Friday 9 March 2018

நாலாவது பக்கத்தில்...

ஒவ்வொருநாளும் செய்திகளில்த்தான்  பதறியடித்து விடிகிறது அதிகாலை . ஒரு கவிதை, ஒரு கட்டுரை, ஒரு விவரணம், ஒரு காமடி என்று  நாலு நல்ல விசியம் வாசிப்பம் என்று முகநூல் வந்து முகப்பைத் திறந்தாலே  முன்னுக்கு வாற நாலு விசயமும் எப்பவுமே அதிரடியான யுத்தமும் கலவரமும் சேர்ந்த பரபரப்பு செய்தியாகவே இருந்தது சில நாட்களாக.  வேறுவழியில்லை உலகத்தோடு ஓடிக்கொண்டிருக்க இவைகளைத் தவிர்த்துக் கடந்துபோகவே முடியாதிருக்கு. 

                                                   இப்படியான நாட்களில் செய்திகளில் வாசித்த போதே தோன்றியவைகள்   இவைகள். பழிக்குப் பழியில் ஆர்வம்  இல்லாத   இப்பெல்லாம் அமைதிவேண்டி  ஒதுங்கிப்போகும்  அஹிம்சா சார்ப்புள்ள மனதில் விரிந்தவைகள். அன்பே பலம் புரிந்துணர்வே புதியபாதை  என்றதை   நடுநிலை  மய்யம் ஆக வைத்து முகநூலில்  எழுதியவைகள் இவைகள், உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
  

***************************************************************

சிரிய உள்நாட்டு யுத்தம் பற்றி, அதில் யார் நல்லவர் யார்கெட்டவர், யார் நண்பன் யார் எதிரி,  அதன் அரசியல் உள்நோக்க காரணங்கள் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அதையெல்லாம் ஏற்கனவே சேறும் சகதியுமாய் சிதறிப்போய் உள்ள   மண்டைக்குள்ளே ஏற்றி விடைகள் தேடித் தெரியவும் விரும்புவதில்லை. ஆனால் ஒரு காலத்தில் யுத்தத்துக்குள்  நேரடியாகவே வாழ்ந்தபடியால அதன் கோரமுகம் நல்லாவே தெரியும்.


நீண்ட
சமவெளிப்பள்ளத்தாக்கு முகப்பில்
திகில் நெருக்கும் 
அலிப்போ நகரம் 
மிஞ்சித் தனித்து நிக்கும் 
ஒலிவ் மரங்கள்
சிதறிப்போன
குழப்ப் பீரங்கி வண்டிகள்
வெற்று
எறிகணைக் கோதுகளில்
சுடுமணல் நிரப்பி
சிதைக்கப்பட்ட பொம்மைகளைக்
குடும்பமாக்கி விளையாடும்
யுத்தத்துக்கு
நேர்எதிரான மார்க்கத்தில்
குழந்தைகள் !


.............................................................

இந்தப்பக்கம் 
ஜும்மாத் தொழுகையில் 
முழந்தாளிட்டு 
சமாதானம் ஏற்றிவைக்கப்படுகிறது 
துவாப் பிராத்தனைகளில் ,
அந்தப்பக்கம்
மெல்லத்தொடங்குகிறது
நிலமதிரும்
குண்டுகளின் விடுவிப்பு,
கசக்கிப்போட்ட வானத்திலிருந்து
இயந்திரப்பறவைகள்
கலவையாக
அள்ளிக்கொட்டும் ...
அமில எரிநட்சத்திரங்கள்
அங்கேயும்தான்
குறித்தவாறாமல்
இறக்கி வைக்க்கப்படுகிறது
மண்டியிட்டு விழுந்துபடுத்த
மனிதர்களின் மேல் !


..............................................................

தொழுகை முடிய 
துவக்குகளுக்கு
எண்ணெய் போட்டுவிட்டு
துப்பாக்கிச் சன்னம்களை
வேடிக்கையாகப் பார்க்கும்
ஒரு 
மஞ்சள்ச் சொண்டு
மைனாவை
நேர்தியாகக் குறிபார்க்கிறான் ,
பள்ளத்தாக்கின்
மூன்று பக்கமும்
மின்னல் முழங்கும்
சிவப்பு வெளிச்சங்கள்
அந்தப் பறவை
நாலாவது பக்கத்தில்
தப்பிப்பறக்க முனையலாம்
அதுக்கு முன்
யாருக்கு யார்
எதிரியென்று ஜோசிக்குது !


..............................................................

முன்நிமிர்ந்து
பார்க்க விரும்பாத
இளமை முகம் ,
கையணைப்பில்
இரண்டு தளிர்கள்,
இன்னும்
இருப்பது சொச்சம் மைல்கள்,
காற்றின் மூச்சில்
கந்தகப் புகைநெடி,
வழிகளை
நம்பிக்கையின்மையிடம்
கேட்டு அறிந்து கொண்டு
நீள நடந்துகொண்டிருக்கிறாள் .
இன்றிரவு
வான்தாக்குதல் இல்லையென்றால்
நாளைவிடியலில்
மூன்று ஜீவன்கள்
இன்னொருநாட்டில்
எல்லைதாண்டிய அகதிகள் !


.................................................................

அந்தச்
சின்னப்பெண்ணின்
ஆடைகளில்
வெடிமருந்தின் வாசம் ,
தூரத்தில 
தொடர்ச்சியான
எறிகணைகளின் மிரட்டல்,
சாம்பல் மலைகளில்
அலைபோலவே
விடைபெற்றுக்கொண்டிருக்கும்
அமைதி ,
பழகிப்போனதாலாயிருக்கலாம்
கண்களில்
மிரட்சியில்லை !


*******************************************

சமூகத்தின் விளிம்புநிலையில்  வாழ்ந்த   ஒரு  ஏழையை அராஜகமாக அடித்துக்கொண்ட செய்திகள் எல்லாராலும் நேசிக்கப்பட்ட  ஒரு சினிமா நட்ச்சத்திரத்தின் அகாலமரணதில் அமுங்கிப்போனது........... 



பசிக்காகத் திருடிய 
நாகரீமானவன்
அவனின் 
நேர்மை பிடிக்காத 
காட்டுமிராண்டி ஆதிவாசிகள் 
கும்பலாக
அறத்தின் அடிப்படையில
அடித்துக்கொன்றுவிட்டார்கள்
தோல்வி அடைந்தவனுக்கு
எதிராகவே
எப்போதும்
நிறுத்திவைக்கப்படுகிறது
வன்முறையின்
ஏகோபித்த
நியாயப்படுத்தல்கள் !

.................................................................

ஒரு 
நட்ச்சத்திரம் 
எரிந்து முடியுமுன்னம் 
விழுந்துவிட்டது ,
விழித்திரையில் 
சித்திரம் வரைந்த
வெள்ளித்திரை,
நெருங்கிப் பழகிய
நீண்ட நாள் சிநேகிதி,
மோகனப் புன்னகையின்
மின்னல் வாசிப்புக்கள்
நடுவீட்டில்
சாவு விழுந்ததுபோல்
உயிர்வாழ்தல் 
சாகச நாடகம் !

...........................................................

ஒரு 
வெள்ளித்திரையின் 
அகாலப்பிரிவிலிருந்த 
நெஞ்சதிர்வு 
மர்மங்கள் குறித்து 
நமக்கு நடந்ததுபோல
அலட்டிக்கொண்டிருந்தபோது
ஒரு
பரமஏழையின்
அடாவடிமரணம்
வறுமையின்
குற்றவாக்குமூலம் போல
திரைமறைவில்
திசை திருப்பப்பட்டுவிட்டது !


***************************************************

மதுபோதையில் ரெண்டு இளையவர்களுக்கு இடையில் உருவான வாக்குவாதம் ஒரு கொலையில் முடிய  அதை இணையவெளியில் சமூக ஊடகங்கள்  ஊதிப்பெருக்கி   சில நாட்களாக பெரும்பான்மை சிறுபான்மை மதவாத  இனத்துவேஷ  வன்முறைகள் அதிகரித்து அதன் விளைவாக நிறைய அப்பாவிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வன்முறையில் இழுபடாமல்  மவுனமாக இருப்பதுதான் உண்மையான மனிதர்களின்  தைரியம். 

எதட்காக 
ஆவேச முன்னெடுப்பில் 
ஒருபொழுதுக்குள் 
வந்திறங்கிக் குவிந்துவிடும் 
வெறுப்புகளுக்கு 
பெருமளவில் வரவேற்பு ?
தர்மம்
நீதியின் வெளிச்சம்
அதர்மம் அநீதியின் நிழல்,
கைகளை மீறி
வேவ்வேறு
முன் மாதிரிகளாக
முரண்படும் எதிர்வினைகள்
அதனதன் போக்கில், !


....................................................................


இன்னமும்
திருத்தங்களை விரும்பாத
கட்டமைப்புக்கள்,
சட்டங்களால்
நிறைவேற்றமுடியாதுபோன 
இலட்சியங்கள்,
அராஜகமாக
எங்கெல்லாமோ
பயணிதுக்கொண்டிருக்கும்
நீதிதேவதையின்
நடுநிலைத்
தீர்ப்புக்களிலும்
அதீதப்பெருமிதங்களில்லை !


................................................................

கலவரங்களை
வேடிக்கையாகவே
பார்க்கவைக்க விரும்புகிறது
தகவல்த் தடங்கள் ,
எதற்குள்ளோ 
அடிமைப்பட்டுக்கிடக்கிறது
மனசாட்சி ,
கும்பல்கலோடுதான்
வன்முறையாகிக்கொண்டிருக்கிறார்கள்
பேரினவாதிகள்,
வெறுமையோடு
ஈனக் குரலையுமிழந்து
தனித்துத் தனித்திருக்கிறார்கள்
மனிதாபிமானிகள் !


...............................................................

இன்று
மறுக்கடிக்கப்படும்
சமூக அநீதிகளை
நிராகரிக்கும்
புத்திசாலித்தனம்
உங்களுக்குரியது ,
நாளை
அபாரசாமர்த்தியமாக
இதுவரையிலான
அடிப்படைகளிலும்
சீர்குலைவுகள்நிகழவைப்பார்கள்
அவர்கள் !




1 comment :

  1. சம்பங்கள் முடிந்தபின்னும் சரித்திங்களாக மாறி வாழ்வது உங்களைப்போல் எழுத்தாளர்களினால்தான் .
    அருமை

    ReplyDelete