Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, 28 August 2015

" பூஞ்சணம்பிடிச்ச பான் ...."

உண்மையில் விமர்சனம்  என்பது மிரட்டல்களுக்கும் உருளைக்கிழங்கு பிரட்டல்களுக்கும் பயந்துகொண்டே தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் பம்முவது என்பதல்ல பதிலாக அதிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்வது. விமர்சன விமர்சிப்புக்கள் நம்மை நாமே சுயபரிசோதனை செய்து இன்னும் ஒருபடி மேன்மக்களாக மேலேறிக்கொள்வது என்று நினைக்கிறேன்.

                                             தங்களால் தாயரிக்கப்பட்ட ஒரு படம் என்று சொல்லி ஒரு அன்பர் ஒரு லிங்க் சில மாதம் முன் அனுப்பி அதைப்பற்றி எழுதும்படி கேட்டு இருந்தார். எனக்கு திரைவிமர்சனம் எழுத முடியுமா என்பது எனக்கே ஒரு கேள்வியாக பல காலம் இருந்தாலும்,பல ஆங்கிலப் படங்களுக்கு " இல்லாதவனுக்கு இலுப்பை பூ சர்க்கரை .." போல என்னோட ஸ்டைலில் எழுதி இருக்கிறேன்,

                                       ஒருவேளை அதை நினைத்து அந்த பட லிங்கை சில மாதம் முன் எனக்கு அனுப்பி இருக்கலாம் போல
 . ஒரு படத்தைப் பலர் நேரம்,உழைப்பு செலவழித்து எடுத்து இருப்பதால் அந்தப் படம் என்ன என்று சொல்லி அவர்களின் உற்சாகத்தைக் குறைப்பது மோட்டுக் கழுதைத்தனம் அதால் அந்தப் படம் பெயர் சொல்லப்போறதில்லை.ஆனால் அதைப் பார்த்தபோது தோன்றிய சில விசியங்களை மட்டுமே என்னோட குறுக்காலபோற ஸ்டைலில் சொல்லுறேன்.

                                            பல இடைஞ்சல்களுக்கு நடுவில் முதலில் அதை எடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள். எவளவோ  கஷ்டப்பட்டு  நேர விரைய  உழைப்பில்  அதை அதை  ஆர்வமாக  எடுத்து இருக்கிறார்கள் அதுக்குத் தலை  வணங்குகிறேன் . வாய்  பித்தத்தில் புளித்ததோ அல்லது மாங்காய் தான்  புளித்ததோ என்ற  விமர்சனம் போல இல்லாமல் என் வாசிப்பு,சினிமா பார்த்த அனுபவத்தில் இதை சொல்லுவது குறை பிடித்து மட்டம்தட்ட அல்ல பதிலாக அவர்கள் இன்னும் இன்னும் உயர்ந்த தரத்துக்கு முன்னேறிப் போக வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலை மட்டுமே.


                                 "  ஒரு திரைப்படத்தை, குறும்படத்தை ,டாக்குமென்ட்ரியை  விமர்சிக்க  உனக்கு  என்ன  தகுதி இருக்கு, நீ என்ன  பெரிய  அக்குரோ குரோசோவா ,   அப்ப  நீயே ஒரு  படம்  எடுத்துக் காட்டேன்  "  என்று ஒரு வாதம் எப்பவும் வரும். ஒரு தோசைக் கடையில் காசு கொடுத்து தோசை சாப்பிடுறோம். தோசை நல்லா இல்லை என்றால் நல்லா இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதுக்காக அந்த கடை முதலாளி  வந்து  நீ அப்ப  தோசை போட்டுக்காட்டேன்  என்று கேட்க முடியாது. அசிங்கமா இருக்கும் .

                                          எனக்கு அனுப்பிய அந்த படத்தை நான் காசு ஒண்டும் கொடுத்துப் பார்க்கவில்லை. ஓசியில்  இன்டர்நெட் இல்தான்  பார்த்தேன். ஆனால் அந்த நேரம் எனக்கு முக்கியம். நான் செலவுசெய்த அந்த நேரத்துக்கு ஒரு காசுப் பெறுமதி இருக்கு. அதனால் என் கருத்தைப் பொதுவாக சொல்லுறேன். அதுக்கு  முதல்  மஸ்ஜித் மஸ்ஜித்   என்ற  ஈரானியர்  எடுத்த " சில்டர்ன் ஒப்  ஹவின் "  படத்தை பத்து முறை  பார்த்த அனுபவத்தில் உலக சினிமாவின் அடி அளவுகோல் எனக்கும் கொஞ்சம் தெரியும் . அதால சொல்லுறேன்

                                     தொடக்கமே நாலு வீதிகள் சந்திக்கும் இடத்தில நிக்கிற கதை எந்தப்பக்கம் போறது என்று தடுமாறும் அது முதலில் படம் போல இல்லை. ஒரு அளவுகோலில் பார்த்தால் குறும்படம் .கொஞ்சம் டெக்னிகலா சொன்னால் திரையில் ஓடவைக்க எடுக்கப்பட்ட டாக்குமென்ட்ரி போல இருந்தது. ஒரு திரைப்படம் எடுப்பது இலகுவான விசியம் இல்லை. " இருக்கிறவன் அள்ளி முடிஞ்சிக்கிறான், இல்லாதவன் தடவி பாத்துக்கறான் .." என்று போனாப் போ வந்தா வா என்று திட்டம் இல்லாமல் தொடங்கவே முடியாது.

                                                    அந்தப் படத்தின் கதையை  லைனியர் ஸ்டைலில் ஒரு வரியில் சொல்கிறேன் " பூஞ்சணம்பிடிச்ச பானை ஒரு பூனை பார்த்துக்கொண்டு இருக்கு." .......இவளவுதான்! ஆனாலும் என்னைப்பொருத்தவரை இந்த கொன்செப்ட் ஐ characteristics of the individual regardless of the nature or circumstances என்ற அணுகுமுறையில் வேற ஒரு லெவலில் எடுத்து இருக்காலம் போல இருக்கு.

                                                 இந்தப் படத்தின் கமராமான் என்ற ஒளிப்படக் கலைஞ்சர் பல இடங்களில் தன்னோட அலாதியான கைவண்ணத்தைக் காட்டி இருக்கிறார். ஒரு சின்ன நகரம் அதன் குறுக்குச் சந்திகள்,வீதிகள் ,அந்தக் கதை நடக்கும் வீடு, எல்லாத்தையும் ஒரு கன்வஸ் ஓவியம் போல பல படமாக்கி இருந்தாலும் ஒரு சொதப்பல் கதைக்கு அவரால் மட்டுமே கொஞ்சம் வண்ணங்கள் சேர்க்க முடிந்து இருக்கு. வேற என்னதான் செய்ய முடியும் ஒரு டெக்னிசியனால். எப்படியோ அவரின் பார்வை எதிர்கால கோடம்பாக்கப் பிரகாசங்களுக்கு உறுதிமொழி கொடுக்கிறது.

                                                  ஒருதிரைப்படம் எடுக்க முக்கியமா அதுக்கு ஒரு அமர்க்களமான கதை கையிலஇருக்க வேண்டும், அதை இடுக்குகளில் உள்ளே நுழைந்து விசுவல் ஆகச் சொல்ல திரைக்கதை ஆக மாற்ற வேண்டும், அலுப்படிக்காமல் நகர்த்த பூந்துவிளையாடும் வசனம் எழுத வேண்டும் ,தொய்வில்லாமல் அதைக் கமராவில் கதையாக இழுத்துக்கொண்டு பின் தொடரவேண்டும், பிண்ணனி இசை கதையின் ஈரமான பிரதேசங்களில் மழை பொழிய வேண்டும். . இவளவு இருந்தாலும் சில படங்கள் எடுபடாது,,சில படங்களில் இதில ஏதோ ஒன்று குறைவாக இருந்தும் வெற்றிபெறும்.

                                            ஒரு இடைதர நகரத்தில் இருந்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தைப் பார்த்த போது அதில இருந்த மிகப்பெரிய ஓட்டை அந்தப் படத்தை இயக்கிய இயக்குனரின் பரிமாணங்களை கனதியாகப் பிரித்தெடுக்கத் தவறியது தெரிந்து. அந்தப் படமே அரைவாசிக்குமேலே நம்பிக்கை இழந்திருக்கும் தருணங்களில் மிச்சம் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு உயிரோட இருந்து பார்கத்தான் வேண்டுமா என்று மண்டையைக் குடையுது அதன் அசுவாரசியம்.

                                           முக்கியமா என்ன வகையான கதை திரையில் சொன்னாலும் அந்தக் கதையைத் தொடக்கும் நேரம் பார்வையாளருக்கு ஒரு எதிர்பார்ப்பு கொடுக்க வேண்டும், பின்னர் பார்வையாளர் எதிர்பார்க்காத இடங்களில் கதிரை முன் நுனிக்கு கொண்டுவரும் திருப்பங்கள் வரவேண்டும்,முடிவுகள் முக்கியம் இல்லை என்று சொல்லலாம் ஏனென்றால் ஒரு படம் இன்னொரு படத்தின் தொடர்ச்சி , வெள்ளித்திரையில் தவறவிடும் வாழ்க்கைபோல ,,இந்த உத்திகளில் அந்த இயக்குனர் இயங்கவேயில்லை.

                                          கோணையன் கிழிச்சது கோமணத்துக்கு ஆச்சு போல சில நல்ல விஷுவல் விசியங்கள் அந்தப் படத்தில் இருந்தது.ஆனால் அந்த கொன்செப்ட்ஐ இன்னும் கொஞ்சம் டெவலப் ஆக்கி இருக்கலாம். ஏன் அந்த இயக்குனர் அதை மறந்தார் என்று ஜோசித்த போது அவரின் கலைத்துவக் கற்பனைத் திறமையில்தான் சந்தேகம் வருகுது. ஒரு படத்தில் வரும் அழகியல் வறட்சி நிச்சயமாக அந்தப் பட இயக்குனரின் கற்பனை வறட்சியே.

                                      நிறையப் பணம் போட்டு, முறிஞ்சு முறிஞ்சு வேலை செய்த ஒரு படம் வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும்போதாது அந்த லட்சியத்தை அடைய கடினமான உழைப்பு முதலில் கதையை விஷுவல் கோணங்களில் அகலப்படுத்த வேண்டும், கூடவே கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். ஆசை மட்டும் வைச்சுக்கொண்டு அதற்கான முயற்சியை எடுக்கவில்லையென்றால், பிறகு ஆச இருக்குதாம் அரசனாக, அம்சம் இருக்குதாம் கழுத மேய்க்க என்ற மாதிரித்தான் முடியும்.

                                      வாழ்வில் பிடிப்பு ஏற்படுவதற்கு, ஆனந்தத்தின் சுவையை அறிவதற்கு. இந்தக் கரணத்துக்காகவே த்ரூஃபோவின் படைப்புகளில் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்களை விரும்பியவர்கள் உலகின் பல பாகங்களில் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் என்னோட சொந்த அபிப்பிராயம், ஒரு உணர்வுள்ள கவிதை எழுதக்கூடிய. சுவாரசியாமாக ஒரு சிறுகதை எழுதக்கூடியவர்கள் இயக்குனர்களாக இருக்கும்போது ஒரு திரைக்கதையை விஷுவல் ஆக முடிந்தளவு ரசிக்கவைக்க முடியும்.

                                   இதுக்கு நிறைய உதாரணம் வாய்க்குள்ள நுழையாத பெயர் உள்ள பெர்னாண்டோ பெட்ட  லூ ஸி,  ழான் கோலே, ஜோசப் வான் ஸ்டெர்ன்பெர்க், ரோமன்ஸ் பொலான்ஸ்கி போன்ற   இயக்குனர்களை உதாரணமாக சொல்லலாம். அவர்களின் திரைப்படஉத்திகள் வந்த படங்கள் பெயர் எல்லாம் சொன்னா அதை எல்லாம் வாசிக்க உங்களுக்கு அறுவையாக இருக்க ஒருகட்டத்தில் என்னில கொலைவெறி வரும் உங்களுக்கு.


                                     உலகத் தரமான படங்கள்  என்று  நானும்  பீலா  விடுறன் என்று நீங்க  நினைக்கலாம். ஆனால் அவர்களால் தேர்வு செய்யப்படும் கதைகள் மிக மிக சிம்பிள். அந்தக் கதைகள்  நமக்கு அதிகம் நெருக்கமாக இருக்கும். நல்ல சினிமா  பார்ப்பது எங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோவது. அந்த அனுபவம் மிகவும் திரில் ஆக இருக்கும். 

                                             அப்படி எல்லாம் இல்லை"   நான் படம் எடுப்பேன்  நீ பார்த்தே ஆக வேண்டும் " என்றால் அந்தப் பிடிவாதமாகக்  கண்ணைக் கட்டி " எவடம் எவடம் புளியடி புளியடி .." என்ற கதை போல ஒரு வட்டத்துக்குள்ளேயே நின்று சுழரும்படியான ஒரு நிலையை ஏட்படுதிவிடும் . மனித வாழ்வின்  முக்கிய அனுபவம் சினிமா .அதன் பல் பரிமாணங்களை  நாங்கள்  புரியும்போது  வாழ்வியலின் அபத்த நிலைகளில்  உள்ள சிந்தனைப் போக்குகளை இன்னும்  ஆழமாகப்பதிவு செய்ய முடியும் .

                                  கொஞ்சம் ஜோசித்துப் பார்தால் “ஒவ்வொருவருக்கும் தான் செய்ய விரும்பும் ஏதோ ஒன்றைப் பற்றிய ஒரு எண்ணம் இருக்கும். கற்பனையினால் மெருகேற்றப்பட்ட இந்த எண்ணத்திற்கும், இறுதியாக அவர் சாதித்துப் பெற்ற வடிவத்திற்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருக்கும். இந்த இடைவெளியைக் குறைப்பதற்குத்தான் மீண்டும்மீண்டும் முயல வேண்டியிருக்கிறது.” என்று லூயி மால் என்ற இயக்குனர் சொன்னதில் நிறையவே அர்த்தம் இருக்குப்போல இருக்கு.

.
. 


27.08.15

Tuesday, 25 August 2015

வாடைக்காற்று

ஒரு  எழுத்துருவில்  வந்த ஒரு  நாவலைப்  படமாக்குவது  எப்பவுமே  சவால் நிறைந்த ஒரு முயற்சி. இலங்கையின் முக்கிய  தினசரியான வீரகேசரியில்  தொடராக  வந்த  கதை வாடைக்காற்று. அதைப் படம் ஆக்கினார்  ஈழத்து ரத்தினம்  என்ற தயாரிப்பாளர். அதுவும் முப்பத்தைந்து   சொச்சம் வருடங்களின் முன். அப்போது  இலங்கை  எல்லா  இன மத மொழி மக்களும் ஒன்றாக இருந்த நேரம் . அப்படி வந்த வாடைக்காற்று  என்ற படத்தைப் பற்றி நோர்வே நாட்டு தலைநகர்  ஒஸ்லோவில்  இருந்து ஒரு மீள்பார்வை செய்கிறேன். 

                                              யாழ்பானத்தில் ராணி தியேட்டரில் ஓடிய , இலங்கைக் கலைஞர்கள் பலர் ஒன்றாக ஆளை ஆள் நீயா நானா எண்டு முரண்டு பிடிக்க்கும்  ஈகோ இல்லாமல்  சேர்ந்து உருவாக்கிய ஒரு முக்கியமான படைப்பு வாடைகாற்று என்ற கறுப்பு வெள்ளைப் படம், அது இன்று வெறுமே அதைப் பார்த்தவர்களின் நினைவுகளில் மட்டுமே வாழ வேண்டிய ஒரு அவல சூள் நிலை இலங்கைத் தமிழரின் வரலாற்றில் நடந்திருப்பது ஜோசிக்கவே கஷ்டமா இருக்கு. அந்தப் படத்தின் ரீல் களையே  என்பது மூன்று  அடிக்கலவரத்தில் சிங்களக்  காடையர்கள்  எரித்து விட்டார்கள்  என்றும் சொல்கிறார்கள் 

                                    அந்தப் படம் ராணியில்  ஓடியபோது வெளியே ஒரு கறுப்பு  வெள்ளையில் ஆர்டிஸ்ட்  மணியம் வரைந்த   பெரிய கட்டவுட் வைச்சு இருந்தார்கள். அதில் ஒரு மீனவப் பெண் சீத்தைத் துணியில் தைத்த பிளவுசும், பூப்போட்ட சரமும் கட்டி இடுப்பில் சாளை மீன் அள்ளும் ஓலைப்பிரம்புக் கூடையை வைச்சுக்கொண்டு ஏக்கமாக  அலைகளில்  அடித்துச் செல்லப்பட்ட  வாழ்க்கை ஒன்றின் சொல்லமுடியாத  வழியைப்  பார்வையில் ஏற்றிவைத்து  அந்தப் படத்தின் ஜீவனை வெளிக்கொணர்ந்திருந்தார்கள்.  

                                       மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்ற தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமை பெற்ற 'வாடைக்காற்று' படத்தை இன்று இப்படி நான் கதை வடிவில் எழுதுவதை நினைக்க உண்மையில் கவலையா இருக்கு, இத்திரைப்படத்தின், ஒரு சின்னப் துண்டுப் படம் தன்னும் யாரிடமும் இல்லை என்கிறார்கள் ,அது எவளவு பெரிய இழப்பு என்று இள வயதில்என்னைப்போல அந்தப் படம் பார்த்த பலருக்கு தெரியும்.

                                      செங்கை ஆழியன் என்ற கலாநிதி கந்தையா குணராசா எழுதிய வீரகேசரிப் பிரசுரமாக வந்த வாடைக்காற்று நாவலாக வாசித்த காலத்திலேயே கொஞ்சம் ஜனரஞ்சகமா. கிளாசிகல் சுவாரசியமா இருந்த அதை , நாவலின் பெயரானா வாடைக்காற்று பெயரிலேயே திரைப்படமாக்க, கதை நெடுந்தீவில் நடப்பதால் அங்கேதான் ஏ. வீ. எம். வாசகம் என்ற காமராமான் ,கமராவை வைச்சு சுழட்டி எடுத்து இயற்கைக்கு உயிர் கொடுத்து இருப்பார் எண்டு நினைத்திருந்தேன்,

                                           உண்மையில், வெள்ளித் திரையில் கறுப்பு வெள்ளை படத்தொகுப்பிலும் மின்னிய ,கடல் கரை, அதை தழுவும் அலைகள், பனங் காணிகள், கன்னாப் பத்தைகள் ,பனை வடலிகள், கோவேறு கழுதைகள்,பிளமிங்கோ பறவைகள், மணல் கும்பிகள் எல்லாம் ,கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது என்று படித்த போது ஆச்சரியமா இருந்தது.

                                      நெடுந்தீவில் வேலை செய்த போது செங்கை ஆழியன் கவனித்த விடயங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை பின்னர் அந்தக் கதை நடந்த நெடுந்தீவில்ப் படமாகப் பட முடியாமல்ப் போனதுக்கு முக்கிய காரணம் அந்த கதையை நாவலாக எழுதிய செங்கை ஆழியன், நெடுந்தீவு மக்களின் தோற்றம் ,ஹோலந்த் என்ற டச்சுக்காரர்கள் அந்த மக்களின் முன்னோர்களின் வழியில் ,வம்சத்தில் குறுக்கிட்டதால் ஏற்பட்ட சில ஜீன் மரபு ரீதியான தோற்ற வெளிப்பாட்டை அந்தக் கதையில் எழுதியதால், நெடுந்தீவில் அவர் சிவில் அரசாங்க அதிகாரியா வேலை செய்த அலுவலகம் முற்றுகை இடப்பட்டு,அடித்து நொறுக்கப்பட்டு அவருக்கு எதிராக வழக்கும் போடப்பட்டது எண்டு சொன்னார்கள்.

                                      இரவினிலே இறைவனை நம்பி தொழிலுக்காக செல்லும் மனிதர்களின் கதையான வாடைக்காற்று , வங்காள விரிகுடாவில் ஆவேசமாக எழும்பும் வாடைக்காற்று காலத்தில் மன்னாரில ,கரையூர்ல இருந்து வந்து வாடி போட்டு மீன் பிடிக்கும் வெளியூர்க்காரர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் ஏற்படும் உறவு, பகை, காதல் ,ஒரு கற்பழிப்பில் சூடு பிடிச்சு, ஒரு கொலையில் முடியும் இதுதான் கதை . கதை இரண்டு பருவங்களில் ,கூளைக் கிடாய் என்ற பிளிகன் பறவைகள் ரசியாவின் சைபிரியாவில் இருந்து நெடுந்தீவு வந்து இறங்க,அவைகளின் வரவோடு கதை தொடங்கி , மனிதர்களின் விரிசல்களோடு கதை நடக்கும்.

                              சில வருடம் முன் மன்னாரில் இருந்து வந்து வாடிவீடு கட்டி தொழில் செயத சம்மாட்டி செமியோன் ஆக பொப் இசைப் பாடகர் ஏ இ மனோகரன் நடிக்க , உள்ளூர்ப் பெண்ணான பிலோமினா என்ற பெண்ணாக சந்திரகலா நடித்து இருந்தார். செமியோனுக்கும்,பிலோமினாவுக்கும் இடையில் இருந்த ஒரு வித காதல் கலந்த உறவு, அவளது அப்பா , அண்ணன் ஆகியோருடன் செமியோன்க்கு ஏற்பட்ட மனக் கசப்பினால் முறிந்து போய் விடுகிறது.

                                   உள்ளூர்க்காரரான பொன்னுக்கிழவர் ஆக நடித்த "முகத்தார் வீடு " புகழ் ஜேசுரட்னம், பெற்றார் இல்லாத தன் பேத்தி நாகம்மாவை கஷ்டப்பட்டு வளர்த்து வருகிற அவர், உள்ளுரில் கோவேறு கழுதையில் சுற்றித் திரியும், பத்தைக் காடுகளில் முயல் பிடிக்கிற அவளது முறை மாப்பிள்ளையான விருத்தாசலம் ஆக நடித்த அண்மையில் மறைந்த கே எஸ் பாலச்சந்திரனுக்கு அவளை கலியாணம் செய்து வைக்கவேண்டுமென்று ஆசைப்பட, மன்னாரில் இருந்து வந்த சம்மாட்டி வேதக்கார செமியோன், சைவக்கார நாகம்மாவையும் மனம்மாற்றி மயக்கிக் கொண்டுபோக சண்டை தொடங்குது.

                                  இந்தப் படத்தில மரியதாஸ் என்ற பாத்திரத்தில் நடித்த ,வைத்திய நிபுணர்,சில வருடம் முன் லண்டனில் மறைந்த டாக்டர் இந்திரகுமார் சிமியோனுகுப் போட்டியா வாற சம்மாட்டியா நடித்து இருந்தார், ஒரு டாக்டர் எதுக்கு தமிழ் சினிமாவில நடிச்சார் எண்டு இன்னுமே விளங்கவில்லை. மிகவும் அடக்கமான  புகழ் விரும்பாத டாக்டர்  இந்திரகுமார்   இலண்டனில் அவர்  இறந்தபோதுதான்  பலருக்குத் தெரியவந்தது  அவர்  ஒரு  ஜனாதிபதி விருது வேண்டிய நடிகரும் என்று .


                                             செமியோன் சம்மாட்டி வழக்கமாக மரியதாஸ் வாடி போடும் இடத்திலே பலாத்காரமா வாடி போட்டுத் தொழில் செய்ய, பணத்தைக் காட்டி உள்ளூர் மீனவத் தொழிலாள்ர்களை தன்பக்கம் இழுக்க, இவளவு நாட்டாண்மை செய்தும் செமியோனுக்கும், மரியதாஸுக்கும் நடக்கும் தொழில் போட்டியிலும் மரியதாஸுக்கே அதிகம் லாபம்,தொழில் வெற்றி கிடைக்க தொடங்க கதையில் வாடைக்காற்று திசை மாறி எதிர் எதிர அடிக்க தொடங்குது.

                                      டாக்டர் இந்திரகுமார் அவரது தொழில்சார் துறையாகிய மருத்துவத்துறையில் நிபுணராக விளங்கியதுபோதும்,தமிழ் மொழியின் மீதும், நடிப்புத் துறைமீதும் அதிகம் விருப்பம் இருக்க அவருடைய திறமைக்குச் சான்றாக அவர் மரியதாஸ் ஆகா நடித்த வாடைக்காற்று திரைப்படம் ஜனாதிபதி விருதினைப் பெற்றுக் கொடுத்திருக்கு. 


                                   எழுத்தாளராகவும், மருத்துவராகவும் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய டாக்டர் இந்திரகுமார் 1983 கலவரத்தில் லன்டனுகுப் புலம் பெயர்த்து 25 வருடங்கள் அங்கே பிரபல வைத்திய நிபுணரா வேலை செய்த அவர்தான் வாடைக்காற்றுபடத்தில , உயர்த்திக் கட்டிய சரத்தோட , சேட்டும் போடாமல், " அப்புவைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வியா " எண்டு ஒரு " பன்ச் டயலக் " எப்பவுமே அவரின் காதலி நாகம்மாவிடம் குறும்பாகக் கேட்டு ,கடற்கரை எங்கும் மணல் வெளியில்க் காவியம் எழுதிய மரியதாஸ் எண்டு பலருக்கு தெரியாமலே போனது.....

                                            சுடலைச் சண்முகம் என்ற பாத்திரமாக ஜவாஹர் என்பவர் நடித்து இருந்தார் ,உண்மையில் அந்தப் பாத்திரம் தான் படத்தின் கதையில் முக்கியமான பல திருப்பங்களைக் கொண்டுவரும் .ஊர்த் திருவிழா நடக்கிற நேரம் , செமியோன் சம்மாட்டி தன் காதலி பிலோமினாவை ரகசியமாக சந்திக்கிற இரவு இருட்டு நேரத்தில , இந்த நேரத்தில் யாரோ மரியதாஸ் சம்மாட்டியின் வாடிக்கு தீ வைத்து விட. அதைப் பார்க்க செமியோன் அவசரமாகப் போக, தனியாக இருட்டில் போன சிமியோனின் மீன் கொத்தி பறவை போல அழகான காதலி பிலோமினாவை, சுடலைச் சண்முகம் கற்பழித்து கொலை செய்து விடடுகிறார் 


                            இதில  கதை  இன்னொரு  திசை நோக்கி திரிலர் படங்கள் போல உருவெடுக்கும் . எப்படியோ  நடந்ததை ஊகித்து அறிந்து கொண்ட விருத்தாசலம் சுடலைச் சண்முகத்தை துரத்திச் சென்று, தனது ஈட்டியினால் எறிந்து கொல்ல , விருத்தாசலம் பாத்திரமாகவே மாறி கேஸ் எஸ் பாலச்சந்திரன் அதில் நடித்து இருகிறார்..

                                           இவளவு குழப்பமும் வெளியூர் மீனவர்களால் உள்ளுரில் நடக்க அதை எங்கள் செங்கை ஆழியன் கதையாக எழுத வெள்ளித்திரையில் பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் டைரக் செய்து, கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றி, ஈழத்து இரத்தினம், சில்லையூர் செல்வராசன்எழுதிய, பாடல்களை ஜோசப் ராசேந்திரன், வி.முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க பாட, திரைக்கதை..வசனம் கே.எம்.வாசகர்   என்ற யாழ்பாண எழுத்தாளர் எழுதி இருக்கிறார்..


                              . இதில் புலோமினாவின் அண்ணன் சூசையாக தற்சமயம் ஐரோப்பாவில்,சுவிஸ்லாந்தில் புலம் பெயர்ந்து வாழும் குணபதி கந்தசாமி ஐயாவும் நடித்து இருக்கின்றார். 

                              இந்தப்  படத்தின்  " தீம் சாங் " என்ற  " வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே..."   என்ற  பாடல்  இலங்கை வானொலியில்  மிகவும் பிரபலமாக  இருந்தது.  அந்தப்  பாடலின்  மூன்று  சரணங்களும்  வேறு வேறு விதமான  உணர்வுப் பிழிவாக இருக்கும் .  ஒருவருடத்தில் ஒருமுறைதான்  வரும்  வாடைக்காற்றை  நம்பி  வாழும் ஒரு உழைப்பாள சமூகத்தின் அத்தனை அவலங்களையும் அந்த  ஒரு பாடலில் சொல்லியிருப்பார்கள் .  இந்தப்  படத்துக்கு டி எப்  லத்திப் இசை அமைத்து  இருந்தார்.

                                   யாழ்பாண தீபகற்பத்தின் நிலப்பரப்புக்கு வெளியே வங்காள விரிகுடாவின் அலைகள் தாலாட்டும் ஒரு சின்னத் தீவான நெடுந்தீவில் ஒரு சம்பவம் ஒரு கதையின் உயிர் ஆகி ,
நீல கடல் மீதினிலே ஓடமிது நீங்கி வரும் கலையிலே நாளுமிது வலைவீசி வாழுகின்ற கூட்டமிது,நாங்கள் வாழுவது கடலோரம் குடிசையிலே  எங்கள்  குடிசையிலே என்று மீனவ சமூகத்தின் வாழ்வின் தொடர்கதை வெள்ளித்திரையில்த் தவழந்து எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட வாடைகாற்று அசைக்கமுடியாத இலங்கைத் தமிழரின் சரித்திர சாதனை ....


                                 இலங்கை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் ஜோசப் ராசேந்திரன் பாடிய இதயம் பிழியும்" வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே ,நல்ல வாழ்க்கை உண்டு எங்களுக்கு ஓரத்திலே ..." என்ற பாடலைப் பின்னணியில் நீலக்கடல் அலைகள் பாடிக்கொண்டிருக்கும் போது, விருத்தாசலம் ஆசையோடு கனவோடு காத்திருந்த அவரின் காதலி மரியதாஸ் சம்மட் டியோடு போக மனநிலை நொந்துபோக , சம்மடடி செமியோனும் பிலோமினா கற்பழிக்கப் பட்டுக் கொலை செயப்பட இழப்பினால் வருந்த, மரியதாஸ சம்மாட்டி நாகம்மாவை ஊரை விட்டுப் கூடிக்கொண்டு போகிறார் 


                         இலங்கைக்கு எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாத  கூளைக்கிடாய் என்ற பிளிக்கன் பறவைகளும் தங்கள் சொந்த ரஸ்சிய நாட்டு சைபிரியாவுகுப் போக , மீண்டும் ஒரு மீன்பிடிப் பருவம் முடிவுக்கு வருகிறது. வாழ்கை தொடருது. பிளிக்கன் பறவைகளின் வரவையும்  அவைகளின் புறப்படுதலையும் சிம்போலிக் ஆக செங்கை ஆழியான்  அவர் நாவலில் எழுதி இருப்பார். வாடைக்காற்று எடுத்த டீம்  அதை  இன்னொருபடி மேலே போய்  விஷுவல் ஆக  வெள்ளித்திரையில் பின்னி எடுத்தார்கள் .

                             கண்களில் கண்ணீரை வரவழைத்து , உலகம் மறந்து கடற்கரை மணல் வெளி எங்கும் வலியோடு யதார்த்தமாய் வாழ்க்கை சொன்ன அழகின் அற்புதம் வாடைக்காற்று' , தென்னிந்திய சினிமா ஜிகிணா முகப் பூச்சு , அளவுக்கு அதிகமான மேக் அப் , நேரம் கெட்ட நேரத்தில கனவுக் காட்சி, ஹீரோவுகுக் கும்மியடிக்கும் குறுப் டான்ஸ் , இதுபோல ஒண்டுமே இல்லாமல் , மீனவ மக்களின் வியர்வையின் வாசத்தை, அவர்களின் இளகிய இதயத்தை திரையில உணரவைத்த அந்தப் படம், ஒரு கவிதை போல ஜோசிக்க வைத்து முடிவு இன்னொரு பருவத்தின் தொடக்கமாகி முடிகிறது.


                                 நம்மவர்களும்  சளைத்தவர்கள் இல்லை  என்று  சேட் கொலரை தூக்கி விட்டு  பெருமைப்பட வைத்த விதத்தில் வாடைக்காற்று   ஒரு பெருமழை பெய்து  முடித்த நிகழ்வுபோல இருக்கும்  அந்தத் திரைப்படம் பார்த்து  முடியும் போது .  அதைவிட அந்தப் பெருமழையில்   நனைந்தது  போலவே  உணர்வோடு ஓட்டிகொண்டு சில  கண்ணீர் துளிகளையும்  சிந்திவிட்டு வரவேண்டிய ஒரு காவியம்  வாடைக்காற்று.

.


Tuesday, 2 June 2015

இங்கமார் பெர்க்மன்...நிழலின் நிஜம்.

யாழ்பாணத்தில, யாழ் மத்திய கல்லூரிக்குப் பின்னால, " அலைஸ் பிரான்சிஸ் " எண்டு ஒரு பிரெஞ்சு கலாசார மையம் இருந்தது. அதில வார விடுமுறை நாட்களில் உலகத்தரமான, உலக அளவில் பல கலை, அழகியல் விசியங்களுகாக விருதுகள் வென்று, " இன்டலக்சுவல் " என்ற அறிவுக் கொழுந்துகள் ஆர்வமாகப் பார்த்து, அதைவிட ஆர்வமாக விமர்சிக்கும், அக்கடமி விருதுகள் ,ஆஸ்கர் பரிசுகள் வென்ற சினிமாப் படங்கள் போடுவார்கள். 

                         அதில போடப்பட்ட ஒரு சுவீடன்  என்ற நாட்டில் எடுக்கப்பட்ட, ஸ்வீடிஷ் இயக்குணரான இங்கமார் பெர்க்மன் இயக்கிய படங்களும், அவரின் பெயரும் அதிகம் எல்லாருக்கும் அந்த நேரத்தில தெரிந்து இருந்தது. அவர் சில வருடம் முன் இறந்த போது யாழ்பாணத்தில் இருந்து ஒரு கவிஞ்சர் வெகு உருக்கமா அவரை சிலாகித்த எழுதியதை சுவிடனில் இருந்து நான் வாசித்த போது ஆச்சரியமா இருந்தது..

                                            இங்கமார் பெர்க்மன் படங்கள் எதுக்காக உலகம் முழுவதும் அறிவாளிகளால் அதிகமாகப் பேசப்பட்டது எண்டு விளக்கமா சொல்ல என்னால முடியலை. பல வருடம் முன் , அவர் எடுத்த படங்கள் எல்லாத்தையும் ஒரு நாள் ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக் கொலமில் ,அவர் அதிகம் இயங்கிய ஒரு நாடக மையத்தில் போட்டார்கள்,

                      என்னோட ஸ்வீடிஷ் மனைவியைக் கேட்டேன்

                                   " நீயும் வாறியா , இங்கமார் பெர்க்மன் , உங்க ஆள், பெரிய இயக்குனர் என்று என்னோட சின்ன வயசில் கேள்விப்பட்டு இருக்கேறேன், படம் பார்த்திட்டு, கம்மலா ஸ்தானில் எங்காவது ரேச்ற்றோறேண்டில் சாப்பிடுவம் ,பிறகு சுளுசன் போய் பாலத்தில் நின்று மீன்கள் பாய்வதைப் பார்க்கலாம் "

                                 என்றேன் அவள், சந்தேகமா என்னைப் பார்த்தாள்,,சிரிச்சுப் போட்டு

                                " உனக்கு அதெல்லாம் விளங்குமா, அது தான் ஜோசிக்கிறேன் , அந்தாளோட படம் பார்க்கிறதும் ,வானத்தை சும்மா கொட்டாவி விட்டு ஆ வெண்டு நிமிர்ந்து பார்க்கிறதும் ஒண்டுதான், சுளுசனில் மீன்கள் பாய்வதைப் பார்க்க என்றால் வாறன் , மீன்கள் பாஞ்சு விளையாடுவதை மணித்தியாலக் கணக்கில் பார்த்தாலும் அலுக்காது " என்றாள்.

                                         அவள் வரவே இல்லை. நான் தனியாக போனாப் போகுது எண்டு போய் பார்த்து இருக்குறேன், அந்தப் படங்களை நானும் இயன்றளவு கொட்டாவி விட்டாமல் பார்த்த போது ஒன்று விளங்கியது. அவர் எழுதிய எல்லாப் படங்களின் ஸ்க்ரிப்ட். படமாக்கப் பட்ட விதம் எல்லாதிலையும் ஸ்வீடிஷ் மக்களின், சுவாரசியம் இல்லாத" மன நிலை " இருக்கு, அதுகளை எப்படி யாழ்பாணத்தில் உள்ள ரசிகர்களால் அந்த நாட்களில் சுவாரசியமா விளங்கிக் கொள்ள முடிந்தது எண்டு விளங்கவே இல்லை..

                                        பெர்க்மன் கொட்டாவி விட்ட பல படங்கள் மலையாளப் படத்தை விட மெதுவாக போக,,சில படத்தில கடைசியில் வரவேண்டிய கிளைமாக்ஸ் வரவே இல்லை, ஒரு படதில கதை கல்லு நெரிக்கிற ரோட்டு ரோலரை விட மெதுவாக தொடங்கி அதன் முடிவில் அதிவேக ட்ரைன் பறக்கிற மாதிரிப் பறக்க,பெர்க்மன் ,ஸ்வீடனின் சிறுவயதில் உப்பசலாவில் வளர்ந்த இடத்தின் சூழ்நிலை நிலமை ,எல்லாப் படங்களிலும் நிறைய அபத்தமான சம்பவங்கள், நிலை இல்லாத காதல், துரோகத்தனமான காமம், சுற்றி இருபவர்களின் சூழ்ச்சி, வாழ்வின் நிலையாமை, இறப்பு இருட்டுப்போல எப்பவும் மங்கலாக வருவது, மரண தேவதையின் நடனம் எண்டு சிலாகிக்கப்படும் ஒரு விசியம் பார்க்க பயம் வாறதுக்குப் பதிலா சிரிப்பு வருகுது, ஒரு இளம் பெண் கற்பழிக்கப்படும் போது ,,மாடுகளும்,ஆடுகளும் அசையாமல் அதை சுற்றி நிண்டு பார்ப்பது ,,,இப்படி கொஞ்சம் வாழ்வின் வெளிச்சம் விழாத பக்கங்களை இங்கமார் பெர்க்மன் வெள்ளித்திரையில் கிட்டதட்ட நாற்பது கதைகளை படமாக எடுத்து இருந்தார்...

                                  சினிமா எதுகாகா எடுக்கப்படுகிறது எண்டு இன்னும் சரியா சொல்ல முடியாத காரணங்கள் ஆயிரம் இருக்கும் அவல சூழலில் ,பெர்க்மனின் எல்லா காதல் ரோமன்ஸ் படங்களும்,அபத்தமான காதல் படங்கள், அதுக்கு காரணம் பெர்க்மனின் சொந்தக் காதல்,கலியாணம் அப்படி இருந்தது இருக்கலாம்,அவர் ஐந்து முறை சட்ட்டப்படி கலியாணம் கட்டினார், அதே அளவு சட்டமில்லாத காதலிகள் இருந்தார்கள்,அவர்களுக்கும் சட்டம் திட்டம் எண்டு ஒண்டுமே இல்லாமல் பிள்ளைகள் பிறந்தார்கள்,

                                          அதை விட அவர் படங்களில் அவருடன் நடித்த, அல்லது அவர் இயக்கிய பெண் நடிகைகளுடன் நிறையத் தொடர்ப்பு இருந்தது,ஒரு சாதாரண மனிதருக்குகே அதிகம் பெண்கள் தொடர்பு இருந்தாலே நெறைய ரோமன்ஸ் கதைகள் எதார்த்தமா கிடைக்கும் ,அப்படி எதார்த்தமா அவரின் பாத்திரங்களாய் வெள்ளி திரையில் மின்னிய கன்னிகள் போனாப் போகுது எண்டு கொஞ்சம் அவருடன் எதார்த்தமா பழகி இருக்கலாம் போல,,,


                                          இங்கமார் பெர்க்மன் இறந்த சில மாதங்களில் ஒரு இளம் பெண், திடீர் என்று பெர்க்மன் படங்களில் வரும் நிழல் காட்சிக்குள்ள இருந்து எழுந்து வாற மாதிரி , தன்னோடு அப்பா பெர்க்மன் என்றும், அவர் சொத்தில் பங்கு வேண்டும் என்றும் சுவிடிஷ் நீதிமன்றதில் ஒரு வழக்கப் போட்டா, அதுக்கு ஆதரமா தன்னோட அம்மா எழுதிய நாட்குறிப்பை சாட்சி கொடுத்தாள் அந்தப் பெண். அவளின் அம்மா இங்கமார் பெர்க்மனின் தீவிர ரசிகை என்று,அவர் எடுக்கும் படங்களின் சூட்டிங் ஸ்பாட் இக்கு போய் அவர் எப்படி படம் எடுக்கிறார் என்பதை பார்ப்பதும் அவாவின் ஆர்வமாக இருந்து இருக்கு, பெர்க்மன் அந்தப் பெண்னின் ஆர்வக்கோளாறு அடங்க முதலே கிடைத்த இடைவெளியில் எடுத்த  குறும்படம் தான் அந்த இளம் பெண் என்று தெரியவந்தது.

                                  இவளவு கொஞ்சம் குளறுபடியா அவரைச்  சொன்னாலும்,அவர் எடுத்த சில எதார்த்த படங்கள் உலகம் எங்கும் உள்ள திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக இருக்கு. அப்படி சிம்பாலிக் ஆக பல விசியங்களும் சொல்லித்தான் இருக்குறார். சுவிடனில் பல வருடம், வசிபதால்,ஸ்வீடிஷ் மொழி,கலாசாரம் தெரிந்ததால் விளங்கிய என் அறிவுக்கு , ஸ்வீடன் என்ற சுவாரசியம் இல்லாத நாட்டை உலக அளவில் கொஞ்சம் பிரபலம் ஆக்கிய பெருமை இங்கமார் பெர்மனுக்கு இருக்கு எண்டது உண்மைதான், இங்கமார் பெர்க்மான் உலக மொடேர்ன் எதார்த்த அப்ச்ற்றக் சினிமாவின் தந்தை எண்டு சொல்லுறார்கள் பலர்.

                                        எனக்கு இந்த எதார்த்த சினிமா இயக்குனர் ஆகுவது போன்ற விசியன்களில் ஆர்வமே எப்பவும் இருந்ததில்லை இங்கமார் பெர்க்மானின் ஒரு நிழலான காதலியாக லிவ் உல்மன் என்ற ஒரு நோர்வே வெள்ளைக் குதிரையும் சில வருடம் இருந்தா,,

                                     அண்மையில் அவா மனம் திறந்து தன்னோட இங்கமார் பெர்க்மனுடன் ,ஒரு நடிகையா திரை சீலைக்கு மறைவிலை எதார்த்தமாயும் ,கமராவுக்கு பின்னாலை எதார்த்தமாயும் , சூட்டிங் இஸ்பொட்டிலை எதார்த்தமாயும், லொகேஷன் யூனிட் லைட் எல்லாம் அணைத்த பின் எதார்த்தமாயும் செய்த காதல் ரோமன்ஸ் விசியங்களை எதார்த்தமா , சுவாரசியமா வெளிபடையா சொன்னா, அது கேட்ட போது உடம்பெல்லாம் புல் அரித்தது , நானும் ஏன் சினிமாவில் இறங்கி எதார்த்தமா பல விசியங்களை அனுபவித்து இருந்து இருக்கலாமே எண்டு நினைக்க தோன்றியது!.

.


18.04.14.