Wednesday, 4 November 2015

கதைகளின் அவஸ்தை ..

நிஜ வாழ்கையில் சந்திக்கும் மனிதர்களின்  உரையாடல் ஊடாக  மனிதர்கள்,அவர்களுக்கு இருக்கும் வாசிப்பு ஞானத்தை அதிகம் உணர முடிந்த சந்தர்பங்கள் அதிகம் கிடைப்பதில்லை . இதில் முக்கிய குறிப்பு இதை  என் கதை சார்ந்து பேசியதால் புகழ்கிறேன் என்று எண்ண வேண்டாம். என் குணமும் அப்படிப்பட்டது அல்ல.  எழுத்து  பக்கம் புலன் சாய்க்காமல் சிலரில் சிலவற்றை மண்டைக்குள் பதிவு செய்கிறது  சில நேரம் அந்த சம்பவங்கள்  எப்படிக் கிடைத்ததோ அதேபோல முழுக்க முழுக்க ஏமாற்றமாயும் இருக்கலாம் .

                                 கோடை வெய்யில் மஞ்சளாக ஒஸ்லோ நகரத்தின்  சன நெரிசலின் இடையில் புகுந்து  வெளியே வந்து கொஞ்சம் நகரத்தை சூடாக்க , இன்றைய நாளின் அவசரங்களை நமதாக்கிக்கொண்டோம்  என்று மனிதர்கள் வேகமாககக் கடந்து கொண்டிருந்த  குனாரியஸ் சூப்பர் மார்கெட் வாசலில் நடைபாதை ஓரம் வாகனங்கள் உள் நுழையாமல் தடுக்கப் போட்டிருந்த சீமெந்துக் குந்தில் இருந்து  ஒரு சிகரெட்டைப் பத்திக்கொண்டிருந்தேன்.

                                          வெளிச்சமான நாட்களில் எல்லாவிதமான மக்களும் நேரத்தை இழுத்துக்கொண்டு நடைபாதைகளில்  நடை பாதியாக மும்மரமாக கடைகளில் ஓடி நுழைந்து ஓடி வெளியேறி , நெருக்கம் புதுவிதமாக விலாசங்களை மாற்றி எழுத , அரைகுறை மேலாடைகளில் கோடையின் காற்றை விசாரிக்க விட்ட  இடங்களில் வியர்வை வாசம் மட்டும் என்னவோ மந்தமாகத்தான்  இருந்தது.

                                  ஒரு இலங்கைத் தமிழர் என்னை முன்னுக்கு நேருக்கு நேர் சந்தித்த போது எதுக்கு வம்பு என்பது போல  மெதுவாகப் பார்த்துக்கொண்டு , ரெண்டு கைகளிலும் மரக்கறி அள்ளி அடைஞ்ச  நீல நிறப் பிளாஸ்டிக் பையை வேண்டாவெறுப்பாகக்   காவிக்கொண்டு , மறுபடியும் என்னைக் கடந்த நேரம் டக்கென்று என்னவோ நினைவு வந்த மாதிரி ,முழங்கையில் சுண்டினால் கரண்ட் அடிக்குமே அதைப்போல உதறி என் முகத்தைப் பக்கவாட்டில் பார்த்தார். அவர் முகத்தில விடுப்பு அறியும் யாழ்ப்பாணக் குணம் எழுதி ஒட்டி அவர் யாழ்ப்பானதவர் என்பதை அவிட்டுவிட்டுக்கொண்டு இருந்தது.

                                    மட்டுப் பிடிச்சுப் பார்க்க என்னைவிட ஒரு ரெண்டு வயசு அதிகம் போல இருந்தார். என்னை விட உயரம் குறைவு. கொஞ்சம்  நேரான உடம்பு வாக்கில் அதிகம் உடம்பை அசைத்து வேலை செய்யிற மாதிரி தெரியவில்லை அவர்  ஆடிப் பாடி அரக்கி அரக்கி நடந்த விதம் ,பெரிய கொலர் வைச்ச சேட் போட்டு இருந்தார்,அது பின்பக்கம் ஜீன்ஸ்க்கு உள்ளே நிக்காமல் வெளியால அலைந்து கொண்டிருந்தது, அதுக்கு மேலே அடிடாஸ் வார்ம் அப் ஜென்சர் போட்டிருந்தார்.

                                    நான் அவரை  மேலோட்டமாகப்  பார்த்துக்கொண்டு புகையை மேகக்கூட்டம் போல இழுத்து இழுத்து என்னமோ சிகரிட்டில் தான் ஒக்சிசன் லைப் லைன் போட்டு உயிர் ஓடிக்கொண்டு இருப்பது போல அதன் அலாதியான உயிர்ப்பில் உலகத்தின் மற்ற எல்லா அவஸ்தைகளையும் மறந்து கொண்டிருப்பது போல முகத்தை ரோட்டுக்கு வேடிக்கை காட்டிக்கொண்டு இருந்தேன்

                                 அவர் கொஞ்சம் கடந்து குனாரிஸ்  சூப்பர் மார்கெட் முடிவில் ரெண்டு நீல பிளாஸ்டிக் பையையும் நடைபாதையில் வைச்சுப்போட்டு ,காட்சட்டைக்க இருந்து மொபைல் போனை எடுத்து ஒரு நம்பருக்கு அடித்தார் ,நான் ஓடித் தப்பிப் போய் விடுவனோ என்பது போல என்னை கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டு மொபைல் போனில கதைத்தார் .

                                எனக்குக் கேட்காத தூரத்தை தேர்ந்தெடுத்து அவர் மொபைல் போனில கதைத்தது , முழங்கையில் கரண்ட் அடிச்ச மாதிரி உதறியது, அதைவிட மொபைல் போனை நல்லா காதுக்கு நெருக்கமா வைச்சுக்கொண்டு கொஞ்சம் டென்சனில் கதைப்பது போல இருந்தது எல்லாம் எனக்கு எந்தப் பயத்தையோ , பீதியையோ கொடுக்கவில்லை,நான் விறைச்ச மண்டையன் போல என்பாட்டில் இருந்தேன் .

                                       சில நிமிடங்களில் ,மொபைல் போன் கதைச்சு முடிய ,மறுபடியும் என்னை நோக்கி அந்த ரெண்டு நீல நிறப் பிளாஸ்டிக் பைகளையும் தூக்கிக்கொண்டு வந்தார்,வந்து என் முகத்தையும் என் கையில விரல்களுக்கு நடுவில் இருந்த எரிஞ்சு முடிறிய சிகரட்டையும் பார்த்து நட்பாகச் சிரித்தார் ,நான் ஏற்கனவே இந்தாள் கதைக்க வந்தாலுமென்று  ஒத்திகையில் வைச்சிருந்த வணக்கம் எண்ட தொடக்கத்தை  சொல்லி முடிக்க  முதலே அரைவாசியில்  அவர் அது முக்கியமில்லை என்பது போல

                              " நீர் ,,அவரேல்லோ,, இண்டைக்கு கண்ணாடியையும் வீட்டில மறந்து வைச்சுப்  போட்டு வந்திட்டனே ," எண்டார்

                               " அப்பிடியெண்டா ,,என்ன  சொல்லுரிங்க   " என்றேன்

                              " என்ன  கதை எழுதுவீர் அவர் தானே , நேர்ல பார்க்க வயகெட்டுக் கிழவன் போல இருக்கிரீர் "

                            " ஹ்ம்ம் ,,

                         " உம்மட ஒரு கதை  ,,ஒரு ஜெயிலுக்க நீர் இன்னொரு ஆளோடு இருப்பீர்,,,நினவு இருக்கா"

                         " முழுவதும் இல்லை ,,அரைவாசி  அவர்தான் "
                                     
                             " பேமெண்டில் குந்தி இருந்து சிரகரட்டை விரலைச் சுட்டாலும் பரவாயில்லை எண்டு  கடைசிக் கட்டை வரைக்கும் இழுத்து கொண்டு இருக்கிறீர்,என்ன சீவியமடா  இது   எண்டு  எழுதுவீர் அவரேல்லோ  "

                           எண்டு  சிரிச்சார் ,,நானும் சிரிச்சேன். நான் ஓரளவு ஒஸ்லோ மனிதர்களுக்கு பேஸ்புக்கில் மட்டுமே அறிமுகம்,நேரடியாக தெரியாது, அதால் அவர் அப்படி தயங்கி தயங்கி அடையாளம் காண்பது ஆச்சரியாமா இருக்கவில்லை .செலிபிரிட்டி  என்ற  சினிமா உலகப் பிரபலங்களுக்கே  அப்படி நடப்பது, சும்மா நக்குத் தண்ணியில் நாக்கு நனைச்ச மாதிரி  நாலு கதை எழுதிப்போட்டு இருக்கிற எனக்குக்  கவனிப்பு இப்படிதானே இருக்கும் .

                                  " ஹ்ம்ம், நீங்க நினைக்கும் ,அவர் தான்,, நீங்க நான் எழுதுறது எல்லாம் வாசிப்பின்களோ,,சும்மா பொழுதுபோக்க எழுதுறது ,,எங்கே நான் எழுதுறது வாசிப்பிங்க

                                    " நீர் தானே என்னோட பேஸ்புக்கில்  பிரண்டாக இருகிறீரே ,,என்ன ஐசே இப்படி கேள்வி கேட்கிறீர் "

                                        "  ஒ அப்படியா,, எனக்கு உங்கள் முகம் அங்கே கண்டதாக நினைவு இல்லையே ,,எனக்கு கொமென்ட் லைக் போட்டு கொஞ்சம் பழகுபவர்களின் முகம் நினைவு இருக்கும் "

                             " நான் அதொண்டும் போடுரேல்ல , ரெண்டு வருசத்துக்கு மேல  பிரெண்டா இருக்கிறன் ,நீர் ......  .....  எண்டு  பெயர் எழுதி தட்டிப்பாரும் என்னோட பெயர் வரும் "

                              " ஒ பரவாயில்லையே,,நிறையப்பேர் சைலன்ட் ரீடர்ஸ் ,அப்படி இருப்பதை நானும் கவனித்து இருக்கிறேன் ,உங்களை நேரடியா சந்திச்சது சந்தோசம் "

                                 " அதென்ன    சைலன்சர்  டீச்சர் ,,விளங்கேல்ல "

                                 " இல்லை அது சைலன்ட் ரீடர்ஸ் ,அவசரத்தில் ,ஆங்கிலத்தில் சொலிப்போட்டேன் ,,பலர் வாசிப்பார்கள் ,,ஆனால் கருத்து சொல்லமாட்டார்கள் ,,அவர்களை சைலன்ட் ரீடர்ஸ் எண்டு சொல்லுவார்கள் "


                                 " ஒ அதுவே  ,,நான் என்னவோ படிப்பிக்கிற டீச்சர்  என்டு நினைச்சேன் ,, உம்மட ஒரு கதை  அதை வாசிச்சு உம்மை நினைக்க  நல்லா விழுந்து விழுந்து சிரிக்க வைச்சது ,,ஒரு ஜெயிலுக்க நீர் இன்னொரு ஆளோடு இருப்பீர்,,,நினவு இருக்கா "

                                     "  ஹ்ம்ம் ,,கொஞ்சம் நினைவு இருக்கு "

                                   "   நீர் ஐசே அதை  ஒரு ஜெயிலுக்க இருந்த நேரம் நடந்தது   எண்டு எழுதி இருந்தீர் ,,அதென்ன பாட்டு  அந்தப் பழைய பாட்டு ,,இப்ப நினைவு வருகுதில்லை ,,,எங்கயோ ஜெர்மனி  ஜெயிலுக்க இருந்த நேரம் உம்மோட பிரெண்ட் படிச்சார் எண்டு எழுதி இருந்தீரே "

                               "  ஒ  நீங்கள்  நல்லா வாசிப்பிங்க  போல இருக்கே,,அது டென்மார்க்கில் ,,"

                               " இல்லை,,நான்  வாசிக்கிறது  இல்லை,,குறைவு  என்னோட  கூணா வாசிப்பா ,,அவா தான்    நீர்   ஜெயிலுக்க இருந்த    அதை எனக்கும் வாசிக்கச் சொன்னா "

                             " ஒ உங்க மனைவி நல்லா கதைகள் வாசிப்பா போல இருக்கே  "

                         " ஓம்,,அவள்  நல்லா வாசிப்பாள், அனுராதா ரமணனின்  கதைப் புத்தகம் எல்லாமே வைச்சு இருக்கிறாள்,,,நீர்  ஜெயிலுக்க இருந்த அந்தக்  கதை நல்ல முசுப்பாத்தி  எனக்கும்  முந்தி போடர் செய்த  ஆட்களைத் தெரியும்  ,,போடர் மனோ,,போடர் ரவியைத் தெரியுமோ உமக்கு "

                         "  இல்லை  தெரியாது, அது ஒரு கதை ,அவளவுதான் "

                           "   கதையோ ,,என்ன சொல்லுறீர் ,அதை வாசிச்சு நீர் ஜெயிலுக்க  கம்பிக்குப்  பின்னால இருக்கிறதை நினைச்சு பார்க்கவே  அடக்க முடியாம சிரிப்பு வந்தது,,ஒரே சுத்துமாத்து போல ,,உமக்கு சுத்துமாத்து நல்லா கைவரும் போல  "

                         " ஹ்ம்ம் கொஞ்சம் வரும் ,,அதை வைச்சு  மற்றவர்களை சிரிக்க வைக்கிறதே  ஒரு நல்ல விசியம் தானே "

                              " ஓம் ,,எண்ட  கூணா  அனுராதா ரமணனின் ஒரு கதையை நோர்ஸ்கில் ட்ரான்ஸ்லேட்  செய்யப்போறன் எண்டு கொஞ்சநாள் மல்லுக்கட்டிக் கொண்டு நிண்டாள் "

                              " அப்படியா  அதென்ன  கதைப் புத்தகம் "

                             " எனக்கு உதுகள் தெரியாது,,அந்தப் புத்தகத்தை தான் ஒரு படமா எடுத்தவங்களாம்,,சிலநேரம் உமக்கு தெரிஞ்சு இருக்காலம் "

                              " நான் நினைக்கிறன் ,,,சிறை என்ற பேமஸ் படம் அனுராதா ரமணனின் நாவல்,,அதை எடுத்து ஆர் சி சக்தி திரைகதை எழுதி சினிமாவா எடுத்தார் ,சரியா தெரியவில்லை.."

                               " ஓம் ஐசே.  பாத்தீரே ,  நீர்  ஜெயிலுக்க இருந்ததால தான், அந்தப்  படத்தையும்   சிறை  என்று டக்கெண்டு கண்டு  பிடிச்சிட்டீரே "

                                  " இல்லை அந்த சிறை வேற,,நான் இருந்த  ஜெயில் வேற,,சிறை அது  ஒரு அருமையான படம் அந்தப் படத்தின்  தொடக்கத்தில்  எம் எஸ் விஸ்வநாதனும் ஆர் சி சக்தியும் எப்படி அந்தப் படத்துக்கு இசை அமைப்பது என்று நடந்த ரிகர்சலையே  டைட்டில் சோங் ஆக வைத்து புதுமை செய்த படம் "

                                  "   என்ன வேற வேற எண்டு சொல்லுறீர்  ,,சிறை என்றா இங்கிலிசில்  ஜெயில் தானே ,,ரெண்டும் ஒண்டு தானே "

                                " போச்சுடா,,இனி உங்களுக்கு  அந்த சினிமாப் படம் நினைவுக்கு வரும்போதெல்லாம் நான் ஜெயிலுக்க இருந்தது நினைவு வரப்போகுதே "

                           " ஹஹஹஹா  உண்மையும் தானே,,பாத்தீரே   உமக்கே பக்கு பக்கெண்டு எல்லாம் கனெக்ட் ஆகுதே.. "

                               " நான் இப்பிடித்தான் என் வாயக்  கொடுத்தே வாங்கிக் கட்டுறது  ஹ்ம்ம் , ,வேற கதை ஒண்டும் வாசிக்கவில்லையா "

                          " இப்ப நான் அடிக்கடி நீர் எழுதுறது வாசிக்கிறனான் ,,ஆனால் நீர் அந்த ஜெயிலுக்க இருந்த  போல ஏன் இப்ப எழுதுறது இல்லை "

                                  "  ஹ்ம்ம்,,நான்  இப்ப ஜெயிலுக்க இல்லையே அதால எழுதுறது இல்லை "

                                      " மெய்யாத்தான் சொல்லுறீரோ "

                                          " இல்லை  நான்  சும்மா  சைட்  பிசினஸ்  போல  அதை  ஒருகாலத்தில்  தலையிடி  என்ற  நண்பனுடன்  சேர்ந்து  செய்தேன்,,அதுவும்  அந்த நேரம்  சுவீடனில் இருந்தேன் "

                                               " ஓம்,ஓம்,  சைட் பிசினஸ்சோ  ,,அதைத்தான்  பலர்  மெயின் பிசினஸ் போல செய்தவையள்  ,,"

                                                  " ஹ்ம்ம்,, "

                                              " இப்ப  அவைதான்  ஒஸ்லோ முருகன் கோவிலில் நெத்தியில பட்டை அடிச்சுக்கொண்டு  சாமி  காவுகினம் "

                                                      " ஹ்ம்ம் "

                               " இப்ப அவையளைப்  பிட்டிக்க  ஏலாது..அவளவு  எடுப்புச் செடுப்பு ,,செய்தது எல்லாம்  திருகுதாளம் "

                                                                             " ஹ்ம்ம் "

                                           " நீர்  ஜெயிலுக்க இருந்த கதையை சிரியா சிரி  சிரி  எண்டு  சிரிச்சு கூனாவுக்குச்  சொல்ல  அவள்  நம்புறாள்  இல்லை
"

                                               " அவா  என்ன  சொன்னா "

                                             " அவள்  சொல்லுறாள்  இது  சும்மா  த்திரிகிஸ் விடுற  கதையாம்  எண்டு "

                                 " அதுதான்  ,,உண்மை,,அது ஒரு  கதை  மட்டுமே "

                                   " என்ன கதை,,நீர்  ஐசே  அப்பிடியே  கட்டைக்களுசான்  போட்டுட்டுகொண்டு  கம்பி  எண்ணுற மாதிரி  அப்பீடியே  அச்சொட்டா ஜெயில் கைதிபோல  ஜெயிலுக்க நிக்கிறீர்  அவள்  அதைக் கதை  எண்டுறாள் "

                                               " ஹ்ம்ம்,,"

                                       " அதார் சிசிலியா ,,உம்மோட  சரக்கோ "

                                            " இல்லை,,சிசிலியா  என்னோட  ப்ரெண்ட் "

                                     " அட அட அட  அவளை அப்பிடியே அம்மணக் குண்டியா அவிட்டுப் பார்த்தமாதிரி  எழுதுறீர்,,பிரெண்ட்  எண்டுறீர் "

                                             " ஓம்,,கதைக்கு  ஏற்றமாதிரி  அப்படி  எழுதுறது "

                                       " அவள்  நோர்ஸ்கியோ "

                                                         " ஓம் "

                                              " நினைச்சேன் ,,அவள்  கதைகிரதைப் பாக்க  அப்பிடிதான்  தெரியுது, வேலியில  நிக்கிற ஓணானைப் பிடிச்சு வேட்டிக்க விட்ட மாதிரி வளவளத்த கதை  "

                                   " கதையில்  அவள்  கதைப்பாள்,,,ஏனென்றால்  அது  கதை "

                                      " கிழிஞ்சுது,,சும்மா  எனக்கு அவிக்காதையும்,,அவள் கதைகிறதே  குத்துது குடையுது என்டுறது  போல  இருக்கே  "

                                                                  " ஹ்ம்ம்,,"
                                                                 

                                     "  ஹஹஹஹா,,நீர் கதைக் கேக்கையும் நல்லா முசுப்பாத்தி விடுவீர் போல ,,அந்தப் பழைய பாட்டு  என்ன  பாட்டு  அது ,,நினைவு வருகுது  இல்லை  "

                                   "  ஹ்ம்ம் ,,நிலவே என்னிடம்  நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை  ,,,அந்தப்  பாட்டுத் தானே  கேட்குறிங்க "

                          " ஓம் ,ஐசே,, சில நேரம் நான் வெளிய பல்கனியில் நிண்டு வானத்தைப் பார்க்க ,அதில சந்திரன்  சாடைமாடையா  தெரிஞ்சாலே ,,உடன  நீர்  ஜெயிலுக்க இருந்த அந்த  நினைவுதான்  வரும்,,உம்மையும் ஜெயிலையும்  நினைச்சு சிரி சிரி  எண்டு சிரிக்கிறது  "

                                 " ஒ  அது ஒரு கதை அவளவுதான் ,,போறபோக்கில அந்தக் கதை உங்களை விட்டுப் போகாது போல தெரியுதே,, "

                                   " இல்லை ,,ஐசே ,,நீர் ஜெயிலுக்க இருந்த விசியத்தை ஒப்பினா சொன்னது  நல்லது,,,ஏன் தெரியுமே,,கன சனம் உம்மைப்போல  குடு கடத்தி பவுடர் வித்தவங்கள் உள்ளுக்க இருந்து வெளிய வந்து இப்ப என்னவோ பெரிய ஆட்கள் போல திரியுரான்கள்"

                              "  ஹ்ம்ம்,,இல்லை  நம்பினால் நம்புங்க  நான் எழுதியது  ஒரு கதை அவளவுதான்,,அதுக்கு மேல அதில ஒண்டும் இல்லை "

                            "  இல்லை,,நீர் அப்பிடி சொல்லக்கூடாது,,நீர் ஜெயிலுக்க இருந்ததை நல்லா வடிவா எழுதி இருகிறீர் ,அதை வாசிக்க அப்பிடியே கண்ணுக்கு முன்னால  நீர் ஜெயிலுக்க இருகிறது மாதிரி இருக்கும் "

                                " இதுதான்  கதைசொல்லிகளின் கனவுக்கும் நினைவுக்கும் இடையில் உள்ள  கால்களை ஊன்ற முடியாத  அவஸ்தை . பாவம் அந்தக்  கதைகளுக்கும்  இதால் அவஸ்தை ."

                                " என்ன சொல்லுறீர் , எனக்குதானா என்னவும் சொல்லுறீர் ,
நீர் நல்லாத் தண்ணியும் அடிப்பீர் போல இருக்கே முகம் டுபாய்ப் பூசணிக்காய் போல வீங்கி இருக்கிறதை பார்க்க "

                                      "   ம் ,,"

                                    " நீர்  வெறியில எழுதுறது போல இருந்தாலும்,,நல்லா இருந்தது நீர் ஜெயிலுக்க நின்டும் ,,அதில நடந்ததை மறக்காமல் எழுதியது "

                                         "    ம் "

                                  " நீர்  அப்படி  உண்மைகளை  எழுதும் ,,பிரசினை இல்லை ,,சனங்கள் வாசிக்கும் , இழுத்து  ஊதி  ஊதித்தள்ளி கன்னம் ரெண்டும் ஜால்ரா போடுற  சப்பளக் கட்டை போல வந்திட்டுதே   ,"

                                      "    ம் "

                                     " நீர் எழுதுற  கூத்தும்  ,,உம்மட படங்களையும் அங்க பார்க்க பெரிய அழகு ராஜா போல,,இங்கே பாக்க  நாலு மயிர்  மட்டும் முன்னுக்கு நிக்குது மிச்ச  மண்டை எல்லாம்  டொல் அடிச்சு  வெளிச்சுக் கிடக்குதே "

                                      "  ம்  "

                                 " வீடு வாசல்ல வேலை இல்லாத மாதிரி நிறையப் பெம்பிளையல் வழிஞ்சு வழிஞ்சு கொமென்ட் அள்ளிப்போடுற மாதிரி இருக்கு,,அதுகள் உண்மையா வாசித்துதான் போடுதுகளோ அல்லது  உம்மை அணைச்சுப் பிடிக்கப் போடுதுகளோ ,,அவையல் எல்லாரையும் நல்லாத் தெரியுமோ "

                                     " ஹ்ம்ம்,,,கொஞ்ச பேரைத் தெரியும் .."

                                " வேற என்ன சொல்லுறது ,,பிறகு இன்னொருநாள் சந்திப்பம்,,உம்மோட கதைக்க நல்ல இன்றேஸ்ட் ஆக இருக்கு ,,ஹஹஹா  உம்மட  முகத்தைப் பார்க்க ஹஹஹாஹ்  நீர்   ஹஹஹஹா    ஜெயிலுக்க இருந்த  ஹாஹஹா ."

                                       "     அய்யோ,,இன்னொரு நாளா..சரி  சந்திச்சா கதைக்கலாம் ,,பொழுதும் போக வேண்டுமே "

                                       " பிறகு,,இப்ப உம்மோட இங்க கதைகிறதை வைச்சும் கதைகிதை விட்டு  என்னவும் எழுதிப் போடாதையும் ,,உம்மை மாதிரி ஆட்களோடு வாயைக் கொடுக்கிறதே பயந்து பயந்துதான் கொடுக்கவேண்டிக் கிடக்கே "

                             "  இல்லை,,எழுத மாட்டேன்,,இதில என்ன இருக்கு கதை எழுத , சாதாரண உரையாடல் தானே "

                                     "   சரி நான் போகப்போறேன் ,,கூணா இப்ப போன் அடிக்கப் போகுது ,எங்க ஆளைக் காணவில்லை எண்டு ,,போட்டு வாறன்  என்ன,,மறக்காமல் தொடந்தும் எழுதும் ,,நாங்கள்  வாசிப்பம் "

                                      " ஹ்ம்,, இதுக்கு பேசாமல் அந்த  ஜெயிலுக்கையே பாதுகாப்பாக  இருந்து நின்மதியாக்   கதை  எழுதிக்கொண்டு இருந்து  இருக்காலம் போல இருக்கு .."

                                     " பேந்தும்பார் ,,அதென்ன  கதை,..வேற கதையும் ஜெயிலுக்க இருந்து  எழுதி இருக்கிரீரோ  "

                             " இல்லை ,அது  ஒண்டும் இல்லை,,நீங்க  போட்டு வாங்கோ ".

                                 நான்  இன்னொமொரு  சிகரட்டை அவர் போறதை   மேலோட்டமாகப்  பார்த்துக்கொண்டு புகையை மேகக்கூட்டம் போல இழுத்து இழுத்து என்னமோ சிகரிட்டில் தான் ஒக்சிசன் லைன் போட்டு உயிர் ஓடிக்கொண்டு இருப்பது போல அதன் அலாதியான உயிர்ப்பில் உலகத்தின் மற்ற எல்லா அவஸ்தைகளையும் மறந்து கொண்டிருப்பது போல முதுகைக் காட்டிக்கொண்டு வேற யாரும் தமிழர்கள் அவடத்தில் உலவுறார்களா என்று பகலிலேயே ஆந்தை போலப்  பார்த்தேன்

                                  நல்ல காலம் யாரும் தென்படவில்லை.
             
.

                              

4 comments :

 1. ஹஹஹஹா ..
  ஜெயிலுக்குள்ள... ஹஹஹா
  Superb..

  ReplyDelete
 2. " இல்லை,,நீர் அப்பிடி சொல்லக்கூடாது,,நீர் ஜெயிலுக்க இருந்ததை நல்லா வடிவா எழுதி இருகிறீர் ,அதை வாசிக்க அப்பிடியே கண்ணுக்கு முன்னால நீர் ஜெயிலுக்க இருகிறது மாதிரி இருக்கும் "///

  கதை சொல்லியின் வெற்றி ...

  ReplyDelete
 3. கதை அப்படியே படம் போல மனக்கண்ணில் ஓடியது, அது தான் உங்கள் பிளஸ் , கதையின் பிளஸ் . நீங்கள் கதை என்று சொன்னாலும் கதை எழுதிய பாணி உங்களை உங்கள் எழுத்தை , தரத்தை, அங்கீகாரத்தை காட்டி தந்தது. சபாஷ் .

  ReplyDelete
 4. கதை அப்படியே படம் போல மனக்கண்ணில் ஓடியது, அது தான் உங்கள் பிளஸ் , கதையின் பிளஸ் . நீங்கள் கதை என்று சொன்னாலும் கதை எழுதிய பாணி உங்களை உங்கள் எழுத்தை , தரத்தை, அங்கீகாரத்தை காட்டி தந்தது. சபாஷ் .

  ReplyDelete