Thursday, 19 May 2016

உதிரிப்பூக்கள்....

காலம்  ஒரு  நதிபோல .அது ஓடிக்கொண்டேயிருக்கும் . அதன் கரைகளில் நிறைய சம்பவங்கள் நடந்தாலும் எல்லாவற்றிலும் கதைகள் ஒரு அடியாழத்தில் சலசலப்பு இல்லாமல் இருக்கலாம். அதை என் உள்ளே இறங்கி வெளியே எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கும் ஒரு சின்ன நினைவு பலசமயங்களில் சிலவற்றை எழுதிவிட உற்சாகம் கொடுக்கும் .
                                                        
                                                   எங்கள்  ஊரில்  சின்னவயசில நான் மாலை கட்டுவேன், எங்கள் வீட்டுக்கு முன்னால  வசித்த என் வயதுள்ள ஒரு பெண் ,எப்படி வாழை நாரில , மலர்களை அசங்காமல் , கசங்காமல் அடுக்கி , மலர்களின் நிறங்களை வேறுபடுத்தி, இடை இடையே பச்சை இலைகளை வைத்து , கடைசியில கொத்தாக மலர்களை இணைத்து குஞ்சரம் போல  தொங்கவிட்டு  எப்படி மாலை கட்டுவது எண்டு,  அந்த வித்தையை எனக்கு காட்டித் தந்தா  !                                                   

                                            அதலா என்னோட அம்மா ஊருக்குள்ள அயல் அட்டையில் நடக்கும் சாமத்திய வீடுகளுக்கு ,கலியான வீடுகளுக்கு,  "என்னோட மகன் நல்லா மாலை கட்டுவான் " எண்டு சொல்லுறது மட்டுமில்லை, மாலை ஓடரும் எடுத்துக்கொண்டு வருவா! நான் பூ எல்லாம் புடுங்கமாட்டன் எண்டு அவாவுக்கு தெரியும், அதால அவாவே ஒரு கூடையை எடுத்துக்கொண்டு வீடு வீடாப் போய் ,சுவரிலையும் ,வேலியிலையும் தொங்கி தொங்கி பூ எல்லாம் புடுங்கி கொண்டு வந்து தருவா மாலை கட்டசொல்லி, நான் முதலில் எல்லாப் பூகளையும் முகர்ந்து பார்த்து , அவைகளின் அழகை கொஞ்சம் ரசித்துப் பார்த்து, அப்புறமா மாலை கட்ட தொடங்குவேன்!                                       

                                      நான்  முக்கியமா சாமத்திய வீட்டுக்கு ஸ்பெசலா "ஆண்டாள் மாலை" கட்டுவேன். கலியான வீட்டுக்கு மணமகளுக்கு சடைநாகம் , மணமகன் மாங்கல்ய மாலை , சரஸ்வதிப் பூசைக்கு  வாடா மல்லிகையில்   சின்ன மாலை , கோவில் திருவிழாவுக்கு போகும் தாவணி போட்ட இளம்  பெண்களின் கூந்தலுக்கு கனகாம்பர ஒற்றைச் சர மாலை, இப்படி  எனக்கு  பிடித்த மாதிரி கட்டுவேன்.

                                       தொழில் ரீதியாகவோ, கோவில்களில்  முறைப்படி  கட்டுபவர்கள் போலவோ  எல்லாம்  கட்டுவது  இல்லை. ஆனால் அயலட்டையில் தரமாக  இருக்கு  என்று சொல்வார்கள் அதைவிட  அதை  எல்லாம் ஓசியில் தான் கட்டிக்கொடுப்பேன்,ஆனால் மாலையில் விதம் விதமான பூக்களை "colour combination" இல் கற்பனையில் இணைப்பதில் ஒரு " த்ரில் "இருந்ததால்,எனக்கும் அதில நல்ல விருப்பம், வெளிநாடுக்கு புலன் பெயர்ந்தபின் ஒரு நாளும் சந்தர்பம் கிடைக்கவில்லை மாலை கட்ட!                           

                                          பல வருடம் முன் ஒரு நாள் ஸ்வீடனில் நான் வசித்த சிட்டியிடில் இருக்கும் பாரிய கடைத்தொகுதி அங்காடியில் இருந்த மலர்கள் விக்கும் கடையின் முன் ஒரு போட்டி வைத்தார்கள், வேறு பல பூ கடைகளில் வேலை செய்யும் இளம் பெண்கள் தங்கள் " பூ அலங்கரிப்பு திறமைய " காட்டும் ஒரு நிகழ்வு அது, வாசமில்லாத, வாசமுள்ள  பலவண்ண நிற மலர்கள் குவிந்து இருக்க அந்தக் கடையே மலர்த் தோட்டத்துக்கு நடுவில் இருப்பது போலிருந்தது  

                                     நான் அதை தற்செயலாக  கடந்து போகும் போது அவர்கள் அலங்கரிப்பு செய்த மேசையின் கீழே நிறையப் பூக்கள், உதிரிப்பூக்கள் போல சிதறிக் கிடந்தன. நிராகரித்த அந்த மலர்களைப் பார்க்கப் பாவமாய் இருக்க , கொஞ்சம் தயங்கி , ஸ்வீடிஷ் மொழியில்  

                                 ",நான் அவைகளை எடுத்து மாலை கட்டவா, நீங்கள்  பாவிக்காத ,அல்லது  நிராகதித்த மலர்களை  எடுத்து  எங்கள் நாட்டு ஸ்டைலில் ஒரு அலங்கரிப்பு செய்யவா  ?"

                                                எண்டு அந்தப் பெண்களிடம் கேட்டேன், அவர்களுக்கு நான் என்ன சொன்னேன் எண்டு விளங்கவில்லை

                                        " ,  மாலையா , அப்படி எண்டால் என்ன ,,,ங்க்  , .. கீழ  கிடக்கும் பூக்களில் அதென்ன மாலை ...அங்க்...நாங்க கேள்விப்பட்டதே இல்லையே ..."

                           " அதுவும்  நீங்கள் மலர்களில் செய்வது போன்ற ஒரு அலங்காரம் தான் ,"
                                     
                                  "அப்படியா,,எங்கே  சரி  செய்து காட்டேன் ,நாங்களும் அறிந்து கொள்கிறோம் "
                                           
                                      " ம்ம்,,,பார்க்கலாம்,,மாலை  கட்ட  வாழை  நார் தேவை,,அதுதான் ஜோசிக்கிறேன் "
                                         
                                  " வாழை  நார்,,,,ஹ்ம்ம்,,அது  என்ன,,,எங்களிடம்  அப்படி  ஒன்றுமே இல்லையே "
                                             
                                 "  ஓகே, தென்னாலிராமனின்  குதிரை கனவில  சாணி போட்ட மாதிரி  ஒரு  ஐடியா  வருகுது "
                                     
                               " ஹ்ம்ம், மாலை,,,வாழை  நார்,,,,தென்னாலி ராமனின்  குதிரை.... என்னவோ  சொல்லுறாய்,, ஒண்டுமே  புரியவில்லை "

                               எண்டு மண்டைய சொறிஞ்சார்கள்! நான் வாழை நாருக்குப் பதிலாக ஒரு உடுப்பு தைக்கிற " ட்வைன் " நூலை , அவர்கள் பார்சல் கட்ட வைத்திருந்த மேசையில் இருந்து  உருவி எடுத்து, முதலில் ஒரு சின்ன மாலை கட்டதான் தொடங்கினேன் கடைசியில் அவர்களே நெறைய பெரிய பூக்கள்  கொண்டு வந்து தர அந்த  உதிரிப்  பூக்களையும் ,உதிராத அர்ச்சனைப் பூக்களையும்  எல்லாம் இணைத்து ஒரு ஆண்டாள் மாலையே கட்டி முடித்தேன்.

                                        திருச்சபை ஏறிடும் அருச்சனை மலர்களை இணைத்து மாலை கட்டிக்கொண்டு இருந்த போது அந்தப் பெண்கள் எல்லாரும் நான் எப்படிக் கட்டுறேன் எண்டு கவனமாகப்பார்க்க, சில பார்வையாளர்கள் ",க்ளிக் கிளிக் " எண்டு அவர்கள் வைத்திருந்த கமராவில் படம் வேற கிளிக்கினார்கள், உலகத்தில் மிகவும் மொடேர்ன் சயன்ஸ் தொழில் நுட்பம் முன்னேறிய அந்த சுவீடன் நாட்டு மக்கள் ஒரு மாலையில் ஆச்சரியமாகி  ,அவர்களே மரியாதையாக  மாலை பற்றிய பல விவரங்களை என்னிடம் இருந்து முடிந்தளவு கேட்டார்கள் !

                                                உலகம் எவளவுதான்  இயந்திரங்களில்  நுட்பமாக முன்னேறினாலும் ஒருவன் கையால வெறும் பூக்களை வைத்துக்கொண்டு ஒரு வித்தை காட்டுவதை சுவிடிஷ் மக்கள் ஆச்சரியமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் கவனிக்கத் தொடங்க நானும் மாலை கட்டுவது என்னவோ தேவலோக கைவினை இரகசியம் போல பல விதங்களின் கையைப் போட்டு வளைச்சு எடுத்து அவர்களின் காதில பூ சுற்றினேன் .

                                        மாலை  கட்டுவதில்  உள்ள டெக்னிக் உண்மையில்  ரெண்டு வாழை நார் பூவைக்  கொழுவிக் கொண்டு வளைந்து வளைந்து போவது . அதில்  நிலையான வாழை  நாரை  பிடிக்கும்  கோணம், அதில் பூவை  வைக்கும்  கோணம், வைத்து ரெண்டாவது  வாழை நாரை சுற்றி எடுக்கும் விதம் இதுதான்  சிம்பிளாக  மாலையாகும். ஆனால் எவளவுதான் அதை உலுப்பினாலும் அந்த நார் சுற்றிய  விதமான இணைப்புக்கள் பூக்களைக் கழண்டு போக விடாது . 

                                          பாடிப்  பாடிக் கட்டி முடிந்த ஆண்டாள் மாலையை என்ன செய்வது எண்டு ஜோசிக்கும் போது, அந்தப் பூ கடையில வேலை செய்த ஆண்டாள் போலவே இருந்த ஒரு வெள்ளைப் பெண் என்னிடம் வந்து 

                                       " இந்த மாலை பெண்கள் அணித்து இருப்பதை இந்தியா பற்றி பார்த்த ஒரு டாகுமெண்டில் பார்த்தேன் ,உங்கள் நாடில் மாலை கட்டிப் பெண்களுக்கா போடுவார்கள்? இதுக்கு என்ன அர்த்தம்?" 

                                        எண்டு கேட்டாள் . நான்

                                        " முதலில் நான் இந்தியாவைச் சேர்ந்தவன் இல்லை, வடக்கு ஸ்ரீ லங்காவில் இருந்து வந்த தமிழன் , ஆனாலும் தெற்கு இந்தியா மாநிலங்களில் வசிப்பவர்களும் என்னைப் போல இருப்பார்கள், எங்களின் இந்து சமய நம்பிக்கையில் இந்த ஆண்டாள் மாலையை அணிந்து கொண்டு ஆண்டாள் என்ற பெண் , நீலநிறக் கிருஷ்னருக்காக காத்திருந்தா,"

                                       என்றேன். 

                                             " அப்படியா எனக்கு சிறிலங்கா ,இந்தியா எல்லாம் ஒன்டுபோல தான் தெரிகிறதே, அந்தக் கிருஷ்ணர் , ஆண்டாளின் பாய் பிரெண்டா ?"

                                       என்றாள் . பாய் பிரென்ட் என்று  சொல்லும்போது அவள் கண்களில் ஜன்னல் திறந்தது 

                                         "ஒரு வகையில் அப்படிதான் ! அவருக்கு ஏகப்பட்ட் கோபிய கேர்ள் பிரண்ட் கோகுலம் எண்ட அவரோட நந்த வனத்தில இருந்தார்கள் "

                                          "  என்னது   ஏகப்பட்ட  கேர்ல்ஸ் பிரெண்டா "
                                   
 "   ஆமாப்பா,,,அப்படிதான்  சொல்லுவார்கள்,,அந்தக்  கண்ணன்  ஒரு மாய லீலைக் கண்ணன் பா "
                                       
                           " மாய லீலைக் கண்ணன்... அப்படி  என்றால்  என்ன "
                                     
                                  "  அதுதான் ,,நீங்க  சொல்லுறிங்களே  வுமனைசர்  என்று,,அப்படி  ஒரு  கில்லாடி "
                                       
                                     " அப்படியா,,ஆனாலும்  அவளவு  கேர்ல்ஸ் பிரெண்ட்ஸ் ஐ  சமாளிக்க தனித் திறமை  வேணும் பா,"
                                       
                                  "  அதெல்லாம்  அவருக்கு  பிறக்கும்போதே கூடவே பிறந்த சொல்லிக் கொடுக்கத் தேவையில்லாத  கலை "
                                         
                                          "  அதெப்படி சொல்லுறாய் "
                                       
                                     "  கிருஷ்ணன் குழந்தையாக இருக்கும் போதே மின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னம் வைத்து மன்னவன் போல் லீலை  செய்த மாயவன் "
                             
                                           "  அப்படியா ,,சின்னக்  குழந்தை அழகாய் இருந்து  இருக்கும்,,அது கன்னிப்  பெண்களுக்கு  ஒருவித  அன்பான ஆசையைக்  கிளப்பி இருக்கும் "
                                     
                                  "   ஹ்ம்ம்,, கிருஸ்ணனின்  பின்னழகைப்  பார்த்து  போதை முத்தம் கேட்கவே கன்னிகள் அலைந்தார்கள்  "
                                       
                                           " அப்படியா,,நீ ஒண்டும்  அப்படி அலையிற  ஆள் இல்லைதானே ,பார்க்க  அநியாயத்துக்கு அப்பாவி  போல தெரியிறாய் "
                                         
                                   "  ஹ்ம்ம்,,கிருஷ்ணர்  பரமாத்மா  ,,நான்  ஜீவாத்மா ,,எல்லா  விதத்திலும்  சாதாரணமானவன்   "
                                                   
                                           என்றேன் ! அவள் கொஞ்சம் ஜோசித்தாள். பிறகு  சிரிச்சாள் . இளம் பெண்கள் சிரித்தால் அவர்களின் தற்பாதுகாப்பு அதி உயர் பாதுக்காப்பு வலயத்தை விட்டு கொஞ்சம் வெளியே வருகிறார்கள் என்று அர்த்தம், அதை  நழுவ விடாமல் மெதுவாக , அவளுக்கு மட்டும் கேட்கிற மாதிரி ,

                                         " இப்படி ஆண்டாள் மாலை போட்டால் கிருஸ்னர் போல நீல நிற ஆண்கள் கணவனாக வருவார்களாம் எண்டு எங்கள் ஹிந்து சமய  இதிகாசம்களில் உள்ளது " 

                                         என்றேன்..அவளுக்கு  கண்கள் இப்ப அரண்மனைக் கதவே தாழ் திறந்த மாதிரி விரிய 

                                         " ஒ அப்படியா , நாலு அஞ்சு பூவை  வைச்சு  இந்த நூலில்  அழகாக இணைத்துக்    கட்டி இதுக்குப்  பின்னணியில்  ஒரு  ரொமான்ஸ்  கதை  வேற  சொல்லுறியே ,,உண்மையில்  வெரி இன்றேச்டிங்கா இருக்கே" 

                             என்றாள், சிறிது நேரத்தில் அப்பாவியா  

                                  "உனக்கு  ஆட்சேபனை இல்லை என்றால் , இதை உனக்குப் போடவா?" 

                      எண்டேன் அவள் கன்னம் இரண்டும் தார்பூசணி போல சிவக்க,

                                        "ஒ , நான் தான் நீ சொல்லும் ஹிந்து சமயம் சார்ந்தவள் இல்லையே,, சிரிப்பு என்னவென்றால் நானே என்ன சமயம் சார்ந்தவள் எண்டும் எனக்கு இன்றைவரை தெரியாது,  எப்படியோ நான்தான் யாருக்காகவும் காத்திருக்கவில்லையே, என்றாலும் நீ விரும்பினால்ப்  போடு "  

                               எண்டு சொல்லி முடிக்கமுன் நான், மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன கேதுனா ,சந்தே பத்னாதிதம் ..எண்டு சொல்லி  அவளுக்கு அந்த ஆண்டாள் மாலைப்போடஅவள் அணில்குஞ்சு போல சுருங்கி , ஒவ்வையார் போல  வாய் முழுவதும்  சிரித்து, தாஸ்மேனியன்  அப்பிள் போல  கன்னத்தில்   சிவந்தாள் , நானும் படார் எண்டு ,

                                   " எங்கள் நாட்டில் மாலை போட்ட பெண் மாலை சூடியவனுக்கே சொந்த என்றேன்", 

                                   அவள் திடுக்கிட்டு ஜோசிதுப்போட்டு ,

                                          "அதுக்கென்ன ,எனக்கு கிருஷ்ணர் போல நீலநிற ஆண்கள் எல்லாம் வேண்டாம், உன்னைப்போல பிரவுன் நிறத்தில ஒரு  ஆண் கிடைத்தாலே போதும் "
                                  என்றாள் ! மறுபடியும் ,மெதுவாக , அவளுக்கு மட்டும் கேட்கிற மாதிரி ,

                                             " எங்கள் நாட்டில் திருமணத்தில் ஆணும்,பெண்ணும் மாறி மாறி மாலை மாற்றுவார்கள்" 

                                  என்றேன், அதுக்கு அவள்

                                    "இந்தியாவில் யானைகள் எல்லாம் திருமணவீட்டில கொண்டு வந்து கலாய்ப்பதையும் ஒரு டிஸ்கவரி tv  டாகுமெண்டில் பார்த்தேன் " 

                                   என்றாள்  ,

                                          " எனக்கெல்லாம் யானை கொண்டுவர வசதி இல்லை,வேண்டுமென்றால் இரண்டு பூனை பிடிச்சு கொண்டுவரலாம் "

                                       " ஹஹஹஹா,     பூனை   அது  என்னோட  வீட்டிலேயே ரெண்டு இருக்கே,,நான் தான்  வளர்க்கிறேன் "
                                   
                                    " ஹ்ம்ம்,,இப்பிடியே  மாலையோடு சேர்த்து  படம் எடுப்பமா,,உன்னோட வேலை செய்யும்   நண்பியைப் படம்  எடுக்கச் சொல்லுறியா "
                               
                                         "   ஹ்ம்ம்,, ஹன்னா  நல்லா படம் எடுப்பாள்,,நான்  வரச் சொல்லுறேன் ,"
                             
                                             "  ஆண்டாள் மாலையில்  நீ திருச்சூர்  பூரம்  திருநாளுக்குப்  போன சந்திரமுகி போல இருக்கிறாய் "
                                 
                                                " என்னவோ எல்லாம் சொல்லுறாய்,,ஒன்றுமே  புரியவில்லை ,,ஆனால்  என்னைப்  புகழ்ந்துதான் சொல்லுறாய் என்று தெரிகிறது "
                                 
                                           "  ஹ்ம்ம்,,,அப்படிதான்  சொல்லுறேன்,,உன்னோட  முகத்துக்கு  இது  அப்படி அம்சமா பொருந்துது ,, "
                                   
                                             " ஹ்ம்ம் ,  எனக்கு  இந்தப் படம் கட்டாயம்  வேணும் ,நான்  போன  பிறப்பில்  இந்தியாவில்  பிறந்து இருக்க வேண்டும்  போல ,"
                                   
                                               " வேண்டுமென்றால்  இந்த மாலையைக்  கட்டினவனையும்  அப்படியே கட்டி எடுத்துக்கொள் "
                                 
                                              "   ஹஹஹா,,  என்னோட  உணர்வுகள்  இப்ப என்ன தெரியுமா,"
                                 
                                         "      ஹ்ம்ம்,,நீயே  சொல்லு  "
                                 
                                           "  ஒரு    மாலையோடு  ஒரு  முழுமையான கலியாணமே  கட்டின  மாதிரி  இருக்கு "
                                     
                                          "  ஹ்ம்ம்,,எனக்கும்  ஒரு  மாலையை  வைச்சு  உனக்குக் மலையாளக் கந்தர்வன்  நாட்சார்  வீட்டில கலியாணம்  நடுராத்திரியில் காட்டின  கதை  மாதிரி  இருக்கு, உனக்கு  மாலை  போட்டது    "

                    " அதென்ன   மலையாளக் கந்தர்வன்  நாட்சார்  வீட்டில கலியாணம்  நடுராத்திரியில் காட்டின  கதை,,சொல்லு  ,,சுவாரசியமா இருக்கும் "

                                "  கந்தர்வன்   நடுச்  சாமம்  அழகிய  இளம்  பெண்களை  மயக்குவான்,,,ஒருநாள்  .....திருவனந்தபுரதில்....................    ஒரு  அழகிய  இளம்  பெண்  ..................அவளோட  வயதான  பாட்டியுடன்  வசித்து  வந்த நேரம் ..................................... ஒரு கந்தர்வன்  .....................   பாட்டியை  எழுப்பி ,,,,,,,,,,,,,,,,  அந்த  இளம்பெண் ....................அதிகாலை  முழித்துப்பார்க்க..................அழகான  குழந்தை.................  "
                 
                                         என்றேன் ,விழுந்து விழுந்து சிரித்து என்னை இறுக்கக் கட்டிப் பிடிக்க,  அவளோட வேலை செய்த ஹன்னா  வந்து  அவளோட  ஒலிம்பஸ்   கமராவில்  ,  அவளையும், அவள் போட்டிருந்த ஆண்டாள் மாலையையும்,  அருகில்  என்னையும் சேர்த்து " க்ளோசப்பில " படம் எடுத்தாள்! பல பெண்கள் என்னோட படமெடுக்க விரும்பினார்கள். நான் ஏகபத்தினி விரதன் ஸ்ரீ இராமன்  போல ஆண்டாளோடு மட்டுமே  படம் எடுத்தேன் .
                                             
                                           அந்த ஆண்டாள்  படத்துக்கு தலைமயிரை மாதவிப் பொன் மயிலாள் பொன்னிறத்  தோகை விரித்தாள்  மாதிரி பிரித்துப் பிரித்து அலைபாயவிட்டிருந்தாள் . படமெடுக்க வந்த ஹன்னா சின்னதாக இருந்தாள். தானும் அந்த ஆண்டாள் மாலையைப் போட்டுப் படமெடுக்க விரும்புவதாகச் சொன்னாள் , நான் அதை ஒரே முகூர்த்த கலியான மேடையில் அக்காவுக்கும்  தங்கச்சிக்கும் ரெண்டு கலியாணம் போல  அவளுக்கும் போட்டேன் , அவள் திரிபுரசுந்தரி போல சிரிச்சுக்கொண்டிருந்தாள்
                                           
                                                எப்படியோ  அந்த  நேரம்  அந்தப் படம் பற்றி சொல்ல  எதுவுமேயில்லை . பார்க்க கல்யானமான புது  மாப்பிளை பொம்பிளை வாழைப் பழத்தில திரி செருகிய  மஞ்சள் தட்டில் ஆலாத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைச்ச மாதிரி   வந்திருக்கலாம்  என்று  நினைச்சேன். ஒரு சின்ன சந்திப்பில் சில மணி நேர இடைவெளியில்  உதிரிப்பூக்கள் மாலையாகி ஒரு சுவிடிஷ்  பொன்னிற  மேனி மங்கையின் கழுத்தில் விழுந்த சம்பவம்  அவளவுதான் .                              
                                 
                                            அதுக்குப் பிறகு நான் நோர்வே வந்துவிட்டேன் ! பல வருடங்களின் பின் அண்மையில் மருபடியும் ஸ்வீடன் போனபோது அந்த நிகழ்வு நினைவுவர அந்தப் பூக் கடையிட்கு வெளியேபோய் வேடிக்கை பார்த்தேன்,முக்கியமா ஒரு மாலையை வைச்சு சில நிமிடங்கள் கலியாணம் கட்டின அந்த ஆண்டாளை தேடினேன் , கண்ணன்மீது காதல் கொண்டு மானிடக் காதலைத் தெய்வீகக் காதலாக மாற்றி " ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சங்கம் உதைத்த சரமழை ..." போல் சில்லறை எறிந்த மாதிரிச் சிரித்து, நீலக் கண்களால் மொழி பேசிய  திருப்பாவை போன்ற அவள் இல்லை! 

                                                    வேறு பல புது ஆண்டாள்கள்  வேலை செய்தார்கள் ,கடையை கொஞ்சம் நோட்டம் விட்டுப பார்க்க, அந்த கடையின் ஒரு மூலையில் நானும்,ஆண்டாளும் ,அந்த ஆண்டாள் மாலையும் உள்ள படத்தை "என் லார்ச்" பண்ணி தொங்கவிட்டிருந்தார்கள். எப்படியோ அந்தப் படம் ஒரு மூலையில் யாரும் கவனிப்பார் அற்று தொங்கிக்கொண்டு இருந்தது.                                                                     

                                                  ஆனால்  இடைப்பட்ட பல வருசங்களில் நிறைய மாற்றம்கள் நாட்டிலையும்,வீட்டிலையும் ,ரோட்டிலையும் ,ஏன் உலகத்திலயும் ,வந்த போதும்,அந்த ஆண்டாள் மாலையில் இருந்த பூக்கள்  இன்னும் புத்தம் புதுப் பூக்கள் போல பொலிவுடன் இருந்தன! அந்த ஆண்டாள் அவளும்  மாலையோடு  கண்களில்  கிருஷ்ணன் வரவுக்காய் காத்துக்கொண்டிருந்தாள் . 
,
,

2 comments :

  1. ஹஹஹஹா ஹஹஹஹா ..
    கில்லாடி தான்..
    சுப்பரா இருக்கு கதை... "திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே...!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete