Friday, 4 December 2015

Chennan Chiru Vayathil .Guitar Live Cover





ஒரு பாரம்பரிய பிராமணக் குடும்பத்தில் கணவனுக்கு மனைவிக்கும் இடையில் நடக்கும் புரிந்துணர்வை எடைபோட்டுப் பார்க்கும் ஜதார்த்தம் அது உருவாகும் பல குழப்பங்ககளை ஒரு சினிமாவாக எடுத்தார்கள். கணவன் வேலைசெய்யும் இடத்தில வேலைசெய்யும் ஒரு பெண்ணுடன் தன் கணவனுக்கு தொடர்பு இருக்கு என்று தெரிய வந்த போது வழமையாக எல்லாக் குடும்பங்களிலும் வெடிக்கும் சண்டையும் சந்தேகமும் தான் " மீண்டும் கோகிலா "என்ற படம்.
                                               உலகம் தெரியாத பதிவிரதையான மனைவி , உலாசமான பொழுதுபோக்கு உள்ள வக்கீல் வேலை செய்யும் கணவன்.இவர்கள் இருவருக்கும் நடுவில் ஆடம்பரமான ஒரு பெண் இப்படியான களமுள்ள ஒரு கதையை முதலில் புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன்தான் அரைவாசி வரை இயக்கினார். அவர் இயக்கத்தில் படம் சீரியஸ் ஆக வரவே, அந்தக் கதையின் படி அது ஒருவித காமடியாக வரவேண்டுமென்று அவரை தூக்கிப்போட்டு ரங்கராஜன் என்ற இயக்குனரைப் போட்டு புதிதாக இயக்கி இருக்கிறார்கள்.
                                                        அச்சொட்டாக ஸ்ரீதேவியே பாடுவது போல எஸ். பி. ஷைலையாவின் சின்னஞ்சிறு குரலில்,இடையில் வரும் ஹம்மிங்கில்,தயக்கத்தில் கோகிலாவுக்கு ஒரே ஒரு பாடலில் உயிர்கொடுத்த இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்தப் பாடல் ஒலி வடிவில் கேட்பதை விட விசுவலாகப் படத்தில் முதல் முதலாக மாப்பிளையைக் கல்யானப் பெண் பார்க்கும் ஒரு பிராமண வீட்டில் எப்படி நிகழ்வுகள் இருக்கும் என்று ஒரு பாடலோடு படமாக்கியிருந்தார்கள்.
                                                               திருமணம் முடிக்கக் காத்திருக்கும் பெண்கள் கர்நாடக சங்கீதம் கொஞ்சமாவது படித்து அதைப் பாடவேண்டும் என்ற அந்தப் பழையகால சம்பிரதாயங்கள் இப்போது அருகிவிட்டது போல இருக்கு. கிளி போலப் பெண் இருந்தாலும் " பெண்ணுக்குப் பாடத் தெரியுமா " என்ற ஒரு டயலக் எப்பவுமே பெண்பார்க்கும் போது வந்து விழும். இப்ப உள்ள நிலைமையில் கல்யாணப் பெண்ணைப் பாடச்சொன்னால் ஐ போனில MP3 Download பாட்டைப் போட்டு அதுக்கு வாயசைப்பார்கள். வேற என்னதான் செய்யமுடியும் அவர்களால்.
                                                     இசை படித்த பெண்களின் எண்ணங்கள் எப்பொதுமே மென்மையாக இருக்கும். அது கணவனுடன் சேர்ந்து வாழும்போது குடும்பத்தில் ஒருவித அமைதியை ஏற்படுத்தும் என்று முன்னோர்கள் நம்பி இருக்கிறார்கள். மனதைச் சாந்தப்படுத்தும் இசை என்பதே இதயம் வரை இறங்கி இசைந்து போவது தானே.
                                                 இந்தப் பாடலின் பல வரிகள் சுப்பிரமணிய பாரதியார் அவரின் கனவுக் காதலி செல்லம்மாவை நினைத்து எழுதியவை. கவியரசர் கண்ணதாசன் அந்த வரிகளையும் தன்னோட வரிகளையும் இணைத்து இந்தப் பாடலை எழுதி இருந்தார். ஒரு பாடல் எப்படி அதன் கதையோடு ஒட்டி உறவாடிப் போகுமென்று வரைவிலக்கணம் போல இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்த பாடலிது.

Monday, 30 November 2015

Kaathirunthu Kaathirunth





தமிழ் சினிமா கிராமங்களில் கால்ஊன்றி நிஜத்துக்கு வெகு அருகில் இருந்த எண்பதுக்கள் என் போன்ற இளையவர்களின் இளமைக்கால இசைவரம். அதை இன்னுமொருபடி மேலே காதலோடு கொண்டு போனவர் இசைஞானி இளையராஜா, அதை சொல்லிச் சொல்லியே நினைவுகளின் நதிக்கரையில் கால்களை நனைத்தவர்கள் எல்லாருமே கிறங்கிப்போன பாடல்கள் வந்த ஒரு படம் ‘வைதேகி காத்திருந்தாள்’. 

அந்தத் திரைப்படம் வெளிவந்த நாட்களில் காதல் தோல்விக்கு இன்னுமொரு விதமான அரிதாரம் பூசி வைத்தார் டைரக்டர் ஆர்.சுந்தரராஜன். மிச்ச வேலை முழுவதையும் இசைஞானி இளையராஜா பாடல்களில் சொல்லாமலே சொல்ல வைத்தார். அந்தத் திரைப்படம் வெளியாகி அதில் இசைந்த பாடல்களால் அது ஒரு மிகப்பெரிய ஹிட்டானது.

‘காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போகுதடி ’இந்தப் பாடல் இசைஞானி இளையராஜா போல்க் என்ற folk music கிராமிய இசைவடிவ டெம்போவில் மிக எளிமையாக ஒரு பாடல் இதயத்தை பூத்திருந்து புன்னகை செய்ய வைத்த அதிசயங்களில் ஒன்று. இந்தப் பாடலை பி.ஜெயச்சந்திரனை தொடக்கத்திலும், இடையிலும் ஹம்மிங் கொடுத்துப் பாடவைத்து நாட்டார் பாடல் வரிகளுக்கு ஒருவிதமான கிராமிய அடையாளத்தை இடையில் செருகி அந்தப் பாடலைப் படத்தில் பார்க்காமலே நிறைவாகக் கற்பனை செய்ய வைத்தார்.

அண்மைக்காலமாக சினிமாப் பாடல்கள் இன்ன இன்ன ராகங்களில் வந்திருக்கு என்று பலர் எழுதுகிறார்கள். நானும் கொஞ்சக்காலம் அப்படி பாடல்களைக் தெரிந்த சங்கீத இசை அறிவில் வைச்சுக் கிண்டி, அதை வெஸ்டேர்ன் கிட்டார் ஸ்கேல் உடன் ஒப்பிட்டுக் குழம்பி ,முடிந்தவரை சில பாடல்களின் சுர அமைப்புகளை ராகங்களோடு ஒப்பிட்டு, அது என்ன இராகம் எண்டு கொஞ்சம் சந்தேகத்தில் தான் எழுதி இருக்கிறேன். பலருக்கு கர்நாடிக், வெஸ்டர்ன், ஸ்கேல், கிட்டார் ,போன்றவற்றில் அதிகம் விசியம் தெரியாததால் நான் என்னமோ பெரிய அறிவுக்கு கொழுந்து என்று நினைத்து வாசித்தும் இருக்கிறார்கள்.

ஆனால் இப்பெல்லாம் பாடலின் இராகம் பற்றி சொல்லப் பயமா இருக்கு,அதுக்கு நிறையக் காரணம் இருக்கு ,ஆனால் ஸ்கேல் போன்ற வெஸ்டர்ன் விசியங்கள் சொல்ல முடியும். காத்திருத்தலின் சோகத்தை இசைஞானி இளையராஜா எவளவோ பாடல்களில் பதிவு செய்து இருக்கிறார். நான் நினைக்கிறன் அவரின் மிகச்சிறந்த காதல் ரசம் பிழியும் பாடல்கள் கர்ணரஞ்சினி, தர்பாரிகானடா இரண்டு ராகத்திலும் காலங்களைத் தாண்டி நிக்கவைத்தார். ஆனால் அந்த ரெண்டு ராகமும் மிகவும் கடினம்,ஜோசிக்கவே கடினம், ஆனால் இந்தப் பாடல் சிவரஞ்சனி ராகத்தின் சுர சாயலில் உள்ளது. உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

சிவரஞ்சனி ராகம் பெயரைப்போலவே அழகான, ஆனால் சுரங்கள் குறைவான குறை ராகம், முழுமையான ஏழு சுரங்களும் அதில ஆரோஹணம், அவரோஹணம் இரண்டிலும் இல்லை.அதனால் அதன் வீச்சு எப்பவுமே குறைவு .ஒரு நல்ல இசைஅமைப்பாளர் அந்த சின்னச் சுரஞானக்கோவைக்குள் இறங்கி significant orchestration இக்குத் தேவையான முத்துக்களை எடுத்துக் கோர்த்து ஒரு மாணிக்க மாலை செய்ய முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் இசைஞானி இளையராஜா, அவரைப் பொறுத்தவரை significant orchestration என்பதெல்லாம் சிம்பிள்.

வெஸ்டர்ன் harmonies and string arrangements இல் சொன்னால் ‘காத்திருந்து, காத்திருந்து ’ பாடல் ஒரு மைனர் ஸ்கேல் பாடல். சிம்பிளான Fm என்ற ஸ்கேல் இல இங்கே நான் வாசித்துள்ளேன், இந்தப் பாடலின் தொடக்க ஹம்மிங் வாற இடத்தில ஒரு கோட்ஸ் இடையில் வரும். அப்படி ஒரு கோர்ட்ஸ் தமிழ் சினிமா பாடலில் இன்றுதான் வருவதைக் கவனித்தேன்.

முக்கியமா இந்தக் கரோக்கி பிண்ணனியில் வாசித்த இந்த வீடியோ ஒரியினல் பாடல் போல முழுவதும் இல்லை. இப்படிக் குழப்பங்கள் நிறைய கரோக்கி பிண்ணணியில் பாடல் வாசிக்கும் போது ஏற்படும்.அதனால் தாழ்மையுடன் சொல்லுகிறேன், இதை ஒரிஜினல் பாடல் என்று நினைத்து யாரும் கிட்டாரில் வாசிக்கப் பழக வேண்டாம்.சும்மா என்னமோ கிட்டாருக்க இருந்து என்னமோ சத்தம் வருகுது என்று நினைத்துக் கேளுங்க .
.

Sunday, 29 November 2015

பெரிய மாமா ..முதலாவது புயல்

ஆண்களுக்கு ஒரு கிலோ தவிடு தூக்கிற பலம் இருக்கும் வரை ஆம்பிளை என்ற அடையாளம் வயது வளைந்து  வயதாகிக்கொண்டு போனாலும் பெண் ஆசையை மட்டும்  விலத்தி விட்டுப் போகா வைக்காது  என்று சொல்லுவார்கள். அதை அவளவு இலகுவாக வெளியே தெரியும்படி யாருமே காட்டிக்கொள்வதில்லை. சில ஆண்களுக்கு  அந்த ஓர்மம்  ஒரு நிழல்போல இயங்கி  வெறிபோலச் சதிராடும் நேரமெல்லாம் நேரடியாகப் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள்தான்.  

                                        வயதான காலத்தில் ,அதுவும் படுக்கையில் விழுந்த  நேரம் கணவன் உதவியாக இருக்கவேண்டுமென்றுதான் எல்லா மனைவியும் நினைப்பார்கள். முப்பது சொச்சம்  வருடம் தர்மபத்தினியாக வாழ்ந்த மனைவிக்கு உதவியாக இருக்க வேண்டிய நேரம் பெரியமாமா தனக்குச்  சமையலுக்கென  உதவிக்கு இன்னுமொரு அழகான பித்தளைக் குடம் போன்ற பெண்ணை நடு வீட்டுக்குள்ள கொண்டுவந்து வைச்சுக்கொண்டு நல்ல குருநாதன் போல உபதேசம் செய்து, நடுச்சாமம்  உபத்திரவமும் கொடுத்துக்கொண்டு இருந்தார்.  

                                       பெரிய மாமா எங்கள் குடும்பத்துக்கு தூரத்து அம்மாவழி உறவு. வயதில் அதிகமாகவும், பெரிய தோற்றமும் ,பெரிய வேலையும் அந்த நேரம் செய்துகொண்டு இருந்ததால் அவரை பெரிய மாமா என்று சொல்லவேண்டி வந்திருக்காலம் போல .  அதை விட எங்களின் ஊரில் இருந்த அவரே கட்டிக்  குடிபுகுரல் எல்லாம் பெரிதாகச் செய்த, முன்னுக்கு பெரிய தாமரைத் தொட்டி கட்டி , அதுக்கு நடுவில காஸ்மீர் ஏரிபோல விசிரியடிச்சு பைப் தண்ணி பூப்போல விரிஞ்சு பறக்க விட்டு , அதைச் சுற்றி பெரிய சீமெந்து  வாசில் போகன்வில்லாப்  பூக்கள் வளர்த்த  பெரிய  கல் வீட்டில் வசித்தார். எல்லாமே அவரைப் பொறுத்தவரை பெரிசாதான்
இருக்க வேண்டும் .

                                                வாழைச்சேனை அரசாங்க பேப்பர் கொம்பனியில் மார்கெட்டிங்  மனேஜர் என்ற விற்பனை முகாமையாளராக  வேலை செய்த பெரிய மாமா பென்சன் எடுக்கும் காலம்வரை மட்டக்களப்பில் தான் இருந்தார்.  உண்மையைச் சொன்னால் அந்தக் கிழக்கு  மாகாணத்தில் வடக்கிலிருந்து போய் வசித்தார்.  இந்த " வசித்தார் " என்ற வரிக்குள் இன்னுமொரு வாழ்கையே அவருக்கு மீன் பாயம் தேன் நாட்டில்  இருந்தது.  அது  எழுவத்தெட்டில்  மட்டக்களப்பில் புயல் அடிச்ச நேரம் தான் அரசல்புரசலாக வெளியால தெரியவந்தது. ஆனால் அதையும் பெரியமாமா புயல் போல எழும்ப விடாமல் அமுக்கி வைச்சிட்டார்  . 

                                        பெரிதாக எழும்பிப் பேசிய குடும்பத்தில் இருந்து அவர் வந்து இருந்தாலும் , பேப்பர் பக்டரி அரசாங்கக் குவாட்டசில்தான் தங்கி  இருந்து, மூட்டை கடிக்கும் ஒரு பழைய கட்டிலில் படுத்து எழும்பி, தானே சமைச்சு சாபிட்டுகொண்டு  வேலை செய்தார் என்றுதான் யாழ்பாணத்தில் சொல்லுவார்கள் ஆனால் அவர் அரசாங்கக் குவாட்டசில் இருக்கவேயில்லை.  இன்னொரு பெண்ணின் மடியில தலை வைச்சு உல்லாசமாக தான் வாழ்ந்தார் என்று அவரோட அதே பக்டரியில் வேலைசெய்த எங்களின் அயல் ஊரில் வசித்த இன்னுமொரு மாமா  சொன்னதை யாருமே நம்பவில்லை .

                                       மட்டக்களப்புப்  புயல்  வங்காளா விரிகுடாவில் தாளமுக்கமாக எழும்புது என்று ரேடியோவில் அறிவிச்ச நேரமே பெரியமாமா பேப்பர் பக்டிரியை விட்டுப்போட்டு , வந்தாறுமூலைப் பாலம் எல்லாம் கடந்து பாதுகாப்பான கிராமப் பக்கம் இருந்த , அவர்  கீப் ஆக வைச்சு கொண்டு சேர்ந்து வாழ்ந்துகொண்டு இருந்த அம்மணியின் வீட்டுக்கு போட்டார். புயலே அவர் பேப்பர் பக்டறியை  விட்டுப் போனாப் பிறகு மூன்று நாள் கழிச்சுதான் மட்டக்களப்புக்கு குறுக்கா அடிச்சது 

                           யாழ்பாணத்தில பெரிய மாமி ரேடியோவுக்கு பக்கத்தில அங்கால இங்கால நகராமல், கையில தேவாரப்புத்தகத்தை வைச்சுப் பாடிக்கொண்டு , சமைக்காமல் சாப்பிடாமல் உறங்காமல் இருந்து கொண்டு 

                                " கடவுளே , எண்ட மனுஷனுக்கு ஒண்டும் நடக்கக்கூடாது, பாதுகாப்பா இருக்க வேண்டும் , இந்த மனுஷன் எல்லாத்தையும் போட்டது போட்டபடி  விட்டுப்போட்டு தப்பி ஓடி வருவம் எண்டு இல்லாமல் வேலை முக்கியமெண்டு பக்டரியைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு நிக்குதே, எனக்கு இந்தாள் உயிர் முக்கியமெண்டு ஏங்கி ஏங்கி சாக இந்த மனுஷன் புயலுக்க நிக்குதே  " 

                                     என்று எல்லாக் கோவிலுக்கும் நேர்த்தி வைத்துக்கொண்டு இருந்தா.  அவா நேர்த்தி வைத்த கடவுள்கள் அவரைக் கைவிடவில்லை பாதுகாப்பா இருக்க வேண்டிய இடத்தில தான் கடவுள்களும் அவரை வைச்சு இருந்தார்கள். 

                                             புயல் அடிச்சு ஓஞ்சு பேப்பர் பக்டரி ஏறைக்குறைய முக்கால்வாசி அழிந்துபோன பின் ஒருகிழமை கழித்துதான் பெரிய மாமா பக்டரிக்கு வந்து பார்த்திருக்கிறார். அதுக்குப் பிறகு சில மாதம் அவர் யாழ்பாணத்தில் வந்து நின்றார்,எல்லாச் சனங்களும் போய் 

                          " மெய்யாத்தான் கேட்கிறம் , வங்காள விரிகுடாவில் இருந்து வந்த  புயல் எப்படி அடிச்சது, அதில நீங்கள் எப்படி உயிர் தப்பினீங்கள், உன்னான  பேப்பர் பக்டரிக்கு முன்னால நிண்ட லொறிகளின் ஹோர்ன் எல்லாம் தானா அடிச்சுதாமே,,"

                                      எண்டு கேட்டார்கள்,பெரிய மாமா அதுக்கு புயலுக்கு முன்னுக்கு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்று பேப்பர் பக்டிரியைக் காப்பாற்றின மாதிரி கதைகளை அவிட்டு விட்டுக்கொண்டு இருந்தார். அந்தக் கதைகளும் வங்காள விரிகுடா போல பெரிசு பெரிசாத்தான் இருந்தது .

                                      பெரிய மாமா  பேப்பர் பக்டரி திருத்த எடுத்த மாதங்கள் முழுவதும் எங்கள் ஊரில்தான் நின்றார். பெரிய ஒரு யுத்தத்தை வென்ற ஜெனரல் போல மீசையை முறிக்கிகொண்டு எழுப்பும் விட்டுக்கொண்டு திரிஞ்சார்.  பெரிய மாமி நேர்த்திக்கடன் வைச்ச மாதிரி, வைரவருக்கு வடை மாலை செய்து போட்டா, பழங்கிணத்தடிப் பிள்ளையாருக்கு பொங்கல் பொங்கினா. வீராளி அம்மனுக்கு நெருப்புச் சட்டி தலையில வைச்சு வேப்பிலைக் காவடி எடுத்தா, நல்லூர் கோவிலுக்கு  போய்ப் பத்து நாள்  முழங்காலில் உள்வீதியில் அடியழிச்சு அருச்சனை செய்தா, பெரிய மாமா அதைக் கணக்கில் எடுக்கவில்லை ,
  
                             "  எடியே இப்ப என்னத்துக்கு இந்த காவடி ஆட்டமும், வேப்பிலைக்  கூத்தும் ,,நான் மட்டக்களப்பில் புசலுக்கால தப்பி வந்தது என்னோட மண்டையப் பாவிச்சு, இந்தப் புயல் என்ன இன்னும் எத்தினை புயல் வந்தாலும் தப்பி வருவன், புயல் என்னை என்ன செய்யும்,,அவளவு பயந்தவனா நான் இருந்தா இங்க இருந்து போய் மட்டக்களப்பை இந்த ஆட்டு ஆட்டுவனா,,சொல்லு பார்ப்பம் விளையாடத் தெரிஞ்சவனுக்கு எங்கயும்  சொல்வழி கேட்டு வித்தை விளையாடும் , இங்க ஒரு வீடுவாசல் .. போல... அங்க ஒரு வாசல் வீடு.. ,"

                                      என்று பிடி கொடுக்காமல் பேசிக்கொண்டு இருப்பார். ஆனால் பின் நாட்களில்  பென்சன் எடுத்த நேரம் அவர் இதே  நடுவீட்டுக்குள் அவரே கொண்டு வந்த அழகான பித்தளைக்குடம் போன்ற நடுத்தர வயது சின்னப் புயல், ஒரு நாள் தாளமுக்கமாகி நாலு பக்கமும் சுழண்டு அடிச்சு, சதிராடி ,எல்லாத்தையும் பிரட்டி , பெரிய ஒரு மலையையே தள்ளி விழுதி , அவரை ஒரேயடியாகச் சரித்துப்போட்டுப் போன நேரம்  அதன் அபரிமிதமான கவர்ச்சியில் பெரிய மாமாவின் தந்திரங்கள் எதுவுமே பலிக்கவில்லை. 

                                               பெரிய மாமா சுமாரான , ஆனால் ஒருவித சந்திர வம்ச லட்சணம் போல அழகான தோற்றமுள்ளவர் ,நல்ல சுத்தமான கலப்பில்லாத கறுப்பு நிறம். அரசாங்க வேலை செய்தாலும் வெள்ளை வேட்டிதான் கட்டுவார், வெள்ளை நீளக்கை சேட்டுத்தான் போடுவார்.அதை மடிக்க மாட்டார் . தோளில எப்பவும் ஒரு கலர்த்  துவாய் போட்டிருப்பார்.  அதிலதான் அவர் இன்னும் வடிவா இருப்பார். அவரோட முகத்தில எப்பவுமே எதையும் அலட்சியமாக எதிர்கொள்ளும் சிரிப்பு இருக்கும் . அந்த  அலட்சியக் கண்களில் ஒருவிதமான விரும்பின எல்லாத்தையும் அடையும்  லட்சியமான வசீகரம் பதுங்கிப்பாயத் தயாரா இருக்கும் .

                                              அவரிடம் எந்த ஒரு குறை சொல்லும்படியான  ஒரு கெட்ட பழக்கமும் இல்ல்லை. குடி வெறி, புகைத்தல் , ஏன் வெத்திலையே போடமாட்டார். சாப்பாட்டில பயங்கரக் கவனம். உடம்பு உடைஞ்சு போயிடும் என்று எப்பவுமே சுத்த சைவம் . அதால உடட்பயிட்சி செய்யாமலே கட்டுமஸ்தான பர்மாத் தேக்குமரத் தேகம் . பரந்த நெஞ்சில  அடர்த்தியான  மயிர் , எண்ணை போட்டுப் பிடிச்சுவிட்ட மாதிரி உடம்பு அந்த வயசிலும் அரிசி குத்திற  நாட்டு உரல் போல இறுக்கமா இருக்கும். 

                                               அந்தக் கண்களின் வசீகரம் அதுதான் அவரோட மன்மத லீலைகளுக்கு பெண்களை மயக்கவைத்த மன்மத அம்பு.  அவரோட இவளவு அடக்கமான சோலி சுரட்டுக்குப் போகாத மனுஷன் என்ற முகமூடிக்குப் பின்னால் பயங்கரமான முரட்டுத்தனம் இருந்தது. அது பூனை போலப் பதுங்கிக்கொண்டிருந்தது. அதுவே புலிபோலப் பாய்ந்த சம்பவங்கள் பலது இருந்தும் வெளியால ஒருத்தருக்கும் தெரியாது. 

                                             சின்ன வயசிலேயே அவருக்கு அந்த அரசாங்க உத்தியோகம் கிடைத்து இருக்கு .  பெரிய மாமி பதின்நாலு வயசில சாமத்தியப்பட்ட அடுத்த மாதமே மறு சாமத்தியப்பட முதலே வீட்டுக்க பூந்து இழுத்துக்கொண்டு வந்து இரவோடு  இரவாக்  கலியாணம் கட்டினார்.  அதை சட்டப்படி கவுரவமாக்க கோவிலில் தாலி கட்டினார்.   

                                         பெரிய மாமாவுக்கு மூன்று பிள்ளைகள் ,ரெண்டு பொடியன்கள்.  பெரிய ராசன், சின்ன ராசன் என்ற  ரெண்டு பொடியன்களும் என்பதுக்களின் தொடக்கத்திலேயே இயக்கங்களில் இழுபட்டு உருப்படாமல்  போயிடுவாங்கள் என்று பயத்தில கிழக்கு ஜெர்மன்  டி டி ஆர் விசா எடுத்து, ஒருத்தனை  ஜெர்மனிக்கும் , இன்னொருத்தனைப்  பிரான்ஸ்க்கும் பிடிச்சு அனுப்பிப்போட்டார் .

                                             " கலாச்சாரம் பண்பாட்டு  எவளவு முக்கியமெண்டு  இதுகளுக்கு விளங்குதில்லையே ..சின்ன ராசன்,,காடை வத்திப்போய்  வெள்ளைகாரிகளோடு அலையுறானாம் எண்டு பெரியவன் சொல்லுறான்,,இந்தப் பொடிக்கு என்ன குறைச்சல் எண்டு எனக்கு விளங்கேல்ல, இங்கனேக்க வரப்பண்ணி ஒரு ஊர்  உலகத்தில அறிஞ்சு நல்ல ஒரு  பொடிச்சிய கையில பிடிசுக் கொடுப்பமெண்டா வாரானும் இல்லையே ..."

                                                 எண்டு சொல்லுவர் . அவர் பென்சன் எடுத்து இருந்த காலத்தில் பிரான்சில்  ஒரு  இலங்கைப் பெண்ணைத் திருமணம் முடித்து இருந்த அவரோட மூத்த மகன் பெரிய ராசன் மட்டுமே காசு அனுப்பி தொடர்பில் இருந்துகொண்டு இருந்தான் . சின்ன ராசன் தொடர்பே இல்லை.

                                                  அவருக்கு ஒரு மகள் ராசாத்தி என்று இருந்தா .அந்த  மகள் யாழ்பாணம் கம்பச்சில் படிச்சுக் கொண்டு இருந்த நேரமே தன்னுடன்   சயன்ஸ் பக்கல்டியில் படிச்சுக்கொண்டு இருந்த முல்லைத்தீவு பொடியனை லவ் பண்ணிக் கலியாணம் செய்யப் போறேன் என்று ஒற்றைக்காலில் நிக்க ,

                                   " பொம்பிளைக்கு ஒழுக்கம் எவளவு முக்கியமெண்டு  விளங்கமாட்டேன்  எண்டு நிக்கிறியே காதல் தான் உனக்குப் பெரிசு எண்டு நினைச்சி எண்டா ,,நீயே உன் முடிவில போயிடு,,பிறக்கு என்னையும்  கொம்மாவையும்  நினைக்கத் தேவையில்லை,, ஒழுங்கு  மரியாதை  பண்பாடு இல்லாத பொம்புளைப் பிள்ளையை வீட்டுக்க வைச்சிருக்க எனக்கும்தான் பரிசுகேடு..." 

                               என்று சொல்லி  ராசாத்தி  விருப்பத்துக்கே கலியாணம் கட்ட விட்டார் . அவா பெரிய மாமா குடும்பத்தோடு தொடசல் இல்லாமல் திருகோணமலைக்கு டீச்சிங் வேலை எடுத்துக்கொண்டு போட்டா. அங்கே போய் யாரை லவ் பண்ணிக்கொண்டு இருந்தாவோ அவரையே கலியாணம் கட்டி சந்தோசமா வாழ்ந்துகொண்டு இருந்தா என்றுதான் சொல்லுவார்கள். காதலித்துக் கட்டுறதே  சந்தோஷமா இருக்கத்தானே.

                                    அதுக்குப்பிறகு பெரிய மாமியும்,பெரிய மாமாவும் வயதாகித் தனியாதான் அந்த பெரிய கல் வீட்டில் இருந்தார்கள்.  ஆனால் நல்லா உடுத்து, நல்லாச் சாப்பிட்டு  நல்ல வசதியாகத்தான்  இருந்தார்கள். இன்னுமொரு நடுத்தர  வயதுப் பெண்னை அவர் சமயல்வேலைக்கு என்று நடுவீட்டுக்குள் கொண்டு வரும் வரை. ஆனால் இந்தக் குளறுபடிகள் வெளியே அதிகம் யாருக்கும் தெரியாது. காதும் காதும் ஓட்ட வைச்ச மாதிரி பெரியமாமா அதைக்  காய்நகர்த்தி நடத்திக்கொண்டு இருந்தார் 

                              பிறகு எப்படி இதெல்லாம் எனக்கு தெரியும் என்று விடுப்பு அறிவதில் அனுபவம் உள்ளவர்கள் கேட்கலாம். நான் மட்டுமே அந்த வீட்டுக்கு உள்ளே நடமாட அனுமதிக்கப்பட்டேன். பெரியமாமாவுக்கு என்னில நல்ல விருப்பம், இப்பபோலத்தான் என்னைப் பார்க்க அப்பவும் நல்லவன் போல இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை  நம்பிக்கையும் அதிகம் அதால அனுமதித்தார். ஆனால் நான் இப்ப போலத்தான் அப்பவும் நிழலாக பல திருகுதாளம் செய்துகொண்டு இருந்தேன் . ஆனாலும்  யுத்தம் அகோரமாக நடந்துகொண்டிருந்த ,கரண்ட் இல்லாத அந்த வருடங்களில்  நான்தான்  அவர்களுக்கு கூப்பிட்ட  கைக்கு  எல்லா உதவியும். 

                               முக்கியமா அவர்களுக்கு தண்ணி இறைக்கிற மிசின் கொண்டு வந்து கிணற்று தண்ணியை நீண்ட பைப் போட்டு ஏற்றி  அவர்களின் உயரமான வாட்டர் டேங்க் இக்கு அடிச்சு நிரப்பிறது . அவர்களுக்கு டவுனில  கடைகளுக்குப் போய் சாமான் வேண்டிக்கொண்டுவந்து கொடுப்பது. எல்லாத்துக்கும் எனக்கு கைச் செலவுக்கு காசு தருவார் பெரிய மாமா. பள்ளிக்கூடம் இல்லாத சனிக்கிழமை  தின்னவேலி சந்தைக்கப் போய் மரக்கறி சாமான் வேண்டிக்கொடுப்பேன், மிச்சக் காசும் திருப்பிக் கேட்க மாட்டார் . ஞாயிற்றுக் கிழமை போய் அவர்கள் வீட்டில  தொட்டாட்டு வேலை எல்லாம் செய்து கொடுப்பேன். காசு பார்த்துப் பாராமல் தருவார்.    

                                   பெரிய மாமாவுக்கு சாப்பாடு சொல்லப்பட்ட மாதிரி ஒவ்வொரு நாளும் இருக்க வேண்டும். மத்தியானம், உமியவிட்டு வடிச்ச புழுங்கல் கைக்குத்தரிசிச் சோறு ,எண்ணை தாளிச்ச  பிரட்டல் உறைப்புக்   குழம்பு, தேங்காய்ப்பால் மிதக்கும் ஒரு வெள்ளைக் கறி, சரக்குத் தூள் போட்டு ஒரு மரக்கறி வதக்கல் ,  வறை சுண்டிய இலை ,தேசிக்காய் புழிஞ்சு விட்டுக் கடைந்த முளைக்கீரை   ,கூட்டுப் பொரியல்,  பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் போட்ட பால்ச் சொதி, முறுக்கிக்கொண்டிருக்கும்  பப்படம்.  இது கட்டாயம் இருக்க வேண்டும் இல்லாட்டி குசினிக்க சட்டி பானை உடையும் 

                                           " இதெல்லாம் நேரத்துக்கு நேரம் இல்லாமல் மட்டகளப்பில இந்த மனுஷன் எவளவு கஷ்டப்பட்டுக் கொண்டு  இருக்குமே,  அங்க என்ன இருக்கப் போகுது, அரையும் குறையுமா அவிச்சு வடிச்சு ஆறப்போட்டு சாப்பிட்டு வாயும் வயிறும் எங்க நிறையப் போகுது, "

                                    என்று  பெரியமாமி சொலிச் சொல்லி பார்த்துப் பார்த்து சமைப்பா ,

                                  " இனிப் போய் பழையபடி வாய்க்கு ருசியா உப்புப் புளி இல்லாமல்,என்னோட சமையலை நினைச்சுக்கொண்டு  கிடந்தது , காஞ்சுபோன கடைச்  சாப்பாட்டைத் திண்டு  கொண்டு கிடக்கப்போகுதே , என்னோட சமையல் காணுமே என்னை மறக்காமல் நினைக்க வைக்க, எண்டாலும் ஒரு ஆம்பிளைக்கு பக்கத்தில இருந்து பார்த்துப் பார்த்து சமைச்சுப் போடுமாப் போல வருமே .."

                                        என்று கவலைப்படுவா. பெரியமாமாவுக்கு இதே அடுக்கில மட்டக்களப்பிலயும் சாப்பாட்டு , சிலநேரம் இதைவிட எடுப்பா எருமைத்தயிரும் வைச்சு ஒவ்வொருநாளும் கிடைக்கும் என்று அவாவுக்குத் தெரிந்திருக்க  நியாயம் இல்லைத்தான். இதெல்லாம் அவர் மட்டக்களப்பில் வேலை செய்த நேரம் நடந்தது. ஆனால் அவர் பென்சன் எடுத்து வீட்டோடு வந்த பிறகுதான் அவரோட ஒழித்துக் கொண்டு இருந்து வேஷம் போட்ட ஓர்மம் அதிகமாய் ஆட்டம் போடத் தொடங்கியது ..

                                  பெரிய மாமி ஒருநாள் பாத்ரூமில் குளிக்கும் போது வழிக்கி விழுந்திட்டா என்று செய்தியோடு  என்னை அவசரமா வரச்சொல்லி தகவல் பெரியமாமா அனுப்பி இருந்தார். போய்ப் பார்க்க பெரியமாமியின்  வலது முழங்கால் வளைஞ்சு, இடது கையும் மணிக்கட்டில் முறிஞ்ச மாதிரி இருந்தது. அந்த வயதான வயதில அவாவை பெரியாஸ்பத்திரிக்கு இழுத்துப் பறிக்க அவர் விரும்பவில்லை. அல்லது வேற ஏதும் பிளான் போட்டாரா தெரியவில்லை 

                                          வீட்டு செற்றியில் இருந்து ஜோசித்தார். நாயன்மார்கட்டில்  இருந்த முறிவு நெறிவுக்குப்  பத்துப்போடுற பொம்பிளையைக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னார். அவளைக் கூட்டிக் கொண்டு வர அவள் வந்து கையால எண்ணை போட்டு நெறி இழுத்து உருவிப்  பார்த்திட்டு பத்துப் போட்டாள். அது போட்ட அன்று சாமி அறையில் இருந்த படுக்கையில் பெரிய மாமி போய் விழுந்தா. அவளவுதான் அதுக்குப் பிறகு அத்தியாவசிய தேவைகளுக்குத் தவிர வேற எதுக்கும் எழும்பி  நடமாட முடியவில்லை,முக்கியமா சமைக்க அறவே முடியவில்லை . 

                                            பெரிய மாமா ரெண்டு நாள் தான் சமையல் ஒழுங்கில் இல்லாமல் சமாளித்தார். மூன்றாம் நாள் முடிவெடுத்தார். இனி சமையலுக்கு ஒருத்தி இந்த வீட்டுக்கு கட்டாயம் வேணும் என்று அதனால என்னைக் கேட்டார் 

                                 "  யாரும் ஒரு பொம்பிளை வந்து சமைச்சு வைச்சுப்போட்டு போற மாதிரி பிடிச்சுத் தர முடியுமா,,உனக்கு தெரிஞ்ச ஆரும் இருக்கினமே ,அல்லது கொம்மாவைக் கேட்டுப் பாரேன் சிலநேரம் அவாவுக்கு அயலட்டையில் நல்லா  தெரிஞ்ச மாதிரி  நல்ல பழக்க வழக்கம் உள்ள பொம்பிளை யாரையும் தெரிஞ்சு இருக்கலாம் ,,இல்லாட்டி இனி நான் தான் கடிதம் எழுதிக் கூப்பிட வேண்டும் ,,,அதுகள்  பிரசினையில்  சில நேரம்  முடியலாம்,,,அதயுமெல்லோ ஜோசிக்க வேணும் ,,நாளைக்கு ,,ஒண்டு கிடக்க  ஒண்டு  மேலே  ஏறிப்  பாஞ்சா... "

                                        என்று கேட்டார் .எனக்கு அப்படி யாருமே தெரியாது என்று சொன்னேன். ஆனால்  " கடிதம் எழுதிக் கூப்பிட வேண்டும் ,,,அதுகள்  பிரசினையில்  சில நேரம்  முடியலாம், " என்று விழுங்கி விழுங்கி சம்பந்தா சம்பந்தமில்லாமல் கதைக்கிறதுக்கு   என்ன அர்த்த மெண்டு கேட்க நினைச்சேன், நானே  சின்னப் பொடியன், பெரியாக்களின்   பெரிய பிரசினைகள் எனக்கு என்னத்துக்கு எண்டு கேட்கவில்லை . 

                                      ஆனால் நடு முதுகில வளம் பார்த்துப் பொல்லால அடிச்ச மாதிரி அடுத்த சில வாரங்களில்  ஒரு நடுத்தர வயது அழகான பித்தளைக் குடம் போல ஒரு பொம்பிளை குசினிக்க இல்லை, நடு வீட்டில நடமாடி ஏறைக்குறைய வீட்டுத் துறப்பையே எடுத்து இடுப்பில செருகிக்கொண்டு நடமாடியதை பார்க்க முடிந்தது.

                                     அந்தப் பொம்புளை எங்களின் ஊரில் உள்ள பொம்பிளை இல்லை. கதை பேச்சு கொஞ்சம் பிறத்தி ஊர் போல இருந்தது. கட்டியிருந்த நூல் சீலையில்  பின்னுக்கு கொசுவம் வைச்சதே வித்தியாசமா இருந்தது.கேள்வி  எல்லாத்துக்கும் வஞ்சகமில்லாத  பதில் போல சிரிச்சா. உள் சூட்டுக்  காச்சல் போல கணகணப்பான நடுத்தர வயது, உடம்பில ஒருவித றாத்தலடி நல்லெண்ணெய்  தடவி உள்ளங் கையால நீவி விட்ட  மாதிரி மினுமினுப்பு , பெரிசா இருந்தாலும் விழாமல் எடுப்பாய் குத்திக்கொண்டு நெஞ்சு , உயரமான கால்கள் நீளமான கைகள், முகத்தில நேர்மையான நட்பு, கண்களில் இன்னும் நிறைவடையாத ஏக்கம், மொத்தத்தில் பித்தளைக் குடம் போல அள்ளிப் போடுற வாளிப்பு , 

                                         பெரிய மாமா இந்த அள்ளிப் போடுற  பித்தளைக் குடத்தை நிட்சயமாக சமையலுக்கு மட்டுமே வைச்சு வீணடிக்க மாட்டார் என்று மட்டும் உத்தரவாதமாகத் தெரிந்தது. அவர் பரமார்த்தகுருவை நம்பி  ஆத்துக்குள்ள கொள்ளிக்கட்டை யை  வைச்சுப் பார்த்த மட்டி மடையன் போல விபரம் தெரியாத ஒரு  ஆள் இல்லை . வயதானாலும் அழகை ஆராதிக்கும் விபரமான  மனிதர். அதை சில நாட்களில் அவர் முக்கியமா  டவுனில  சுப்பிரமணியம் மருந்துகடையில் வேண்டச் சொல்லி தந்த சில்லறைச் சாமான் லிஸ்டில்  கண்டு பிடிச்சேன்.  

                                         அந்த லிஸ்டில், சீயாக்காய், சந்தனாதித்தைலம், ஜாதிக்காய், கராம்பு , ஏலம், மாதுளம்பழ எண்ணை, வாசப் புகையிலை, சுண்ணாம்பு ,வெத்திலை,பாக்கு , பாக்கு உரல் , சண்டுள் வூட் சோப் , இன்னும் பல இருந்தது. இதுகள் அவர் முன்னம் ஒரு போதும் வேண்டியது இல்லை,முக்கியமா  பெரிய மாமி வீட்டு குடும்பத் தலைவியாக இருந்த நேரம் வேண்டியதேயில்லை. எனக்கும் தெரியும் யாருக்கு வேண்டுறார் என்று.ஆனாலும் ஆச்சரியமாக இருந்தது  பித்தளைக் குடம் இதெல்லாம் பாவிப்பதால் தான் பவுர்ணமி ஜொலிப்பாகப்  பித்தளைக் குடம் போல இருப்பது போல இருந்தது. 

                                               பெரிய மாமிக்கு இன்னுமொரு பெண்ணைத்  தன்னோட புருஷன் சமையலுக்கு கொண்டு வந்து வைத்திருப்பது நன்றாகவே தெரியும், ஒரு கட்டத்தில் அந்தப் பெண் சமையலுக்கு மட்டுமில்லை என்பதும் தெரியவந்தநேரம் சாமியறைக் கதவை இறுக்கிச் சாத்திப்போட்டு, எப்பவுமே படுத்த படுக்கையை விட்டு எழும்பி நடமாடவே விரும்பாமல் ஒவ்வொருநாள் காலையிலும்  படித்துக்கொண்டிருந்த தேவார திருவாசகத்தையும் படிக்கிறதை நிட்பாட்டிப்போட்டு நிரந்தர மவுனம் ஆகிட்டா.  

                                        பித்தளைக்குடம் நல்லா சமைப்பா. அது ஒரு வேறு விதமான சமையல், நிறைய சரக்குத்தூள் அம்மியில அரைச்சுப் போட்டு செட்டிநாட்டு சமையல் போல இருக்கும். பெரிய மாமாவும் பித்தளைக்குடம் அருகில் இருந்து பரிமாற  மிகவும் சந்தோசமா சாப்பிட்டார். அதுக்குப்பிறகு பித்தளைக் குடம் சாப்பிட்டு முடிய  பெரிய மாமிக்கு ஒரு தட்டில சாப்பாடு போட்டு ஜெயிலில் உள்ளவர்களுக்குக்  கம்பிக் கதைவைத் திறந்து தள்ளி விடுவார்களே அதே போல தள்ளி விடுவா. பெரிய மாமா அதைப் பார்த்துக்கொண்டு இருப்பார். பிறகு  பித்தளைக்குடம் பாக்கு உரலில் வெத்திலை இடிச்சுப் போட முன்னுக்கு இருந்து சிரித்து சிரித்து கதைத்துக்கொண்டு இருப்பார் .

                                   பித்தளைக்குடம் வந்த ஒரு கிழமைக்குள் பெரிய மாமா அந்த வீட்டில சாமி அறை எந்தப்பக்கம் இருக்கு என்பதையே மறந்திட்டார். பித்தளைக்குடம் அவரை சேலைத் தலைப்பில முடிஞ்சு வைச்சு இருந்தா. நாய்க் குட்டி போல  பித்தளைக்குடத்தின் காலுக்க கிடந்தது சுழன்டார் பெரிய மாமா . எனக்கும் வேண்டுறதுக்கு சாமான் லிஸ்ட் எப்பவுமே பெரிய லிஸ்ட் ஆக இருக்க மிச்சக் காசு எவளவு வந்தாலும் கேட்க மாட்டார்.  அதால நானும் கைச் செலவுக்கு காசு அதிகம் வருகுது தானே என்று என்ன நாசமறுப்பு எண்டாலும் நடக்கட்டும் எண்டு என் பாட்டில் இருந்தேன், நான் சொன்னால்தான் வெளிய தெரியவரும் இதெல்லாம் எண்டு அவருக்கு நல்லா தெரியும் அதால இடைக்கிடை கடனாக நூ று . இருநூறு  எண்டு கேட்பேன்  உடனையே ஆயிரத்தில் மயில் தாள் உருவித் தருவார்  

                                          பித்தளைக்குடம் என்னோட அதிகம் கதைக்க மாட்டா , ஆனால் நல்ல ஒரு பெண்மணி போல இருந்தது அவா கதைத்த சில நாட்களில். பெரிய மாமா ஆகோ ஓகோ எண்டு தலை கால் சந்தோஷத்தில் மிதந்துகொண்டு இருந்தார், பத்துப் போடுற பொம்பிளை வந்து பெரிய மாமிக்கு பத்துப்போடுவா,

                        "  இனி நீ  மருந்து கட்ட வரவேண்டாம், கதவை இறுக்கி அடிச்சு சாத்திப்போட்டுப் போ, இந்த வீட்டுக்குள்ள என்னோட புருஷன் போடுற கூத்துப் போதும் எனக்கு வலிக்க வலிக்க செத்துப்போக  , இன்னும் சில  நாளில் நான் செத்துப் போக வேண்டும் , இனி நீ இங்க வர வேண்டாம்,,நீ இங்க அடிக்கடி வந்தா பிறகு உன்னையும் எண்ட மனுஷன் ,,வேண்டாம்,,எக்கேடு கெட்டு எண்டாலும்  வாழ்ந்து தொலையட்டும்,இன்றைக்கே நான் செத்தாலும் சந்தோசமா போயிடுவேன் ..நீ கதவை அடிச்சு சாத்திப்போட்டு போ , முதல் இங்க நடக்கிற கதையும்,,சிரிப்பும்,,கும்மாளமும்  என்னை ஒவ்வொரு அணு அணுவா குத்திக் கொல்லுது ...நீ கதவை அடிச்சு சாத்திப்போட்டு போ " 

                       என்று சொன்ன நாளில் இருந்து அவள் வரவில்லை. 

                          பித்தளைக்குடம் வீட்டில இப்ப முக்கிய பிரமுகராக இருந்தாலும். அவாவின் செயல்கள் அதுக்கு பெரிய மாமா கொடுக்கும் ரியாக்சன், அதுக்கு பித்தளைக்குடம்  தள்ளி விடும் சைட் எபெக்ட் , பிறகு ரெண்டு பேரும் மாறிமாறி ஆளை ஆள் கண்ணால சிக்னல் போட்டு அதுக்குப்  போடுற பக்கிரவுண்ட் மியூசிக் இதுகளைப் பார்க்க பித்தளைக் குடமும் பெரியமாமாவும் முதலே வருசக்கணக்கா ஒன்றா வாழ்ந்தவர்கள் போல இருந்தது. ஆனாலும் எங்கே  என்று உறுதிப்படுத்த முடியாமல் இருந்தது , 

                          ஒருநாள் குசினியில் சாப்பிடும் போது பெரிய மாமா கோபமாகி 

                      " செவிட்டில அறைஞ்சன் என்டா இப்ப உனக்கு,  வருசக் கணக்கா சமைச்சுப்போட்டும் இன்னும் என்னோட உப்புப் பதம் பிடிக்க முடியவில்லையே  ,என்னத்தைக் இவளவு வருசமும் கவிட்டுக் கொட்டிக்கொண்டு இருகிறாய் என்று மெய்யாத்தான் எனக்கு விளங்கவில்லை "

                                 என்று  சாப்பாட்டில உப்பு அதிகம் என்று தாறு மாறாக் கத்தினார் , இன்னொருநாள் வேட்டி வளம் மாறிக் கரை மடிசுக் கிடக்கு என்று உரிமையோடு கோபமாகி, 

                          " முகத்தில போட்டன்  என்டா இப்ப உனக்கு, நாலு முழம் வேட்டிக்கு பட்டுக்கரை பிடிச்சு மடிச்சு வைக்கத் தெரியாமல் இவளவு வருசமும் என்னத்தை ஆவெண்டு பார்த்துக்கொண்டு இருந்தனி,,இப்பிடி செய்யவேண்டாம் எண்டு எத்தின வருசமா படிச்சுப் படிச்சு சொல்லுறன்,,நீயும் நாய் வால் போல நிமிராமல் தானே நிக்குறாய் அடம்பிடிச்சுக்கொண்டு " 

                                      என்று தோச்சு மடிச்ச வேட்டியைக் கரை மாறி மடிச்சதுக்கு பேசினார் . அதுக்கும் பித்தளைக்குடம் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து "ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: " மந்திரம் சொல்லி தாலி கட்டின கணவனிடம் திட்டு வேண்டுற பதிவிரதை மனைவிபோல  தலையைக்குனிந்து கால் விரல்களைப் பார்த்துக் கொண்டிருந்தா. அப்பவும் பேச்சு பின்னணியில் பித்தளைக் குடத்தின் அருமை பெருமைகளைப் புகழ்ந்து விழுந்துகொண்டு இருந்தது 

                                                இதெல்லாம்  எனக்குத் தெளிவாகக் கேட்க முடியாத தூரத்தில் நடந்த உரையாடல்கள். சிவாஜி கணேசன் நடித்த தமிழ் சினிமாப் படங்கள் பார்த்த அனுபவத்தில் உரையாடலுக்கும் வாய் அசைவுக்கும், முகப் பாவனைக்கும்  உள்ள வார்த்தைத் தொடர்பை உன்னிப்பாக ஊகிக்கும்  திறமை அந்த நாட்களில் என்னிடமிருந்தது. என்றாலும் ஒருநாள் பெரியமாமா வவுனியாவுக்குப் போய் இருந்த நேரம் பித்தளைக்குடத்தையே  மடக்கிக்  கேள்வி கேட்டேன் 

                                     " பெரிய மாமாவை,, ,சமையல் வேலைக்கு இங்கே வர முதல்  முன்னமே தெரியுமோ "

                                    " ஏன்  நீர் கேக்குறீர் ,,உமக்கு என்ன பிரசினை இப்ப "

                               "  இல்லை , முதலே வருசக்கணக்கா ஒன்றா வாழ்ந்தவர்கள் போல இருந்தது. அதால சும்மா கேட்டேன் "

                                " ஏன்  நீர்  என்னைக்  கேக்குறீர் , உம்மட மாமாவைக் கேளுமேன் முதலில் , அவர் சொல்லட்டுமென்  பதிலை. " 

                                  " இல்ல மாமாவைக் கேட்டால், பிறகு பிரசினை , எனக்கு ஏன் தேவையில்லாத கேள்வியும், தேவையில்லாத  பதிலும்  "

                                "  ஏன் எப்பவுமே இதுக்கு பொம்பிளையளிட்ட பதில் சொல்லச்  சொல்லி கேள்வி கேட்குறிங்க, செய்யிற திருக்கூ த்து எல்லாம் உம்மட பெரிய மாமா செய்துபோட்டு ,பெரிய்ய்ய்ய்ய்ய  மாமா ,,ஹ்ம்ம் ,,பெயர்தான்  பெரிய மாமா,,இப்ப உருத்திராட்சம் மாலையைக் கையில வைச்சு சுழட்டிகொண்டு இருந்தா சரிவருமே   "

                               "அய்யோ,,,என்னை விடுங்க,,,இந்தக் கேள்வியையே மறந்திருங்க இப்படிக்  குருசேஸ்திர   அஸ்திரங்கள்  பாயும் என்று  தெரியாமல் கேட்டுப் போட்டேன்  " 

                                       " ஹஹஹஹா, உங்க மாமாவே,, ஹ்ம்ம்,, இவர்தான் பெரிய்ய்ய்ய்ய்ய  மாமா,, பெரியமாமா  அவரும்  மறந்துதானே ஓடப்பார்த்தார் , விதி விடாதே "

                                       " விதி யாரைத்தான் விட்டு வைக்குது "

                                    " இல்லை,,நீர் மாமாவை  சும்மா கேளும், எனக்கும்  அவர் என்ன பதில் சொல்லுறார் எண்டு அறிய ஆவால் , ஹ்ம்ம், உமக்கு என்ன பிரசினை அதலா வரப்போகுது  எண்டும் பார்ப்பமேன்  " 

                                   " ஹஹஹா,,பிறகு மாமா இங்க வரவேண்டாம் என்டு சொன்னால்,,கைசெலவுக்கு காசு வருமானம் நிண்டு போடுமே,,அதால நானா வாயத் திறந்து ஒண்டும் கேட்கவே மாட்டேன் "

                                 " இல்லை உமக்கு மண்டைக்குள்ள கேள்விகள் கிடந்தது புழு குடையிற மாதிரி நிறைய இருக்கெண்டு நான் என்ன செய்யுறேன் எண்டு என்னை ஒவ்வொரு முறையும் நீர் இரகசியமாப் பார்க்கும் போது  எனக்கு தெரியும் "

                                      " அது உண்மை,,ஆனால் இப்ப எனக்கு இது தேவை இல்லாத உத்தியோகம்,,பெரிய மாமா எனக்கு நல்ல பினான்சியல் சப்போர்ட்,,அதுதான் காசு காய்கிற மரம்,   அதைக் கெடுக்க விரும்பவில்லை "

                                       " ஒ அப்பிடியே சங்கதி "

                                      "  பெரிய மாமா அப்படி செய்ய மாட்டார், என்றாலும் சொல்ல ஏலாது .."

                                        " இல்லை அவர் அப்படி செய்ய மாட்டார்,,நல்ல மனுஷன்,,விருப்பமான ஆட்களை ஒருநாளும் உதறி ஏறிய மாட்டார் "

                                     " ஹ்ம்ம்,,,அப்படியா ,ஹ்ம்ம், ,"

                                  " இப்ப என்னத்துக்கு சாமி அறையைப் பார்த்து பெரு மூச்சு விட வேணும் ..,,அதுக்கு என்ன அர்த்தம் சொல்லும் "

                                       " இல்லை,,ஒண்டுமில்லை "

                              "  இவர் உமக்கு என்ன தாய் மாமாவா , பெரிய மாமா எண்டு சிலநேரம் சொல்லுறீர் ,,இவர்  ,உம்மோட அம்மாவோட  அண்ணாவா .."

                                 " இல்லை ,,தூரத்துச் சொந்தமெண்டு அம்மா சொல்லி இருக்கிறா "

                                   " ஹ்ம்ம்,,எனக்கும் உம்மட மாமா  துராத்தில்...இங்கிருந்து  வெகு  தூரத்தில்,,,,நல்லா  தெரியும்,,,ஹ்ம்ம்,,,இங்கே யாருக்கும்  தெரியாமல்  இருந்து இருக்கும் .".

                                 "  என்னது  வெகு தூரத்தில் என்றால் எந்த ஊரில "

                              "  இல்லை ,,ஹ்ம்ம்,,இல்லை,,,என்னண்டு சொல்ல,  ஒருவேளை போன பிறப்பில ஒன்றாக கணவன் மனைவியாக இருந்து இருப்பமோ  தெரியவில்லை ,,ஹ்ம்ம்,,எப்படிப் பதில் நல்லா சோத்தாங் கையால பிடறீல அறைஞ்ச மாதிரி இருக்கா " 

                               "  எனக்கு ஒன்றுமே புரியவில்லை ,நான் பிறகு ஒருநாள் ஆறுதலாக் கதைக்கிறேன் ,,இவளவு கதைததுக்கே நன்றி . "

                                      பரிஸ் இல் வசித்துக்கொண்டிருந்த பெரிய ராசன் அந்த வீட்டில தாய் மீது மிகவும் அன்பும்,அக்கறையும் உள்ள ஒருவர். பெரிய மாமா  வீட்டில அண்மைக்காலமாக  நடக்கும் எதையுமே அவருக்கு சொன்ன மாதிரி தெரியவில்லை.முக்கியமா பெரிய மாமி படுத்தபடுகையாக இருப்பது சொல்லப்படவில்லை. மற்றப்படி அந்த வீட்டில்  ஒன்றுமே சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டிருப்பது இல்லை போலதான் இருந்தது. இப்பிடி  " ஒன்றுமே சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டிருப்பது இல்லை போல "  என்று எப்பவாவது நடந்தால் அதுக்குப் பிறகு தான் பெரிய குண்டுகள் வெடிக்கும் . 

                               பெரிய மாமா  சில நாள் வவுனியாவுக்கு போய் லொட்சில் நின்று  ,பெரிய ராசனுடன் டெலிபோனில் கதைப்பார் , கதைச்சு காசு எடுத்துக்கொண்டு வருவார். அப்படிப் போனபோது பெரிய மாமி படுக்கையில் இருக்கிறதா சொல்லி இருக்கிறார் போல,ஏன் சொன்னார் என்று தெரியலை, அல்லது  சில பிராத்தனைகள் ,வேண்டுதல்கள் , இறந்துகொண்டிருக்கும் நம்பிக்கைகள் அவரை அறியாமலே அப்படி அவர் வாயாலயே சொல்ல வைத்ததா என்று எனக்கு சரியாத் தெரியவில்லை.

                                    வவுனியாவுக்கு போயிட்டு வந்த சில நாட்களில் ஒரு நாள் பின்னேரம் பெரியமாமா  வீட்டுக்குப் போனேன்  , பித்தளைக்குடம் குசினி வாசலில் நிலத்தில இருந்து கொண்டு  பாக்கு உரலில் வெத்திலை இடிச்சு வாய்க்க வழிச்சு அடைஞ்சு கொண்டு இருந்தா. பெரிய மாமா ஹோல் நடுவில் இருந்த குஷன் செற்றியில் காலுக்கு மேலே காலைப் போட்டுக்கொண்டு, அதை ஆட்டிக்கொண்டு, மெய்கண்டான் கலண்டரில் தாள்களை  ஒவ்வொன்றாய் பிரட்டிப் பிரட்டி ஜோசிதுக்கொண்டு இருந்தார் ,நான் ஹோல் வெளிக்கதவில்  பெட்ரோல்மக்ஸ்க்குக்  காற்று அடிச்சுக்கொண்டு இருந்தேன் , பித்தளைக் குடம் அன்றைக்கு அதிசயமா 

                                " என்ன ,,உம்மோட கொண்ணை வெளிநாட்டில் இருந்து வாறாராமே,,இனியென்ன உமக்கும்,,உங்களுக்கும்  கொண்டாட்டம்  தானே,,இனிப் பிறிச்சுப்   பார்த்து ..நான் பழையபடி  பிறத்தி ஆட்கள்  போல  வெளியால போக ..உங்களுக்கு  இனிக் கொண்டாட்டம்  தானே ,,ஹ்ம்ம்  "

                                   என்று சொன்னா. பெரிய மாமா அப்படிக் கதைக்க வேண்டாம் என்று சொன்னார். எனக்குப் பெரியமாமாவைப் பார்க்கக்  குழப்பமாக இருந்தது .அவர் கையில வைச்சிருந்த மெய்கண்டான் கலண்டரில  திருத்தனி முருகபெருமான்  தங்கவேலை இறுக்கிப் பிடிசுக் கொண்டிருந்த படத்தில ஒரு பக்கம் ஒட்டிக்கொண்டு வள்ளியும் மற்றப்பக்கம் ஒட்டிக்கொண்டு தெய்வயானையும் இருக்க " யாமிருக்கப் பயமேன் " என்று மேலே கறுப்புக் கொட்டை எழுதில மேல எழுதி இருந்தது   
                                  
                                  " ஹ்ம்ம், இந்த முறை வவுனியாவுக்கு போன நேரம், பெரிய ராசனுடன் கதைச்சனான்,,,ஹ்ம்ம்,,பத்தோடு பதினொன்டா ,,உளறிப்போட்டன் ..,,ஹ்ம்ம்,,,சண்டை பிடிச்சான்,,, இப்ப அவன் அடுத்த கிழமை வந்து இறங்கப் போறான் எண்டு சொல்லிப்போட்டான், ....இந்தக் கிழமைகுள்ள  வந்திருவான் போல இருக்கு ...ம்..." 

                                     என்று சொன்னார்,,சொல்லிப்போட்டு என்னைப் பார்த்தார்,,நான் பித்தளைக் குடத்தைப் பார்த்தேன்,,பித்தளைக் குடம் பெரிய மாமாவைப் பார்த்துக்கொண்டு இருந்தா,,நான் அதைக் கேட்டுக்கொண்டு பெற்றோல்மக்ஸ்க்கு புசுக்கு புசுக்கு என்று காத்து அடிச்சுக் கொண்டு இருந்தேன் 

                                   " என்ன நான் சொன்னது கேட்டதே  உனக்கு,,,"

                                   "  இல்லை மாமோய் ,வடிவாக் கேட்கவில்லை, இன்னொரு தரம் சொல்லுங்கோ மாமோய்      "

                                        " ஹ்ம்ம், இந்த முறை வவுனியாவுக்கு போன நேரம், பெரிய ராசனுடன் கதைச்சனான்,,,ஹ்ம்ம்,,பத்தோடு பதினொன்டா ,,உளறிப்போட்டன் ..,,ஹ்ம்ம்,,,சண்டை பிடிச்சான்,,, இப்ப அவன் அடுத்த கிழமை வந்து இறங்கப் போறான் எண்டு சொல்லிப்போட்டான்,,,,,இந்தக் கிழமைகுள்ள  வந்திருவான் போல இருக்கு ...ம்..." 

                                      "  ஓ,, அப்படியே  சங்கதி .மாமோய் ....ம்,,,"

                                    " என்ன நான் சொன்னது கேட்டதே  உனக்கு,,,"

                                "  நல்லா விளங்குது மாமோய்  ..கன வருசம் ராசன் அண்ணை இங்காலே வரேல்லத்  தானே, வந்தா சந்தோசம்  தானே " 

                       என்று சொல்லி பித்தளைக் குடத்தைப் பார்த்தேன், பித்தளைக் குடம் நாடிக்கு கையை முண்டு கொடுத்துக்கொண்டு, வாயில வெத்திலை போட்டு மென்று கொண்டு,  பெரிய மாமாவைப் பார்த்துக்கொண்டு இருந்தா

                                     " இவளைப் பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் பார்ப்பம் என்று நினைக்கிறேன் ,, அல்லது  சென்றல் நேர்சிங் ஹோமில் வைச்சும் பார்க்கலாம் என்று நினைக்கிறன் நீ என்ன நினைக்கிறாய் "

                                  "  உங்களுக்கு என்ன விருப்பமோ,,என்ன வசதியோ அதுபோல செய்யலாம்,,மாமி  முதல் சம்மதப்பட்டு வருவாவோ தெரியாதே "

                                       " அது தான், நீ ஒருக்கா கதவைத்திறந்து கேள்..நான் அந்த அறைப்பக்கமே இவ்வளவு நாளும் எட்டிப் பார்க்கவில்லை , இப்ப அவள் இப்ப என்னோட முகத்தைக் கண்டாள் கட்டாயம்  யமனை கண்ட மாதிரி  எரிஞ்சு பாஞ்சு விழுவாள் "

                                        "    சரி , நான் கதைக்கிறேன், சில நேரம் என்னோட அவா  கதைச்சு இதுக்கு எதுவும் ஒரு முடிவு கட்ட முடியும் என்றா நான் கதைக்குறேன்  மாமோய்    "

                                       "  விளங்கேல்ல, நீ சொல்லுறது  என்னத்தைக் கதைச்சு  என்னத்துக்கு முடிவு கட்டப் போறாய்,  நான் ஏற்கனவே குழம்பிக்கொண்டிருக்கிறேன்,  இதுக்குள்ள நீ வேற என்ன சொல்லுறாய் " 

                                    " இல்லை மாமோய் ,பிரைவட் வாட்டில் நிற்பாட்டி சென்றல் நேர்சிங் ஹோமில் வைச்சும் பார்க்கலாம் என்று நீங்க  நினைக்கிறதை சொன்னேன் மாமோய் "

                                    " அதுதான் நானும் நல்லது எண்டு நினைக்கிறன்,இப்ப உள்ள நிலைமையில் நான் கதைக்கப் போனால் பெரிய பிரசினை எடுப்பாள் "

                                      "     ம்  "

                                "  என்ன ம் ம் எண்டு மண்டிக்கொண்டு இருகிறாய்,,நீ கதைக்கிறியே ,,இப்பவே உதைக்  கொழுத்திப்போட்டு போய்க் கதை "

                                      "  மாமா ,,வந்து ..வந்து "

                                   " என்னடா  மண்டையச் சொறியிறாய் "

                              "  இல்ல  மாமா ,,ஒரு சின்னப்  பிரசினை  எனக்கு ,,மாமா "

                         " சொல்லடா,,நானே  பெரிய  பிரசினையில் நிக்குறேன் "

                                   " அது வந்து  மாமா,,,வந்து "

                                 " என்னடா  வந்தது  போனது  ,,வாயை திறந்து  சொல்லு "

                                     "   மாமோய் , ஏசியாச் சைக்கில்  ஒன்டு நல்ல விலைக்கு வந்திருக்கு மாமோய்,,இப்ப வைச்சு ஓடுற பழைய சைனாக்காரன் செய்த சைக்கிள் சக்குப் பிடிச்ச சைனாக்காரன் போலக்  கிடந்தது அவிக்குது மாமோய் "

                                        "   ம்  என்ன விலையாம் "

                                     "  ரெண்டாரியம் சொல்லுறாங்கள் மாமோய்,,"

                                        "     ம்,,நாளைக்கு காசு தாரன் ,,இப்ப நீ போய்க் கதைச்சு அவளை ஒரு வழிக்குக் கொண்டுவா ,,ரெண்டாயிரம் நாளைக்கு கட்டாயம் தாரேன் "

                                           "   சரி மாமோய் ,,நான் வெண்டு தாரன் நீங்க ஜோசிக்க வேண்டாம்,,உங்கட நல்ல மனதுக்கு எல்லாமே நல்லபடியாதான் நடக்கும், 2

                            என்று சொல்லி பெட்ரோல்மக்ஸ்சைக் கொழுத்தி வைச்சுப்போட்டு எழுந்து போய்க் சாமியறைக் கதவைத் திறந்து மெல்ல எட்டிப் பார்த்தேன். பெரிய மாமி அரைவாசியாய் மெலிஞ்சு போய் கிடந்தா என்னை நேராகப் பார்த்தா. இதுக்கெல்லாம்  நீயும்தானே உடந்தை என்பது போல அந்தக் கண்களில் ஒரு கோபம் இருந்தது. என்னோடையும் கதைக்க விருப்பம் இல்லை என்று சொன்னா, " கதவை மட்டும் இறுக்கிச் சாத்திப்போட்டுப் போ " என்று சைகையில் சொன்னா.

                                        இது நடந்து ரெண்டாம் நாள் பெரிய மாமா சொன்ன மாதிரியே பெரிய ராசன் வந்திட்டார் என்றும் என்னை உடனடியா வரசொல்லியும் இந்த முறை பித்தளைக்குடம் தகவல் அனுப்பி இருந்தா. போய்ப் பார்த்த போது நான் நினைச்ச மாதிரிதான் புயலடிச்சு ஓஞ்சு   நாலு பக்கமும் சிதறி இருந்தது வீடு ..........

                           பாகம் இரண்டில்  புயல் தொடரும்.... ..


Saturday, 28 November 2015

திரும்பபப் பெற்றுக்கொள்ள முடியாத இசை

ஆங்கிலப் பாடல்கள் கிட்டாரில் வாசித்துப் பாடிய நேரம் கொஞ்சம் வித்தியாசமா காதல் பாடல்கள் இசை அமைத்த பலரில் ,முக்கியமானவர் போல தெரிந்த கேட்ஸ் ஸ்டீவன்ஸ்  இன் ஒரு " it's a wild world And it's hard to get by just upon a smile " பாடலை எப்போதும் பாடுவேன் ! அதில் உள்ள கிடார் கோட்ஸ் அமைப்புகள் மிகவும் அழகா இருக்கும் ! 

                                  அந்தப் " it's a wild world And it's har
d to get by just upon a smile "பாடல் சென்ற  வருடம்  நான் facebook இல் என்னோட சுவரில தப்பினேன்,ஒருவரும் ரசித்துக் கேட்ட மாதிரி தெரியவில்லை,என்ன காரணமாக இருக்கும் எண்டு எனக்கு இண்டுவரை விளங்கவில்லை. இந்தப் பாடல் ஒரு உலகப் புகழ் பெற்றபாடல், டெக்னிகலா "ரிதம் " அதன் அரிதான chords ஒழுங்கமைப்பில் பல புதுமை செய்த பாடல்,

                              ஸ்கண்டிநேவிய சுவிடன்,நோர்வேயில்  இது ரெம்பப் பிரபலம், துரதிஸ்டவசமாக மற்ற நாடுகளில் அதிகம் கவரப்படவில்லை ! பாடல் வரிகளும் அர்த்தம் நிறைந்த , humanitarian பற்றிif you wanna leave, take good care ,Hope you make a lot of nice friends out there,But just remember there's a lot of bad and beware, beware நிறைய விசியங்கள் உள்ளது !

                                           இதைப் பாடி,இசை அமைத்த Cat Stevens என்ற இந்தப் பாடகர், கிரேக் நாடட்டு அப்பாவுக்கும்,ஸ்வீடன் நாட்டு அம்மாவுக்கும் ,இங்கிலாந்தில் பிறந்தவர்,அந்த நாடில வளர்ந்தவர்,14 வயதில் கச நோயால தாக்கப்பட்டு மயிர் இழையில் உசிர் தாப்பியவர் ! "டீன் ஏஜ் வயசில்" கிற்றார் வாசிக்க தொடங்கி "டீன் ஏஜ் " வயசிலையே அவரோட முதல் அல்பத்தை வெளியிட்டவர்,அது இரண்டு கிழமையில் 5 மில்லியன் வித்து தள்ளியது !

                                          கட்ஸ் ஒருமுறை கடலில் குளிக்கும் போது சுழி இழுக்க ,எல்லா கடவுளையும் கூப்பிட ஒருவரும் வரவில்லை,கடசியா " அல்லா நீயாவது வந்து என்னைக் காப்பாற்று " என்று கதற ,அலைகளின் மீது ஒரு மரப்பலகை மிதந்துவர அதைப் பிடித்து உசிர் தப்பினார் ,அன்றில் இருந்து இஸ்லாம் மார்கத்துக்கு மாறி , யூசப் இஸலாம் எண்டு பெயரை மாற்றிக்கொண்டு ,அடியோடு பொப் இசை அமைப்பதை நிறுத்திவிட்டார் !

                                    கிட்டார் என்ற வாத்தியத்தில் "Consonance and dissonance" என்ற வித்தையில் கில்லாடியான கட்ஸ் , இசை உலகை விட்டுப் விலத்தி ,இசலாமிய ஆன்மீகத்தில் இறங்கியது ,இசை உலகத்துக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு ,அவர் இஸ்லாமியர் ஆனபின் "A FOR ALLAA " எண்டு ஒரு அல்பம் வெளியிட்டார், அது பல சர்சைகளைக் கிளப்பியது. அதன் இசையில் கிட்டார் இருந்தாலும்,கருத்துக்கள் கொஞ்சம் தத்துவ வில்லங்கமாக இருக்க ,உலகம் எங்கும் உள்ள அவரோட ரசிகர்கள் குழம்பிப் போனார்கள் ! 

                                      அவதுவும் இல்லாமல் துணிந்து " அமரிக்காதான் இந்த உலகின் முதல் பயங்கரவாதி " என்று சொல்ல அவரை வாழ்நாளில் அமரிக்காவுக்குள் வரமுடியாதவாறு தடை செய்துவிட்டார்கள்!

                                           இதயத்தில ஈரம் உள்ள , கட்ஸ் ,அவரோட இசை அல்பங்கள் விற்றுவரும் பணத்தையும்,தன்னோட எல்லா கிடார்களையும் ஏலம் விட்டு, வந்த பணத்ததை வறிய இஸ்லாமிய நாடுகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கொடுத்துவிட்டார் . இசையில் இருந்து ஒதுங்கினாலும், இந்த இசை மேதைக்கு , அவரோட பழைய பொப் ,சோல் ,ப்ளு கிராஸ் ஸ்டைல் பாடல் தந்த பாதிப்பில் இன்னமும் விடாப்பிடியாக உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்குறார்கள் !

                                       அப்படிதான் அவர் , மனதை கசக்கிப் பிழியும் மெட்டுக்களில் பாடல்கள் இசை அமைத்தார் ! இந்த உலகத்தில எல்லாத்துக்குமே ஒரு விலை இருக்கிறது,இந்த நுற்றாண்டின் திரும்பபப் பெற்றுக்கொள்ள முடியாத இசை இழப்பு கேட்ஸ் ஸ்டீவன்ஸ் ....it's a wild world I'll always remember you....!

.

Samsaaram Enpathu Veenai...Guitar Cover .Vijaya Baskar





.தமிழில் அதிகம் அறியப்படாத, தமிழ் நாடில் முதலியார் குடும்பத்தில் பிறந்த விஜயபாஸ்கர் என்ற கன்னட இசை அமைப்பாளர் இசைஅமைத்த , ",S .B B இக்கு புகழ் தேடித்தந்த ,கவியரசு கண்ணதாசனின் வரிகள் அசத்திய " சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது இராகம் " பாடல் விஜயபாஸ்கர் இசை அமைத்தது .

கன்னட படங்களில் கொடிகட்டிப் பறந்த விஜய பாஸ்கர் தமிழை விட, கன்னடா, தெலுங்கு,மலையாளம் ,மராத்தி,கொங்கனி ,துளு மொழிப் பாடல்களுக்கும் இசைஅமைத்துள்ளார். புகழ்பெற்ற அடூர் கோபாலக்ருஷ்ணன் என்ற மலையாள இயக்குனரின் எல்லாப் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார் !
சிறுவயசிலேயே ஹிந்துஸ்தானி இசை வெஸ்டர்ன் பியானோ முறைப்படி பயின்ற விஜய பாஸ்கர் ,தெனிந்திய திரை உலகில் "Theme Music "என்பதை முதல் முதல் அறிமுகம் செய்தவர் என்கிறார்கள்! கன்னட மொழியின் சிறந்த கவிஞ்சர்கள் எழுதிய கவிதைகள் எல்லாத்துக்கும் இசை அமைத்து உள்ளாராம்! எழுபதுகளிலேயே லண்டனுக்குப் போய் Robert Clive என்ற இந்திய வரலாற்று ஆங்கிலப் படத்துக்கு BGM பின்னணி இசைஅமைத்துள்ளார்!
தென் இந்திய இசை அமைபாளர்களிலேயே மிகக் குறைவான இசை கருவிகளை ஒர்கேஸ்ராவில் வைத்து இசை அமைத்தவர் இவர் ஒருவர்தானாம் , அதாலதான் அவர் பாடல்கள் இனிமையாக அதே நேரம் எளிமையாக இருக்குது போல ! ஆறு முறை ஒரு மாநிலத்தின் சிறந்த " State Film Award for Best Music Director " பரிசு வென்றவர் ,
ஹிந்துஸ்தானி கஜல் பாடல்கள்,தெய்வீகப் பக்திப் பாடல்கள், நாடுப்புற FOLK பாடல்கள் இசை அமைத்த விஜய பாஸ்கர் ஒரு பேட்டியில் அடக்கமாக "folk music was the forerunner of all existing forms of music in the world" என்று இசையின் ஆதரமே நாடுப்புற இசையில் தொடங்குகின்றது எண்டு சொல்கின்றார் !
77 வயதில் 2002 இல் பெங்கலுரில் மார்அடைப்பால் திடீர் எண்டு இந்த உலகை விட்டுப் போனாலும் விஜய பாஸ்கர் இசை அமைத்த பல பாடல்கள் அவளவு இலகுவாக ரசிகர் மனங்களை விட்டுப்போக முடியாதவை!

Sunday, 22 November 2015

மங்களேஸ்வரி...முதல்ச் சண்டை

சிங்கம் எல்லா வேட்டையிலும் வெல்லாது அதுபோல ஒழுக்க சீலமாக  நல் நடத்தையோடு  வாழவேண்டும் என்று எழுதி வைத்த எல்லாமே எப்பவும் நடக்காது . அது வெறும் தியரி , அதை நடைமுறையில் எதிர்கொள்ளும் போது முன்னுக்கு வந்து விழும் வாழ்க்கை அனுபவம் என்பது பிரக்டிக்கல். ஆனாலும் ஒரு இடத்தில தொடர்ந்து ஒரே வேலையைச்  செய்வதுக்கு தியரியும், பிரக்டிகலும் பல சந்தர்பங்களில் ஒரே நேரத்தில் பாஸ் செய்யவேண்டியிருக்கும். 

                                                  அப்படி சொல்லிக்கொண்டுதான் மங்களேஸ்வரி அந்த இடத்துக்கு ஒரு கிழமை சோதனை மேற்பார்வைக்கு வந்தா. வந்து நல்லா அடிப்பெட்டியில் இருந்து அகப்பைக் காம்பு வரை சோதனை செய்து , அந்த ஒரு கிழமை முடிவில் என்னோட வேலைக்கு அவா எழுதிய  சோதனை மேற்பார்வை ரிப்போட் ஆப்பு வைச்சுது. அது நடக்கும் என்று மங்களேஸ்வரி வந்த முதல் நாளே அவா தலையை விரிச்சுப் போட்டு வேப்பிலை இல்லாத குறையாகப் பத்திரகாளி ஆட்டம் போட்ட போதே எனக்கு விளங்கியதால், நான் அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை .

                                                            முதலில் நான் வேலை செய்த அந்த  மயான அமைதியான  இடத்தையும் , ரெண்டாவதா அதில என்ன வெட்டுக் குத்து வேலை செய்தேன் என்பதையும், மங்களேஸ்வரி என்ற மங்கல்ஸ் யார் என்பதையும்..பிறகு  ,,பிறகென்ன  உங்களுக்கே வரிச்சு மட்டை வேலியைப் பிடிச்சுக்கொண்டு போன மாதிரி வாசித்துக்கொண்டு போக விளங்கும் ஏன் மங்களேஸ்வரி கோடாலி போட்டுப்  பனங்கொட்டுப் பிளந்தது போல  எனக்கு ஆப்பு வைச்சா எண்டு 

                                                 சில வருடம் முன்னர்  நோர்வேயில் ஓய்வூதியம் பெறும் வயதானவர்களுக்குப்  பகல் நேரம் மத்தியானச் சாப்பாட்டு கொடுத்து , பின் அவர்களை  வேறு சில உடட்பயிட்சியுடன் இயங்க வைக்கும் நிகழ்வுகள் நடத்தி , முக்கியமா அவர்கள் தங்களுக்குள் இளமையில் செய்த  எல்லா நல்ல செயல்களையும் நினைத்துச் சிரித்து, துன்ப நிகழ்வுகளில் துக்கித்து,  கதைத்துப் பேசி, கோப்பி குடிக்கும் " எல்டர் செண்டர் " என்ற  இடத்தில ஆரம்ப நிலை சமையல் குக் ஆக வேலை செய்தேன்

                                       அந்த இடம் வயதானவர்களின் கடைசிக்காலம் அதன் கடைசிப் பக்கத்தில் பிரியாவிடை எழுதும் நேரத்துக்காகக் காத்திருக்குமிடம். ரெண்டு கிழமைக்கு இடையில் ரெண்டு பேருக்கு அதே இடத்தில படம் வைச்சு மெழுகுதிரி ஏற்றுவார்கள். அந்த ரெண்டு பெரும் சில வாரம் முன் என்னோட கோப்பி குடிக்கும்போது வாழ்க்கை எவளவு அழகானது எண்டு கதைத்துக்கொண்டு இருந்திருப்பார்கள். மற்றவர்கள் அந்த மெழுகுதிரி வாசத்தில் அந்த ரெண்டு பேரின் நினைவுகளைப் பேசிக்கொண்டு தங்களுக்காக  மெழுகுதிரி ஏற்றி வைக்கும் நாளுக்காக மவுனமாகக் காத்திருப்பார்கள். 

                                                    இது வழமையா நடப்பதால் எனக்குச்  சாவு வெறுத்துப் போச்சு. யமன் பாசக் கயிறு எல்லாம் எறிஞ்சு என்னை பிடிச்சு இழுக்கத் தேவையில்லை நானே அதுக்குள்ளே விரும்பித் தலையைவிடத் தயாராக இருந்தேன். நானே நிறைய வாழ்வா அதில் சாவா  அல்லது சாவதுக்கு வாழ்வா எண்டு பார்க்க மதுபோதையின் விளிம்பு வரை போய் சித்திர குப்தனின் கணக்கு வழக்குமுடித்து  வைக்கும் வரவுப் பதிவு புத்தகத்தை தொட்டுப்பார்த்துப் போட்டுத் திரும்பி வந்துதான் அதில சிசிலியாவின் புண்ணியத்தில் வேலை கிடைத்து செய்தேன்.  

                                                        அந்த வேலை எனக்கு என்னோட பிரெண்ட் சிசிலியாதான் மினக்கெட்டு எடுத்து, தலையைப் போட்டுப் பிச்சு என்னை சிபார்சு செய்து ,அதில ஒரு வருடம் வேலை செய்ய வாய்ப்புத்  தந்தாள் . ஜெர்சிப் பசு  மாட்டில பால் கறந்து அதைக் காச்சி காராம்பசுவுக்குப் பருக்கிற  மாதிரி அலுப்பில்லாத வேலை. சில குறிப்பிட்ட உணவுகள், குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட கலோரி சக்கி உள்ளதாக சமைக்க வேண்டும், அங்கே சமையல் கொத்திப் பிரட்டி  ருசி இல்லாட்டியும் பரவாயில்லை ஆனால் அங்கே மெனு  எழுதியுள்ள புத்தகத்தில் உள்ள " சத்துணவுச்  சட்டப்படி " சமைக்க வேணும் ,சிம்பிளாச் சொன்னால் சிம்பிள் வேலை!

                                                                       மங்களேஸ்வரி இலங்கைத் தமிழ் பெண். யாழ்பாணத்தில செம்பாட்டு மண் உள்ள தோட்டக்காணிகள் உள்ள ஒரு இடதில பிறந்ததா சொன்னா, இடம் நினைவில்லை. நோர்வேயிட்கு என்பதுக்களின் ஆரம்பத்தில் போல்க்ஹைஸ் ஸ்கோல் என்ற நோர்வேகாரனின் குடிமக்கள் குடிசைக் கைத்தொழில் படிக்கும் பாடசாலைக்கு படிக்க வந்தவா, அதில படிச்சு,நோர்க்ஸ் மொழி படிச்சு , நடுத்தரப் பாடசாலையில் படிச்சு ,நோர்வே நெளிவு சுளிவு படிச்சு, யூனிவேர்சிட்டியில் சத்துணவு விஞ்ஞானத்தில் டிகிரி படிச்சு ,ஒஸ்லோ சுகாதார திணைக்களத்தில் வேலை செய்தா. அவளவு படிச்சதாலோ என்னவோ தெரியவில்லை  என்னைச்  செக் பண்ண வரும்போது கையோட ஆப்பு ரெண்டும் எடுத்துக்கொண்டு வந்தா.

                                                      தோற்றத்தில் குள்ளமாக என்னோட தோள் மூட்டுக்கு  நிக்கும் அவ்வாவோட நெற்றியில் ஒட்டி இருக்கும் சிவப்பு ஒட்டுப் பொட்டு. உடம்பு ஆட்டுக்கல்லுப் பிரமாணத்தில் ரெண்டு சுற்று ,அதிகம் நடந்தா மூச்சு காற்று கேட்டு வாங்கும். முகத்தில சந்தோசம் கலியாணம் கட்டின அடையாளம் , கடின உழைப்பால் ஜவ்வன ஜொலிப்பு கொஞ்சநாளில் விடை பெற்றுப் போன தடங்கள். படித்த நோர்வே பெண்கள் போல உடுப்பு. இலக்கண சுத்தமா  நோர்வே பாசை எழுதுவா, ஆனால் கதைக்கும் நோர்க்ஸ் மொழியில் இலக்கணம் இருக்கும் அதையும் மேவி மேற்படியான்  ஜெப்னா டமில்ஸ் இன் குறளிவித்தை இழுவையும்  இருக்கும், அது ஒரியினல் நோர்ஸ்கில் இல்லை. மற்றப்படி   சட்ட திட்டத்தில் மங்களேஸ்வரி கையில பிரம்பு இல்லாத கணக்கு டீச்சர். 
                                          

                                                      நான் அந்த இடத்தில வேலைக்கு சேர்ந்த முதல் மூன்று  மாதமும் பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளியமரத்தில் ஏறித்தான் ஆகவேண்டும் என்று  ஒழுங்கா வேலை செய்தேன், பிறகு அந்த வேலை அலுப்படிக்கத் தொடங்க சுத்து மாத்து செய்யத் தொடங்கிட்டன். இப்பிடியே கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர் போல ஜோசிச்சுக்கொண்டிருந்தா வாழ்கையில் முன்னேற ஏலாது எண்டுதான் அதைத் தொடங்கினேன் . நாலு சுவருக்குள்ள நடந்த  அது எல்லாம் எப்படியோ மேலிடத்துக்கு தெரிய வந்துள்ளது. நாலு சுவர் தாண்டி யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று தெரியாது, சுவரில பல்லி இருந்தால் அதையாவது கேட்கலாம் அதுவும் நோர்வேயில் இல்லையே .

                                                                      நான் என்ன திருகுதாளம் செய்தேன் என்று உங்களுக்கு சேர்ச்சில் பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது சொல்லுறதில ஒருவித மனப்பாரம் குறையும் எண்டு சொல்லுறாங்களே அதுபோல சொல்லுறேன். இல்லை முழங்காலில் இருந்துதான் சொல்ல வேண்டும் எண்டு சொன்னாலும் அப்படி இருந்தும் சொல்லுறேன். இதில வெட்கப்பட என்ன இருக்கு நான் செய்து முடிச்ச, முடிந்த விசியம் தானே . போகேக்கா  என்ன  அதையும் சேர்த்தா கொண்டு போகப்போறேன் இல்லையே, பிறகென்னதுக்கு பிடாரி அம்மன் கோவில் கிடாய் வெட்டுப்போல  மறைக்க வேண்டும்

                                                             எல்டர் சென்டரில் இன்ன இன்ன நாள் இன்ன இன்ன சாப்பாடுதான் செய்ய வேண்டும் என்று மெனு இருந்தது. நான் அதைத் திட்டமிட்டு அதிகம் கவனிப்பதில்லை. மெனுவில இல்லாத ,ஸ்ரீலங்கன் ,இண்டியன்,பாகிஸ்தானி, மெக்ஸ்சிகன், துருக்கி  சாப்பாடு எல்லாம் செய்வேன். வயதானவர்கள் அதன் பெயர் எல்லாம் கேட்டு ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். தலை வாழை இலையில பால்ப்பாயசம் ஊற்றி புறங்கையை  நக்கி வழிச்சு சாப்பிட்ட மாதிரி திருப்திகரமாக இருந்ததாலோ என்னவோ ஒரு நாளும் ஒரு குறையும் சொன்னதில்லை. 
                                        
                                            அவர்களே இந்தா அந்தா எண்டு இண்டைக்கோ நாளைக்கோ என்று  ஆணை விழுந்த அதர் அடியில ஆமடையன் பெண்டிலும் விழுந்த மாதிரி  சொல்லாமல் கொள்ளாமல் மேல போற ஆட்கள் தானே அதால அது அவர்களுக்கு அது போற வழிக்கு   ஒரு பெரிய பிரசினை இல்லை. பசித்த  வயிற்றுக்கு வயிறாற ஈஸ்ட்மென் கலரில் விருந்து படைத்தது மகிழ்ந்தேன் எண்டுதான் நான் நல்லகுருநாதன் போல நினைசுக்கொண்டிருந்தேன் . ஆனால் "  சத்துணவுச் சட்டப்படி " அதுவும்  பிழை   எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ் 

                                                      அந்த இடத்துக்கு சமைப்பதுக்கு வேற ஒரு பெரிய குசினி விநியோக மையத்தில் இருந்து ரெண்டு கிழமைக்கு ஒரு தடவை எல்லா உணவுப்பொருட்கள் ,சேர்மானங்கள் ,வேறு எல்லாக் குசினித் தேவைகளும் வரும் . முடிய முடிய முடிந்தவைகளின் லிஸ்ட் அனுப்ப மேலதிகமாகவும் வரும் . விலை அதிகமான மிகத் தரமான உணவுப்பொருட்கள் அவை என்பதுக்கு உத்தரவாதம் எப்பவுமே அதில இருக்கும். நோர்வே நாடு வயதான மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து சாவைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது போல இருக்கும் அவங்கள் அனுப்புற சாமான்களைப் பார்க்க, 

                                                     ஒவ்வொரு கிழமைக்கும் நாலு  சிகப்பு ,ரெண்டு வெள்ளை, என ஆறு வைன் போத்தல் ஒதுக்கப்பட்டிருக்கும். வைட் வைன் சோஸ்,ரெட் வைன் சோஸ் , ரெட் வைன் வேறு சில " பிரெஞ்ச்  ப்லேம்மே ஸ்டைல்  குசின் " எண்ட சமையலுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும். அதை முழுவதும் நான் சோஸ் செய்யப் பாவிப்பதில்லை, முக்கியமா " பிரெஞ்ச் ப்லேம்மேக்கு " ரெட் வைன்னுக்கு பதிலா வினாகிரியை உதறிவிட்டுபோட்டு, சோஸ் செய்யும் போது வாசத்துக்கு கொஞ்சம் மேலே தெளிச்சுப் போட்டு மிச்சப் போத்திலை கொஞ்சம் கொஞ்சமா குசினிக்க வைச்சே நான் உள்ளுக்க விட்டுருவேன் , அதுவும் " சத்துணவுச் சட்டப்படி " அது பிழை எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ்  

                                                              வெறும் வயித்தில வைன் சரிச்சு விட்டுக்கொண்டு இருந்தா ஈரல் குலை எரிஞ்சு குடல் அறுந்து விழும் எண்டு டாக்குத்தர்மார் சொல்லுறதால , அப்படி வைன் அடிக்கும்போது, குளிர்சாதனப்பெட்டியில் சமைக்க எண்டு வைச்சிருக்கும் விலையுயர்ந்த உருகுவே நாட்டு மேல் தோள்பட்டை மென்சவ்வு இறைச்சி எடுத்து மெல்லிய சூட்டில் வாட்டி அதுக்கு ,பச்சை மிளகாய் வெட்டிப் போட்டு " கேசெல்லோ பீப் சோஸ் " செய்து அதையும் சேர்த்துதான் சாப்பிடுவேன் ,நான் என்ன செய்ய  ஈரல் குலை அறுந்து விழும் எண்டு டாக்குத்தர்மார் சொல்லுறதாலதான் அப்படிச் செய்தேன். அதுவும் " சத்துணவுச் சட்டப்படி "  பிழையாம் எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ்,

                                                  அந்த இடத்தில நான் வேண்டுமென்றே கலர் கலரா சமைப்பேன். அதில ஒண்டும் பெரிய டெக்னிக் இல்லை, வழமையான சாப்பாட்டில், கேக் அடிக்கும் போது  ஐசிங் சுகருக்கு போடுற " எடிபிள் கலரிங் " கிடந்தால் மாறி மாறி அதில ஒவ்வொரு நாளுக்கு ஒரு கலர் எண்டு அள்ளிப்போட்டு விடுறது. அந்த வயதானவர்கள் அவர்கள் வாழ் நாளில் அப்படி ஒரு சாப்பாட்டை கண்டே இருக்காத மாதிரி ஆச்சரியாமா அதன் பெயர் எல்லாம் கேட்பார்கள். நான் அந்த நேரம் வாய்க்குள்ள வந்து தவறிவிழும்   என்னவோ ஒரு பெயரைச்சொல்லிபோட்டுப் போவேன் .அவர்கள் மேல சொர்க்க வாயிலுக்கால  போற நேரம் எதை மறந்தார்களோ இல்லையோ என்னோட கலர்  கலரான சாப்பாடுகளை அந்த நேரமும் மறக்க மாட்டார்கள், ஆனால் அதுவும்  " சத்துணவுச் சட்டப்படி " அது பிழையாம்  எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ்.   

                           நான் அந்த இடத்தில வேலை செய்த போது எப்பவுமே " தாமரைப் பூவுக்கும்  தண்ணிக்கும் என்றைக்கும் சண்டையே வந்ததில்லை, ...நாக்கில மூக்கையே தொட்டவன் நானடி ..." என்று ஒரு தமிழ் சினிமாப் பாட்டுப் பாடுவேன் . அதை சில நேரம் நான் எப்பவும் பாடுவதைக் கேட்ட அந்த வயதானவர்கள் சில நேரம் முதல் சில வரிகளைப் அவர்களும் சேர்ந்து பாடுவார்கள். மங்களேஸ்வரி சோதனைக்கு என்று வந்து நின்ற ரெண்டாவது நாளே அந்தப் பாட்டை படிக்க வேண்டாம் எண்டு சட்டம் போட்டா. அதைக் கேட்க தனக்கு அண்டம் குண்டமெல்லாம் பத்திக்கொண்டு வாற கோபம் வருகுது எண்டா  ,பிறகு " சத்துணவுச் சட்டப்படி  " அது பிழையாம்  எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ்.

                                       மங்களேஸ்வரி ஒரு கிழமை தான் பரிசோதனை மேற்பார்வைக்கு வந்தா என்று சொன்னேன் எல்லா, வந்த முதல் நாளே என்னை அவாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நான் நட்பாகப் கதைத்தேன்,. அவா என்னோட திருகுதாளாங்கள் பற்றி கேட்ட கேள்விக்கு நான் பொறுப்பில்லாமல் பதில் சொல்ல உலக்கையால தூக்கி அடிக்கிற மாதிரி முழிஞ்சு பார்த்தா.  ஆனால் நான் மயிரை விட்டான் சிங்கன் என்று பயப்பிடாம உண்மையச் சொன்னேன். வேண்டா வெறுப்பா எல்லாம் செக் செய்தா, வயதானவர்களிடம் என்னைப்பற்றிக் கேட்டா, ஸ்டோக் என்ற இருப்பு எல்லாம் செக் செய்தா, லொக் புக்கில் போட்ட  மெனு  எல்லாம் செக் பண்ணினா. 

                                                  ரெண்டாம் நாளே ரிப்போட் எழுதத் தொடங்கிட்டா, ஆனால் ரெண்டாம் நாளே முக்கிய சூரன்போர் சண்டை தொடங்கி ,முதல்த் தலை கோவில்  வடக்கு வாசலில் விழுந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. மங்களேஸ்வரி வந்த முதல் நாள்,  என்னோட நட்பான வயதானவர்கள் அவா யார், என்ன பெயர், எண்டு விசாரித்தார்கள். நான் அவா பெயர் நோர்க்ஸ்குகள் சொல்ல நீண்ட பெயராக இருப்பதால் பகிடியாக சுருக்கி                      

                         " மங்கல்ஸ் " 
                                   
              என்றும் , இன்னும் ஒரு பகிடியாக அவாவின் வேலையை 
                      
                      " குசினிக்கு தொற்று நீக்கி மருந்து அடிக்க வந்திருக்கிறா  " 

                     என்று சொல்லிக் கதையைப் பரப்பி விட்டேன் . 

                                நோர்வேயில் கள்ளனைப் பிடிக்க வாற பொலிஸ்காரனே அவனுக்குக் ஹலோ சொல்லி, அவனின் பெயர் சொல்லி கையைக் குலுக்கிப் போட்டுத்தான் கையை மடக்கி விலங்கு போடுவான். மங்களேஸ்வரி வந்த நேரத்தில் இருந்து சம்பிரதாய நடைமுறை அறிமுக வந்தன வணக்கங்கள் ஒன்றுமே சொல்லவில்லை. அந்த அறிமுகத்தையும்  நான் விரும்பி எதிர்பார்க்கவுமில்லை, என் பெயர் மற்ற விபரங்கள் பதிவுகளில் இருக்கும் .  

                                                          மங்களேஸ் ரெண்டாம் நாள் காலை வந்து வயதானவர்களுடன் கதைத்த போது பதறிப் போட்டா, கொஞ்சம் என்னோட நுளம்புத்திரிப் பிரச்சாரம் வேலை செய்திருக்கு ,நேரே குசினிக்கு வந்தா 

                              " எனக்குப் பெயர் திருமதி மங்களேஸ்வரி.........,,  மங்களேஸ்வரி ,,ஹ்ம்ம் ,, கங்காள அம்மனின்  பெயர்  தெரியுமா அது  ,

                                "  ஹ்ம்ம்  அது  தெரியுது "

                                   "  நல்ல அழகான அம்மன்  பெயர் அப்பா அம்மா வைச்சது ,,நீ போய் கிழடுகளுக்கு என்னக்கு என்ன ஒரு புதுப் பெயர் சொல்லிக் கொடுத்து இருக்கிறாய் ,,"

                                  " சும்மா  சொன்னேன்  மங்கல்ஸ் "

                                  " என்ன  சும்மா  இனி மங்கல்ஸ்  எண்டி  எண்டா  வாயில  பளார்  எண்டு  போடுவேன்  தெரியுமா  " 

                                    " வாயில  போடாதையுங்க..முதுகில  பளார்  என்டு  போடுங்க..நாரி உளையுது  அதாவது  எடுபடும்  " 

                                  "   பாத்தியா  நீ  என்னை  ஒரு  மேலதிகாரி  என்று  கொஞ்சம்தன்னும்  மதிக்கிறாய்  இல்லையே ,,உனக்கு  வாயில  என்னடா  சீலம்பாயா  சுதிக்கிடக்குது "

                                      "  எனக்கு  வாய் சரி  இல்லை  மங்கல்ஸ் ,  பால்குடியா  பிறந்த  நேரத்தில  இருந்து இப்பிடித்தான்  கதைப்பேன் என்று  எனோட  அம்மாவே  சொல்லுவா "

                                     " இதுதானா இங்க வேலை உனக்கு,,இதுக்கா நோர்வே அரசாங்கம் சம்பளம் தருகுது உனக்கு ,,சொல்லு,,பதில்  சொல்லு,,"

                                  "  என்ன பெயர் சொன்னார்கள் அவர்கள் "

                                  " என்ன பெயரோ ,,அந்தக் கிழடுகள் மண், கல் எண்டு என்னவோ உளறுதுகள் ,,நீ என்ன பெயர் எனக்கு எண்டு சொன்னனி அதை,,சொல்லு,,எனக்குப்  பதில் சொல்லு,,பதில்  இப்ப வேணும் , இப்ப இதுக்கே சட்டப்படி  நடவடிக்கை எடுக்கலாம் தெரியுமா "

                                      " மங்கல்ஸ் எண்டு சொன்னேன்,,அது உங்களுக்கு இளமையா ,,அழகா இருந்தது,,எனக்கும் அந்தப் பெயர் பிரெண்ட்லியா இருக்கு,,அப்படி  நான் கூப்பிடவா  உங்களை "

                                   " ஒ ,,பெயர் வைக்கிறதில பெரிய காளமேகப் புலவர் போல, என்னை அப்படிக் கூப்பிட  வேண்டாம் , மேடம் எண்டு கூப்பிடு அல்லது மங்களேஸ்வரி என்று கூப்பிடு , இல்லாட்டி வாயைப் பொத்திக்கொண்டிரு,  உனக்குத் தெரியுமா நான் சட்டப்படி உன் மேலதிகாரி "

                                     "   தெரியும் மங்கல்ஸ் "

                                   " அய்யோ பேந்தும்பார்..இவளவு சொல்லியும் உனக்கு மண்டைக்க ஏறுதில்லையே ,,ஆண்டவா என்னைக் காப்பாற்று "    

                                "  உங்க பெயர் நீண்டதா இருக்கு  அதை சுருக்கி மங்கல்ஸ் எண்டு வைச்சேன் அதுக்கு என்னவோ குடியிருந்த குடிசை தீப்பற்றின மாதிரி  இந்தக் குதி குதிக்குரின்களே மங்கல்ஸ்   "

                                "  அய்யோ கடவுளே  பேந்தும்பார், மங்கல்ஸ் ,,மங்க்ல்ஸ் ,மங்கல்ஸ் எண்டு சாகிறியே,,என்னை மேடம் எண்டு சொல்லு ,,உனக்கு ஒண்டும் குறைஞ்சு போகாது ,,உன்னட்ட என்ன கிடக்கு குறைஞ்சு போக ,,இனி   மேடம் எண்டு கூப்பிடு    "

                                       " நான் தானே உங்களை குசினிக்க மட்டும் அப்படிக் கூப்பிடுறேன் , இதில என்ன பெரிய பிரசினை, வயதானவர்கள் வேற என்ன சொன்னார்கள்,,உங்க வேலை என்ன எண்டு கேட்டார்களா மங்கல்ஸ் " 

                                  " அய்யோ கடவுளே  பேந்தும்பார், மங்கல்ஸ் ,,மங்க்ல்ஸ்..கிழடுகள் அதொண்டும் சொல்லவில்லை,,மண் கல் எண்டுதுகள்,,சரி நீ சொல்லுற மாதிரி மங்கல்ஸ் எண்டு ஸ்டைல்ல சொன்னாலும் பரவாயில்லையே ,,அதெல்லே கொதி வரப்பண்ணுது "

                                      " சரி விடுங்க ,,சிரிச்சிட்டுப் போங்க " 

                                   " ஹலோ,,மிஸ்டர் .N.....  நான் இங்க சிரிக்க வரவில்லை,,நீ என்னக்கு  சிரிப்புக் காட்டுறதுக்கு நோர்வே அரசாங்கம் உனக்கு சம்பளம் தரவில்ல,,அதை நினைவில் கொள்ளு ,,உன் அணுகுமுறை இதெல்லாம் சட்டப்படி பிழை தெரியுமா " 

                               " தெரியும் மங்கல்ஸ் ,,ஏன் காலைக்  கெந்திக்  கெந்தி நடகுரிங்க "

                        "  காலில  பித்த வெடிப்பு  இருக்கு "

                                          "   அதுக்கு  ஆமனக்கு  எண்ணையில் கடுகு வெந்தயம் தாளிச்சுப் போட்டு அதைப் போட்டு  உருவி விட்டா  நல்லா  இருக்கும்  "

                                              "    நீ அதெல்லாம்  செய்வியா "

                                    "  நாட்டு வைத்தியம் கொஞ்சம் தெரியும்  மங்கல்ஸ் "

                                  "  இதே  சாட்டில பெண்டுகளின் கால் கையைத் தடவுற  பிளான்  போட்டு வைச்சு இருக்கிறாய்  போல  "                   

                                   " தாமரைப் பூவுக்கும்  தண்ணிக்கும் என்றைக்கும் சண்டையே வந்ததில்லை, ...நாக்கில மூக்கையே தொட்டவன் நானடி ..."          

                                   "  ஹ்ம்ம்,,,இதென்ன  பாட்டு,,என்னை வைச்சு முசுப்பாத்தி போல,,,,நான் யார் தெரியுமா,,உனக்கு மேலதிகாரி,,,எனக்கே கொசப்பு பாட்டு பாடிக் காட்டுறாய் , அதுவும் எனக்கு முன்னாலேயே "

                                 " இல்லை,,இது ஒற்றுமையை வலியுறுத்தும் பாட்டு மங்கல்ஸ் "

                               " அய்யோ,,எனக்கு மண்டை வெடிக்குது, இனி மங்கல்ஸ் எண்டு சொன்னி எண்டால் ,,எனக்கு கோபம் வருமா எண்டு எனக்கே தெரியவில்லை,,ஆனால் கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு,,ஆனால் சிரிப்பன் எண்டு நினைக்காதை அது நடக்காது,,நான் உன்னோட மேலதிகாரி அதை நினைவில் வை     "

                                "  சரி ,,மங்கல்ஸ் "

                            " என்ன சரி ,,முதல் வாய்க்கு வாய் காட்டாதை, மேலதிகாரி சொல்லுறதைக் கேள், அது ஆம்பிளையோ,,பொம்பிளையோ  அது முக்கியமில்லை, ,நீயா நினைத்துக்கொண்டு எழுப்பம் விட்டு ஆடாதை  "             
                                    " இல்லை,,மங்கல்ஸ் ,இதில என்ன இருக்கு,நீங்க ஒரு கிழமைதானே இங்கே வேலை செய்து ரிப்போட் எழுதி கொடுக்கப் போறீங்க,,,அந்த ஒருகிழமையோடு நானும் நிட்ச்சயமா போயிருவேன்...மங்கல்ஸ் என்ற பெயர் ஒருகிழமை மட்டும் இருந்திட்டுப் போகட்டுமே " 

                               என்றேன். " அந்த ஒருகிழமையோடு நானும் நிட்ச்சயமா போயிருவேன்.."  இந்த வார்த்தையைக் கேட்ட போது மங்கல்ஸ் கொஞ்சம் இரக்கமா என்னைப் பார்த்தா.என்னதான் இருந்தாலும் அவா ஒரு தமிழ் பெண் தானே,கட்டாயம் இறுக்கம் இருந்தாலும் இரக்கமும் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். அதனால் மங்கல்ஸ் பிறகு பெயர் பற்றி ஒண்டும் சொல்லவில்லை . 

                                      முதல்ச் சண்டை இப்படி மெல்லவே தொடங்கினாலும்  மூன்றாம் நாள் தான் வாழை வெட்டுப்போல முக்கிய சண்டை குசினிக்க தொடங்கியது .கதை வடக்கன் மாடுகளை அவிட்டு விட்ட மாதிரியான  திசை வளத்தில்  போறதால் ,மிச்சத்தைப் பாகம் ரெண்டிலும்,மூன்றிலும் எழுதி ஒரு முடிவு காணுறேன் ...  ஓகே யா ?
.
.

Ore Naal Unai Naan Acoustic Guitar Cover



திருமணம் முடித்து சில நாட்களில் கணவனைப் பிரிந்துவிட்ட ஒரு இளம்பெண்ணின் தவிப்பு ஒரேயொரு நாள் தன் மிக நெருங்கிய நண்பியின் காதலனுடன் விரகதாபமாகி ஏதேச்சையாக நடந்த உடலுறவில் அந்தப் பெண்ணின் வாழ்க்கை எப்படி திசைமாறி சீரழிகிறது என்பதை ஒரு சினிமாப் படமாக இல்லாமல் வாழ்க்கைப் பாடமாகத் திரையில் பதிந்துவிட்ட திரைப்படம் இயக்குனர் ஸ்ரீதர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய " இளமை ஊஞ்சல் ஆடுகிறது ".

.

இசைஞானி இளையராஜா இசையமைத்த பஹடி என்ற மலைகளின் ராணி என்று சொல்லப்படும் ஹிந்துஸ்தானி ராகத்தின் சுரங்கள் அதிகமுள்ள பாடல். டாக்டர் எஸ் பி பாலசுப்பிரமணியமும்,வாணி ஜெயராம் அம்மாவும் பாடிய ஒரு டுயட் காதல் ரொமாண்டிக் பாடல்.

.

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது ஒரு அமர்களமான இளமைக் கவிஞ்சர் வாலியின் காதல் வரிகள் உள்ள பாடல், நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன் கற்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம் மழை நீ, நிலம் நான் தயக்கமென்ன,,இதைவிட ஒரு கற்பனை யாருக்கு வரும்.

.

இந்தப் படத்தில் இரண்டு ஹீரோ, இரண்டு ஹீரோயின், கதை இந்த நாலுபேரையுன் தான் சுற்றி கொஞ்சமும் விலகாமல் நடக்கும். இந்தப் படத்தில் உள்ள ஒரு முக்கிய விசியம் ஒரு ஹீரோ எப்பவுமே புக்கு புக்கு என்று சிகரெட் ஊதித்தள்ள மற்ற ஹீரோ எப்பவுமே சுவிங்கம் சாப்பிடுவார்,டைரக்டர் ஸ்ரீதர் அவரும் ஒரு செயின் சுமோக்கர் என்று சொல்லுறார்கள்.

.

இந்தப் பாடல் ரேடியோவில் ஒலிபரப்புவது போலத் தொடங்கும், " இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தில் கவிஞ்சர் வாலி எழுதிய பாடலுக்கு இசை இளையராஜா இசை என்று அந்தப் படத்திலேயே புதுமையாக அப்படி சேர்த்து வைத்தார் இயக்குனர் ஸ்ரீதர் .அதைவிட இந்தப்படம் ஒரு திரைப்படம் எப்படி எடுக்கவேண்டும் என்று பாடம் சொல்லிக்கொடுக்கும் படம்.

.

முக்கியமா இந்தக் கரோக்கி பிண்ணனி ஒரியினல் பாடல் போல முழுவதும் இல்லை. அதுக்குக் காரணம் ஒரிஜினல் பாடல் G Major என்ற ஸ்கேல்ல இருக்கு. இந்தக் கரோக்கி F#m என்ற ஸ்கேல்ல இருக்கு. வேற வழியில்லாமல் நண்பர் பிரிஸ்டோ அய்யர் பின்னணி இசை வாசித்த F#m ஸ்கேல் இல் வாசித்துள்ளேன். இப்படிக் குழப்பங்கள் நிறைய கரோக்கி பிண்ணணியில் பாடல் வாசிக்கும் போது ஏற்படும்.

.

அதனால் தாழ்மையுடன் சொல்லுகிறேன், இதை முழுவதும் ஒரிஜினல் பாடல் என்று நினைத்து யாரும் கிட்டாரில் வாசிக்கப் பழக வேண்டாம். ஒரு 80 வீதம் ஒரியினல் பாடல் போல இருக்கும். இன்றைய ஞாயிறு விடுமுறையில் ஓய்வாக வீட்டிலிருந்து கொண்டு காலைக் கையை இளமைக் காலத்தில் ஊஞ்சல் போல ஆட்டிக்கொண்டு கேட்கக் கொடுத்துவைத்தவர்கள் கேளுங்க.

.