Friday 1 January 2016

ஓசிச் சாப்பாடு

வருடத்தில் மார்கழி மாதம் ஒஸ்லோவில் ஓசிச் சாப்பாட்டுக்குக் குறைவு இல்லாத மாதம். ஜுலபோர்ட் என்று சுத்திச் சுத்தி கிறிஸ்மஸ் பாட்டிக்கள் குறைவில்லாமல் நடக்கும். இதுகள் தனிப்பட்ட கிறிஸ்மஸ் பாட்டிகள் அல்ல கும்பலில் கோவிந்தா போல அன்னக்காவடி தூக்கிக்கொண்டு அல்லாடும் மக்களுக்காக நோர்வே மக்கள் தங்கள் தராதரங்களில் இருந்து கொஞ்சம் இறங்கிவந்து எல்லாருக்காகவும் வைக்கும் பாட்டிகள். இவை அதிகம் முன்பு வேலைசெய்த, இப்ப செய்யும் இடங்களில், ரெஸ்டோறேண்டில், பொது இடங்களில்,கப்பலில், நடக்கும்

                            ஒஸ்லோவில் நிறைய உதவும் உள்ளம் உள்ள கிறிஸ்தவ அமைப்புக்கள் உள்ளன. அவர்கள்தான் இந்த நகரத்தின் விளிம்புநிலை மனிதர்களைத் தாங்கிப்பிடித்து வைத்து இருப்பவர்கள். நோர்வே அரசாங்கம் வரிகளில் இருந்து கணிசமான அளவு இந்த அமைப்புகளுக்குக் கொடுத்தாலும் சென்ற தலைமுறையில் வசதியாக இருந்து இப்ப வயதுபோன நிறையப் பணக்கார மனிதர்கள் தான் அந்த கிறிஸ்தவ அமைப்புக்களின் பொருளாதார நாடித்துடிப்பு.

                                  சென்ற நூற்றாண்டில் விவசாயிகளாக இருந்த நேரம் நோர்வே மக்கள் என்ன இயற்கையாகப் பதனிடப்பட்ட இறைச்சி, மீன் உணவை உண்டு வாழ்ந்தார்களோ அந்த உணவுதான் இப்ப நோர்வே கிறிஸ்மஸ் இராப்போசன மேசையில் இருக்கும் அவர்களின் சம்பிரதாய உணவு. மார்கழி மாதம் இங்கே குளிர் அதிகம் அந்த கிறிஸ்மஸ் சம்பிரதாய உணவில் கொழுப்பு அதிகம், குளிரைத் தாங்க கொழுப்புக் கொஞ்சம் தேவை . அதால வேண்டிய மாதிரி சாப்பிடலாம் போல இருக்கும்.

                                  கிறிஸ்மஸ் இரவு 24 ம் திகதியில் இருந்து முதலாம் திகதிவரை நோர்வே மக்கள் தங்களின் குடும்பங்களுடன் தனிப்பட்ட குடும்பப் பாட்டிகள் வைப்பார்கள். அதில் மிகவும் நல்ல நெருக்கம் உள்ள நண்பர்கள் குடும்ப உறுப்பினர், உறவினர் இவர்களுடன் சேர்ந்து அவர்கள் வீட்டுகளில் நடக்கும். கிறிஸ்மஸ் இரவு 24 ம் திகதியில் இருந்து முதலாம் திகதிவரை நோர்வே மக்கள் ஒரு வேலையும் செய்யமாட்டார்கள் .அணுக்குண்டு வெடிச்சாலும் அசையமாட்டார்கள்

                                    கிறிஸ்மஸ் இரவுப் பாட்டிகள் அதுக்கு என்னைப்போல வந்தான் வரத்தான் எல்லாரையும் தங்கள் வீடுகளுக்குள் உள்ளே எடுக்க மாட்டார்கள். அதைவிட நோர்வே நோர்க்ஸ் மக்களுடன் அவர்கள் வீடுகளுக்கு உள்ளே நடக்கும் பாட்டிகளில் நடக்கும் கலந்துரையாடல்களில் அதிகம் சுவாரசியம் இல்லை. கிளியைப் பிடிச்சு வைச்சு அதுக்கு இன்னொருமுறை பச்சைப் பெயின்ட் அடிச்சுக்கொண்டு இருப்பது போல இருக்கும்.

                                    என்னைபோல வந்தேறுகுடி மனிதர்கள் எவளவு கலாச்சார ,மொழி, பண்பாட்டில், பழக்கவழக்கத்தில் வேறுபட்டவர்கள் என்பதை நோர்வே மக்களுடன் அவர்களின் கொண்டாடங்களில் நாக்கு நனைச்சு நெருங்கிப்பழகும் போதுதான் நல்லாத் தெரியும். அவர்களுக்கும் என்னைப்போல தமிழ் அடையாளம் உள்ள ஆட்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு நோர்வே மக்கள் தங்களின் இன மக்களுடன் உண்மையானவர்கள் ,நேர்மையானவர்கள். என்னதான் நாங்கள் தலைகீழாக நிண்டு நல்லவன் எண்டு நிரூபித்தாலும் எங்களில் அதிகம் நம்பிக்கை அவர்களுக்கு இல்லை.

                                 இரட்சணிய சேனை என்ற கிறிஸ்தவ அமைப்பின் ஒரு கிளையின் குசினியில் சில வருடம் வேலை செய்து இருக்கிறேன். அந்த அமைப்பிடம் இருந்து கிடைத்த அழைப்பால் இன்று டென்மார்க்க்கும் ஒஸ்லோவுக்கும் இடையில் ஓடிக்கொண்டு இருக்கும் DFDC என்ற உலாசப்பிரயான கப்பலில் இந்த வருடமும் ஓசியில் சாப்பாடு கிடைத்தது.

                                 அந்த நிறுவனத்தில் வேலை செய்த போது கொஞ்சம் நல்ல பெயர் இருந்தது அதால பல வருடமாக இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்துக்கொண்டு இருக்கு. என்னவோ பெரிய வெள்ளைக்காரன் போல இந்தக் கப்பலுக்குப் போனாலும், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் நிலைமையை ஜோசிக்க மனதளவில் உண்மையில் பிச்சைக்காரன் போலத்தான் உணர்ந்தேன்.

                                     இந்த வருடம் கப்பலில் ஏறும் போதே, ISIS தீவிரவாதிகள் புண்ணியத்தில் பிரயாண ஆவணங்கள்உறுதிப்படுத்தல்,ரகசியப் பொலிஸ் கண்காணிப்பு என்று பயங்கரப் பாதுகாப்புக் கெடுபிடி அந்த உல்லாசப்பயணிகள் கப்பல் தரித்து நின்ற இடத்தில. போதாக்குறைக்குக் " கடி நாய் கவனம் " என்று யாழ்பாணத்தில் ஒரு போட் படலையில் தொங்கவிடுவார்களே அதுபோல கழுத்தில ஒரு அடையாள அட்டையையும் கட்டாயம் கொழுவிக்கொண்டே இறங்கும் வரை இருக்கவேண்டும் எண்டு சட்டம் போட்டு இருந்தார்கள்,


                                          வாழ்கையில் பல விசியங்கள் ஏன் " அடைமழைக்குக் குடை இல்லாதவனுக்கு ஐந்து பெண்டாட்டியாம் .." போல திடிர் திடீர் ஆக நடக்குது என்று யாருக்கும் சொல்ல முடிவதில்லை.
                                 அழைப்பிதழில் அந்த நிகழ்வில் " அல்கஹோல் பரிமாறப்படாது " என்று எழுதி இருந்தார்கள், நான் முன்னம் வேலை செய்த நேரமே கொஞ்சம் பிரச்சினையான ஆளா இருந்ததால் ," மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக் கூடாது, கையாலும் காட்டக்கூடாது " என்பது போல பிரச்சினை வரும் என்று தெரியும் .
                                    ஆனாலும் என்ன வெளியேதான் வேண்டிய அளவு அல்கஹோல் வேண்டிய மாதிரி வேண்டலாமே,,அதால வெளியேயே நல்லா நாலு கட்டைக்கு சுருதி ஏத்திக்கொண்டு, சதுஸ்ரசாதி திரிபுடை தாளம் போட்டுக்கொண்டு " குறை ஒன்றும் இல்லை மறை மூர்திக் கண்ணா...." என்று பாடிக்கொண்டு போனேன்...
                                      சில பழைய வேலை நண்பர்களை சந்திக்கவும் ,பல அழகிய இளம் பெண்களை ஜோள்ளுவிடவும் மட்டும் முடிந்தது .ஒரு நோர்வே வாழ் சாதாரணமான மனதுள்ள தமிழ் எழுத்தாள நன்பரையும் அந்த நிகழ்வுக்கு வரச்சொல்லி சந்திக்க நினைத்து இருந்தது சில பிரக்டிகல் காரணங்களால் சாத்தியம் ஆகாமல் போனது கவலையான விடயம்.
                                        மற்றப்படி அதில என்னதைப் பார்த்தேன் என்பதை " வீட்டுக்கு இருந்தால் வெங்கலப் பெண்டாட்டி வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி ..." பழமொழிபோல தான் என் வாழ்கையே இங்கே. இருப்பதால் .நேற்று இரவே வெறுப்பின் விழிம்பில் சில வரிகளில் கவிதை போல எழுதிப்போட்டேன்,
                                        அந்த நிகழ்வை கொஞ்சம் படங்கள் எடுக்க விரும்பி கமரா மொபைல் போனை எடுக்க ,அந்தக் கப்பலில் வேலை செய்யும் ஒரு இளம் டெனிஷ் பெண் வந்து டெனிஷ் பாசையில் ,கொஞ்சம் கடுமையாக " இங்கே படம் எடுக்க அனுமதி இல்லை " என்று சொன்னாள்.நான் ஆவலுடன் அவளிடம் அவள் அழகு பற்றிக் கதைத்தேன்,
                                                முக்கியமா அவளுக்கு ஒஸ்லோ பற்றி என்ன தெரியும் என்று கேட்டேன்,,என் நெஞ்சில பாலை வார்க்கிற மாதிரி ஒண்ணுமே தெரியாது என்று சொன்னாள்." மைலங்கி மைலங்கி பூ எங்கே வைத்தாய், வாடாதே வதங்காதே அடுப்பிலே வைத்தேன் " கதை போல அவளுக்கு கயிறு திரிக்கலாம் போல இருந்தது..

                               " என்னோட ஒரு நண்பன் நோர்வேயின் புகழ் பெற்ற போடோகிராபர் அவன் எடுக்கும் பெண்களின் படங்கள் நோர்வேயின் முக்கிய மொடல் மாத சஞ்சிகையில் முதல் பக்கத்தில் வரும் , அவன் நான் என்ன சொன்னாலும், நான் சொல்லும் பெண்களை தலை கீழாக நின்றும் மறு பேச்சு இல்லாமல் படம் எடுப்பான் ,அப்புறம் உன் விருப்பம் " என்றேன்
                  அவள் கொஞ்சம் ஜோசித்துப்போட்டு 
                               " உண்மையாகாவா சொல்லுறாய் , நான் இந்தக் கப்பலில் நாலு வருடம் வேலை செய்யுறேன் , நீ சொல்லும் அந்த நோர்வே மொடல் சஞ்சிகையின் பெயர் என்ன,உன் போடோகிரபி நண்பன் பெயர் என்ன "  

                      என்று கேட்டாள். நான் வாயில வழுக்கி வந்த ஒரு நோர்வே நாட்டவர் பெயரை சொல்லி,வாயில சறுக்கி வந்த ஒரு மொடல் மகசின் பெயரை சொல்லி

                           " அப்புறம் உன் இஸ்டம் ,," 

                என்று ஆர்வம் இல்லாத மாதிரி சொன்னேன் ,அவள் மிகவும் ஆர்வம் ஆகி என்னுடைய மொபைல் போன் நம்பர் கேட்டாள், நான் அஞ்சு வருசம் முன பாவித்து இப்ப பாவனையில் இல்லாத நம்பரைக் கொடுத்தேன்..
                                          " நான் இன்று இரவு இந்தக் கப்பலில் கோபன்ஹேகன் இரவு கப்பலில் போறேன்,,நாளண்டைக்கு ஒஸ்லோ இந்தக் கப்பல் திரும்பி வரும்,வந்தவுடன் உனக்கு டெலிபோன் அடிக்கவா,இதுபற்றி கொஞ்சம் உன்னோடு பேசவேண்டும் " 

                       என்று மிக மிக ஆர்வமாக் கேட்டாள். அவளைப் பார்க்க " ஏற்கனவே மாமி பேய்க்கோலம், அதிலும் மாரி காலம் கொஞ்சம் மாக்கோலம் போல " இருந்தாள். 
                             " அப்புறம் உன் விருப்பம் " 
                                            என்று சொல்லி முடிக்க முதலே ...அவளே என் கமரா போனை வேண்டி சில படங்கள் என்னை எடுத்தாள்,அதில ஒரு படம் தான் இது. புத்திசாலித்தனத்தை குதிரை மேல் ஏற்றி, சட்ட திட்டத்தின் தலையிலே புல்லுக் கட்டை வைத்தடிக்கிற காலத்தில வாயுள்ள பிள்ளை தான் வங்காளம் போகும் ,,இல்லையா ,,சொல்லுங்க பார்ப்பம் .....

..                                        .....என்ன சீவியமடா இது...



1 comment :