிப் பார்த்தேன்
புதிய அரசியல் அகதிகள்
மீதியுள்ள 

உயிர் முடிச்சுகளோடு
காத்திருக்கிறார்கள் !


..........................................................
.

பிரகாசமான
தெருவிளக்குகள்
அணைந்துகொண்டிருந்தபோது
வடக்கு வானம்
ஜன்னல்களைத் 
திறந்துகாட்ட முடிவெடுத்தது !
இருட்டில்
ஒரேயொரு நிலவு
அது
தனித்திருப்பதால்தான்
அழகாக இருக்கிறது !.


..............................................................

ஒரு
வெற்றிடத்திலிருந்து
உருவாகி வருவதுபோல
நடுக்கம்
லேசாகத் தொடங்கி 
முழுமையாக
வற்றிப்போகிறது
பாதங்களில் உஷ்ணம்
ஒருநாள் விட்டு
இன்னொருநாள்
விடிகாலைகளே
வெறுக்கும்படியாகவேயிருக்கு !,


...............................................................

ஒரு
இடத்தில்
நடுக்கோடு கிழித்து

உட்சாகமில்லா நாட்களில்
இரண்டாகிவிடுகிறது
மனத்திடம் !
விளக்கமாக
விபரம் சொல்லாவிட்டாலும்
வேறொரு
எல்லையை வரைந்து
பாதையை மாற்றிவிடுகிறது
நம்பிக்கை !


...............................................................

அதை
மறுக்கும் போதெல்லாம்
இறுக்கத்தை 

வளர்த்துவிடுகிறது
முன்னேற்றங்களில்
பலமான 

பின்னிழுப்புக்கள் 
எனக்கிது
உண்மையாகவே
தேவையில்லாத ஒன்றுதான்!
எத்தனைமுறை
அடித்து விரட்டினாலும்,
தொலைந்தேபோகாத
உறைபனிக் குளிர் !


......................................................

தூரத்தில்
பனிமழையைப்
பிழிந்தெடுத்துப்
பொழிந்துகொண்டிருக்கும்
வெளிச்சங்கள், 
இரவுகளில்
அது காரணமாயிருக்கலாம்
விழி உறக்கமில்லா
இமைகளைமூடும்போதெல்லாம் .
சொல்ல முடியாதவாறு
ஒரு நெருக்கம்
அதுவும்
நிதானமிழக்கவைத்து
விடியும்வரை !


..........................................................

ஒரு 
முடிவோடுதான்
வந்திருந்த மாதிரியிருந்தது
அந்த
நிகழ்வின் அழைப்பு
அணுகத்தயங்கிய 
முணுமுணுப்பில்
தொடங்கிய வார்த்தைகள்,
உரிமையுள்ளவொரு
உறவாடலாயிருந்தும்
ஒரு
முழுநேரச் சண்டையை
விரும்பாததால்
நேராகவே நிராகரித்துவிட்டேன் !


................................................................

மனமின்றிக்
நடக்கும் போதெல்லாம்
முகத்தில்
படிந்துவிடுகிற
இளவெய்யிலின் 
உச்சி நிழல் போல
திசைப் பிளவுகளில்
வெறும்
நினைவுக் குறிப்புகளாக
ஒரு
அடைப்புக்குறிகளுக்குள்
எஞ்சிவிடுகிறது
காலம் !


..........................................................

ஒரு
சமாதானத்தில்
வந்துசேர முடியாமல்
இரு முனைகளிலும்
இறுக்கங்கள் 
ஒரு புரிதலில்
ஓடிக்கொண்டிருந்த
சந்தேகங்கள்
அதிகமாகிக் கொண்டேயிருக்கு
எல்லாவிதமான . ‘
நேர்வழிகளையும்
இந்த அளவுக்கு வந்தபின்னும்
நிராகரிக்கிறது
அச்சம்தரும்
அசாதாரண தணிக்கை !


...............................................................

நேற்று இரவு
சப்த மூச்சின்றி
மெல்லப் படிஇறங்கிய
பிடிவாதமான
உறைபனியாகத்தானிருக்கவேண்டும்,
கடைசிப்
பருவத்தின் பிரிவை
ஆழப் பதிந்து செல்ல
உண்டாக்கிய கலவரத்தில்
கிட்டத்தட்ட
கிடைத்ததை எடுத்துக்கொண்டு
ஓடிப்போயேபோய்விட்டன
நடை பாதைகள் !


.................................................................

பாரமாகி
நுனியை வளைக்கும்
மழைத்துளி ,.
வெளிறிய .
காம்பிலாடும் 
மஞ்சள் இலைகள்,
வௌவாலின் சிறகுகள் போலப்
படபடக்கும் காற்று
அலட்சியமாகவே
அமைதியில் குந்தியிருக்கும்
பருவகாலம்
இன்றுதான்
சாட்சி சொல்ல வேண்டிய
கடைசி நாள். !


......................................................

அந்தச்
சிட்டுக்குருவியின்
வலது கண் 

மூடியிருந்தது.
கிட்ட நெருங்க
இடது கண் 

விழித்திருந்தது, 
உறுதியெடுத்தது போல
இறுக்கமாகிகொண்டிருக்கும்
வெண்பனியில்
சிறகுகளை
விருப்பம்போல அசைக்கமுடியாத
சின்னப் பறவையை
மேற்கொண்டு
நின்று நலம் விசாரிக்க
துணிச்சல் இருக்கவில்லை !


..............................................................

என்ன முயன்றும்
விஷமேற்றிய கதைகளை
வாசிக்க முடியவில்லை.
ஆரம்பத்திலிருந்து
அவர்கள் என்பதெல்லாம் 
நானாக
மாறிக்கொண்டிருந்தது .
இடையிடையே
பக்கங்கள் திரும்பும்போதெல்லாம்
என்
அந்தரங்க ரகசியங்கள்
பகிரங்கமாகவே
திறக்கப்டபடுவதுபோலிருந்ததால்
மனசாட்சியின்
இரைச்சல்கள் அடங்கும்வரை
மூடிவைத்திருக்கிறேன் !


......................................................................

ஒருகாலத்தில்
மிகப் பிடித்த கிராமம்
நாலிரண்டு பக்கமும்
பருவ மழையும் பச்சைக் காடுகளும்
இப்போது 
புதியபாதைகள்
எல்லாமே தொடர்மாடிகள்
நினைவொடுங்க
அதிவேகத் தெருமுனையில்
திரும்பியபோது
முகத்தைச் சுழிக்கவைத்தது
வேரிழந்த மரங்கள் மட்டுமல்ல,
வழித்துத் துடைத்து போல்
சோலைகளைப் பிரசவித்த
பறவைகளுமில்லை
என்பதும்தான் !


...................................................................

சில சமயங்களில்
சுயகட்டுபாடு
அவ்வப்போது அத்து மீறும்,
நேற்றிரவு
அதிகம் சில்லிடாமல் 
ஓர்
தலையசைப்பு,
காலையில்
மெல்ல விலகிக்கொண்டிருக்கும்
ஓர்
புன்னகை ,
சற்று பதட்டத்தோடு
ஒரு இரவின்
இழப்பைத் தாண்டிச்செல்லப்
போதுமானதாக இருந்தது.


..............................................................

வழக்கமாகச்
சுருண்டு படுக்கும் இடத்தில்
எதிர்ப்பைக்காட்ட
என்குரல்வளையை
யாரோ 
அமுக்குவது போலிருந்தது,
எல்லாவற்றிற்கும்
சேர்த்து வைத்து
மெல்லிய குரலில்
மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தேன்
எப்போது
தன்னிச்சையாகப்
பிசாதிக்கொண்டிருந்ததை
நானாக நிறுத்தினேன்
என நினைவில்லை !


...........................................................

தவிப்பை
வேடிக்கை பார்ப்பதுபோல
இத்தனை
வருடங்கள்
வெளியாகிப்போய்விட
சகலத்தையும்
நிர்மலமாய் வைத்திருக்கும்
வானத்தைப்போல
அனுபவங்களைத்தான்
நிதானமாக வாங்கிவைத்து
மன ஆழத்தில்
உறுதிப்படுத்த
எதிர்பார்த்திருந்திருக்கிறேன் !


.....................................................................

வரிசை தவறிய
மையத்தில்
எல்லாமே சலித்துப்போகுது
அடித்துக் கொல்வதுபோல
விதவிதமான 
விளையாட்டு வினைகள்
ஒரு தூளி போல
செல்லுமிடமெல்லாம்
வானவில்
அதைப் பார்த்ததும்தான்
கொஞ்சம்
இன்றைய நிகழ்காலத்திற்குத்
திரும்பி வந்தேன்!.


............................................................

உறைபனி
வண்ணத்துப்பூச்சி.
பறந்துகொண்டிருப்பது போலப்
பெய்துகொண்டிருக்கு,
குளிர்ந்து கொண்டிருக்கும்
நெஞ்செல்லாம்
நெருக்கடி பலமிழக்க
உஷ்ணத்துக்கு
ஏற்படக்கூடிய அபாயம்
பதுங்கியிருக்கலாம்,
கண் விழித்திருக்கும்
போர்க்களத்தில்
கனவுப் பயணம்,
தாண்டிச்செல்லத்தான் போகிறேன்.
ஆனால் இன்று அல்ல.!


................................................................

தன்னைப் பார்த்துத்தான்
என்றவருக்குத்
தோன்றி இருக்கலாம்,
சந்தோஷமாக
நான்
எதையோ நினைத்துச்
சிரித்துக்கொண்டிருக்கிறேன்,
ஆச்சரியமாக
இது அடிக்கடி நடக்கும்.
அவர்
என்னிடம்
என்ன எதிர்பார்த்தார் ?
என்னவென்று புரியாமல்
நான்
எதைப் பூர்த்தி செய்யவில்லை ?
வேறெங்கிருந்தோ
கண்காணிப்பது போன்ற
சந்தேகத்தைத்தான்
இன்று வரை
புரிந்துகொள்ளமுடியவில்லை.!


...............................................................

மூச்சு முட்டும்
மலர்களின் வாசனை
தொடங்கமுன் வந்துவிடும்
இளமைக்காலக் காதல்,
இப்பெல்லாம்
விழுந்து மடியும்
வயதான பூக்களைக்
குனித்து பார்த்துக்கொண்டே
நடந்து போகிறது
பூர்வஜென்மத்தில்
உறிஞ்சி முகர்ந்து
கலக்கம் ஏற்படுத்திய
மண் அரிக்கும் சருகுகளின்
வாசனை !


...........................................................

எனக்கு
நினைவு தெளிவாக
இல்லாத பக்கம்
பரபரப்பான பேச்சுக்குரல் !
காட்சிகளாகவே
எனக்கு
அந்த சம்பவம்
மனதில் இருந்ததால்
வழக்கம் போல
எனக்குப்
பாதி கண் விழித்து
தீவிரமாகப் பேசிக்கொண்டு
விழிக்காமலுமேயே
எனக்குள்
எழுந்து நடந்தேன் !
கனவு என்பதும்
ஒருவித துவக்கம்தான்.....!


.........................................................

கையெழுத்து
மறையும் நேரத்தில்
பழகியவர்கள்
ஒதுங்கிப் போகிறார்கள்,
வேண்டாம் என்றால் 
வேண்டாம்தான்
உட்காரவைத்து
யாரும் வற்புறுத்தமுடியாது !
வற்புறுத்தி
மனத்தாங்கலாய்
வெளிக்காட்டிக்கொள்ளும்
கவலையை
தேற்றிக்கொண்டிருக்க
நிறைய நேரம்
செலவழிக்கவேண்டும் போலிருக்கு !


............................................................................

தலைகீழாகச் சறுக்கி
எல்லாவற்றையும்
எழுதிக்கொண்டிருக்கும்போது
இதுபோன்ற
விஷயங்களையும் 
சொல்லித்தான் ஆகவேண்டும்.
என்னைப்
பொறுத்தவரை
யாராவது ஏதாவது கேட்டால்
பதில் சொல்லத் தெரியாது.
நீங்களாவது
யாராவது ஏதாவது கேட்டால்
வழி சொல்லத்தெரிந்த
பாதையின் போக்கில் செல்லுங்கள்.
அது போதும். !


............................................................

எதை எடுத்து உடைக்கலாம்
என்பதுபோல்
தொட்டுத் தொட்டு
ஆராய்ந்து கொண்டிருந்தேன்,
விதம் விதமாகப் 
பினாத்தியிருக்கிறேன்!
அலைவுகளை
ஒரு கட்டுக்குள்
கொண்டுவரநினைத்து
சுதாரிப்பதற்குள்
சுவாரஸ்யம் போய்விட்டது !
பழைய பதிவுகளை
ஏதோ சிந்தனையில்
புரட்டிக்கொண்டிருந்தபோது
ஆரம்பித்தது
இந்த அவஸ்தை !


.........................................................

நன்றாக இருந்த
சம்பந்தப்பட்ட
முகம் தெரியாத
அந்நியர்களுடன்
திருப்பித் திருப்பிச்
சமநிலை தடுமாறி
கீழே விழுந்திருக்கிறேன்!
இந்த சம்பவம்
இரண்டு மாற்றங்களுக்கு !
ஒன்று
ஏராளமான
அப்பாவித்தனம்
இரண்டாவது
தற்செயலாக
சமாளித்துக்கொண்ட.
விசாரிப்புகள்,!

1 comment :