Monday 24 October 2016

தலைப்புக்கவிதைகள். முதல்த்தொகுப்பு .

கவிதைகள் வாழ்க்கை போல ஒரு முடிவின் தொடர்ச்சியின் முடிவு போல ஓடிக்கொண்டிருக்கும் என்று நினைப்பதால் ஒரு குறிப்பிட்ட சதுரத்துக்குள் அதை அடக்க விரும்பாமல் இதயத் துடிப்புப் போல எப்பவுமே எழுதிகொண்டிருந்த கவிதைகளுக்கு அதிகமாய் தலைப்புக்கள் போட்டு எழுதியதில்லை. இடைப்பட்ட ஒரு காலத்தில் சும்மா தலைப்புக்கள் போட்டு எழுதினேன். அவைகள் நோட் என்ற முகநூல் சுவரில் வலம்வந்தது. அவைகளில் கொஞ்சத்தை என்னோட மின்னேறிஞ்ச வெளியில் ஒரு தொகுப்பு ஆக்கியுள்ளேன், இன்னும் ரெண்டு தொகுப்பு போடுவதுக்கும் நோட் போர்மேசன் வடிவில் எழுதியவை இருக்கு. கவிதைமொழி என்பதும் ஒரு பாடலில் வரும் " modulations and intonations " போன்ற அலாதியான சங்கதிகள் நிறைந்த ஒரு அதிசயம், ஒரு பாடல் எப்படிக் காற்றில் மிதந்து காதுகளை நனைக்குதோ அதே போலக் கவிதை மனதோடு பேசவேண்டும். அப்படி அதை மிகச்சிறந்த ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவருவது கடினம். எழுதும் மொழியில் ஆளுமை இருந்தாலும் நிறையத் திறமை வேண்டும். அதிலும் மிகக் கடினமான சூழ்நிலையில் திணறிக்கொண்டிருக்கும் விடயங்களைப் படிமங்கள் போட்டுப் பயமுறுத்தி, புரியமுடியாத வரிகளை உள்நுழைத்து விவரணை செய்யாமல் மிக எளிதாக எழுதி வாசிப்பவர்களின் மண்டைக்குள் ஏற்றுவது என்பதுதான் கவிதைகளில் உள்ள மிகப்பெரிய சவால் என்று நினைக்கிறன்.

நாட்குறிப்பின் கடைசிப் பக்கம் ....

..............................................................................
நேற்றைய 
நாட்குறிப்பின் 
கடைசிப் பக்கம் 
தொடக்கப்பக்கம் போலவே 
வெறுமையாக 
இறந்தது...

இடையில்
எழுதியதெல்லாம்
எப்ப எப்ப தோன்றியதோ
அப்ப அப்ப
விழுந்து கடந்த 
வலிகளின்
விவரணத்தில்  
கல்வெட்டுப் போல
கறைகள் ... 

மயிலிறகு 
குட்டி போட்ட
ஆத்மாவின்  வரிகள்
வாடகைக்குக்
குடியிருக்கும்  
பக்கங்களில்
ஓரமாக ஓய்வெடுக்கும் 
கண்ணீர்... 

மூட்டைப் பூச்சி 
நசுங்கிய 
மஞ்சளான பக்கங்களில் 
விரக்தியை 
ரகசியமாக  
சமாளித்துக்கொண்டு
சிரிப்பு.... 

குறிப்பு 
வைத்து  திறந்த  
பிறந்த நாட்கள்
இதயத்தில் 
ரோசாப்பு செருக   
உத்தரவாதமாகத்  
திரும்பி வராமல் 
உண்டியலுக்குப் போன 
கடன்கள் 
சிவப்புப்  பேனாவில்.... 

மடிந்த 
மூலைகளில் 
எதிர்பார்ப்புகள் 
தின்று  முடித்த 
ஏமாற்றங்கள்
பொறுமையாக  
அடைகாத்து
பொரிக்கத் தவறிய
வெற்றிகளை விழுங்க.. ..

கிழிந்த தாள்களில்  
பொறாமைகள்
முட்டுக் கட்டை
போட்டழித்து  
முயற்சிகள்
வாசலோடு திரும்ப்பிப் போன 
சந்தர்பங்கள்....

முடிந்து போன 
குறிப்புகளில் 
குற்றமேதும் செய்யாத  
குற்றப் பத்திரிகை
நாட்குறிப்பு ...

அதை  
இப்பவும் 
குப்பையோடு குப்பையாக  
எறிய விடாமல் 
தடுக்குது 
ஒரேயொரு பக்கத்தில்
எப்பவோ  எழுதிய   
உன் பெயர்.


பூனைகளின் உலகத்தில்..

..............................................................

வன்முறையை 

வெளிப்படையாகவே

நடுவீட்டில் நட்டு 

அமைதியைக்    

கொல்லைப்புறத்துக்கு 

இடம் மாற்றி வைத்துள்ள

பூனைகளின்  உலகத்தில்...

மாடப் புறாகள்  
" எனை அள்ளுங்கள் 
கதை சொல்லுங்கள்
எனை அள்ளுங்கள் 
கதை சொல்லுங்கள் "என்று
குழந்தைகளிடம்  
கெஞ்சுகின்றன... 

அமைதியைப் புறாக்கள்  
மார் தட்டிப் 
பேசிய  போதெல்லாம் 
மாட்டிக்கொண்டு
உள்ளே வரமுடியாமல்
வாசலோடு நின்றது 
சமாதானம்...

போனாப் போகுதெண்டு
ஒவ்வொரு முறையும்
ஏதோ ஒரு
பொய்யைச் சொல்லி
பொய்களுடனேயே வாழ்ந்து  
குழந்தைகளை 
வீணாகப் போக புறாக்கள் 
விடவேயில்லை... 

ஏமாற்றுவது 
எப்படியென்று   
அந்த வீட்டின் 
பூனைகளுக்கு 
தெரிந்திருக்குமென்று 
ஆரம்பத்திலேயே  
சந்தேகப்பட நியாயம் இல்லை..  

ஒரு நாளின் நடு இரவில்
பூனைகள் 
தியானத்தைக் கழட்டி வைச்சு
பதுங்கிப் பாய  
புறாக்களின் 
கடைசி அலறல் 
தொண்டையைக் 
கிழித்ததிற்கு   
முதல் நாளும்,  

மாடப் புறாக்கள் 
" எனை அள்ளுங்கள் 
கதை சொல்லுங்கள்
எனை அள்ளுங்கள் 
கதை சொல்லுங்கள் " என்று 
குழந்தைகளிடம்  
கெஞ்சியிருக்கலாம் !

எழுத எதுவுமே இருப்பதில்லை..
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஒரு கட்டத்துக்குப் பிறகு 
வெற்றுத்தாளின்
நாலு மூலைகளை 
நாடியத் தடவி
இவர்களை  
வெறித்துப்பார்ப்பதைத் தவிர
அவர்களுக்கு 
எழுத எதுவுமே இருப்பதில்லை.......
பூனையின் ரகசிய  

மவுனம்,

பறவையின் சந்தேகப்  
பார்வை, 
காற்றின்  பிரத்தியேக 
வாசம், 
உண்மை  மறைக்கும் 
உறவு,
மினு மினுக்கும்  
பொய்கள்,
நடித்துக்  களைத்த  
நட்புக்கள் ,
அழுத்தம் தாங்கும் 
ஆத்மா, 
அடங்க மறுக்கும் 
கோபம்,
அலையாகப்  பாயும்
ஆசைகள்..... 

இதில ஏதோ ஒன்றுபோலக்  
குழப்பமாக நினைவுகள் 
இவர்களுக்கும்
அவர்களுக்கும்
நடுவில் விரியலாம்....

இவர்கள்  
நினைக்கும் முடிவை  
அவர்கள்  மொழிபெயர்க்கும்
நின்மதி விரட்டப்படும்  
இடைப்பட்ட 
சின்ன இடைவெளிகளில்
ஒரு இதயம்
அநாதையாக  
இறந்துகொண்டும் இருக்கலாம்

திட்டமிட்டு திசை மாற்றியது..
.....................................................................................
ஏதோவொரு

கோடை நாளின் முடிவில்  
தொலைத்த 
நினைவுகளை 
உரசிப் பார்த்து
உன்னைத் தேடியெடுத்து  
உனக்கு 
விருப்பமென்றால் 
உன்  தொடர் கதையை 
நானே எழுதுகிறேன்..

ஆனாலும் 
முதற்  பக்கத்தின்  
எண்ணங்கள் 
கடைசி வரி வரைக்கும் 
பசுமையாக 
இருக்குமென்று 
உத்தரவாதம் 
தரவே  முடியவில்லை..

உன் 
தேவதை  வாழ்க்கை  
எப்படி தடம் மாறியதோ 
அதைவிட அபத்தமா 
உன்னைச் சுற்றி
வளர்த்த   உலகம்
" திட்டமிட்டு திசை மாற்றியது "
கதையின் தலைப்பு...

நீ 
அதனோடு ஓடியதை 
எழுத முடியாவிட்டாலும்,   
அதைக் 
கடந்து ஓடியதை  
உனக்கு விருப்பம் தராமல்
இருந்தாலும்
உன் ஒப்புதலின்றியே 
அந்தக்  
கதையிலாவது  
உன்னைக் காப்பாற்றி 
எழுதி முடிக்கத்தான் 
போகிறேன்.

வெண்பனிக்கு நடிக்கத் தெரியாது ...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நேரம் தவறி 
நேற்று  இறங்கிய 
பஞ்சுகள்  
நிலத்தைத் 
தொட முன்னமே
காற்றைக் குளிரவைத்து  
நனைந்து கொண்டே 
மறைந்து  போனது ....

பழைய 
நினைவுகளில் 
தேடிவந்த கொஞ்சம்   
நன்றியுணர்வோடு
கொஞ்ச நேரம்  
ஜன்னலில் தொங்கியது...  

பிடிவாதங்கள்
தாக்குப்பிடிக்க முடியாத 
உருகு நிலையில்      
அதன் மரணம் 
அங்கீகரிக்கப்பட
வாசலில் 
அது விழுந்ததுக்கு
அடையாளமேயில்லை ... 

சிரித்து 
மழுப்பிச் சமாளித்து
வெளிப்படையாக 
சினந்து கொள்ளாமல்
உரு மறைப்பில்   
இன்றிரவு சிலநேரம்
அது  இரகசியமாக இறங்கலாம்...

பிறகென்ன 
காலையில் காலில் நசிபடும் 
நானோ 
திட்டித்தீர்த்துவிடவேண்டுமென்று 
மிகவும் அகோரமான 
கெட்ட வார்த்தைகளைத்  தேடுவேன் 

வெண்பனிக்கு 
நடிக்கத் தெரியாது 
அது   
கொட்டுவதுக்கும்  
ஓய்வதுக்கும்  
தன்னளவில்த்  தயார்ப்படுத்திக்   
காரணங்கள் வைத்திருக்கலாம். 

வேற எதுவுமே முக்கியமா இருக்கக்கூடாது...

.........................................................................................
இப்போதைக்கு 
வேற எதுவுமே
முக்கியமா இருக்கக்கூடாது
என்பதுபோல
குளிர்  மெல்லியதாகக்  
குத்தத்தொடங்குது... 
ஒற்றுமையாகக்
கை கோர்த்த  
மேகக் கூட்டங்கள்  
மிகத் தொலைவாக அலைய  
திறந்துள்ள
பால்கனியின் கீழே 
எச்சரிக்கை ஏதுமற்ற  
சத்தங்கள்....

இருள் நேரத்தோடு 
இழுத்து விரித்தாலும் 
இப்பொழுதும்
விழித்தேயிருந்து 
வெளிச்சத்தை வெறுக்கும்
வௌவால்கள்  போல்
இரவும்  வெறுக்க வைக்குது.. 

மாடி வாசலில் 
ஆம்ஸ்டர்டாமிலிருந்து
இடம் பெயர்ந்த   
டுயூலிப்  மலர்களும் ,
ஸ்பெயினில் இருந்து
புலம் பெயர்ந்த 
குங்குமப் பூக்களும் 
கடைசி வெப்பத்தை  
தாமதமாக ரசித்து 
இசை பாடுகின்றன.. 

மனிதர்களைத் தெரியாது
இறுக்கி மூடிய
ஜன்னல் வழியாக
ஒரேயொரு குருவி
ஒரேயொரு முறை
என்னைப் போலவே 
எட்டிப் பார்த்தது... 

அதன் பார்வையில் இருந்த
பரிதாபம் மட்டும்
இப்பவும்  என்னுடன்
ஒட்டிக்கொண்டிருக்க
இப்போதைக்கு
வேற எதுவுமே
முக்கியமா இருக்கக்கூடாது.

ஒரு கட்டத்துக்குப் பிறகு...

..........................................................................
நேற்றுப் போல இருந்த 
இன்று காலை
சடார் எண்டு
பின்னுக்குப் போக
முன்னுக்கு
முந்தநாள்ப் போல
வருகுது உன்முகம் 

ஒரு
கட்டத்துக்குப் பிறகு
இளம்
பிள்ளைகள் போல
சின்ன மரங்கள் போல
வளரமுடியவில்லை
நாட்களால்....

அயல் வீட்டு
வெளிக் கதவில்
யாரோ
ஓங்கி அறையும்
பழக்கமான  சத்தம்...

டெலிவிசனில்
சிரியாவின் எல்லைகளில்
இரைதேடும்
களைத்துப் போன 
போர் வெறி விமானங்கள்...

ரேடியோவில்
ஜோன் லென்னனின்
அழகான இளம்பெண்ணே
மறந்துவிடு
பாடலில்க் கண்ணீர் ...

ஜன்னலின்
நாலு விளிம்பிலும்
புகை போல ஒத்திகை பார்க்கும் 
குளிர்காலக்
காற்றின்  உத்தேசம்.....

சமயலறையில்
வேண்டி வைத்த
மரக்கறி
நேரம் கிடைக்காமல்
வடிவம் இழக்க முன்னமே 
வாடிக்கொண்டே வாசமிழந்து..

தெருவில்
யாரோ ஒருவன்
யாரோ ஒருத்தியை
வாய்க்கு வந்தபடி
ஏதோ ஒரு பாசையில் 
திட்டிக்கொண்டு..

அதிகாலைக்
கனவில் இருந்து
வலிந்து எழும்பிக்கொண்டு
இருட்டு விடிய விரும்பாத 
நகரத்தில் ....

சென்ற
வருடம்போல தான்
இந்த வருடமும்
வளராமல்
அடம்பிடித்த திட்டங்களை
மறுபடியும் தூசு தட்ட
முதலாவதா வருகுது
உன் முகம்....! 

ஏதோ ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக்கொண்டு...
...............................................................................................
ஒஸ்லோவின் 
கடைசி வசந்தம்
மெல்லவே 
மெதுவாக 
விருப்பமேயில்லாமல் 
செலவழிக்கின்றது 
மாதங்கள் சேமித்த
இதமான  சூட்டை...

இனிப்
பின்வாங்கிய குளிர்
மறுபடியும் பதுங்கி 
வரும் நேரம் 
புல் நுனியில்ப்  
பனித் துளி 
விடைபெறும் 

விடுமுறை
உற்சாகமெல்லாம் 
வெறிச்சோடிப் போய்விட
மரங்களில் மட்டும்  
பறவைகளின்  
கலகலப்பு 

எப்போதாவது
பாதையோரம்
எப்போதேனும் 
காணும்
பூக்களை மட்டுமே 
நலம் விசாரிக்கலாம்.....

போவதெல்லாம்
போறபடியே 
போகட்டும் 
நின்று கொல்லும் 
உன்  நினைவுகள் மட்டும்
நடுங்கி நசியாமல்   
என்கூட வருமெனில்

நீளமான  விண்டர் 
உறைபனியில் 
இருள் விழுங்கும் 
இரவுகளையும்
முகம் இழந்த 
மனிதர்களையும்  
ஏதோ ஒரு 
நட்சத்திரத்தைப் 
பார்த்துக்கொண்டாவது 
சமாளிக்கலாம்..

நீ பிறந்த இன்றைய நாளில்...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நம்பிக்கையை விட
அவநம்பிக்கையே
அதிகமிருந்த
காலத்தில்  
மௌனமாய்
ஒலிக்கும் மறுகுரலாய் 
இருண் வாழ்வில்
வானம்பாடியாக  
சிறகை விரித்துப் 
பறந்த வெள்ளைப்  பறவை..

வாழத் தெரியாமல் 
வாழ்கையை 
விரித்து வைத்தேன் 
அதன் விழிம்பிலும் 
என்னோடு சேர்ந்து
நடந்தவளே 
நீ 
பதில் சொல்லவில்லை
என்றால்
என்  பாதைகள் 
வேறு மாதிரி
இருந்திருக்கக்  கூடும்... 

மதிப்பீடு
செய் என்பதில்
சந்தேகம் இல்லாமல் 
காற்றை 
விசாரிக்கக் 
கதவையும் 
ஜன்னலையும்
திறந்து வைத்தாய்..  

நீ 
பிறந்த 
நாளில்  
மன சாட்சி 
என்னையே 
வலுவாக விளாசி 
ஒரு
இடைப்பட்ட
கவிதையாக 
மாற்றி விடுகிற
நினைவுகளில்
கேள்விகள் எல்லாம்
காணாமல் போய்க்
கொண்டிருக்கின்றன..

நிழலோடு நடத்தல் ...

....................................................................................
வெய்யில்
மழை போலப் 
பரவலாக  எறிந்த
நெரிசல் நகரத்தில் 
நிழல் என்னோடு 
நிக்காமல் நடந்தது.... 

அகலமான 
தெருவெங்கும்
அளந்தளந்து  
வலது பக்கம் நடக்க
அலங்கோலமாய்  
இடது பக்கம் 
நெளிந்தது...

பாதையோரப்  பப்பில்  
பியர் குடித்தவர்களின் 
தலையைத் தடவி, 
சின்னப் பிள்ளைகளின் 
கை வழிந்த 
ஐஸ்கிரீமை நக்கி, 
தள்ளாடும் தாத்தாவின் 
கைத் தடியை 
தடுமாற வைத்துக் 
காதலர்களின் 
நெருக்கத்துக்கு 
இடையில் புகுந்தது...

ஒடுக்கப் பாதையில்
ஒடுங்கி 
உயரமான கட்டிடத்தில் 
இல்லாமல்ப் போய் 
அடுத்த 
வெளிச்சமான 
திருப்பத்தில் 
திடீரென நீட்டியது...

பூங்காவைக் 
கடக்கையில் 
அனைத்து  மரங்களின் 
இலைகள்  பிய்த்த  நிழலையும் 
நெஞ்சோடு  அணைத்து  
நலம் விசாரித்தது...

முன்னால் 
போனவளின் 
அகலமான   பின்னழகில் 
முகம் புதைத்து 
 வியர்வை  முதுகில 
மூச்சு விட்டுக் 
கூந்தலில் 
குறுந்தொகை எழுதியது.... 

கால் உளையக் 
களைத்துப் போய் 
சதுக்கத்தின் 
கதிரையிலிருந்து 
ஜோசிக்க   
அடக்கமாய்ப்  
அதுவும் 
முன்னுக்கு 
காலடியில் இருந்தது...

நான்
அன்னியப்பட்டு   மவுனமாக நடந்த 
பாதை முழுவதும் 
அதெப்படி
என்  நிழலால் மட்டும் 
எல்லாரோடும் 
சிநேகிதமாக 
இருக்க முடிகிறது ?

விலைமகளின் உலகத்தில்.....
...............................................................................
எஸ்தோனிய 
நடை பாதையில்
வளைந்து 
நிறை போதையில்
மிதந்து   
நடந்துகொண்டே 
சந்தித்த இளம் பெண் 
மிகவும் சிவப்பாகவிருந்தாள்

கை நிறைய 
வளையல்
காதில வெறுமை 
நீலக் கடல் விழிகள்
நெஞ்சில
பச்சை  பவுன் கலர் 
அலைகள்
முகம் முழுதும்  
அகங்காரம்,,

உணவகத்தின் 
இன்னுமொரு 
மூலையில்
கதிரைகளில் 
அணில் பாயும் 
ஒதுக்கத்தில்
ஒரேயொரு 
நிழல் மரம் அருகில் 
மறுபடியும் கண்டேன்..

வேறு வழியே 
இல்லாததுபோல 
கவலையோடும்  
கோபமோடும்
வெறுப்போடும் 
ஒரு மனிதனைத் 
திட்டிக்கொண்டே இருந்தாள்...  

விலை மகளின்
உலகத்தில்  
உள்ளத்தைப்
புரிந்துகொள்ள
யாராலும்  முடியாது .....

நான் 
பசியோடு  
சாப்பிடாமல் 
செய்வதறியாது
எழுந்து நடந்தேன்.

நம்பிக்கைகள் கிழிக்கப்பட்ட நாளை.......
........................................................................................
எல்லாக்  கிழமை
போலத்தான்  
ஞாயிற்றுக்கிழமையும் 
இருக்கிறது 
நாரி முறியும் 
வேலையைத் தவிர...

கவிதையோ 
கதையோ 
துக்கத்தைக் 
அதிகரிக்கக்கூடியது 
என்பதால் 
அவைகளை 
நெருங்க விருப்பமில்லை..

நின்மதியின்  
மீதான அக்கறையில் 
வழமைபோல 
அலைபேசியை 
ஊமையாக்கிவிட்டாச்சு.. 

நம்பிக்கைகள் 
கிழிக்கப்பட்ட 
நாளையின் 
நிச்சயமில்லாத
எல்லைக்கப்பால் 
என்ன இருக்கு  
என்பதைக்  
க‌வ‌னித்த‌தேயில்லை..

நெஞ்சம் முழுவதும் 
பாரம் உள்ளவர்களின்
கண்கள் முழுவதும் 
ஈரம் ஒட்டிய 
வாழ்க்கை 
எப்படியிருக்க   
வேண்டுமென்பது  
அவரவர் 
விருப்பமாக
விடிய  வேண்டுமே ஒழிய  
ஒரு திணிப்பாக 
இருக்கவே கூடாது...

ஒரு நடிகையின் நாட்கள்....
..........................................................................................
ஒரு  நடிகையின் 
வாழ்க்கை 
நடிப்பைப்போல 
சுவாரசியமா 
இருந்திருக்காது..

புழுதி கிளப்பிய 
புரவிகளின் 
பாச்சலில் 
மேக்கப் போட்ட 
சிரிப்புக்கு 
பின்னால் 
அழுகை அடக்கியே  
வாசித்திருக்கலாம்..

விழாக்கால 
அலங்கார 
மேடைகளிலோ
விருதுகளோடு  
வெள்ளித் திரையிலோ
மின்னிய பிரகாசம்
வேஷம் கலைய 
வியர்வையோடு 
வீணாகிப் போயிருக்கலாம்... 

காற்றுப் போலப் 
புகழ் புயல் அடித்த 
நாட்களில் 
நடித்த 
கனதியான 
பாத்திரங்களை விடவும்..... 
பிடித்த சில 
நினைவுகளைத் தவிரவும்....

கை தட்டல்
கர கோஷம்
அடங்கிப்போக  
சொல்லும்படியா 
ஒண்டுமே நிரந்தரமில்லை.....

இன்றிலிருந்து இன்னும் பல வருடமானாலும்....
..........................................................................................
நாடில்லாத 
ஜிப்சிக்  கலைஞன் 
தன் பூர்வீக நிலப்பரப்பின் 
உயிரைத் 
தெருவோரத்தில்  
மறுபடியும் 
எழுதுகின்றான்...  

அந்த 
இசையோ 
ஒஸ்லோவின் 
அமளி துமளியில் நுழைந்து 
இரைச்சல்களை 
அடித்துத்துவம்சம் செய்தது....

மொழியை 
அலட்சியம் செய்து
நிறத்தைக் 
ஒன்றாகக் கரைத்து  
வர்க்கமில்லாத 
ஒரு சமூகத்தை
சுற்றிவர  உருவாக்கியது..... 

அதை 
நின்று கேட்க 
நேரமில்லாத மனிதர்கள் , 
உண்மையைத் 
தெரிந்து கொள்ளும் 
சந்தர்ப்பத்தை இழந்து கொண்டிருக்க..... 

நின்று நிதானிக்கும்  
குழந்தைகள்  
இதைக் கேட்க 
உண்மையைத் தெரிந்து கொள்ள
இன்றிலிருந்து 
இன்னும் பல வருடமானாலும் 
குழந்தைகளுக்கு 
இது எப்பவுமே  சாத்தியப்படும். 

மிக அமைதியாகவும், 
மிக மரியாதையாகவும் 
மிக சுத்தமாகவும் 
மிகவும்  கலப்படமற்றும்   
இருந்த  அந்த இசை 

ஒரு நீண்ட மௌனத்துக்குப் 
பிறகு
கடந்து செல்லும்
இதயங்களுடன்  
வேறு ஒரு 
உலகத்துக்குள்  தாவிப் பாய்ந்தது.....

தெருமுனையின் வாக்குச்சாவடியில்

.....................................................................................
அறியப்படாத  கதாநாயகர்கள்
இரவோடிரவாக 
உருவாகி
நம்பிக்கையை 
உறுதி மொழிகளில் 
வைக்கிறார்கள்....

வாக்குகள் 
வித்தியாசத்தில் 
சிலரின் 
முகமூடிகள் கழட்டப்பட 
வேறு சிலர் 
புதிதாக ஆட்சி ஏறி 
அணிந்துகொள்கிறார்கள் 

சின்ன மரப்பெட்டியின் 
ஓட்டைகளின் ஊடாக  
திறந்துகொண்டு
இன்னொரு
பெரிய பெட்டிக்குப் 
போவது போல
இருக்கிறது
நாடு தழுவிய 
அதிகார மாற்றம்... 

மாறு வேஷத்தில்
தப்பி ஓடுகிறவர்கள் 
எப்பவுமே 
பயப்படக் கூடியவர்களல்ல 
வேறு ஏதோவொரு 
உணர்ச்சிகரமான
நாடகத்திற்கு
அவர்கள் 
திட்டமிட்டிருக்கக் கூடும்..

தீர்த்துக் கட்டும்
முயற்சியில் இருக்கிற
தகிக்கும்
ஒடுக்கப்படவர்களின் 
கோபத்திற்கு
எந்த திசையுமில்லை 
அதை 
ஆரோக்கியமான
மாற்றத்திற்கு
எடுத்துச் செல்ல....

வடகிழக்கிலும் 
விடியலின் 
வெளிச்சத்தில்
அவர்கள் இல்லை 
அவர்கள் முணுமுணுத்த 
தேசிய கீதத்தை 
ஏராளமாகத் 
துவக்குகள் நீட்டிய  
பலத்த பாதுகாப்பான 
வாக்குச்சாவடியில் 
பதிவுசெய்து
வெளியேறியது 
காற்று.

கணக்கில் எடுக்கப்படாத கடதாசிப் பூ

......................................................................................
வெய்யிலை 
நிரந்தரமாகவே
நட்பாக 
வைத்துக்கொண்டு 
தண்ணியில்லாக் 
காட்டிலும் 
சுண்ணாம்பு  மண்ணோடு
ஒப்பந்த அடிப்படையில் 
வேர் விட்டு....

குடாநாட்டுக்கு
எல்லா நிறங்களிலும்
கலந்து தெளித்து 
நீளமாக
விலாசம் தந்தும் 
அருச்சனைத் தட்டை 
அலங்கரிக்கும் 
உரிமைகள் 
மறுக்கப்பட்டு....

தூக்கம் வராத 
காற்றோட்டமான 
இரவில்
தூங்கப் போகாத 
விண் மீன்களுக்குக் 
காதல்க் கடிதமெழுதி
தேன் வழியும் 
மலர்களோடு 
போட்டி போட்டுத் 
தோற்றுப்போய்க்... 

காதலிக்கத் 
தேவையான
தகுதியில்  
வருடம் முழுவதும் 
வாசம் இல்லாததால் 
தீண்டப்படாமல்
வண்டுகள் 
நிராகரித்த...

மார்கழிப் 
பனி நீருக்குள்ளும் 
கண்ணீரில் 
முகம் கழுவி 
அழுது களைத்துப்
பொலிவிழந்து 
போன வரை 
கணக்கில் 
எடுக்கப்படாத 
கடதாசிப் பூ 
போகன்வில்லா.

பேசாத சிந்தனைக் குதிரைகள்...

.....................................................................................

புத்தகங்களைக்  
கடந்து  செல்பவர்களின்
புழுதி  வேகம்  
அலட்சியமாக
தள்ளி வைத்த போதும்  
அறிவுத்திறன்
இழப்பு பற்றிப் பேசாத 
சிந்தனைக் குதிரைகள்

அவைகளின் 
உபதேசங்கள் 
விரல் நுனியில்
உலா வீதி  வரும் 
உலகத்தின் 
நிர்பந்தங்களை
அவலமாகச்  சந்திக்கும் 
காரணங்களால் 
எழுத்துக்கள் 
முடிந்து விடுமோவென்ற 
அச்சத்தில் வாழ்வதில்லை

எந்தவிதச்
சூழ்நிலையையும்
பொறுத்துக் கொண்டே 
நாங்கள்
உங்களைவிடப்
பரிசுத்தமானவர்கள்
என்னும்
கபட  மனப்பான்மை
அறவேயில்லை 
அவைகளிடம்

பழங் 
கதைகளையும்
பெருங்  
கவிதைகளையும்
அருங் 
காப்பியங்களையும் 
பற்றி மட்டும்
இளமையாகப் 
பேசிவிட்டு அதற்காக
அவைகள் 
எப்படியெல்லாம் 
பாடுபட்டன என்பதைக்
கூறாமல் விடுகின்றன

அடக்கமாக இருப்பதில்
பெருமை கொள்ளாத  
தலைமுறையில் 
தம்மைப் பற்றி
என்ன நினைக்கிறார்கள்
என்பதை
அறிய நேர்ந்த போது
சில சமயங்களில்
வாசிப்பைப் பிடித்துள்ள
சோம்போறித்தனம்
அவைகளின்  
தலையைக் குனியச்செய்கிறது.

1 comment :

  1. வெண்பனிக்கு
    நடிக்கத் தெரியாது
    அது
    கொட்டுவதுக்கும்
    ஓய்வதுக்கும்
    தன்னளவில்த் தயார்ப்படுத்திக்
    காரணங்கள் வைத்திருக்கலாம். ////

    அசத்ததல் கவிதைகள் எல்லாமே .. வாழ்த்துக்கள்.

    ReplyDelete