Friday 29 December 2017

முகத்தை மூடிக்கொள்கிற வானவில் !

மிகச்சில கோடுகளிலும் ,அதிகம் கவர்ச்சியற்ற நிறங்களிலும் ஒரு ஓவியன் ஆழ்  மனங்களை உயிர்ப்பிக்கும் கலைஞன் வண்ணஓவியத்தை வரையலாம். .இதைப்போல் எளிய மொழியில் காற்றாய்க் கண்ணுக்குப் புலப்படாத மனங்களை  சாதாரணமான சம்பவங்கள் போலவே  என்பது போல எழுதிச் செல்வது எளிய காரியமல்ல.  

                                                        புரியமுடியாத அபத்த மொழியில் ஆழமாக உள்ளிறங்காத  எதுவுமே நீண்டகாலம் தாக்குப்பிடிக்கும் படைப்பாக முடியாது. அதே நேரம்   எளிமையான கவிதைமொழி  பலசமயங்களில் உயர்ந்த இலக்கியமல்ல  என்கிற தோற்றப்பிழற்சியைத் தோற்றுவிக்கக்கூடும் . ஆனாலும் அவர் அவர் மனமுதிர்ச்சிக்கு ஏற்றவாறுதானே எழுதமுடியும். .  


                                                                             கனவுகளில்  இருந்தல்ல வாழ்க்கையில் இருந்து கவிதைகள்  எழுதுபவர்கள் . வாழ்க்கை எவ்வளவு அழகு அல்லது அவலம் என்பதை  எப்போதும் உரத்தே சொல்கிறார்கள். மோசமான  இலக்கியங்களுக்கும் அசல் இலக்கியத்திற்கும் வித்தியாசம் துல்லியப்படத் தெரிந்துகொள்ள வாசிப்பு அனுபவம் மிகவும் முக்கியம் . இவைகளும் அங்கங்கே சிதறிக்கிடந்த கவிதை போன்ற பதிவுகள் சேர்த்துப்போடுகிறேன். 

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

என் 
இழிநிலை மனதின் 
அடங்க மறுத்துத் திமிரும் 
ஓயாத பெருங்கூச்சலுக்கு 
ஒருநாளுமே 
என்
மனசாட்சியை
ஒப்புக்கொடுத்ததில்லை !
அதில்
அப்பாவிகளான நீங்கள் ,
தேர்ந்தெடுத்த
வெறிக்கூத்தாடல்களைத்
திட்டமிட்டு மறைக்கும்
தந்திரமான
நான்,
ரத்தக் கறைபடிந்த
கைகளுடன் அவர்கள் ,
கொஞ்சம்
முகமூடித்தனத்துடன் இவர்கள்,
எல்லாவற்றையும்
சகித்துப் பொறுத்துக்கொள்ளும் எல்லாரும்!

.
.........................................................................
.
நீளும் பட்டியலில்
விபரங்கள் மேலெழுந்துகொள்கிற
வெளிப்படையில்
உண்மை என்பது அத்தனை
முக்கியமானதா என்ன?
சிலநேரம்
ஆம் !
பலநேரம்
இல்லை !
இந்த எடுகோள் இரண்டில்
எந்த பதிலை தேர்ந்தெடுத்தாலும்
அதில்
இந்தக் கவிதை
தோற்றுப்போவது
கொஞ்சம் வினோதம்தான்.!

.
......................................................................
.
பழக்கதோஷப் பாவனையில்
கண்களைச் சிமிட்டி
மின்மினிகளுக்கு அழைப்புவிடும் 
தெருவிளக்குகள் !
காத்திருப்புக்காகவென்றே 
அலைக்கழித்தும்
மீட்டுக் கொண்டிருத்தலை
வெறுப்படையவைக்காத
பயணம் !

.
......................................................................
.
முழுகாமலிருக்கும்
பெரிய இச்சைகளையடைக்கி
உறைபணியை
உருட்டித் திரட்டி இறக்கிவிடும்
ஆலங்கட்டிமழை !
இரவெல்லாம்
பின் உளைச்சலாகவிருந்த
ராத்திரியை
ஆவேசமெடுத்துக்கொண்டு
துரத்தும் உத்தேசங்களுடன்
முன் வெளிச்சங்கள்! 

.
..............................................................................
.
தனித்துவக் குரலில்
உள்ளுக்குள் ஆழ்ந்துவிடுவது போன்ற
வசந்தப் பறவைகளின்
விடியல்ப் பாடல்கள் !
உணர்ச்சிகளை வெளிக்காட்டி
வாழ்க்கையை அலசுவதை
தவிர்க்க நினைத்து
தோற்றுக்கொண்டிக்கும்
ஒவ்வொரு
அதிகாலையிலும்
மீண்டும் மீண்டும்
இந்தக் காட்சியை
பார்த்துக் கொண்டிருக்கிறேன். !
ஹ்ம்ம் !
இன்னும் சலிக்கவில்லை.!

.
...........................................................................
.
மிகச் சிறந்த 
பல்லின நிறங்களையே 
ஆத்மாவைக் கிண்டியெடுத்துத் 
தேர்வுசெய்கிறேன் !
தலைக்கறுப்புநிறத்தவனும் 
வெள்ளைவெளீர்த் தேவதையும்
நடைபாதையில்
நின்று நிதானமாக மூச்சுவிட்டு
முத்தமிட்டுக்கொள்கிறார்கள் !
கேட்க மனமிருக்கும்
எல்லாருக்குமாகவே
மரங்களின் கிளைகளோடு
மெல்லெனவே அலைகிறேன் !

.
................................................................................
.
மிகச் சரியான
சுரக்கோவை அளவுகளில்
வயலின் வாசிப்பவனின்
விரல்கள் நகருகின்றன !
உன்
கண்களோடு காண்பதெல்லாம்
உனக்கு மட்டுமில்லை
எனக்குள்ளேயே
இறங்கித் தேடியெடுத்துவிடு !
ஏழு வர்ணங்களில்
துப்பட்டாவை விரித்து
மேக மெகந்திக் கைகளால்
முகத்தை மூடிக்கொள்கிறது
வானவில் !

.
.................................................................................
.
நீயென்
இதழ்களைப் பார்க்கிறாய்
நானுன்
விருப்பங்களாகியேவிடுகிறேன் !
இலைகளை வீழ்த்துவது பற்றி
மொழி பேசி கொஞ்சமும்
விழிசிந்திக் கவலைப்படாத
மேப்பிள் மரங்கள் !
என்
அவசரங்களைப் பற்றிக்கொண்டு
அர்த்தங்களில் ஊறி
இப்படித்தான்
விவரணங்கள் தருகிறது
இயற்கை !

.
..............................................................................
.
நட்பின்பிரகாரம் 
அழைப்புக்கொடுத்தனுப்பிய 
நான்குநாட்களின் பின் 
ஒரு 
அருவருப்பான பிசாசு 
ஓவியம் வரைவதைப் பார்க்கக்
சென்றேன் !
அந்தப் பிசாசின்
வரலாற்றில்
மேலோட்டமான பொய்கள்,
மெய்யியலில்
தத்துவமில்லா சமாளிப்புகள்,
நிக்கமுடியாமல்
பக்கம் தேடிச் சாயும்
வெற்றுக்கொள்கைகள்,
இதெல்லாம் வெறுக்க வைத்தாலும்
அந்தப் பிசாசு
மனதுக்குள் சிலாகிக்கவைக்கும்
என் சிநேகிதம் !
பிசாசின் ஓவியக்கூடம்
பிணவாடை வீசும் கடலோரம் ,
சுவர்களில்
பேய்கள் கபாலத்தில் கூழ்குடிக்கும்
கறுப்பு ஓவியங்கள் ,
நிலமெல்லாம்
அநாதரவான ரத்தத் திட்டுக்கள்,
ஜன்னல்களில்
அடர்காட்டின் ரகசியங்கள் !
ஒரு மூலையில்
தலையில்லாத பெண்ணொருத்தி
நடனமாடிக்கொண்டிருந்தாள் !
பீதியெடுக்கும் பதட்டத்தில்
அந்தப் பிசாசு
வரையத்தொடங்கவிருந்த ஓவியத்தின்
தலைப்பை மட்டும்
தட்செயலாகக் கேட்டுவிட்டேன்.
" வானவில் "
என்றது மென்குரலில் பிசாசு!

.
............................................................................
.
எது 
உண்மைகளை ஒத்துக்கொள்ளும் 
அசல் வரிகள் 
எது 
சோடிக்கப்பட்ட 
நகல்ப் பிரதியெடுப்புக்கள்
ஒழுங்கின்றிக் கிடக்கும்
இருவேறு மூலைகளில்
அசாதாரணமான தொகுப்பாக
நிட்கிறது
பெயர்களை ஒளித்துவைத்திருக்கும்
கையொப்பங்கள் !

.
.......................................................................
.
கண்களைக் குருடாக்கிவிடும்
பிரகாசத்தோடு
வெளிப்படுத்தப்பட்ட வர்ணங்கள்
எதையுமே மறைக்கவில்லை !
இறுதிக்கு முன்னதாக
இரக்கமற்ற எளிமையோடு
திடுக்கிடும்படியாக
மூன்று வாக்கியங்கள்
நிஜத்தை வெளிப்படுத்திவிட்டது 

.
.............................................................................
.
என்
பாதிதான் முடிக்கப்பட்டிருக்கும்
நடைப்பயணங்களில்
பாதங்களில் ஒட்டியிருக்கும்
மணல் துகள்கள்
அனுபவத்தை
வானம் முழுவதும் நிரப்பிவிடும் !

.
..........................................................................
.
நீ
மரணத்தவிப்போடு
பழக்கமான
இடைச்செருகல்களைத்
திருத்தவேமுடியாது
இப்படியேதான் எழுதுவாய் !
என்
வயதாகிய துயரமும்
ரகசியமான ஆசைகளும்
சந்தோஷக்கொண்டாட்டங்களுக்கு
விட்டுக்கொடுப்பதில்
முன்னேறிவிடுகின்றன !

.
..................................................................................
.
பூனைபோலவே 
வெய்யில் பதுங்கிக்கொண்டிருக்கும் 
விவர்மர நிழலில் 
அகன்ற தெருமுனை !
வளைத்துப்பிடித்துள்ள 
வீதியோரப் பூக்கடையில்
டூலிப்பையும்
ஆர்கேன்ஸாவையும் தவிர
மற்றதெல்லாமே
பெயர் தெரியாத மலர்கள் !

முண்டுகொடுத்தபடி
அந்த கடை உரிமையாளன்
சிக்கரெட் பத்துகிறான் !

நான்
பிராங் காப்காவின்
" மேடமோர்போஸிஸ் " நாவலின்
நாட்பதியோராவாது பக்கத்திலிருந்து
நிமிர்ந்து பார்க்கிறேன் !
வண்ணங்களில்
மனதின் ஆதாரமான இருப்பு !

ஒரு
வயதான பணக்காரி
பத்துத் கன்றுகள் தெரிவுசெய்கிறாள் !
சுருக்கம் விழுந்தவளின்
வெறுமைக் கண்களை
நிறங்கள் விரித்துவிடுகின்றன!
அவளின்
வெளிறிய முகத்தில்
வீட்டின் வெற்றிடங்கள்பற்றிய
விபரங்கள் எழுதப்பட்டிருக்க
மழை லேசாகத்தூற ஆரம்பிக்கிறது !

மலர்கள்
போட்டிபோட்டு
சிரித்து விரியத்தொடங்குகின்றன !
பூக்கடைவைத்திருப்பவனின்
முகம்
வாடத்தொடங்குகிறது !

.
......................................................................................
.
மத்தியானக் குட்டித் தூக்கம்
இதழ்களைப் பிடுங்குவது போல 
இறுக்கமான முத்தம்
அவள் 
கன்னங்கள் 
நம்பூதிரிப் பெண்களை போல 
சிவந்தே விட்டது
யுவால் ஏறிய மூச்சுக்காற்றே
இரண்டு உதடுகளை 

உரசிக்கொண்டு
செருகித்தான் வெளியேறியது
இரவு
தாழமுக்கம் உருவாக்கிய
அகோரப் புயல்
அலையெழுப்பில் 

கடலைக் கடந்து
கரைகளையும் துவசம் செய்யலாம்!

.
.....................................................................................
.
காதல் 
ஓங்கி அறைந்த 
ரெண்டுவிதமான 
கசப்பான அனுபவம், 

சிலந்திவலைப் பிடிமானத்தில் 
தொங்கிக்கொண்டிருந்த
அவநம்பிக்கையைப்
பன்மடங்கு அதிகமாக்கிய
ஒரேயொரு துரோகம்,


முன்மாதிரிகளில்லாத்
தனித்துவமான ஆளுமையைப்
பிரகடனம் செய்யமுடியாத
உரைரையாடல்கள்,


சொல்லவிரும்பாமல்
அர்த்தமில்லா ஆண்டுகளில்
நிழலில்க் கரைந்துபோகிற
ஆத்துமாவுக்குச் சொந்தமில்லாத 

வயது,

நினைவுகளை அரிக்கவிடாமல்
கனவுகளைப் 

பத்திரப்படுத்திவைத்திருக்கும்
ஒரேயொரு காதல்கடிதம்,

நான்குமுறை
வைத்தக்குறி தவறியதில்
மயிரிழையில் உயிர்தப்பியது,


மன்னிப்பை ஒத்திவைத்ததால்
மரணம்வரையில்
விடாமல்த் துரத்திக்கொண்டிருக்கும்
குற்றவுணர்ச்சி,


பிரத்யேக மனஉளைச்சலின்
கடைசி விருப்பம்போல
மயானவாசலில் கிடக்கும்
சில கவிதைகள் !


இவைதவிர 

தனிமை
தனித்துவாமாகிவிடும்
சுயசரிதை என்னிடமில்லை !

.
........................................................................
.
ஜனனப் பிரசவிப்பு
அடிவயிற்றின் பிடிகொடுக்காத வலி 
விகாரமகாதேவி 
அதன் கிளைகளை பற்றிப்பிடித்தாள் 
ஒரு 

சித்திரா பவுர்ணமியில் 
மஞ்சள் ஒளி சருகுகளை உயிர்ப்பிக்க
அதன் 

சிம்மேந்திர நிழலில்
போதியான 

மனித சுயசரிதையில்
அளவுக்கதிகமான கவனிப்பை 

அள்ளிக்கொண்டது
அந்த அரசமரம்.!

.
............................................................
.
பழக்கமான அந்தப் 
பரதேசிப் பிசாசின் 
தந்திரமான சமையலை 
மண்டியிட்டபடியிருந்து சுவைக்கும்படியான 
சந்தர்ப்பம் நேற்றுக் கிடைத்தது! 
அச்சுறுத்தும்படியான மேசையில்
பழுதுபட்ட பித்தளைப்பாத்திரம்
அதனுள்ளே எதுவுமேயில்லை !
பிசாசு
ஏற்கனவே சொன்னபடி
அடுப்புப் பத்தவைக்குமுன்
என்
கண்களைக் கட்டிவிட்டது !
பிசாசின் பேய்த்தனங்கள்
எனக்கெப்பவுமே அத்துப்படியானவைதானே !
பிறகு
கொஞ்சம் தூரத்தில்
ஒரு அலுமினியப் பானை
துலாவப்படும் மெல்லிய ஓசை ,
அதன் பிறகு
ஒரு மண்குடம் அடிவரை துலாவப்பட்டது,
அதன் பிறகும்
ஒரு வெள்ளிப்பானை வழிக்கப்பட்டது !
நான்
ஓசைகளோடு உன்னிப்பாகவிருந்தேன் !
பிசாசு
ஆணவத்தோட அடையாளமாகி
உட்சாகக் குரலெடுத்து
பித்தளைப்பாத்திரத்தை
நொண்டிக்கையால் கிண்டியெடுத்த
திரிசூலக் கரண்டியை
உள்ளங்கையில் வைத்தது!
சும்மா சொல்லக்கூடாது
அறுசுவை நளபாகம் தான்!
அதன் பின்
எப்போதும் பிசாசின் முதுகுசொறியும்
முப்பது பேர் வந்து சுவைத்து
தேசிய அளவில்
பிசாசுக்கு முதலிடம் பிரகடனப்படுத்தினார்கள் !
பிசாசு
உலகளாவிய அளவிலும்
சமைக்கப் போகும்
ஒப்புகையில் மங்கிப்போன நாளுக்கும்
என்னை வரச்சொல்லியிருக்கு !
அன்றைக்கு
என்
கண்களைக் கட்டுவது மட்டுமில்லை
என்
காதுகளை அடைப்பதையும்
பிசாசு மறவாதிருக்கட்டும் !

.
.................................................................................
.
கைவிரல்களில் 
பிசைந்துகசிந்து ஒட்டிக்கொண்ட
பாலப்பழ வாசனைகள் 
ஏதோவொரு கதையைச் சொல்ல 
பாசாங்குகளற்று 
நன்றாகவே நினைவிருக்கு ! 

மெதுவாகவே 
நெருங்கிக்கொண்டிருக்கும் 
ஒவ்வொரு
புளித்துப் புரைத்தட்டிக் 
கிழித்துப்போட்ட நினைவுகளிலும் 
கொட்டி இறுக்கி
அணைத்துக்கொள்ளவேணும்
இனிமையான விசியங்களேயில்லை !

.
.............................................................................
.
அவனுக்குத்தான்
வெட்டையில் நின்ற
காட்டு மரங்களைப்பற்றி,
ஏத்துப்போடும்
வேட்டைக்காரர்களின்
இடியன் கட்டுதுத்துவக்குப் பற்றி,
ஆமணக்கு
இலைகளின் மேல்விழும்
வெளிச்சம் பற்றி ,
அதர் போட்டு அசையும்
அலியன் யானையைப் பற்றி,
கண்வளயத்தை நேரடியாகக்
கருக்கும்
வெய்யிலைப்பற்றி ,
துரமாய்ச் செல்லச் செல்ல
எதட்காக கிரவல்மண் பாதைகள்
சுருக்கிக்கொண்டுபோவதுபற்றி ,
எப்போதாவது
பொறுமையிழக்கும்
குளத்து முதலைகள்பற்றி ,
சிலநேரங்களில்
தலை அசையாமல்
சிலநேரங்களில்
ஓங்கியடித்துக் கொல்லப்போவதுபோலவும்
பார்த்துக்கொண்டிருந்தான்!
சலிப்பாகவும்
அபத்தமாகவுமிருக்குமென்று
வேறு
வழியில்லாமல்
அடுப்புத்¨தீயைக் கிளறி
தண்ணி ஊற்றியது போலவே
ஒன்பது வருடங்கள் முன்னர்
சரித்து விழுதப்பட்ட
முக்கிய சம்பவங்களைத் தொடவேயில்லை!

.
.............................................................................................
.
பிரஞ்சைக்குள்
பெயர்ந்து வந்த ஞாபக அடுக்குகளில்
உள் நுழைந்துவிடும் 

ஒரு
மெல்லிய ஒளிக்கற்றை
மெல்ல
ஊடுருவியதுபோலவே
பாதிமயக்கத்தில்
நாங்கள்
இலக்கற்ற மாயைகளில்
திளைத்துக்கொண்டிருந்தபோதே
முற்றிலுமாக சரணடைந்துவிட்டது
விஷங்களும்
வேஷங்களும்
விஷமத்தனங்களும் நிறைந்த
புராதனமான புழுதி !

.
...........................................................................
.
.வெறுமனையே 
காலாற நடக்காதே 
என்னோடு 
ஆத்மார்த்தமாய்ப் 
பத்தும்பலதையும் பேசிக்கொண்டிரு !
தூக்கிலிடப்பட்டவனின்
சங்கு சளிந்த கழுத்துப்போல
பாதைகள்
வளைந்துகொண்டே செல்கின்றன !
உன்னுடைய
மிகப்பெரிய கனவு பற்றிய
முயட்சியைச் சோதிக்க
நடுகற்களை
முடிவில்தான் வைத்திருக்கிறேன் !

.
................................................................................
.
விஸ்தீரணமான
கருவூலமாக முஸ்தீப்புக்கள்
பழக்கப்பட்டுப்போயிருந்த
அந்தக் காலத்தில்
ஒரு 
கோடை நாளில்
இரவுகளில் நடமாடியதால்
வெளிச்சத்திட்க்குப்
பழக்கப்படாமலிருந்த கண்களில்
கொலைவெறி !
கங்குவேலிகளுக்கு மேலாக
மிடுக்கான முகத்துடன்
நடுவில்
தயார் நிலைப்படுத்தப்பட்ட
தானியங்கிச் சுடுகலன்களோடு
அவர்கள்
மூர்க்கமாக வந்தார்கள் !
யார் அவர்கள் ?
பருவமழைக்கு முன்னதாக
மண்டியிட்டுருந்த
செம்பாட்டு மண்புழுதி
காற்றில் மிதந்துகொண்டிருந்தது !
பிறகு
கந்தகம் கக்கி வாந்தியெடுக்கும்
இலக்குகளற்ற
மரண வெடியோசைகள் !
கண்டுபிடிக்கும் சாதியங்களுள்ள
காலத் தடயங்களும்
தப்பிஓடிவிட்டது !
சுவாரசியமான வியப்போடு
வரிசையாக நின்ற முத்திரைமரங்கள்
அவர்கள் ஓடிப்போன
காஞ்சோண்டிகள்
தலையைக்கவிழ்க்கும்
காட்டுப்புதர்ப் பாதையை
வெறித்தபடியேதான் இருக்கின்றன !
சரி
யார் அவர்கள் .
,
...................................................................................
.
வியர்வை முகத்தைச்
சுளித்துக்கொள்ளவிடாமல்
அசிங்கமாக வெறிபிடித்த
வெய்யிலோடு
அலைமுழுங்கும்
கடல் வரையிலும்
அலைந்துகொண்டிருக்கிறேன் !
மருகி மரியாதையோடு
குறுக்கு வழிகளில்
என்னை
பெருமைப்படுத்துவதெல்லம்
கருணையுள்ள காலம்
பார்த்துக்கொண்டிருக்கும்
உன் காலடிகளைச்
பொக்கிஷமாகச் சேர்த்துக்கொள் !
.
...............................................................................
.!
சந்துபொந்துகளில்
கிடைத்துக்கொண்டிருக்கும்
மலிவான வாசனைகளை
வாசித்துக்கொண்டே நிட்கிறேன் !
என்
கவுரங்களை விட்டுக்கொடுத்து
நீண்டும் குறுகியும் வளைந்தும்
இப்படித்தான்
அனுபவங்கள் தருகிறது
பயணம் !
.
............................................................................
.
முன்னெப்போதுமில்லாதவாறு
உனக்கேயான
ஒவ்வொரு நொடிகளையும்
நினைவாக்கிவிடு !
வயதான தம்பதிகள் 
மர வாங்கில் நெருக்கமாகி
கைகளைப் பிடித்துக்கொள்கிறார்கள் !
வாழ்ந்துகொண்டிருப்பதே
ஒருவிதமான
ஆதிக்கும் அந்தத்துக்குமிடையிலான
அட்புதமான குறுக்கீடு !
பள்ளிக்குழந்தைகள்
ஓவென்று கத்திச் சிரித்தபடி
பாதையைக் கடக்கிறார்கள் !
.
..........................................................................
.
என்னை
முடிவில் திட்டுவதை நிறுத்து
நான்
கருவில் உருவான
பிறப்பின் ஆரம்பத்திலிருந்தே
உன்னோடு பயணிக்கிறேன் !
ராத்திரியின்
அளவுக்கதிமான ஸம்போகத்தில்
மேலாடைகள் கலைந்த
நகர வீதிகளின் நிசப்தம் !
உன்
இறுதிக்கணப் பாடலை
இப்போதே எழுதி எடுத்துக்கொண்டு
வீரனைப்போலவே காத்திரு !
.
........................................................................
.
காற்றின் திசைகளை
தேர்ந்தெடுத்துக்கொண்டு
தேவாலய மணிகள்
விட்டு விட்டு அடித்துக்கொள்கிறது !
என்
ஆத்மாவின் தேடலைப் புரிந்துகொண்ட
ஆழ்மனதின் கெஞ்சலுக்கு
இப்படித்தான்
கடைநிலை விளக்கம் தருகிறது
மரணம் !
.
முடிந்தவரையில்
உன்
சின்னச் சிரிப்புக்குள்
ஓராயிரம்
உணர்ச்சிகளை மறைத்துவிடு !
பார்வைக்கு எட்டியவரையில்
வசந்தகால மரங்கள்
பூக்கத்தொடங்குகின்றன !
.
........................................................
.
அதிகமதிமாய்த்
துயரங்களோடு
அங்கலாய்த்துக்கொண்டே
அலைக்கழியாதே
நன்றாகவே நடந்தால்
கொண்டாடிவிடு !
முன்கோடைப் பறவைகள்
கீழ் வானத்தை
சின்னச் சிறகில் மிதந்து
இன்னுமின்னும் விரித்துக்கொண்டிருக்கின்றன !
.
.....................................................................
.
தோல்விகளைத்
தூசிதட்டிக்கொண்டிருக்காதே
நாளைக்கான
அனுபவமாக்கிவிடு !
பார்வையற்றவொருவன்
மிகத் தெளிவாக
வழி தேடியெடுத்துக்கொள்கிறான் !
.
..............................................................
.
முன்னிருக்கும்
சவால்கள் எல்லாவற்றையும்
சந்தோசமாய் எதிர்க்கொள்ளு !
சின்னவனுக்கு
சைக்கிள் பழக்கும் அப்பா
முதன் முதலாகக்
கைகளை விடுவித்துக்கொள்கிறார் !
.
.....................................................................
.
அழகு 
மிகச்சில கோடுகளிலும்
 அவலம் 
 கவர்ச்சியற்ற நிறங்களிலும் 
 உரத்தே சொல்கிற
ஆழ் மனங்களை உயிர்ப்பிக்கும் 
வண்ணஓவியமொன்றின்  

தோற்றப்பிழற்சி !
என்
அர்த்தத்தேடல்களைப் புரிந்துகொண்டு
ஆழ்மனதின் குரலுக்கு
இப்படித்தான்
உரைநடை விளக்கம் தருகிறது
வாழ்க்கை !
.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

1 comment :