Thursday, 12 November 2015

ஓடிட்டர்

நம் வாழ்வில் கடந்து போன மனிதர்கள் சில நேரம் ஒரு காலத்தின் முழுமையான புரிதலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களை சாதாரணமானவர்கள் அல்லது அசாதாரணமானவர்கள்   என அவ்வளவு சுலபமாக அட்டவணைப்படுத்திவிட முடியாது. அதிலும்  ஈகோ என்னும் தற்பெருமைக்  குணம் ஆழமானது, புதிரானது. அதை முற்றிலும் புரிந்துகொள்ள நிச்சயமாக  முடியாது.  ஏன், சில நேரங்களில் அந்த மனிதர்களுக்கே  அது போட்டு சிப்பிலி ஆட்டுவதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை !

                                        ஓடிட்டர் வீடு  விளாத்தியடி ஒழுங்கையின் முகப்பில் இருந்த வெளிப் படலையோடு அரிநெல்லி மரம் சாஞ்சுகொண்டு நின்ற கல் வீடு. அதன் நீண்ட பின்வளவு வீராளி அம்மன் கோவில் பின் வீதியில் முடியும் .எங்கள் ஊரில் இருந்த முக்கியமான பரம்பரையாகப் படித்த வீடு என்று அதை சொல்லலாம் . அதில வசித்த ஓடிட்டர்  அவரும் படித்த ஒரு முக்கியமான ஆள். காரணம் அவர்  வாயத் திறந்தால் சேக்ஸ்பியர் வீட்டுக் கோடிக்கால ஓடிவந்த இலக்கண சுத்தமான ஆங்கிலம்  சட சட எண்டு வெள்ளாவி பிடிக்கிற கிடாரத்தைச்  சரிச்சு விட்ட மாதிரி விழும்.  


                                       ஒரு உதாரணம் சொல்லுறேன். ஒரு நாள் பகல் அவர் வீட்டுப் படலைக்க ,சைக்கிளில் பின்னுக்குப் பெட்டி கட்டி அதில மீன் கொண்டு திரிஞ்சு விக்கிற ,மீன்காரன் வந்து


                                "  அக்கோய்,,அக்கோய்  இண்டைக்கு அறுக்குளா துண்டு இருக்கு அக்கோய்,,செம்பாட்டுக் கொய்யும்,,,சின்னத் திரளியும்  இருக்கு அக்கோய்,,சொதிக்குக் கணவாய் இருக்கு அக்கோய்,,கருங்காலி நண்டும்  இருக்கணை  அக்கோய்  "


                                          எண்டு கையில வைச்சிருந்த ரபர்ப் பந்து  ஹோர்ன் அடிச்சுக் கத்திக்கொண்டு இருந்திருக்கிறான். ஓடிடர் மனைவி கட்டுக் கிணத்தடியில் குளிச்சுக்கொண்டு நிண்டு இருக்கிறா 


                                 "  இஞ்சேருங்கோ ,,அவனிட்ட என்ன இருக்கு எண்டு கொஞ்சம் பாருங்கோ ,,நான் குறுக்குக்  கட்டோட நிக்குறேன்,நாலுவாளி தலைக்கு ஊத்திப் போட்டு ,டக்கெண்டு  உடுப்பை மாத்திக்கொண்டு ஓடி வாறன்,,ஒருகாப் போய்ப் பாருங்கோ ,,அவன் அங்கால போயிடுவான் "


                                       "ஐ சே ஐ ஆம்  பிஸி வித் ரீடிங்,  அவனோட நான் போய் மல்லுக்காட்ட ஏலாது ,,நீர் போய் வேண்டும், எனக்கு இங்க அரியண்டம் தரவேண்டாம் நான் இப்ப முக்கியமான ஆர்டிகள்  வாசிச்சுகொண்டு இருக்கிறான் , திஸ் இஸ் ரியலி நோன்செசென்ஸ் "


                                    "  ஒருகாப் போய்ப் பாருங்கோ ,,அவன் அங்கால போயிடுவான்..அவன் வேதக்காரன்   நாளைக்கு ஞாய்ற்றுக் கிழமை வரமாட்டான் ,,டக்கெண்டு  எட்டி  ஒருகாப் போய்ப் பாருங்கோ ,,அவன் அங்கால போயிடுவான் "


                                 "  திஸ் இஸ் ரியலி நோன்சென்ஸ்,, ஹோவ் மெனி டைம்ஸ் ஐ டோல்ட் யூ டோன்ட் டிஸ்ட்ரப் மீ வென் ஐ ரீடிங் நியூஸ் பேப்பர் "


                             "  அவன் போயிடுவான் ,,நான் டக்கெண்டு பாவாடைக்கு மேல சீலையைச் சுத்திக்கொண்டு வாறன் ..சுருக்கெண்டு எட்டிப் பாருங்கோ "


                                     வெறும் உடம்பில சாரம் மட்டும் கட்டிக்கொண்டு சாய்மனைக் கதிரையில் இருந்து  " டெய்லி நியூஸ் "   ஆங்கிலப் பத்திரிக்கையில் " எடிட்டோரியல் "  வாசித்துக்கொண்டிருந்த ஓடிட்டர் ,மேலுக்கு ஒரு அயன் செய்த சேட்டை தூக்கிப் போட்டு, சண்டுல்ஸ் தோல் செருப்பைக் கொழுவிக்கொண்டு, வூடி அலன் போல அவர் போடுற  அரைவட்டக் கண்ணாடியை  போட்டு, நிலைக் கண்ணாடியில் நிண்டு தலையில  சீப்பால இந்தா அந்தா எண்டு இருந்த  நாலு மயிரை இழுத்து நடுமண்டையை மறைச்சு  போட்டு, மணிக்கட்டில  மணிக்கூட்டைக் கொழுவி அமதிக்கொண்டு , வேண்டா வெறுப்பாகப்  படலை வாசலுக்கு அவனிட்டப் போக ,அவன் 


                       " அய்யா ,,அறுக்குளா துண்டு இருக்கு ,,தலைத் துண்டு ,,அம்மா எப்பவும் வேண்டுவா ஒரு கண்டம் வெட்டவே ,,புளிக்குழம்பு வைக்க நாலு வீட்டுக்கு சுண்டி இழுக்கும் ஐயா "


                         " வட், வட் டு யூ  மீன் "


                       " அய்யா..அதுதானே சொல்லுறன் அறுக்குளா மீன் எண்டு "


                      " ஐசே  ஐ டோல்கிங் வித் யூ இன் இங்கிலிஸ் , வட் டு யூ  மீன்"  


                        " அய்யா..அதுதானே சொல்லுறன் அறுக்குளா மீன் எண்டு அம்மா வீட்டில இல்லையோ."


                        " யூ ஸ்டுபிட் இடியட் ,   ஐசே  ஐ டோல்கிங் வித் யூ இன் இங்கிலிஸ் ,,வட் டு யூ  மீன் "

                           " வேற என்ன மீன் இருக்கோ எண்டு கேட்குரின்களோ ..பாரை மீன்  ,,கொய் ,,திரளி எல்லாம் இருக்கு ,,எங்க அம்மாவிண்ட சத்தத்தைக் கானேல்லயே  ,,அவா இவளவு கேள்வி கேட்க மாட்டாவே  நான் சொல்லுற மீனைக் கேள்வி இல்லாமல் வேண்டுவாவே "

                        " யூ,,  அன்எடிகேட்டட்  ஸ்டுபிட் , திஸ் இஸ் ரியலி நோன்சென்ஸ் , ஐ டோல்கிங் வித் யூ இன் இங்கிலிஸ் ,,வட் டு யூ  மீன் "     

                             "  அய்யோ,இண்டைக்கு மீன்காரன் மாட்டிட்டான் போலக் கிடக்கே ,இதென்ன சீவியம்  இந்த மனுஷனுக்கு ஆர் எவர் எண்டில்லாமல் வாறவன் எல்லாரோடையும் இங்கிலிலீசில பினாத்திறதே வேலையாப் போட்டுதே "  

                                      என்று சொல்லிக்கொண்டு  நல்ல காலம் இதுக்குள்ள அவரோட மனைவி வந்திட்டா. 

                                  அவர்கள் வீட்டுக்கு தேங்காய் பிடுங்க நட்சத்திரம் என்ற மனுஷன் வந்தாலும்  ஓடிட்டர்  இப்படிதான் கதைப்பார். ஓடிட்டர்  வீட்டுக்க நிக்கிறதை நட்சத்திரம் கண்டால்  படலைக்க நிண்டு கொண்டு  "  தேங்காய் புடுங்க வேண்டுமா " எண்டு கேட்க மாட்டார்  ,அவர்  ஒரு விதமான அமரிகன் இங்கிலிஸ் கதைக்கிறன் பேர்வழி எண்டு 


                                     "   சேர் தேங்காஸ்  புங்காஸ்  .  மேடம் கோக்கனட் மரத்தில    தேங்காஸ்  புங்காஸ் ....அய்யா கோக்கனட்  மரம்  கிளைமிங்  பிறகு வட்டுக்குஸ் இருந்து  தேங்காஸ்  புங்காஸ்  ,,அம்மா தேங்காஸ்  புங்காஸ் கோக்கனட் மரம் க்ளைமிங்    "


                                       எண்டு ஒரு புதுவிதமான நெளிப்புக் காட்டுவார் .  ஓடிட்டர் பொஞ்சாதிக்கு ஏன் நட்சத்திரம் அப்படி கேட்குது என்று தெரியும். 


                                    "  ஹஹஹஹா  அய்யோ,,இந்த வீட்டுக்க நாள் முழுதும் நான் கிடந்தது இங்க நடக்குற கூத்துக்கு  சிரிச்சு சிரிச்சு அடிவயிறு நோகுது  இதுக்குள்ள நீயும்  வந்து என்ன சீலம்பாய்க்குச்  சிரிப்புக் காட்டுறாய் .." 


                               என்று  அவா வஞ்சகம் இல்லாமல் சிரிப்பா. 


                                      ஓடிட்டர் பென்சன் எடுக்க யாழ்ப்பாணம் டவுனுக்கு தான் பேங்க்க்குப் போக வேண்டும். பொஞ்சாதியையும் கூட்டிக்கொண்டு போவார். அவர்கள் பஸ் எடுக்கிறது எங்களின் வீராளி அம்மன் கோவிலுக்கு அருகில் அம்மன் கிளை சங்கக்கடைக்கு பக்கத்தில இருந்த பஸ் தரிப்பிடத்தில இருந்து. அதில  " ஹோல்டிங் பிளேஸ் " என்று ஆங்கிலத்திலையும்  , தமிழில பஸ் தரிப்பிடம் என்றும்,சிங்களத்திலையும் எழுதிய  ஒரு சின்ன தகர போட் லைட் போஸ்ட்டில கட்டி இருக்கும் .


                                    சில நேரம் மினிபஸ்காரன் லைனுக்கு டேர்ன் பிடிக்கிற கெதியில கொஞ்சம் அவசரத்தில அந்த போட்டுக்கு கொஞ்சம் முன்னால, அல்லது பின்னால நிற்பாட்டி ஆட்களை ஏத்தி அடைவான். ஓடிட்டருக்கு பஸ் ஹோல்டிங் பிளேஸ் என்ற போட்டுக்கு சரியா குத்தி பிரேக் அடிச்சு நேர நிக்கவேணும் , இல்லாட்டி உள்ளுக்க ஏறின உடன , இடிச்சுக்கொண்டு முன்னுக்கு போய் டிரைவரிட்ட 


                                "   ஐசே,,டூ யூ நோ வட் இஸ் த மீனிங் போர் ஹோல்டிங் பிளேஸ் "


                            எண்டு கேப்பார்,,அவன் பயந்துபோய் அவசரத்தில கியரைப் போட்டு எடுக்கிறதா ,அச்சிலேடரில் வைச்ச காலை அமத்துறதா ,பிறேக்கில வைச்ச காலை மிதிக்கிறதா என்று அமளி துமளியில் இந்தாள் என்ன சொல்லுது எண்டு முழிப்பான் 


                            "   ஐசே, ஐ ஆஸ்கிங் யூ,,கிவ் மி த ஆன்சர்,,,டூ யூ நோ வட் இஸ் த மீனிங் போர் ஹோல்டிங் பிளேஸ் ,,அண்ட் டூ யூ நோ வை தேர் இஸ் எ சைன் போட் விச்  ரிட்டின் இன் இங்கிலிஸ் ஆஸ் ஹோல்டிங் பிளேஸ் "


                             "அய்யோ அவனை விடுங்கப்பா,,அவனுக்கு எங்க இங்கிலிஸ் விளங்கப்போகுது,, இப்ப அவனுக்கு கோபம் வர எங்களை இறக்கி நடக்க வைக்கப் போறான், பிறகு நாங்க போறநேரம் பேங்க் பூட்டிப் போடுவாங்கள் , பேசாம வந்து இருங்கோ ..என்ன சிப்பிலயாட்டமடா ஆடுது இந்த மனுஷன் பஸ்சுக்குள்ள ,,இதில நான் இருந்த சீட்டில இருங்கோ "


                                      என்று அவரைப் பிடிச்சு இழுத்துக்கொண்டு வந்து அவா  சீட்டில் இருத்திப் போடுவா, பிறகு அவா பக்கத்தில நிண்டுகொண்டு டவுனுக்குப் போவா 


                                    இப்படியான ஒருவரிடம் தான் நான் ஆங்கிலம் படிச்சேன். அதை நினைக்க எனக்கே குந்தின இடமெல்லாம் சிந்தின மூக்குப் போல நினைவுகள் ஓடுது , அப்ப  படிச்ச நேரம் நடந்த சம்பவங்களை மறக்காமல் இப்ப எழுத வைப்பதே அந்த மனிதரின் விசித்திரமான அணுகுமுறைதான் .

                                      ஆங்கிலம் என்ற அந்த அடிமைமொழி,  அதைப் படித்த  மனிதர்களை  உலகத்தைப் படித்த மேன் மக்கள்  என்ற அடையாளம் போல இருந்த எங்களின் ஊரில், ஓடிட்டர்  அரசாங்கத்தில் ஓடிட்டர்  என்ற கணக்காய்வாளர் வேலை செய்து ஓய்வுபெற்ற கிளாஸ் வன் கவன்மென்ட் செர்வென்ட். அவரை கிளாஸ் வன் கவன்மென்ட் செர்வென்ட். என்று சொல்லாமல் ஓய்வுபெற்ற அரசாங்க சேவை ஊழியர் என்று சொன்னாலே அவரோட பெறுமதி இறங்கிப்போய்விடும்.  

                            காலையில் இருந்து இரவுவரை  வீட்டை கழுவித் துடைத்து ஆக்கிப் பெருக்கிச்  சமைத்துப் போட்டு ரெண்டுகாலில் இறக்கை கட்டி ஓடி ஓடி  இயக்கிக்கொண்டிருந்த அவர்   மனைவியோடு தனியா வசித்தார் அந்த வீட்டில். அவர் மனைவியை பரிபூரணம் அக்கா என்று என் அம்மா வயதுப் பெண்கள் சொல்லுவார்கள்.  பரிபூரணம் அக்காவுக்கு எடிக்கேசன் பின்னணி இல்லை.முக்கியா அவா கணவர் ஓடிட்டர் கதைக்கிற இங்கிலிஸ் விளங்கப் படிப்பறிவு இல்லை. ஆனால் புருஷனை நல்லாப் படிச்சு வைச்சு இருக்கிறா.  

                              அவருக்கு மூன்று பிள்ளைகள் . மூன்றும் ஆம்பிளைப் பிள்ளைகள் , ஒருத்தன் ரேடியோலோயிஸ்ட்  ஸ்பெசலிஸ்ட் டொக்டர். ஒருத்தன் மரைன் என்யினியர் ,ஒருத்தன் சாட்டட் எக்கவுண்டன். ஏறக்குறைய யாழ்பாணதில் எல்லாருக்குமே இதுதான் தங்களின் பிள்ளைகள் மீதான எதிர்காலக் கவுரவக் கனவு . ஓடிட்டர் அரசாங்க உத்தியோகம் பார்த்ததால் இடஞ்சல் இல்லாமல் பிள்ளைகளை படிக்க வைத்தார். அவங்களும் படிப்பில வரிப்புலி .அதால சொல்லிவச்ச மாதிரி அவர் சொன்ன பாதையில் பட்டதாரிகள் ஆனார்கள். ஆகின கையோடு கலியாணம் கட்டி , வெளிநாட்டுக்கு போட்டாங்கள் 


                                அந்த நாட்களில்  பாடசாலையை  அண்டிபார் பூச்சி மருந்து குடிச்ச மாதிரி வெறுத்துக்கொண்டும்,  அதில கெந்திக் கெந்தி  அரும்பட்டில வகுப்புக்கள் தாண்டி  படித்துக்கொண்டிருந்த  வயதில் அவரிடம்தான் நான் தனிப்பட பாடசாலை முடிந்தபின் ஆங்கிலம் படித்தேன். பின்னேரங்களில் அவரிடம் ஆங்கிலத்தைக் கண்டு பிடிச்சவனைத் திட்டித் திட்டிக் கொண்டுதான்   போவது. ஆங்கிலம் எனக்குப் பிடிக்காத  கனவிலையும் கழுசான்  கழண்டு விழவைத்து ஓட ஓடத் திரத்திற  பாடம், அதை வேறுவழி இல்லாமலும் , அம்மாவின் ஆக்கினையால்  ஓடிட்டர் இடம் போய்ப் படித்தேன். 


                                   ஓடிட்டர் எங்கள் ஊரைச்சேர்ந்தவர் இல்லை. அவர் மனைவி தான் தலைமுறைகளாக  டிஸ்ட்ரிக் ஜட்ச் ராஜரட்னம் என்ற நீதிபதிக் குடும்பத்தைச்  சேர்ந்த எங்கள் ஊர் அடி.  ஓடிட்டர் பருத்தித்துறைப் பக்கம் உள்ள ஒரு கிராமத்தில்  உள்ள ஒரு சின்ன  இடத்தைச் சேர்ந்தவர். வல்லிபுரப்பரியாரியின் பரம்பரையில் வந்தவர் .அதைவிட  இலங்கையிலேயே அறிவுக்குப் புகழ்பெற்ற ஹார்ட்லி கொலிச் இல புகழ்பெற்ற ஆசிரியர் பூரணம்பிள்ளையோடு ஒரே வகுப்பில்  படித்தவர்  என்று சொல்லுவார். அதையும் ஆங்கிலத்தில்தான் சொல்லுவார்.


                                   அவசரகாலச் சட்டம் போட்டால் நாடு எப்படி இருக்குமோ அதுபோலதான் அவர் வீடும் இருக்கும். இங்கிலிஸ் அவர் வீட்டில உலவும் காற்றிலும் இருந்தது. " டீசென்ட் டிசிப்பிளின்  " கண்டிப்பில் அங்கால இங்கால யாரும் அசைய முடியாது. அவர் மனைவி ஒரு அப்பாவி . அவாவின் ஆங்கில அறிவு எனக்கு அந்தநேரம் இருந்த அளவுதான் எண்டு நினைக்கிறேன். ஆனாலும் ஒரு மனைவியாக, ஒரு அம்மாவாக  வாழ்வதுக்கு,பிள்ளைகளை அன்போடு  பண்பு சொல்லி வளர்க  ஒரு அந்நிய மொழி தேவை இல்லையே என்பது போல வெற்றிகரமாக வாழ்ந்துகொண்டிருந்து பெண்மணி.


                                    ஓடிட்டர் எனக்குப் பாடசாலைப் பாடத்திட்டத்தில் இருந்த பாடப் புத்தகத்தை வைத்து சொல்லித்தரமாட்டார். அவருக்கு என்ன அந்த நேரம் தோன்றுதோ அதை சொல்லித்தருவார், இலக்கணம் ,இலக்கியம் என்று அது ஒரு இலக்கிலாமல் போகும். சிலநேரம் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையில் வரும் கட்டுரைகள் வாசிக்க தருவார். ஆனால் ஆங்கிலம் மட்டும் தங்கப் பவுன் போல மிகத் தரமா இருக்கும் . அதெப்படி அதன் தரம் எனக்கு விளங்கியதென்றால் அவர் சொல்லுறதுகள் ஒண்டுமே உடன விளங்காது. அதை வைச்சுதான் தரம் என்டுறேன்.


                                " டேய் , இண்டைக்கு இடியம் அண்ட் ப்றேசஸ் வேர்ட்ஸ் சொல்லிதாரன்,, "


                                  "  சரி  சேர் "

                                   " காதை அங்க இங்க விடாமல் வடிவாக் கேள் இதுதான் ஆங்கில மொழியின்  புலமைத்துவ அழகு, அதன் நுனி நாக்கு  நளினம்.."

                                    " ஓம்  ஓம்  சேர் "

                             "  இதை மட்டும் அப்பப்ப கதைக்கிற  நாலு வார்த்தைகளுக்கு நடுவில தட்டி விட்டா அந்த உரையாடல் நீயும் படிச்சவன் எண்டு நாலுபேர் நினைக்கிற மாதிரி  ப்ளையிங்க்ஸ் கலர்ஸ் இல பறக்கும்.. "

                              "  ரைட்  சேர் "

                              " எங்க உனக்கு தெரிஞ்ச ஒரு இடியம் சொல்லு பார்ப்பம்.."

                 " எனக்கு  அந்த இடியப்பமும் பிரஸ்சும் தெரியாது  சேர் "

                        "  என்னடா  சொல்லுறாய் ,,அதுக்குப்  பெயர் இடியம் அண்ட் ப்றேசஸ் வேர்ட்ஸ் "

                                       "  அதுதான்  எனக்கு  இண்டைவரை  ஒண்டுமே தெரியாது "

                                         "  சரி நான் சொல்லுறன்  To hit the nail on the head   என்று ஒரு வசனம் இருக்கு, அதுக்கு என்ன மறைபொருள் அர்த்தம் சொல்லு பார்ப்பம் ,,,  "  

                              " நடு மண்டையில் கறல் ஆணியை வைச்சு அடிச்ச மாதிரி  " 


                           " டேய்..இப்ப இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் , ,ஒழுங்கா பதில் சொல்லு, எனக்கு விசர் வரப் பண்ணாதை " 


                                "To hit the nail on the head..  நடு மண்டையில் கறல் ஆணியை வைச்சு அடிச்ச மாதிரி  " 


                                 "   டேய் இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் , அப்படி இல்லையடா ,,அதுக்கு விளக்கம்  டு டிஸ்க்ரைப் எக்ஸ்ச்சாட்லி வட்  ஸ்  கேசிங் எ சிட்டுவேசன் ஓர்  ப்ரோப்பிளம் "

                                
                                          அதைக் கேட்டவுடன எனக்கு உண்மையாவே  என்னோட  நடு மண்டையில்  கறல் ஆணியை வைச்சு அடிச்ச மாதிரி இருக்கும், அதுக்குப் பிறகு  விளக்கம் கேட்பார் நானும் அது இது  என்று வேற என்னவோ அர்த்தம் சொல்லுவேன் ,

                               " டேய் கேள்விக்கு பதில் மட்டும் சொல்லு, ஜஸ்ட் ஆன்சர் த குவஸ்டியன் புரோப்பர் வே,,தட்ஸ் ஒல்..நீ  அது,,இது  ஆத்தேண்ட   சீலைக்க  மயிலிறகு  எண்டு என்னடா  சடையிராய்,,,இங்கிலிஸ் நீ நினைக்கிற மாதிரி சும்மா லேசுப்பட்ட லான்குவேச் இல்லை..சறுக்கினா சங்கு ஊதிப்  பால் ஊத்திப்போடும் "


                                               இப்பிடித்தான் அவர் பாடம் தொடக்குவார். பிறகு எல்லாத்துக்கும் நான் இங்கிலிசில் சொல்ல வேண்டும் விளக்கம், படக்கு படக்கு என்று சுளகு அடிச்ச மாதிரி அவர்  " இடியம் அண்ட் ப்றேசஸ் வேர்ட்ஸ்  " வைச்சு வசனங்கள் சொல்லுவார் . நான் பின் தொடர முடியாமல் தடுமாறுவேன்.


                               அவரோட ஆங்கில இலக்கிய அறிவு அட்லாண்டிக் சமுத்திரம் போல, நிறைய மத்தியகால ஆங்கிலக் கவிஞ்சர்கள் ,எழுத்தாளர் ,நாவல்,சிறுகதை,நாடகம் ,புனைகதை  என்று ஆங்கிலத்தில் தொடக்கினால் சைவக் கோவிலில் கந்தபுராணம் ஒருவர் படிக்க மற்றவர் பொருள் சொல்லுற புராணபடிணம் போல அவரே தனக்குள்ளே சொல்லி ரசித்து ரசித்து விளாசுவார்.  அவர் சொல்லும்போது முடிவில்லாத அறிவின் பிரகாச ஒளி அவர் முகத்தில் தேம்ஸ் நதிபோலப் பாயும் . 


                           அவரோட  கிராமர் எப்பவுமே வெள்ளிகிழமை போல சுத்தம். ஆனால் ஒருவித  வெத்திலை போட்ட வாய்போல உச்சரிப்பில்  கதைப்பது சிலநேரம் குழப்பமா இருக்கும் .அதைத்தான்  உண்மையான ஆங்கிலம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் அவரிடம் படித்த  நாட்களில்,ஆனால் சில வருடங்களின் பின் அவர் உச்சரிப்பு யாழ்ப்பாணப் பனங்காய்ப் பணியாரத்   தமிழ் உச்சரிப்பில் ஆங்கிலத்தை உச்சரித்தார் என்று களவா " அடல்ஸ் ஒன்லி " இங்கிலிஸ் படங்கள் ரீகல் தியேட்டரில் பார்க்கக் கிடைத்த போதுதான் அறிய முடிந்தது.  


                                   ஆனால் எனக்கு அவர்  படிப்பிக்கிற ஸ்டைலே வித்தியாசம். அவர்கள் வீட்டு ஹோலில் ஒரு பிரம்புப் பின்னல் கதிரை இருந்தது, அதில இருந்துகொண்டு முன்னுக்கு ஒரு பலகையைக் குறுக்க வைச்சு அதில கொப்பி புத்தகம் வைச்சு எழுத வேண்டும், அந்தப் பலகை அவரோட பிள்ளைகள் வைச்சுப் படிச்சு பலகை. ஓடிட்டர்  ஹோலின் தொங்கலில் இருந்த பெரிய மகோஹனி மேசையில ஏறி ஒருகாலைத் தொங்க விட்டு,மறுகாலை தொங்கவிட்ட காலின் துடையில் தூக்கிப்போட்டு ரமண மகரிசி போல இருப்பார்.


                                  மேசைக்குப் பக்கத்தில பர்மாத் தேக்கில செய்த கைதடி வைச்சு இருப்பார்.  அதை அவர் நடக்கும் போது சிலநேரம் கொண்டு திரிவார் ,அவர் நடக்கிறதும் அளந்துதான் அதிலயும் கணக்கு வழக்குதான். .கைத்தடியை இங்கிலிசில் எப்பவும் வாக்கிங் ஸ்டிக் எண்டுதான் சொல்லுவார், அடிக்கடி அதைத் தடவி தடவிப்  பார்ப்பார், அதுக்கு கைப்பிடிக்கும் வளைவில் பித்தளைப் பூன் போட்டு இருந்தது. அவர் கேட்கிற கேள்விக்கு நான் ஏதும் பிழையா சொன்னால் கப்பூரம் பத்த வைச்ச மாதிரி அந்தாளுக்கு கோபம் வரும் ,உடன 


                              " டேய்..இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் ,ஒழுங்கா பதில் சொல்லு , இல்லாட்டி இங்க இருந்து என்னோட நேரத்தையும் உன்னோடு நேரத்தையும் வினாக்க தேவை இல்லை,,சொல்லிப்போட்டன் ..ஒழுங்கா பதிலை சொல்லடா ,,,டேய் படியாதவனை எருமை மாடும்  மதியாதடா ,"


                               என்று தொடங்குவார் . எனக்கு எப்பவுமே என்னோட நேரத்தையும் அவரோட  நேரத்தையும் வினாக்கிற மாதிரிதான் அந்த ஆங்கிலம் என்னோட உயிரையும் அவரோட சீவனையும்  எடுத்துக்கொண்டு இருந்தது. அவருக்கு கோபம் வந்தா  அவரோட பொஞ்சாதி அறைக்கு வெளிய தலையை நீட்டி 


                          " ஏனப்பா அவன் பொடியனை இந்தப் பாடுபடுத்தி வெருட்டுரீங்க ,,இப்படி வெருட்டினா அவன் பயப்பிடப் போறான் " என்று சொல்லுவா.


                       " இஞ்சேரும், அப்ப நீர் வந்து இங்கிலிஸ் படிப்பியுமன் , "


                             "   என்னப்பா  நீங்க   என்னை  வெருட்டுற மாதிரி     அவன் பொடியனை இந்தப் பாடுபடுத்தி வெருட்டுரீங்க"

                                    " என்னவோ பக்கிங்ஹாம் பலஸ்சில  குயின் எலிசபெத்துக்கு நீர்  தான்  இங்கிலிஸ் சொல்லிக் கொடுத்த மாதிரி நீர் கிடந்தது துள்ளுரீர் , "

                                         "கொஞ்சம்  அன்பா  சொல்லிக்கொடுங்கோவன் ,,அவன் பயதில கிடந்தது மிரளுறான் "

                                            "  நீர் உம்மட வேலையைப் பார்த்துக்கொண்டு அங்கால போம்,எனக்குத் தெரியும் என்னண்டு படியாத மாடுகளை வழிக்குக் கொண்டுவாறது எண்டு , "

                              "  அவன்  பாவம்  எல்லோ,,அவனுக்கு விளங்கிற மாதிரி மெல்ல மெல்ல சொல்லிக்கொடுங்கோப்பா  "

                              " இப்ப நீ  எழுதடா நான் சொல்லுற வசனத்தை பாஸ்ட் பார்டிசிப்பில் டென்ஸ் இல கொண்ஜன்ச்சன் ,ஹெல்பிங் வோர்ட்ஸ் எல்லாம் சரியான இடத்தில போட்டு...  " 

                                என்று பழையபடி சத்தியசோதனை தொடங்கும் , எப்படியும் ஒருநாளுக்கு பத்துத் தரம்  " இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் , " என்று பேச்சு வேண்டுவேன். ஆனால் ஒருநாளும் அவர் வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சதோ,அது ரெண்டா உடைஞ்சதோ நடக்கவில்லை. 


                                 இப்படிதான் ஒரு சிலபஸ் இல்லாமல்  இங்கிலிஸ் கிளாஸ் நடக்கும் அதிகம் அவர் அவரோட வீட்டில உள்ள,வீட்டைச் சுற்றியுள்ள பொருட்களை வோக்கிங் ஸ்டிக்கை தூக்கி சுட்டிக்காட்டி அவைகளின் பெயர்சொல்லைச்  சொல்லச் சொல்லுவார்.அதுவும் ஒழுங்கா முன்னுக்கு வொவல்ஸ் என்ற ஆங்கில உயிரெழுத்துக்கும் ,கொண்சொனேன்ட் என்ற மெய்எழுத்துக்கும் ஏற்ற மாதிரி எ என்றும் அன் என்றும் பாவித்து சொல்ல வேண்டும். இல்லாட்டி 


                              " இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் , "   வரும் .

                              ஒரு நாள் அவரோட ஹோல் ஜன்னலுக்கு அருகில் கட்டுக் கிணத்துக்கு அருகே கொடியில வெள்ளை நிற பெண்களின் மேலே போடும்  உள்ளாடை  காஞ்சுகொண்டு காத்துக்கு ஆடிக்கொண்டு இருந்தது.ஓடிட்டர் வோக்கிங் ஸ்டிக்கால அதைக் காட்டி 


                            " டெல் மீ நொவ்,,வாட் இஸ் தட், வாட் இஸ் த நேம் போர் தட்  வுமென் அண்டர் கார்மென்ட் , டோன்ட் டெல் மி த ஷோர்டிங்போர்ம் ,,ஐ வான்ட் த எக்ஸ்சாட் வோர்ட் போர் தட் "


                             என்று கேட்டார்.எனக்கு அதன் பெயர்  சுருக்கமா  பிரா என்று தெரியும்.  ஓடிட்டர் அதிண்ட ஷோர்டிங்போர்ம் சுருக்கம் வேண்டாம்  எக்ஸ்சாட் வோர்ட் தான் வேணும் எண்டுகொண்டு நிக்குறாரே  என்று ஜோசிக்க ,அதிண்ட உண்மையான பெயர் சரியா வராமல் அரைகுறையா 


                               "  பிரக்கிராசியர்   "


                                                           என்றேன் ..அந்தாளுக்கு கொதி பக்கெண்டு பத்திக்கொண்டு வந்திட்டுது 


                            " டேய், இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் , பிரக்கிராசியரரோ ,,,டேய்  அது  லோயர், அட்வகேட்  அவங்களத் தாண்டா,,தமிழில பிரக்கிராசி,  அப்புக்காத்து எண்டுறது, ஒழுங்கா சொல்லடா ,


                                  என்றார் ,எனக்கு  அதன் முழுமையான பெயர் ஒழுங்காத் தெரியாது என்றேன் .


                             ,"  வாற விசருக்கு இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் , டேய் அதுக்குப் பெயர் பிறசியர்  டா  brassiere இது  இங்கிலிஸ் சொல் இல்லை,பிரெஞ்ச் சொல் , brassiere was gradually shortened to bra , அது மத்திய கால ஆங்கில  Victorian dress reform இல இருந்து  வந்தது  


                                                      என்றார்,,அது பிறசியரா இருந்தா என்ன   பிரக்கிராசியரா இருந்தால் என்ன, அதைவிட அது இங்கிலிஸ் சொல் இல்லாமல் பிரெஞ்ச் சொல்லா இருந்தாலும்  அதைத் தெரிந்து எனக்கு என்ன வரப்போகுது என்ற நினைச்சுக்கொண்டு இருக்க அந்தாள் அதை வைச்சு என்னவும் வசனம் எழுத சொல்லப்போகுதோ என்று நினைக்க ,நல்லகாலம் அப்படி ஒண்டும் கேட்கவில்லை. அதுக்குப் பிறகு கிணத்துக் கொடியில ஏதாவது தொங்கினா முதலே ஜோசிச்சு வைக்கிறது அதுக்கு என்ன இங்கிலிஸ் சொல்லு என்று. 


                                                  ஓட்டிடர் சில நேரம் வீட்டுக்கு போய் படிச்சுக்கொண்டு வரச்சொல்லி ஹோம் வேர்க் தருவார். ஒருநாள் எரிக்கா யங் எழுதின ஸ்டான்டிங் பிப்போர் த ஸ்டுடென்ட்ஸ்  என்ற கவிதையத் தேடி எடுத்துக்கொண்டு வந்து தந்து 


                                         ," டேய், இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் தெரியும் தானே ,  வீட்ட போய் அர்த்தம் அறிந்து முடிந்த அளவு கண்டுபிடிச்சு நாளைக்கு சொல்லவேண்டும் இல்லாட்டி , இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும்


                                  என்று சொன்னார், அந்தக் கவிதையை என்னோட அம்மாவிடம் காட்டி அதுக்கு என்ன அர்த்தம் ,அதில உள்ள சொற்களுக்கு என்ன அர்த்தம் எண்டு கேட்டேன் .என்னோட அம்மாவுக்கு பயங்கர ஆங்கில அறிவு இருந்தது. அவா இளவயதில்  ஆங்கில மீடியத்தில் மலேசியாவில் படித்தவா அம்மா கவிதையை ஒரு முறை வாசித்துப் பார்த்தா,பிறகு   என்னை ஒரு முறை பார்த்தா 


                           "   இதென்ன பொயம் ,,வில்லங்கமான கவிதை போல இருக்கே  ,,யார் ஓடிட்டர் தந்தவரோ இதைப் படிக்கச்சொல்லி "


                    "  ஓம் அவர்தான் நாளைக்கு விளக்கம் சொல்லச் சொன்னார் ,இல்லாட்டி  வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் எண்டு சொன்னார் "


                      "   அதென்ன  வோக்கிங் ஸ்டிக் ,,ஹ்ம்ம்,,,இதில வாற விசியங்கள் இப்ப இந்த வயசில உனக்கு கட்டாயம் தெரியத்தான் வேண்டுமோ ..ஓடிட்டர் ஏன் இதை படிக்கத் தந்தவர் என்று விளங்கேல்லேயே " 


                         " அந்தாள் இப்ப இப்பிடித் தான் ஏதாவது எப்பவும் கஷ்டமா தருவார்,அது செய்யாட்டி டேய், இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் எண்டுவார் , இந்தப் பொயம் என்ன விசியம்,,எனக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க ,,மிச்சம் நான் சமாளிப்பேன்  "


                         "   இந்தப் பொயம் என்ன விசியம் எண்டு எனக்கு விளங்குதில்லை,,ஆனால் இதில உள்ள சொற்கள் உனக்கு இப்ப கட்டாயம் தெரியவேண்டிய அவசியம் இல்லை ,"


                          " நாளைக்கு சொல்லாட்டி அந்தாளுக்குக் கொதி வரும்,,பிறகு டேய், இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் என்று கோவத்தில  பேசுவார்  "


                         " இல்லை,,நீ இனி அவரிட்டப் படிக்கப் போகவேண்டாம் ,,படிச்சது காணும் ,நீ அவரிட்டப் படிச்சும் டேர்ம் டெஸ்டில் ஒண்டும் வெட்டிக் கிழிக்கவில்லையே " 


                          என்று அம்மா சொன்னா. ஓடிட்டர் தந்த அந்தக் கவிதைக்கு அம்மா விளக்கம் சொல்லவில்லை, பின் நாட்களில் ஆங்கில அறிவு சுயமாக நான் கற்றுத் தேர்ந்தபின் அதைப் படித்திருக்கிறேன்,எரிக்கா யங் எழுதிய அந்தக் கவிதை ஒரு பெண் ஆசிரியையின் மனநிலையில் இருந்து எழுதப்பட்டது. மில்லியன் மனிதர்களின் மனசாட்சியின்  இதயத்தை கீறிப் போட்ட இந்த உலகத்தில்  எழுதப்பட்ட மிக முக்கியமான பெண் விடுதலைக் கவிதை அது என்று உங்களுக்கே தெரியும். என் அம்மாவுக்கு அது புரிய நியாயமில்லைத் தான்.


                             எப்படியோ அதன் பின் . ஓடிட்டர் வீட்டில இருந்து தப்பி வந்தது ஜெயிலில் இருந்து தப்பி வந்த மாதிரி இருந்தது. ஏறக்குறைய ஆங்கில மொழியிடமிருந்து தப்பி வந்த மாதிரித்தான் இருந்தது. ஆனாலும் சில இரவுகளில்


                           " டேய், இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும்  இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் ,"  


                                  என்ற குரல் எதிரொலித்தது  மண்டைக்குள்ள கேட்கும்.


                                .ஓடிட்டரிடம் ஆங்கிலம் படிக்கப் போனதால் இங்கிலிஸ் மண்டைக்க ஏறாட்டியும் பல ஆங்கிலக் கவிஞ்சர்களின் பெயர்களையாவது நினைவு வெளியில் நிறுத்தி வைக்க முடிந்தது ,அதிலும் .ஓடிட்டர் அந்தக் கவிஞ்சர்களின் பெயர்களை முழுவதும் சொல்லுவார், வால்ட் விட்மன் , பேர்சி செல்லி, ராபர்ட் பிராஸ்ட் அவர்க்கு பிடித்த கவிஞர்கள் என்பார். 


                                 ராபர்ட் பிராஸ்ட் இன் கன்றுக்குட்டிய தடவிப் பார்த்துக்கொண்டிருந்தேன்  என்ற   கவிதையை அவர்  அக்குவேறு ஆணி வேறா ஒருநாள் விளக்கி சொன்னார். நடுவில நெட் வலை இல்லாமல் டெனிஸ் விளையாடுவது போன்றது புதுக்கவிதை என்று  அந்தக் கவிதையின் உள்ளே உள்ள மென்மையான பிரதேசங்களுக்கு ஊடாக அவர் ஒரு ஞானி போலப் பிரயாணித்து அதன் சாரத்தை ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலியில் முடித்தார். அவர் சொன்னதின் முழு அர்த்தம் விளங்காமலே அதன் பிரமிப்பு அசரவைத்தது.


                                    அப்படிதான்  ஹென்றி வோர்ஸ்த்வோத்  அதிகாலை லண்டன் நகரத்தை வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் இருந்து பார்த்து எழுதிய ஸ்லீபிங் பியுட்டி கவிதையை அவர் சொல்லும் போது யாழ்பாணத்தில் நிண்டு கொண்டே தேம்ஸ் நதிகரையில் பிக்பென் பாலத்துக்கு மேலாகப் பறந்துகொண்டு  பார்ப்பது போல உணரமுடிந்தது ,  அதே வோர்ஸ்த்வோத் இன் வில்லேச் ப்ளக் சிமித் கவிதை அவர் சொல்லச் சொல்ல அந்த கவிதையில் வார சின்னப்பையன் கொல்லன் பட்டறையை எட்டிப்பார்ப்பது போல ஆச்சரியங்கள் அள்ளிக்கொட்டும்.


                                 ஓடிட்டர் நான் அவரிடம் படிக்கப் போறதை நிட்பாட்டின பிறகு ஒரு நாள் எங்களின் வீட்டை வந்தார். வந்த நேரம் அந்தக் கைத்தடியை ஊண்டி ஊண்டிக் கொண்டு வந்தார் , முழங்கால் சில்லு தேஞ்சு போட்டுது எண்டும் அதுக்கு ஒப்பெரேசன் செய்ய கொழும்புக்குப் போகப் போறதாகவும்  அம்மாவோடு கதைத்தார்.லண்டனில இருந்து டொக்டர் மகனும் கொழும்பு வாறதாகவும்   சில வாரங்களில் போகப் போறதாவும் சொன்னார்  ,


                                  " லைப் இஸ் மிஸ்செரபெல் வென் கெட்டிங் ஓல்ட்,,நத்திங் ஹப்பினிங் ஆஸ் வி பிளான், அட் எவெரி மொமென்ட்ஸ் , சோ டு ஸ்பீக்  இட்ஸ் டேக் இட்ஸ் ஓன் பாத் ,நோன்சென்ஸ்,,,நோ மீனிங் அட் ஒல்  இன் எ சேர்ட்டின் வே    "


                               என்று விரக்தியாகச்  சொல்லிக்கொண்டிருந்தாலும்  நான் ஏன் படிக்கவாறது இல்லை என்று ஒரு சின்னக் கேள்வியும் அம்மாவிடம் கேட்கவில்லை. என்னோடும் ஒன்றும் கதைக்கவில்லை . எங்களின் வீட்டில இருந்த பெரிய புத்தக அலுமாரியில் நிறைய ஆன்மிக,வேதாந்த,சித்தாந்த  புத்தகங்கள் இருந்தது .அப்படி  சேமித்து வைத்திருந்த புத்தகங்களில் சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட " விவேகானந்த ஞானதீபம் " என்ற தடித்த பன்னிரண்டு புத்தகத் தொகுதியும் இருந்தது, அதில ஒரு புத்தகத்தை எடுத்து முன் ஒற்றைகளைப் பிரட்டினார் ,,


                                     ஒரு இடத்தில என்னத்தை வாசித்தாரோ தெரியவில்லை,,அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, 


                               " டிஸ்பொன்டன்சி  இஸ் நோட் எ ரிலியன் ,,ஒ  ராமகிருஷ்ணா பரமஹம்சரிடம் அவர் அன்புத் துணை  சாரதாதேவி நாங்கள் ஏன் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூ டாது  என்று கேட்டதுக்கு...பரமஹம்சர்  சொன்ன பதில், ஹ்ம்ம் ,,,,உலகத்துக்கு எல்லாம் அன்னை,,Nothing went as bad

as blame. ,யெஸ் ,,இதுதான்  ஆங்கிலத்தில்  டிஸ்பொன்டன்சி  இஸ் நோட் எ ரிலியன்..யெஸ் ..தமிழில் வாசிக்கத்  தவறிய  ஒரு அருமையான புத்தகம் போல இருக்கே இது,,.ஹ்ம்ம் பன்னண்டு புத்தகமும் வாசிக்க வேண்டும் .."..

                           என்று தனக்குள் சொல்லிக்கொண்டு இருந்தார் ,பிறகு அந்தப் புத்தகத்தை இரவல் வேண்டிக்கொண்டு போட்டார். " விவேகானந்த  ஞானதீபம் " முதலாவது புத்தகம் வாசித்து திரும்பிவர முதலே  ஜூலை மாதம் ஒரு நாள் பலாலி வீதியில் தபால்கட்டை சந்தியில் முதலாவது கண்ணிவெடி  இரவு பன்னிரண்டு மணியளவில் வீடுகளை அதிரவைத்து, வீட்டு லைட்டையும்  டிம் பண்ண வைச்சு வெடித்தது.. அது வெடித்து மூன்றாம் நாள்  கொழும்பில் கலவரம் தொடங்கியது. அந்த நேரம் ஓடிட்டர் கொழும்பில நிண்டு இருக்கிறார். 


                                        களனிப்  பாலத்துறை பாலத்தில்  இருந்து காடையர் கூட்டமாக வந்து கப்பியாவத்தைப் பிள்ளையார் கோவில் பக்கமெல்லாம் தமிழர்களின் கடையைக் கொளுத்தி,கொள்ளையடிச்சுகொண்டு ஜெம்ப்பட்டா தெரு வழியாக வந்து கொட்டகேனா கெசல்வத்தை சந்தியில் காடையர் பெட்ரோல் கான் வைச்சுக்கொண்டு நிண்ட நேரம் ஓடிட்டர் வோக்கிங் ஸ்டிக்கை கையில வைச்சுக்கொண்டு ரோட்டுக்கு இறங்கிப்போய்  காடையர்களை அடிக்கப்போய்  இங்கிலிசில் தாறுமாறா அவங்களுக்கு முன்னால நிண்டு பேசி சண்டை பிடித்திருக்கிறார்.. 


                                  ஓடிட்டர் கடைசியாக நிண்ட இடம் அதுதான். அங்கே  நின்றும் அவர் சேக்ஸ்பியர் ,மில்டன்,  என்று ஆங்கிலத்தில் முழங்கி இருக்கலாம். சிங்களமே ஒரு நாட்டின் தேசிய மொழி என்று சொல்லி நெருப்புப்பொறி பத்த வைத்தவர்களின் முன் அவர் மொழி எடுபட்டு இருக்காது .  அதுக்குப் பிறகு அவரைப்பற்றி ஒரு தகவலும் யாருக்கும் கிடைக்கவில்லை. அவளவு  பெரிய ஒரு இனப்பிரச்சினை அகோரமாக  இருந்த  நேரமும்  அவர் தன்னோடு தனித்துவ அடையாளத்தை இழக்காமல் இருந்த மனிதர் ஓடிட்டர் 


                                   ஓடிட்டர்  எனக்கு  நிறைய ஆங்கிலக்கவிதைகள் சொல்லித் தந்தார் .அதில் இப்பவும் பொன்மாலைப்   பொழுது மனதில் தங்கிய இன்னொரு ஆங்கிலக் கவிதை டென்னிஸன் எழுதிய “The Brook” எனும் கவிதை.  கவிதைகளில் இது சற்றே நீண்ட  வகைக்  கவிதை  அது . அதன் refrain வரிகள் மிகவும் பிரபலமானவை என்று ஆங்கிலம் என்ற மொழி கொஞ்சம் வாசிக்கத்தெரிந்த காலத்தில்  என் பின் மண்டையில் அறிவு சொல்லித் தந்தது . 

                                  “Men may come and men may go, But I go on for ever”  என்று முடியும் கவிதையின் இறுதி வரிகள்   இப்பவும் நினைவு இருக்கு.  இருத்தலுக்கும்  நிரந்தரமின்மைக்கும் உள்ள மாறுபாட்டை உணர்த்துவதாக இருந்த அந்தக் கவிதை ஒரு வானம்பாடியின்  வானத்தில் அதிசயமாகவே இடி மின்னல்களைத் தாங்க வைக்குது . என்னைப் பொறுத்தவரை ஓடிட்டர்  நம் காலத்தில்  உலகத்தின் உன்னதத்தை உள்வாங்கி உலாப்போக வைக்கத் தவறிய வரலாற்று  நாயகன் 
.
                                                                                             

"La Isla Bonita" Acoustic Cover





ஞாயிறு துள்ளல் இசைவிருந்து . ஒரு ஸ்பானிஷ் ஸ்டைல் பாடலை என்னோட ஸ்டைலில் வாசித்துள்ளேன். "La Isla Bonita" என்ற பாடகி மடோனா எழுதி இசை அமைத்துப் பாடிய பாடல்,ஆங்கிலத்தில் " The Beautiful Island " என்று வரும் இந்தப் பாடலின் தாளம் " Spanish motifs arrangements of Cuban drums ",
அப்புறம் இடையில் வரும் கிட்டார் சத்தம்,அதை வாசிக்கும் முறையை "Spanish guitar " ஸ்டைல் என்பார்கள். சம்பா என்ற பிரேசில் நாட்டு நடன இசை போல " maracas, harmonica, synthesized drumming " போன்றவை பிண்ணனியில் வர காலாலே தாளம் போடவைக்கும் பாடல்.
மடோனா இன் குரல் எவளவு அழகாக " C♯ minor " என்ற கோட்ஸ் இல் இருந்து " F♯ minor "என்ற கோர்ட்ஸ் இக்கு மாறி மாறிப் பாயும் அழகு ஒரு டெக்னிகல் அமர்க்களம். " interlude " இல் வரும் " Spanish guitar " நளினம் அதுதான் இந்தவகைப் பாடல்களின் நாட்டியம் .. "La Isla Bonita" பாடலை " Hispanic styled pop " என்று சொல்கிறார்கள்.
இத்தாலியில் பிறந்து அமரிக்காவில் உலகப்பிரபலம் ஆகிய மடோனா இந்தப் பாடலை லத்தின் அமரிக்க நாடுகளுக்கும், அதில் வசிக்கும் மக்களுக்கும் அர்ப்பணித்துள்ளார் . இந்தப் பாடலில் வரும் " San Pedro " என்ற சின்னக் கடற்கரை நகரம், மத்திய லத்தின் அமரிக்காவில் உள்ள பிசிலி என்ற நாட்டில் இருக்கு ,,இந்தப் பாடல் வந்து பிரபலம் ஆனபின் அந்த நகரத்தையே " La Isla Bonita " என்றுதான் இப்போது அழைக்கிறார்கள்.
ஒரு பாடல் ஒரு நகரத்தின் பெயரையே மாற்றி இருக்கு அதுதான் இசையின் வலிமை.
.

Monday, 9 November 2015

அன்னக்கிளி முதலாளி,

சம்மனசுகளின் வீராதி வீரன்கள்  வந்தார்கள் ,போனார்கள்,வென்றார்கள் ,தோற்றார்கள் என்று காலம் கையை விசுக்கிகொண்டு  நடுவீதியில் தனிப்பட்ட  உத்தியில் வரலாற்றை எழுதிச் சென்ற யுத்த காலத்திலும்  அதன் பாதை ஓரங்களில் புனைவு எழுத்துக்கள் எதுவுமின்றி  சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில்  யார் யார் உபரியாக  விழுந்தார்கள் என்ற குறிப்புக்களை  இன்னுமொரு கதை எழுதிக்கொண்டு சென்றது

                                                   அன்னக்கிளி முதலாளி, என்னடா இது ஒரு பொம்பிளையின் பெயரில் உள்ள ஒரு ஆம்பிளை என்று  இந்தப் பெயர் தொடங்கும் போதே உங்களுக்கு குழப்பமாக  இருக்கும். பெயர் தான் அப்படியே தவிர அவர் முழுவதும் ஆம்பிளை, எங்களின் ஊரில் இருந்த ஒரேயொரு பேக்கரி அன்னக்கிளி பேக்கரி. அதன் உரிமையாளர் அவர். அதால அன்னக்கிளி முதலாளி என்ற பெயர் வந்தது.

                                          பிறத்தி  ஊரில் இருந்து வந்து  ஏன் அன்னக்கிளி என்று பாண் பேக்கரிக்கு பெயர் வைத்தார் என்று வெளிப்படையாக யாருக்கும் அவர் சொன்னதில்லை. ஆனால் அன்னக்கிளி என்ற அன்னம், கிளி போல இருப்பாள் என்று சிலருக்கு மட்டும் சொல்லியிருகிறார். அவர் ஊரில் அவருக்கென்று ஒரு காதல் கதையோ,அல்லது கலியாணக் கதையோ இருந்திருக்கலாம். அதுபற்றி எங்கள் ஊரில் யாருக்கும்  எதுவும் தெரியாது என்றதுதான் உண்மை.

                                           அந்த அன்னக்கிளி பேக்கரிக்கரியை அடையாளம் காண்பது பெரிய விசியமில்லை , அதுக்கு  பக்கத்தில  போறணைக்கு அடுப்பு எரிச்சு தணல் விழுத்த எப்பவுமே வன்னியில் இருந்து கொண்டுவந்த பாலைக்குத்தி ,முத்திரைக்குத்தி விறகு லோட் குவிந்து கிடக்கும். மலைபோல பறிச்சுக் போட்டுக் கிடந்த அந்த விறகு லோட்தான் ஒரு நாள் விடிகாலை ரெண்டாம் வடிப் பாண் போறணையில் வெந்துகொண்டு இருந்த நேரம் அன்னக்கிளி முதலாளிக்கும், அன்னக்கிளி பேக்கரிக்கும் எதிர்பாராத நேரத்தில் அழிவைக் கொண்டுவந்தது .

                                           நாற்பது சொச்சம் வயசிலதான் அன்னக்கிளி முதலாளி அந்த பாண் பேக்கரியை நடத்தினார். முதலாளி போல வெள்ளையும் சொள்ளையுமா உடுத்திக்கொண்டு கசியர் மேசையில் காலை ஆட்டிக்கொண்டு இருக்கும் மற்ற முதலாளிகள் போல அல்ல அவர் . அவர்தான் அதில பாஸ் என்ற பாண் போடுற வேலையில் இருந்து ஏறக்குறைய எல்லா வேலையையும்  செய்தார்.

                                           பேக்கரிக்குப் பின்னால இருந்த தென்னம் வளவில அஸ்பெஸ்டஸ் கூரை போட்ட  ஒரு சின்னச்  செங்கல்  வீட்டில  தனியாச்  சமைச்சு சாபிட்டுக்கொண்டுதான் இருந்தார். அவருக்கு குடும்பம் என்று ஒருவரும் அந்த வீட்டில் இல்லை. ஆனால் பேக்கரியில் பகல் நேரம் ஒரு பொம்பிளை முன்னுக்கு நிண்டு வேலை செய்வா, அவாதான் பாண் பணிஸ் விக்குறது. மாத  சம்பளத்துக்கு வேலை செய்தா. அவாவும் நடுத்தர வயதுப் பெண்மணி ஆம்பிளையள் ஓடுற சைக்கிளில் மிதிசுக்கொண்டு அயல்க் கிராமத்தில இருந்து  வேலைக்கு வருவா,


                                      பேக்கரியில் ஒரு கடுகஸ்தோட்டை மலையகத்தை சேர்ந்த ஒரு இளம்  பொடியனை வேலைக்கு வைச்சு இருந்தார். அவனைக்  கைவேலைக்கு வைச்சு இருக்கிறன் என்று சொல்லுவார், எப்பவும் அந்தப் பொடியனுக்கு

                                  "   தம்பி டேய். அதுக்கு .வேலையக் குடுப்பம் வாடா ,,இதுக்கு வேலையக் குடுப்பம் வாடா.."

                                              எண்டுதான் அவனுக்கு வேலை உத்தரவு கமான்ட் கொடுத்துக்கொண்டு இருப்பார், அப்படி " வேலையக் குடுப்பம் வேலையக் குடுப்பம் "என்று அடிக்கடி சொல்லி அவனுக்கு வேலை காட்டிக்கொண்டு சொல்லுறது அவர் சிங்கள ஆட்களிடம் இருந்து பழகிய சிங்கள வார்த்தையின் தமிழ்ப் பிரயோகம் போல இருக்கலாம்.அல்லது வேற ஏதும் அர்த்தமா எண்டு எனக்குத் தெரியாது.

                               ஆனால் பேக்கரியில் அவன்தான் அவருக்கு வலது கை போல இயங்கிக்கொண்டு இருந்ததால் அப்படி சொல்லி இருப்பார் போல. மற்றப்படி அவரோட ரெண்டு கைகளின் உழைப்பையும் நேரத்தையும் அதிகம் விழுங்கியது அவரோட பாண் பேக்கரி.

                                      வீராளி அம்மன் கோவிலுக்கு கொஞ்சம் தள்ளி, அம்மன் கிளை சங்கக் கடைக்கும், ஞானப்பிரகாசம் ஹோட்டலுக்கும்  நடுவில் அன்னக்கிளி பேக்கரி ஒரு றாத்தல் பாண் போல முன்னுக்கு கல்வனைஸ் சீட் போட்டு விசாலமான தாழ்வாரம்  தள்ளிக்கொண்டு நிக்கும் ஒரு கடையில்தான் இயங்கியது. மசுக்குட்டி மாமிக்கு சொந்தமான அந்தக் கடையை மாச வாடகைக்கு எடுத்து பின்னுக்கு செங்கல் அரி கல்லு வைச்சு போறனை கட்டி பேக்கரி ஆக்கினார்

                                     வெளி வாசலை மறித்து உள்ளுக்கு யாரும் போக முடியாத மாதிரிப் பெரிய கண்ணாடி சோக்கேஸ் முன்னுக்கு வைச்சு அதுக்குள்ளே எப்பவும் கொம்புபணிஸ், மாலு பணிஸ் ,சீனி பணிஸ், அடை பணிஸ்  என்று எப்பவும் ஏதாவது ஒரு பணிஸ் அதில இலையான் பறக்கப் பறக்கக் காத்திருக்கும். ரோட்டில நிக்கவே முறுக்கி வெந்த பாண் வாசமும் சிலநேரம் வாட்டுற ரக்ஸ் வாசமும் வரும்.

                                அந்த சோக்கேசுக்கு கொஞ்சம் உள்ளே ஒரு மரமேசையும் கதிரையும் இருக்கும். மேசை கதிரையில் எப்பவுமே கோதுமை மா வெள்ளைச் சீலை விரிச்ச மாதிரி படிந்து இருக்கும்.  மேசைக்கு மேலே சுவரில சின்னத் மரத்தட்டில விளக்குக் கொழுத்தி ஒரேயொரு சாமிப்படம் மட்டும் தொங்கிக்கொண்டு  இருக்கும். 

                                               பேக்கரி திறந்த நேரம் அந்தப் படத்துக்குப் போட்ட பூமாலை வாடி நாரோடு சருகுபோல ஒட்டிக்கொண்டு இருக்க அந்தப் படத்தில இருந்த அம்மன் ஒரு பெரிய குடைபிடிக்கும் நாக பாம்புக்குக்  கீழே சம்மணம் கட்டி ஒருகாலை மற்றக்காலுக்கு மேலே தூக்கிப்போட்டுக்கொண்டிருந்த  படத்தில அருள்மிகு நாகபூசனி அம்மன் என்று எழுதி இருந்தது. அன்னக்கிளி முதலாளியின் குல தெய்வமாக  அந்த அம்மன் இருந்திருக்கலாம்..

                                       அன்னக்கிளி முதலாளி வேட்டிதான் கட்டிக்கொண்டு இருப்பார். அதுவும் ஒரே ஒரு வேட்டியத்தான் மாற்றிக்கட்ட வேற வேட்டி இல்லாத மாதிரி அதைதான் எப்பவும் கட்டி இருப்பார். அந்த வேட்டி வெள்ளை நிறத்தை வருடங்களின் முன் இழந்து, எண்ணையும், மாவும், சாம்பலும்,  சேர்ந்து ஒரு விதமான நாவல்க்கலரில் இருக்கும். 

                                                       அதை நெருப்பில போட்டாலும் எரியுமா என்று சந்தேகம் கிளப்புவது போலப்  பாண்டல் பிடிச்சுப் போய் இருக்கும், மேலே சேட் ஒண்டும் போடாமல் வெறும் உடம்போடுதான் அன்னக்கிளி முதலாளி அதுக்குள்ள அந்த வேட்டியை மடிசுக் கட்டிக்கொண்டு வேலை செய்வார்.
                             
                                         சில நேரம்  கசியரிலையும் அந்தப் பாண்டல் பிடிச்ச  வேட்டியோடை தான் இருப்பார். இரவுப் பாணுக்கு மாக் குளைச்சு மேசையில் அது புளிக்கக் கிடக்கும் நேரம்  அந்தப் பாண்டல் பிடிச்ச வேட்டியோட வெளியால வந்து ரோட்டில நிண்டு விடுப்புப் பார்ப்பார்.

                                                ஒருநாள் அன்னக்கிளி முதலாளி கட்டி இருந்த வேட்டியை அம்மச்சியா குளத்தில தோச்சு , பக்கத்துக்கு வயல்க் காணியில் காத்துக்கு எழும்பிப் பறக்காமல் நாலு மூலையிலும் இழுத்து நாலு சின்னக் கல்லு வைச்சு பரவிக் காயவச்சுப்போட்டு கோவணத்தோட குளதுக்க இறங்கிக் குளிச்சுக்கொண்டு நின்டநேரம் அவடதுக்கு வந்த ஒரு  மாடு அவரோட வேட்டியை இழுத்துக்கொண்டு போனதைப் பார்த்திட்டு குளதுக்க நிண்டு கத்தி இருக்கிறார்.

                                      மாடு அவர் கத்தின சத்தம் கேட்காமல் ,வேட்டியை வைச்சு காலால உழக்கி விளையாட , குளதடிக்கு சும்மா சுருட்டுப் பத்த வைச்சுக்கொண்டு வயல் வெளியப் பார்க்க வந்த புண்ணியக் குஞ்சியைப்  பார்த்திட்டு , அன்னக்கிளி முதலாளி

                                     "   சித்தப்பு,,மாடு வேட்டிய  இழுத்துக்கொண்டு போகுது சித்தப்பு எட்டிப் பிடியனை சித்தப்பு "

                                       என்று சொல்லப் புண்ணியக் குஞ்சிக்கு அவர் சொன்னது விளங்கவில்லை ,அன்னக்கிளி முதலாளி நீந்தத்தெரியாமல் குளத்துக்கு இறங்கிட்டார் எண்டு

                              "  டேய் அன்னக்கிளி   நீ ஏன் காணும் நீந்தத்தெரியாமல் குளத்துக்கு இறங்கினனி.."

                                            "   சித்தப்பு,,மாடு வேட்டிய  இழுத்துக்கொண்டு போகுது சித்தப்பு எட்டிப் பிடியனை சித்தப்பு "

                                       " உனக்கேன் இந்த தெரியாத  வேலை,    இப்ப நடுக்குளத்துக்க  நிண்டுகொண்டு சுடுகுது மடியப்பிடி என்டுறாய் எனக்கும்  நீந்த தெரியாதே .."

                                     "   சித்தப்பு,  எனக்கு நீந்தத் தெரியும் ...,நானே ஒரியினல் தீவான் ....அங்கால மாடு வேட்டிய  இழுத்துக்கொண்டு போகுது சித்தப்பு எட்டிப் பிடியனை சித்தப்பு "

                                  " பேந்தும்பார் ,,அட அறுவானே  நீ ஏன்  நீந்தத்தெரியாமல் குளத்துக்கு இறங்கினனி,,

                                         "   மாடு வேட்டிய  இழுத்துக்கொண்டு போகுது சித்தப்பு எட்டிப் பிடியனை சித்தப்பு "

                                 "   கொஞ்சம் பொறு பண்டிகள்  உங்கால உழுகுதுகள் ..தெய்வேந்திரம் நிக்கிறானோ  எண்டு பாக்கிறேன்  "

                                " அய்யோ சித்தப்பு எனக்கு நீந்தத் தெரியும் சித்தப்பு , அங்கால மாடு வேட்டிய  இழுத்துக்கொண்டு போகுது சித்தப்பு எட்டிப் பிடியனை சித்தப்பு "

                               " அட கோதாரி விழுவானே, நீச்சல் அடிக்கத் தெரியாட்டி ,ரெண்டு ஒல்லித் தேங்காயைக் கட்டிக்கொண்டு தப்புத் தண்ணிப் பக்கமா  இறங்கி இருக்கலாமே "
                               
                        "  சித்தப்பு , அங்கால மாடு வேட்டிய  இழுத்துக்கொண்டு போகுது சித்தப்பு... எட்டிப் பிடியனை சித்தப்பு "

                             " டேய் பிரளுவானே ,,நீ என்னத்துக்கடா இப்ப குளதுக்க  இறங்கி குளிக்க நினைச்சனி, உண்ட வீட்டில தானே ஒரு சின்னக் கட்டுக் கிணறு இருக்கே ,பேக்கரில பாணையும் பணிசயும் போட்டமா அதுமுடிய கிணத்தில நாலுவாளி அள்ளித் தலையில ஊத்தினமா எண்டுறதை விட்டுப்போட்டு.. ..எனக்கு   இப்ப வாற விசருக்கு ..."

                               கடைசீல அன்னக்கிளி முதலாளி நீந்திக் கரைக்குவரமுதல்  மாடு வேட்டியை சேத்துக்க இழுத்த இழுப்பில அது நாலாக் கிழிஞ்சு ,குளத்தடி கன்னாப்பத்தை முள்ளுக்கால மிச்சத்தையும் இழுத்து துண்டு துண்டாக் கிளிசுப்போட்டுப் போட்டுது. அன்னக்கிளி முதலாளி நீந்திக் கரைக்கு வந்த சொல்லத்தான்  புண்ணியக் குஞ்சிக்கு என்ன நடந்தது என்று விளங்கிச்சு என்றுதான் நாங்களே நினைச்சம்

                                          " அடக் கோதாரி விழுவானே,,,மாடு நீ கட்டுற அந்த உறண்டல் வேட்டியத் தானே இழுத்துக்கொண்டு போனது,,,ஹ்ம்ம்,,மாட்டுக்கே  பொறுக்க முடியேல்லப் போல அதை நீ கட்டிக்கொண்டு இருக்கிறது,,அதுதான் இழுத்துக்கொண்டு போட்டுது,,நடந்தது   நல்லதுக்குத் தானே  போல கிடக்கு  "

                                எண்டு சொல்லி    புண்ணியக் குஞ்சி கழுத்தில  சுத்தி இருந்த " ஓம் நமசிவாய " என்று நந்திப் படம் போட்ட சால்வையைக் கட்டக் கொடுக்க அதைக் கட்டிக்கொண்டு அன்னக்கிளி முதலாளி பேக்கரிக்கு போய் இருக்கிறார். அதுக்குப் பிறகு மாட்டுக்கு மட்டுமில்லை புண்ணியக் குஞ்சிக்கும் பயம் அவர். ஆனால் புண்ணியக் குஞ்சிக்குப் பாம்புக் காது. அவர்

                                       " இவன்  வடுவா ,,பெரிய விண்ணன்  சிங்கள நாட்டில  சிங்களவனுக்கே சிரட்டையில  கப்பூரம் பத்த வைச்சு   வெசாக் காட்டினவன் ,, இவனுக்கும் , இவன்ட வேட்டிக்கும் ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் எண்டுதான் அப்படி செய்தன்  "

                                       எண்டு பிறகு சொல்லி இருக்கிறார். புண்ணியக்குஞ்சியும் சும்மா ஆள் இல்லை  எங்கட ஊரில நடமாடிய நாற்பது நடிகர் திலகத்துக்கு இணையான ஒரு நடிகர். அவர் இல்லாமல் எங்கள் ஊரில் ஒரு நிகழ்வே இல்லை. அல்லது அவர் இல்லாமல் ஒரு கதையே எழுத முடியாது. அப்பிடியான ஒரு   கரக்டர் .  

                                 பேக்கறியே  சீவியம் என்று இருவத்தி நாலு மணித்தியாலமும்  இயங்குவதால்   முழு நேரமும் அவருக்கு பேக்கரியில் ஏதாவது ஒரு வேலை இருப்பதால்  ஒரு இடத்தில நிக்காமல் சுழண்டு எறும்பை விட சுறுசுறுப்பான அன்னக்கிளி முதலாளி  இளவயதில் சிங்கள நாட்டில் அவர் இருந்த நேரம் மலையாளத்தானிடம் பாண் போடுற டெக்னிக் அவர் பழகி இருக்கிறார், அப்படிதான் சொல்லுவார்.

                                      மேசையில் அறுவத்தேழு கிலோ கோதுமை மாமூட்டையை அவரும் அந்த கடுகஸ்தோட்டைப் பொடியனும் தூக்கிப்போட்டு ,அதை நடுவில குளம் போல வெட்டி அதுக்குள்ளே தண்ணி ஊத்துரத்துக்கு மட்டும் தான் அந்தப் பொடியனை அவடதில வைச்சு இருப்பார், அதுதான் அவரின்  பஞ்சதந்திரம். 

                             பிறகு பொடியனை தட்டுகளுக்கு எண்ணை தடவச் சொல்லி வெளிய அனுப்பிப்போட்டு சீனியும்,உப்பும்,ஈஸ்ட்டும் போடுவார்,அதை மருந்து போடுறது என்று சொல்லுவார், அந்த அளவுப் பிரமாணம் ஒருவருக்குமே அவர் காட்டுவதில்லை. அவளவு தொழில்நுட்ப ரகசியம் அது.

                         "  தம்பி டேய் வாடா,,வேலையக் கொடுப்பம் ,,அங்கால பிடிச்சு வேலையக் கொடு ,,நான் இங்கால பிடிச்சு  வேலையைக் கொடுக்கிறன் "

                                                  என்று   மருந்து தண்ணியோடு கலந்த நேரம் அன்னக்கிளி முதலாளியும், கடுகஸ்தோட்டைப் பொடியனும் மேசைக்கு இந்தப் பக்கமும் அந்தப்பக்கமும் நிண்டு இழுத்து,உருட்டி, பிரட்டி மல்லுக்கட்டி குழைக்கத் தொடங்குவார்கள், நெற்றியில்,புறங்கையில் இருந்து வியர்வை வடியும் அதைத் துடைக்கத் துணியும்,நேரமும் இல்லாமல்  அதையும் சேர்த்துதான் மாவோடு குழைப்பார்கள்,

                                                   குழைச்சு முடிய மேசையில் ஒருக்களித்து அதை ஒரு பழைய வேட்டியால் மூடுவார் அன்னக்கிளி முதலாளி. அவர் கட்டி இருக்கிற வேட்டிக்கும் மாவை மூடும் வேட்டிக்கும் அதிகம் நிற வேறுபாடு இருந்ததில்லை. மூடிப்போட்டு ரெண்டு கையாலும் அதுக்கு ஒரு தட்டு தட்டிப் பதம் பார்ப்பார்.அது சேத்துக்க காலை வைச்ச மாதிரி சதக் சதக் எண்டு சத்தம் எழுப்பும்.

                                        "    எட,,தம்பி நீ போய் போறணைக்கு வேலையக் குடடா

                                       "  சரிங்க  முதலாளி "

                                        " நான் முன்னுக்கு கொஞ்சம் முகத்துக்கு காத்துப் பிடிச்சிட்டு வாறன்."

                                  "  சரி முதலாளி "

                                           "   இண்டைக்கு அனல் வெக்கை அதிகமா இருக்கு  ஈஸ்ட்  டக்கெண்டு வேலையக் கொடுக்கும் போல இருக்கு,,"


                                        " சரி ,முதலாளி,,நான்  வாறன் "

                                         ",எதுக்கும்  சுருக்கெண்டு  வந்து படக்குப் படக்கெண்டு ரெண்டு பேரும் சேர்ந்து வேலையக் கொடுப்பம் ."

                                             கடுகஸ்தோட்டைப் பொடியனும் மா குழைச்சு முடிஞ்சு கையோட போறணைக்கு விறகு ஏற்றப் போவான், நாலஞ்சு பெரிய குத்தியை கோடாலியால பிளந்து போறணையில் தள்ளி நெருப்பு பத்த வைச்சுப்போட்டு ,பாண் அச்சுக்கு ஒரு பழைய சீலையைக் கிழிச்சு அதை தேங்காய் எண்ணைக் கானில இறக்கி தோச்சு ஒவ்வொரு பாண் அச்சா வேகமாகப்  போடத் தொடங்குவான், அந்த எண்ணைச் சீலையும் அன்னக்கிளி முதலாளி கட்டி முடிசுக் காலாவதியான வேட்டி போலதான் இருக்கும்.

                                                       நடுச் சாமம் பழையபடி அன்னக்கிளி முதலாளி பொங்கி எழும்பி நிக்கிற மாவை ரெண்டு கையாலும் தட்டிப் பார்ப்பார். அது குண்டியில தட்டின  மாதிரி சத்தம் எழுப்ப, முஸ்டியைப் புறங்கையால இறுகிப் பிடிச்சு ரெண்டு குத்துக் குத்திப் பாப்பார் , கொஞ்சம் மாவைக் கையில கிள்ளி பிதுக்கிப் பாப்பார், முன்னுக்கு வந்து நாகபூசனி அம்மன் படத்து விளக்கின் திரியப் பத்த வைச்சு கும்பிட்டுப் போட்டு,


                            "  அடேய் தம்பி ,,வாடா வாடா வேலையக் கொடுப்பம் , மா எழும்புது ,விறுக்கு விறுக்கெண்டு  போளி பிடிப்பம் , இண்டைக்கு மா கொஞ்சம் தண்ணிபாடா மசியுது கையில அடிமாவை வைச்சுக்கொண்டு விசிக்கி விசிக்கித்தான் நிறுக்க வேணும் போல கிடக்கு, திராசைப் பிடிச்சு வேலையைக் குடடா  தம்பி .. இக்கலிங்கம் போனாலென்ன எகலிங்க மாமதுரை சொக்கலிங்கம் உண்டே துணை ."

                                         என்று திராசிலை பிச்சுப் பிச்சுப் போட்டு அளந்து அதை உடனையே கையில உருட்டி மடிச்சு அச்சில போடத் தொடங்குவார். அவர் அந்த வயசிலையும் வேகமா அச்சுப் பிடிப்பார்,  கடுகஸ்தோட்டைப் பொடியன் அவர் அளவுக்கு வேகமாக அச்சுப் பிடிக்க மாட்டான் ,அவருக்குப் பின்னால ஓடுற மாதிரி தடுக்கித் தடுக்கி அச்சுப் போட்டு முடிய, பிறகு பாண் அச்சில பொங்கும் வரை ஒரு சின்ன இடைவேளை,

                                   அந்த நேரத்தில  அன்னக்கிளி முதலாளி ஒரு பெரிய பித்தளை மூக்குப் பேணியில் தேத்தண்ணி நிரப்பிக்கொண்டு வந்து பேக்கரிக்கு முன்னால கொஞ்சம் வெளியால காத்து வேண்டிக்கொண்டு நிற்பார். ஆனால் மாப் புழிச்சு பாண் அச்சில எழும்புற வாசத்தைக் காற்றில் எப்பவும் கவனித்துக்கொண்டிருப்பார்.

                                                கடுகஸ்தோட்டைப் பொடியன், எரிஞ்சு முடிஞ்ச விறகுதணல் எல்லாத்தையும் போறணையில் பெரிய ஒரு கொக்கத்தடி போன்ற கம்பியால பரவி சூட்டை  சூளைக்கற்களில்  ஏற்றி கொஞ்ச நேரம் போறனைக் கதவை இறுக்கி மூடி வைப்பான், பிறகு திறந்து  அவளவு தணலையும் வெளிய இழுத்துப்போட அன்னக்கிளி முதலாளி  வந்து கையை உள்ளுக்கு விட்டு சூடு பார்ப்பார்

                                 "  கணகணப்பு கணக்கா இருக்கடா தம்பி இப்ப வேலையக் குடுப்பம்  ,அங்க இங்க ஏமலாந்தாமல்  சுருக்கெண்டு  வேலையக் குடுப்பம் ,,தட்டுகளை  ஏத்துவமடா ,,தூக்கி  ஓவ்வொன்றாய் அனுப்படா தம்பி "

                                    அதுதான் கடைசி ஆனால் வேகமான வேலை. கடுகஸ்தோட்டை பொடியன் பாண் அச்சுக்கள் அடிக்கின பெரிய தட்டுகளை கவனமாக தூக்கிக்கொண்டு வந்து ஒவ்வொன்றாய் நீளமான  பெரிய இரும்பு சவளில் வைக்க அன்னக்கிளி முதலாளி மெதுவாக அதை போறணைக்கு உள்ளே அனுப்பிக்கொண்டிருப்பார். ஒன்றோடு ஒன்று முட்டாமல் போறணைக்கு உள்ளே வைப்பது அவரின் கைவந்த கலை

                                                 இதுதான் உண்மையில் மிகவும் டெக்னிக் தேவையான அனுபவம் பேசும் வேலை, ஏனென்றால் பாண் பஞ்சு போல எழும்பி நிக்கும் அந்த நேரம் அங்கால இங்கால தட்டுப்பட்டிச்சோ புசுக் என்று சப்பையா இறங்கிடும்,பிறகு அதை வைச்சு ஒண்டுமே செய்ய முடியாது, சின்ன சின்ன துண்டுகளாய் வெட்டி  வாட்டி எடுத்து ரக்ஸ் மட்டும் போடலாம் .

                                       பிறகு ஒரு சின்ன இடைவெளி. ஆனால் அந்த நேரம் அன்னக்கிளி முதலாளி எங்கயும் போக மாட்டார்,போறணை வாசலில் சவளைப் பிடிச்சுக்கொண்டு ,இடைக்கிடை போறனைக் கதவைத்திறந்து பார்த்துக்கொண்டு ,கையை உள்ளே விட்டு சூடையும், பாணின் நிறத்தையும்,வாசத்தையும் ஒரு கைதேர்ந்த ஆயுள் வேத மருத்துவர் போல  கவனித்துக் கொண்டிருப்பார்

                                      "  தம்பி டேய். வேலையக் கொடுப்பம் .நிறமடிக்குதடா,,சுருக்கா இறக்குவம்,,சாக்கை எடுதுக்கொண்டு வாடா வேலையக் கொடுப்பம்."

                                 எண்டு சொல்லு ஒவ்வொரு தட்டா போறணையில் இருந்து இழுத்து வெளிய எடுக்க,கடுகஸ்தோட்ட பொடியன் சாக்கால அதை அணைச்சுப் பிடிச்சு தூக்கிக்கொண்டு வந்து பேக்கரி நடு ஹோலில் நிலத்தில வைச்சுப் போட்டு ,உடனே வெந்து வெதுப்பி வந்த பாணை அச்சுக்களில் இழுத்து எடுத்து பிரட்டுவான் அப்படி செய்யாவிட்டால் பாண் வேர்த்து மழையில  நனைச்ச கோழி மாதிரி சுருங்கிப் போயிடும் .

                                        இந்த நேரம் முதல் வடிப் பாண் வாசம் ரோட்டுக்கே சுழண்டு வரும் ,நாங்கள் பொடியன்களா இரவு கோவில் திருவிழாவில பாட்டுக் கோஸ்டிகளின் நிகழ்ச்சி பார்த்திட்டு இந்த நேரம் வந்து பாண் வேண்டுவம். தொட்டுத் தின்னக் கறி இல்லாமலே ஒவ்வொருத்தனும் வெளியால ரோட்டில இருந்து ஒரு றாத்தல் அச்சுப்பானை விழுங்குவம். 

                                                   சில நேரம் அன்னக்கிளி முதலாளி வெங்காயம் பச்சை மிளகாய் தருவார் பாணோடு தின்ன . பாண் இவளவு ருசியா இருக்கே எண்டு நினைக்க அன்னக்கிளி முதலாளியின் பாண்டல் வேட்டி நினைவுக்கு வரும்,,,ஆருக்குத் தெரியும்  அதாலதான் பாண் அவளவு ருசியா இருந்திருக்கலாம்...

                                       பாண் தட்டில இறங்கிற நேரமே வெளியால சைக்கிளில் பெரிய மரப்பெட்டி கட்டி அதில பாணை அடுக்கி சில்லறைக் கடைகளுக்கு விநியோகிக்கப்  பல ஊர்களுக்கு ஓடுற " லைன் " காரங்கள் வந்து நிற்பாங்கள் .அவங்கள் ஒரு பக்கத்தால பெட்டியில் அடுக்கி முடிய மிச்சப் பாணை சோக்கேசில் கடுகஸ்தோட்டைப் பொடியன் அடுக்குவான் .அதுவும் கொஞ்ச நேரத்தில சனங்கள் வந்து அம்மியடிச்சு வேண்டிக்கொண்டு போகுங்கள்.

                             "    தம்பி டேய்,,இண்டைக்கு ரெண்டு கிலோ சீனியில் கல்பணிஸ் வெட்டலாம் போல இருக்கு, ..ஒரு மணித்தியாலம் பஞ்சிப் பாக்காமல் வேலையக் குடுப்பமா, ,..மாவுக்கு நான் மருந்து போடுறேன் நீ அதக் குழைக்க எனக்கு உதவியா வேலையைக் குடுத்திட்டுப் போறியா "

                                 எண்டுவார்.    காலையில் எப்படியும் கல்பணிஸ்,,கொம்பு பணிஸ்..அடைக் கேக்  .அல்லது வேற  ஒரு சுவிட் ஐட்டம் அன்னக்கிளி முதலாளி போடுவார், பள்ளிக்கூட நாட்களில்  இரவு சமன் கறியும் அவிச்ச உருளைக்கிழங்கும் கலந்து உள்ள அடைஞ்சு மாலு பணிஸ் போடுவார் ,அதுக்கும் பொடியன் தான் மா குழைப்பான், மிச்சம் அச்சுப் பிடிச்சு ,தட்டில போட்டு போறணைக்குள் ஏத்தி இறக்கிறது  எல்லாம் அன்னக்கிளி முதலாளி தனியாத்தான் செய்வார்.

                                                 . கடுகஸ்தோட்டப்  பொடியன் மலையகத்தில் இருந்து யாழ்பாணம் வந்ததே இயக்கத்துக்கு சேர.அவன் சேர்ந்து அதில சில வருடம் இருந்த நேரம் ஒரு சண்டையில் காலில காயம்பட்டு  அதன் பின் விலத்தி, ஒரு இளம் பெண்ணை காதலித்து கலியாணம் கட்டமுதல் முதல் பிள்ளை பெற்று அதன் பின் பயத்தில்  திருப்பி மலையகம் போக முடியாததால் எங்கள் ஊரிலேயே இருந்தான்  

                                   பிறகு எப்படியோ  அன்னக்கிளி பேக்கரியில் வேலைக்கு சேர்ந்து   எஸ்டேட்டில் லயனில கஷ்டத்தில் இருந்த  வயதான தாய் தகப்பனை யாழ்பாணம் வரவழைத்து  ஒரு வாடகை வீட்டில இருந்தி வைச்சு சாப்பாடு போட்டுக் காப்பாற்றிக்கொண்டு இருந்தான்.அந்த நேரம் அவனுக்கு மூன்று பிள்ளைகள், மூன்றும் சின்னதுகள்.

                                        இரவு வேலை முடிய ,கையில நாள் சம்பளத்தை வேண்டிக்கொண்டு அவன் வீட்டை பாணும் பணிசும் கட்டிக்கொண்டு போயிடுவான்.  அன்னக்கிளி முதலாளி  இரவெல்லாம் வேலை செய்த களைப்பில் வீட்டை போய் சரிஞ்சு படுக்க என்று பெரிதாக நேரம் ஒதுக்குவதில்லை . அந்தப் பொம்பிளை தான் பிசினஸ் கவனிச்சுக் கொண்டு இருப்பா. ஆனால் பகல் நேரம் பேக்கரியில்  அவர் நடமாட்டம் இருக்காது . சிலநேரம் குளத்தடி வயல்வெளிப் பக்கம் உலாத்துவார் .

                                           சிலநேரம் பாண் விக்காமல் மிஞ்சிக் கிடந்தா எல்லாத்தையும் ஒரு யூரியா சாக்கில கட்டி அதைக் கொண்டுபோய் வீராளி அம்மன் கோவிலில நிண்ட மயூரி என்ற யானைக்குட்டிக்கு  வாயில ஒவ்வொன்றாக் கொடுப்பார். கோவில் கிணற்றில இருந்து பெரிய வாளியில் தண்ணி இழுத்துக்கொண்டு வந்து வைப்பார், 

                                                   மயூரி அதை உறுஞ்சி அவருக்கே திருப்பி அடிச்சு விளையாடும் , பெரிய வாளியில் தண்ணி இழுத்துக்கொண்டு வந்து அள்ளி அடிச்சு தேங்காய் மட்டையால உரசி மயூரிரைக் குளிப்பாட்டுவார் . பிறகு அதன் தலையை, பின்னம் கால்களை நெற்றியைத் தடவி விட்டுக்கொண்டு இருப்பார். மயூரிக்கு  அவர் மொழி விளங்கும் அவரை தும்பிக்கையால விளையாட இழுக்கும், சந்தோசத்தில் அம்மாவையோ அல்லது அப்பாவையோ நினைத்து  சின்னக் குரல் எழுப்பிப் பிளிரும் .

                                        தொண்ணுத்தி ஒன்றில்  யாழ்ப்பாணமே  செல் மழையில்  அதிர , இராணுவம் சிங்கக் கொடியை  ஏற்றிவைச்சுக்கொன்டிருந்த  யாழ் கோட்டையை நானா நீயா பிடிக்கிறது எண்டு அகோரமாக சண்டை நடந்துகொண்டிருந்த நாட்களில் ,  ஒரு நாள்ப்  பின்னேரம் சீப் பிளேன் எங்களின் ஊரைச் சுற்றி சுற்றி வட்டமிட்டது . 

                                      அப்பெல்லாம் சொல்லுவார்கள்  யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே எண்டுறது போல  சீப் பிளேன் சுற்றிப் படம் எடுத்தா, விமானப்படை  அதை வைச்சுத் தான்  பொம்பர் அனுப்பி அடிக்க " ஏர்ரியல் மப்பில் " பிளான் போடுவார்கள் என்று. ஓரளவுக்கு எதிர்பார்த்த மாதிரியே அடுத்த சில நாட்களில் விமானத்தாக்குதல் திசைகளும் இலக்குகளும் இல்லாமலே அதிரும் 

                                     அன்னக்கிளி முதலாளிக்கு  ப்ளேன் சத்தம் எண்டா பயம் .  பின்னேரம் மேசையில் மூன்று அறுவத்தேழு கிலோ மா மூட்டையை வெட்டிப் போட்டு அதுக்குத் தண்ணி ஊத்தி மருந்து போட்டிட்டு  வெளியால வந்து ரோட்டில நிண்டு சீப் பிளேன் சுத்திரதைப் பார்த்தார்,  கடுகஸ்தோட்டைப் பொடியனும் வந்து நின்று வானத்தைப் பார்த்தான். 

                                        அவன் இயக்கத்தில இருந்தவன், சில சண்டைமுனைகளில் நின்று உடம்பில பீஸ்  பாஞ்சு காயம் பட்டவன்.  பொம்பர் சண்டைப் பிளேன்  ,அவ்ரோ பரல் குண்டு தள்ளும் பிளேன் , பெல் ரக ஹெலி அடி எல்லாதுக்கும்   ரைபிளை ஓட்டோவில விட்டும், மனுவலாயும்   திருப்பிப் பதிலடி திரத்தி திரத்தி அடிச்சவன்  அவனுக்கு சீப் பிளேன்  பறக்கிறது சும்மா பட்டம் பறக்கிறது போல

                                     "  அட..என்ன  நம்மட பேக்கரியையே சுத்துற மாதிரி வளைச்சு வளைச்சு வேட்டைத் திருவிழா போல  சுத்துறான்,, "

                                     "  இல்லங்க முதலாளி அவங்கள்  சும்மா ரெக்கி  எடுக்க இப்பிடி  எல்லா  இடமும் சுத்துவாங்க "

                                     "   இங்கனேக்க எங்கயோ கிட்டவாப் பாத்துதான்  இனி பொம்பர்காரன் வேலையக் குடுக்கப் போறான் போல "

                                          "  அவனுக்கு  பார்க்கிறது  எல்லாமே இயக்கக் காம் போலதான்  தெரியும் முதலாளி,,இப்ப பிட்டி கலிவரால் வைச்சு லேசர்  ரவுண்ட்ஸ்  போட்டால்  குழறிக்கொண்டு  ஓடுவான்  "

                                           "  ..எனக்கெண்டா இது நல்லாதாப் படேல்ல, சூரன்போர் போல  கிடந்தது சுத்துறானே  "

                                "   இவங்கள்  ஒருநாளுமே  டாக்கெட்  எடுத்து அடிக்க மாட்டாங்கள்,,சும்மா குத்திப்போட்டு  ஓடுவாங்க முதலாளி "

                                    "  ,,இதுக்குள்ள தான் எங்கயோ வேலையக் குடுக்க அலுவல் பாக்கிறாங்கள் போல கிடக்கு ."

                                     " இப்ப கையில ஜிபிஎம்ஜி   லோங் பரல்  எல்லேம்ஜி   ரைபிள் இருந்தால் நாலு வெடி  வைக்கவே ஓடுவான் "

                                            "  என்னடா  தம்பி  சொல்லுறாய்.. இப்ப நாளைக்கு  என்னமோ நடக்கப்போகுது "

                                          "  அதுவும் சொல்ல முடியாது ,,அவனுக்கு குண்டு தள்ளினால் தான் சம்பளம் அதுக்காக  எங்கயும்  தள்ளுவான்கள் முதலாளி "

                                    "   .அட  தம்பி நீ வாடா  நாங்கள் முதல் மாவுக்கு வேலையக் குடுப்பம்.."

                          என்று சொல்லிக்கொண்டு உள்ளுக்க போட்டார். அந்த நேரம் வீராளி  அம்மன் கோவிலில் நின்ற மயூரி  அவரை நினைச்சுக் கத்தியது அவருக்குக் கேட்டது 

                             எங்களின் ஊரில அந்த நேரம் இயக்கதிண்ட சமையல் காம் ஒன்று இருந்தது.  அதில சமைச்சுத்தான் மற்ற அரசியல் முகாங்கள்,  சண்டைமுனையில்  சென்றியில் நிக்கிற போராளிகள் எல்லாருக்கும் சாப்பாடு போறது. பழைய  தார்ப் பீப்பா தகரத்தால உயரமாக மறைச்சு அடைத்திருந்த அந்த வீட்டுக்குள்ளே இருந்து பெரிய அண்டாவில அரிசி அவியிற வாசம் வரும் .

                                              அதுக்குப் பக்கத்தில் இருந்த வெறுங் காணிக்க எப்பவுமே வன்னியில் இருந்து கொண்டுவந்த பாலைக்குத்தி ,முத்திரைக்குத்தி விறகு லோட் குவிந்து கிடக்கும். மலைபோல பறிச்சுக் போட்டுக் கிடந்த அந்த விறகு லோட்தான் அது ஒரு முக்கியமான சமையல் சாப்பாடு வழங்கல் முகாம் என்பதுக்கு அடையாளமாக இருந்தது.

                                          சீப் பிளேன்  சுத்தி மூன்றாம் நாள் அதிகாலை  விடிய முதலே சியாமாச்செட்டி  பொம்பர் சத்தமில்லாமல் மேகங்களுக்குள் மறைந்து வந்து, வளம் பார்த்து சுழண்டு, செங்குத்தாகப் பதிந்து, சமாந்தரமாக இறங்கி ,அன்னக்கிளி பேக்கரியின் கூரயையும் பின்னால நிண்ட தென்னை மரங்களையும் உரசிக்கொண்டு ரெண்டு அறுவது கிலோ பொஸ்பரஸ் குண்டைக் கழட்டி விட்டது. 

                                                 அதில ஒண்டு போறணைக்கு பின்பக்கம் வெடிக்க, மற்றது தென்னை மரம் ஒன்றின் அடியோடு விழந்து தென்னை மரத்தை அடியோடு தூக்கி நாலு வீடு தள்ளி எறிஞ்சுது. 

                                      அதுக்குப் பிறகு இன்னொரு பொம்பர் விறகு லோட்டை குறிவைச்சு ரொக்கட் அடிக்க அது அன்னக்கிளி பேக்கரிய சுற்றி விழவில்லை. கொஞ்சம் விலத்தி பின்னுக்கு இருந்த வீடுகளில், இன்னும்  விலத்தி பண்ணைக் காணிக்க, என்று  கிட்டதட்ட முக்கால் மணித்தியாலம் பொம்பர் வெறி  பிடிச்ச விசர் நாய் போல தாறுமாறா  பறந்து , உறுமி உறுமித்  தாழப்பறந்து ,ரேஸ்பண்ணி எழும்பி , சுற்றி வளைத்து டாக்கெட் எடுத்து ஒரு   பத்து ரொக்கட்டை இலக்கு இல்லாமல் அடிச்சுது

                                            அந்த அடி  ஒஞ்சு ,பொம்பர் உறுமல் மெல்ல மறைந்த  பிறகுதான் ஆட்கள் தலையை பங்கர்களுக்கு உள்ளால எடுத்து எட்டிப்பார்த்து ரோட்டுக்குப் போக, அன்னக்கிளி பேக்காரி அரைவாசி எரிந்து  புகை பொஸ்பரஸ் வாசத்தோடு குபு குபு எண்டு கறுப்புப் புகை எழும்ப,முன்னுக்கு  வைரவர் கோவில் கிணத்தில வாளியில தண்ணி அள்ளி பேக்கரி வாசலுக்கு ஊற்றி நெருப்பை அணைச்சுப் போட்டு உள்ளுக்குப் போய்த் தேட

                                         அன்னக்கிளி  பேக்கரி  இருந்த  இடத்தில  வெறும் தகரம்,ஓடு,சீமேந்துச் சுவர், பாண் தட்டுகள், பாண் அச்சுகள் எல்லாம் சுருட்டிப் பிழிஞ்ச மாதிரி  குப்பை மேடுதான் இருந்தது. கந்தக வெடிமருந்து வாசம் மூக்கில நுழையவே தலைச் சுத்துற மாதிரி வந்தது. கூரை எரிஞ்சு இடிஞ்சு விழுந்து கிடந்த இடத்தில கையில பாண் தட்டுக்கு  எண்ணை போடுற சீலைத்துணியை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு கடுகஸ்தோட்டைப் பொடியன் சிதறிக் கிடந்தான், அவனோட இடுப்புக்கு மேலே அவன் என்று சொல்ல எதுவுமே இருக்கவில்லை .

                                        அன்னக்கிளி முதலாளியத் தேடித்   பின்னுக்குப் போறனைப் பக்கம் ஓடிப்போக, அவர் போறணை வாசலில் சரிஞ்சு போறணை இடிபாட்டுக்குள் நெஞ்சு மட்டத்துக்குப் புதையுண்டு  கிடந்தார். மூச்சு இருக்கா முகத்தைத்  தூக்கிப் பிரட்டிப் பார்க்க பின் மண்டையில் அரைவாசி இல்லை. 

                                        அப்பிடியே அதில அவரை  போட்டுட்டுடு தோண்டி இழுத்து எடுத்து  என்னத்தாலையும்  மூடுவம் என்று துணி என்னவும் இருக்கா என்று பேக்கரிக்க தேட ஒரு மூலையில் ஒரு பெரிய தேயிலை அடைச்சு வாற மரப்  பெட்டி கிடந்தது

                                  அதைத் திறந்து பார்க்க  நிறைய வெள்ளை வேட்டி அடுக்கி வைச்சுக் கிடந்தது. இழுதுப்பாக்க இதுவரைக்கும் கட்டாத புது வேட்டிகள்  கொம்பனி சீல் கூடக் கழட்டாமல் கிடந்தது, அந்தப் பெட்டிக்குள்ள பூச்சி  வராமல் இருக்க மூட்டைப் பூச்சி மருந்து உருண்டைகள் நிறைய போட்டு வைச்சு இருந்தது . அதில சில வேட்டிகளை  எடுத்துக்கொண்டு வந்து அன்னக்கிளி முதலாளியை  தூக்கி கொண்டு வந்து மூடுவம் என்று இடிஞ்சு விழுந்த போறனை அரிகல்லுகளைக் கிண்டி  இழுத்தம் .

                              அப்பவும்   அன்னக்கிளி முதலாளி போறணைக்கு உள்ள பாண் அனுப்புற பெரிய இரும்பு சவளை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு கிடந்தார் .               



Friday, 6 November 2015

நடராசா பெரியப்பாவும் , J . கிருஷ்ணமூர்த்தியும்.

யாழ்பாணத்தில எங்கட வீடில, எங்கள் அம்மாவின் அக்காவைக் கலியாணம் செய்த, லண்டனில படித்து, ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரப் பகுதியில் உலகம் எங்கும் வேலை செய்த நடராசா பெரியப்பா ஒருவர்தான் நான் அறிய, கொழும்பில் வசித்தாலும், ஒவ்வொரு விடுமுறையிலும் யாழ்பாணம் வந்தால் J. கிருஷ்ணாமூர்த்தி என்ற J.K யோட புத்தகங்கள் மட்டும் வாசிப்பவர் . J.K புத்தகங்களைப் படிபவர்களுக்கு ஒரு " படிச்ச மனுசர் " எண்டு ஒரு அனாவசிய சமுக அந்தஸ்து இருந்தது யாழ்பானத்தில அந்த நாட்களில்!

                            சமஸ்கிரித ஆசிரியையா இருந்த என்னோட பெரியம்மாவோ, அவரின் ஒரே மகள் யசோ அக்காவோ அதெல்லாம் வாசிக்கமாடார்க, அவர் வாசிக்கும் J.K யோட புத்தகங்கள் சும்மா ஜுஜுபி ஆங்கிலத்தில இல்லை, படுபயங்கர தலைகரணமான ஆங்கிலத்தில் இருக்கும். பெரியப்பாவே J .கிரிஷ்ணமுர்த்திபோல அமைதியா ,ஒருவருடனும் அனவசியமா பேசாமல் தியானம் செய்பவர் போல இருப்பார்,சாம்பாரு போல எப்பவும் வேறு  நிறைய ஆங்கிலப் புத்தகங்களும்  வாசித்துக்கொண்டு இருப்பார், ஆனால் ஒருநாளும் அந்த புத்தகம் பற்றிப்பேசவே மாட்டார்,அவர் படிப்பது அவருக்கு மட்டுமே என்பதுபோல வாசித்துக்கொண்டு இருப்பார் !
.
                                                  நடராசா பெரியப்பா, பெரியம்மாவையும், யசோ அக்காவையும் கூட்டிக்  கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்த வேலையாக,  ,பொட்சுவான என்ற கிழக்கு ஆபிரிக்க நாடில் இருந்த லெசோதோ என்ற மாகாணத்தில் புள்ளிவிபரப் பகுதியில் வேலை செய்யப்போக என்னோட, பெரியம்மா  அந்த நாடில , உயர் BP ரத்த அழுத்தம் அதிகமாகி, அகாலமா இறந்துபோக, அவாவின் பூதவுடல் எரிக்கும் இடத்துக்கும் முன்னால, அவவின் இறுக்கி  மூடிய பிரேதப் பெட்டியைப் பார்த்தவாறு பெரியப்பாவும், யசோ அக்காவும் சோகமே உருவாக நிற்கும் போது,  எடுத்து அனுப்பிய படத்துடன் தான் அந்த மரண செய்தி வர என்னோட அம்மா

                    " அக்கா, என்னை விட்டுடு போயிடீங்களே "

                                    எண்டு குளறிக் குளறி அழுதா !  பெரியம்மா , எதோ ஒரு  ஆபிரிக்க நாட்டில் அனாதையா உறவுகள் சுற்றி இல்லாமல் இறந்த சில வருடங்களின் பின் நடராசா பெரியப்பா,  யசோ அக்காவையும் கூட்டிக்  கொண்டு விடுமுறையிலும் யாழ்பாணம் வந்தார் ,வந்து ஒருவருடனும் அனாவசியமா பேசாமல் , J.K யோட புத்தகங்கள் வாசித்துக்கொண்டு இருந்தார் !

                                    என்னைப்பொருத்தவரை ,  அந்தப் புத்தகம் எல்லாம் தொடக்க வரியில் இருந்து முடியும் வரை "வாழ்க்கைத் தத்துவத்தை " வில்லங்கமான மொழி நடையில், அதிகம் பாவனையில் இல்லாத விசித்திரமான ஆங்கில சொற்களில், அதைவிட விசித்திரமான வர்ணனையில், மானாவாரியாக தத்துவத்தை லொறி லொறியா அள்ளிக் கொட்டும். 

                                      சும்மா " டமால் டுமில் " எண்டு உங்களை வெருட்டச் சொல்லவில்லை அநதப் புத்தகங்களின் தலைப்பே விளங்க ஒரு கிழமை எடுக்கும்.தத்துவ மேதைகள் அப்படிதான் தலைப்பு வைப்பார்கள், அதுக்கு காரணம் அவர்கள் சொல்லும் விசியம் போலவே அதன் தலைப்பும் இருக்கவேண்டும் எண்டு இருக்கும் போல!

                             பிளேட்டோ அவரோட புத்தகத்துக்கு " டேமொசகிரசி" எண்டு வைக்க, எனக்கு ரெம்ப்பப் பிடித்த, பிரேடிச் நெட்சே அவரோட தத்துவ பைபிளுக்கு "யாரதுச்டிதிரா " என்ற அழிந்துபோன சமயத்தின் பெயரை வைத்தார்!J.K இன் போதனைகளைக் கேட்கவே ஒரு ரசிகர் மன்றம் கும்பலாக அலைந்து இருக்குறார்கள் உலகம் முழுக்க! ஆன்மீக வறட்சி உள்ள மேலைநாட்டினர் J.K ஐ அமரிக்கா, ரிஷி வலிக்கு, அழைத்து " கவுதம புத்தருக்கு பின் வந்த அறிவின் ஒளி " எண்டு அவரைப் பாப்பா மரத்தில ஏத்தினார்கள்!

                                         கொஞ்சநாளில் பெரியப்பா, யசோ அக்காவையும் கூட்டிக்  கொண்டு  கொழும்பில் இருந்த அவர்களின் வீடில் வாசித்த போது, பெரியப்பாவின்,  வயதான, அமைதியான, ஜோகர் சுவாமிகளின் " சிவ தொண்டன் " ஆன்மீக நிலையத்தில்  முழுநேரம் சேவை செய்த  தந்தையர், திடிரென நோய் வாய்ப்பட்டதால், 

                      " இனி யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை " 

                                    எண்டு ஒரு குறிப்பு எழுதி வைத்துவிட்டு , கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்தார் !அந்த மரண நிகழ்வுக்குக் நடராசா பெரியப்பா, யசோ அக்காவையும் கூட்டிக்  கொண்டு வந்து, மரண நிகழ்வு முடிந்தபின்  எங்களின்  வீட்டில் சில வாரம்  நின்றார்! அப்பவும் ஒருவருடனும் அனாவசியமா பேசாமல் , J.K யோட புத்தகங்கள் வாசித்துக்கொண்டு இருந்தார். நடராசா பெரியப்பா J.K புத்தகம் படிப்பது அயல் அட்டையில், ஒருவருக்கும் தெரியாது, பெரியப்பாவிடம் நான் கேட்டிருகிறேன்

                     ," நீங்கள் ஏன் J .கிரிஷ்ணமுர்த்தி புத்தகம் மட்டும் படிகுரிங்கள் ?"

                            எண்டு,அவர் அதுக்கு

                               " அவர் புத்தகம் படித்தால் ,வேறு ஒண்டுமே இந்த உலகத்தில படிக்கத் தேவை இல்லை, வாழ்கை பற்றிய புதிரை விடுவிக்கும் பிரஞை விழிப்புணர்வு வரும் "

                              எண்டார். சொல்லிப்போட்டு எனக்கு,தமிழில் மொழி பெயர்த்த J .கிரிஷ்ணமுர்த்தியின் புத்தகமான "விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள் " எண்ட புத்தகம் சுப்பிரமணியம் புத்தகசாலையில் போய் வேண்டிதந்தார் ,தந்து

                                " இது ஒரு முறை வாசிக்க விளங்காது,"

                           எண்டு நான் எதிர் பார்த்த மாதிரியே குண்டை வேறு தூக்கிப்போட்டார் , அதை நான் பலமுறை வாசித்தும் ஒரு அறுப்பும் விளங்கவில்லை. விழிப்புணர்வும் வரவில்லை, பதிலாக அதைப் படிக்க விசர் தான் வரும்போல இருந்தது,என்றாலும் சக்கடத்தார் நொண்டிக் குதிரையில் ஊர்வலம் போன மாதிரி அதை சேடம்  இழுத்து இழுத்து வாசித்து முடித்தேன்  !

                                J.K அந்த புத்தகத்தில ஆதரமான இந்திய தத்துவ மரபை, செருப்பால அடிச்ச மாதிரி வெளிப்படயா சொல்லுறார், அதில , அவர் வளர்ந்த , அடையாறு பிரம்ம தியோசொபிகள் சொசைட்டியின் ஆரம்ப கால கொள்கைகள் நிறைய இருக்க, கொஞ்சம் அடிப்படை " சைகொலோயி" தில்லான்கடி தில்லாவவையும் கலந்து, அவரை சின்ன வயசில் இருந்து, அம்மாபோல வளர்த்த அன்னி பெசென்ட் என்ற ஆங்கிலேயப் பெண்மணியையும் விமர்சித்து இருந்தார்! மற்றப்படி அவர் சொன்ன விசியங்கள், ஏற்கனவே மேலைத்தேய, கீளைத்தேய தத்துவங்களில் ஏற்கனவே இருக்கு. 

                      J .கிரிஷ்ணமுர்த்தி தத்துவத்தில் நிறைய சைகொலோயி சயன்ஸ் இருக்கு! அப்புறம் குழப்பமும் இருக்கு எண்டு பிட்காலதில படித்தேன். ஏனோ தெரியவில்லை , அதுக்குப் பிறகு பலவருடம்  நடராசா பெரியப்பா,ஒரு வித வலிப்பு நோயாள அவதிப்பட்ட, அதுக்கு நிறைய  ஆங்கில மருந்துகள் சாப்பிட்ட யசோ அக்காவையும் கூட்டிக்  கொண்டு யாழ்பாணத்துக்கு வரவே இல்லை ,

                         கடைசியா யசோ அக்காவுக்கு திருமணம் செய்ய வந்தார் , நாங்கள் விற்ற எங்களின் வீட்டின் பின்னே உள்ள காணியை வேண்டி , அதில ஒரு வீடு கட்டி , அந்த வீட்டையே சீதனமாகக கொடுத்து கலியாணம் நடத்தி, யசோ அக்கா கணவனையும் அழைத்துக்கொண்டு கொழும்புக்குப் போனா, போய் சிலவருடம் வாழ்ந்து,...

       .                 ..ஒருநாள் ,

                            இன்றுவரை சரியாகத் தெரியாத எதோ ஒரு வெளிய சொல்ல முடியாத காரணத்துக்கு, தன்னையே பலியாக்கி, நிறைய நித்திரை, வலிப்பு நோய் மருந்துகளை ஒரேயடியாக அள்ளிப்ப்போட்டு, ஒரு கிழமை கோமா நிலையில் இருந்து விழிக்காமலே,30 சொச்சம் வயசில தற்கொலை செய்து போய் சேர்ந்துட்டா யசோ அக்கா! அந்த செய்தி யாழ்பாணம் வர ,மறுபடியும் என் அம்மா

                    " கடவுளுக்கே கண் இல்லையா,  வாழுற வயசிலேயே விதி கொண்டு போகுதே என் குழந்தையை "

                             எண்டு குளறிக் குளறி அழுதா !......

                           யசோ அக்கா தற்கொலை செய்து ,  தானாகவே முற்றுப் புள்ளியை முன்னுக்கு வைத்து, அகாலமா மரணித்த போது  நடராசா பெரியப்பா என்ன செய்தார் எண்டு இன்றுவரை எனக்கு தெரியாது. ஒரு வேளை அமைதியா ,ஒருவருடனும் அனாவசியமா பேசாமல் தியானம் செய்பவர் போல இருந்து  J. கிருஷ்ணா மூர்த்தியோட புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருந்து இருக்கலாம் எண்டு நினைக்கிறன்!.
.