Monday 19 September 2016

இதுதான் அது அதுதான் இது !

அது சென்ற கிழமை
நான்கே நான்கு
சின்னஞ்சிறு வெள்ளைமுட்டைகள்
இங்கிருந்து பார்க்க
பாதுகாப்பான கூட்டுக்குள்,
தாய்ப்பறவை
அடைக்காப்பதைக் கண்டதேயில்லை,
மூன்று நாட்களின்முன்
ரெண்டுதான் தெரிந்தது,
வில்லோமரம் வேறு
இலையுதிர் சதிருக்கு
ஆவேசமாக ஆடிக்கொண்டு
ஆசுவாசமாக அவதிப்பட்டுக்கொண்டிருந்தது,
நேற்று
எட்டாவது தட்டு மொட்டைமாடிக்கு
ஏறிப்போய்ப்பார்க்க
வெறுமையான கூடு
வாக்குவாதம் நடந்தது போல
கொஞ்சம் கசங்கிஇருந்தது,
இன்று
படிஎடுத்துக் கீழிறங்கிப்போய்
மரத்தினடியை நேராகவே விசாரித்தேன்.
முட்டைகள் விழுந்துடைந்த
சாட்சி சம்பவங்கள் எதுவுமில்லை !
என்ன நடந்திருக்கும் ?
நோர்வேயில் பாம்புகள் இல்லை
மரஅணில்கள் சுத்தசைவம்
குயில் காகத்தை ஏமாற்றிய
குடும்பச்சொத்துக் குழப்பங்களும் இங்கில்லை
வேற என்னதாகத்தானிருக்கும்?
ஹ்ம்ம்
பருந்தின் விருந்து ?
அதைத்தானே நீங்கள் நினைகிறீர்கள் ?
ஹ்ம்ம்
அதைத்தான் நானும் முடிவாக்குகிறேன்.!


.......................................................................................

தனியாகவே விசாரிக்க
வரிசை தவறாத
மலைவேம்புத் தட்டு அடுக்குகளிலும்
சுவர் முழுவதிலும்
பலவர்ண முகங்களில்
நிறங்களை வேண்டிக்கொண்டு
ஒரு நூலகம் ,
மயான இரவு போலவே
அமைதி பரவிக்கொண்டிருக்கும்
புத்தகங்களின்
மிகமிக நெருக்கமான கனவு
வெளியேற வழி இல்லாத
ஒருநாள் ,
தடித்த தலைப்புகளையும்
பதிவுசெய்த பெயர்களையும்
வாசித்துக் களைத்து
மேய்ந்துவிட்டுப் போன
செழிப்பான புல்தரையில்
எதைத் தேடிப்போனேனோ
அது கிடைக்கவில்லை ,
அக்கினி மூலையில்
குளிர்தண்ணித் தாங்கி
இன்னொரு சூரியமேட்டில்
இணையத்தில் உலாவரும் கணணி
அஷ்டகோணத் திருப்பத்தில்
மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
உருக்கிவடித்த வெங்கலச்சிலை
வெளிச்ச ஜன்னல்களில்
சலிப்பைத்தந்துவிட்டு
விரைந்துகொண்டிருக்கும் மனிதர்கள்,
இந்த இயலாமையின்
அடுத்த கட்டம் துன்புறுத்தல்தான்.
இனி என்ன வாசித்து
இனி என்னவரப்போகுதென்று
சமாளிக்கிறேன் என்று
முடிவுக்கு வந்துவிடவேண்டாம்
இதுக்குள்ளே
ஒரேயொரு புத்தகம்
திடீரென்று முழித்து
என் ஏழாவது அறிவை எழுப்பிவிடும் !


.......................................................................................

எதிர் எதிரே எதிராக
மேசைக்கு கீழே குத்திக் கால்கள்
தொட்டுக்கொள்ளும் நெருக்கத்தில்
சின்னதான மேசை,
அதுக்கும் அவர்களைப்
வயதாகவும் பல வருடங்களாய் சிநேகம்,
நுரை தளும்பும்
மிக உயரமான பியர்க் குவளையின்
நுனி அகன்ற விளிம்புவரை
நொதித்துப் புளித்த
மார்க்கழி மாதத்தின்
உறைபனித்துளியின் வாசனை,
ஐந்தில் ஒரு பங்கில்
மஞ்சள் நிறத் திரவம் நிறுத்திக்கொள்ள
மிச்ச ஒரே பங்குக்கு
வெள்ளைத்தைத் தொப்பியாக
எழுந்து விசாலித்துக்கொள்கிறது
சின்னக் குமிழி வட்டங்கள்,
இளம்பெண்ணின்
இடுப்பு வளைவுகளை உவமிக்கும்
வன் கண்ணாடியில்
அந்த மதுக்கிண்ணங்களை
அந்த நால்வரும்
கிளிங் கிலிங் கிளிங் என்று
திராட்ஸைரஸ ஷாம்பெயின் கிண்ணங்கள்போல
உட்சாகமெடுத்து உரசவில்லை ,
வளமிடமாக ரெண்டுபேர்
உள்ளங்கைப் பரிவில்
கிளாஸின் நாபிக்கமலத்தை அணைத்துக்கொண்டிருக்க
மற்ற இரண்டு பேரும்
உலகளந்து ஊதிச் சுழலவிட்டுப்
புகைத்துக்கொண்டிருந்தார்கள்,
நான்கு பியர்க் கிண்ணங்களுக்கும்
அவர்கள் ஒருவரோ ஒருவரோடு
கதைக்கவேமாடார்கள் என்பது தெரியும் போல
அந்த நெருக்கடி தெரியாமல்
இந்தப் பக்க மூலையில் இருந்து
நானோ
சலனமான இரைச்சலை எதிர்பாத்து
அந்த மாலை முழுவதும்
ஏமாந்துபோனேன்.

...............................................................

நடு நேர நிசியிலா
அல்லது
விடி அதிகாலையிலா
அந்த மெட்டு நுழைந்ததென்று
சரியாகத் தெரியவில்லை,
பெருமூச்சொலிகளின்
வெப்பம் மெல்லவே உருவாகி
குளிர்ந்துபோக வழியின்றி
திசைகளைத்
திணறவைத்துச் சுழன்றடித்து,
அபஸ்சுரங்களின் மேவல்
மேகங்களற்ற
வானப்பெருவெளியை முட்டிமோதி
நிலையாமையின்
அபத்தங்களை உணர்த்தி,
பதின்வயது
முதல்க்காதலை முத்தமிட்டு
நனைந்த கூந்தல்
தீண்டிக்கொண்டிருக்கும் சுவையோடு
உள்ளிறங்கி உறவாடி,
பிரத்தியேகமான ஊடல்
வாசனைகளோடு அத்தனை அருகாமையில்
நினைவுகளில்
எங்கோ காணாமல்ப்போன
ஒரு வாக்குறுதியை மீட்டெடுத்து,
பருவகாலங்கள்
அவசரத்தில் விட்டுப்போன
அந்தரங்கத்தில் நடனமாடி
ஸ்பரிசத்தின் தொடுகைக்குள்
பரவசத்திற்குள்ளாக்கிவிட்டு
கனவு முடிவதுக்குச் சற்றுமுன்
போயேபோய்விட்டது!
இவளவுதான்
அந்த மெட்டில் நினைக்கமுடிகிறது !


.................................................................................

தொடர்மாடி
வெளிக்கதவு திறப்பதுக்கும்
வாசல்படியைக் கடப்பதுக்கும்
இடையில் எட்டி வைப்பது
எப்பவுமே
நாலு செக்கன்கள்தான்,
திட்டமிடல்கள் நெருக்கமான
சந்து ஓடை போலிருக்கும்
வெளிச்சமிதப்பு வரண்டாவில்
மொத்தக்கம்பளம்
நீட்டி விரித்திருக்கிறார்கள்,
எனக்கு முன்னே
வேகமாக வெளியே போனவளின்
துவட்டாத கூந்தலின் சம்பூ
மூக்கைச் சுரண்ட
பிரத்தியேக நாட்கள்
விட்டுச்சென்ற வாசனைகள்
படிந்திருக்கும் காற்றில்
திடுக்கிடும் கற்பனைகள்.
சடார் படார் சடாரென்று
திறந்து பறந்துகொண்டிருக்கும்
கதவண்ட்டையில் நின்று
யாருமே
திசைகள்தேடுவதைக் கண்டதில்லை,
பளிச்சென்று
வெளியே வெய்யிலா மழையாவென்று
கண்ணாடி முகத்தினுடே
காலநிலமையைப் பார்த்து
அம்புகள்போலவே பாய்வதில்
அவசரம்பற்றிய
குறுக்கீடுகள் எழுகிறதுமில்லை,
இப்படியானவொரு
ஆத்மயுத்த ஆர்ப்பரிப்பு நாள்
கதவு திறந்து மூடுவதை
சுவாரசியமாக ரசித்துக்கொண்டிருந்தேன் ,
கதவின் கைப்பிடியில்
மெல்லவே தள்ளித்திறந்த
இரக்கமுள்ளவர்களின்
உள்ளங்கை ரேகைப் பதிவுகள்,
அயோக்கியத்தனம்
இரகசிய அசைவுகளில்
ஆடி ஆடி அடங்க
என்னைக் கேள்விகளால் விலத்தி
சிலர்தான்
சந்தேகமாகப் பரபரத்தார்கள்
அல்லது
எனக்குத்தான் அப்படித் தோன்றியதா ?


.................................................................................

காற்றோடு
காதுநுனியில் சுண்டிக்
கதைத்துக்கொண்டு
சுமாரான வேகத்தில்தான்
துவிச்சுக்கொண்டிருந்தேன்
விசுக்கென்று சின்னவள்
என்னை முந்திக்கடந்தாள் ,
மூச்சு இழுத்து
விபரமாகப் பார்ப்பதுக்குள்
விசை எடுத்துப்
பின்வாங்க வைத்தாள்,
சிவப்பு விளக்கில் நின்றபோது
அவளுக்கு
முன்னுக்கு நிறுத்தினேன்,
அடுத்த நிறுத்தவிளக்கிடையில்
செடில்பிரெட் குதிரைபோல
கூந்தலைப் பறக்கவிட்டு
மீண்டும் முந்தி விட்டாள்,
நதிபோலவே
தெருவழியும் நகர்ந்துகொண்டிருக்க
நான் வளையவேண்டிய
வட்டச் சதுக்கத்தை
அவளும் வளைத்தாள்,
திரும்ப நினைத்த திருப்பத்தில்
அவளும் திரும்பினாள்,
என் நிலையறிந்து
பாதை இறக்கக்கோணத்தில்
இறங்கிக்கொண்டபோது
வென்றாகவேண்டுமென
அசுரமாக மிதிக்க நினைத்தேன்,
என்
உந்துருளி போட்டிவேண்டாமென்று
கெஞ்சியது
ஆண்மை வைராக்கியமாக அதை
அலட்சியப்படுத்திய நேரம்
பிடிக்கவேமுடியாத தூரத்தில்
ஒரு புள்ளிபோல எங்கேயோபோய்விட்டாள்
என் வயதைப் போலவே.!


.............................................................................................

திசைமாற்றங்களை
மயக்கிவிடும்
மனப்போராட்டங்கள்
நிகழ்த்தும் புறநிகழ்வுகள்
புரியமுடியாமல் சலிப்பூட்டுகிறது,
இன்னும் எத்தனை
இருட்டுத் தின்னும் இரவுகளை
தொட்டுணர்வது போலவே
அருகாமையின்றி
அகாலத்தில் கடக்கவேண்டுமோ?
இப்பவும்
கையாலாகாத அமைதிதான்
பகல்களில்
மேலும் மேலும் விசாலமடைய
வெகுதூரத்தில்
எல்லாமே நிறைந்திருப்பது போலவே
ஆசை துரத்துகிறது.
புத்திசாலித்தனங்கள்
ஜோசிக்கவிடாமல்
அதிகம் அலுப்பூட்டுகின்றன!
ஏன்
ஒரு நாள் வட்டமாக இருக்கிறது?
சதுரமாக இருந்தால்
மூலைகளிளாவது
முட்டி மோதிக்கொள்ளலாம் !
நிரந்தரம் நிறை வரம் தரும்
ஏக்கம் நிரம்பிவழியும்
கனவுப்பட்டறை
காலம் கடந்துவிட்டதால்
நிதானமாகச் செதுக்கவேண்டிய
நேரான பாதைகளைத்
தருணங்களில் தவறவிட்டு
குறுக்குவழியில்
எனக்கே எனக்காக வந்து வாய்த்திருக்கு
இந்த வாழ்க்கை.!


......................................................................................

மூச்சுக் காற்றை
ஜனிப்பில் வலுக்கட்டாயமாக
அதிகமான எதிர்பார்ப்புக்களுடன்
திணிக்கப்பட்டதுக்கு
ஆதாரங்கள் இருப்பதாக 
நினைப்பதேயில்லை

அதுவரையில்
அங்குமிங்கும் பரபரப்புடன்
அலைந்துகொண்டிருந்ததை
பிரசவவேதனையில்
பிடித்திழுத்து
அம்மா
உள்நுழைத்த விபரங்கள்
எனக்குத் தெரியாது
முதல்ச் சுவாச சத்தம்
கரடுமுரடான பாதையில்
பேரிரைச்சலுடன்
ஒலித்து
மேலும் அதிகரித்து
இடித்துப் பிளந்து
முன்னேறிய நேரம்
கையைக் காலை வேகமாக வீசி
ஈனக் குரலெடுத்து போன்ற
வர்ணனைகளும் தெரியாது
இப்போதெல்லாம்
ஆழ்ந்த அசதி உறக்கத்தில்
சிலநேரங்களில்
அது
ஒவ்வாமைகளை சுட்டிக்காட்டி
ஓய்வெடுக்கவிரும்புவதுபோலவே
பின்வாங்கும் போது
கண்கள் உணர்ந்து
திடுக்கிட்டு விழித்துவிடுகின்றன
இந்த நிமிடம்வரையிலும்
அது
என்னைவிட்டுப்போனதில்லை
அதுக்கும்எனக்குமான
உடன்படிக்கைகளும்
இன்னுமே கிழிக்கப்படவுமில்லை
அதனால்தான்
அதன் ஜீவநதிப் பெறுமதி
தெரியாமலிருக்கிறேன் போலிருக்கு.!

...........................................................................................

மரஅணில்கள்
நாலுதான் எனக்குத்தெரிந்தது
வேறுசிலவும்
அடிமரத்தின் பிடியில்
மறைந்துகொண்டிருக்கலாம்
அதுபற்றிய ஆராய்ச்சி
அக்கணம் முக்கியமில்லாமலிருந்தது
மற்ற மூன்றும்
இலை வளைந்த கிளையில்
பாரம் ஏற்றிவைத்து
ஊஞ்சல்க் காற்றிலாட
நாலில் ஒன்றுதான்
அதிகம் நெருங்கிவந்து
என்மூச்சு வாசத்தை
தற்காப்பாகவே தள்ளிநின்று
விசாரித்துவிட்டு
சடாரெண்டு பின்வாங்கிவிட்டது
பட்டைமர நிறத்துக்க்குள்
உருமறைத்துக்கொண்டிருந்த
நோர்வே அணில்களின்
வளைகோணிய முதுக்கில்
அயோத்தி ராமனின் நேசம்மிகு
காலம் போட்ட பாலத்தின்
மூன்றுகோடுகள் இருக்காவென்று
விலத்திவிலத்திப் பார்த்தேன்
அடப்போங்கப்பா
ஒரு மண்ணுமில்லை
அடர்த்தியான அதன் வாலில்தான்
மிதிலைமன்னன் மகளின்
விரிசடைக் கூந்தல் இருந்தது!

......................................................................................

மிகப்பெரிய கவலை
பொறுமை இல்லை என்பது
தேவைக்கதிகமான
நல்லவொரு பிம்பத்தை
சுமந்து கஷ்டபட்டு கொண்டே
ஒரு சீரழிந்த
அவசர வார்த்தையோடு
நிமிர்ந்து நிற்கவேமுடியாத
எல்லா புரிந்துணர்வும்
மெல்ல வெளியேறிவிடுகிறது

நாட்டாண்மை
தன்னால் வந்து விட.
எதை எழுத வேண்டும்,
எப்போது முடிக்க வேண்டும்
எது அவமானம்,
எது அகங்காரம் என்று
தீர்ப்பு நெருங்கிவருவதும்
நல்லாவே தெரிகிறது
சமயம் பார்த்து
அனுஸ்டானங்களையும்
முகஸ்துதிகளையும்
முட்டிபோட்டு ஆதரிப்பதில்லை
அதனால்தானோ என்னவோ
அதன் ஆதியந்த
எல்லைகளளும் தெரியாமலேயிருகிறது
விட்டறுப்புகளில் இருந்து
வெளியேறாமுடியாத
காழ்ப்புணர்ச்சிக்கு
என் நல்ல பக்கம்
பொறுப்பில்லையென்று அன்பின்
மொழியில் சொல்கிறேன்
அவலமான காலமே
என்னை அமைதியாக இருக்கவிடு
தோல்வி அடைந்ததை
கொள்கைரீதியாக ஏற்றுக்கொள்
கருணை இல்லாதா கதை
இப்படிதான் முடியவேன்றுமென்றால்
எவளவு தேவையோ அவளவு
மன்னிப்புக்கேட்கிறேன் !

........................................................................

படுக்கையறையில்
நடனமாடும் குழல்விளக்குக்கு
எவளவு திமிர் என்று
உங்களுக்குத் தெரியவாய்ப்பேயில்லை,
பின்னிரவில் 
ஒரு புத்தகமதன் வெளிச்சவிலாசத்தில்
வாசித்ததேயில்லையென்று
அதுக்குஅடங்காத கோபம்
நான்
என்னதான் செய்யமுடியும்
பெருவிரல்களில் எச்சில் ஒற்றி
தாள்களை நுனியில் விழித்து
பக்கங்களை விரித்துகொண்டே
கனவோடு நேரிடையாக நெறிபோடும்
பழக்கத்தைவிட்டு வெளியேறி
முப்பது சொச்சம்வருடங்கள்,
ஆனாலும்
இப்பவும் அலாரமடிக்கும் மணி
அதன்கீழேதான் இருக்கிறது
அது இன்னும்
மண்டியிடவைக்கும் அவமதிப்பாம்,
உள்ளாடைபோலவே
குஞ்சரங்கள் தொங்குமதன்
நினைவு ஓரங்களை
என் வசதிக்கு என்றுமே
வாவென்று வலித்ததில்லை,
முடிந்த நாட்களில்
தடவித்தடவி
பக்கச்சார்பற்றுத் துடைத்தும் விடுகிறேன்.
இருக்கும் இடத்தில
இரவெல்லாம் இயல்பாவேயிரு
என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
அது திமிறிக்கொண்டிருக்கு.
என் பொறுமைமீறும்
ஒருநாளோடு அது இனி இருக்கப்போவதில்லை
அதன்பின்
மெழுகுதிரிகளை ஏற்றிவிட்டு
வாசமோடு பார்த்திருப்பேன்
வீடே எரிந்தாலும் பரவாயில்லை!


...........................................................................

கோடைமுழுவதும்
ஏரிக்கரை வழித்தடங்களில்
கூடவேவந்த
மென்தோல் சப்பாத்து
நேற்றுமாலை
குறுனிக்கற்கள்
உருண்டு உரசும் பாதையில்
அதன் கடைசிப்பிடிப்பையும்
கால்தவறிய கணத்தில்
நிலைதடுமாறிய நொடியில்
கைவிட்டது,
என் நடைப்பயணங்களில்
என்னைவிட அதுவே
மூச்செடுத்து
நடந்து கடந்திருக்காலம்,
பொதுஇடத்தில் கழட்டிவிட்டால்
களவுபோவதில்லை என்பதில்
என்னைவிட யாக்கிரதையாகவிருக்கும்,
அதுக்கு
ஓய்வுகொடுக்காமல்
ஓடிக்களைத்த தூரங்கள்
அதன் எதிர்கால
ஒத்திகைகள்போன்றிருக்கலாம்,
வெய்யிலோடு
அலைந்த நாட்களில்
அதுக்கும் வியர்த்துவிடும்,
சதுப்புநிலத் தப்புத்தண்ணி
சேறள்ளிப் பூசினாலும்
சகிப்புதண்மையோடிருக்கும்,
அடுக்கிவைக்கும் தட்டில்
அருகிருக்கும்
அழகானஉறைபனிக்கால
வன்தோல்ச் சப்பாத்தின்
குளிர்தாங்குதிறனை
அது கண்டுகொள்வதில்லை
என்
காலுக்குள் மிதிபட்டத்தைதவிர
பெரிதாகவேறெந்த
கவுரவக்குறைச்சலையுமது
சந்திக்கவில்லை என்பதையும்
ஒத்துக்கொள்கிறேன்!


......................................................................................

தீராதபரவசங்கள்
ஒரு
ஜன்னல் திரைச்சீலை இழுப்பில்
விரிந்துவிடுமென்றால்
நம்பக்கடினமாக இருக்கிறதா?
அப்படித்தான்
மேருமலைத்தொடர்ச்சி
மேற்க்குப்பக்கமாக
நிறைமாதக்கற்பிணி போலப்
ஒருக்கழித்து சரிந்திருக்கு,
கிழக்கில் விரிந்து
ஒப்பீடுகளில் ஆர்வமில்லாத
பள்ளத்தாக்கு
பாய்விரித்துப் படுத்திருக்கு,
பகல் முழுமைக்கும்
பச்சையாகவே இருக்கும் மலை
இரகசிய இரவுகளில்
இன்னுமொரு மோகவடிவத்திலிருக்கலாம்
அதன்உயரங்களை அளக்க
நடந்தே போனால்
மலை காணாமல்போய்விடும்
வேறுபல மலைகள் சட்டென்று
சுற்றிவர எழும்பிவிடும்,
சாமத்தில்
ஒருசிவப்பு விளக்கு அதன்
தலையைக் கைப்பற்றிக்கொண்டிருக்க
உறைபனிக்காலமெல்லாம்
வெள்ளையாகி
விதவையாகிவிடும்,
விபரிப்புக்களில் அதிகம் கற்பனைகளை
எடுதுக்கொடுக்காத
பள்ளத்தாக்கின் கதை
கவர்ச்சிகரமான வரிகளில் இல்லை
என் விருப்பங்களெல்லாம்
பள்ளத்திலும்
என் தோல்விகள் ஒண்றாகி
உயரத்திலும்
எதிரெதிர் துருவங்களாக மாற
இரண்டையும் பார்க்கும்போதுதான்
எப்படியோ
கொஞ்சமாவது பின்வாங்கிவிடுகிறது
தனித்த மனச்சுமைகள்!


........................................................................

எப்போவாவது
ஒரு அவதியற்ற நாளில்
ஒரு அலாதியான பொழுதில்
பல்கனியில்
பூமிப்பந்தெங்கும் ஒரு பங்குகேட்டு
மூச்சுமுட்டிக் காற்று வேண்டுவது,
முன்னுக்குப் பின்னாக
முரண்பட்டுக்கொண்டு
தேவையான அளவில்
படம் போல வெளித்தோற்றம் காட்டும் ,
தற்பெருமைக்களைத்
திறந்தே வைத்திருக்கும்
அதிகப்பிரசங்கித் தருணங்களிலும்
உப்பரிகை
ஓவியம் வரைந்து வைத்திருக்கும்
பருவச் சமநிலைகள்
என்றுமே விலாசம் தவறியதில்லை,
தளிர் உயிர்ப்புக் காலத்தில்
கோடை வெய்யில் வெறுப்பேற்றும் போது
மஞ்சள் இலையிறப்பு மாதங்களில்
உறைபனி வெருட்டும் இருட்டிலும்
பூசி மெழுகி ஒப்பேற்றிவிட
அதனிடம்
இரகசிய நிறங்கள் இருக்கு,
அடிக்கடி
கருக்கொண்டு கருக்கலையும் மேகம்,
நெடுந்துயர் நீண்டு படிந்த
தாரமிழந்த பள்ளத்தாக்கு,
துங்காமணிவிளக்குகளில்
நடனமாடும் நகரம்,
நீலக் கடலில்
மாங்கல்ய அம்மன் பொட்டுபோல
ஒஸ்லோ துறைமுகக்கழிமுகம்,
பால்கொடுக்கும் மார்பகம்போல
பெருத்துப்போன மலைகள்,
மழையை மறக்காத
பூங்காவன மரங்கள்,
ஹ்ம்ம்
ஒரு சிகரெட்
ரசித்து ஊதிமுடிப்பதுக்குள்
இவளவும் இயல்பாகக்
கவனிக்கமுடியுமென்றால்
மிச்சத்தை நீங்களே ஊகியுங்கள்!


......................................................................................

நள்ளிரவு முழுவதும்
நிமிரமுடியாத

நாரியைப் பிராண்டும் உளைவு
உடல்ச் சூடு கூடியது
கண்விழித்த போது எரிச்சலாகியது.
ஊரைக் கூட்டிக்கொண்டுவந்து
ஒப்பாரி வைத்தபடி
வெளியே மழை,
மலைப்பாம்புபோல
தினவெடுத்த தோள்கள்
களைத்துப்போய்விட்டது,
காற்றின் வெறுமையில்
உரத்துக் கதைத்தபடி
நேரங்கெட்ட நேரத்தில் கேடுகெட்ட குடிகாரர்,
ஜன்னல்களை அடித்துச்சாத்தியும்
குங்குலிய வாசனை போலவே
பொட்டுப்போட்டு உள்நுழைந்து
சுற்றிக் கொண்டது குளிர் .
கட்டுப்பாடு இழந்துபோக
நடுங்க ஆரம்பித்தது தனிமை,
ஒன்றும் செய்யமுடியாமல்
தூக்கமில்லாத தூரத்து விளக்குகளைப்
பார்த்துக்கொண்டிருந்தேன்,
எப்போதும்
அற்பமான கேள்விகளை
வைப்பாட்டிபோல அருகில்
உறங்கவிடாமல் வைத்திருக்கிறது
விடியாத இரவு .
அதன்
விசாரணையில் சிக்குண்டு
சூனியத்தில் விழுந்துகொண்டிருக்க
வடக்குவான வெளிச்சம்
ஒருகணம் துலக்குவது போலிருக்கக்
கவிதை எழுத நினைத்தேன்,
மறுபடியும்
அசதியாக்கிய நித்திரை
அதைப் பறித்துக்கொண்டுபோய்விட்டது!


..........................................................................................

என்
சுயசரிதையில்
நானாவது உண்மையாக இருப்பேனா
என்பது
நிகழ்வுகளின் நம்பகத்தன்மையில் 
மிகைப்படுத்தப்படாத
ஒரு மொழியில் ஜோசிக்கிறேன்.
புனைவுகலோடே
பின்னிக்கொண்டிருப்பதால்
கற்பனைகளைக்
நிராகரித்துக்கொண்டு
எப்படிக் கடப்பதென்று தெரியவில்லை,
முக்கியத்துவமற்ற
காதலித்துப் பேதலித்த
சம்பவங்கள் தொடங்கும் போதே
தோல்வியுற்ற போதும்
மறைத்து எழுதினால்
குற்றவுணர்வு
மிகவும் நெருங்கிவிட வாய்ப்புள்ளது.
வசீகரமான புன்னகை
மிகஅழகான பொய்கள்
நம்பிக்கைத்துரோகம்
உருமறைப்பில் சுயநலம்
தேவையற்ற பொறாமை
இவைகள் அதிகமதிகம்
விரிந்து வியாபிப்பதை
முடிந்தவரையில் தவிர்க்கவேமுடியாது,
தவறியும்
ஆளுமையான தனித்தன்மைகள்
இருக்கவாய்ப்பேயில்லை,
சமாளித்துப் பின்வாங்கிய
சந்தர்பவாதங்கள்
சபையேறி சாட்சிகொடுக்கலாம்,
பிடிவாதத்தன்னுணர்வு
இறந்துகொண்டிருப்பதால்
போகிறபோக்கில்
சில விசியங்களை ஒத்துகொள்வேன்,
வெட்கத்துக்கு
வயதாகிவிட்டதால்
ஏமாற்றிய சந்தர்பங்களை
வாய்விட்டு ஒப்புக்கொடுப்பேன்
தந்திரமாக
ஒளித்து வைக்கப்படும்
உண்மைகளுக்கு நடுவில்
வாசித்துமுடிக்கும்போது
சத்தியமான சோதனையில்
ஒரு இடத்திலாவது
நான் நானாகவேயிருப்பேன்
அது போதும் !


...................................................................

எல்லாவற்றையும்
விசாரணைக்கு உட்படுத்தும்
பிரபலமில்லாத
பிரெஞ்ச் நாவலொன்றின்
தழுவல் போலவேயிருந்தது
அந்தத் திரைப்படம்,
எதற்காக நேரமொதுக்கி
அயர்ந்து சொருகும் இமைகளைக்
கசக்கிக்கொண்டு
பார்த்து முடித்தேனோ
அதன் உத்தரவாதம்
காட்சிக்குக் காட்சியாகி விரிந்த
தடுமாற்றங்களில்
என்னையும் விழுந்துவிட வைத்தது,
இலட்சியமான
மூலத்திரைக்கதையில்
மோசமான குரலில்
சுமாரான தோற்றமுடைய
தனியொருத்தி
மேடை ஏறிப் பாடகியாகிறாள்
அதுவும் முடிவில்தான்,
அந்தரங்கமான
ஓரினச்சேர்க்கையில்
அதுவரைக்கும்
மனதின் போர்வைக்குள்ளிருந்த
இன்னொருத்தி
அவளை விழுத்தினாளென்பது
உபகதையில் கவனம் பெற்றுவிட்டது,
உரையாடல்கள்
எதிர் பாலினங்களின்
அர்த்தமிழக்கும் தருணங்களிலும்
முகபாவனைகள்
அசையவிடாமல் கட்டிப்போட்டது,
பொறாமையிலும்
காதலைப் பாடலோடு மோதவிடும்
ஒரு காட்சியில்
மொழிபுரியாத பார்வையாளனுக்கும்
உலக எல்லைகள்
அந்தரத்தில் விரிந்துகொள்ள
காதலியும் காதலியும்
மறுதலிப்புக்களற்ற
முத்தங்களை
ஸ்பரிசிக்கத் தொடங்கும்போது
படம் முடிந்துவிட்டது.!



2 comments :

  1. தந்திரமாக ஒழித்துவைக்ககப்படும்
    உண்மைகளுக்கு நடுவில்
    வாசித்து முடிக்கும் போது
    சத்தியமான சோதனையில்
    ஒரு இடத்திலாவது
    நான் நானாகவே இருப்பேன்....!!!

    அருமையான கவிதைகள்

    ReplyDelete
  2. தந்திரமாக ஒழித்துவைக்ககப்படும்
    உண்மைகளுக்கு நடுவில்
    வாசித்து முடிக்கும் போது
    சத்தியமான சோதனையில்
    ஒரு இடத்திலாவது
    நான் நானாகவே இருப்பேன்....!!!

    அருமையான கவிதைகள்

    ReplyDelete