Sunday, 25 June 2017

தடயங்கள்..............

அதன் பின்..!
*******************
ஒரு
தேக விருப்பத்தின் 
தேர்ந்தெடுப்பு
இப்படித் தொடங்கலாம்,
பறவைகளின்
ஒருமித்த சிறகடிப்பு,
பூனைக்குட்டியின்
ரோம உரசல்,
ஆற்றின்
மையமான சலசலப்பு,
செவ்வரளிகளின்
மொட்டவிழ்ப்பு,
நீறு பூத்த
பொய்மைத் தணல்,
நாசியில்
வருடும் குங்கிலியம்,
நாணதிரும்
உருத்திர வீணை,
பார்வையிழந்த
தேவையற்ற ரகசியம்,
எரிமலையின்
வெளிச்சுவாச மூச்சு,
பிசுபிசுக்கும்
ஈரலிப்பு வியர்வை,
காதையடைக்கும்
கனதியான கூக்குரல்,
ஜிவ்வென்று பறக்கும்வரை
தேடியதெல்லாம்
அவ்வளவுதான்
அதன் பின்
இரவே கலைந்து கிடக்கும் !

.........................................................................
பட்டியலிடப்பட்ட  பாவங்கள் 
......................................................
நியாயத் 
தீர்ப்பு நாளில்
பாவங்கள் 
பட்டியலிடப்பட்டு, 
மன்னிப்பு மறுக்கப்பட்டு, 
நரகத்தின் முகவரிக்கு
கடைசியாகாக்
காத்திருந்தவர்களை
கண் திறந்து பார்க்க
கடவுள் வந்தார்,,,,,,,,,,,,,
சந்தேகங்களில்
சந்தோசங்களை
தொலைத்தவர்கள்
கதறியழ,
விரும்பியே
சோரம் போனவர்கள்
விம்மியழ,
துணிந்தே
துரோகம்செயதவர்கள்
துக்கித்தழ,
அந்தப்
பெண்ணாகப்
பிறந்தவர்களுக்கு நடுவே
ஒருத்தி மட்டும்
விழுந்து விழுந்து
சிரித்துக்கொண்டிருந்தாள்...
படைத்துப் பார்த்த கடவுள்
காதருகே வந்து
காரணம் கேட்க
அவள் அப்பவும்
இளித்துக்கொண்டே
"விரும்பியே
மனதளவில்
சபலமானேன் " என்றாள்
குழம்பிப் போன கடவுள்
குனிந்து கேட்ட
" ........ ........ ...... ........."
என்ற கேள்விக்கு
"......... ......... ...... ............"
என்ற பதில் வரக்
கடவுளுக்கு
மூச்சு நிண்டு போச்சு!!!

.....................................................................................
இதை வாசிக்கவேண்டாம்
***************************************
விழுந்து கிடக்கிற
சக மனிதனின்
இரத்தத்தில்
அவனை நம்பிய கடவுளின்
போதனைகளை
எப்படித் தீர்மானிப்பீர்கள்?

சிதறிப்போன
சின்னக் குழந்தையின்
ரெண்டுசோடி
செருப்புக்களில்
எதைத்தான்
மரண தேவதைகளுக்குக்
காவு கொடுப்பீர்கள்?

நாலா பக்கக்
குண்டுப்புகை நடுவே
துடித்துக்கொண்டிருக்கும்
பெண்ணின்
எந்த அங்கத்தில்
அனுஸ்டாணங்களின்
அடையாளம் தேடுவீர்கள்?

உயிரோடு
எரிக்கப்படுவதற்கு முன்னர்
தீக்குச்சி உரசும் போது
அன்பே தான்
ஆதிக் கடவுளின்
மோட்ச வழியென்று
எப்படிச் சொல்லுவீர்கள்?

நீங்கள்
காற்றைப்
பிடித்து வைத்து
அதன் பிறவிச் சமயம்
விசாரிப்பவர்கள்
சூரியனையே வளம் பார்த்து
விழச் சொல்பவர்கள்
பூமித்தாய்க்கே
தீட்டுத் துடக்குப் பார்ப்பவர்கள்

அதலினால்
உங்களின்
வணக்கத்துக்குரிய
தீர்மாணங்களோடு
எதிராயிருக்கும்
இதை வாசிக்கவேண்டாம்
இந்தக்
கவிதைக்குப்
புனிதமான தகுதிகளென்று
எதுவுமேயில்லை.

..........................................................................................
குறித்துக் கொள்ளுங்கள்
***********************************
நெருப்பின்
தகிப்பையெல்லாம்
தனித்தெடுத்து உரசிய
மென் தொடுகை

நெருக்கமான
கட்டியணைப்பில்
பரிபாசை மாறிக்
கிறக்கமான
ஈரலிப்பு முத்தங்கள்

இதெல்லாம்
இரண்டு வீதியின்
சந்தியைக் கடந்தவுடன்
அவர்களுக்குச்
சலித்துப்போயிருக்கலாம்

காலையில்
தேவைக்கு ஏற்றபடி
காரணங்களை
ரெண்டுபேருமே
அடிக்கியிருப்பார்கள்

ஆனால்
குறித்துக் கொள்ளுங்கள்

உங்கள்
பித்தலாட்டங்களில்
வீசப்பட்டுப்போன
ஒரு பூவின்
அவமானங்கள்
எந்த சமாதானத்திலும்
அமைதியடையவதில்லை என்பதை.

............................................................................................
வேறு எப்படிச் சொல்வது
*************************************
இத்தனைக்கும்
அப்பப்ப
உரையாடல்களில் பதிந்த
கிராமத்து வீட்டை
புகைப்படங்களில் மட்டுமே
பார்த்திருந்தேன்

சக்குப்பிடித்த நேரம்
நடுகல்லுப் போல
நகர மறுத்த
விடுமுறையில்
ஞாயிறோடு அசைந்த
நேற்றய தினம்
நேராகவே அதை
அனுபவிக்கக் கிடைத்தது

நனையக்கூடாதென்று
நான் நினைத்த
விசியங்களை
மழையோடு கதைத்துக்கொண்டே
மைல் கணக்கில்
சைக்கிள் ஓடிக்கொண்டிருக்க
நகர அலங்காரங்கள்
பின் ஒதுங்கிகொண்டிருந்தது

அந்த இடதில்
வெட்கமின்றி
முற்றாக இலையுதிர்த்த
பேர்ச் மரங்கள்
ஓட்டுப்பதிவுசெய்த
வானத்தைத் துடைக்க
மூடிக்கொண்ட அமைதி
திக்குமுக்காடிக்கொண்டிருந்தது

முகடுதட்டி
வயதாகிப்போன
மரவீட்டின் வாசனையில்
வார்த்தைகள்
சொல்லத் தெரியாமல்
தொண்டையடைத்துக்கொண்டது

வேறு எப்படிச் சொல்வது
அலுப்புப்பிடிச்ச
குளிரைத் திட்டிக்கொண்டு
ஒரே யொரு
புகைப்படத்தில்
அந்த இடத்தைப் பிடித்தேன்
அதுக்குள்
அதன் ஆத்மாவும்
உயிர்த்தெழுந்துவிட்டது.

...........................................................................
தடயங்கள் 
****************
மிகவும் 
கவனிப்புப் பெறுமதியுள்ள
மழை நாளின் 
ஒரு சம்பவத்தை
மிகக் கனதியான
ஒரேயொரு கவிதையாக
ஈரமான மனசாட்சியோடு
எழுதிவிட
ஏனோ கனகாலம்
காத்திருக்கிறேன்
அது
ஏற்கனவே நடந்து முடிந்து
அதையும்
ஏற்கனவே வேறொருவர்
துளிகளாக்கி
உலாவிவரவிட்டிருக்கலாம்
அல்லது
இனிமேல் தான்
தூவானங்கள்
அறுபடும்
ஒரு மந்தார நாளில்
நடந்தேறவேண்டி இருக்காலம்
அல்லது
இதை
எழுதிக்கொண்டிருக்கும் போது
அருகில் நின்று
கவனிக்க
யாருமில்லாமல்
அது இப்போதே
நிகழ்ந்துகொண்டிருக்க
மோட்டு மழை
தடயங்கள் எல்லாவற்றையும்
அழித்துக்கொண்டிருக்கலாம்.. 

.................................................................................
மௌனம் எப்படியானவொரு கவிதை
*******************************************************
விடுமுறை 
தினமொன்றை 
மிகவும் பிராயத்தனமாய் 
தள்ளிக்கொண்டிக்கு
திருக்காயங்கள் வேண்டிய
வெள்ளிக்கிழமை

நேற்றய
பின் இரவிலிருந்து
மயங்கிக் கிடக்கிற
பாதைகளின் ஓரங்களைப்பற்றி
வசந்த மழை
புகார் செய்தபடி
சிணுங்கிக்கொண்டிருக்கு

மனிதர்கள்
உற்சாகமாக எப்போதும்
தலையாட்டிவிட்டுப்
பிரியும் சந்தியில்
வெற்றிடம்
நின்று கொண்டு
காற்றை உள்ளிழுத்துக்கொள்கிறது

அதிக நேரமாய்
என்னத்தையோ
மிதித்துக்கொண்டு நிற்கிற
நேரம்
ஒரு மேகத்திலிருந்து
இன்னொரு திசைக்குக்
கடந்துகொண்டிருக்கும்
பறவையைக்
குறிபார்த்துக்கொண்டிருக்கிறது

கரகரப்பான
இரைச்சல்களின்
அசைவுடன் பூமி சுற்றுவதுதான்
இரம்மியமென்று
புரிந்துகொள்கிறேன்.
ஆனால்
மௌனம் எப்படியானவொரு
கவிதையென்று
இன்றய நாளும்கூட
சொல்லித்தரலாம்....!

................................................................................
கடவுளின்  சமயம்
..............................................

ஜெபக் குழந்தைகளின்

அழகிய பூந்தோட்டம்
சில செக்கன்களில்
சிவப்பாகச் சிதறிப்போன
பலிபீடம்

மீட்பர்
மீண்டு வந்தநாளில்
பிய்ந்துபோய்க்
கண்ணிழந்தவர்களுக்கு
அகன்ற பாதையெங்கும்
காதைக்கிழிக்கும் பிரச்சாரம்
செய்யப்படுகிறது

கர்மாக்கள்
இறக்குமுன்னே
காலாவதியாகிவிட
மேலான உயிரின்
மோட்சமடையும்
தடயங்கள்
அறுந்து விழுந்துவிட்டது

ஞானஉதயங்களின்
தீபங்களை
அணைத்துவிட்டு
இருண்ட
கடலின் கரையில்
கால்களை
நனைக்க நினைப்பதால்

தேடமுடியாத
மிகத் தொலைவில்
ஆன்மீகத்தை
தனியாக விட்டுவைத்துள்ளது
கடவுளின்
கடைசி உத்தரவாதமான சமயம்.

..........................................................................
அடையாளப்படுத்திக் கொள்ளுதல்
**************************************************
கொஞ்சம்கூட
வெட்கமில்லாமல்
ஓவியங்களிலிருந்து
தற்காலிகமாக
விலகி விடுகிறது
பருவம்

அவர்கள்
செய்வது எதனுடனும்
பார்த்துக்கொண்டிருப்பதை
தவிர எனக்கெந்த
நேரடியான
சம்பந்தமுமில்லை

பாதைகள்
நடமாடுவதற்கு
ஏற்றாற் போல
ஒரு குறிப்பிட்ட
திசையில் இருக்குமென்று
சொல்லவேமுடியாது

ஆனால்
அது அந்த
நேரத்திற்கானது மட்டுமென
அவர்களிடமே
அவர்களின் உலகத்தை
விட்டுவிடுகிறேன்

இந்த
அடையாளப்படுத்திக் கொள்ளுதல்
என்னைக்
கொன்று விடுகின்றது
நாளையோடு
சம்பவங்களிருந்து
நிரந்தரமாக
வெளியே வரவேண்டும்.

..............................................................................
பேய்வீடு
*************
வௌவால் வீடு
உசிரோடு உலாவியதெல்லாம்
அம்பலத் தாத்தாவின்
ஆத்மா
அநாதையாக வெளியேறிய
நிமிடம் வரையே

எப்பவுமே
இறுக்கி மூடிய
கம்பிக் கிராதிக் கதவில்
இரும்புக்கறல்
உறவைச் சொந்தமாக்கிப்
பல வருடங்கள்
அசையாமல் இருந்தது

பின் வளவில்
காட்டுத்தேக்கு மரத்தில்
யாரோ கட்டிவிட்ட
வீச்சு வலையில்
சருகுகள் மட்டும்
எதேச்சையாகச்
சிக்கியிருக்கும்

பவுர்ணமியிரவில்
முகமில்லாத
பெண்ணின் குரலெடுத்து
வீறிட்ட அழுகை
சாய்ந்து கிடந்த
சுவர்களோடு
தனியாக எதிரொலிக்குமாம்

வருடங்களாகத்
தலைகீழாகத் தொங்கி
வழமையான
சத்தங்கள் இல்லாததால்
யாரோ அதைப்
பேய்வீடு என்ற
கதையாக்கி நிறுவிவிட்டார்கள்

வௌவால் குடிவரமுதல்
வாசல் படிகளில்
மனிதக் காலடிகள்
ஒரு காலத்தில்
சொர்க்கத்துக்கும் நரகத்த்துக்கும்
தூது விட்டு
ஏறி இறங்கியிருக்கலாம்

இந்தக் கவிதை
அந்த இடத்தைக் கடக்கும்போது
சில நிமிடம்
நிலத்தில் கால்படாமல்
நின்று சென்றது என்றால்
நீங்கள்
நம்பவேமாட்டீர்கள்.
................................................................................
முதல் எதிரி 
******************
குழந்தைகளைப்
பார்த்துக்கொண்டேயிருந்தேன்
சந்தோஷமாயிருப்பதுக்கு
அடிப்படையில்
எந்தவிதமான
காரணங்களும் இல்லாமல்
சுதந்திரமாகவே
இருந்தார்கள்

அவர்கள்
உதைத்துவிட்ட பந்து
கால்களைத்
தட்டிவிட்டுக்கொடுத்து
அதன்போக்கில்
விலகிப் போனது

இதுவாயிருக்குமா
அதுவாயிருக்குமாவென்று
பிரித்தறிந்து
சொல்ல நினைத்த
கேள்விக்குள்ளேயே
கற்றது கையளவுபோல
உளறிக்கொண்டிருந்தேன்

புத்திசாலித்தனம்
புரிதல்களைப்
பொறுத்தவரை
முதல் எதிரி என்று
நினைக்கப்படும் வரை
நீயாகவே
உருப்படவேமாட்டாயென்று
கேலி செய்கிறது
பூமிப்பந்து.

.............................................................................................
ஒரு வானவில் போலே
***********************************
விடுமுறைநாட்கள்
சிறகுகளை
நனைத்துக்கொண்ட
நீர்ப்பறவை
உந்திப்பறக்கக் காத்திருப்பதுபோல,
யாருமில்லாத
வெறுமை மேசைகள்
கதிரைகளுக்குத்
தாங்க முடியாத
அமைதி பற்றிப்
புகார் சொல்வதில்லை,
விரிக்க முடியாத
வெய்யில் குடைகள்
சூரியனை யாரோ
திருடிக்கிக்கொண்டு போய்விட்டதாக
நம்புகிறது,
மெல்லென அணைக்கும்
மாதிரி வெளிச்சம்
சலிப்பாகப் பிரதிபலிக்க
வழவழப்பான
ஒருத்தி மட்டும்
என்னவோ நினைத்துக்கொண்டு
குறிப்பில்லாத
பாதையில் கடந்தாள்,
எதையும் பாராமல்
கால்களை நீட்டி வைத்து
முட்டாள் போல
சுடுகோப்பி
அருந்திக்கொண்டே
"ஒரு வானவில் போலே... " என்று
பாடிக்கொண்டிருக்கிறேன் !
..................................................................................

1 comment :