Sunday 22 November 2015

மங்களேஸ்வரி...முதல்ச் சண்டை

சிங்கம் எல்லா வேட்டையிலும் வெல்லாது அதுபோல ஒழுக்க சீலமாக  நல் நடத்தையோடு  வாழவேண்டும் என்று எழுதி வைத்த எல்லாமே எப்பவும் நடக்காது . அது வெறும் தியரி , அதை நடைமுறையில் எதிர்கொள்ளும் போது முன்னுக்கு வந்து விழும் வாழ்க்கை அனுபவம் என்பது பிரக்டிக்கல். ஆனாலும் ஒரு இடத்தில தொடர்ந்து ஒரே வேலையைச்  செய்வதுக்கு தியரியும், பிரக்டிகலும் பல சந்தர்பங்களில் ஒரே நேரத்தில் பாஸ் செய்யவேண்டியிருக்கும். 

                                                  அப்படி சொல்லிக்கொண்டுதான் மங்களேஸ்வரி அந்த இடத்துக்கு ஒரு கிழமை சோதனை மேற்பார்வைக்கு வந்தா. வந்து நல்லா அடிப்பெட்டியில் இருந்து அகப்பைக் காம்பு வரை சோதனை செய்து , அந்த ஒரு கிழமை முடிவில் என்னோட வேலைக்கு அவா எழுதிய  சோதனை மேற்பார்வை ரிப்போட் ஆப்பு வைச்சுது. அது நடக்கும் என்று மங்களேஸ்வரி வந்த முதல் நாளே அவா தலையை விரிச்சுப் போட்டு வேப்பிலை இல்லாத குறையாகப் பத்திரகாளி ஆட்டம் போட்ட போதே எனக்கு விளங்கியதால், நான் அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை .

                                                            முதலில் நான் வேலை செய்த அந்த  மயான அமைதியான  இடத்தையும் , ரெண்டாவதா அதில என்ன வெட்டுக் குத்து வேலை செய்தேன் என்பதையும், மங்களேஸ்வரி என்ற மங்கல்ஸ் யார் என்பதையும்..பிறகு  ,,பிறகென்ன  உங்களுக்கே வரிச்சு மட்டை வேலியைப் பிடிச்சுக்கொண்டு போன மாதிரி வாசித்துக்கொண்டு போக விளங்கும் ஏன் மங்களேஸ்வரி கோடாலி போட்டுப்  பனங்கொட்டுப் பிளந்தது போல  எனக்கு ஆப்பு வைச்சா எண்டு 

                                                 சில வருடம் முன்னர்  நோர்வேயில் ஓய்வூதியம் பெறும் வயதானவர்களுக்குப்  பகல் நேரம் மத்தியானச் சாப்பாட்டு கொடுத்து , பின் அவர்களை  வேறு சில உடட்பயிட்சியுடன் இயங்க வைக்கும் நிகழ்வுகள் நடத்தி , முக்கியமா அவர்கள் தங்களுக்குள் இளமையில் செய்த  எல்லா நல்ல செயல்களையும் நினைத்துச் சிரித்து, துன்ப நிகழ்வுகளில் துக்கித்து,  கதைத்துப் பேசி, கோப்பி குடிக்கும் " எல்டர் செண்டர் " என்ற  இடத்தில ஆரம்ப நிலை சமையல் குக் ஆக வேலை செய்தேன்

                                       அந்த இடம் வயதானவர்களின் கடைசிக்காலம் அதன் கடைசிப் பக்கத்தில் பிரியாவிடை எழுதும் நேரத்துக்காகக் காத்திருக்குமிடம். ரெண்டு கிழமைக்கு இடையில் ரெண்டு பேருக்கு அதே இடத்தில படம் வைச்சு மெழுகுதிரி ஏற்றுவார்கள். அந்த ரெண்டு பெரும் சில வாரம் முன் என்னோட கோப்பி குடிக்கும்போது வாழ்க்கை எவளவு அழகானது எண்டு கதைத்துக்கொண்டு இருந்திருப்பார்கள். மற்றவர்கள் அந்த மெழுகுதிரி வாசத்தில் அந்த ரெண்டு பேரின் நினைவுகளைப் பேசிக்கொண்டு தங்களுக்காக  மெழுகுதிரி ஏற்றி வைக்கும் நாளுக்காக மவுனமாகக் காத்திருப்பார்கள். 

                                                    இது வழமையா நடப்பதால் எனக்குச்  சாவு வெறுத்துப் போச்சு. யமன் பாசக் கயிறு எல்லாம் எறிஞ்சு என்னை பிடிச்சு இழுக்கத் தேவையில்லை நானே அதுக்குள்ளே விரும்பித் தலையைவிடத் தயாராக இருந்தேன். நானே நிறைய வாழ்வா அதில் சாவா  அல்லது சாவதுக்கு வாழ்வா எண்டு பார்க்க மதுபோதையின் விளிம்பு வரை போய் சித்திர குப்தனின் கணக்கு வழக்குமுடித்து  வைக்கும் வரவுப் பதிவு புத்தகத்தை தொட்டுப்பார்த்துப் போட்டுத் திரும்பி வந்துதான் அதில சிசிலியாவின் புண்ணியத்தில் வேலை கிடைத்து செய்தேன்.  

                                                        அந்த வேலை எனக்கு என்னோட பிரெண்ட் சிசிலியாதான் மினக்கெட்டு எடுத்து, தலையைப் போட்டுப் பிச்சு என்னை சிபார்சு செய்து ,அதில ஒரு வருடம் வேலை செய்ய வாய்ப்புத்  தந்தாள் . ஜெர்சிப் பசு  மாட்டில பால் கறந்து அதைக் காச்சி காராம்பசுவுக்குப் பருக்கிற  மாதிரி அலுப்பில்லாத வேலை. சில குறிப்பிட்ட உணவுகள், குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட கலோரி சக்கி உள்ளதாக சமைக்க வேண்டும், அங்கே சமையல் கொத்திப் பிரட்டி  ருசி இல்லாட்டியும் பரவாயில்லை ஆனால் அங்கே மெனு  எழுதியுள்ள புத்தகத்தில் உள்ள " சத்துணவுச்  சட்டப்படி " சமைக்க வேணும் ,சிம்பிளாச் சொன்னால் சிம்பிள் வேலை!

                                                                       மங்களேஸ்வரி இலங்கைத் தமிழ் பெண். யாழ்பாணத்தில செம்பாட்டு மண் உள்ள தோட்டக்காணிகள் உள்ள ஒரு இடதில பிறந்ததா சொன்னா, இடம் நினைவில்லை. நோர்வேயிட்கு என்பதுக்களின் ஆரம்பத்தில் போல்க்ஹைஸ் ஸ்கோல் என்ற நோர்வேகாரனின் குடிமக்கள் குடிசைக் கைத்தொழில் படிக்கும் பாடசாலைக்கு படிக்க வந்தவா, அதில படிச்சு,நோர்க்ஸ் மொழி படிச்சு , நடுத்தரப் பாடசாலையில் படிச்சு ,நோர்வே நெளிவு சுளிவு படிச்சு, யூனிவேர்சிட்டியில் சத்துணவு விஞ்ஞானத்தில் டிகிரி படிச்சு ,ஒஸ்லோ சுகாதார திணைக்களத்தில் வேலை செய்தா. அவளவு படிச்சதாலோ என்னவோ தெரியவில்லை  என்னைச்  செக் பண்ண வரும்போது கையோட ஆப்பு ரெண்டும் எடுத்துக்கொண்டு வந்தா.

                                                      தோற்றத்தில் குள்ளமாக என்னோட தோள் மூட்டுக்கு  நிக்கும் அவ்வாவோட நெற்றியில் ஒட்டி இருக்கும் சிவப்பு ஒட்டுப் பொட்டு. உடம்பு ஆட்டுக்கல்லுப் பிரமாணத்தில் ரெண்டு சுற்று ,அதிகம் நடந்தா மூச்சு காற்று கேட்டு வாங்கும். முகத்தில சந்தோசம் கலியாணம் கட்டின அடையாளம் , கடின உழைப்பால் ஜவ்வன ஜொலிப்பு கொஞ்சநாளில் விடை பெற்றுப் போன தடங்கள். படித்த நோர்வே பெண்கள் போல உடுப்பு. இலக்கண சுத்தமா  நோர்வே பாசை எழுதுவா, ஆனால் கதைக்கும் நோர்க்ஸ் மொழியில் இலக்கணம் இருக்கும் அதையும் மேவி மேற்படியான்  ஜெப்னா டமில்ஸ் இன் குறளிவித்தை இழுவையும்  இருக்கும், அது ஒரியினல் நோர்ஸ்கில் இல்லை. மற்றப்படி   சட்ட திட்டத்தில் மங்களேஸ்வரி கையில பிரம்பு இல்லாத கணக்கு டீச்சர். 
                                          

                                                      நான் அந்த இடத்தில வேலைக்கு சேர்ந்த முதல் மூன்று  மாதமும் பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளியமரத்தில் ஏறித்தான் ஆகவேண்டும் என்று  ஒழுங்கா வேலை செய்தேன், பிறகு அந்த வேலை அலுப்படிக்கத் தொடங்க சுத்து மாத்து செய்யத் தொடங்கிட்டன். இப்பிடியே கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர் போல ஜோசிச்சுக்கொண்டிருந்தா வாழ்கையில் முன்னேற ஏலாது எண்டுதான் அதைத் தொடங்கினேன் . நாலு சுவருக்குள்ள நடந்த  அது எல்லாம் எப்படியோ மேலிடத்துக்கு தெரிய வந்துள்ளது. நாலு சுவர் தாண்டி யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று தெரியாது, சுவரில பல்லி இருந்தால் அதையாவது கேட்கலாம் அதுவும் நோர்வேயில் இல்லையே .

                                                                      நான் என்ன திருகுதாளம் செய்தேன் என்று உங்களுக்கு சேர்ச்சில் பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது சொல்லுறதில ஒருவித மனப்பாரம் குறையும் எண்டு சொல்லுறாங்களே அதுபோல சொல்லுறேன். இல்லை முழங்காலில் இருந்துதான் சொல்ல வேண்டும் எண்டு சொன்னாலும் அப்படி இருந்தும் சொல்லுறேன். இதில வெட்கப்பட என்ன இருக்கு நான் செய்து முடிச்ச, முடிந்த விசியம் தானே . போகேக்கா  என்ன  அதையும் சேர்த்தா கொண்டு போகப்போறேன் இல்லையே, பிறகென்னதுக்கு பிடாரி அம்மன் கோவில் கிடாய் வெட்டுப்போல  மறைக்க வேண்டும்

                                                             எல்டர் சென்டரில் இன்ன இன்ன நாள் இன்ன இன்ன சாப்பாடுதான் செய்ய வேண்டும் என்று மெனு இருந்தது. நான் அதைத் திட்டமிட்டு அதிகம் கவனிப்பதில்லை. மெனுவில இல்லாத ,ஸ்ரீலங்கன் ,இண்டியன்,பாகிஸ்தானி, மெக்ஸ்சிகன், துருக்கி  சாப்பாடு எல்லாம் செய்வேன். வயதானவர்கள் அதன் பெயர் எல்லாம் கேட்டு ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். தலை வாழை இலையில பால்ப்பாயசம் ஊற்றி புறங்கையை  நக்கி வழிச்சு சாப்பிட்ட மாதிரி திருப்திகரமாக இருந்ததாலோ என்னவோ ஒரு நாளும் ஒரு குறையும் சொன்னதில்லை. 
                                        
                                            அவர்களே இந்தா அந்தா எண்டு இண்டைக்கோ நாளைக்கோ என்று  ஆணை விழுந்த அதர் அடியில ஆமடையன் பெண்டிலும் விழுந்த மாதிரி  சொல்லாமல் கொள்ளாமல் மேல போற ஆட்கள் தானே அதால அது அவர்களுக்கு அது போற வழிக்கு   ஒரு பெரிய பிரசினை இல்லை. பசித்த  வயிற்றுக்கு வயிறாற ஈஸ்ட்மென் கலரில் விருந்து படைத்தது மகிழ்ந்தேன் எண்டுதான் நான் நல்லகுருநாதன் போல நினைசுக்கொண்டிருந்தேன் . ஆனால் "  சத்துணவுச் சட்டப்படி " அதுவும்  பிழை   எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ் 

                                                      அந்த இடத்துக்கு சமைப்பதுக்கு வேற ஒரு பெரிய குசினி விநியோக மையத்தில் இருந்து ரெண்டு கிழமைக்கு ஒரு தடவை எல்லா உணவுப்பொருட்கள் ,சேர்மானங்கள் ,வேறு எல்லாக் குசினித் தேவைகளும் வரும் . முடிய முடிய முடிந்தவைகளின் லிஸ்ட் அனுப்ப மேலதிகமாகவும் வரும் . விலை அதிகமான மிகத் தரமான உணவுப்பொருட்கள் அவை என்பதுக்கு உத்தரவாதம் எப்பவுமே அதில இருக்கும். நோர்வே நாடு வயதான மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து சாவைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது போல இருக்கும் அவங்கள் அனுப்புற சாமான்களைப் பார்க்க, 

                                                     ஒவ்வொரு கிழமைக்கும் நாலு  சிகப்பு ,ரெண்டு வெள்ளை, என ஆறு வைன் போத்தல் ஒதுக்கப்பட்டிருக்கும். வைட் வைன் சோஸ்,ரெட் வைன் சோஸ் , ரெட் வைன் வேறு சில " பிரெஞ்ச்  ப்லேம்மே ஸ்டைல்  குசின் " எண்ட சமையலுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும். அதை முழுவதும் நான் சோஸ் செய்யப் பாவிப்பதில்லை, முக்கியமா " பிரெஞ்ச் ப்லேம்மேக்கு " ரெட் வைன்னுக்கு பதிலா வினாகிரியை உதறிவிட்டுபோட்டு, சோஸ் செய்யும் போது வாசத்துக்கு கொஞ்சம் மேலே தெளிச்சுப் போட்டு மிச்சப் போத்திலை கொஞ்சம் கொஞ்சமா குசினிக்க வைச்சே நான் உள்ளுக்க விட்டுருவேன் , அதுவும் " சத்துணவுச் சட்டப்படி " அது பிழை எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ்  

                                                              வெறும் வயித்தில வைன் சரிச்சு விட்டுக்கொண்டு இருந்தா ஈரல் குலை எரிஞ்சு குடல் அறுந்து விழும் எண்டு டாக்குத்தர்மார் சொல்லுறதால , அப்படி வைன் அடிக்கும்போது, குளிர்சாதனப்பெட்டியில் சமைக்க எண்டு வைச்சிருக்கும் விலையுயர்ந்த உருகுவே நாட்டு மேல் தோள்பட்டை மென்சவ்வு இறைச்சி எடுத்து மெல்லிய சூட்டில் வாட்டி அதுக்கு ,பச்சை மிளகாய் வெட்டிப் போட்டு " கேசெல்லோ பீப் சோஸ் " செய்து அதையும் சேர்த்துதான் சாப்பிடுவேன் ,நான் என்ன செய்ய  ஈரல் குலை அறுந்து விழும் எண்டு டாக்குத்தர்மார் சொல்லுறதாலதான் அப்படிச் செய்தேன். அதுவும் " சத்துணவுச் சட்டப்படி "  பிழையாம் எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ்,

                                                  அந்த இடத்தில நான் வேண்டுமென்றே கலர் கலரா சமைப்பேன். அதில ஒண்டும் பெரிய டெக்னிக் இல்லை, வழமையான சாப்பாட்டில், கேக் அடிக்கும் போது  ஐசிங் சுகருக்கு போடுற " எடிபிள் கலரிங் " கிடந்தால் மாறி மாறி அதில ஒவ்வொரு நாளுக்கு ஒரு கலர் எண்டு அள்ளிப்போட்டு விடுறது. அந்த வயதானவர்கள் அவர்கள் வாழ் நாளில் அப்படி ஒரு சாப்பாட்டை கண்டே இருக்காத மாதிரி ஆச்சரியாமா அதன் பெயர் எல்லாம் கேட்பார்கள். நான் அந்த நேரம் வாய்க்குள்ள வந்து தவறிவிழும்   என்னவோ ஒரு பெயரைச்சொல்லிபோட்டுப் போவேன் .அவர்கள் மேல சொர்க்க வாயிலுக்கால  போற நேரம் எதை மறந்தார்களோ இல்லையோ என்னோட கலர்  கலரான சாப்பாடுகளை அந்த நேரமும் மறக்க மாட்டார்கள், ஆனால் அதுவும்  " சத்துணவுச் சட்டப்படி " அது பிழையாம்  எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ்.   

                           நான் அந்த இடத்தில வேலை செய்த போது எப்பவுமே " தாமரைப் பூவுக்கும்  தண்ணிக்கும் என்றைக்கும் சண்டையே வந்ததில்லை, ...நாக்கில மூக்கையே தொட்டவன் நானடி ..." என்று ஒரு தமிழ் சினிமாப் பாட்டுப் பாடுவேன் . அதை சில நேரம் நான் எப்பவும் பாடுவதைக் கேட்ட அந்த வயதானவர்கள் சில நேரம் முதல் சில வரிகளைப் அவர்களும் சேர்ந்து பாடுவார்கள். மங்களேஸ்வரி சோதனைக்கு என்று வந்து நின்ற ரெண்டாவது நாளே அந்தப் பாட்டை படிக்க வேண்டாம் எண்டு சட்டம் போட்டா. அதைக் கேட்க தனக்கு அண்டம் குண்டமெல்லாம் பத்திக்கொண்டு வாற கோபம் வருகுது எண்டா  ,பிறகு " சத்துணவுச் சட்டப்படி  " அது பிழையாம்  எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ்.

                                       மங்களேஸ்வரி ஒரு கிழமை தான் பரிசோதனை மேற்பார்வைக்கு வந்தா என்று சொன்னேன் எல்லா, வந்த முதல் நாளே என்னை அவாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நான் நட்பாகப் கதைத்தேன்,. அவா என்னோட திருகுதாளாங்கள் பற்றி கேட்ட கேள்விக்கு நான் பொறுப்பில்லாமல் பதில் சொல்ல உலக்கையால தூக்கி அடிக்கிற மாதிரி முழிஞ்சு பார்த்தா.  ஆனால் நான் மயிரை விட்டான் சிங்கன் என்று பயப்பிடாம உண்மையச் சொன்னேன். வேண்டா வெறுப்பா எல்லாம் செக் செய்தா, வயதானவர்களிடம் என்னைப்பற்றிக் கேட்டா, ஸ்டோக் என்ற இருப்பு எல்லாம் செக் செய்தா, லொக் புக்கில் போட்ட  மெனு  எல்லாம் செக் பண்ணினா. 

                                                  ரெண்டாம் நாளே ரிப்போட் எழுதத் தொடங்கிட்டா, ஆனால் ரெண்டாம் நாளே முக்கிய சூரன்போர் சண்டை தொடங்கி ,முதல்த் தலை கோவில்  வடக்கு வாசலில் விழுந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. மங்களேஸ்வரி வந்த முதல் நாள்,  என்னோட நட்பான வயதானவர்கள் அவா யார், என்ன பெயர், எண்டு விசாரித்தார்கள். நான் அவா பெயர் நோர்க்ஸ்குகள் சொல்ல நீண்ட பெயராக இருப்பதால் பகிடியாக சுருக்கி                      

                         " மங்கல்ஸ் " 
                                   
              என்றும் , இன்னும் ஒரு பகிடியாக அவாவின் வேலையை 
                      
                      " குசினிக்கு தொற்று நீக்கி மருந்து அடிக்க வந்திருக்கிறா  " 

                     என்று சொல்லிக் கதையைப் பரப்பி விட்டேன் . 

                                நோர்வேயில் கள்ளனைப் பிடிக்க வாற பொலிஸ்காரனே அவனுக்குக் ஹலோ சொல்லி, அவனின் பெயர் சொல்லி கையைக் குலுக்கிப் போட்டுத்தான் கையை மடக்கி விலங்கு போடுவான். மங்களேஸ்வரி வந்த நேரத்தில் இருந்து சம்பிரதாய நடைமுறை அறிமுக வந்தன வணக்கங்கள் ஒன்றுமே சொல்லவில்லை. அந்த அறிமுகத்தையும்  நான் விரும்பி எதிர்பார்க்கவுமில்லை, என் பெயர் மற்ற விபரங்கள் பதிவுகளில் இருக்கும் .  

                                                          மங்களேஸ் ரெண்டாம் நாள் காலை வந்து வயதானவர்களுடன் கதைத்த போது பதறிப் போட்டா, கொஞ்சம் என்னோட நுளம்புத்திரிப் பிரச்சாரம் வேலை செய்திருக்கு ,நேரே குசினிக்கு வந்தா 

                              " எனக்குப் பெயர் திருமதி மங்களேஸ்வரி.........,,  மங்களேஸ்வரி ,,ஹ்ம்ம் ,, கங்காள அம்மனின்  பெயர்  தெரியுமா அது  ,

                                "  ஹ்ம்ம்  அது  தெரியுது "

                                   "  நல்ல அழகான அம்மன்  பெயர் அப்பா அம்மா வைச்சது ,,நீ போய் கிழடுகளுக்கு என்னக்கு என்ன ஒரு புதுப் பெயர் சொல்லிக் கொடுத்து இருக்கிறாய் ,,"

                                  " சும்மா  சொன்னேன்  மங்கல்ஸ் "

                                  " என்ன  சும்மா  இனி மங்கல்ஸ்  எண்டி  எண்டா  வாயில  பளார்  எண்டு  போடுவேன்  தெரியுமா  " 

                                    " வாயில  போடாதையுங்க..முதுகில  பளார்  என்டு  போடுங்க..நாரி உளையுது  அதாவது  எடுபடும்  " 

                                  "   பாத்தியா  நீ  என்னை  ஒரு  மேலதிகாரி  என்று  கொஞ்சம்தன்னும்  மதிக்கிறாய்  இல்லையே ,,உனக்கு  வாயில  என்னடா  சீலம்பாயா  சுதிக்கிடக்குது "

                                      "  எனக்கு  வாய் சரி  இல்லை  மங்கல்ஸ் ,  பால்குடியா  பிறந்த  நேரத்தில  இருந்து இப்பிடித்தான்  கதைப்பேன் என்று  எனோட  அம்மாவே  சொல்லுவா "

                                     " இதுதானா இங்க வேலை உனக்கு,,இதுக்கா நோர்வே அரசாங்கம் சம்பளம் தருகுது உனக்கு ,,சொல்லு,,பதில்  சொல்லு,,"

                                  "  என்ன பெயர் சொன்னார்கள் அவர்கள் "

                                  " என்ன பெயரோ ,,அந்தக் கிழடுகள் மண், கல் எண்டு என்னவோ உளறுதுகள் ,,நீ என்ன பெயர் எனக்கு எண்டு சொன்னனி அதை,,சொல்லு,,எனக்குப்  பதில் சொல்லு,,பதில்  இப்ப வேணும் , இப்ப இதுக்கே சட்டப்படி  நடவடிக்கை எடுக்கலாம் தெரியுமா "

                                      " மங்கல்ஸ் எண்டு சொன்னேன்,,அது உங்களுக்கு இளமையா ,,அழகா இருந்தது,,எனக்கும் அந்தப் பெயர் பிரெண்ட்லியா இருக்கு,,அப்படி  நான் கூப்பிடவா  உங்களை "

                                   " ஒ ,,பெயர் வைக்கிறதில பெரிய காளமேகப் புலவர் போல, என்னை அப்படிக் கூப்பிட  வேண்டாம் , மேடம் எண்டு கூப்பிடு அல்லது மங்களேஸ்வரி என்று கூப்பிடு , இல்லாட்டி வாயைப் பொத்திக்கொண்டிரு,  உனக்குத் தெரியுமா நான் சட்டப்படி உன் மேலதிகாரி "

                                     "   தெரியும் மங்கல்ஸ் "

                                   " அய்யோ பேந்தும்பார்..இவளவு சொல்லியும் உனக்கு மண்டைக்க ஏறுதில்லையே ,,ஆண்டவா என்னைக் காப்பாற்று "    

                                "  உங்க பெயர் நீண்டதா இருக்கு  அதை சுருக்கி மங்கல்ஸ் எண்டு வைச்சேன் அதுக்கு என்னவோ குடியிருந்த குடிசை தீப்பற்றின மாதிரி  இந்தக் குதி குதிக்குரின்களே மங்கல்ஸ்   "

                                "  அய்யோ கடவுளே  பேந்தும்பார், மங்கல்ஸ் ,,மங்க்ல்ஸ் ,மங்கல்ஸ் எண்டு சாகிறியே,,என்னை மேடம் எண்டு சொல்லு ,,உனக்கு ஒண்டும் குறைஞ்சு போகாது ,,உன்னட்ட என்ன கிடக்கு குறைஞ்சு போக ,,இனி   மேடம் எண்டு கூப்பிடு    "

                                       " நான் தானே உங்களை குசினிக்க மட்டும் அப்படிக் கூப்பிடுறேன் , இதில என்ன பெரிய பிரசினை, வயதானவர்கள் வேற என்ன சொன்னார்கள்,,உங்க வேலை என்ன எண்டு கேட்டார்களா மங்கல்ஸ் " 

                                  " அய்யோ கடவுளே  பேந்தும்பார், மங்கல்ஸ் ,,மங்க்ல்ஸ்..கிழடுகள் அதொண்டும் சொல்லவில்லை,,மண் கல் எண்டுதுகள்,,சரி நீ சொல்லுற மாதிரி மங்கல்ஸ் எண்டு ஸ்டைல்ல சொன்னாலும் பரவாயில்லையே ,,அதெல்லே கொதி வரப்பண்ணுது "

                                      " சரி விடுங்க ,,சிரிச்சிட்டுப் போங்க " 

                                   " ஹலோ,,மிஸ்டர் .N.....  நான் இங்க சிரிக்க வரவில்லை,,நீ என்னக்கு  சிரிப்புக் காட்டுறதுக்கு நோர்வே அரசாங்கம் உனக்கு சம்பளம் தரவில்ல,,அதை நினைவில் கொள்ளு ,,உன் அணுகுமுறை இதெல்லாம் சட்டப்படி பிழை தெரியுமா " 

                               " தெரியும் மங்கல்ஸ் ,,ஏன் காலைக்  கெந்திக்  கெந்தி நடகுரிங்க "

                        "  காலில  பித்த வெடிப்பு  இருக்கு "

                                          "   அதுக்கு  ஆமனக்கு  எண்ணையில் கடுகு வெந்தயம் தாளிச்சுப் போட்டு அதைப் போட்டு  உருவி விட்டா  நல்லா  இருக்கும்  "

                                              "    நீ அதெல்லாம்  செய்வியா "

                                    "  நாட்டு வைத்தியம் கொஞ்சம் தெரியும்  மங்கல்ஸ் "

                                  "  இதே  சாட்டில பெண்டுகளின் கால் கையைத் தடவுற  பிளான்  போட்டு வைச்சு இருக்கிறாய்  போல  "                   

                                   " தாமரைப் பூவுக்கும்  தண்ணிக்கும் என்றைக்கும் சண்டையே வந்ததில்லை, ...நாக்கில மூக்கையே தொட்டவன் நானடி ..."          

                                   "  ஹ்ம்ம்,,,இதென்ன  பாட்டு,,என்னை வைச்சு முசுப்பாத்தி போல,,,,நான் யார் தெரியுமா,,உனக்கு மேலதிகாரி,,,எனக்கே கொசப்பு பாட்டு பாடிக் காட்டுறாய் , அதுவும் எனக்கு முன்னாலேயே "

                                 " இல்லை,,இது ஒற்றுமையை வலியுறுத்தும் பாட்டு மங்கல்ஸ் "

                               " அய்யோ,,எனக்கு மண்டை வெடிக்குது, இனி மங்கல்ஸ் எண்டு சொன்னி எண்டால் ,,எனக்கு கோபம் வருமா எண்டு எனக்கே தெரியவில்லை,,ஆனால் கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு,,ஆனால் சிரிப்பன் எண்டு நினைக்காதை அது நடக்காது,,நான் உன்னோட மேலதிகாரி அதை நினைவில் வை     "

                                "  சரி ,,மங்கல்ஸ் "

                            " என்ன சரி ,,முதல் வாய்க்கு வாய் காட்டாதை, மேலதிகாரி சொல்லுறதைக் கேள், அது ஆம்பிளையோ,,பொம்பிளையோ  அது முக்கியமில்லை, ,நீயா நினைத்துக்கொண்டு எழுப்பம் விட்டு ஆடாதை  "             
                                    " இல்லை,,மங்கல்ஸ் ,இதில என்ன இருக்கு,நீங்க ஒரு கிழமைதானே இங்கே வேலை செய்து ரிப்போட் எழுதி கொடுக்கப் போறீங்க,,,அந்த ஒருகிழமையோடு நானும் நிட்ச்சயமா போயிருவேன்...மங்கல்ஸ் என்ற பெயர் ஒருகிழமை மட்டும் இருந்திட்டுப் போகட்டுமே " 

                               என்றேன். " அந்த ஒருகிழமையோடு நானும் நிட்ச்சயமா போயிருவேன்.."  இந்த வார்த்தையைக் கேட்ட போது மங்கல்ஸ் கொஞ்சம் இரக்கமா என்னைப் பார்த்தா.என்னதான் இருந்தாலும் அவா ஒரு தமிழ் பெண் தானே,கட்டாயம் இறுக்கம் இருந்தாலும் இரக்கமும் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். அதனால் மங்கல்ஸ் பிறகு பெயர் பற்றி ஒண்டும் சொல்லவில்லை . 

                                      முதல்ச் சண்டை இப்படி மெல்லவே தொடங்கினாலும்  மூன்றாம் நாள் தான் வாழை வெட்டுப்போல முக்கிய சண்டை குசினிக்க தொடங்கியது .கதை வடக்கன் மாடுகளை அவிட்டு விட்ட மாதிரியான  திசை வளத்தில்  போறதால் ,மிச்சத்தைப் பாகம் ரெண்டிலும்,மூன்றிலும் எழுதி ஒரு முடிவு காணுறேன் ...  ஓகே யா ?
.
.

12 comments :

  1. ஹஹஹஹஹஹஹாஹா
    ஹஹஹஹஹஹஹஹா
    வேறென்ன எழுதமுடியும்.. இயல்பான கதை. உண்மையான இடங்களை வைத்து கற்பனை கதை., அருமை

    ReplyDelete
  2. பிறகென்ன உங்களுக்கே வரிச்சு மட்டை வேலியைப் பிடிச்சுக்கொண்டு போன மாதிரி வாசித்துக்கொண்டு போக விளங்கும்.....:)

    ReplyDelete
  3. இது தான் உங்கள் பாணி, ஒரு கண்ணதாசன் அளவுக்கு அப்பட்டமாக சொல்லி, அப்பிடியே உங்கள் கதையால் மனதை கொள்ளை அடித்து விட்டீர்கள். தெரியாத பழமொழிகள் பல , நீங்கள் சொன்ன குற்றங்கள் எல்லாம், சுவாரசியமானவை , ரசிக்க வைத்தன," சத்துணவுச் சட்டப்படி " பிழை பிழை என்று ஒரு டியாலக் உடன் கதை super , marvelous சொல்ல வார்த்தை இல்லை, அடுத்த தொடர்சிக்கு காத்து இருக்கிறேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. திறமைகள் எங்கிருந்தாலும் தூங்கிவிடாது என்பதற்கு இந்த NA ஓர் எடுத்துக்காட்டு. கதையில் யாழ் மண்வாசனை அப்படியே கமகமக்கிறது. இரண்டாம் , மூன்றாம் பாகங்கள் கூடவே இருந்திருந்தால் மூச்சு விடாமல் படித்து முடித்திருக்கலாம். அந்த நாளில் "கரித்துண்டை" மூன்றே நாளில் முகிழ்ந்து தள்ளியவன் நான். பாராட்டுக்கள் அன்பரே.

    ReplyDelete
  5. இலங்கை தமிழ்....அருமை..சார்...

    ReplyDelete