Friday, 16 October 2015

மனோன்மணி அம்மன் கோவிலில்

தேவதைகள்  எங்கள்  ஊரில்  இருந்தார்களா என்று  இப்ப சொல்ல முடியவில்லை. அந்த வயசில் எல்லா இளம் பெண்களுமே சுந்தரிகள் போலத்தான் இருந்தார்கள். அவர்களின் சின்னச் சிரிப்பே பெரும் காப்பியங்களை எழுதிய நேரத்தில் விடுதலைப் போராட்டம் வா வென்று அழைத்தது . ஒரு  காலம் அதன்  நினைவுகளில் கனகாம்பரப் பூக்களின் வாசத்தையும், அந்த ரம்மிய  மனதிலிருந்து வெளிவர முடியவில்லையே  என்று இரவெல்லாம் நினைக்க வைத்த வயசுக்கோளாறை எப்படிக் கடந்து வந்தோம் என்று அடிக்கடி நினைக்க வைக்கும் பழைய நினைவுகள் 

                                                       யாழ்பானத்தில நல்லூர் கோவிலுக்கு அருகில் பிறந்து ,வளர்ந்ததால் , சங்கீதமும் ஏதோ ஒரு விதத்தில கூடவே சேர்ந்து வளர்ந்தது ,என்னோட அப்பா " சைவசமய ஞாணப்பழம் " அதால தேவார திருமுறைகளை பண்ணிசையில் படிக்கவேண்டும் எண்டு அதைப் படிக்க  ஒரு "சங்கீத பூசனம் "  ஐயாவிடமும் , ஒரு பண்ணிசைத் திலகம்  மாஸ்டர்டமும் ஏற்பாடு செய்திருநதார் ,அதால சில வருடங்கள் படித்த சங்கீதம் கொஞ்சமும் என்னோட கூடவெ சங்கீதம் படித்த பெண்களின் முகம்கள் அதிகமாகவும் நினைவு இருக்கு,

                               நல்லூர் கோவிலுக்கு அருகில் இருந்த நாவலர் மணி மண்டபத்தில் ஒவ்வொரு ஞயிற்றுக் கிழமையும் பண்ணிசை வகுப்பு நடக்கும் ,அதை பண்டிதர் கார்த்திகேசு அவர்கள் நடத்துவார்கள். பண்ணிசை என்றால் தேவார திருமுறைகளை தமிழிசைப்  பண்ணில் பாடுவது . அதில நான் படித்தத பண்ணில்  மாயாமாளவகௌளை, இந்தோளம் , இந்த ரெண்டின் ஆரோகணம் அவரோகணம் இரண்டும் தான் இப்பவும் நினைவு இருக்கு . அதைச் சொல்லித் தந்த பண்டிதர் கார்த்திகேசு வேறு பல பண்கள் சொல்லி தந்தார் ,ஆனால் நினைவில் இல்லை .

                                    மற்றபடி எனக்கு கர்நாடக சங்கீதம் முழுமையா தெரியாது. ஒரு சில ராகமும் அதுவும் , கல்யாணி,ஆரபி ,சிவரஞ்சனி ,சண்முகப் பிரியா, சாருமதி ,நீலாம்பரி போன்ற  அழகான பெண்களின் பெயரில் உள்ள  ராகங்கள் மட்டும் நினைவிருக்கு,அதுகள் அழகான பெண்களின் பெயரில் இருந்தபடியால் மட்டும் இன்னும் நினைவுருக்கு மறக்கவே முடியவில்லை!

                               இவ்வளவுதான் நான் சொல்ல வந்த விஷயமும்
இவ்வளவுதான் அதற்குத் தேவையான வார்த்தைகளும்
இவ்வளவு தான் வாழ்க்கை என்று வாய்விட்டு சொல்ல முடியாத அந்த வயதில் சங்கீதம் மன்மத அம்புகள் தைத்த இடங்கள் எல்லாம் கோபுர சந்தனம் தடவியது . ஆனாலும் அதை முறைப்படி படிக்க சந்தர்ப்பம் இருந்தும் குழப்படித்தனத்தில்  படிக்கவில்லை என்பது ஒரு குறையாகவே இப்பவும் இருக்கு .

                                     நல்லூர் கோவிலை சுற்றி, நல்லை ஆதினத்தில், தெற்கு வீதியில்,கம்பன் கழகத்தில், மனோன்மணி அம்மன்கோவிலில் நிறைய சங்கீதக்கச்சேரி எப்பவுமே நடக்கும்! அண்ணாமலை இசை தமிழ் மன்றம் ஒவ்வொரு வருடமும் இசைவிழா நல்லை ஆதினத்தில நடத்துவார்கள், அதில "சங்கீத பூசனம் " பொன் சுந்தரலிங்கம், "சங்கீத பூசனம் " திலகநாயகம் போல், பாடினால் அரங்கு நிரம்பி வழிந்து வெளியே ரோட்டை வழிமறித்துக்கொண்டு நிண்டு கேட்பார்கள் ,அவளவு பேமஸ் அவர்கள் இருவரும்.

                            நல்லூர் கோவிலின் வடக்கு வீதியில் , நல்லைக் கந்தனின் அலங்கார அட்டகாச,பிரபலங்களில் இருந்து விலத்தி , "  நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால் நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ ...." என்று அமைதி நாடும் சாதாரண மனிதர்களின்,சாமான்ய இசை அறிவின் விளிம்பில் அடக்கமாக ,அமைதியாக ,ஆர்ப்பாடம் போடாமல் இருந்த  மனோன்மணி அம்மன்கோவிலில்தான் அழகான இளம் பெண்கள் ஒவ்வொரு ப்வுர்ணமி தினத்திலும் பாடுவார்கள். வெளியே மணலில் படுத்து கிடந்து கேட்கலாம் !

                       இளம் பெங்கள் பாடும் சங்கீதம் அவர்கள் போலவே இளமையா இருக்கும். பட்டுச்சீலை, மல்லிகைப்பூ மாலை, காதில லோலாக்கு , நெற்றியில் சாந்துப்பொட்டு ,என்று அவர்களே மனோன்மணி அம்மன் சிலைபோல , "நிலவின் ஒளியில் தெரிவது தேவதையா " என்பதுபோல சம்மானம் கட்டி இருந்து ,தேன் வழியப் பாட கோவிலை சுற்றியே சந்தன மல்லிகை வாசம் வரும்!

                                 பெரிய கிழட்டு  "சங்கீத பூசனம் " வித்துவான்கள் காட்டும் "ஆலாபனை வித்தை" எல்லாம் காட்டா மல் இயலப்பாக   அவர்கள் இளமை குரலில் அந்த தெலுங்கு மொழிக் கீர்த்தனைகளை பாடுவது நிறைய " பீலிங்க் " கொடுக்கும் , "எந்தரோ பா மகானுபாவ " தியாகராஜா கீர்த்தனை தொடங்க முளந்தண்டு குளிரும், "நகுமோமு  கனலேனே   நாசாலி  தெளிசே "  கீர்த்தனை ஆரம்பிக்க நாக்கில தண்ணி வத்திப்போகும் , "ஜகதானந்தா தரா " பஞ்ச கீர்த்தனை தொடங்க வயித்துக்குள்ள பட்டம் பூச்சி பறக்கும்,ஆரபி ராகத்தில " சாடிஞ்சனே " தொடங்கி ,அதன் சரணத்தில "சமயாகி ரிக்கி தகு மாடலாகு" எண்டு கொஞ்சம் வேகமான தாளத்தில பாய நாடி ,நரம்பெல்லாம் அதிரும்.

                                              தியாகப்பிரம்மம் தியாகராஜா சுவாமிகளின் " பஞ்ச இரத்தின  கீர்த்தனைகளையே" அதிகம் ஆலாபனை, அலாரிப்பு , தனியாவர்த்தனம் எண்டு வில்லங்கமாப்  போட்டு அதிரவைகாமல், அழகான அந்த இளம் பிள்ளைகள் பஞ்சுபோலப் பாடுவார்கள்! என் நண்பன் கிருபாவையும் இழுத்துக்கொண்டு போய் தான் மணலில் படுத்துக் கிடந்தது அந்த சங்கீதத்தைக் கேட்டு இருக்கிறேன். அவனுக்கு சங்கீதம் தெரியாது ஆனால் நிலவின் ஒளியில் ரம்மியமான இரவை நன்றாகவே ரசிக்கத் தெரியும் . அப்படி ஒரு நண்பன் கிடைப்பது அரிதான ஒரு நிகழ்வு .

                                  எங்களின் உரையாடல்கள் எப்போதும் அதிகாலைக் கனவு போல இருந்தது. 

                         " கேசி அவள் கொஞ்சம் மசியிறால்டா , இன்னும் கொஞ்சம் இறுக்கி சுழட்டினாள்,காய் விழுத்தலாம் , சூட்டி கட்டாயம் மடங்குவாள், கம்பஸில் படிக்கிற  அவளோட அக்கா தான் பிரசினை  மற்றப்படி வெட்டியாடலாம் , கொஞ்சம் பொறு மச்சான் அவளுக்கு நான் அலுவலைக் கொடுக்கப் போறேன்,,நீ பார் மச்சான்  " 

                                   என்று  கிருபா மணலில் மல்லாந்து படுத்துக்கொண்டு சொல்லுவான். சங்கீதக் கச்சேரி பின்னணியில் ஆயிரம் தாமரை மொட்டுகளே ஆனந்தக் கும்மி கொட்டுங்களே போல அலாதியாக இருக்கும் ஆனால் உண்மையில் அதெல்லாம் பாரதிராஜா படத்தில வார காதல் சீன் போல சோளம் விதைக்கையிலே சொல்லிபோட்டுப் போன மச்சான் போல முடியவில்லை, பதிலாக பாலச்சந்தர் படங்கள் போல அபத்தமாகத்தான் ரியாளிடியில் முடிந்தது 

                             கடைசியில் எப்பவும் ஆனந்த பைரவி தாய் ராகத்தில், அதன் மூன்று ஜென்ம ராகங்கள் அசத்தும் " கற்பக வல்லி நின் பொற் பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா ..." பாடல் எப்பவுமே மனோன்மணி அம்மனின் தனிப்பட்ட விருப்பம் போல பாடி முடியும் அந்த நிகழ்சியில் பாடி முடிய பவுர்ணமி  முழு நிலவு நடு உச்சிக்கு மேல அடிச்சுப் பிடிச்சுப்  பிரகாசமாக வழிய, அதன் பால் ஒளி கோவிலிக்கு அருகில் இருந்த நெல்லிமரம் எங்கும் சிதறி , கோவில் சுவரில நடனமாட, கடைசி இரவுக் குருவியும் சோம்பலாகப் பறந்து செல்ல, அந்தக் கச்சேரி முடிய,  அம்மனுக்கு ஆலாத்திகாட்டி. முடிவில, சுவையான  அவல், கடலை,சுண்டல்லும் தருவார்கள் ,  சங்கீதம் விளங்குதோ இல்லையோ  அவல், கடலை,சுண்டல்லுக்காகவே கச்சேரி முடியும் வரை  இருக்கலாம்!.

                        சாத்திரிய சங்கீதத்தின் பலவீனம் அதை முழுமயாக படித்தவர்கள்தான் அதன் சுவையை பிரிச்சு மேய்ந்து முழுமையா அனுபவிக்கலாம் என்கிறார்கள். என்னைப் போன்ற சராசரி  ரசிகர்களுக்கு  அதன் முழு வீச்சு விளங்காது ,அது ஒரு பலவீனம் , சரி, அப்ப அதன் பலம் என்ன என்று கேட்பிங்க , சொல்லுறன்....

                 சுவிடனில் இருந்த போது என்னோட  ஒரு நல்ல ப்ரென்ட் ஸ்வீடிஷ் வெள்ளை இனத்தவா ,பிறந்து வளர்ந்து முதல் ஸ்வீடனை தவிர வேறு உலகம் தெரியாத அப்பாவி , கிளாஸிக்கல் வெஸ்டேர்ன் முயூசிக் முறைப்படி படித்தவா. Pichoda. Beethoven, Mozart, Ennio Morricone என்ற மேலைத்தேய இசை மேதைகளின் சிம்பொனி ஒர்கேஸ்ரா எல்லாம் விரல் நுனியில் பியானோவில் விளையாடும் மேதாவி .

                                 ஒருநாள் ஒரு பரிசோதனை போல அவளுக்கு  "அலை பாயுதே கண்ணா,........." என்ற Dr. மங்களம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா உருகி உருகிப் பாடிய பக்திப் பாடலை கிடாரில் வாசித்து காட்டி,   

                      "இதை கேட்கும் போது உன்னுள்ளே எப்படியான பீலிங்க்  வருகிறது? " 

                      எண்டு கேட்டேன், நான் கிடாரில வைச்சு நோன்டியத்தை  ,என்னோட நட்பாக இருக்கும்  ஒரே ஒரு குற்றத்துக்காக பொறுமையாகக் கேட்டுப்  போட்டு, அந்தப் பாடலின் அடி நாதமாக இருந்த ராகம் , அதன் உணர்ச்சிப் பிரவாகம்  , சாஸ்திரிய  இசை வடிவம்,  அவளை மயக்க கொஞ்ச நேரம் பொறுமையாக் கேட்டாள்..

                                  " இதை கேட்கும் போது உன்னுள்ளே எப்படியான பீலிங்க் வருகிறது " 

                            எண்டு மறுபடியும் கெஞ்சிக் கேட்டேன்  , அவள்  உண்மையாகவே சீரியஸ் ஆக என்னைப் பார்த்து நம்பமுடியாத மாதிரி சொன்னது,  

                       "  music is a kind of spritul dimension ,,i red  that many years back,,but feel that now,,,உருகி உருகி  அடி மனதில் அமைதியான, எளிமையான அர்த்தமுள்ள , தெய்வீகமான , கடவுளுக்கு நெருக்கமான ஒரு  பக்தி உணர்வு வருகிறது,அதை வார்த்தைகளில் மொழி பெயர்த்து  சொல்ல முடியவில்லை "   என்றாள்.

                         ..ஒரு ஐரோபியப் பெண் "அலை பாயுதே கண்ணா,........." பாடலை சிலை போலவே நின்று ரசித்துக் கேட்டு அதைக்   " கடவுளுக்கு நெருக்கமான ஒரு  பக்தி உணர்வு " என்று சொன்னாள் பாருங்க ,..அதுதான் கீளைத்தேய கர்நாடக சாத்திரிய சங்கீதத்தின் பலம்!
.1 comment :

  1. "ஆலாபனை வித்தை" எல்லாம் காட்டா மல் இயலப்பாக அவர்கள் இளமை குரலில் அந்த தெலுங்கு மொழிக் கீர்த்தனைகளை பாடுவது நிறைய " பீலிங்க் " கொடுக்கும் , "எந்தரோ பா மகானுபாவ " தியாகராஜா கீர்த்தனை தொடங்க முளந்தண்டு குளிரும், "நகுமோமு கனலேனே நாசாலி தெளிசே " கீர்த்தனை ஆரம்பிக்க நாக்கில தண்ணி வத்திப்போகும் , "ஜகதானந்தா தரா " பஞ்ச கீர்த்தனை தொடங்க வயித்துக்குள்ள பட்டம் பூச்சி பறக்கும்,ஆரபி ராகத்தில " சாடிஞ்சனே " தொடங்கி ,அதன் சரணத்தில "சமயாகி ரிக்கி தகு மாடலாகு" எண்டு கொஞ்சம் வேகமான தாளத்தில பாய நாடி ,நரம்பெல்லாம் அதிரும்.///

    மிகமிக அழகான தொடர்பாடல் வார்த்தைகள்.
    அற்புதமான எழுத்து

    ReplyDelete