Friday, 12 June 2015

காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்!

மனிதர்களுக்கு எது முக்கியம்,எது முக்கியமில்லை என்பதில் எங்களின் தேர்வுகள் எப்போதுமே ஒரேமாதிரி இருப்பதில்லை. சிலநேரம் ஆச்சரியமாக இருக்கும் சிலரின் அற்பமான விருப்பங்கள் அவர்களுக்கு அதிமுக்கியமாக இருப்பதை அறியும் போது. 

                                               என்னோட அப்பாட்மென்டில் உள்ள எல்லா வீடுகளும், இருண்டு பாதுகாப்பான திறப்புக்கள் போட்டு திறப்பது போலத்தான் கதவுகள் இருக்கு. ஆனால் ஒருவர் அதுக்கு மேலாக மிகவும் பாதுகாப்பாக இன்னும் ஒரு வெளிஇணைப்பு ரகசிய இலக்கங்கள் அமத்தும் பூட்டுப் போட்டு அதைவிட வேறு இரண்டு சிக்கியூரிட்டிக் கொம்பனியின் எலார்ம் போட்டு வைச்சு இருக்கும் அறிவித்தல் உள்ள தகவல் அந்தக் கதவில் எழுதபட்டுள்ள அதி உச்ச பாதுக்காப்பு ஏற்பாட்டுடன் வசிக்கிறார்.

                                      இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு ஊர் முழுவதும் தேடினாளாம் கதைபோல பல விசியங்கள் நாங்கள் நினைக்காத ஒரு நாளில் நடுவீட்டின்  கூரையைப் பிச்சுக்கொண்டு நேராக வந்திறங்கும்.  ஆனால் அவர் வீட்டில் என்ன அப்படி இருக்கு என்று எனக்கு தெரியாது. நான் நினைக்கிறன் என் அயலில் உள்ள ஒருவருக்குமே தெரியவாய்ப்பில்லை, காரணம் அவர் யாருடனும் அதிகம் பேசுவதில்லை.யாரையும் அவர் வீட்டுக்கு உள்ளே அழைத்ததுமில்லை. ஆனால் ஒரே ஒருநாள் அந்த சிதம்பர இரகசியத்தை அறிய எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

                                பொதுவெளியில் எல்லோரும் ஒரு சமூகத்தின் மத்தியில் பகிரங்கமாக பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து இந்தக்கதை சொல்ல முடியுமா என்று நினைத்தால், ஒருவிதத்தில் சொல்லலாம் போலதான் இருக்கு, அதுக்கு காரணம் அந்த மனிதர் அவரோட கதவில நோர்வே மொழியில் " எந்த இடத்தில் அவமானப்பட்டீர்களோ அதே இடத்தில் உங்கள் தலையை உயர்த்தி உங்களை மேன்மையாக என் இயேசு வைப்பாராக...ஆமென் !!!! " என்று எழுதி ஒரு ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறார்.        

                                    இது இன்னும் ஆர்வத்தை அவர் மேல் கிழப்பும். இந்த வயதான மனிதர் ஏன் இப்படி அதியுயர் பாதுகாப்பில் இருக்கிறார் என்ற ஒரே ஒரு கேள்விக்கு புதிரான , நானே ஜோசிக்கும் விடைகள் ஆயிரம் மண்டைக்குள்ள எப்பவும் முட்டி மோதும். ஆனால் ஒன்றும் பயனில்லை.  இனி அலட்டாமல் நேராகவே உலாவ் தாரியர் என்ற அந்த மனிதரின்  கதைக்குள்ள வாறன்.

                          மத்தியதர வர்க்க, " கையில காசு வாயில தோசை " என்று உழைத்து வாழும் அன்றாடம் காச்சிகள் அதிகம்  வசிக்கும் என்னோட பதினோருதட்டு தொடர்மாடிக் குடியிருப்பில் ஐந்தாவது தட்டில் உள்ள பன்னிரண்டு நெருப்புப் பெட்டி போன்ற குடியிருப்பில்தான் என்னோட உத்தியோகபூர்வ வாசஸ்தலம் இருக்கு. அந்த தட்டில் எதிர் எதிரே ஆறு குடியிருப்புக்கள் இருக்கு. அதில் வலது பக்க தொடக்கத்தில் இருந்தார் உலாவ் தாரியர் என்ற அந்தத் தனிமையான நோர்வே நாட்டு மனிதர். 

                                               நான் அந்த தட்டின் இடது பக்கத் தொங்கலில் தொங்கிக்கொண்டு இருக்கிறேன். வலதையும் இடதையும் பிரிக்கும் நடுவில் உள்ள கொறிடோர்தான் அதிகமாக என் தட்டில் வசிப்பவர்களை எப்பவாவது சந்திக்கும் " கனெக்டிங் பீப்பிள்ஸ் " சந்திப்பு மையும்.

                                    வசதியான ,நல்ல வேலை, கணவனும் மனைவியும் வேலை செய்யும் நோர்வே மக்கள் அதிகம் பெரிய இடவசதியுள்ள அப்பர்த்மெண்டில் இருப்பார்கள். , பணக்கார நோர்வே மக்கள் அப்பன் வீட்டு சொத்தில் வில்லா என்ற தனி வீடுகளில் இருப்பார்கள். என்னோட குடியிருப்பில் இல்லை, அவர்களுக்கு என்னோட குடியிருப்பு இருப்பதே பலசமயம் நினைவில் இருப்பதில்லை. 

                                                     ஆனாலும் என்னோட குடியிருப்பு தொடர்மாடியில் நிறைய நோர்வே மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதில் வசிப்பதுக்கு அவர்களின் வாழ்க்கை முறையைக்  குறை சொல்லும்படியான காரணங்கள் தான் இருக்கு.  வயதான  உலாவ் தாரியர்க்கும் அவைகள் பொருந்தும் என்று கோடைகாலத்தில் அவரோடு வெளியே உள்ள புல் வெளியில் கதைத்த போது அறிய முடிந்தது.

                           அளவுக்கு அதிகமான பணமும்,அளவுக்கு அதிகமான பெண்களின் தொடர்ப்பும் மனிதர்களை சீரழிக்கும் என்பதுதான்  உலாவ் தாரியரின் வாழ்க்கைக் கதை,அதையெல்லாம் " காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்!  " என்று நோர்வே மொழியில் கொஞ்சம் கொச்சையான மொழியில் எனக்கு சொல்லுவார். அவரின் கதையை பியோதர் தவஸ்ட்டேக்கியின் " ப்ரதர் கொச்மநோவ் " நாவல் போல நாநூறு பக்க நாவலாக எழுத முடியும். அவளவு மேடுகளும் பள்ளம்களும் ,சில நேரம் அவரே தோண்டிய குழிகளும் அதில இருக்கு. 

                                         அவரின் வாழ்கையை ஒரு சிறுகதை போல சுருக்கி எழுத அந்தோன்  செக்காவ் போன்ற ஒருவரால் முடியும் ஆனால் என்னைபோல சாமானிய மனிதர்களால் முடியாது, இருந்தாலும் வியப்பில் ஆழ்த்திய ஒரு சின்ன சம்பவத்தை  முயற்சிக்கிறேன்.

                       உலாவ் தாரியர், வடகிழக்கு ஒஸ்லோவின் விளிம்பில், சுவிடன் எல்லைக்கு கிட்ட  உள்ள கிராமத்தில் ஒரு பணக்கார அப்பாவுக்கு ஒரே ஒரு பிள்ளையாக பிறந்து இருக்கிறார். அதுவே போதுமே வெம்பிப் பழுத்து தலையால தெறிக்க. சின்னவயசில் அழகா இருந்த அவர், இளவயதில் ஒஸ்லோவில் படித்து இருக்கிறார், ஒஸ்லோவின் முக்கியமான புட்போல் கிளப் ஆனா " வோலறேங்காவில் " கோல் கீபாராக இருந்து இருக்கிறார், 

                                            பின்னர் என்ன வேலை செய்தார் என்று இன்றுவரை அவர் சொல்லவில்லை,ஒருவேளை அதைப்பற்றி சொல்ல ஒன்றுமேயில்லையோ தெரியாது. ஆனால் நாலு முறை கலியானம் காடினார், நாலு பேரையும் விவாகரத்து செய்தார் .அவரின்   காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்! வரும் போது இருந்ததை விடப் போகும்போது மினுக்கமாகப் போனதாக சொல்லுவார் .அவருக்கு பிறந்த பிள்ளைகள் மட்டும் அருமையான பிள்ளைகள் என்று சொல்லுவார்.

                         குழப்பமாக  காதலிகள் அவர் வடிவுக்கு காலுக்க சுருண்டு விழுந்த கதை கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் வாற வல்லவரையன் வந்தியத்தேவன் போன்றவை , அவருக்கு பிறந்த பிள்ளைகள் அவரை விட்டு பதினெட்டு வயதில் " மண்டையப் போடும் போது சொத்தைப் பிரிக்க வாறோம் " என்று சொல்லிப்போட்டு போய் விட்டார்கள். வருட இறுதியில் வரும் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு பரிசாக தான் அனுப்பும் காசுக்கு நன்றி சொல்ல மட்டும் டெலிபோன் எடுப்பார்கள் என்று சொல்லுவார்.

                          பல வருடம் தனியாக இருந்தார், உலகம் சுற்றினார், ஆபிரிக்கா போய் கென்யாவின் சிங்கம் உலாவும் சவானாக் காட்டில் தனிய டென்ட் அடிச்சு இருந்தார், பிரேசிலுக்கு போய் அமேசன் நதியில் இறங்கி அனக்கொண்டா பாம்புகளைத் தேடினார், இந்தியாவுக்கு போய் புனித கங்கை நதியில் பாவங்களைக் களைய முழுக்குப் போட்டார். அங்கே சாதுக்களுடன் வாழ்ந்தார். எல்லாம் விபரமா சொன்னார் .

                              சாதாரண மனிதர்கள் செய்யமுடியாத எல்லாம் ஒரு கை பார்த்துப்போட்டு   இப்போது வயதாகி எங்கும் போவதில்லை ,ஞாயிற்றுக்கிழமை மட்டும் எங்களின் பேட்டையில் உள்ள நோர்பேறி சிர்கா என்ற சேர்ச்சுக்குப் போவார். வாசலில் எப்பவாவது என்னைக் கண்டால் என்னையும் வரசொல்லுவார்.சின்ன உரையாடலின் முடிவில் நான் எப்போதும் நேரம் இல்லை என்று ஏதாவது சாட்டு சொல்லி நழுவுவேன், அவர் சிரிச்சுக்கொண்டு  

                             " எந்த மனிதனோ, மனுஷியோ உங்களை புறக்கணித்திருந்தாலும் அவர்கள் மத்தியில் உங்களை ஆச்சரியப்படத் தக்க. வண்ணமாக என் இயேசு உங்கள் தலைகளை உயர்த்துவாராக,ஆமென் !!! " 

                                   என்று சொல்லிப்போட்டுப் போவார்.

                          இந்தவருடத் தொடக்கத்தில் ஒருநாள் அவரை எங்களின் வீட்டுக்கு அருகில் கீழே உள்ள சூப்பர் மார்கட்டில் கண்டேன், வழமைப்போல சுருக்கமான உரையாடல், அதன் முடிவில்

                       " இன்று உனக்கு நேரம் இருந்தால் என்னுடைய வீட்டுக்கு இப்ப வாவேன், கோப்பி குடிச்சு கொஞ்சநேரம் ஆறுதலாகக் கதைக்கலாம், காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்! "

                                           என்றார், எனக்கு சனிக்கிழமை லோட்டரியில் லட்சம் விழுந்த மாதிரி இருந்தது. நான் வெளியே சில முக்கியமான வேலைக்கு அப்போது  போகவேண்டி இருந்தது. ஆனாலும் அந்த இடத்துக்கு போன் அடிச்சு எனக்கு உடம்பு சுகமில்லை இன்னொருநாள் வருகிறேன் என்று சொல்லிப்போட்டு, அவரோட பைகளை வேண்டிக் காவிக்கொண்டு அவரோடு வெளிக்கிட்டு  வந்தேன். அவர் கதவு திறக்க பத்து நிமிடம் எடுத்தது, முக்கியமாக  சிக்கியூரிட்டி பூட்டின் இரகசிய எண்களை அவர் அமத்தும்போது அதை எனக்கு மறைத்துக்கொண்டு அமத்தினார்.

                           விசாலமான அவரின் வசிப்பிடத்தில், ஆச்சரியமாக அவர் வீட்டுக்கு உள்ளே வழமையான நோர்வே மக்களின் வீடுகளில் இருக்கும் கலை அம்சமான எதுவுமே இல்லை. ஒரு சின்ன சோபா நடு வீட்டில்,ஒரு சின்ன டெலிவிசன், ஒரு சின்ன மேசை , சுவர்களில் கறுப்பு வெள்ளையில் குடும்ப்பப் படங்கள், அதில அவர் புட் [போல் விளையாடிக்கொண்டு இருந்த கால உன்னத நாட்களின்  பெருமிதம் மங்கிப்போய் இருந்தது , நிறைய வெள்ளிக்  கேடயங்கள் தூசு பிடித்துப்போய் இருக்க, கால்பந்துப் போட்டிகளில் வென்று கிடைத்ததில் சுவரில் தொங்கவிட்டு இருந்த பதக்கங்களில் பாசி பிடிச்சுப் போய் இருந்தது.

                                             நிறையத் தடித்தமட்டைப் புத்தகங்கள் ஒரு அலுமாரியில் இருந்தது. அந்த அலுமாரிதான் மிகப் பெரிதாக இருந்தது. வேற கண்ணுக்குள்ள குத்துற மாதிரி ஒரு மண்ணும் இல்லை அந்த வீட்டில. உலாவ் தாரியர் சுருக்கமாக, மெதுவாக, அந்த வீட்டின் அமைதியைக் குழப்பாமல்  கதைத்தார். நான் முக்கியமான கேள்வி கேட்கவேண்டிய தருணத்துக்கு காத்திருந்தேன்.

                              உலாவ் பரம்பரைப் பணக்காரராக இருந்தாலும்,அவர் வம்ச சொத்துப் பத்து எல்லாம் அவர் கிராமத்தில் இருக்கு. அப்புறம் காசு கட்டாயம் ஏதோ ஒரு பாங்கில் பாதுகாப்பாக இருக்கும் .வீடுக்குள்ள காசை உரப்பையில் கட்டி வைச்சுக்கொண்டு இருக்கும் அளவுக்கு அவர் முட்டாள் இல்லை. அப்படி இருந்தாலும் என்னைப்போல ஒரு வெளிநாட்டுக்காரனை நம்பி வீடுக்குள்ள உள்ளிட விரும்பமாட்டார். 

                                                 சில நேரம் அழகான பெண்கள்....ஹ்ம்ம்,,,அந்த வீட்டில் பெண்கள் வாசமே இல்லை, பதிலாக மாதக்கணக்கில்  தோய்க்காத பழைய துணிகளில் இருந்து வரும் உறண்டல் வாசம் தான் வந்தது. பொறுமையை அதுக்கு மேலயும் கமகட்டில அமத்தி வைக்க முடியாமல், இதுக்குமேலே என்ன இருக்கப்போகுது, அதைவிட அந்த வீடுக்குள்ள இனி ஆராய்ச்சி செய்ய வரவேண்டிய தேவையே இல்லாமல் இருப்பது யதார்த்தமாய் இருந்ததால்,

                        " உலாவ்  ,உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா, நீங்கள் தப்பாக நினைக்காவிட்டால் "

                                 என்று கேட்டேன் ,அவர் மவுனமாக இருந்தார், கொஞ்ச நேரத்தில் எழும்பிப் போய்க் கதவை செக் செய்தார். அது இறுக்கமாக உள்ளுக்கு தாழ்ப்பாள் போட்டு இருக்கு என்பதை உறுதி செய்துகொண்டு வந்து சோபாவில் மவுனமாக நாடியைத் தடவினார். ஆமுடையானை நம்பி அவசாரி ஆடலாமா? என்ற பழமொழி போல என்னைப் பார்த்தார், பார்த்துப்போட்டு 

                        " சரி,கேள் ,என்னத்தைப் பெரிசாகக் கேட்கப் போகிறாய், என்னத்தைப் பெரிசா அதுக்கு பதிலாக நான் சொல்லப்போறேன், நானே இந்தா அந்தா என்று கிடக்கிறேன்,காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்! ... சரி கேள், விடை கிடைக்குதோ இல்லையோ கேள்விகள் சில நேரம் மிக மிக முக்கியம்,  "  என்றார்.

                        " உலாவ்,,நீங்கள் ஏன் இவளவு பாதுகாப்பாக வீட்டுக்கு சிக்கியூரிட்டி  பூட்டு எல்லாம் போட்டு வைச்சுக் கொண்டு  இருக்குரிங்க, நீங்கள் தப்பாக நினைக்காவிட்டால் அந்தக் காரணத்தை சொல்ல முடியுமா "

                          என்று சும்மா பொழுது போகாமல் குழந்தைகள் பாலமித்திராவில் வாற பலராமர்  கதை கேட்பது போல முகத்தை வைச்சுக்கொண்டு கேட்டேன். 

                     "  அதில என்ன சந்தேகம் உனக்கு, என் வீட்டுக்கு  பாதுகாப்பு தேவை ,அதனால் கதவுக்கு அதிக பாதுகாப்பு கொடுத்து வைத்து இருக்கிறேன் ,ரெண்டு  எலார்ம் சிக்கியூரிட்டிக் கொம்பனிக்கே மாதம் மாதம் நாலாயிரம் குரோனர் சுளையாக் கட்டுறேன் "   என்றார் 

               " அதுதான் எனக்கும் விந்தையாக இருக்கு, ஏற்கனவே ரெண்டு நல்ல பூட்டு நிரந்தரமா இருக்கே,பெருமாள் கோவில் உண்டியலுக்குப் போட்ட மாதிரி ஏன்தான் பெரிய ஒரு எக்ஸ்ட்ரா சிக்கியூரிட்டி பூட்டு போட்டு வைச்சு இருக்குரிங்க ,உலாவ் , அதுதான் குழப்புதே...   "   என்றேன் 

                               நானே ஒரு உப்புச் சப்பில்லாத கேள்வியைக் கேட்டது போல எதிரொலித்துக் கொண்டிருந்தது என் சிந்தனைப் போக்கைப் புரிந்துகொண்ட மாதிரி  ஜன்னல் திரைச்சீலைகள் மட்டும் கொஞ்சம் நிழலாக அசைத்துக்  கொண்டிருக்க , அந்த வீட்டின் பயமுறுத்தும் அமைதி மூலை முடுக்குகளில் அதிகமாகப் பதுங்கி  இருந்தது  .

                       "  நான் நினைச்ச கேள்வியைத்தான் கேட்கிறாய். முக்கியமான கேள்வியும் தான், காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்!  இதுக்குப் பதில் நீ நினைப்பது போல கடினமாக இருக்காது. ஹ்ம்ம்....காதல் ,,ஹ்ம்ம் ,நிபந்தனையற்ற  காதல் ,,,அது என்ன  எண்டு  தேடித்தேடி ,,முக்கியமா அறிவுள்ள மனிதர்களிடம் தேடித்தேடி ,ஹ்ம்ம்,, " என்று பெருமூச்சு விட்டுப் போட்டு மறுபடியும் நாடியைத் தடவினார்.

                                         " நோர்வே நாடு பற்றி உனக்கு அதிகம் தெரியாது, முக்கியமா நோர்வே மக்கள் எப்படி வாழ்கையை நினைகிறார்கள் என்று உனக்கு தெரியாது,,அதிலும் நோர்வே பெண்கள் பிசாசுகள் "

                                      " ஹ்ம்ம்,,உலகம் முழுவதும் பெண்களைப் புரிந்துகொள்ள கஷ்டம் தான் .." 

                                               " என்ன கஷ்டம்....நான் இந்தியா சுற்றிப் பார்த்த போது ஒரு குடும்பத்தைப் பார்த்தேன். வயசான அம்மா ,அப்பா இவர்கள் இருவரையும் அவர்களின் அதிகம் வருமானம் இல்லாத பிள்ளைகள் கடவுள் போல அந்த வயதான காலத்திலும் தலையில தாங்கிப் பராமரிக்கிறார்கள் ,எனக்கு அதைப்பார்க்க கண்களில் கண்ணீர் வந்தது.என் பிள்ளைகள் நாளைக்கே மண்டையப் போட்டால் லோயரோடு வந்து நிக்குங்கள் என் சொத்தைப் பிரிக்க .."

                         "  உலாவ், உங்களை தர்மசங்கடம் ஆக்கும் கேள்வியாக இது இருந்தால்,தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள், நான் ஒரு மடையன் அநாவசியமா அற்ப கேள்வி கேட்டுவிட்டேன் போல இருக்கு "

                        என்றேன். அவர் மறுபடியும் நாடியைத் தடவிப் போட்டு, என்னைப் பார்த்து முதல் முதலாக சிரிச்சுப் போட்டு,  நோர்வே மொழியில் ஒரு பெண்ணின் பெயரும், ஒரு ஆணின் பெயரையும் அன்பாக அழைத்தார். அவரின் படுக்கை அறையில் இருந்து ,பதுங்கிப் பதுங்கி ஒரு வெள்ளைநிறப் பூனை வந்து அவர் மடியில் பாஞ்சது .ஒரு கறுப்புநிறப் பூனை வந்து அவரின் தோழில் பாஞ்சு ஏறி இருந்தது.

                 உலாவ் தாரியர் என்னைப்பார்த்து, " காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்! ,,,இனி நீ இந்த வீட்டுக்கு இந்த மாதிரிக் கேள்வியுடன் வரமாட்டாய் " என்று நினைக்கிறன் என்றார்.
.
.

Tuesday, 2 June 2015

வேரும் விழுதுகளும்!!

தாத்தாவின் 
கைப் பிரம்பு 
ஓய்வு பெறுவது போல
பேசுவதுக்கு 
சந்தர்பங்களை 
இழந்து கொண்டு போக
அகஸ்திய மொழியின்
வசனங்களில்
இலக்கணம்
அசந்து தூங்கி விடுகிறது....

வேலையை
இரவல் மொழியில்
சமாளிக்க
இன்னொரு வழியில்
அந்நியமான வீட்டில்
அப்பாவின்
படத்துக்குக் அருகிலேயே
எல்லாத் திருப்பங்களிலும்
பசை போல
வேறு பாசைகள்
ஒட்டிக் கொள்கிறது.......

என்
பிள்ளைக்குக்
கிட்ட வராமல்
விட்டு விலகிப்
போய்க்கொண்டே
பூஞ்சணம் பிடிக்கும்
என்
தாய் மொழியில்
" தன் மொழியை மறந்தவன் "
என்ற தலைப்பில்
கவி விதையை எழுத
முதல் வரியை
தொடக்கினேன்...

அதை
எழுதி முடிக்க
வார்த்தைகள் தேடி
வழியிலாமல்
திணறிய போது தான்
உறுதி மொழியாக
குளத்தடி முடுக்கில்
நாலு தலைமுறைக்கு
அசையாமல்
விழுது விட்ட
ஆல மரம்
நினைவுக்கு வந்தது,
.


.
13.04.15
ஒஸ்லோ .

இங்கமார் பெர்க்மன்...நிழலின் நிஜம்.

யாழ்பாணத்தில, யாழ் மத்திய கல்லூரிக்குப் பின்னால, " அலைஸ் பிரான்சிஸ் " எண்டு ஒரு பிரெஞ்சு கலாசார மையம் இருந்தது. அதில வார விடுமுறை நாட்களில் உலகத்தரமான, உலக அளவில் பல கலை, அழகியல் விசியங்களுகாக விருதுகள் வென்று, " இன்டலக்சுவல் " என்ற அறிவுக் கொழுந்துகள் ஆர்வமாகப் பார்த்து, அதைவிட ஆர்வமாக விமர்சிக்கும், அக்கடமி விருதுகள் ,ஆஸ்கர் பரிசுகள் வென்ற சினிமாப் படங்கள் போடுவார்கள். 

                         அதில போடப்பட்ட ஒரு சுவீடன்  என்ற நாட்டில் எடுக்கப்பட்ட, ஸ்வீடிஷ் இயக்குணரான இங்கமார் பெர்க்மன் இயக்கிய படங்களும், அவரின் பெயரும் அதிகம் எல்லாருக்கும் அந்த நேரத்தில தெரிந்து இருந்தது. அவர் சில வருடம் முன் இறந்த போது யாழ்பாணத்தில் இருந்து ஒரு கவிஞ்சர் வெகு உருக்கமா அவரை சிலாகித்த எழுதியதை சுவிடனில் இருந்து நான் வாசித்த போது ஆச்சரியமா இருந்தது..

                                            இங்கமார் பெர்க்மன் படங்கள் எதுக்காக உலகம் முழுவதும் அறிவாளிகளால் அதிகமாகப் பேசப்பட்டது எண்டு விளக்கமா சொல்ல என்னால முடியலை. பல வருடம் முன் , அவர் எடுத்த படங்கள் எல்லாத்தையும் ஒரு நாள் ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக் கொலமில் ,அவர் அதிகம் இயங்கிய ஒரு நாடக மையத்தில் போட்டார்கள்,

                      என்னோட ஸ்வீடிஷ் மனைவியைக் கேட்டேன்

                                   " நீயும் வாறியா , இங்கமார் பெர்க்மன் , உங்க ஆள், பெரிய இயக்குனர் என்று என்னோட சின்ன வயசில் கேள்விப்பட்டு இருக்கேறேன், படம் பார்த்திட்டு, கம்மலா ஸ்தானில் எங்காவது ரேச்ற்றோறேண்டில் சாப்பிடுவம் ,பிறகு சுளுசன் போய் பாலத்தில் நின்று மீன்கள் பாய்வதைப் பார்க்கலாம் "

                                 என்றேன் அவள், சந்தேகமா என்னைப் பார்த்தாள்,,சிரிச்சுப் போட்டு

                                " உனக்கு அதெல்லாம் விளங்குமா, அது தான் ஜோசிக்கிறேன் , அந்தாளோட படம் பார்க்கிறதும் ,வானத்தை சும்மா கொட்டாவி விட்டு ஆ வெண்டு நிமிர்ந்து பார்க்கிறதும் ஒண்டுதான், சுளுசனில் மீன்கள் பாய்வதைப் பார்க்க என்றால் வாறன் , மீன்கள் பாஞ்சு விளையாடுவதை மணித்தியாலக் கணக்கில் பார்த்தாலும் அலுக்காது " என்றாள்.

                                         அவள் வரவே இல்லை. நான் தனியாக போனாப் போகுது எண்டு போய் பார்த்து இருக்குறேன், அந்தப் படங்களை நானும் இயன்றளவு கொட்டாவி விட்டாமல் பார்த்த போது ஒன்று விளங்கியது. அவர் எழுதிய எல்லாப் படங்களின் ஸ்க்ரிப்ட். படமாக்கப் பட்ட விதம் எல்லாதிலையும் ஸ்வீடிஷ் மக்களின், சுவாரசியம் இல்லாத" மன நிலை " இருக்கு, அதுகளை எப்படி யாழ்பாணத்தில் உள்ள ரசிகர்களால் அந்த நாட்களில் சுவாரசியமா விளங்கிக் கொள்ள முடிந்தது எண்டு விளங்கவே இல்லை..

                                        பெர்க்மன் கொட்டாவி விட்ட பல படங்கள் மலையாளப் படத்தை விட மெதுவாக போக,,சில படத்தில கடைசியில் வரவேண்டிய கிளைமாக்ஸ் வரவே இல்லை, ஒரு படதில கதை கல்லு நெரிக்கிற ரோட்டு ரோலரை விட மெதுவாக தொடங்கி அதன் முடிவில் அதிவேக ட்ரைன் பறக்கிற மாதிரிப் பறக்க,பெர்க்மன் ,ஸ்வீடனின் சிறுவயதில் உப்பசலாவில் வளர்ந்த இடத்தின் சூழ்நிலை நிலமை ,எல்லாப் படங்களிலும் நிறைய அபத்தமான சம்பவங்கள், நிலை இல்லாத காதல், துரோகத்தனமான காமம், சுற்றி இருபவர்களின் சூழ்ச்சி, வாழ்வின் நிலையாமை, இறப்பு இருட்டுப்போல எப்பவும் மங்கலாக வருவது, மரண தேவதையின் நடனம் எண்டு சிலாகிக்கப்படும் ஒரு விசியம் பார்க்க பயம் வாறதுக்குப் பதிலா சிரிப்பு வருகுது, ஒரு இளம் பெண் கற்பழிக்கப்படும் போது ,,மாடுகளும்,ஆடுகளும் அசையாமல் அதை சுற்றி நிண்டு பார்ப்பது ,,,இப்படி கொஞ்சம் வாழ்வின் வெளிச்சம் விழாத பக்கங்களை இங்கமார் பெர்க்மன் வெள்ளித்திரையில் கிட்டதட்ட நாற்பது கதைகளை படமாக எடுத்து இருந்தார்...

                                  சினிமா எதுகாகா எடுக்கப்படுகிறது எண்டு இன்னும் சரியா சொல்ல முடியாத காரணங்கள் ஆயிரம் இருக்கும் அவல சூழலில் ,பெர்க்மனின் எல்லா காதல் ரோமன்ஸ் படங்களும்,அபத்தமான காதல் படங்கள், அதுக்கு காரணம் பெர்க்மனின் சொந்தக் காதல்,கலியாணம் அப்படி இருந்தது இருக்கலாம்,அவர் ஐந்து முறை சட்ட்டப்படி கலியாணம் கட்டினார், அதே அளவு சட்டமில்லாத காதலிகள் இருந்தார்கள்,அவர்களுக்கும் சட்டம் திட்டம் எண்டு ஒண்டுமே இல்லாமல் பிள்ளைகள் பிறந்தார்கள்,

                                          அதை விட அவர் படங்களில் அவருடன் நடித்த, அல்லது அவர் இயக்கிய பெண் நடிகைகளுடன் நிறையத் தொடர்ப்பு இருந்தது,ஒரு சாதாரண மனிதருக்குகே அதிகம் பெண்கள் தொடர்பு இருந்தாலே நெறைய ரோமன்ஸ் கதைகள் எதார்த்தமா கிடைக்கும் ,அப்படி எதார்த்தமா அவரின் பாத்திரங்களாய் வெள்ளி திரையில் மின்னிய கன்னிகள் போனாப் போகுது எண்டு கொஞ்சம் அவருடன் எதார்த்தமா பழகி இருக்கலாம் போல,,,


                                          இங்கமார் பெர்க்மன் இறந்த சில மாதங்களில் ஒரு இளம் பெண், திடீர் என்று பெர்க்மன் படங்களில் வரும் நிழல் காட்சிக்குள்ள இருந்து எழுந்து வாற மாதிரி , தன்னோடு அப்பா பெர்க்மன் என்றும், அவர் சொத்தில் பங்கு வேண்டும் என்றும் சுவிடிஷ் நீதிமன்றதில் ஒரு வழக்கப் போட்டா, அதுக்கு ஆதரமா தன்னோட அம்மா எழுதிய நாட்குறிப்பை சாட்சி கொடுத்தாள் அந்தப் பெண். அவளின் அம்மா இங்கமார் பெர்க்மனின் தீவிர ரசிகை என்று,அவர் எடுக்கும் படங்களின் சூட்டிங் ஸ்பாட் இக்கு போய் அவர் எப்படி படம் எடுக்கிறார் என்பதை பார்ப்பதும் அவாவின் ஆர்வமாக இருந்து இருக்கு, பெர்க்மன் அந்தப் பெண்னின் ஆர்வக்கோளாறு அடங்க முதலே கிடைத்த இடைவெளியில் எடுத்த  குறும்படம் தான் அந்த இளம் பெண் என்று தெரியவந்தது.

                                  இவளவு கொஞ்சம் குளறுபடியா அவரைச்  சொன்னாலும்,அவர் எடுத்த சில எதார்த்த படங்கள் உலகம் எங்கும் உள்ள திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக இருக்கு. அப்படி சிம்பாலிக் ஆக பல விசியங்களும் சொல்லித்தான் இருக்குறார். சுவிடனில் பல வருடம், வசிபதால்,ஸ்வீடிஷ் மொழி,கலாசாரம் தெரிந்ததால் விளங்கிய என் அறிவுக்கு , ஸ்வீடன் என்ற சுவாரசியம் இல்லாத நாட்டை உலக அளவில் கொஞ்சம் பிரபலம் ஆக்கிய பெருமை இங்கமார் பெர்மனுக்கு இருக்கு எண்டது உண்மைதான், இங்கமார் பெர்க்மான் உலக மொடேர்ன் எதார்த்த அப்ச்ற்றக் சினிமாவின் தந்தை எண்டு சொல்லுறார்கள் பலர்.

                                        எனக்கு இந்த எதார்த்த சினிமா இயக்குனர் ஆகுவது போன்ற விசியன்களில் ஆர்வமே எப்பவும் இருந்ததில்லை இங்கமார் பெர்க்மானின் ஒரு நிழலான காதலியாக லிவ் உல்மன் என்ற ஒரு நோர்வே வெள்ளைக் குதிரையும் சில வருடம் இருந்தா,,

                                     அண்மையில் அவா மனம் திறந்து தன்னோட இங்கமார் பெர்க்மனுடன் ,ஒரு நடிகையா திரை சீலைக்கு மறைவிலை எதார்த்தமாயும் ,கமராவுக்கு பின்னாலை எதார்த்தமாயும் , சூட்டிங் இஸ்பொட்டிலை எதார்த்தமாயும், லொகேஷன் யூனிட் லைட் எல்லாம் அணைத்த பின் எதார்த்தமாயும் செய்த காதல் ரோமன்ஸ் விசியங்களை எதார்த்தமா , சுவாரசியமா வெளிபடையா சொன்னா, அது கேட்ட போது உடம்பெல்லாம் புல் அரித்தது , நானும் ஏன் சினிமாவில் இறங்கி எதார்த்தமா பல விசியங்களை அனுபவித்து இருந்து இருக்கலாமே எண்டு நினைக்க தோன்றியது!.

.


18.04.14.

Sunday, 31 May 2015

முகநூல் முகங்கள்......

"அரும இல்லாத வூட்ல எருமயும் குடியிருக்காது" என்று நல்லாவே தெரிந்தும் கிட்டதட்ட எட்டு வருடங்கள் ஆகுது இந்த முகப் புத்தகத்துக்கு முகவரை எழுதத் தொடங்கி, இவளவு வருடங்களில் "உள்ளது சொல்ல ஊரும் அல்ல நல்லது சொல்ல நாடும் அல்ல" என்று ஒரு சின்னக் கணனித் திரையில் கிடைத்த அனுபவம் நிஜ வாழ்கையில் கிடைத்ததை விட அதிகம்,

                                                முக்கியமாக, " ஒல்லும் வாயெல்லாம் வினைநன்றே, ஒல்லாக்கால்
செல்லும் வாய்நோக்கிச் செயல் " போல அனைத்து வழிகளிலும் முயன்று செயல்படு, முடியவில்லை என்றால், மாற்று வழியில் செயல்படுத்துவது போன்ற தத்துவங்கள் எல்லாம் வேர்க் அவுட் ஆகாமல் இந்த முகநூல் கொடுக்கும் சில நேர்மையான நல்ல உற்சாகத்துக்கு மயங்கி அதை இரவும் பகலும் கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருக்க வைக்குது .

                                            பொறுமையாக இருத்தல், துன்பத்தை சகித்துக்கொள்ளுதல், இன்பத்தை அளவாக உணருதல், முகம் மட்டும் தெரிந்த நட்புக்கு புதிய வரைவிலக்கணம் , எதிரிகளின் காலை வாருதலுக்கு புதிய பரிமாணம் , பெரும்பாலான வழியல் இடைஞ்சல்களுக்கு வளைஞ்சு நெளிஞ்சு கழுவுற மீனில நழுவுற மீன் போல வழுக்கிக்கொண்டு போவது, எல்லா விசர்த்தனத்தையும் விமர்சனமாக நினைப்பது எல்லாருக்கும் நல்லவன் போல நடிப்பது, அவமதிப்புக்களை கணக்கில் எடுக்காமல் ஞானியைப் போல இருப்பது, போன்ற வாழ்கையில் ஒட்டியும் ஒட்டாமலும் சுயமரியாதையுடன் வாழக் கற்றுக்கொடுத்த பேஸ் புக் அனுபவம் அலாதியானது.

                                                   எப்படியோ சும்மா இருந்த ஒருவனை உலகளவு பொறுமை உள்ள முனிவன் ஆக்கிய பெருமை ,ஏறக்குறைய எதையும் தாங்கும் இதயத்தை பொதுவெளியில் உருவாக்கி ,ஈகோவை இறக்கி வைத்து விட்டு " உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே......" என்று கிறங்க வைத்தது முகநூல் முகங்கள் .


                                                    " 
சிந்தனையுடன் இருங்கள். ஆனால், எந்த சிந்தனையுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளாதீர்கள் " என்று இந்த முகஸ்துதி நூலுக்கு எண்பதுக்களில், கடவுளாகத் துணிந்த மனிதன்  ரஷ்னிஷ் ஓஷோ அமரிக்காவில் ஓரேகன்  பார்ம் இல் ரோல்ஸ் ரோயிஸ் காருக்க இருந்து சொல்லும் போதும் செம்மறியாடு போலக் கேட்காமல் இருந்தது  எவளவு அவலம் என்று இப்ப விளங்குது  . இதை நினைத்துக்கொள்ளும் போதெல்லாம் பிராங் காப்கா சொன்ன " By believing passionately in something that still does not exist, we create it. The nonexistent is whatever we have not sufficiently desired."தான் நினைவு வருகிறது.

.

Saturday, 30 May 2015

தோசைக்கல்லு சைசில இசைத்தட்டு..

யாழ்பாணத்தில " பஸ் ஸ்டாண்டில " 80களில் " நியூ விக்டேர்ஸ் " என்று  ஒரு " மூயுசிக் ரோகொரடிங் பார் " இருந்தது, அதன் வெளியே பல இங்கிலிஸ் பாலடகள் பதிந்து வந்த,   தோசைக்கல்லு சைசில இருந்த பிளாஸ்டிக் தட்டில  பல இசைதட்டுகளை வெளியே எல்லாருக்கும் தெரியிற மாதிரி வைத்திருந்தார்கள் !

                                   அதில ஒரு LP அல்பத்தின் கவரை " ஷோ கேசில் " வைத்திருக்க ,அதில இரண்டு வெள்ளைகார ஆண்களும்,இரண்டு வெள்ளைகார பெண்களும் அருகருகே ஒட்டிக்கொண்டு , கைகளைக் கட்டிக்கொண்டு நிண்டு, சிரித்துக்கொண்டு, ஒரு "ஒளி வெள்ளம் பாயும் "  வட்டத்தில் நின்று  போஸ் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.

                                   அந்த இரு ஆண்களும் ஸ்டார் வார் படத்தில வார  "வேற்றுகிரக வாசிகள் " போல இறுக்கமாக உடை அணிந்துகொண்டு இருக்க, அந்த இரு பெண்களும் அதைவிட இறுக்கமாக உடைஅணிந்து, மார்புப் பகுதிய வஞ்சகம் இல்லாமல் தாராளமாக காட்டிக்கொண்டு இருக்க, அந்த இரு பெண்களும்  அணிந்திருந்த குட்டைப் பாவாடை அவர்கள்  குனிந்தால் எல்லாம் தெரியும்போல இருக்க, சொக்கநாதரே  சொக்கிப்பிவிடுவார்போல இருக்க , அவர்களை சும்மா விரலால சுண்டினாலே சரி கம ப த நி ச நாதம் பேசும்போல  அவர்களின் உடலமைப்பு வில்லா வளைஞ்சு நிக்க ,  இசை மீது இருந்த தீராத தாகத்தால் , அவர்களே  பாடினால் எப்படி இருக்கும் என்பதை அறிய அந்த" ரோகொரடிங் பார் " இக்குள்ள துணிந்து போய் ,

                        "இந்த அல்பத்தின் கவரில் இருபவர்கள் யார்? " 

                                       எண்டு அங்கே தலையில "ஹெட் போனை" கொழுவி வேலை செய்தவரிடம் கேட்டேன் " அவர் இவர்கள்தான் உலகப் புகழ் பெற்ற  ABBA என்ற  இசைக் கோஸ்டி " என்றார். அவரிடம் 

                               " இசை என்றால் எனக்கு உசிர், இந்த அல்பத்தை கொஞ்சம் கிட்டத்தில பார்க்க தரமுடியுமா?" 

                                    என்றேன், அவர் எடுத்து தந்தார்,தெரிந்த தற்குறி இங்கிலீசை வைச்சு நோண்ட அதில் அவர்கள் ஸ்வீடன் என்ற நாடில இருக்குறார்கள் எண்டு எழுதிக்கிடந்தது 

                             ," ஸ்வீடன் என்ற நாடு எங்க இருக்குது ?" 

                         என்று  அவரிடம் அவரிடம் கேட்டேன் , அவர் "ஹெட் போனை" கழட்டி,தலையை சொரறிஞ்சு போட்டு,

                         " ஆபிரிகாவில இருக்குது , அதுக்கு முதல் உமக்கு இப்ப என்ன வேணும்?" 

                                                எண்டு கோபமாகாக் கேட்டார் , நான் கோவிக்கவில்லை , நானே பிட்காலதில ஒரு புகழ் பெற்ற கிடாரிச்ச்டா வருவேன் எண்டு எனக்கே அப்போது தெரியாது , பிறகு அவர்க்கு எப்படி என்னோட அருமை தெரியப்போகுது எண்டு போட்டு ! 

                             " இவர்களின் பாடல்கள் கேசட் வடிவில் உள்ளதா?"  எண்டு கேட்டேன் ?

 அவர் ,அதுக்கு

                            "  இல்லை , LP  வடிவிலதான் உள்ளது"  

                                                 என்றார் , இதுக்குமேல கேட்டால் மூன்சியில அறை விழும் என்பதுபோல என்னை சுவாரசியம் இல்லாமல் பார்க்க , நான் படு சுவாரசியமகா அந்த இரு பெண்களையும் பார்த்துகொண்டு,   இனி அவரிடம் என்னத்தை கேட்கிறது எண்டுபோட்டு, 

                              "இதை கேசட்டில ரெகார்ட் பண்ணி தருவீர்களா ?" என்றேன், அவர்

                                 " பேந்தும்பார் , இந்தப் பெடி முசுப்பாத்திவிடுறதை , ரேகொர்ட் பண்ணதானே ரேகொர்டிங் பார் வசிருக்கிரம்,வேற என்னதுக்கு  தலைமயிர் வெட்டுரதுக்கே இதை வசிருக்கிரம் "

                                         என்றார், அவரை பார்த்து நட்பாக  சிரிச்சுப்போட்டு , அந்த அல்பத்தை கடைசியா கொஞ்சம் முகத்துக்கு கிட்ட வைச்சுப் பார்த்தன்.

                                             இனி பொய் சொல்லி என்ன வரப்போகுது ,எல்லாத்தையும் இழுத்து மூடிக்கொண்டு இருக்கிற யாழ்ப்பாணக் கலாசார சூழலில் இருந்ததால் , கிட்டத்தில பார்க்க அந்த இரு பெண்களும் சொக்க தங்கம் போல இருக்க, அவர்களின்கண்களில் ஒருவித வசியம் இருந்தது, அப்பவே மனதளவில் சபதம் எடுத்தேன், 


                                              வளர்ந்து கலியாணம் கட்டினால் ,இப்படி ஒரு வெள்ளைக் கார பஞ்சகல்யானியதான் கட்டவேண்டும் எண்டு, சொல்லி வைச்ச மாதிரி விதி ஆரைத்தான் விட்டு வைக்குது, நாசாமாப் போன அந்த சபதம் என்னோட வாழ்கையில் நடந்தது,அதுவும் ஸ்வீடனில் நடந்தது!... அந்த கதை பிறகு சொல்லுறன்!


                                         அவர் அப்படி ரேகொட் பண்ணிதந்த அந்த கேசட்டை வீட்டில இருந்த ஒரு லொட்டு லொடக்கு "டேப் ரெகார்டரில் " போட்டுக் அடிக்கடி கேட்பேன், என்னோட அம்மாவே வியந்து பார்த்து ," இங்கபாரடா இவனை, இங்கிலிஸ் பாடத்துக்கு 26 மார்க்ஸ் இக்கு மேல ஒருநாளும் போகாத இவன், இங்கிலீசு பாட்டுக் கேட்கிறதை" எண்டு கிண்டல் அடிச்சா ! 


                                  அவர்கள் பாடிய அந்த ஆங்கிலப் பாடல்களின் கருத்து விளங்கவில்லை,, ஆனால் அவர்கக்ளின் அந்த இசை அந்த  இரு பெண்களைப் போலக் கவர்சியாதான் இருந்தது !அதில இருந்த "DANCING QUEEN" பாடல் , அது தான் ABBA இன் முதல் பாடலாம் , இதை அவர்கள் ஐரோப்பா அளவில் நடக்கும்  EURO SONG பாட்டுப்போடியில் பாட, அது முதலாவதா வர, இதுதான் அவர்களை உலகம் அறியச் செய்தது, 


                              உலகை கலக்கிய ABBAஇன் பாடல்கள் டெக்னிகலா MUSICALLY GENIOUS வகையில் இல்லை,வெறும் POWER CHORDS ஐ வைத்து "மைல்ட் பொப் " மெலடிகள்,அவர்களின் பெரும்பாலனா "Lyrics "பாடல்வரிகளும் " உன்னை நினைத்தன்,காதல் வந்தது,கவிதை எழுதினன்,அதை பாட்டப்படிச்சன்" டைபில வெறும் மேம்போகானவை,ஆனால் அவர்களின் இசை அந்த வரிகளுக்கு உலகளவு உயிர் கொடுத்தது உண்மை!


                                  ABBA வின், நான் ஜொள்ளுவிட்ட அந்த  இரு பெண்களும்,  இரு ஆண்களும் ," Take A Chance On Me " எண்டு மனம்  விரும்பி , அவர்களுக்குள்ளையே " Gimme! Gimme! Gimme! "  என்று  பாடி,  "DANCING QUEEN " என்று  ஆடி ,"  Honey Honey"  என்று  கட்டிப் பிடிசுக்  காதலர்கள் போல வாழ்ந்து , " I Do, I Do, I Do, I Do, I Do " எண்டு அடுத்தடுத்துப் பிள்ளைகள் பெற்று , கொஞ்சம் அலுத்துப் போக " Knowing Me Knowing You  " என்று சொலிப்  பின்னர் பிரிந்தார்கள், 


                                                      பிரிந்து அந்த காதலையும், காதலின் பிரிவையும் " " The Winner Takes It All  " என்று உருக்கமாக , ஆளை ஆள் மாறி மாறிப் பளியப்போட்டு ,ஆற்றாமையில்   " The Day Before You Came  " எண்டு  பாடலாக பாடினார்கள்! அப்படி வேற எந்த ஒரு இசைக்குழுவும் செய்யவில்லை!  

                                      அவர்களின் பாடல்களே அவர்களின் வாழ்க்கை,,,சில பாடல்கள் கேட்கும்போது மனஅழுத்தம் எங்களுக்கே வரும் , அந்த ஜோடிகளில்   பெனிஅன்டர்சன்..அவர் காதலி பிரிடாவை ஏமாற்றினார்,,,பிஜோர்ன் ,அவர் காதலி ,அக்னிதாவை ஏமாற்றினார்.. தனிபட்ட மன உடைவு இந்த இசைக்குழுவை உடைத்துவிட்டது ,,என்னதான் அந்த ரெண்டு ஆண்களான பென்னி அண்டர்சனும், பியோர்ன் உள்ளுவாலும் பின்னாட்களில் தனி அல்பங்களில் இசை அமைத்தாலும், ABBA  வின் இளமை உயிர் அதில இருக்கவில்லை இல்லை .

                       மிகவும் அடக்கமான , பப்ளிசிட்டி விரும்பாத " I Have A Dream " எண்டு தன்கள் இசை வாழ்வை அடக்கமாகத் தொடங்கிய  அவர்கள் ,அவர்களின் இசைவாழ்வு முடிந்தபின், "thanks you for the music" எண்டு பாடிப்போட்டு, பொது மேடைகளில தோன்றுவதை பெரும்பாலும் தவித்தார்கள் ! இன்றைவரை ஸ்வீடன் எண்ட நாட்டை உலகஅளவில் பெரபலம்  ஆக்கிய  பெருமை எனக்கும் ...கொஞ்சம் ABBA என்ற  இசை குழுவுக்கு இருக்கிறது!

.

" எலிங் " ஒரு நட்பின் கதை.

" எலிங் " என்ற ஒரு தனி மனிதனின் பெயரில் நோர்வேயிய மொழியில், 2001 இல் , நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் புறநகர் பகுதியான மஜாச்ற்றுவா என்ற டவுனில் வாழும் நட்பு தேடும் இரண்டு தனி மனிதர்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தை ஒரு காமடி போல எடுத்த படம் ,இன்றுவரை நோர்வே தயாரித்த ஒரு அருமையான படம் என்று சொல்லலாம். 

                                           பெண்களே இல்லாத அந்த படத்தின் இரு கதாநாயகர்கள் எவளவு சாதாரண மத்திய வயது மனிதர்களோ அந்த அவளவு சிம்பில் அதன் கதை,,ஆனால் அதைக் கனம் ஆக்குவது அதன் திரைக்கதை. மனிதர்களுடன் அதிகம் பழகாத,வாழ்கையின் வரிகளுக்கு நடுவில் தடுமாறும் மனிதர்களுக்கு  நகைசுவைஉணர்வு அதிகம், அவர்கள் வாழ்கை சூழ்நிலை பலசமயம்,அந்த உணர்வை வெளிப்படுத் சந்தர்பம் கொடுக்காவிடினும்! இது போல  "குருடன் பெண்டிலுக்கு அடித்த மாதிரி " கிடைக்கும் அரிய சந்தர்பங்களில் சும்மா பூந்து விளையாடுகின்றார்கள் அந்த இரண்டு மனிதரும்.!

                                               பழக்கம் என்பது ஒரு மோசமான  மிகப்பெரிய பலவீனம், சிலரிடமிருக்கும் சில பழக்கங்கள்தான் இயல்பாக எல்லாரும் போல வாழ விடாமல் தடுத்து வைத்திருக்கிறது என்ற அடிப்படையில் நாவல் வடிவில் வந்து அதிகம் யாரும் வாசிக்காத ஒரு கதையைக் கையில எடுத்து தயாரிக்கப்பட்ட, பழக்கம் என்பது  ஏமாற்றிக் கொள்ளும் ஒரு தந்திரம், பலவீனங்களை நியாயப்படுத்தும் ஒரு மோசடிவேலை, இவை எல்லாம் நன்றாகவே தெரிந்தும்,  மாற்றிக் கொள்வது கடினம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டது  எலிங் படம்

                                  , சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவில் அந்த ஆண்டே ஒஸ்கார் விருதுக்குப் நோமிநெட் செய்யப்பட்டு, இந்தா அந்தா எண்டு பரபரப்பு கிளப்பினாலும் ,அதுக்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை, என் அளவில் நான் நினைக்கும் காரணம் அந்தப் படத்தை ,நோர்வே மக்கள் எப்படி ஜோசிப்பார்கள், அவர்களின் வாழ்வியல் அடையாளம் என்ன,என்று   நோர்வேயிட்கு வெளியே வசிக்கும் எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாதது  போல இருப்பது ஒரு காரணம், மற்றது நோர்வே மொழி விளங்கினால் தான் முழுமையாக அதற்குள் இறங்கி ரசிக்கலாம் போலவும் இருக்கு.

                                        கதை இதுதான், எலிங் அஸ்மா நோயால அவதிப்படும் ஒரு நாற்பது சொச்சம் வயசுள்ள ஒரு அப்பாவி,கொஞ்சம் எல்லாத்துக்கும் அதிகம் உணர்ச்சி ஆகும் நெர்வஸ் டைப் ,மிகவும் சட்டத்துக்கு பயந்த,வாடின பயிரைக் கண்டபோதெல்லாம் வாடின வள்ளளார் ராமலிங்க சுவாமிகளின் இருபதாம் நூ ற்றாண்டு மறு பிரதி போன்ற மனிதர். நனைந்த கோழிக்குஞ்சைப் போல வெளிறிப்போன முகம், மழுப்ப சேவ் எடுத்த கன்னம், உடலுக்குப் பொருத்தமில்லாத ஜீன்ஸ் பேண்ட் , கலர் வெளிறிப்போன ஒரு விண்டர் ஜாகெட் என்று எளிமையா வாழும் எலிங் அவரோட அம்மாவோடதான் அவர் தனியா அந்த வயதுவரை  வாழ்ந்தார். 

                                   அம்மா இறந்து போக, அவரோட வாழ்க்கை சமூக உதவி, மனநிலை பாதிக்கப்படவர்களுக்கு  உள்ள நிலையில் வர,அவருக்கு ஒஸ்லோ கொமுன் என்ற முனிசுபால்டி ஒரு சிறிய அபார்ட்மென்ட், எலின் இன் இயல்பிலும் ,தோற்றத்திலும் எந்த விதத்திலும் ஒத்துவராத , பியோர்னே என்ற இன்னுமொரு தனி மனிதருடன் சேர்ந்து பகிர்ந்து வாழ கொடுகிறார்கள். அதில தான் இருளுக்குள் தீக்குச்சி உரசப்படுவது போலக் கதை சூடு பிடிக்குது...

                                        பியோர்னே என்ற மற்ற மனிதர்  ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வாற வில்லன் போல இருப்பார், நடந்தால் நிலம் அதிரும் உயரமான மனிதர்,பலமான கைகள், அகலமான முகம் அதில் கோரைப் புல் தாடி, கண்ணில மூர்க்கம் ,மூக்கு நுனியில் இயலாமையின் கோபம். அதிகம் படிக்காத எளிமையான சிந்தனை உள்ள, பார்க்கிற பெண்கள் எல்லாரோடும் படுக்க நினைக்கும், எதற்கு எடுத்தாலும் ஜோசிக்காமல் " வந்தா வா போனாப் போ கம்மாக்கோ சிக்காக்கோ " எண்டு வாழ்கையை வன்முறையில் எதிர் கொள்ளும் மனிதர். 

                                                       முரட்டு பியோர்னே ஒரு மெக்கானிக் இருந்தாலும் அவருக்குள்ள ஒரு இளகிய நட்பு தேடும் இதயம் இருக்கு,அது படத்தின் முடிவில் வெளிவரும்., அதுக்கு எதிரா எலிங் நோர்வேயில்  பல வருடம் பிரதமரா இருந்த குறு கார்லம் புடுட்லான் என்ற அம்மணியின் கொள்கைகளிலும் ,அவாவின்  கட்சியான தொழித் கட்சியில் ஊறியவர், அரசறிவியல் என்ற அரசியல் படித்த அறிவாளி . இந்த முரண்பாடான இருவரின் அன்றாட வாழ்கை எப்படி குழப்பம் உருவாக்குது எண்டு அந்தப் படம் காமடியா சொன்னாலும் நிறைய அன்புக்கு ஏங்கும் தனி மனித இயல்புகள் அதில மறைமுகமா நாடித்துடிப்பு போல இருக்கு.

                                                            ஜோசிதுப்பார்த்தால் ,நாங்கள் எல்லாருமே எப்பவுமே ஒரு நல்ல இமேஜ் ஐ பொதுவெளியில் உருவாக்கி வைத்திருக்கவே விரும்புகின்றோம்! உண்மையான எங்களின் ,அன்பின் ஏக்கம் போன்ற நல்ல விசயங்களும்  , மிருக்க இயல்பு, அட்டகாசங்கள், போன்ற நெகடிவ் இயல்புகளும்   இலகுவில் வெளியே தெரியாது ! கோபம், பொறாமை, பயம் ,வரும் நேரங்களில் மட்டும்தான் பல ஆழ்மனது மனது  இயல்புகள் பழையபடி பதுங்கி வெழிவருகின்றது  என்கிறார்கள் சைக்காலிச்டுகள் ! 

                                                  பியோர்னேயின் குளறுபடி அடக்காசம் பிரேமுக்கு பிரேம் படத்தில வரும் அதை அந்த அப்பாவி எலிங் எப்படி சமாளிக்குறார்  எண்டு சொல்லும் படத்தின் முடிவில் நிறைய எதிர்பாராத திருபங்கள் நடக்குது,ஒரு கட்டத்தில் எலிங் ,அவர் சக ரூம் மேட் பியோர்னே போலவே வாழ்க்கையைச் சுவாரசியமா எதிர்கொள்ள பழகி விடுகின்றார்.அந்த இரண்டு மனிதர்களின் பரி சுத்தமான நட்பின் விளிம்பில் வடியும் அன்பு அந்தப் படத்தை ஒரு கவிதை ஆக்குது....

                                       எலிங் படத்தை நோர்வே மொழியில் பார்த்தால் தான் அதன் முழு வீச்சு விளங்கும்,அதை ஆங்கில சப் டைட்டில் இல் பார்த்தால் ஆதரமான சில விசியங்கள் அடிபட்டு, என்னவோ ஒரு கலைப் படம் போல இருக்கும் ,அதுதான் அந்தப் படத்தின் பலவீனம். எப்படியோ , தனிமை வாழ்க்கை நெருக்கடி மனிதர்களை எல்லா விதமான  பொறுமைக்கும் , அனுசரிப்புக்கும் ,ஏமாற்றுதனத்திற்கும்,  துணிச்சலுக்கும் கொண்டு போய்விடுகிறது என்பதற்குச் சாட்சியாக, காமடியக் களமாகக்  கொண்டு இப்படியும் ஒரு படத்தை உருவாக்க முடியும் என்பதே இதன் தனிச்சிறப்பு.
.


வீட்டுக்கார அம்மா வேலைக்காரனுடன் ஓட்டம் !

இப்பெல்லாம் தாறுமாறா எழுதுவது மட்டுமில்லை ,,தாறுமாறா அதுகளுக்கு தலைப்பு வைத்து "தென்னாலி ராமன் தென்ன மரத்தில புல்லுப் புடுங்கின " மாதிர்  வில்லங்கமான விளக்கம்  கொடுத்து பல படைப்புகள் வருகுது ! பலரோட நாவல், கவிதைத் தொகுதி ,சிறுகதைத்  தொகுதி தலைப்புக்கள் சுவாரிசியமா இருக்கும், உள்ளுக்க அந்தளவு தரமாக சரக்கு  இருக்கும் என்பதுக்கு உத்தரவாதம் இருப்பதில்லை.!

                                                                        பலர் தங்கள் படைப்புகளுக்கு என்னைப் போல சாதாரண அரை விசுகோதுகளுக்கு விளங்காத மாதிர் எல்லாம் தலைப்பு வைச்சு பீதியக் கிளப்புகின்றார்கள் , இது விளங்கவில்லை என்றால் , இதெல்லாம் உங்களக்கு விளங்காது ,, இதை எல்லாம் விளங்க " இன்டலெக்சுவல் நோலேச் " வேணும் எண்டு சொல்லுராகள் ,இது இப்ப இல்லை தருமு சிவராமு என்ற பிரமிளுடன் வெங்கட் சாமிநாதன் என்ற குடுமிப்பிடி சண்டை நடந்த அந்தக் காலத்தில இருந்தே நடக்குது !

                                            உலக மகா மேதைகள் அப்படிதான் தலைப்பு வைப்பார்கள், அதிகம் பேருக்கு விளங்காது , அதுக்கு காரணம் அவர்கள் சொல்லும் விசியம் போலவே அதன் தலைப்பும் இருக்கவேண்டும் எண்டு இருக்கும் போல! பிராங் காப்ப்கா  மமெம்பிச்திசிசிஸ்  எண்டு வைச்சார் அவர் உலகப்புகழ் நாவலுக்கு, பிளேட்டோ அவரோட புத்தகத்துக்கு " ரிப்பப்பிளிக் " எண்டு வைக்க, எனக்கு ரெம்ப்பப் பிடித்த பிரேடிச் நெட்சே அவரோட தத்துவ பைபிளுக்கு "யாரதுச்டிதிரா " என்ற அழிந்துபோன சமயத்தின் பெயரை வைத்தார்!

                                                அதை விடுவம் ..இருந்தாலும் ,தமிழ் நாட்டு எழுத்தாளரை போலவே சுவாரசியமா , ஈழதுது எழுத்தாளர் வைத்த பெயர்களைப் பாருங்கள்."ஒரு விலைமகளைக் காதலித்தேன் " நாவல் , இந்துமகேஷ்,புங்குடுதீவு !"ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் " நாவல், நெல்லைக் க பேரன் ,நெல்லியடி !"சர்மிளாவின் இதய ராகம் " , நாவல் ,ஜூனைதா யுனைகின் ,,மட்டக்களப்பு !" கங்கைக்கரை ஓரம் " ,,,செங்கை ஆழியன் , "நீரில் எழுதப் பட்டிருக்கும் மீனை பூனை வாசிகிறது " கவிதை தொகுப்பு ,அகம்மது பைசல் ,பொதுவில்...இப்படி வைச்சு இருக்கிறார்கள் .

                                                   நோர்வேயில் இருந்து  ஒரு நியுஸ் பேப்பர் வருகுது , அதன் தலைமை பதிப்பகத்துக்கு வெளியே  வெண்கலசிலை  அருகில் இருந்து நானே இந்தப் படம் எடுத்தேன் , யாழ்ப்பாணத்தில காராசில வேலைசெய்யிறவர் போல இருக்குற இவர் ஒவ்வொரு நாளும் இந்தப் பத்திரகை வேண்டி  பதிப்பகத்துக்கு வெளியே இருந்து ஒரு வரி விடாமல் வாசிப்பாராம் , அதல அவருக்கு சிலை வைத்துள்ளார்கள் !பின்னாலே உள்ள  இந்தக் கட்டிடத்தில தான் இன்றும் உலக வீதி என்ற இந்த VG  பத்திரிகையின் பதிப்பு நடக்குது. 

                                                இந்த  VG நியூஸ் பேப்பர் அதன் தலைப்புகளுக்கா அறம்புறமா விற்கும் , கண்ணை திறந்து பார்க்காமே பலர் வேண்டும் அந்த VG நியூஸ் பேப்பர் பற்றிய ஒரு படபதிவுக்கு சென்ற வருடம்  ஒரு ,நண்பர் கேடிருந்தார் ,"உங்களுக்கும் நியூஸ் பேபருக்கும் என்ன சம்பந்தம்" எண்டு! நான் நியூஸ் பேப்பர்,முக்கியமா அந்த VG படிபதில்லை.அது கிசுகிசு கலந்த ஒரு பரபரப்பு பத்திரிகை!முதல் பக்கத்தில கொட்டை எழுதில உப்பு சப்பு இல்லாத விசியத்தை சுவாரசியமா தலையங்கம் போட அது நல்லா விக்குது ! இலங்கையில் மித்திரன் பேபரில முன்னம் எல்லாம் இலக்கியத் தரமா வருமே "வீட்டுக்கார அம்மா வேலைகாரனுடன் ஓட்டம் " போல தலயாங்கம் இருக்கும், வீட்டுகார அம்மா எதுக்கு வேலைகரனனுடன் ஓடி இருப்பா எண்டு எல்லாருக்கும் தெரிந்தாலும்,அதன் பின்னனி விடுப்பு அறிய எல்லாரும் வேண்டுவார்கள்!

                               இப்படி தலைப்பு புத்தகங்களுக்கு வைக்கும் விபரீத முயற்சியில்  எழுசியும் இருக்கிறது , வீழ்ச்சியும் இருக்கிறது ! சுந்தரராமசாமி  " புளியமரத்தின் கதை "எண்டு அவர் எழுதிய மிக சிறந்த நாவலுக்கு பெயர்  வைக்க ,புளியமரத்தில என்ன இருக்கும், பேய் தான் இருக்கும் எண்டு பலர் அதை ஆரம்பத்தில்  படிக்கவில்லை, அவரே பின்னர். "ஜே ஜே சிலகுறிப்புகள் " நாவல் எழுத அதுவும் நாவலா,கட்டுரையா,என்ற பெயர் குழப்பத்தால தமிழில் அதிகம் அறியப்படவில்லை ! அதன் பிரெஞ்ச் மொழிபெயர்ப்பு அதிகம் வித்ததாம் !

                                  இப்ப இந்த வைரஸ் வியாதி பேஸ் புக்குக்கும் தொற்றியுள்ளது. அண்மையில் ஒரு ஆண் பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் ஸ்போர்ட் ஸ்டீச்சர் அந்த பாடசாலையில் நல்லா ஸ்போர்ட்ஸ் செய்து ஓடக்கூடிய பையனுக்கு அந்தப் பையனோடு சேர்ந்து கிரவுண்டில ஓடி ஓடுறது எப்படி என்று சொல்லிக்கொடுத்தாங்க...அதைப் பார்த்துப்போட்டு பிரபலமான பேஸ் புக் பதிவாளர் கொழுவி குமாரு போட்ட ஸ்டேட்ஸ் . " பத்தாம் வகுப்பு மாணவன் 26 வயது ஆசிரியையுடன் ஓட்டம்...." .என்று போட்டுள்ளான்.  அய்யோ குமாரு , இந்த விளையாட்டுக்கு நான் வரலைப்பா என்று எஸ்கேப் ஆக வேண்டி வந்திட்டுது கடைசியில் 

                                    கைக் காசைக்  கொடுத்து புத்தகம் வேண்டி   நானே இப்படி ஒரு தலயங்கக்  குழப்பத்தில சில வருடம் முன் ஏமாந்தேன்,  "தேவதைகளின் தூமைச் சீலை " என்ற புத்தகத்தை அதன் தலைப்பு கவர்ச்சியாலும், அதை "போஸ்ட் மொடேர்ணிசம்,எச்சிஸ் டென்சியலிசம்" எண்டு ஒருவர் விமர்சனம் எழுதியாதாலும் வேலைமினக்கெட்டு வாசித்தன் ! அதில,தேவதையும் இல்லை, தீட்டுதுணியும் இல்லை, குறைந்தது ஒரு கோவணம் தன்னும் அதில இல்லை!!..

.