Friday, 21 April 2017

நாடோடியின் நகரம் இரண்டாம் தொகுப்பு






நோர்வேயின் தலைநகரம்  ஒஸ்லோ ஒரு குஞ்சுண்டு  நகரம் ,அங்கே  வாசித்த காலத்தில் எழுதிய கவிதைகள் அலாதியானவை. அந்த நகரத்தின்  பிரத்தியேகங்களும் ,  சிசிலியாவின் வாசனையும் ,அனாமிக்காவின் சிந்தனைகளும், எப்போதும் மறப்பதுக்கில்லை. இப்போது சுவீடனில் ஸ்டோக்ஹோலாம் நகரத்தில் வசிக்கிறேன். நானொரு நாடோடி. என் சிந்தனைகள் காற்றைவிட சுதந்திரமானவை . அவை ஒவ்வொரு பொழுதில் உத்தரவாதமாக  இங்கிதம் தந்த உந்துதல்களால் பல வ்ருடங்கள் வார்த்தைகளையோடு முட்டி மோதியே  வாழ்ந்தே கடந்தேன்

பரபரப்பில்லாமல் உங்களுக்கு பிடித்தமானவரோடு கூடவே இருப்பது  போன்றது ஒரு  நகரத்தை  நாலுவிதமாக ரசிப்பது . சலிப்புக்கள்    எல்லாம் தாண்டி   சந்தோசமான  விசயங்கள் நிறைய இருக்கு ஒரு வாழ்கையில் என்று நாங்கள்  வாழுமிடம்  உத்தரவாதங்கள் தரலாம் .  இந்த உலகில் சந்தோசம் எங்கோ  பதுங்கி இருக்கு  என்பதை உணரும்போது நீங்கள் முழு மனிதராய் உணர்வீர்கள். உங்களுக்கும் இதுதான் தேவையாக இருக்கிறது. எனக்கும்தான் !

                                              ஒஸ்லோ ஒரு சின்ன நகரம். பழமையும் புதுமையும் அருகருகே ஒன்றுக்கு ஒன்று இடைஞ்சல் இல்லாமல் கிளிபோலப் பொஞ்சாதி  இருந்தாலும் குரங்குபோல  தொன்மையான அடையாளங்களை   வைப்பாட்டியாக  வைத்திருக்கும்  நளின நகரம். என்னோட மொபைல்போனில் அந்த நகரத்தை வேலைக்கு கடந்து போகும்போதும் வரும்போதும் கிளிக் செய்த படங்களை ஒவ்வொன்றாகப் போட்டுக் கவிதை எழுதியுள்ளேன் 

                                இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம் போலவே  எழுதுவதுக்கு  இன்னமும் படங்களும் இடங்களும்  இருக்கு. ஒருவித சலிப்பில்  அதைப் படம் எடுப்பதையும் ,அதுக்கு கவிதை எழுதறேன் என்ற பிசத்தல்களை  ஒரு கட்டத்தில்  நிறுத்திவிட்டேன் . எதையுமே  அதிகமாய் எழுதினால் வாசிக்கும் உங்களுக்கும்  துன்பமாக இருக்கும். இல்லையா ?

                                                 சிலநேரம் இங்கே  என் மொபைல் போன்  மஹாலக்ஷ்மி எடுத்த   படங்களில் பிரமாண்டமாகப் பிரமிக்க வைத்தாலும் ஒஸ்லோ நோர்வேநாட்டுப் பெண்களின் கொடியிடை இடுப்புப் போல ஒரு அடக்கமான, அவர்களின் கண்கள்போலவே மையிட்ட கண்களில் மான் விளையாடும் நீலமான சின்ன நகரம்...


விரித்து வைக்கப்பட்டிருக்கும்
வானக் குடையின் கீழ்
அப்பாவியாக 
தனித்துக் கிடக்கிறது
ஒஸ்லோ நகரம்!

பகல்களையும்,
இரவுகளையும்,
பெளர்ணமிகளையும்,
உறைபனிக் குளிரையும்
தாண்டி
அணைக்கப்படாத
வெளிச்சத்தில்,
முடிவே இல்லாமல்
ஓடிக்கொண்டிருக்கும்
மனிதர்கள் ,

தவிர்க்க முடியாத
சல்லாபங்கள்,
தீர்க்க முடியாத
கணக்குகள்,
ஒத்துக்கொள்ளாத
தோல்விகள்,
கபடத்தனமான
வெற்றிகள்,
துரோகங்களின்
சாட்சிகள்

எல்லாமே
ஆவணமாக்கப்பட்டு
விரிக்கப்பட்டிருக்கும்
மனசாட்சியின்
கீழ்
குற்றவுனர்வோடு
தனித்துக் கிடக்கிறது
ஒஸ்லோ நகரம்!.



யூலை 22* கோடைநாளின்
பின்னேரம்
தனிப்பறவை ஒன்று
விட்டு விட்டு பாடல் ஒன்றை
சந்தோசமாக்கிக் கொண்டிருந்த
கருணையில்லாத
கடைசி நிமிடத்தில்,
வெடித்த அதிர்வின்
புகையடங்க முன்னரே,
இறந்தவர்கள் விழுந்த இடத்தை
சுற்றி இரத்தம் வட்டமிட்டது.
நான் நிற்குமிடத்தில்
அவர்கள்
விழுந்துகிடந்த இடத்தில்
உயிர் தடுமாற
இந்த மரங்களும்
பார்த்துக்கொண்டு இருந்தது.
அதன் பின்னர்
வெறிச்சோடிக் கிடந்த
வசந்தகாலத்தின் சாலைகளில்
வெள்ளைப் புறாக்கள் மட்டும்
பதடமில்லாமல் இருக்க ,
வந்தேறு குடிகளுக்கு எதிராக
தாறுமாறாய் தூசனத்தில்
கிறுக்கப்பட்டிருந்த
சுவர்களில்,
வழிந்து கொண்டிருந்தது
குடியேற்றத் துவேசம் !
தனிமையின் குளிரில்
வடதுருவக் காற்று
உத்தோயா* படுகொலைக்
கதைகளை சுமந்து
ஒப்பாரி பாடிய
ஒரு வாரத்தில்
இருந்து
இன்னொரு வருட
இடைவெளி வரை
அழுது வடிந்து
இறந்து பிறந்தது
ஒஸ்லோ நகரம் !

{ 2011 யூலை 22*- இந்த இடத்தில நடந்த அந்த குண்டு வெடிப்பு சமபவத்தில நானும் தப்பினேன், அன்ரிஸ் ப்ஜெர்விக் என்பவன் வெடிக்க நேரம்குறித்து விட்டுச்சென்ற சக்கைவான் வெடிக்க 8 பேர் கொல்லப்பட்டனர், அதே நாள் 2 மணிநேரத்தின் பின் உத்தோயா* என்ற தீவில் 69 இளம் " டீன்ஏஜ் " பிள்ளைகளை அதே அன்ரிஸ் ப்ஜெர்விக் துவக்கால சுட்டுக் கொன்றான்,கரணம் - இஸ்லாமோபோபியா என்ற இனமான மனவருத்தம்!}





யாரும் களவாட முடியாத
தனிமையும் கூட
பறவைகளை
அலுக்காமல்
அன்போடுதான் 
அரவணைக்கிறது

வண்ணங்களற்ற
சிறகுகளுடன்
வந்திறங்கும்
அவைகளின் குஞ்சுகள்
மீதும் ஆரம்பத்திலேயே
உயிர் நம்பிக்கையைப்
பூசிவிடுகின்றது....
சுற்றி நடக்கும்
மனிதர்களால்
அச்சமும் தயக்கமும் 
தெளிக்கப்படுகின்ற
நேரத்திலும்
நம்பிக்கைகளை
வாரி நாலுபக்கதுக்கும்
வழங்கிக்கொண்டேயிருக்கிறது
இரவெல்லாம்
அயராமல்
மெல்லிய ஒளியின்
விளிம்பு தெரியாத
கரையைத் தாலாட்டித்
துயரத்தைத்
துடைத்தெறிந்து
தூங்க வைக்கிறது....
நடு இரவில்
வெள்ளிகள் எண்னும்
மெலிதான நுரை அலை
பகலெல்லாம்
அணிந்துகொண்டிருக்கு
மேகம் வீசிய
நீலநிறச் சேலையை
பக்கச்சார்பற்ற
ஒரேயொரு
வெளிச்சமான தினம்
என்னைப் போலவே 
கொஞ்சம் நின்று பாருங்கள்
பறவைகளுக்கும்
ஏரிக்கரைக்கும்
மனதோட உறவான
உயிர் வாழ்தலின்
ரகசியத்தை
பிரஸ்தாபித்துவிடும்
ஆத்மா .

ஒரு வரியில்க் 
கவிதைக்கான 
சாத்தியங்கள் 
பெருவாரியாகச் 
சுற்றி வளைக்கும் 
ஒரு பழைய நகரத்தின்
பழைய பாதை வழியில்
வரலாறு நின்றுவிடுகிறது

வெய்யில் பிழியும்
மனிதர்களின்
வியர்வை வாசத்தில்
பெண்களின்
பிரத்தியேக வாசம்
சித்திரைக் காற்றை
ஈரமாக்குகிறது.....

இரவெல்லாம்
சிரித்தும் அழுதும்
களைத்துப்போன
நடைபாதைகளை
கவனமாக மிதித்துக்கொண்டே
உலாவவேண்டி நினையுங்கள்

வலி சுமந்த
மனிதர்களின்
கதைகளைக்
கேட்டுக்கொண்டு
நிழல் போல
அதிராமல்
எனது கால்த் தடம்
வழியெங்கும்
பதிந்துகொண்டேகிறது.....

நடக்க நடக்க
சிந்தனைகள்
தெளிவாகுமென்பது
தெரியும் மட்டும்
வலிக்கட்டும்....

எனது சுவடுகள்
இன்னோருவரின்
துன்பத்தின்
தாள கதியில்
இணைத்து அதிருமாயின்
இன்னுமின்னும்
பல மைல் தூரத்திற்கு
நடக்கலாம்..

எனக்கும்
என் முதுகுக்கும்
நன்றாகத் தெரியும்
பிழைக்கத்தெரியாத முட்டாளென்று
நீங்கள் ...
இயலாமையுடன்
பொருத்திப்பேசுவது

நான்
பார்க்கும் உலகம்
என்மண்ணில் விடுபட்டுப்போன
ஆத்மாவை உசுப்புகிறது
அதன்
அதிர்வலைகள்
உறைபனி நாட்டிலும்
வேப்பம்பூக்களை உலுப்புகிறது

அறியப்படாத
மூளை ஒரத்தில்
அலட்சியமாக
துருப்பிடித்திருந்த
எழுத்து
ஜன்னல்களைத்
அகலத் திறந்துவிடுகிறது

மழுங்கிக்கொண்டிக்கும்
தாய்மொழியின்
முனையை
கவிதையிலும்
கதையிலும்
உரசி உரசியே
பட்டைதீட்டுகிறேன்

முடிந்தவரை
கிளை கொம்புகள்
கொடியில்
பற்றிப்பிடித்துப் பேச
கைப்பிடித்து
திரும்பமுடியாத
விடிவெள்ளியின் திசையில்
அழைத்துச்செல்கிறேன்

இதற்காகத்தான்
தாகமெடுக்கும்
அற்புதமான தருணங்களிலும்
நேரத்தைக்
கடத்திக்கொண்டுபோய்க்
காவுகொடுத்து
எழுதிக்கொண்டேயிருக்கிறேன்
என்பதை மட்டும்
உறுதியாகச் சொல்கிறேன்.

.


ஆளுமைப்படுத்தும்
சின்ன அசைவுகளில்
தொடர்ச்சியாக
முரண்பட்டுக்கொண்டிருக்கும்
மைய நகரம்...
நகர்ந்துகொண்டிருந்தது
இதயவடிவில்
மலர்வளையங்கள் போலவே
அதன் நளினங்கள்
பின்தொடர்ந்துகொண்டிருக்க
கடவை விளக்குகள்
நிமிடத்தில் பாதியாகி
நிறம் மாறுகின்றது
தொட்டுப் பார்க்க
இடம் கொடுக்காத
குளிரை
முகத்திலறைந்துகொண்டு
மனிதர்கள்
குறுக்கமறுக்க கடந்து
நேற்றுத் தொலைத்த அவசரத்தை
இன்றும்தேடுகிறார்கள்
நான் நிற்குமிடமும்
நிராகரிக்க முடியாமல்
அதுவேதான்
ஒருசமயம்
வியப்புக் கொடுக்கும்
எல்லாக் காட்சிகளுமே
ஆழப்பதிந்து
குத்தி
உள்ளிறங்குவதில்லை
மறுசமயம்
உரையாடல் மனதில்
வார்த்தைகள்
தேடினாலும்கிடைப்பதில்லை
பிறகேன் கழுதை
அர்த்தமின்மையை
வரவேற்க யாருமில்லாத
சந்திவளைவில்
நின்று
சப்பாத்துக் கால்களைப்
பார்த்துக்கொண்டிருகிறாய்?
என்கிறது ஆத்மா.





நட்சத்திரங்களற்ற
நவீன நகரம்
வீம்புக்குக் குந்தியிருக்கும்
கும்மிருட்டு
வண்ணாத்திப்பூச்சியைத்...
திரத்தும் வெய்யில்
அலகு தீட்டும்
மொர்க்கோ பார்வை
வளைக்காப்புப் போட்ட
பேர்ச் மரங்கள்
வெள்ளைச் சருகில்
உறங்கும் உறைபனி
வெளிச்சங்களின் விலாசம்
சொங்ஸ்வான் ஏரிக்கரை
விம்மிக் கொண்டிருக்கும்
ஹோல்மன் குன்றுகள்
நச்சென்று குட்டும்
நடை பாதைகள்
நெளிப்புக்காட்டி ஓடும்
ஆர்கிஸ்எல்வா நதி
வயதில் பக்குவப்பட்ட
பைன் மரவீடுகள்
கடவுளின் மொழிபேசும்
வெள்ளைக் குழந்தைகள்
அவன்,அவள்,அது
இதெல்லாம்
நான்
பார்க்க மறந்தாலும்
ஒரு செக்கன் நிக்கவைத்து
தான்
பார்த்து ரசிப்பாள்
என்
மகாலக்ஸ்மி கலக்சி.


கால்களை
சில்லென்று நனைத்தபோது
தண்ணியில்...
மிகத்தெளிவாக
வழுக்குப் பாறைகள்
தெரிந்தது

என்
அளவுக்கதிகமான
மவுனம்
சருகுகளை மிதித்து
நடந்துகொண்டிருந்தவர்களின்
இரைச்சல்களுக்கு
இடைஞ்சலாக
இருந்திருக்கலாம்

நானே
ஒருகட்டத்தில்
ஓவெண்டு குரலெடுத்துக்
கத்த நினைத்தேன்
பார்வை இழந்தவனுக்கு
திசைகாட்டிகள்
உதவாதே

என் சத்தம்
என் குரல்வளையைவிட்டு
வெகுதூரம்
இறங்கிப்போய்விட்டதென்பதை
கிறங்கிக்கிடக்கும்
கரைகளில்
பறவைகளின் கும்மாளம்
தெளியவைத்தது.

முடிக்கப்படாத
பிரச்னைகளில் தான்
நேற்றுக்கும்,
நாளைக்கும்
அர்த்தமிருக்குது போலிருக்கு...



முடிக்கப்படாத
பிரச்னைகளில் தான்
நேற்றுக்கும்,
நாளைக்கும்
அர்த்தமிருக்குது போலிருக்கு...


நம்பமுடியாதவாறு
பின் வந்துதொடரும்
அனுபவத்தோடு
முரண்டுபிடிக்க விரும்பாமல்
என்பாட்டில்
போக எத்தனித்தேன்

பச்சை விளக்கை
நிறுத்த அவதியாகி
மஞ்சளில் கடக்க நினைத்தவன்
சறுக்கினான்

மூக்கு அழகான
கிழக்கு ஐரோப்பியப் பெண்
ஒவ்வொருவரிடமும்
பிச்சை கேட்டாள்

வெறித்து பார்த்த
ஜன்னலிலிருந்து
ஒருவன்
இருமித் துப்பிக்கொண்டிருந்தான்

பாதைக்குக் குறுக்காக
போலீஸ்காரன்
வெறித்துப்பார்க்கும் பார்வையில்
துவேஷத் தூவானம்

தோல்வியைப் பாடும்
தெருப்பாடகனின்
பூனைக் கண்களில்
நம்பிக்கை

பிரத்தியேக வாசனையோடு
கும்பலாகப் கடக்கும்
பதின்வயதினரிடம்
பொறுப்பற்ற சிரிப்பு.

புகைபிடிக்க
குடிவரவுக் கட்டிடடத்துக்கு
முன்னால் நின்ற
நிறைவேற்று அதிகாரி
என்னைவிட அகதிபோலிருந்தார்

என்னைச் சுற்றி
எனக்குத் தேவையான எதுவுமே
நடக்காததுபோல
ஒடுக்கமாக
நழுவிக்கொண்டிருக்கிறேன்.








காற்றுக்கு இன்று
என்னவிதமான
மனநிலையென்று தெரியவில்லை
வழமையாக எப்போதும்
எனக்காகத்...
தனியாக நுழைந்துவிடும்
அந்தத் தனிப்பறவையை
கூட்டத்திலிருந்து
வேறுபடுத்த முடியவில்லை

யாரோவொருவர்
வீசி எறியும்
உதிரி உணவுகளுக்குள்
அதன்
குரலாவது இருக்குமென்று
தேடிக் களைத்து விட்டேன்

ஒன்று போலவேயுள்ள
இறக்கைகள்
ஒவ்வொன்றும்
முட்டி மோதிக்கொள்ளாமல்
ஒரு மிருதுவான
தனியுலகத்தை
தங்களுக்குள்
உருவாக்கிக்கொள்ள

நான்
எரிக்கரையின் விஸ்தீரணத்தை
இன்னும் கொஞ்சம்
அகலமாக விரிக்க
அலைகளை சம்மதிக்க வைத்து
ஒதுக்கித் தள்ளமுடியாமல்
அதிலும்
தோற்றுப்போனேன்...










Wednesday, 19 April 2017

போட்டோகிரபி ..இரண்டாம் தொகுப்படங்கள்

                                                          ஒரு மழை நாளில் ஏரிக்கரை எப்படி இருக்குமென்று விடுப்புப்பார்க சில நாட்கள் முன் அந்தப்பக்கம் போனேன் சூல் கொண்ட கருமேகங்கள் மழைக்குத் தயாராக முன்னெப்போதுமில்லாதவாறு மிக மிக அமைதியாக இருக்கும் சொங்ஸ்வ்வான் ஏரிக்கரை . இந்த ஏரிக்கரையை இதுவரை எடுத்த படங்களில் இது ஒன்றுதான் அதன் அழகையும் பரிமாணத்தையும் அலங்காரம் ஏதுமற்ற சிலாகிப்புக்களை கொஞ்சம் ஒத்துக்கொள்ளும்படியாக ஒரு நேச்சர் போட்டொகிராபிக்கு அண்மையாக வந்திருப்பது போல இருக்கு . ஒரு மொபைல் போனில் இவளவு ஆர்டிஸ்ட்க் டெப்த் வருவதே அபூர்வம். எப்டியோ வந்து விழுந்து அசத்தி என்னையும் மகிழ வைத்த இந்தப் படம் ஒரு நம்பமுடியாத ஆச்சரியம் 

                                                                 வெய்யில் வண்ணாத்திப்பூச்சிகளோடு விளையாடவேண்டிய இந்த மாதங்களில் ஒஸ்லோவை சிணுங்கி சிணுங்கிக் குளிக்கவார்க்குது கோடை மழை. வீட்டு ஜன்னல் வழியாக மழையை ரசிப்பது என்பது ஒரு அனுபவம். அதே மழையை வீதியெல்லாம் சொட்டுச் சொட்டுச் துளிகளோடு நனைந்துகொண்டே அலைவது இன்னொருவிதமான நேரடியான அனுபவம். மழைக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகுது அதுபாட்டுக்கு அப்பப்ப அழுது வடிந்துகொண்டே இருக்கு. நகரமும் அதன் கண்ணீர்த் துளிகளை துடைத்துகொண்டியிருக்கு.
                                                                புல்வெளிகளை அப்படி யார்தான் அடிச்சுப் பிழிஞ்சு கழுவி எடுத்துத் தோய்ச்சுக் காய விடுகிறார்களோ தெரியவில்லை. ஒரு சின்ன மழையோடு அசைக்கமுடியாத உற்சாகம் அவைகளுக்குத் தொற்றிக்கொள்கிறது. அந்த நேரம் பார்த்து மாவிலை தோரனம்கட்டி நிறைகுடமாக ஒரு கலியானவீட்டையே மஞ்சள் வெய்யில் நடத்திவிடுகிறது சொன்ங்க்ஸ்வான் ஏரிக்கரையில் . எழுதுவதுக்கு வார்தையற்று நானோ வாயடைத்து நிக்க தன் பங்குக்கு செண்டிமெண்ட் முகூர்த்தங்கள் முடிய முன்னர் ஒரு புகைப்படத்தைப் பனோராமிக் என்ற வெளிவிரிநிலை ஸ்டைலில் எடுத்துவிட்டாள் மஹாலக்ஷ்மி.


                                                        ஆர்கிஸ்எல்வா நதியை நேற்று அது ஆரம்பிக்கும் இடத்துக்கு அண்மையாக சந்திக்க முடிந்தது . மரியடால்ஸ் என்ற இடத்தில நதி கால் நனைக்கும் அளவில் தண்ணியோடு நடமாடிக்கொண்டிருந்தது. அதன் கரையில் இறங்கி இந்தப்படம் எடுத்தேன் ,நதி என்னை ஏறெடுத்தும் கவனிக்காமல் அதுபாட்டுக்கு அசைந்துகொண்டிருந்தது




                                                           சொங்ஸ்வான் ஏரிக்கரை முழுவதும் விதம் விதமாய்க் கோடை மலர்கள் புதர்களை மண்டிக்கொண்டு மெல்லிய வடதுருவக் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருகின்றன. அவைகளின் நோர்க்ஸ் பெயர்கள் எனக்குத் தெரியாது. முடிந்தவரை விதம்விதமானமலர்களை அந்த எரிக்கரையைச் சுற்றி நடந்த போது படம் எடுத்துள்ளேன். பெயர்களை நோர்வேயில்வசிக்கும் நண்பர்கள் சொன்னால் அறிந்துகொள்ளலாம் என்ற துணிவில் ஒவ்வொன்றைப் போடுகிறேன்.

                                               உண்மையில் அடையாளப்படுத்தி வேறுபடுத்தும் வகைப்படுத்தலுக்கு என்ற அடிப்படையில் மலர்களுக்கு மனிதர்கள் பெயர் வைத்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனாலும் மலர்கள் தங்களைப் பெயர் சொல்லி அழைப்பதை விரும்புமா என்று தெரியவில்லை.. பெயர் இல்லாமலே மலர்கள் அழகாகத்தானே இருக்கின்றன




                                                        என்னதான் நவீனங்கள் நகரத்தை அடிச்சுப்பிடிச்சு சுற்றிவளைத்து ஆக்கிரமித்து வானுயரங்களை தொட்டாலும் சென்ற நூற்றாண்டின் தொன்மங்களை மிச்சமாக வைத்திருக்கும் செங்கல்லுக்கு கட்டிடங்கள் தங்கள் ஆதர்சமாக எப்போதும் கட்டிக்காக்கும் பழமையில் கொஞ்சமும் விட்டுக்கொடுப்புகள் செய்வதில்லை. நடு ஒஸ்லோ நகரத்தில் இந்தக் கட்டிடம் கம்பிரமாக டொச்சு காலக் காலனித்துவ ஸ்டைல் கட்டிடக்கலையை நினைவுபடுத்துகிறது . இலங்கையில் இந்த டொச்சுக்கால ஆக்கிடெக்சர் ஸ்டைல் இல் நிறைய தேவாலயங்கள் இருக்கு...

                                                             

                                                                 வழிக்குறிப்புக்கள் ஏதுமற்ற காட்டுப்பாதை போலவே வாழ்க்கையும் திசைகாட்டிட இப்பவல்ல எப்பவுமே ஒரு பாதையைச் சரியாகத் தேர்ந்தெடுப்பதில் குழப்பமாக இருக்கு. பாதை முடிவில் இன்னும் பாதைகள் வேறு வேறு திசையில் பிரியலாம். முடிவே இல்லாத பாதைகள் சுற்றிச் சுற்றி வந்து தொடங்கிய ஒரே புள்ளியில் முடியலாம். துணிந்து காலடி வைப்பவர்கள் சிலர்தான் வழிகளில் உள்ள எல்லாத் தடைகளையும் தாண்டிக்கொண்டு வந்து இலக்குகளை அடைகிறார்கள்.

                                                           உனக்கான பாதைகள் எங்கோ இருக்கு, அதை காணமுடியவில்லை என்றால் நீயே உன் பாதையை உருவாக்கிவிடு என்று தன்னம்பிக்கை உள்ளவர்கள் சொல்கிறார்கள். ஏரிக்கரை முழுவதும் இப்படி பிரிந்து பின் சேரும் பாதைகள் நிறயவே வாழ்க்கை போலவே உள்ளது



                                                             வாழ்க்கை ஒரு முடிவில்லா அலைகளுடன் முட்டிமோதி நீச்சலடிக்கும் பயணம்.அதுக்கு முதல் உட்சாக வேலையே தண்ணிக்குள் பாய வேண்டும்.நீந்துவது பற்றிக் கரையில் நின்று விவாதிப்பதில் அர்த்தமே இல்லை.யாரெல்லாம் தண்ணிக்குள் பாயத் துணிகிறார்களோ அவர்கள் வெற்றிக்கு அண்மையாகப் பயணிக்கும் சாத்தியங்களை அ திக்கமாக்குகிறார்கள் ஒஸ்லோவின் புறநகரம் குருண்லாண்ட் இல் ஆர்கிஸ்எல்வா நதிக்குள் வானத்தில் இருந்தது பாயும் மனிதர்கள் போன்ற சிட்பமும் ஒரு தத்துவம் வைத்துள்ளது..


                                                  ஒஸ்லோவில் ஒரு மழை நாளின் மாலை நேரம். காதலர்களை நெருக்கமாக்கிவிட்ட குடை. நடைபாதையில் வெள்ளித் தெறிப்புக்கள்.மெலிய சாரல் போடும் தூறல் புழுதியைக் கழுவி எடுக்கும் பாதை. நீளவே நடக்கும் நீண்ட நிழல்கள். ரகசிய சதிக்குத் தயாராகும் மம்மல் இருட்டு. மஹாலக்ஸ்மி வண்ணக் கலரில் எடுத்த படத்தைக் கறுப்பு வெள்ளைக்கு மாற்றிவிட மழை இன்னும் அதிகமாக காட்சியை நனைப்பது போலிருக்கு எனக்கு. உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை.

                                                       வெய்யிலோ மழையோ தென்றலோ புயலோ உங்கள் பாதைகளில் சந்தோசங்களை விதைத்துச் சென்ற அந்த நாலு நண்பர்களை மறக்கவே வேண்டாம் என்கிறது காலம். தனிமரங்கள் தோப்பாவதில்லை தனி மனிதர்களின் தனிமையாகிய எதிர்மறையான இடைஞ்சல்கள் வாழ்க்கை இடைவெளிகளை நிரப்ப வரும்போது தட்டிக்கொடுத்த அந்த நாலு நண்பர்கள் சும்மா வந்துபோனவர்கள் இல்லை. அவர்களின் பெறுமதிகள் நேற்றைகளை மறந்து, நாளையை ஜோசிக்க விடாமல், இன்று கிடைத்த ஒரு நாளை முழுமையாக வாழவைத்துவிட்டு போவது பற்றிய நம்பிக்கை உத்தரவாதங்களைத் தாராளமாகத் தரலாம். நம்மைச் சுற்றி அன்பான ஒரு உலகத்தை நாங்களேதான் உருவாக்குகிறோம்.அதில் தோற்றுப்போனால் அதுக்கும் நாங்களேதான் காரணம் போலிருக்கு 

                                                       ஒஸ்லோவின் நயாகரா . நேற்று பாதையை தவறவிட்டு ஆற்றின் போக்கில் நகரத்தைத் தேடியபோது இந்த இடம் தட்செயலகாச் சந்திக்க வேண்டி வந்தது . மரியடால்ஸ் நீர்வீழ்ச்சி இந்த இடத்தில்தான் ஆர்கிஸ் எல்ல்வா ஆறாகப் பரிணமித்துப் பிரமாணம் எடுக்குது என்று நினைக்கிறன்.



                                                        நேற்று ஒஸ்லோவில் உள்ள சாகனை என்ற பழமையான ஒரு சிறிய இடத்தில ஒரு திறந்தவெளி இசை நிகழ்ச்சி .. வெயிலோடு மனிதர்கள் இளைப்பாறி இசையில் திளைக்கிறார்கள் ..
                                                                 
வெய்யில் தான் பேசுவதுக்கு வெளியே அழைத்திருக்கும் போல . என் இளமைக்காலத்தில் இப்படி ஒரு நண்பர்கள் பட்டாளம் அம்மாசியா குளத்தடி கிரிகெட் கிரவுண்டில் இருந்தது. உருப்படாத விசியங்கள் பேசிக்கொண்டு இருட்டும் வரை உலகமே அழகா இருந்தது அப்போது. இப்போது அவர்களில் சிலர் உயிரோடு இல்லை. பலர் என்னைப்போலவே உலகமெங்கும் சிதறிப்போன கதைகளால் மட்டும் ஏனோதானோவென உலாவுது நினைவுகள் ....ஏரிக்கரை சொங்க்ஸ்வானில் மஹாலக்ஸ்மி இதையும் கிளிக்கினாள்..


Tuesday, 18 April 2017

மனம் திறந்து ...........

 கவிதை எழுதுவதில் உள்ள அசாத்தியமான சவாலே, ஒவ்வொருவரும் அவரவருக்குரிய தனித்துவமான அடையாளங்களோடு தங்கள் படைப்புக்களை வெளிக்கொணரவேண்டும். ஆனால் இன்றைய முகநூலைக் கவனித்தால் அதிகம் அப்படி வருவதுபோல தெரியவில்லை. பல கவிதைகள் பத்து இடத்தில உள்நுழைந்து காவுவேண்டிய வார்த்தைஜாலங்களை வசதிப்படி  டிக்கரிங் செய்துவருவது போலிருக்கு. பலரோட கவிதை படித்தால் கட்டாயம் " stimulation or arousal of the mind, feelings, etc, to special or unusual activity or creativity "  என்ற நிலைமை எங்களை அறியாமலே உள்நுழைந்து விடும் அதைத் தந்திரமாகத் தடுக்கவேண்டும். 


                                                ஒவ்வொருவர் வாழும் இடத்திலயே விளிம்புநிலை மனிதர்களின் சொல்லமுடியாத வார்த்தைகள்  வாய்ப்புகளுக்கு காத்திருக்கும்  ஏகப்பட்ட கவிதைகள் எழுத எப்பவுமே இருக்கும் ,அதை அதிகம்பேர் எழுதுவதில்லை .அதெல்லாம் விட்டுப்போட்டு என்பதுக்களில் வானம்பாடிக் கவிஞ்சர்களே வேண்டியமட்டும் எழுதிக் கவுத்துபோட்டு போயுள்ள, காதல் ஏக்கம் ,காதல் தோல்வி, காதல் மயக்கம், காதல் கனவு ,காதல்  பிரிவு, காதல் விரசம், காதல் விரகதாபம்   அது இது எண்டு சென்டிமென்டலா எழுதிக்கொண்டிருக்கிறார்களென்று விளங்கவில்லை.  


                                                        எனக்குக் கட்பனைகளை பறக்கவிடத்   தெரியாது , கட்பனைகளைக் கட்பனை செய்யவும் அதிகம் தெரியாது , நான் பார்க்கும் உலகம் எனக்கு உள்ளே எப்போதும் உள்ளிறங்கி சில கேள்விகளை எழுப்பிவிடும் , அது இயல்பாகவே எனக்கென்று  எழுதென்று வார்த்தைகளை கோர்த்துத் தரும். அந்த சுதந்திரம் அடுத்தவர்கள்  எழுதும்  " கான்செப்ட் " , அவர்கள் கையாளும்  கவிதைமொழி, அவர்கள் எழுதும் " ஸ்டைல் "  இவற்றை மனச்சாட்சிக்கு விரோதமாகத்  திருடவேண்டிய அனாவசிய ஆபத்திலிருந்து எப்போதுமே காப்பாற்றிவிடும் . 


                                                என்னைச் சுற்றி நடப்பவைகளில் என்னை நானே அடையாளம் காண்கிறேன் . அதில் ஆதிக்கம் செய்தவைகளை மிகவும் கண்ணியமான ஒரு சில சொல்லாடல்களில் உள் வாங்கி எழுதிய கான்செப்ட்கள்தான் மிகப்பிடித்தமான ஒரு பொழுதொன்றில் வார்த்தைச்சித்துக்களாகி இப்படியே வந்துவிழுந்துவிட்டன, இதில பெரிய கவித்துவ சிந்தனைப் போக்குகள் இல்லாமலிருக்கலாம், ஆனாலும் வார்த்தைகள் சொல்லவரும் விசயங்கள் கடினமானவை

                                                     அப்படியாக  இன்றைக்கு நேசத்துக்குரிய வாசனைகளோடு சில கவிதைகள் என் முகநூல் சுவரில் எழுதினேன். அதை எழுத உட்சாகம் கொடுத்ததே கர்த்தரான  ஜேசுநாதர் பெரிய வெள்ளிக்கிழமை  சிலுவையில் அறையப்பட்டு  இறந்து , ஒரு மரணக் குகையைத் திறந்துகொண்டு  உயிரோடு எழுந்து வந்த  செத்துப்பிறந்த கொண்டாடட நாட்களில் ஸ்டோக்ஹோலாம் நகரத்தை ஒரு ரவுண்ட் அடிக்க கால அவகாசம் கொடுத்தது அப்போது. சில படங்கள் என் மொபில் போன் மஹாலட்சுமியில் எடுத்தேன். 

                                                            முகநூல்  சுவரில் இப்பெல்லாம் நான் படங்கள் போட்டு கவிதை எழுதுவதில்லை. அதுக்கு முக்கியமான மூன்று காரணம் என்று நான் நினைப்பது. ஒன்று படங்கள் கட்பனையின் எல்லை வீச்சை ஒரு எல்லைக்குள் ஒடுக்கிவிடும். ரெண்டாவது பலர் குறை சொல்வது " நாங்க என்ன நேர்சரியில் படிக்கும்  பால்குடி பபா  சின்னப் பிள்ளைகளா படம் பார் பாடம் படி என்பதுபோல எதுக்கு எங்கள் விசாலமான வாசிப்பு அறிவைக் குறிக்கிவிடுறிங்கள் " என்று குறை சொலவ்து.  இதிலும் நிறைய  உண்மை இருக்கு.  

                                                  மூன்றாவது காரணம் படம் போடடால்  " ஸ்மார்ட் மொபைல் போனில் " அது நிறைய இடத்தை  தொடுதிரை மேட்பரப்பில் உள்வாங்கி ஸ்மார்ட் மொபைல் போனில்  வாசிக்கும் பலருக்கு   மூட்டைப் பூச்சி கடிக்கிற மாதிரி  அரியண்டம் கொடுக்கும். இந்தப் பிரசினைகள் இருப்பதால்  என்னோட அகன்ற மின்னேறிஞ்ச வெளி இணையப் பூங்காவன   ப்லோக் சுவரில்   நான் எடுத்த படங்களுடன் அவை தந்த உந்துதலால் எழுதப்பட்ட கவிதைகளையும் போடுகிறேன். நேரமுள்ள  போது  உங்க அபிப்பிராயம் மனம் திறந்து சொல்லுங்க ............. 







தெருச்சுவரில் 

அபத்தமான ஓவியம் வரைபவன் 

தயங்கித் தயங்கிய 





கோடுகளையும் புள்ளிகளையும் 





சில கோணங்களையும் 



பல வளைவுகளையும் 



சில பல சுழிப்புகளையும்



இணைத்துக்கொண்டிருக்கிறான் ,



வீடில்லாதா செய்திகள் 



அவனின் 



கலைந்த கற்றையான தலைமயிரிலும்



குளிப்பு முழுக்கு இல்லாத 



விட்டேந்தியான வியர்வை வாசனையிலும் 



முன்னுரை எழுதிக்கொண்டிருக்கு, 



அவனின் 



நிறத்தெரிவுகள் 



அவனின் மனப்பிறழ்வுகள் போலவே 



புரியமுடியாமலிருந்தது ! 



இந்தச் சுவர் 



அவனுக்கென்றே பிரத்தியேகமான 



தோல்விகளில் விடைதேடும் 



நாட்க்குறிப்பாகவிருக்கலாம் !



சொல்ல முடியாத 



வார்த்தைகளை அவன் காயப்படுத்தாமல் 



மிக மிக மென்மையாகவே 



மை விசுறும் கொள்கலனை 



அசைத்துக்கொண்டிருக்கிறான் ! 



நான் 



கொஞ்சநேரம்தான் அவடத்தில் 



முழங்காலில் குந்தியிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன் 



ஒரு 



பெரிய கதையைப் 



பகுதி பகுதியாக்கிப் புகுத்தி விடும் 



நேர்மையான நேர்த்தியில் 



நான் 



இதுவரையில் வாழ்க்கையை வலிந்து 



எழுதிய எல்லாக கவிதைகளும் 



அர்த்தமிழந்துவிட்டது !





குளிருக்கு 
மாங்கல்யத் தாலிகட்டி 
பதிவிரதைப் பவ்யத்துடன் 
வாழ்நாளெல்லாம் வாழ்க்கைப்பட்ட்து போல 
வெய்யிலின் சூடான 
கோடை அரவணைப்புகளையும்
துளிர்கள் வயதுக்குவரும்
வசந்தகால வரவுக்கான முன்னறிவிப்புகளையும்
பறவைகளின்
பாடல்கள் அரங்கேறும்
கிழக்குவான உட்சாக உதிப்புகளையும்
மேகங்களே விரும்புகின்ற
பின்னந்தி மயக்க முழுக்குகளையும்
விதண்டாவாதமாக
தள்ளி வைத்து கொண்டிருக்கும்
நகரத்தில்
நானிருக்கிறேன்
ஒரு
பகல் பொழுதில்
அலைகழிந்தே கழிந்துவிடும் நேரம்
இருட்டில் தான்
அதிகமான இடங்களை ஆக்கிரமிக்குது
ஒரேயொரு
மெழுகுதிரி தியாகமாகிடும்
வெளிச்சச் சிதறல்களை
நெஞ்சோடு நெருக்கமாக்கி
ஒன்றுவிடாமல் சேகரித்து வைத்து
ஒரு
வாழ்வின் கதையை எழுதிவிட நினைக்கிறேன்





ஒரு
பயணத்தின் முடிவு 
இன்னொரு வாசலின் தொடக்கம் 
இடைப்பட்ட 
யாத்திரையின் 
சொட்ப கணங்களுக்குள் சிக்கியுள்ள 
நம்பிக்கைகளை விபரித்துச்
சொல்லவேமுடியவில்லை !
நீண்டகால சந்தேகம்
தறிகெட்ட தட்பெருமை
ஒரு
திடீர் திருப்பத்தில்
இன்னுமொரு நம்பமுடியாத இடத்துக்கு
நாளையையும்
நகர்த்திவிடலாம் !
ஆச்சரியம் கொடுக்கும் அனுபவம்
நுட்பமான தந்திரம்
மனதை வடித்துவிடும் முடிவுகள்
இவற்றோடுதான்
எப்போதும்
ஆழமான மனப்பதிவுகளாக
கனவுமுடிகிறது .
நிறங்கள் அடர்தியானவொரு
ஓவியத்தின்
இருட்டின் நிழல்த் தெரிவுகள்
அருகருகில் தடுமாற்றமாய் நிக்க
இப்போதைய தேவையெல்லாம்
ஒரு
மூலையிலாவது
பதுங்கியபடியிருக்கும்
வெளிச்சங்களைத் தேடியெடுக்கும்
முயட்சி மட்டுமே !




தொலைபேசி இணைப்புகள்தான் 
இப்போதும் 
உடன்பிறப்பு உறவுப்பாலத்தை இனைக்கக் 
விருப்பமோடு காத்திருக்கு
நானாகவே நானிருக்கும் 
பழக்கத்தை வழக்கமாகி வைத்திருப்பதால்
அந்தப்பக்கத்தில்
நீங்கள்
உருவாக்கி வைத்திருக்கும்
அளவுக்கதிகமான ஆடம்பரங்களில்
எனக்கு
ஆச்சரிய அக்கறைகளில்லை !
செய்வினை சூனியம் போலவே
வேகமெடுத்துக் கடந்த காலம்
நினைவுகளை சுற்றிவைத்து
எதிர்காலத்தை
சூனியமாக்கிக்கொண்டிருப்பதிலிருந்து
தப்பமுடியவில்லையென்பது உண்மைதான்!
அவ்வளவு இலகுவாக
வரட்டுக்கவுரவதை உதறவிட்டுப் பேசுவத்துக்கு
உங்களையே ஆட்டுவிக்கும்
மனதில் உத்தரவுகள் இல்லை !
ஆனாலும்
உங்களுக்கேயுரித்தான
நேரமில்லை என்ற சமாளிப்பில்
நேர்மைகள் இல்லவேயில்லை !
ஒரேயொரு
அழைப்பில் சொல்லிமுடிக்காத
இழப்புக்களின் பெறுமதியோடு
என்
தொலைபேசி இலக்கங்கள் சரியாகவே
இயங்கிக்கொண்டிருக்க
இந்தப் பக்கம்
இப்பவும் அப்பவும் எப்பவும் போலவே
நிறைய அன்புடன்
ஏங்கிக்கொண்டிருக்கிறேன் !









என் 
முகவரி பிரபலமில்லை 
இப்போதும்தான் 
அதுவொரு கைவிடப்பட்ட பாதையொன்றில் 
காலத்தில் பாழடைந்த 
முகப்புக் கதவில்
நைந்துபோன எழுத்துக்களில்
அறையப்பட்டுத்
தொங்கிக்கொண்டிருக்கு
வீட்டிலக்கம் !
அதனாலோ தெரியவில்லை
அதிகம்பேர் தேடிவந்ததில்லை

நேசத்துக்குரிய வாசனைகளோடு
தட்செயலாக கண்டுகொணடவர்கள்
தயங்கியபடியே
மரணத்தைப் பார்ப்பது போல
உள்ளே எட்டிப்பார்த்தார்கள் !
என்
தனிமைக்கு இந்த ஒதுங்கிப்போதல்
மிக இயல்பாகப் ஒத்திசைந்ததால்
இன்றைவரையில்
அப்படியேதான் விட்டுவைத்திருக்கிறேன் !
சில நேரம்
அதீதமான இருட்டின் பின்னே
பிரகாசமான
தொலைதூர நடச்சத்திர வெளிச்சத்தை
அடையாளம் கண்டு
உங்களில் ஒருவர் கதவுதட்டி
என்
விலாசம் சரியாவென வினவலாம் ,
மன்னித்துக்கொள்ளுங்கள்
என்
நிசப்த இடுகாட்டு
அமைதியைக்குலைக்கும் யாருக்கும்
நான்
உள்ளிருந்து பதிலளிக்கப்போவதில்லை !








18-04-2017
ஸ்டோக்ஹோலம்  ,சுவீடன்