Saturday, 5 September 2015

சாந்தன் மாஸ்டர்..

யாழ்பாணத்தில சின்ன வயசில், கிட்டாரை ஒழுங்கா முழங்காலில் வைத்து, அதை இடுப்பில முண்டு கொடுத்து, கைக் குழந்தை போல அதை விளாமல் பிடித்துக் கொண்டு, தாறு மாறா கம்பிகளை மைக்கள் ஜாக்சன் ரேஞ்சுக்கு அறுத்து எறியிற மாதிரி தட்ட தொடங்க, அதை பொறுமையா, முறைப்படி வாசிக்க கற்றுத் தந்தவர், திருநெல்வேலி கலாசாலை வீதியில் வசித்த, கிட்டார் மாஸ்டர் அனுக்கிரக விநாயக மூர்த்தி சிவனுசாந்தன் என்ற சாந்தன் மாஸ்டர். 

                                                     யாழ் பல்கலைக்கழக வின்ஞானப் பட்டதாரியான அவர் யாழ் பரியோவான் கல்லூரியில் அட்வான்ஸ் லெவல் பிசிக்ஸ் ஆசிரியரா இருந்தார்,அவரோட மூத்த மகளின் பெயரான அபர்ணாவின் பெயரை வைத்து உருவாக்கிய " அபர்ணாலயா " என்ற இசைக் குழுவையும் சில வருடம் நடத்தினார்.

                                             நான் அவரிடம் கிட்டார் படித்தது கொஞ்சம் சொந்தமாக நோன்டத் தொடங்கும் நேரம் என்னை அந்த இசைக்குழுவில் " பேஸ் கிடாரிஸ்ட்" ஆக ரிஸ்க் எடுத்து ஒரு நம்பிக்கையில் வைத்து இருந்தார், நான் அவர் நம்பிக்கை பொய்த்துப் போகாத மாதிரி " பேஸ் கிட்டார் " வாசித்தேன் எண்டு தான் கொஞ்சம் தன்னும் இசைஅறிவு இல்லாத பல நண்பர்கள் என்னைப் புகழ்ந்தார்கள் அந்த நாட்களில்.

                                நானும் என்னோட நண்பர்கள் சயந்தன் என்ற சயந்தநாதன்  , ஜெனாத் என்ற ஜெனகன் மூன்று பேரும் கிடாரிஸ்ட் ஆகியே வேண்டும் என்ற ஒரு கொலை வெறியில பழகினோம், ஆனாலும் என் நண்பர்கள் வேலை,படிப்பு காரணமா அதை இடையில் விட நான் கிட்டார் வாசித்தால் பெட்டைகள் மயங்குவார்கள் என்று ஒரு பரவலான வதந்தி அந்த நாட்களில் ஊருக்குள்ள உலாவியதால் ,வேற வழி இல்லாமல் இயன்றவரை அதைப் பழகினேன்,


                                  பின் நாட்களில் என் இளையநிலா பாடலின் இசையில் மயங்கிய, என்னோட கிட்டார் வாத்தியத்தின் வடிவில கண் வைத்த, கிட்டார் கம்பிகளின் நளின நாதத்தில் சுருண்ட பெண்கள் , மறந்தும் என் அழகை ஏறெடுத்தும் பார்கவில்லை. அப்படி எனக்கு நடக்காததால் அது உண்மையில் ஒரு வதந்தியா தான் இருக்கவேண்டும் ,எப்படியோ என் கிட்டார் வாசிப்பைப் பார்த்த பல பெண்கள் குரங்கின் கையில குங்குமப்பூவைக் கொடுத்த மாதிரி பார்த்ததுதான்   அதிகம் நினைவு இருக்கு  .

                                       சாந்தன் மாஸ்டர் அன்பானவர், அடக்கமானவர், அமைதியானவர் ,ஒவ்வொரு நாள்க் காலையிலும் ஒரு மணித்தியாலம் சொல்லி தருவார், வார விடுமுறை நாட்களில் அதிகமாக அவரும் நாங்களும் சேர்ந்து பாடல்கள் வாசிப்போம் , ரிதம் கிட்டார் வாசிக்கும் நுணுக்கம், பேஸ் கிட்டார் எப்படி விரல்களை வைத்து தாள கதியில் விளையாடுவது போன்ற விசியங்களை, மிக எளிமையான " போர்- போர்- பீட், திரி -திரி -பீட் "என்ற எளிமையான முறையில் நோட்ஸ் எழுதி தந்து சொல்லித்தந்தார்.

                                                 யாழ்பாணத்தில் அந்த நாட்களில் கிட்டார் படிக்க ஒரு குரு இருந்தே ஆகவேண்டும், இப்ப போல " இன்டர்நெட் ஆன்லைன் " குரு வசதி எல்லாம் இருக்கவில்லை, ஆனாலும் பல இசை ஆசிரியர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுதான் சொல்லி கொடுப்பார்கள்,அதுக்கு மிஞ்சி சிஸ்சனுக்கு சொல்லிக் கொடுத்தா குருவை மிஞ்சி, கடைசியில் துரோணர் போல கட்டை விரலை வெட்டித் தர சொல்லும் ஒரு நிலைமை இருந்தாலும் ,சாந்தன் மாஸ்டர் அப்படி ஒரு மனநிலை இருக்கவே இல்லை. 


                                   அது இன்றைக்கு இசைத் துறையில் இருக்கும் பலரின் ஈகோ ,பொறாமை போன்ற குழறுபடிகளை நினைக்கும் போது அவர் ஒரு வித " எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் " என்ற மனநிலையில் இருந்து சொல்லி தந்தது ஆச்சரியமா இருக்கு.

                                                அந்த நாட்களில் " வெஸ்டர்ன் கிட்டார் இசை " பற்றிய குறிப்பு உள்ள புத்தகங்கள் ஆங்கிலத்தில் வேறு இருந்ததால், ஆங்கிலம் வாசிப்பது வேப்பெண்ணெய் குடிக்கிறதுக்கு சமன் போல இருந்ததால்,சும்மா அந்தப் புத்தகங்களை படம் பார்த்து வெளிநாட்டு " ராக் அண்ட் ரோல் " இசைக் குழுக்கள் போல மாசக்கனகில் தோய்க்காத இறுக்கமான டெனிம் ஜீன்ஸ் உடை, சலூன் பக்கம் போகாத ஹிப்பி தலை மயிர் ஸ்டைல மட்டும் படம் பார்த்து " ராக் அண்ட் ரோல் " கொப்பி அடிக்க முடிந்தது.

                                                     கிடாரை வைத்து உலகைக் கலக்கிய பீட்டில்ஸ் இசைக் குழுவின் " insider story of Beatels " என்ற ஒரு புத்தகம் யாழ் முனிசிபல் லைபிறேரியில் இருந்தது, யாழ்பாணத்தில அந்த ஜார்ஜ் ஹரிசன் ,ஜோன் லெனன் ,போல் மக்ட்னி என்பவர்கள் கிடார் வாத்தியக் கலைஞ்சரா இருந்த, " பீடில்ஸ் "இசைக் குழுவின் பாடல்கள் ஆங்கிலப் பாடல்கள் கேட்பவர்களுக்குத்தான் தெரியும் அந்த நேரம் . 


                                      எங்களின் வீட்டுக்கு அருகில் வசித்த, " கஸ்சுப் புஸ்சு " எண்டு கொடுப்புக்குள்ள இங்கிலிசு கதைக்கும் அப்போதிகரி டாக்டர் ஒருவர் என்னோட பெரிய அண்ணனுக்கு அவர் விரும்பிக் கேட்ட " பீடில்ஸ் " பாடல் அடங்கிய ஒரு கேசட் கொடுத்து இருந்தார் அதை அண்ணன் வீட்டில கொண்டுவந்து போட, அந்த பாடல்களின் இசை அண்ணனை மயகாமல், ஏனோ என்னை மயக்கியது.,

                                               " insider story of Beatels " என்ற புத்தகத்தை வரிக்கு வரி படிக்க , என்னோட நெஞ்சினில் " பீடில்ஸ் " நெருப்பு பத்தியது. அதில் வாசித்த கிட்டார் இசைக்கலைஞர்கள் வாழ்க்கை வெறுத்த தேவதாஸ் சாயல் போலவே தாடி ,மீசை ஹிப்பி ஸ்டைலில் ,சாப்பாட்டுக்கும் வழி இல்லாதவர்கள் போல இருந்த அந்த இசைக்குழு கலைஞ்சர்களின் படத்தை நான் எங்கள் வீட்டு அறையில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டி வைத்து ,கொஞ்சநாள் அதை எப்பவும் பார்த்து கொண்டே இருப்பேன், அம்மா வந்து


                                                  " என்னத்துக்கடா இந்த பரதேசி போல இருக்குரவங்களின் படத்தை இங்கே ஒட்டி வைத்து இருக்குறாய். மூதேவி வீட்டுக்க வரப் போறா " 

                                            எண்டு சண்டை பிடிப்பா.

                                                    சாந்தன் மாஸ்டரின் இசைக்குழுவில் " Bass "கிடார் வாசித்த போது, நீண்ட தாடி, நீண்ட தலைமயிர் வளர்த்து ராப்பிச்சைகாரன் போலவே மேடையில் வாசித்தேன்! பலர் நேரடியாவே கேட்டார்கள்


                        " உங்களுக்கு என்ன தேவதாஸ் போல காதல்த் தோல்வியா? " என்று, நான் சொன்னேன் 

                                   " பீடில்ஸ் ஜார்ஜ் ஹரிசன் பாதிப்பு" எண்டு .

                                        இப்ப எப்படியோ தெரியாது , ஆனால் பலருக்கு அந்த கால யாழ்பாணத்தில விளங்கவில்லை நான் என்ன சொல்லுறன் எண்டு ! அதனால ஒரு குத்துமதிப்பா எனக்கு மனநிலை சரி இல்லை எண்டு என் காதுபடவே புரளியக் கிளப்பி , அதையே கொஞ்சம் நாலு பக்கமும், உண்மை போலவே ஊதி விட்டார்கள் !

                                    ஜோசிதுப்போட்டு, அவர்களின் கேள்விக்கு "செல்வசன்னதி முருகனுக்கு நேர்த்திக்கடனுக்கு வளர்கிறேன் " என்றேன்,அதன் பின் பலர் நண்பினார்கள்! இப்படிதான்,தமிழ் கலாசார சூழலில் ஒருவன் தாடி ,மீசை ,தலைமயிர் வளர்க எப்பவுமே வலுவான காரணங்கள் தேவை, இல்லாட்டி முழு விசரன் ஆக்குவார்கள்.

                                           எங்கள் வீட்டில் கடைசி தம்பி புகழ் பெற்ற தபேல ,மிருந்தங்கம் வாசிக்கும் கலைஞணா இருந்தான் , என்னோட அம்மா நான் கிட்டார் வாசிப்பது பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருப்பா, அவாவுக்கு என்னில பெரிதா நம்பிக்கையே இல்லாமல் இருந்து இருக்கலாம், ஒரே ஒரு முறை சாந்தன் மாஸ்டரின் " டிக்கெட் ஷோ " ,காலையிலும், மாலையிலும் நடந்த இசை நிகழ்வு யாழ் பல்கலைக் கழக கைலாசபதி மண்டபத்தில் நடந்து, அதில கன விசியம் செய்தோம் ,நானும் சாந்தன் மாஸ்டரும் சிட்டி பாபுவின் " க-ப-த க-ப-த " என்ற வீணை துக்கடாவை வாசித்து அசத்தினோம்,

                                                உலக அதிசயமாக அந்த நிகழ்வின் முதல் பார்வையாளர் வரிசையில் இருந்து என்னோட அம்மா உலக அதிசயமாக என்னை நம்பமுடியாமல் ஆச்சரியாமா பார்த்துக்கொண்டு இருந்தா, நான் உலக அதிசயமாக அம்மாவை நம்பமுடியாமல் ஆச்சரியாமா பார்த்துக்கொண்டு மேடையில் கிட்டார் வாசித்த அதுதான் யாழ்பாணத்தில் என்னோட கடைசி மேடை நிகழ்ச்சி ,பின் யாழ் ரமணன் அண்ணாவின் ராஜன்சில் வன்னியில் ,உலக அதிசயமாக அவர் வாசிக்கும் கிடாரில் ஒரு மேடை நிகழ்சியில் ரிதம் கிட்டார் வாசித்தேன்,,அதுக்குப் பிறகு இலங்கையில் வாசிக்கவே இல்லை........இன்னும் !


                                            நான் உட்பட இப்படிதான் புலம் பெயர்ந்த பலரோட நிலைமை, சாந்தன் மாஸ்டரே எங்கே எண்டு இன்னும் எனக்கு தெரியாது,சில நேரம் இந்தப் போஸ்டிங் ஹெல்ப் பண்ணலாம்,அதாலதான் அவர் பெயர் விபரம் எழுதி இருக்குறேன்..

                                               இன்றைய இனைய உலகத்தில் இசை பற்றி ஆயிரம் பதிவுகள், காலுக்கையும் ,கையுகையும் வெப் பேஜ் , இன்டர்நெட் லிங்க், பேஸ் புக்கு MUSIC குருப் எண்டு நிறைய இசை அமைப்பாளர், இசை அமைத்த விதம், வேறு பல டெக்னிகல் விசியம் கொம்புயூட்டர் எலியை கிளிக் பண்ணி சுண்டினால் நிமிடத்தில் அறியாலாம். இருவத்தி ஐந்து வருடங்களின் முன் அப்படி இல்லை ,வெறுமே பாடல்கள் மட்டும் மொனோ ரேடியோவில தகரப் பேணியில தட்டின மாதிரி நெளிஞ்சு நெளிஞ்சு வரும், அவளவுதான்,

                                                பல வருடங்ககள் பல காரணங்களால் கிட்டார் தொடவே இல்லை,சுவிடனில் என்னோட முன்... மனைவிக்கு நான் கிட்டார் வாசித்தால் பிடிக்காது


                      " என்னைக் கலியாணம் கட்டினாயா ,இல்லை இந்தக் கிடாரைக் கலியாணம் கட்டினாயா " 

                                         எண்டு சண்டை தொடக்குவாள்,

                                    இப்ப சில வருடமா, கிட்டார் இசை ரசிக்கும் என் நட்புக்களை என்ஜாய் பண்ண வைக்க மட்டும் ,புரோபோசனால் போல இல்லாமால் சும்மா வீட்டில கிடாரைப் போட்டு முழக்குவேன்,என் வீட்டின் ஒரு பக்கத்தில் வசிக்கும் மனிதருக்கு காது கேட்காது,மற்றப் பக்கம் ஒரு " .............. புகையை இழுத்து உலக இசை ரசிக்கும் யிப்சி ஜோடி " இருக்கு, அவன்கள் " நல்லா போட்டு முழக்கு நாங்க ஆடுவம் " எண்டு சொல்லுவார்கள், அதால துணிந்து வாசித்து வாசித்து " யூ டுப்பில் " போட்டு அதை பேஸ் புக்கிலும் பகிர்வேன்,.........

                                  அதில் , நான் வாசித்த " Evita " என்று உலககத்தை கலக்கி சக்கைபோடு போட்ட இசை நாடகத்தில வந்த " Don't Cry for Me Argentina " என்ற ஆங்கிலப் பாடல் வீடியோவை, இளையநிலா பாடலுக்கு இளையராஜவுக்கு கிட்டார் வாசித்த மதிப்புக்குரிய திரு. சந்திரசேகர் ரகுநாதன் அவர்கள் கேட்டு ஒரு சின்ன லைக் செய்து இருந்தார், 


                                        அந்த ஒரு சின்ன லைக் எனக்கும் கொஞ்சம் கிட்டார் வாசிக்கும் விசியம் தெரியும் என்ற பெரிய  உற்சாகம் கொஞ்சம் தந்தது , அதிகம் அதன் புகழ் முழுவதும் என்னோட குருநாதர் சாந்தன் மாஸ்டருக்கு கிடைத்த ஒரு விருது எண்டு பெருமைப்படுகிறேன்.,,,

                              ,,,,,.http://youtu.be/CdJBCKXFPGs

.

Monday, 31 August 2015

சனியனைப் பிடிச்சு பனியனுக்க விட்ட ..

நோர்வே உலகத்தில் உள்ள பணக்கார நாடுகளில் ஒன்று. பல நாடுகளில் கிடைக்காத நல்ல வாழ்க்கைதரம் இங்கே இருக்கு. அதன் பெறுமதிகள் வெளியே தெரிவதை விடவும் உள்ளுக்கு அதிகம். அந்தப் பணக்காரத்தனத்துக்கு கொடுக்கும் விலை அதுவும் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது மிக அதிகம். ஆனால் இவளவு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தில் வாழும் மக்கள் பல அற்பமான விசியங்கள் செய்வார்கள். 

                                      
அதில ஒன்று லோப்பமார்கெட் என்ற பழைய சாமான்கள் விற்கும் தற்காலிக சந்தைகளில் பெறுமதியான காசுக்கு அதைப்போல பலமடங்கு பெறுமதியான தரமுள்ள பொருட்களை அவர்கள் வேண்டிக்குவிப்பது, சென்ற தலைமுறையில் காலம் நின்று போன இறந்தகாலப் பழைய பொருட்களில் அவர்கள் தங்களின் நிகழ் காலத்தை அடையாளப்படுத்துகிறார்கள்.  

                                       
நேற்று நான் வசிக்கும் பேட்டையில் உள்ள நோர்பேறி சிர்க்கா என்ற தேவாலயத்தில் அப்படி ஒரு விற்பனை நடந்தது. இளைய தலைமுறைக்கு சரிக்கு சமன் வயதானவர்களும் வந்திருந்தார்கள்.சில வயதான தம்பதிகள் தங்களின் வயதான கார்களில் எப்படியோ கேள்விப்பட்டு வெகு தூரத்தில் உள்ள ஒஸ்லோ நகரத்தில் இருந்தே ஒரு ஈ காக்கை கூட வழி கண்டு பிடித்து வந்து சேரக்கடினமான பாதைகளில் பயணித்து இந்தப் பேட்டைக்கு வந்திருந்தார்கள்.

                                              அவர்களை காலத்தின் வழித்தடத்தில் அப்படி இயக்கம் ஒரே ஒரு ஆர்வம். தங்கள் காலத்தில் தவற விட்ட ஏதோ ஒன்று இன்றைய காலத்தில் கிடைக்கலாம் என்பதாக இருக்கலாம் போல இருந்தது. பழைய மரத் தளபாட மேசை கதிரைகள், பழைய புத்தகங்கள், பழைய அலங்காரப் பொருட்கள்,ஓவியங்கள், தட்டு முட்டு சமையல் உபகரணங்கள், என்று அவர்கள் வேண்டிக்கொண்டு போய் பாவிக்காமல் காட்சிக்கு வைத்து அழகுபடுத்துவார்கள். 
                                   
                                                  பல வருடமா அப்படி அந்த விற்பனை தேவாலயத்தில் நடக்கும். முடிந்தளவு நேரம் ஒதுக்கி கொஞ்சநேரமாவது பார்க்கப் போவது. அதில நான் எதுவுமே, எப்பவுமே சில்லறைக் காசுக்கும் வேண்டியதில்லை. ஆனால் நான் போறதின் முக்கிய காரணம் சில நண்பர்களை சந்திக்க முடியும் என்பதுக்கும், அதை விட முக்கியமா மனிதர்களை விடுப்புப் பார்க்க. பழைய பொருட்களை வேண்டவரும் பணக்கார மனிதர்களை விடுப்புப் பார்ப்பது ஒரு வித சைக்கொலோயி.

                                  
பழையசாமானகள் தானே ,கொஞ்சம் மலிவு விலை தானே என்று வேண்டுடுவதில் ஒருவித சந்தோசம் கிடைப்பதால் வேண்டிக் குவிப்பவர்களும் இருக்கிறார்கள் அவர்களை " சொப்பிங்ஹோலிக்ஸ் " என்று சொல்லுறார்கள். அந்தக் குளறுபடி ஒரு மனநலம் சம்பந்தப்பட்ட வியாதி. வாழ்கையில் சந்தோசத்தை வேறு பல விசியன்களில் தொலைத்தவர்கள் வேண்டுவதில் சந்தோசத்தை நிவர்திசெய்கிறார்கள். ஏன் வேண்டுறம் என்று தெரியாமலே வேண்டி வேண்டிக் குவிப்பார்கள். 

                                   ஒரு கட்டத்தில் வீடு நிறையும் , அதைக் அகற்ற விடமாட்டார்கள். ஒரு சின்னப் பொருளை அவர்கள் வீட்டில் இருந்து வெளியே போடுவதே ஏறக்குறைய அவர்களின் உடலில் உள்ள ஒரு அங்கத்தை பிடிங்கி எறிவது போல இருக்கும் அவர்களுக்கு. இது மிகவும் முன்னேறிய நோர்வேயில் சீவி முடிச்ச கொண்டையில் ஈரும் பேணும் போல ஒரு மறைமுகமான சமூகத் தலைஇடி.

                                லோப்பமார்கெட் என்ற இந்த சந்தைக்கு எப்படிப் பொருட்கள் வருக்குது என்று ஜோசித்துப் பார்த்தால்,அதுவும் யாரோ ஒருவர் வேண்டிக்குவித்து இறந்து போக அந்த வீட்டை துப்பரவு செய்யும் புதியவர்கள் இந்தப் பொருட்களை சேர்ச் போன்ற உதவும் நிறுவனங்களுக்கு அப்படியே அன்பளிப்பாகக் கொடுப்பார்கள்.மிகவும்விலைமதிப்பற்ற கலைச் சேகரிப்புப் பொருட்களும் அதில இருக்கலாம்.

                                           சில நேரம் வயதான வீட்டு உரிமையாளர் இறக்க, அவர்களின் உறவினர் வீட்டை அப்படியே துப்பவரவு செய்து எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போக சில நிறுவனத்திடம் ஒப்பந்தம் போலக் கொடுப்பார்கள் .அவர்களும் பெறுமதியான பொருட்களை எடுத்து விற்பார்கள்.ஒரு வட்டம் போல வேண்டுறதும் அது கை மாறுறதும் வருஷங்களைச் சேர்த்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கு

                                           ஸ்கண்டிநேவிய கலாசாரம் அவர்கள் பழமையை தூசிதட்டி இனிமை காண்பது. அதைப் பெருமையாக நினைப்பார்கள். பலர் இப்படி லோப்பமார்கெட் என்ற சந்தைக்கு வந்து காலம் கடந்து போன பழைய பொருட்களை, " கொடுவா புடி புடிச்சாதான் அருவா புடி கிடைக்கும் " என்று பேரம் பேசிக்கொண்டு நிக்காமல் கேட்ட விலைகொடுத்து வேண்டி நினைவுச்சின்னங்கள் போல வீடுகளை அழகுபடுத்துவார்கள். அவர்களுக்கு விலை முக்கியமில்லை பழைய பொருட்களின் கலைத்துவ ரசனை தரும் கிளர்ச்சி முக்கியம்.

                                         நோர்வே, சுவிடன் ,டென்மார்க் நாட்டவர்களில் வீடுகள் எப்பவுமே உள்ளே வரவேற்ப்பு அறை முழுவதும் அப்படிப் பொருட்களால அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அவர்கள் வீட்டுக்கு போனால் முதலில் தங்களிடம் உள்ள மிகப் பழமையான பொருட்களை காட்டுவார்கள்.இதில முக்கியமா எல்லா டென்மார்க் நாட்டவர் வீடுகளுமே ஒரு முசியம் போன்ற அருங்காட்சியகம் போல கலைப் பொருட்கள் நிரம்பி இருக்கும்.

                                                 நோர்வேயில் அதி நவீன இலற்றோனிக், இலட்றிக் சாதனங்கள் மொடல் மாறி மாறி வர அதைக் கவர்சியான விளம்பரங்கள் போட்டு மயக்குவார்கள். அதில விழுந்தவர்கள் அதுகளை நவீன நகர அங்காடிகளில் இருந்து கணக்குவழக்கு பார்க்காமல் வேண்டுவார்கள்.சில நேரம் கடனுக்கே வேண்டுவார்கள். அவை கொஞ்சம் பழசாக மறுசுழற்சிக் கொண்டைனரில் தூக்கி எறிஞ்சு போட்டு புதுசு வேண்டுவார்கள்.

                                          சுவிடனிலையும் இப்படிதான். இந்த மறு சுழற்சிக் கொண்டைனர்களில் நன்றாக இயங்கக்கூடிய பல பொருட்கள் எப்பவுமே கிடைக்கும். அந்த நாட்டுக்குள் முதல் முதல் அரசியல் அகதியாக உள்ளிட்டு ஒரு தொலைதூர அத்துவான அகதி முகாமில் இருந்தபோது ஒருகாட்டுக்குள்ள இருந்த ரீசைகிளிங் குப்பைதொட்டிக் கொண்டைனரில் இருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு வந்து என்னைப்போலவே அகதியாக இருந்த ஞானசூணியங்கள் விற்று கைச்செலவுக்கு காசு சம்பாரித்து இருக்கிறேன்.

                                    பூமியில் உள்ள எல்லாருக்கும் பொதுவான இந்த உலகத்தின் இயற்கைக் கனியவளம் என்ற நச்சுரல் ரிசோர்சஸ்சை அதிகம் எப்படி முன்னேறிய நாடுகளில் வசிப்பவர்களே உபயோகித்து சப்பித்துப்பி நாசம் ஆக்குகிறார்கள் என்ற உண்மை குப்பைத்தொட்டி கொண்டைனருக்குள் இறங்கித் தேடிய போதுதான் ஒரு ஞானஉதயம் போல எனக்குக் கிடைத்தது

                                    " ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம், நேத்து வந்தவ நெல்லு குத்துறாளாம் " போலப் போய்க்கொண்டிருக்கிறது உலகத்தில பழைய பொருட்களின் பெறுமதி மட்டும் முன்னோக்கிப் போகப் போக பெறுமதி அதிகமாகிக் கொண்டேபோகும். கொஞ்சம் ஜோசித்துப் பார்த்தால், சும்மா " ரோட்டால போன சனியனைப் பிடிச்சு பனியனுக்க விட்ட மாதிரி " இன்றைக்கு நாங்கள் வேண்டிக்குவிக்கும் அதி நவீன வேகாமாக இயங்கும் இலற்றோனிக் தொடர்பு சாதனப் பொருட்களை

                                   " ஜிகா பைட்ஸ் ப்ரோட்பாண்ட் இல் வேகமாகி இயங்கி உங்களின் பொண்ணான நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டவை "

                                 என்று தான் விளம்பரம் செய்கிறார்கள். உண்மையில் அவைகள் தான் ஏதோ ஒரு வடிவில் எங்களின் காசை உருவுறது தெரியாமல் அண்டவியர் வரை உருவி , பிரயோசனமான நேரத்தையும் திண்டு தொலைத்து ஏப்பம் விடுகுது .
.
............................. என்ன சீவியமடா இது !..........
..


.31.08.15

Saturday, 29 August 2015

Sinnap Puraa Ondru ,Guitar Cover ,,Mestro Ilayaraaja





இளையராஜாவின் அகாலமான பியானோ " Riff " இல் தொடங்கும் இந்தப் "சின்ன புறா ஒன்று "பாடல் "அன்பே சங்கீதா " படத்தில் ஒரு காமடி நடிகரான தேங்காய் ஸ்ரீநிவாசன் அவரோட பிரிந்து போன தங்கையை நினைத்து பாடுவது போல வந்ததாலோ என்னவோ அதிகம் கவனிக்கப்படவில்லை!



இந்தப் பாடலின் தொடக்க, இடையே வரும் "ஹம்மிங்கை " S .P .சைலயா பாட, அந்த "ஹம்மிங்" தான் இந்தப் பாடலின் பிரிவின் வதையைப் பிழிந்து பிழிந்து சொல்ல , இந்தப் பாடலில் இளையராஜா வயலின் ,பியானோ  எல்லாம் வைத்து இசை அமைத்து  அரிதாக Bass கிட்டார் ட்ரக் Fretless ஸ்டைலில் வரும்!



பாடலின் interlude இல் bass கிடார் நோட்ஸ் ,லீட் இணைப்பில் வரும் அண்ணன் தங்கை பிரிவைச் சொல்லும் இந்தப் பாடலை S .B பாலசுப்பிரமணியமும் அவரின் தங்கை S .P .சைலயாவும் பாடியுளார்கள் என்பது ஒரு அழகு! இந்தப் படத்திலேயே p .ஜெயச்சந்திரன் "பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி பையனடா " என்ற பாடல் இருக்குது! ஜென்சியும் ,ஜெயச்சந்திரனும் பாடும் "கீதா சங்கீத " என்ற கர்நாடக சங்கீத அடிப்படைப் பாடலும் இருக்கு!



.நீட்டிமுழக்கி அறுக்காமல் சுருக்கமா சொல்வது என்றால் "சின்ன புறா ஒன்று " பாடல் எண்ணக்கனாவினில் வண்ணம் கெடாமல் இன்றும் என்றும் வாழ்கின்றது , அதை இசைஅமைத்த இளையராஜா ,நினவில் உலவும் நிழல் மேகம் , அவர் நூறாண்டுகள் வாழ்கவே நூறாண்டுகள் வாழ்கவே!

Friday, 28 August 2015

" பூஞ்சணம்பிடிச்ச பான் ...."

உண்மையில் விமர்சனம்  என்பது மிரட்டல்களுக்கும் உருளைக்கிழங்கு பிரட்டல்களுக்கும் பயந்துகொண்டே தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் பம்முவது என்பதல்ல பதிலாக அதிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்வது. விமர்சன விமர்சிப்புக்கள் நம்மை நாமே சுயபரிசோதனை செய்து இன்னும் ஒருபடி மேன்மக்களாக மேலேறிக்கொள்வது என்று நினைக்கிறேன்.

                                             தங்களால் தாயரிக்கப்பட்ட ஒரு படம் என்று சொல்லி ஒரு அன்பர் ஒரு லிங்க் சில மாதம் முன் அனுப்பி அதைப்பற்றி எழுதும்படி கேட்டு இருந்தார். எனக்கு திரைவிமர்சனம் எழுத முடியுமா என்பது எனக்கே ஒரு கேள்வியாக பல காலம் இருந்தாலும்,பல ஆங்கிலப் படங்களுக்கு " இல்லாதவனுக்கு இலுப்பை பூ சர்க்கரை .." போல என்னோட ஸ்டைலில் எழுதி இருக்கிறேன்,

                                       ஒருவேளை அதை நினைத்து அந்த பட லிங்கை சில மாதம் முன் எனக்கு அனுப்பி இருக்கலாம் போல
 . ஒரு படத்தைப் பலர் நேரம்,உழைப்பு செலவழித்து எடுத்து இருப்பதால் அந்தப் படம் என்ன என்று சொல்லி அவர்களின் உற்சாகத்தைக் குறைப்பது மோட்டுக் கழுதைத்தனம் அதால் அந்தப் படம் பெயர் சொல்லப்போறதில்லை.ஆனால் அதைப் பார்த்தபோது தோன்றிய சில விசியங்களை மட்டுமே என்னோட குறுக்காலபோற ஸ்டைலில் சொல்லுறேன்.

                                            பல இடைஞ்சல்களுக்கு நடுவில் முதலில் அதை எடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள். எவளவோ  கஷ்டப்பட்டு  நேர விரைய  உழைப்பில்  அதை அதை  ஆர்வமாக  எடுத்து இருக்கிறார்கள் அதுக்குத் தலை  வணங்குகிறேன் . வாய்  பித்தத்தில் புளித்ததோ அல்லது மாங்காய் தான்  புளித்ததோ என்ற  விமர்சனம் போல இல்லாமல் என் வாசிப்பு,சினிமா பார்த்த அனுபவத்தில் இதை சொல்லுவது குறை பிடித்து மட்டம்தட்ட அல்ல பதிலாக அவர்கள் இன்னும் இன்னும் உயர்ந்த தரத்துக்கு முன்னேறிப் போக வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலை மட்டுமே.


                                 "  ஒரு திரைப்படத்தை, குறும்படத்தை ,டாக்குமென்ட்ரியை  விமர்சிக்க  உனக்கு  என்ன  தகுதி இருக்கு, நீ என்ன  பெரிய  அக்குரோ குரோசோவா ,   அப்ப  நீயே ஒரு  படம்  எடுத்துக் காட்டேன்  "  என்று ஒரு வாதம் எப்பவும் வரும். ஒரு தோசைக் கடையில் காசு கொடுத்து தோசை சாப்பிடுறோம். தோசை நல்லா இல்லை என்றால் நல்லா இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதுக்காக அந்த கடை முதலாளி  வந்து  நீ அப்ப  தோசை போட்டுக்காட்டேன்  என்று கேட்க முடியாது. அசிங்கமா இருக்கும் .

                                          எனக்கு அனுப்பிய அந்த படத்தை நான் காசு ஒண்டும் கொடுத்துப் பார்க்கவில்லை. ஓசியில்  இன்டர்நெட் இல்தான்  பார்த்தேன். ஆனால் அந்த நேரம் எனக்கு முக்கியம். நான் செலவுசெய்த அந்த நேரத்துக்கு ஒரு காசுப் பெறுமதி இருக்கு. அதனால் என் கருத்தைப் பொதுவாக சொல்லுறேன். அதுக்கு  முதல்  மஸ்ஜித் மஸ்ஜித்   என்ற  ஈரானியர்  எடுத்த " சில்டர்ன் ஒப்  ஹவின் "  படத்தை பத்து முறை  பார்த்த அனுபவத்தில் உலக சினிமாவின் அடி அளவுகோல் எனக்கும் கொஞ்சம் தெரியும் . அதால சொல்லுறேன்

                                     தொடக்கமே நாலு வீதிகள் சந்திக்கும் இடத்தில நிக்கிற கதை எந்தப்பக்கம் போறது என்று தடுமாறும் அது முதலில் படம் போல இல்லை. ஒரு அளவுகோலில் பார்த்தால் குறும்படம் .கொஞ்சம் டெக்னிகலா சொன்னால் திரையில் ஓடவைக்க எடுக்கப்பட்ட டாக்குமென்ட்ரி போல இருந்தது. ஒரு திரைப்படம் எடுப்பது இலகுவான விசியம் இல்லை. " இருக்கிறவன் அள்ளி முடிஞ்சிக்கிறான், இல்லாதவன் தடவி பாத்துக்கறான் .." என்று போனாப் போ வந்தா வா என்று திட்டம் இல்லாமல் தொடங்கவே முடியாது.

                                                    அந்தப் படத்தின் கதையை  லைனியர் ஸ்டைலில் ஒரு வரியில் சொல்கிறேன் " பூஞ்சணம்பிடிச்ச பானை ஒரு பூனை பார்த்துக்கொண்டு இருக்கு." .......இவளவுதான்! ஆனாலும் என்னைப்பொருத்தவரை இந்த கொன்செப்ட் ஐ characteristics of the individual regardless of the nature or circumstances என்ற அணுகுமுறையில் வேற ஒரு லெவலில் எடுத்து இருக்காலம் போல இருக்கு.

                                                 இந்தப் படத்தின் கமராமான் என்ற ஒளிப்படக் கலைஞ்சர் பல இடங்களில் தன்னோட அலாதியான கைவண்ணத்தைக் காட்டி இருக்கிறார். ஒரு சின்ன நகரம் அதன் குறுக்குச் சந்திகள்,வீதிகள் ,அந்தக் கதை நடக்கும் வீடு, எல்லாத்தையும் ஒரு கன்வஸ் ஓவியம் போல பல படமாக்கி இருந்தாலும் ஒரு சொதப்பல் கதைக்கு அவரால் மட்டுமே கொஞ்சம் வண்ணங்கள் சேர்க்க முடிந்து இருக்கு. வேற என்னதான் செய்ய முடியும் ஒரு டெக்னிசியனால். எப்படியோ அவரின் பார்வை எதிர்கால கோடம்பாக்கப் பிரகாசங்களுக்கு உறுதிமொழி கொடுக்கிறது.

                                                  ஒருதிரைப்படம் எடுக்க முக்கியமா அதுக்கு ஒரு அமர்க்களமான கதை கையிலஇருக்க வேண்டும், அதை இடுக்குகளில் உள்ளே நுழைந்து விசுவல் ஆகச் சொல்ல திரைக்கதை ஆக மாற்ற வேண்டும், அலுப்படிக்காமல் நகர்த்த பூந்துவிளையாடும் வசனம் எழுத வேண்டும் ,தொய்வில்லாமல் அதைக் கமராவில் கதையாக இழுத்துக்கொண்டு பின் தொடரவேண்டும், பிண்ணனி இசை கதையின் ஈரமான பிரதேசங்களில் மழை பொழிய வேண்டும். . இவளவு இருந்தாலும் சில படங்கள் எடுபடாது,,சில படங்களில் இதில ஏதோ ஒன்று குறைவாக இருந்தும் வெற்றிபெறும்.

                                            ஒரு இடைதர நகரத்தில் இருந்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தைப் பார்த்த போது அதில இருந்த மிகப்பெரிய ஓட்டை அந்தப் படத்தை இயக்கிய இயக்குனரின் பரிமாணங்களை கனதியாகப் பிரித்தெடுக்கத் தவறியது தெரிந்து. அந்தப் படமே அரைவாசிக்குமேலே நம்பிக்கை இழந்திருக்கும் தருணங்களில் மிச்சம் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு உயிரோட இருந்து பார்கத்தான் வேண்டுமா என்று மண்டையைக் குடையுது அதன் அசுவாரசியம்.

                                           முக்கியமா என்ன வகையான கதை திரையில் சொன்னாலும் அந்தக் கதையைத் தொடக்கும் நேரம் பார்வையாளருக்கு ஒரு எதிர்பார்ப்பு கொடுக்க வேண்டும், பின்னர் பார்வையாளர் எதிர்பார்க்காத இடங்களில் கதிரை முன் நுனிக்கு கொண்டுவரும் திருப்பங்கள் வரவேண்டும்,முடிவுகள் முக்கியம் இல்லை என்று சொல்லலாம் ஏனென்றால் ஒரு படம் இன்னொரு படத்தின் தொடர்ச்சி , வெள்ளித்திரையில் தவறவிடும் வாழ்க்கைபோல ,,இந்த உத்திகளில் அந்த இயக்குனர் இயங்கவேயில்லை.

                                          கோணையன் கிழிச்சது கோமணத்துக்கு ஆச்சு போல சில நல்ல விஷுவல் விசியங்கள் அந்தப் படத்தில் இருந்தது.ஆனால் அந்த கொன்செப்ட்ஐ இன்னும் கொஞ்சம் டெவலப் ஆக்கி இருக்கலாம். ஏன் அந்த இயக்குனர் அதை மறந்தார் என்று ஜோசித்த போது அவரின் கலைத்துவக் கற்பனைத் திறமையில்தான் சந்தேகம் வருகுது. ஒரு படத்தில் வரும் அழகியல் வறட்சி நிச்சயமாக அந்தப் பட இயக்குனரின் கற்பனை வறட்சியே.

                                      நிறையப் பணம் போட்டு, முறிஞ்சு முறிஞ்சு வேலை செய்த ஒரு படம் வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும்போதாது அந்த லட்சியத்தை அடைய கடினமான உழைப்பு முதலில் கதையை விஷுவல் கோணங்களில் அகலப்படுத்த வேண்டும், கூடவே கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். ஆசை மட்டும் வைச்சுக்கொண்டு அதற்கான முயற்சியை எடுக்கவில்லையென்றால், பிறகு ஆச இருக்குதாம் அரசனாக, அம்சம் இருக்குதாம் கழுத மேய்க்க என்ற மாதிரித்தான் முடியும்.

                                      வாழ்வில் பிடிப்பு ஏற்படுவதற்கு, ஆனந்தத்தின் சுவையை அறிவதற்கு. இந்தக் கரணத்துக்காகவே த்ரூஃபோவின் படைப்புகளில் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்களை விரும்பியவர்கள் உலகின் பல பாகங்களில் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் என்னோட சொந்த அபிப்பிராயம், ஒரு உணர்வுள்ள கவிதை எழுதக்கூடிய. சுவாரசியாமாக ஒரு சிறுகதை எழுதக்கூடியவர்கள் இயக்குனர்களாக இருக்கும்போது ஒரு திரைக்கதையை விஷுவல் ஆக முடிந்தளவு ரசிக்கவைக்க முடியும்.

                                   இதுக்கு நிறைய உதாரணம் வாய்க்குள்ள நுழையாத பெயர் உள்ள பெர்னாண்டோ பெட்ட  லூ ஸி,  ழான் கோலே, ஜோசப் வான் ஸ்டெர்ன்பெர்க், ரோமன்ஸ் பொலான்ஸ்கி போன்ற   இயக்குனர்களை உதாரணமாக சொல்லலாம். அவர்களின் திரைப்படஉத்திகள் வந்த படங்கள் பெயர் எல்லாம் சொன்னா அதை எல்லாம் வாசிக்க உங்களுக்கு அறுவையாக இருக்க ஒருகட்டத்தில் என்னில கொலைவெறி வரும் உங்களுக்கு.


                                     உலகத் தரமான படங்கள்  என்று  நானும்  பீலா  விடுறன் என்று நீங்க  நினைக்கலாம். ஆனால் அவர்களால் தேர்வு செய்யப்படும் கதைகள் மிக மிக சிம்பிள். அந்தக் கதைகள்  நமக்கு அதிகம் நெருக்கமாக இருக்கும். நல்ல சினிமா  பார்ப்பது எங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோவது. அந்த அனுபவம் மிகவும் திரில் ஆக இருக்கும். 

                                             அப்படி எல்லாம் இல்லை"   நான் படம் எடுப்பேன்  நீ பார்த்தே ஆக வேண்டும் " என்றால் அந்தப் பிடிவாதமாகக்  கண்ணைக் கட்டி " எவடம் எவடம் புளியடி புளியடி .." என்ற கதை போல ஒரு வட்டத்துக்குள்ளேயே நின்று சுழரும்படியான ஒரு நிலையை ஏட்படுதிவிடும் . மனித வாழ்வின்  முக்கிய அனுபவம் சினிமா .அதன் பல் பரிமாணங்களை  நாங்கள்  புரியும்போது  வாழ்வியலின் அபத்த நிலைகளில்  உள்ள சிந்தனைப் போக்குகளை இன்னும்  ஆழமாகப்பதிவு செய்ய முடியும் .

                                  கொஞ்சம் ஜோசித்துப் பார்தால் “ஒவ்வொருவருக்கும் தான் செய்ய விரும்பும் ஏதோ ஒன்றைப் பற்றிய ஒரு எண்ணம் இருக்கும். கற்பனையினால் மெருகேற்றப்பட்ட இந்த எண்ணத்திற்கும், இறுதியாக அவர் சாதித்துப் பெற்ற வடிவத்திற்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருக்கும். இந்த இடைவெளியைக் குறைப்பதற்குத்தான் மீண்டும்மீண்டும் முயல வேண்டியிருக்கிறது.” என்று லூயி மால் என்ற இயக்குனர் சொன்னதில் நிறையவே அர்த்தம் இருக்குப்போல இருக்கு.

.
. 


27.08.15

Wednesday, 26 August 2015

சிங்கி மாஸ்டர்..

யாழ்பாணத்தில் இள வயதில் சிறுகதை , நாவல், எழுத்து வடிவில் வந்த நாடகம் போன்ற உரை நடை இலக்கியம் ஆர்வமாகப் படிக்க முக்கிய காரணமா இருந்த ஒருவர் சிவாநந்தராஜா என்ற சிங்கி மாஸ்டர், அவரை மாஸ்டர் எண்டு சொன்னாலும் அவர் எந்தப் பாடசாலையிலும், எந்தப் பாடமும் படிபிக்கவில்லை . மலேசியாவில் பிறந்து ஆங்கில மீடியத்தில்ப் படித்த அவர், அன்றாட வாழ்கையை ஓட்டுறதுக்கு என்ன வேலை செய்தார் எண்டு அறுதியா சொல்ல முடியாது, 

                                    ஏறக்குறைய எல்லா வேலையும் செய்தார் எண்டுதான் சொல்லவேண்டும் ,அந்த வேலைகளிலும் ஒரு வேலை தொடர்ந்து ஆறு மாதத்துக்கு மேல ஒரு இடத்தில செய்தார் என்றதுக்கும் எந்த சான்றும் இல்லை. அவர் கொலும்பில அரசாங்கத்தில இன்கம் டக்ஸ் டிபார்ட்மென்டில வேலை செய்து தனிச் சிங்கள சட்டம் வந்து சிங்களம் கட்டாயம் படிக்க வேண்டும் எண்டு வர ,சொல்லாமல் கொள்ளாமல் அந்த அரசாங்க வேலைய விட்டுப் போட்டு ஊருக்கு வந்திடார் எண்டு சொல்லுவார்கள்.

                                எங்கள் ஊரில இருந்த வாசிகசாலையில் ,இலக்கிய சங்கத்துக்கு பொறுப்பா இருந்த, இறக்குமதி செய்யப்பட்ட ஐரோப்பிய தத்துவங்கள், இசங்கள், அவை வந்த இலக்கியப் புத்தகங்கள் எல்லாத்தையும் கரைசுக் குடிச்ச சிங்கி மாஸ்டர் தனியாதான், சுப்பிரமணியம் கடைக்கு அருகில், மசுக்குட்டி மாமி வீட்டில வாடகை ரூமில மாதம் மாதம் கடன் சொல்லி வாடகை கட்டியும்,கட்டாமலும் , மசுக்குட்டி மாமியின் இரக்க குணத்தில குருவிச்சை போல ஒட்டிக்கொண்டு வாழ்ந்தார். 

                                     அவருக்கு மனைவி எண்டு ஒருவரும் இருந்த மாதிரி எனக்கு தெரிந்தவரை இருக்கவில்லை, எனக்கு தெரியாமல் இருந்தது பற்றி என்னால் ஒண்டுமே சொல்லமுடியாது,ஆனால் மசுக்குட்டி மாமியும் அவாவின் புருஷன் விட்டுடுப் போக கொஞ்ச வருஷம் தனியாதான் இருந்தா எண்டு சொல்லமுடியும் .ஒரு விதத்தில அவருக்கு ஒரு பெண் துணை கிடைப்பதில் உள்ள முக்கிய பிரச்சனையே அவர் வாழ்ந்த விதம், அவரின் உலகம் வேற, அவர் இயங்கிய தளம் வேற, அது என்ன எண்டு சொல்லுறன்,

                                             யாழ்பாணத்தில இன்டலக்சுவல் எண்டு சொல்லும் அறிவு ஜீவிகள் நிறையப்பேர் அந்த நாட்களில் இருந்தார்கள் , இருந்தார்கள் எண்டு சொல்வது பிழை, அவர்கள் அதை ஒரு ஸ்டைல் போல ஆக்கி வாழ்ந்தார்கள்,சிங்கி மாஸ்டரும் அப்படிதான் ,அவர் எப்பவுமே ஒரு பருத்தி சீலையில செய்த பையைக் தோளில மாட்டிக்கொண்டு ,சோக்கிரட்டிஸ் போல முகம் முழுவதும் தாடி வளர்த்து , தலைமயிர் அதுபாட்டுக்கு அலை அடிக்க, போடுற உடுப்பில அக்கறை இல்லாமல், எப்பவும் ஜோசிக்கிரதாலோ என்னவோ நெற்றி எல்லாம் சுருக்கம் விழுந்து,அவர் புத்தகம் வாசித்ததை அதிகம் நான் கண்டதில்ல, ஆனால் வாசித்ததை ஜோசிக்கும்,விவாதிக்கும் சம்பவங்கள் அதிகம் நடக்கும், 

                    எங்கள் ஊரில் எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்த கிறிஸ்தவரான ஆங்கில ஆசிரியரான அன்டனிப் பிள்ளை மாஸ்டருடன் எப்பவும்   சிங்கி மாஸ்டர் வாக்குவாதப்படுவார் ,

                      " அன்டனி மாஸ்டர் நீங்கள் விசியம் தெரியாமல் பைபிள் பற்றி போதிக்குரிங்க, உங்க பாதர் மாருக்கே ஒழுங்கா வரலாறு தெரியாது, பைபிளின் மூலநூல் லத்தீன் மொழியில் மட்டும் எழுதப்படவில்லை. லத்தீன் பைபிள் கூட ஒரு மொழிபெயர்ப்பு தான். பழைய ஏற்பாடு ஹீபுரு எபிரேய, அரமைக் மொழிகளில் எழுதப்பட்டது. 

                            " இதுகள் எங்களுக்கு தெரியும் ,மிஸ்டர்  சிவானந்தராஜா , நான் செமினரியில் கொஞ்சகாலம் தியோலாயி  படிச்சனான், இதை திருப்பி திருப்பி எனக்கே போட்டுக் காட்டுறது  ஒரு பிரிஜோசனமும் இல்லை கண்டியலே மிஸ்டர் ,, "

                               "  இல்லை  மாஸ்டர் ,  புதிய ஏற்பாடு முழுக்க கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இயேசுவின் பன்னிரண்டு  சீடர்களும் ஒன்றில் யூதர்களாக, அல்லது கிரேக்கர்களாக இருந்தனர். இயேசு என்பது அரமைக் பெயர், கிறிஸ்து என்பது கிரேக்கப் பெயர். அது உங்களுக்கு தெரியுமோ மாஸ்டர் .

                              "  கொஞ்சம்   கேள்விப்பட்டது  தான் ,,நீர்  மிச்சக் கதையை  சொல்லுமேன் மிஸ்டர்  சிவானந்தராஜா "

                                        "  இயேசுவின் போதனைகளை ஐரோப்பாவுக்கு பரப்பச் சென்றவர்கள் அனைவரும் கிரேக்க மொழி பேசினார்கள். அப்போஸ்தலர்கள் கிரேக்க மொழியில் எழுதிய சுவிசேஷங்களின் தொகுப்பு புதிய ஏற்பாடு, இதை சொன்னா உங்களுக்கு கோபம் வருகுது "

                         என்று பெரிய விளக்கம் கொடுப்பார் , அன்டனிப் பிள்ளை மாஸ்டர் பதில் சொல்லாமல் ஜேசுநாதர் போல பொறுமையாக் கேட்பார்.

                                               சிங்கி மாஸ்டர்  எங்கள் சந்தி ஞானப்பிரகாசம் தேத்தண்ணி கடையில கடனுக்கு சீனி போடாத பிளேன் டீ குடிச்சிக் கொண்டு , மார்கஸ் அரேலியசின் " மெடிடேசன் " புத்தகம் ஏன் பிலேட்டோ சொன்ன  " ரிப்ப்பபிளிக்  " புத்தகத்தை விட நடைமுறையில் பிரிஜோசனமானது எண்டு ஞானப்பிரகாசதுக்கு சொல்லிக்கொண்டு இருப்பார். ஞானப்பிரகாசம் கடனுக்கு கொடுத்த பிளேன் டீ காசு எப்பவரும் எண்டு தீவிரமா ஜோசிதுக்கொண்டு இருப்பார்.

                                   சிங்கி மாஸ்டருக்கு ஏறக்குறைய எல்லா இசங்களும் தெரியும் ,அவர் ஆங்கில அறிவுள்ளபடியால், கொஞ்சம் அட்வான்சாக அவர் காலத்து யாழ்ப்பான தமிழ் எழுத்தாளர்களை விட ஐரோப்பா,மேலை நாட்டு இன்டலக்சுவல் இலக்கிய விசியம் தெரியும் ஆனால் அவர் ஒரு கதையோ ,கவிதையோ,கட்டுரையோ எழுதிய சிலமன் இல்லை, இவை பற்றி அவரிடம் கேட்டால் 

                             "எடேய்  இந்த இசம்கள் எல்லாமடா  ஐரோப்பிய கலாசார பின்னணியில் உருவானவை, தமிழ் கலாசார பின்னணியில் இல்லையேப்பா ,  அதால அதை தமிழில் விளங்கப்படுத்த முடியாதடாப்பா  , எனக்கே ஆங்கிலத்தில் தான் அழகா விளங்கும் .." என்று சொல்லுவார் .

                                   அந்த நாட்களில் வந்துகொண்டு இருந்த முற்போக்கு ,பிற்போக்கு உள்ளூர் எழுத்துகளை அவர்

                             "எடேய் இவங்கள் எல்லாம்  சும்மா சிலு சிலுப்பு ,இவங்களுக்கு ஆழமா ஜோசிக்க வைக்கும் தத்துவார்த்த எழுத்து எழுததெரியாது "

                               எண்டு சொல்லுவார், அதுகளை வாசிக்குறது வேலை மினக்கேடு எண்டு தாடியைத் தடவி சொல்லி , அவர் அதுகளை வாசிக்கவும் மாட்டார்,

                            " நீங்கள் வாசிக்காமல் எப்படி சொல்லுரிங்கள் " எண்டு கேட்டால் ,

                      " எடேய் நான் முதல் பந்தியும், கடைசிப் பந்தியும் வாசிப்பனடா ,அதில பிடிபடும் அவங்களின்ட எழுத்திண்ட விறுத்தம் ,ஒரு கதையைத் தொடங்கிறதும் ,முடிகிறதும் தான் கஷ்டம், நடுவில என்னத்தையும் வைச்சு சலாப்பலாம் "

                          எண்டு சொல்லுவார்,அவர் அப்படி சொல்லுறது சரியா எண்டு எனக்கு தெரியவில்லை ,எப்படியோ அவர் உலகத் தரமான பல விசியங்கள் நல்லா தெரிதவர் .

                                ஆனாலும் இவை பற்றி இங்கே நான் எழுதும் இது பின்நவினத்துவ ஸ்டைல் கதை இல்லை,எனக்கு அந்த ஸ்டைலில் எழுத தெரியாது  . ஆனாலும் அவர் எனக்கு பல இசங்கள் அறிமுகம் செய்யப்பட்ட புத்தகங்கள்,அதை எழுதிய எழுத்தாளர் பற்றி எப்பவும் சொல்லுவார், முக்கியமா எப்பவும் போஸ்மோட்டம் இசம் எண்டு அடிக்கடி சொல்லுவார், போஸ்மோட்டம் என்ற இறந்தவர்களை சவச்சாலையில் வைச்சு கிண்டிக் கிளறுரதுக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம் எண்டு விளங்காமல் இருந்தது . 

                                 ஒரு நாள் சுப்பிரமணியம் கடைக் கட்டைக் குந்தில இருந்த நேரம், அவரிடமே கேட்டேன் ,நான் கேட்டவுடன அவருக்கு இலக்கியத் தாகம் வந்திட்டுப்  போல

                           "எடேய்   சொல்லுறன் முதல் ஞானம் கடையில் ஒரு பிளேன் டீயும் வாய்பனும் வேண்டிதாறியாடா  " எண்டு கேட்டார், நான் வேண்டிக் கொடுத்தேன் , அவருக்கு இலக்கிய உற்சாகம் வந்திட்டுது ,

                  " எடேய்  நீ கேட்ட அது போஸ்மோட்டம் இசம் இல்லையடா மடைச் சாம்பிராணியே  ,போஸ்ட் மொடேர்ன் இசம் ,தமிழில பின் நவீனத்துவம் எண்டு சொல்லலாம் , மிஷேல் ஃபூக்கோ தான் அந்த இலக்கிய எழுத்து முறையைக் கண்டு பிடித்தவர்டா மக்கு மடையா  " என்றார் ,நான் அதை புரியும் படி சொல்ல முடியுமா எண்டு கேட்டேன்,

            அவர் கொஞ்சம் ஜோசிதார் ,

                     " எடேய் முதலில் வெளிய வா , அடேய் அவசரத்துக்கு பிறந்தவனே  முதல் அவசரப்படாதை , மனியத்திட்ட கடையில ஒரு கனகலிங்கம் சுருட்டு வேண்டிதா சொல்லுறன் "

                             என்றார் ,நான் சுருடுக்கும் படி அளந்தேன். குந்தில இருந்து அதைப் பத்திக் கொண்டு இருக்க , அந்த நேரம் பார்த்து ஒரு நாய் வந்து, வைரவர் கோவிலுக்கு முன்னால இருந்த லைட் போஸ்ட்டை சுற்றி சுற்றி பின்னங் காலை தூக்கி மணந்து பார்கிறதை எனக்கு காட்டினார்,

                 " அடேய் இப்ப நாய் என்ன செய்யப் போகுது சொல்லு பார்ப்பம் " என்றார்,

                                 நான் " நாய் பின்னங் காலை வேற என்னத்துக்கு பரதநாட்டியம் ஆடவா தூக்குது, தூக்கி மூத்திரம் பெய்யப் போகுது " என்றேன்,

                              சொன்ன மாதிரி நாய் பின்னங் காலை தூக்கி வலு சிரத்தையா லைட் போஸ்டுக்கு தண்ணி வார்க்க , அவர் என்னைப் பார்த்து

                       " அடேய் விழுவானே இப்ப பார்த்தியா , இந்த நாய் முன்னப் பின்ன ஜோசிகாமல் இயல்பா பின்னங் காலை தூக்கிச்சுதெல்லா ,  இது பின் நவீனத்துவ நாய் " எண்டு சொன்னார் ,

                       " அப்ப நாய் முன்னங் காலைத் தூக்கி இருந்தா முற்போக்கு நாய் எண்டு சொல்லலாமா " எண்டு கேட்க நினைச்சேன் கேட்கவில்லை.

                              "அடேய் செம்மறி ,  பின்நவீனத்துவம் என்றால் ஒருவகை எழுத்து முறை என்று எண்ணிக் கொண்டிருக்கிராய் என நினைக்கிறேன். அப்படி அல்ல , அரைகுறையாகப் புரிந்து கொண்டவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு எழுத்துமுறையும் அல்ல. அது ஒரு சுவாரசியமான பொதுப்போக்கு மட்டுமேடாப்பா "

                          எண்டு சொல்லிடுப் போட்டார்! உண்மைதான்,,இந்த இசம்கள் இமசைதான் விளங்கிக்கொள்ள , இருந்தாலும் வாசிக்க சுவாரசியமா சில நேரம் இருக்கும் போல இருந்தது அவர் சொல்லும் விளக்கம் கேட்க .

                                          அதுக்குப் பிறகு அவருக்குப் பின்னாலா திரிந்து பின்நவீனத்துவம் என்றால் என்ன எண்டு நான் கேட்கவேயில்லை , ஆனாலும் ஆங்கிலத்தில் படிக்கத் தொடன்கிய காலத்தில் அது என்ன விசியம் எண்டு நோண்டிப்பார்க்க , உண்மையில் அது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சியடைந்து, எல்லாவற்றையும் தர்க்கவியல் மூலம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் ஏற்பட்ட, அதை சில சமூக இயல்புகளை வைத்தும் சிந்தனைப் போக்குகளை வைத்தும் அடையாளப்படுத்துகிறார்கள். 

                                   பின் நவீனத்துவம் ஒரு குறிப்பிட்ட சிந்தனை முறையோ அல்லது இலக்கிய வகையோ அல்ல. அது ஒரு பொதுவான எண்ணம், இன்றைய உலகத்தின் இயல்பு ஒட்டு மொத்தமாக பின்நவீனத்துவ அம்சம் கொண்டது என்று சொல்கிறார் மிஷேல் ஃபூக்கோ, 

                                        குறிப்பாக ஒழுங்கமைப்பு அதிகாரத்தையும் அதன் முறைமைப்படுத்தலையும் குறித்த சிக்கல்கள் பற்றி ஆராய்வது பின்நவீனத்துவம் என்று குறிப்பிடுகின்றார். இந்த இசம்கள் எல்லாம் ஐரோப்பிய கலாசார பின்னணியில் உருவானவை, தமிழ் கலாசார பின்னணியில் இல்லையே அதால அதை தமிழில் விளங்கப்படுத்த முடியாது ,எனக்கே ஆங்கிலத்திலதான் அது விளங்கியது.

                       எல்லா இயக்கமும் மும்மரமா யாழ்பாணத்தில் இயங்கிய காலத்தில் சிங்கி மாஸ்டர் எந்த இயக்கத்துக்கும் சார்பாக இருக்கவில்லை,ஆனால் அவர் கற்பனாவாத சோசலிசம் என்று ஒரு கட்டுரை உள்ளூர் பத்திரிகையில் எழுதி இருந்தார் என்று ஒரு முறை எனக்கு காட்டி இருக்கிறார் ,அதில அவர் எழுதியதுகளும் எனக்கு விளங்கவில்லை ,சுருக்கமா இதில என்ன எழுதி இருகுரிங்க என்று கேட்டதுக்கு, அந்தப் பேப்பரை வேண்டி சுழட்டி எறிஞ்சு போட்டு ,

                       " எடேய், நாசம் அறுவானே இதுவுமா உனக்கு தெரியாது ,   முதல் சோசலிச நாடாக சோவியத் யூனியனும் அதனையொட்டிப் பல நாடுகள் சோசலிச நாடுகளாக மாற ஒரு சக்தி வாய்ந்த சோசலிச முகாம் உருவாகியது. 
                          
                               "   ஒ ,,அப்படியா,,அதுக்குப் பிறகு என்ன நடந்தது .."

                        " அத்தகைய மகத்தான சாதனைகளை மார்க்ஸ், எங்கெல்ஸ் வழியில் நின்று நிகழ்த்திக் காட்டிய லெனின், ஸ்டாலின் மறைவிற்குப் பின்பு ,, இப்ப   என்னத்துக்கு  மண்டையச்  சொறியிராய் "

                            " மார்க்ஸ்,,ஏங்கெல்ஸ், லெனின்  ,,ஸ்டாலின்  ,,இவர்கள்  யார் , ஒன்றுமே  புரியவில்லையே "

                             " டேய்,,எருமை   அவர்கள்தான்  கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக்ஸ் ஏங்கெல்ஸ், விளாதிமிர் உளியானிவிச்  என்ற  லெனின்,,மற்றது  ஜோசப்  ஸ்டாலின் "

                          " அப்படியே,அவர்கள்  பெயரே  மண்டையை அம்மியில்  வைச்சு  அரைச்ச மாதிரிக்  குத்துதே "

                             " மிச்சத்தைக்  கேள்  கழுதை ..   பாட்டாளி வர்க்கத்தின் வழிகாட்டும் தத்துவத்தைச் செழுமைப்படுத்தும் போக்கிலும் சமூக நிகழ்வுகளின்  மாற்றங்களுக்கு உகந்த வகையில் வழிமுறைகளை வகுப்பதிலும் கோளாறுகள் ஏற்பட.... என்ன நான் சொல்லுறது உன் மண்டைக்குள்ள ஏறுதா "

                               "   கொஞ்சம் ஏறுது ,,மிச்சம் உள்ளுக்க போக முடியாமல் வெளியால நிக்குது .. மார்க்ஸ், எங்கெல்ஸ் பெயர்கள் கொஞ்சம் கேள்விப்பட்ட பெயரா இருக்கு "

                               "  சரி, அது உன் அறிவுக்கு அவளவே காணும். சொல்ல வந்ததை சொல்லி முடிக்கிறன்  , வர்க்க சமரசப் போக்கும் நாடாளுமன்ற வாதமும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் தோன்றி படிப்படியாக அக்கட்சிகளின் அடிப்படையையே சீரழித்துப் போட்டாங்களடா மூதேசிகள்  " 

                                       என்று கோபமாக, ஆனால் அவர் எப்பவும் கதைக்கும் பேச்சுமொழியில் இருந்து கொஞ்சம் விலகி ஒரு பொது மேடையில் பேசுவது போல  சொன்னார் .எனக்கு இவளவு முற்போக்கு சிந்தனையை ஜோசிக்கவே  மண்டைக்குள்ள யாரோ மணி அடிக்கிற மாதிரி இருந்தது.

                                  சிங்கி மாஸ்டர், கொஞ்சம் வித்தியாசமா , நிழலா இயங்கியதால் , அவரின் உண்மையான அறிவு வீச்சைப் புரிந்துகொள்ளாத பலருக்கு அவர் நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாக இருக்க, யாரோ அவர் 

                          " ........ " தின்  உளவாளியா இருக்கலாம் எண்டு வதந்தியைக் கிளப்ப ,ஒரு இரவு அவர் வீட்டுக்கு வந்த " ......  " க்க ஆட்கள் , அவர் சேர்த்து வைத்திருந்த புத்தகங்கள் எல்லாத்தையும் இழுத்துக் கொட்டி ,தேடு தேடு எண்டு சல்லடை போட்டுத் தேடி , அவரின் கண்ணைக்கட்டி , கை இரண்டையும் பின்னாலா கட்டி வேனில ஏத்திக்கொண்டு போனதா ,மசுக்குட்டி மாமி சொன்ன செய்தி கொஞ்சம் கொஞ்சமா ஊருக்குள்ள கசியத் தொடங்கியது , 

                                 அவரை தேடுறதுக்கு அவருக்கு எண்டு ஒரு குடும்பமோ ,மனைவியோ ,பிள்ளைகளோ இருக்கவில்லை , அவருக்கு அதுக்குப் பிறகு என்ன நடந்தது எண்டு யாருக்கும் தெரியாது....

.


நாவுக் அரசன்
ஒஸ்லோ.

Tuesday, 25 August 2015

வாடைக்காற்று

ஒரு  எழுத்துருவில்  வந்த ஒரு  நாவலைப்  படமாக்குவது  எப்பவுமே  சவால் நிறைந்த ஒரு முயற்சி. இலங்கையின் முக்கிய  தினசரியான வீரகேசரியில்  தொடராக  வந்த  கதை வாடைக்காற்று. அதைப் படம் ஆக்கினார்  ஈழத்து ரத்தினம்  என்ற தயாரிப்பாளர். அதுவும் முப்பத்தைந்து   சொச்சம் வருடங்களின் முன். அப்போது  இலங்கை  எல்லா  இன மத மொழி மக்களும் ஒன்றாக இருந்த நேரம் . அப்படி வந்த வாடைக்காற்று  என்ற படத்தைப் பற்றி நோர்வே நாட்டு தலைநகர்  ஒஸ்லோவில்  இருந்து ஒரு மீள்பார்வை செய்கிறேன். 

                                              யாழ்பானத்தில் ராணி தியேட்டரில் ஓடிய , இலங்கைக் கலைஞர்கள் பலர் ஒன்றாக ஆளை ஆள் நீயா நானா எண்டு முரண்டு பிடிக்க்கும்  ஈகோ இல்லாமல்  சேர்ந்து உருவாக்கிய ஒரு முக்கியமான படைப்பு வாடைகாற்று என்ற கறுப்பு வெள்ளைப் படம், அது இன்று வெறுமே அதைப் பார்த்தவர்களின் நினைவுகளில் மட்டுமே வாழ வேண்டிய ஒரு அவல சூள் நிலை இலங்கைத் தமிழரின் வரலாற்றில் நடந்திருப்பது ஜோசிக்கவே கஷ்டமா இருக்கு. அந்தப் படத்தின் ரீல் களையே  என்பது மூன்று  அடிக்கலவரத்தில் சிங்களக்  காடையர்கள்  எரித்து விட்டார்கள்  என்றும் சொல்கிறார்கள் 

                                    அந்தப் படம் ராணியில்  ஓடியபோது வெளியே ஒரு கறுப்பு  வெள்ளையில் ஆர்டிஸ்ட்  மணியம் வரைந்த   பெரிய கட்டவுட் வைச்சு இருந்தார்கள். அதில் ஒரு மீனவப் பெண் சீத்தைத் துணியில் தைத்த பிளவுசும், பூப்போட்ட சரமும் கட்டி இடுப்பில் சாளை மீன் அள்ளும் ஓலைப்பிரம்புக் கூடையை வைச்சுக்கொண்டு ஏக்கமாக  அலைகளில்  அடித்துச் செல்லப்பட்ட  வாழ்க்கை ஒன்றின் சொல்லமுடியாத  வழியைப்  பார்வையில் ஏற்றிவைத்து  அந்தப் படத்தின் ஜீவனை வெளிக்கொணர்ந்திருந்தார்கள்.  

                                       மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்ற தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமை பெற்ற 'வாடைக்காற்று' படத்தை இன்று இப்படி நான் கதை வடிவில் எழுதுவதை நினைக்க உண்மையில் கவலையா இருக்கு, இத்திரைப்படத்தின், ஒரு சின்னப் துண்டுப் படம் தன்னும் யாரிடமும் இல்லை என்கிறார்கள் ,அது எவளவு பெரிய இழப்பு என்று இள வயதில்என்னைப்போல அந்தப் படம் பார்த்த பலருக்கு தெரியும்.

                                      செங்கை ஆழியன் என்ற கலாநிதி கந்தையா குணராசா எழுதிய வீரகேசரிப் பிரசுரமாக வந்த வாடைக்காற்று நாவலாக வாசித்த காலத்திலேயே கொஞ்சம் ஜனரஞ்சகமா. கிளாசிகல் சுவாரசியமா இருந்த அதை , நாவலின் பெயரானா வாடைக்காற்று பெயரிலேயே திரைப்படமாக்க, கதை நெடுந்தீவில் நடப்பதால் அங்கேதான் ஏ. வீ. எம். வாசகம் என்ற காமராமான் ,கமராவை வைச்சு சுழட்டி எடுத்து இயற்கைக்கு உயிர் கொடுத்து இருப்பார் எண்டு நினைத்திருந்தேன்,

                                           உண்மையில், வெள்ளித் திரையில் கறுப்பு வெள்ளை படத்தொகுப்பிலும் மின்னிய ,கடல் கரை, அதை தழுவும் அலைகள், பனங் காணிகள், கன்னாப் பத்தைகள் ,பனை வடலிகள், கோவேறு கழுதைகள்,பிளமிங்கோ பறவைகள், மணல் கும்பிகள் எல்லாம் ,கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது என்று படித்த போது ஆச்சரியமா இருந்தது.

                                      நெடுந்தீவில் வேலை செய்த போது செங்கை ஆழியன் கவனித்த விடயங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை பின்னர் அந்தக் கதை நடந்த நெடுந்தீவில்ப் படமாகப் பட முடியாமல்ப் போனதுக்கு முக்கிய காரணம் அந்த கதையை நாவலாக எழுதிய செங்கை ஆழியன், நெடுந்தீவு மக்களின் தோற்றம் ,ஹோலந்த் என்ற டச்சுக்காரர்கள் அந்த மக்களின் முன்னோர்களின் வழியில் ,வம்சத்தில் குறுக்கிட்டதால் ஏற்பட்ட சில ஜீன் மரபு ரீதியான தோற்ற வெளிப்பாட்டை அந்தக் கதையில் எழுதியதால், நெடுந்தீவில் அவர் சிவில் அரசாங்க அதிகாரியா வேலை செய்த அலுவலகம் முற்றுகை இடப்பட்டு,அடித்து நொறுக்கப்பட்டு அவருக்கு எதிராக வழக்கும் போடப்பட்டது எண்டு சொன்னார்கள்.

                                      இரவினிலே இறைவனை நம்பி தொழிலுக்காக செல்லும் மனிதர்களின் கதையான வாடைக்காற்று , வங்காள விரிகுடாவில் ஆவேசமாக எழும்பும் வாடைக்காற்று காலத்தில் மன்னாரில ,கரையூர்ல இருந்து வந்து வாடி போட்டு மீன் பிடிக்கும் வெளியூர்க்காரர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் ஏற்படும் உறவு, பகை, காதல் ,ஒரு கற்பழிப்பில் சூடு பிடிச்சு, ஒரு கொலையில் முடியும் இதுதான் கதை . கதை இரண்டு பருவங்களில் ,கூளைக் கிடாய் என்ற பிளிகன் பறவைகள் ரசியாவின் சைபிரியாவில் இருந்து நெடுந்தீவு வந்து இறங்க,அவைகளின் வரவோடு கதை தொடங்கி , மனிதர்களின் விரிசல்களோடு கதை நடக்கும்.

                              சில வருடம் முன் மன்னாரில் இருந்து வந்து வாடிவீடு கட்டி தொழில் செயத சம்மாட்டி செமியோன் ஆக பொப் இசைப் பாடகர் ஏ இ மனோகரன் நடிக்க , உள்ளூர்ப் பெண்ணான பிலோமினா என்ற பெண்ணாக சந்திரகலா நடித்து இருந்தார். செமியோனுக்கும்,பிலோமினாவுக்கும் இடையில் இருந்த ஒரு வித காதல் கலந்த உறவு, அவளது அப்பா , அண்ணன் ஆகியோருடன் செமியோன்க்கு ஏற்பட்ட மனக் கசப்பினால் முறிந்து போய் விடுகிறது.

                                   உள்ளூர்க்காரரான பொன்னுக்கிழவர் ஆக நடித்த "முகத்தார் வீடு " புகழ் ஜேசுரட்னம், பெற்றார் இல்லாத தன் பேத்தி நாகம்மாவை கஷ்டப்பட்டு வளர்த்து வருகிற அவர், உள்ளுரில் கோவேறு கழுதையில் சுற்றித் திரியும், பத்தைக் காடுகளில் முயல் பிடிக்கிற அவளது முறை மாப்பிள்ளையான விருத்தாசலம் ஆக நடித்த அண்மையில் மறைந்த கே எஸ் பாலச்சந்திரனுக்கு அவளை கலியாணம் செய்து வைக்கவேண்டுமென்று ஆசைப்பட, மன்னாரில் இருந்து வந்த சம்மாட்டி வேதக்கார செமியோன், சைவக்கார நாகம்மாவையும் மனம்மாற்றி மயக்கிக் கொண்டுபோக சண்டை தொடங்குது.

                                  இந்தப் படத்தில மரியதாஸ் என்ற பாத்திரத்தில் நடித்த ,வைத்திய நிபுணர்,சில வருடம் முன் லண்டனில் மறைந்த டாக்டர் இந்திரகுமார் சிமியோனுகுப் போட்டியா வாற சம்மாட்டியா நடித்து இருந்தார், ஒரு டாக்டர் எதுக்கு தமிழ் சினிமாவில நடிச்சார் எண்டு இன்னுமே விளங்கவில்லை. மிகவும் அடக்கமான  புகழ் விரும்பாத டாக்டர்  இந்திரகுமார்   இலண்டனில் அவர்  இறந்தபோதுதான்  பலருக்குத் தெரியவந்தது  அவர்  ஒரு  ஜனாதிபதி விருது வேண்டிய நடிகரும் என்று .


                                             செமியோன் சம்மாட்டி வழக்கமாக மரியதாஸ் வாடி போடும் இடத்திலே பலாத்காரமா வாடி போட்டுத் தொழில் செய்ய, பணத்தைக் காட்டி உள்ளூர் மீனவத் தொழிலாள்ர்களை தன்பக்கம் இழுக்க, இவளவு நாட்டாண்மை செய்தும் செமியோனுக்கும், மரியதாஸுக்கும் நடக்கும் தொழில் போட்டியிலும் மரியதாஸுக்கே அதிகம் லாபம்,தொழில் வெற்றி கிடைக்க தொடங்க கதையில் வாடைக்காற்று திசை மாறி எதிர் எதிர அடிக்க தொடங்குது.

                                      டாக்டர் இந்திரகுமார் அவரது தொழில்சார் துறையாகிய மருத்துவத்துறையில் நிபுணராக விளங்கியதுபோதும்,தமிழ் மொழியின் மீதும், நடிப்புத் துறைமீதும் அதிகம் விருப்பம் இருக்க அவருடைய திறமைக்குச் சான்றாக அவர் மரியதாஸ் ஆகா நடித்த வாடைக்காற்று திரைப்படம் ஜனாதிபதி விருதினைப் பெற்றுக் கொடுத்திருக்கு. 


                                   எழுத்தாளராகவும், மருத்துவராகவும் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய டாக்டர் இந்திரகுமார் 1983 கலவரத்தில் லன்டனுகுப் புலம் பெயர்த்து 25 வருடங்கள் அங்கே பிரபல வைத்திய நிபுணரா வேலை செய்த அவர்தான் வாடைக்காற்றுபடத்தில , உயர்த்திக் கட்டிய சரத்தோட , சேட்டும் போடாமல், " அப்புவைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வியா " எண்டு ஒரு " பன்ச் டயலக் " எப்பவுமே அவரின் காதலி நாகம்மாவிடம் குறும்பாகக் கேட்டு ,கடற்கரை எங்கும் மணல் வெளியில்க் காவியம் எழுதிய மரியதாஸ் எண்டு பலருக்கு தெரியாமலே போனது.....

                                            சுடலைச் சண்முகம் என்ற பாத்திரமாக ஜவாஹர் என்பவர் நடித்து இருந்தார் ,உண்மையில் அந்தப் பாத்திரம் தான் படத்தின் கதையில் முக்கியமான பல திருப்பங்களைக் கொண்டுவரும் .ஊர்த் திருவிழா நடக்கிற நேரம் , செமியோன் சம்மாட்டி தன் காதலி பிலோமினாவை ரகசியமாக சந்திக்கிற இரவு இருட்டு நேரத்தில , இந்த நேரத்தில் யாரோ மரியதாஸ் சம்மாட்டியின் வாடிக்கு தீ வைத்து விட. அதைப் பார்க்க செமியோன் அவசரமாகப் போக, தனியாக இருட்டில் போன சிமியோனின் மீன் கொத்தி பறவை போல அழகான காதலி பிலோமினாவை, சுடலைச் சண்முகம் கற்பழித்து கொலை செய்து விடடுகிறார் 


                            இதில  கதை  இன்னொரு  திசை நோக்கி திரிலர் படங்கள் போல உருவெடுக்கும் . எப்படியோ  நடந்ததை ஊகித்து அறிந்து கொண்ட விருத்தாசலம் சுடலைச் சண்முகத்தை துரத்திச் சென்று, தனது ஈட்டியினால் எறிந்து கொல்ல , விருத்தாசலம் பாத்திரமாகவே மாறி கேஸ் எஸ் பாலச்சந்திரன் அதில் நடித்து இருகிறார்..

                                           இவளவு குழப்பமும் வெளியூர் மீனவர்களால் உள்ளுரில் நடக்க அதை எங்கள் செங்கை ஆழியன் கதையாக எழுத வெள்ளித்திரையில் பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் டைரக் செய்து, கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றி, ஈழத்து இரத்தினம், சில்லையூர் செல்வராசன்எழுதிய, பாடல்களை ஜோசப் ராசேந்திரன், வி.முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க பாட, திரைக்கதை..வசனம் கே.எம்.வாசகர்   என்ற யாழ்பாண எழுத்தாளர் எழுதி இருக்கிறார்..


                              . இதில் புலோமினாவின் அண்ணன் சூசையாக தற்சமயம் ஐரோப்பாவில்,சுவிஸ்லாந்தில் புலம் பெயர்ந்து வாழும் குணபதி கந்தசாமி ஐயாவும் நடித்து இருக்கின்றார். 

                              இந்தப்  படத்தின்  " தீம் சாங் " என்ற  " வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே..."   என்ற  பாடல்  இலங்கை வானொலியில்  மிகவும் பிரபலமாக  இருந்தது.  அந்தப்  பாடலின்  மூன்று  சரணங்களும்  வேறு வேறு விதமான  உணர்வுப் பிழிவாக இருக்கும் .  ஒருவருடத்தில் ஒருமுறைதான்  வரும்  வாடைக்காற்றை  நம்பி  வாழும் ஒரு உழைப்பாள சமூகத்தின் அத்தனை அவலங்களையும் அந்த  ஒரு பாடலில் சொல்லியிருப்பார்கள் .  இந்தப்  படத்துக்கு டி எப்  லத்திப் இசை அமைத்து  இருந்தார்.

                                   யாழ்பாண தீபகற்பத்தின் நிலப்பரப்புக்கு வெளியே வங்காள விரிகுடாவின் அலைகள் தாலாட்டும் ஒரு சின்னத் தீவான நெடுந்தீவில் ஒரு சம்பவம் ஒரு கதையின் உயிர் ஆகி ,
நீல கடல் மீதினிலே ஓடமிது நீங்கி வரும் கலையிலே நாளுமிது வலைவீசி வாழுகின்ற கூட்டமிது,நாங்கள் வாழுவது கடலோரம் குடிசையிலே  எங்கள்  குடிசையிலே என்று மீனவ சமூகத்தின் வாழ்வின் தொடர்கதை வெள்ளித்திரையில்த் தவழந்து எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட வாடைகாற்று அசைக்கமுடியாத இலங்கைத் தமிழரின் சரித்திர சாதனை ....


                                 இலங்கை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் ஜோசப் ராசேந்திரன் பாடிய இதயம் பிழியும்" வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே ,நல்ல வாழ்க்கை உண்டு எங்களுக்கு ஓரத்திலே ..." என்ற பாடலைப் பின்னணியில் நீலக்கடல் அலைகள் பாடிக்கொண்டிருக்கும் போது, விருத்தாசலம் ஆசையோடு கனவோடு காத்திருந்த அவரின் காதலி மரியதாஸ் சம்மட் டியோடு போக மனநிலை நொந்துபோக , சம்மடடி செமியோனும் பிலோமினா கற்பழிக்கப் பட்டுக் கொலை செயப்பட இழப்பினால் வருந்த, மரியதாஸ சம்மாட்டி நாகம்மாவை ஊரை விட்டுப் கூடிக்கொண்டு போகிறார் 


                         இலங்கைக்கு எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாத  கூளைக்கிடாய் என்ற பிளிக்கன் பறவைகளும் தங்கள் சொந்த ரஸ்சிய நாட்டு சைபிரியாவுகுப் போக , மீண்டும் ஒரு மீன்பிடிப் பருவம் முடிவுக்கு வருகிறது. வாழ்கை தொடருது. பிளிக்கன் பறவைகளின் வரவையும்  அவைகளின் புறப்படுதலையும் சிம்போலிக் ஆக செங்கை ஆழியான்  அவர் நாவலில் எழுதி இருப்பார். வாடைக்காற்று எடுத்த டீம்  அதை  இன்னொருபடி மேலே போய்  விஷுவல் ஆக  வெள்ளித்திரையில் பின்னி எடுத்தார்கள் .

                             கண்களில் கண்ணீரை வரவழைத்து , உலகம் மறந்து கடற்கரை மணல் வெளி எங்கும் வலியோடு யதார்த்தமாய் வாழ்க்கை சொன்ன அழகின் அற்புதம் வாடைக்காற்று' , தென்னிந்திய சினிமா ஜிகிணா முகப் பூச்சு , அளவுக்கு அதிகமான மேக் அப் , நேரம் கெட்ட நேரத்தில கனவுக் காட்சி, ஹீரோவுகுக் கும்மியடிக்கும் குறுப் டான்ஸ் , இதுபோல ஒண்டுமே இல்லாமல் , மீனவ மக்களின் வியர்வையின் வாசத்தை, அவர்களின் இளகிய இதயத்தை திரையில உணரவைத்த அந்தப் படம், ஒரு கவிதை போல ஜோசிக்க வைத்து முடிவு இன்னொரு பருவத்தின் தொடக்கமாகி முடிகிறது.


                                 நம்மவர்களும்  சளைத்தவர்கள் இல்லை  என்று  சேட் கொலரை தூக்கி விட்டு  பெருமைப்பட வைத்த விதத்தில் வாடைக்காற்று   ஒரு பெருமழை பெய்து  முடித்த நிகழ்வுபோல இருக்கும்  அந்தத் திரைப்படம் பார்த்து  முடியும் போது .  அதைவிட அந்தப் பெருமழையில்   நனைந்தது  போலவே  உணர்வோடு ஓட்டிகொண்டு சில  கண்ணீர் துளிகளையும்  சிந்திவிட்டு வரவேண்டிய ஒரு காவியம்  வாடைக்காற்று.

.