Friday 22 December 2017

(ம)ரணம் !

எட்டயபுரம் சுப்பிரமணிய  பாரதி சொன்னதுபோல   நல்லதொரு வீணை செய்து அதை நலங்கெட  தெருப்புழுதியில் எறிவது போன்றது  மரணம்.  ஒரு முடிவும் இல்லாத தொடக்கமும் இல்லாத காலத்தை புள்ளிட்ட இடைவெளிகளை நிரப்புவது போல அதுக்கு வாழ்க்கை என்று பெயர்வைத்து விளையாட்டுக்கு காட்டுது.

                                    உயிரோடிருத்தல் என்பதே உண்மையில் மரணத்திடம் கடன் வேண்டிய நேரத்தை ஏக்கத்தில் பாதியும் தூக்கத்தில் பாதியும் தொலைத்துவிட்டு அப்பப்ப சந்தோஷங்களைக் கனவுகாண்பது போலிருக்கு.
   
                                 அங்கங்கே  என்னோட மனநிலை போலவே சிதறிக்கிடக்கும் மரணம் பற்றிய கவிதைகள் போன்ற  பதிவுகள் வாசிக்க கொஞ்சம் முன்னுக்குப் பின்னுக்கு திகிலாக  ஜோசிக்க வைக்கும். எதுக்காக நம்மளால வெல்லவேமுடியதாக  மரணத்தை முன்னிறுத்தி, அதுக்கு மரியாதை கலந்த பயம் கொடுத்து, நிலையாமை  பற்றி எழுதவேண்டும் என்று உங்களைப்போலவே நானும் நினைப்பது.


                                                    சிலநேரம் நானும் உயிரோடிருந்தேன் என்பதுக்காவது மரணத்தைப்பற்றியம் எழுதிவைத்துவிட்டுத்தான் போகவேண்டி இருக்கு.     

எழுதிவைத்துவிட்டுத் 
தூக்குப்போட்டுச் செத்தவனின் 
கடைசிக் கடிதத்தில் 
விட்டுப்பிரியாத 
அழகான மனைவி இருந்தாள் .
நேசிப்பில்ப் பாசமுள்ள
பிள்ளைகள் இருந்தார்கள்,
உயர்பட்டப்படிப்பில்
மிகச்சிறந்த தேர்ச்சிகள் இருந்தது ,
நான்கு சகோதரிகளைக்
கல்யாணக் கரைசேர்த்த
சந்தோஷக்காட்சிகளும் இருந்தது .
ஓய்வுறுதலுக்கு உத்தரவாதமான
வேலையும் இருந்தது,
"உயிர்ப்பு "என்றவன் எழுதிய கவிதைக்கு
விருதுகிடைத்த விபரங்களிருந்தது,
களைப்படையாமல் நடக்கும்
அபரிமிதமான ஆரோக்கியமுள்ள
தேக்குமரத் தேகமிருந்தது ,
பெயர் குறிப்பிடாமல்
யார் யாருக்கெல்லாமோ
உதவிய கருணையிருந்தது,
கலவரமில்லாமல்க்
கடவுளை கண்டுகொள்ளும்
ஆன்மீகத் தேடல் வேற இருந்தது,
மிகச் சுலபமான தீர்வுள்ள
அற்பமான காரணமொன்றை
அவன் திட்டமிட்டு மறைந்திருக்கலாம்
ஏனென்றால்
பெருமையாகச் சொல்லும்படியாக
உங்களிடமோ
என்னிடமோ இல்லாததெல்லாம்
வாழ்க்கையில் முழுமையாகவிருந்த கடிதத்தில்
மரணத்தின் வாசம் மட்டும்
இல்லவேயில்லை !

.
....................................................................................
.

சமகாலத்தில் 
அதிகமதிகமாய்
பேரதிஸ்டங்களின்றி 
அறியப்பாடாமல்ப் போனவர்கள் 
போனபிறப்பில் 
வழிதவறிய ஆத்மாவிலும்
பலவீனப்பட்டிருக்கலாம் !

.
..........................................................................
.
சொர்மலாந்து 
புல்வெளிப்பிரதேசத்தில் 
பாச்சல் குதிரைகள் 
சோம்போறித்தனமாக 
மேய்ந்துகொண்டிருக்கின்றன ,
ச்ஜெர்ந்ஹோவ் நெடுங்சாலையில்
பேர்ச்பித்துளா மரங்கள்
இலையுதிர்குளிர் வருவதுபற்றி
விவாதம் செய்கின்றன
கேநேஸ்தா
வடிசாளைப் புறநகரம்
புழுதிக் காற்றில்
எந்தக் கனவுகளும் இடைப்புகாமல்
உறங்கிக்கொண்டிருக்கு
பிளேன்
அடைக்கல கிராமம்
என்னைப்போலவே
ஏதிலிகள் போலிறங்கும்
பிளிக்கன் பறவைகளுக்கு
திசைகள் காட்டி்ககொண்டிருக்கு
ஓரளவுக்கு எதிர்பார்த்தபடியே
எல்லாவிதமான முன்னசைவுகளிலும்
ஒரு மரணத்தின்
கடைசி ஒத்திகைகள் !

.
..............................................................................
.
ஸ்டேர்ன்ச்ட்டேர்
தேவாலயத்தின் சவக்காலையில்
ஒரு பெண்
பரமபிதாவின் பாவமன்னிப்புப்
போதனைகளோடு
மூன்றாம் நாள் எழுப்பப்பட்ட
சத்தியாமான தேவவார்த்தைகளோடு
அடக்கமாக இறக்கப்படுகிறாள்
அவளின் நிறம்
அவளின் குணம்
அவளின் வாசனை
அவளின் கோபம்
அவளின் சாபங்கள்
தனிப்பட எனக்கு நல்லாவே தெரியும்
நினைவுகளை நிறுத்தினாலும்
அவள் எழுந்துவரவே போவதில்லை
அவளின் பெயர்
இன்னும் சில மாதங்களில்
கல்லறையில் எழுதப்படும்
அதுவரையில்
அந்தப் பெயர் கொஞ்சநாளாவது
எனக்கே சொந்தமாகவிருக்கட்டும்!

.
.....................................................................................
.

பொத்திவைக்கமுடியாமல்
சுவாசித்தபடி 
சந்தோசமாகத் தோற்றுப்போகும் 
மரணஉறக்கத்தில் 
பிரம்மம்தேடித் தித்திக்கும் 
சொப்பனம்தான்
சூடான ரத்தமும்
பிண்டத் சதையுமாக
அழுகுதுத்துணி மூட்டையைச்
சுமந்தலையும்
வாழ்க்கை !

.
.............................................................................
.
நிகழ்ந்து முடிந்ததில்
எதிரொலிகளில் திசையறியும்
வெளவால்ப் பறப்புப்போலவே
பதற்றமான மனநிலை,
அதனால்த்தானென்று நினைக்கிறேன் 
சாவின் வாசனை
பூனைவால் மலர்கள்
காற்று நின்றுவிட்ட தருணம்
உரசிக்கொண்டிருப்பது போலிருந்தது,
புல்வெளிகளில்
பனிபாளங்கள் மின்ன
பரந்தவெளிப் பாலைவனக்கடலில்
சடுதியாக
ரெண்டு வெள்ளைத்தேவதைகள்
இடம்மாறிக்கடப்பதை
இருட்டில் கண்டுகொண்டேன் ,
எனக்குதான்
குறிவைக்கப்படுவதாக நினைத்துக்கொண்டேன்
எனக்கேயெனக்காக
பலவருடங்கள் வாழ்ந்தவளின்
இறுதிமூச்சுதான்
மவுனிக்கப்பட்டது !

.
...........................................................................
.
மரணத்தைப் பிரிக்கமுடியாத
அவலச் செய்தியில்
ஒளிந்துகொண்டிருக்கும் 

நினைவு
இருத்தலின்மையைச் 

சாதாரணமாக்கி விடுகிறது!
.
.......................................................................................................
.
மரணம் பற்றிய 
ஆதாரபூர்வமான உண்மைகள் 
அறுதியிடப்படும் 
அதே நாளில் 
காலமாவது விடுதைலையாகிவிடும் 
என்கிற கல்லறை
இப்போதும் வெறுமையாகவேயிருக்கு!

.
...............................................................
.
தொடக்கமென்னவோ 
தத்தளிக்கும் தாலாட்டு 
பிறகெல்லாம் 
தத்துப்பித்தென்று 
முக்கியங்களை முன்னிறுத்தாத
வார்த்தைப் பிரயோகங்கள்
கொஞ்சம்போல
நம்ப விரும்பும் பொய்களும்
இக்கரைக்கு அக்கரையாக
வெறித்தன ஆசைகளும் !
பேரோசையுடன் கூத்தாடியே
உக்கிரம்கொண்டெழும்பிய இச்சைகள் !
இதட்குள்ளே
காற்றின் உந்தலில்
ஊஞ்சல் அலைவுற்றதுபோல
மௌனத்தால் மட்டுமே நிரப்பப்பட்ட
காதல் வேற !

.
............................................................................
.
வாழ்க்கையை 

நிதானமாக விவரிக்கிற
ஊழியின்
நிச்சயமில்லாத நேரமொன்றில்
அர்த்தங்கள்
காதோடுமட்டும் ஒலிப்பது போல

.
.........................................................
.
சட்டென்று
தனிமை மூடிக்கவிழும்
பேரமைதி
கைவிட்டு புறப்படும் போது
பெரும் இரைச்சலுடன்
முற்றுப்புள்ளியில் முடித்துவைத்தல் !

.
................................................................
.உயிர்ப்புடன்
அட்டகாசமான மொழியில்
எழுதக்கூடிய
ஒரேயொரு விடயம்
மரணம் !

.
.......................................................................................
.
மண்டியிட்டு இதழோரம் தீண்டும்
உஷ்ணம் ,
மந்தாரப் பனிப்பூக்களை
எட்டிப்பார்க்கும்
...

விழாக்கால வெய்யில்,
வாசற்படியை
ஜன்னல்களுக்குச் சொல்லாமலே
எடுத்துக்கொண்டுபோய்விட்டது
மூடுபனியிருட்டு ,
வெள்ளி விடிவத்துக்குள்
வாழ்ந்துமுடித்துவிடவேண்டும் !
யாருக்குத்தெரியும்
தூங்கி விழுந்தபடி
மரணமும் நிற்கலாம்
கதவருகே !
 

.
..................................................................................
.
ஒரு மங்களகரமான நம்பிக்கையுடன்
நீண்ட பகல்களும்
நிசிநட்சத்திரங்களும்
வானத்துக்கும் பூமிக்கும்
...

கொட்டமடிக்கும்
உத்தரதேசத்தில்தான்
நீ
இயல்பாகவேயிருக்கிறாய் !
இங்கேயோ
ஆதி உயிரின் குறியீட்டுக்
கடவுச்சொல்லே
நினைவுகளாலே இயங்குகிறது !

.
...............................................................
.
எல்லாத்தரப்பிலும்
நெருக்குவார அணுகுமுறைகள்
விசாரணைகளை ஏற்றுக்கொள்ளவிரும்பாத
ஆத்மாவொன்றை
விட்டுச்செல்கிற முடிவொன்று
தாமதமாகிக்கொண்டுதானிருக்கு
ஏனோதானோவென்று
காத்திருப்பதில்
சுமைகளைச் ஏற்றிவிடுகிற
இறந்தகாலத்திலிருந்து
எதிர்காலஇதயத்தைப்
பதிவிறக்கமுடியாமல்
எச்சங்களை இழுத்துக்கொண்டுவருகிறது
காலப்பக்கங்களில் பறக்கும்
வேகப்பறவை !

.
................................................................
.
வீரியம்மிக்க கற்பனைக்கு இடமிருக்கிறது
எனினும்
ஒரு தோல்வியில்
விழுந்தெழும்பிய சாட்சிகளை
...

அடுக்கிக்கொண்டேயிருந்த
அந்த நிகழ்வை
ஓய்வெடுத்த பின்புதான்
இணைத்துத் தொகுக்குது
உயரப் பறக்கும்
மனது !

.
..........................................................
.
கிட்டத்தட்ட முடிவுறும் தருவாயில்
தற்கொலைசெய்ய முடிவெடுத்த
அந்தத்
தனித்த மழைக்கவிதை
...

என்னைப் பார்த்து கேட்கின்றது
உருவி எடுத்து உரிமை கொண்டாடுபவளின்
நட்பில்லா நடிப்போடு
உறவை முறித்துக்கொள்ளவா ? என்று
அபத்தமான
மழைத்துளிகளுக்கிடையிலான
கிலேசம்தரும் காட்சிகளை
எவரும் விவரித்து நான் வாசித்ததில்லை.
அதனால் உண்மைபற்றிய
சாத்தியங்கள் குறித்த ஐயப்பாடும் உண்டு.
விறுவிறுப்பையும்
அதீத பதற்றத்தையும்
சுயமில்லாத
எழுத்தில் கொண்டு வரவே முடியாத
சூனியவெளிக்குள் நானும் கிடப்பதால்
அலட்சியமாகவே
எதுவென்றாலும்
நீயே முடிவெடுத்துக்கொல் என்றேன்
!

.
...............................................................................................
.
ஒரு விடுமுறை நாளில்
ஒரு
சாவோடுசம்பந்தப்பட்ட சவாலை
ஒரு
...

பொருந்திவராத நேரம்
ஒரு
உண்மையாக வடிவமைத்துக்கொண்டிருக்கு
ஒரு
முகில்களோடு மோதும் வானம்பாடி! 


ஒரு
இடம்மாற்றிவைத்த உத்தியோடு
ஒரு
நியாயத்தை அநியாயப்படுத்த
ஒரு
அலங்கரிக்கப்பட்ட பொய்
ஒரு
அடிவானத்தை அறுதியிடுகிறது !


ஒரு
கண்ணாமூச்சி விளையாட்டில்
ஒரு
பறத்தலுக்கான போராட்டம்
ஒரு
பதற்றமான திசைப்போக்கில்
ஒரு
பரபரப்புகளில்லா வானவெளியில்
ஒரு
ஊகிப்பதற்கான இடைவெளியை
ஒரு
அகாலமாக நிராகரித்துவிடுகிறது !


ஒரு
புத்தம்புதிய காலத்தைத் தேர்ந்தெடுத்து
ஒரு
வாழ்கையைக் கொண்டாடிவிட
ஒரு
சொர்கமில்லை என்று அங்கலாய்க்கும்
ஒரு
பெயர் வைக்கப்படாத பறவை
ஒரு
எரி கல்லுப்போல
ஒரு
செங்கோணமுக்கோணத் திசையிலிறங்கி
ஒரு
தீர்மானமான உறுதியோடு
ஒரு
வெற்றிடமான நொடியில்
ஒரு
தற்கொலையைத் தேர்வுசெய்தது !




1 comment :