Sunday, 30 October 2016

திசைகள் தெரியாமல்...............

இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் இடப்பெயர்வுகளும் அகதி வாழ்கையும் என்பதுக்களின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்துவிட்டது. முதல் முதல் திருகோணமலையில் இருந்து அகதியாக இடம்பெயர்ந்த மக்கள் யாழ்பாணத்தில் முத்திரைச் சந்திக்கு அண்மையில் இயங்கிய ஒரு பொறியியல் நிறுவனத்தில் அகதிமுகாம் அமைத்து இருந்தார்கள். அவர்களை நாங்களே சும்மா வேடிக்கை பார்ப்பது 

ஏனென்றால் அப்போது யாழ்ப்பாணம் பாதுகாப்பாய் இருந்தது. அந்த மாவட்டத்தில் இருந்த இராணுவ முகாம்களைச் சுற்றி எல்லா இயக்கங்களும் காவலரண் அமைத்து ராணுவத்தை வெளியே வர முடியாதவாறு எப்பவும் சண்டை போட்டு திருப்பி உள்ளுக்கு அனுப்பிகொண்டிருப்பார்கள் . ஆனால் அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரு நாள் உடைக்கபடலாம் என்ற அச்சம் எப்பவுமே இருந்தது 

அதுக்கு  முக்கிய காரணம் என்ன என்று இங்கே நான் சொல்லப்போவதில்லை. கொஞ்சம் போல சொல்வதென்றால் பல இயக்கங்கள் அழிக்கப்பட்டு ஒரே ஒரு இயக்கம்தான் முழு வீச்சாக சண்டையில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நிலைமை என்று நினைக்கிறன். நான் சொல்வது என்னோட தனிப்பட்ட கருத்து அதனோடு நீங்கள் உடன்படவேண்டிய அவசியம் இல்லை. 

                                        ஆனால்   அந்த  ஒருநாள் எங்கள் வீட்டு வாசல்படியில் வந்து நின்று கதவைத் தட்டி தப்பி ஓடிப்போ என்று சொல்லும்போது அனுபவம் வேறுமாதிரி இருந்தது.   இடப்பெயர்வு அகதி வாழ்க்கை நமக்கே நிகழும்போது நிலைமை நினைத்துப்பார்க்க முடியாத அவலத்தில் தள்ளியது  . அதை ஜோசிக்க   தனக்குத் தனக்கு என்று வரும்போது சுளகு படக்குப் படக்கு என்று அடிக்குமாம் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகுது 

இன்னொரு முக்கிய விசியத்தையும் முன்னெச்சரிக்கையாய் சொல்லுறேன். நான் ஒரு உத்தியோகபூர்வமான  வரலாற்று ஆசிரியன்  இல்லை . நான் கடந்த வாழ்க்கைப் பாதையில் பார்த்ததையும் சந்தித்தையும் மட்டுமே எழுதுகிறேன். உண்மையில் நான் அனுபவித்தது மிக மிக சொற்பமான துன்பம், பல குடும்பங்கள் தாங்க முடியாத இழப்புக்களை இதில் சந்தித்து இருக்கிறார்கள். அவர்கள்தான் யுத்தத்தின் உண்மையான யாக வேள்வி ஆகுதிகள். 

சரியாக இருவத்தி  ஒரு  வருடங்களின் முன் இன்றைய தினம்,யாழ் குடாநாட்டை தரைவழியாக கைப்பற்றும் சூரியகதிர் இராணுவ நடவடிக்கை அகோராமாகி , வலிகாமம் வடக்கு, யாழ் நகரம் முழுவதிலும் வசித்த ஐந்து லட்சம் மக்கள் தென்மராட்சிக்கு உள்நாட்டு அகதிகளாக இடம்பெயர வைத்த வலி நிறைந்த வரலாற்று நிகழ்வு நடந்த நாள் என்று சொல்கிறார்கள்.
                                                     அதில் நானும் என்றுமே விட்டு விலக நினைக்காத யாழ்பாணத்தை விட்டு நிலத்தால் இடம்பெயர்ந்தேன். என்னோட அம்மாவும் இரண்டு உடன்பிறப்புக்களும் தென்மராட்சியில் வந்து ஒரு தெரிந்தவர்கள் வீட்டு வேப்ப மரத்துக்கு கீழே குந்தி இருந்தோம். பலர் வடமராட்சிப் பக்கமும் உறவுகள்,நண்பர்களை அண்டிப்போனார்கள்.
                                                     " உள்ளுக்க இறங்கவிட்டு பொக்ஸ் போட்டு அடிப்பார்கள் " என்று ஆள் ஆளுக்கு கதைக்கொண்டு இருந்ததால். என்னமோ சில மாதங்களில் குந்தி இருந்த இடத்தில தற்காலிகமாக ஒட்டின குண்டி மண்ணைத் தட்டிப்போட்டு மறுபடியும் சொந்த வீட்டுக்குப் போகலாம் என்றுதான் நானும் நினைத்தேன் , பலரும் அப்படிதான் நினைத்து இருந்தார்கள்.
                                               தென்மராட்சி மக்கள் அன்பாக தங்கள் இடங்களில் இட்டு முட்டு பட்டாலும் அதைப் பொறுத்து இடம் கொடுத்தார்கள் முடிந்தவரை ,குழைக்காடு என்று கிண்டலாக அழைக்கப்பட்ட அந்தப் பிரதேசம் ஓரளவுக்கு இடம்பெயர்ந்த மக்களை முடிந்தளவு இயல்பு நிலைக்கு உள்வாங்கி கொட்டிலிலும் குடிசையிலும் ,கோவில் வெளி மண்டபங்களிலும் இயங்க வைத்தது.
                                           வன்னிக்குப் போக விரும்பும் மக்களை,வன்னியில் குடிசைக் கட்ட நிலம் ,கப்பு வளை போட தடி கம்பு , அதுக்கு கூரை மேய தென்னம் ஓலை தருகிறோம் " இதயபூமிக்கு இடம்பெயர்ந்து வாருங்கள் " என்று சொல்லி இலவசமாக படகு சேவை கொடுத்து ஏற்றிப் பறித்தார்கள். சிலநேரம் ராணுவத்தால் நேரடியாகப் பிடிக்கப்படும் சந்தர்பங்களில் மோசமான பின் விளைவுகள் வரலாம் என்று பயந்த வீரமான இளையவர்களை நாட்டுக்கு கொடுத்த குடும்பங்கள் எல்லாருமே அப்படியே வன்னிக்கு போய்க்கொண்டு இருந்தார்கள்.
                                                 எப்படியோ சில மாதத்தில் என் குடும்ப உறுப்பினர்கள் வன்னிக்குப் போய் விட்டார்கள் . நான் வேலை செய்த நிறுவனத்தின் நிவாரணத்திலும்,அரசாங்க நிவாரணத்திலும் தொங்கிக்கொண்டு கிட்டதட்ட ஆறு மாதம் தென்மராட்சியில் இருந்தேன்.
                                         அதுக்கும் ஆப்பு வைக்கிற மாதிரி ஒரு நாள் காலை சரசாலையை நோக்கி முன்னேறி இராணுவம் அதை சண்டை இன்றியே கைப்பற்றி ,பின் வழிமறிப்பு சண்டை ," கவுண்டர் அட்டாக் " என்று வானவேடிக்கை அகோரமாகினாலும் , ராணுவம் மீசாலை வரை முன்னேறினார்கள் . அதில் வைச்சு தான் " லவுட் ஸ்பிகரில் " மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்துக்கு வருமாறு அறிவிக்க நிறைய மக்கள் உள்ளே போனார்கள்.
                                         மீசாலை வீரசிங்கம் மகாவித்தியால சந்தியில் ராணுவம் நிற்பதையும், " விடமாட்டாங்கள் அடிப்பாங்கள் பிடிப்பாங்கள் " என்று உசுப்பு ஏத்திக் கொண்டு இருந்த பலரே ராணுவத்துக்குள் போவதைப் பாத்துப்போட்டு, சில நாட்களில் கிளாலிக் கடலால் நேவிக்காரனின் " லேசர் ரவுன்ஸ் " அடி தலையத் தடவிக்கொண்டு போக மறுபடியும் கடலால் இடம்பெயர்ந்து வன்னிப் பெருநிலப்பரப்பில் காலடி வைத்து கிளிநொச்சியில் மறுபடியும் என் சகோதரியைத் தேடிப்பிடித்து, தங்க இடம் இல்லாமல் கிளிநொச்சி முருகன் கோவிலில் அகதிகளோடு அகதியாக இருந்தேன்,
                                                 நல்ல காலம் நான் யாழ்பாணத்தில் வேலை செய்த நிறுவனம் பரவிப்பாஞ்சானில் இடம்பெயர்ந்து இயங்கியது, அதால் அதில வேலை கிடைக்க கொஞ்சநாள், நுளம்புக்கடி செல்லடி போல இருந்தாலும் ஒண்ட வந்த பிடாரி பிஞ்சுபோன அகதி போல இயங்குவதுக்குப் பரவாயில்லாமல் இருந்தது.
                                                       வன்னியில் ஸ்கந்தபுரம் ரெண்டாம் வாய்க்காலில் ஒரு சின்ன இடம் காட்டு விழிம்பில் ஒரு உறவினர் வீட்டுக்கு அருகில் கிடைத்தது. அதில கொட்டில் ஒன்று போட்டு கொஞ்சநாள் இருப்போம் என்று காட்டை வெட்டிக் குத்துக்கால் போட " இந்தக் காட்டுக்க மனுஷன் இருப்பானா " எண்டு சொல்லி அவர்கள் இருவரும் சந்தில சிந்து பாடிப்போட்டு வவுனியாவுக்கு எஸ்கேப் ஆகி கொழும்புக்கே போய் விட்டார்கள் அதன் பின் வன்னியில் இருந்த காலம் முழுவதும் தனியாத்தான் தவில் அடிச்சுக்கொண்டு இருந்தேன்.
                                                    சில மாதங்களில் கிளிநொச்சி நகரைப் பிடிக்க பரந்தன் பக்கம் இருந்து ஆனையிறவு இராணுவம் முன்னேற ,கிளிநொச்சியைக் கைவிட்டு காட்டுப்பகுதியான, முறிப்பு, கோணாவில், யூனியன்குளம், ஸ்கந்தபுரம், அக்கராயன் என்று குட்டி போட்ட பூனை குட்டிகளைத் தூக்கிக்கொண்டு போன மாதிரி பொம்பர் அடிக்கு பாலைமரத்தையும் கிபீர் அடிக்கு முத்திரைமரத்தையும் சுற்றி ஓடி ஒளிச்சுப்பிடிச்சு, செல்லடிக்கு வாய்காலில் கவர் எடுத்து, ஹெலி அடிக்கு விழுந்து படுத்து,சின்னாபின்னமாகி அலைந்து...
                                             வன்னியின் காட்டுப்பகுதியில் மலேரியாக் காச்சல் ரெண்டு முறை மூளை மலேரியா ஆக்கி பிசதிக்கொண்டு அதில தப்பி,அகோரப் பசிகிடக்கும் குளத்து முதலைகள்,விஷம் காவிக்கொண்டு திரிந்த புடையன் பாம்புகளுக்கு உச்சி விளையாடி , ஒருமுறை கோட்டைகட்டிய குளத்தில் அலியன் யானையிடம் இரவு மயிரிழையில் தப்பி, சொந்த வாழ்க்கையையும் கண்டறியாத காதலில் சொதப்பி ரெண்டு வருடங்கள் இருந்து,
                                                      ஒரு மாதிரி பாஸ் எடுத்து, உயிலங்குளம் , மன்னார், செட்டிகுளம்,பறையணாளங் குளம் ,பூந்தோட்டம் , வழியாக வவுனியா வந்த பின் தான் பெருமூச்சு விட்டு ஒரு உடம்பைத் தடவிப்பார்த்து உயிர் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு திருப்பி ஆர்மி பாஸ் இக்கு சுத்துமாத்து செய்து கள்ளமாக கொழும்புக்கு களைச்சுப்போய் வந்த போதுதான் நாக்கில் தண்ணி வந்தது.
                                              போட்டிருந்த அண்டவியர் கிழிஞ்சு தொங்கும் அளவுக்கு வழியெல்லாம் கஷ்டம் தந்த இந்தப் பாதையில் இன்னும் திரும்பிப் போகவில்லை, எப்படியோ ஒரு பிரயாணம், இடங்கள், சம்பவங்கள் என்று சுருக்கமாக மேலே ஒரு " ஸ்கெட்ச் " போல சொல்லியுள்ளேன். ஆனால் இந்த இவ்வளவு இடங்களிலும் நடந்த சம்பவங்கள் ஒரு வாழ்நாளுக்குப் போதுமடா சாமி என்பது போல அவளவு அலங்கோலமாய் வாழ்க்கை சிதறியது,
                                                  பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி கிரவல் மண்ணோடு மண்ணாகப் பிரண்டு உருண்டு ,எமனோட கை குலுக்கி ,அதிஷ்டம் அரைவாசியாவது அனுதாபப்பட்டதால் உயிர்தப்பிய அதையெல்லாம் " இடங்களைப் பெயர்ந்த கதைகள் " என்ற தலைப்பில் எழுத நினைப்பது. நினைப்பது அவளவுதான் இன்னும் எழுதவே தொடங்கவில்லை,,சிலநேரம் நினைப்பது எழுதித்தான் என்னத்தைக் கிழிக்கிறது என்று வெறுப்பும் வரும்
                                        தென்மராட்சி இடப்பெயர்வில் ,என்னிடம் இருந்த இரண்டு கிட்டார்களை இழந்தேன்,அவை இரண்டும் நானும் என்னோட தச்சுத் தொழில் செய்யும் நண்பனும் சேர்ந்து சொந்தமாக கையால் உருவாக்கியது.வன்னியில் இருந்து மன்னாருக்கு தவளை போலப் பாஞ்ச நேரம் வைத்து இருந்த மூன்றாவது கிட்டாரையும் இழந்தேன். அதெல்லாம் ஒரு இழப்பே இல்லை மற்ற மனிதர்களின் இழப்போடு ஒப்பிடும்போது .
                                                         திசைகள் தெரியாமல் திட்டிக்கொண்டு , பழங்கஞ்சிக்கும் அல்லாடி பழஞ்சீலை கிழிஞ்ச மாதிரி புறுபுறுத்தாலும், இந்த உலகத்தின் அழகான பல அறியப்படாத பிரதேசங்களில் வாழ்ந்து , பல்வேறு மக்களுடன் உறவாடி உணர்ந்து, அன்பு, பாசம், கருணை, இழப்பு, வெறுப்பு ,உதவி, உழைப்பு, பொறுமை,துரோகம் எல்லாவற்றையும் இன்னுமொரு " வொல்காவில் இருந்து கங்கை வரை " போல புதிய கோணங்களில் இருந்து வாழ்க்கை யதார்த்தத்தை திறந்து விட அதில் இடறி விழுந்து எழும்பிய அனுபவங்கள் இப்படி ஒரு இடபெயர்வில் அலைக்கழிக்கப்படாமல் நிட்ச்சயமாக் கிடைத்தே இருக்காது
                                                   இன்றைக்கு யாழ்பாணத்தை " யூ டுயுப் " போன்ற கானோளிகளில் பார்க்கும்போது அதன் அலங்கார நாகரிகம், நாயைப்பிடி பிச்சை வேண்டாம் என்பதுபோல இனி பழசையெல்லாம் கொத்திக் கிளறி புரட்டி எடுத்தால் எடுபடுமா என்று பிரமிக்க வைக்குது. ஒரு காலகட்டத்தில் மனிதர்கள் எப்படி விடுதலைக்கு சமாந்தரமாக அதன் வீரம்மிக்க அர்பணிப்புகளுக்குத்  தங்கள் விலையைக் கொடுத்தார்கள் என்று கதைகள் போல எழுதினால் அதை யாரும் வாசிப்பார்களா என்று தெரியவில்லை.
                                               ஒரு வரலாற்று ஆவணம் போலவாவது இருந்திட்டுப் போகட்டுமே என்ற ஒரு அற்ப ஆசை எட்டிப்பார்க்க சொல்ல வேண்டியதை சொல்லித்தான் ஆகவேண்டும் எண்டு ஆத்மாவை அரிக்குது அடிமனது அதனால் பார்க்கலாம்...
...............................................................................................................................
        இழப்புக்களோடு
மனிதர்கள்  ஒரு  நாட்டையே 
இடம்பெயர வைத்தார்கள்  
           இனி  என்னவெல்லாம்  
   வழிகளில்  இடராக    வருமென்பதை  
ஏற்றுக்கொள்ளும் 
மனப்பக்குவம் இல்லாமலே , 
     இருப்பை  
இன்னொரு  தப்பி வாழ்தலுக்காய்     
திசையில்லா  வெளிக்கு  நகர்த்தினார்கள்  , 
           எஞ்சியிருக்கும் வாழ்நாள் 
                 வஞ்சகமாகத்  தொடரப்போவதை 
மறுதலிக்க முடியவில்லை. 
               நிலம் திரும்பிய  வேண்டிய கால்கள்
கூடுதேடும் பறவைகள்  
தோல்வியின் பரிகசிப்பு  
இயலாமையின்  அவமானம் 
 தொய்ந்து  போன  குரல்வளைகள் 
ஒவ்வொரு  
யுத்தகாலச்  சாவு வீட்டிலும்   
    அனுபவத்தின் வலி
கொடூர மரணத்தை  
                              முற்றுமுழுதாக வார்த்தைகளில்                    வடிக்கமுடியவில்லை  
சதுரங்க ஆட்டம் 
ரெண்டு பக்கமும்  சகுனிகள்  
  பகிரங்கப்படுத்துவதில் 
 உணர்த்தநினைக்கிற   உண்மைகளில் 
                                                     அதிகம் அதிகமாய் 
                                     எம்  மக்களே  விலைபேசப்பட்டார்கள் 

....................................................................................................................................
நேற்றுப் போலத்தான் 

நினைவு 

எழுதிவைத்துக்கொண்டிருக்க 

நம்பவே முடியாமல் 
இருவத்தியொரு  வருடங்கள் 
இடம்பெயர்ந்து விட்டது


ஒரு நாள்

                                               சூரியகதிர் இறங்கி 
                                                     நெருங்கிக்கொண்டிருந்த 
                                                             எறிகணைகள் 
                                                       வீட்டுக் கூரையோடு பறக்க 
                                                             அறியாமல்க் 
                                                கதவைத் திறந்த போது
                                                              வெளியேறும் 
உத்தரவு காத்திருந்தது
                                                     செம்மணியில் 
                                                       திரும்பி நின்று 
                                                              பதில் தெரியாமல் 
                                                    வாஞ்சையுடன் 
                                                 பார்த்து கொண்டிருந்தது 
வளர்த்துவிட்ட நகரம்
                                                     ஒதுங்கவொரு நிழல் 
                                                              இதைத் தவிர 
                                                       நாவற்குழிப் பாலத்தை 
                                                நெருக்கிக் கடந்தவர்களுக்கு 
                                                                    வேறெதுவும் 
நினைவில் இல்லை
                                                       அடர்த்தியாய் இருண்டு 
                                                           கிடந்த வயல்வெளிகளில் 
                                                       தட்டாம்பூச்சிகள்
                                                         பறந்தது போலப் 
                                                             பிரிக்க முடியாத 
                                                     இந்த அனுபவம் 
எல்லோருக்குமானது
                                                    அதன் பின் 
                                                       தென்மராட்சியே 
                                                       ஒரு விடிகாலை 
                                                  வெடியோசையோடு 
                                          வன்னிக்கு வள்ளம் எடுக்க
                                                        விதிக்கப்பட்டதில் 
                                                       வித்தியாசங்கலென்று 
ஒன்றுமில்லை.
                                                      நம்மையறியாமலேயே 
                                                            கடைசியாகிவிட்ட 
                                                                சுதந்திரத்தை
                                                         ஓடி ஓடியே 
                                              உயிர்பிப்பதன் வழியாக
                                                        சபிக்கப்பட்ட
                                                      தீர்த்தயாத்திரைகளை 
                                                          சிலர்தான் 
நிறைவேற்றிக்கொண்டார்கள்
                                                          பலர்
                                       பரிதாபங்களை வெல்ல முடியாமல்
                                                     பாதிப் பாதைகளில்
சிதறிப்போனார்கள்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
.
அழிவுகளுக்குப் பிறகும்...
கைவிடத் தயார்
என்று தற்காலிகமாக
சொன்ன
இனத்தின் 
அவமானம்
போலிக் கண்ணீரில்
நனைந்து முடிந்தது...

யுத்தத்  துயரிலிருந்து
மீள முடியாத 
மனிதர்களின் தனிமை 
இறுதியில் மீட்பென்று
முழுக்க முழுக்க
நம்பியே 
உள்க் குவிகிறது....

எல்லைகளுக்குள்
வாழப் பழகிய 
உணர்ச்சிகரமான
கதாபாத்திரங்கள் 
புறக்கணிப்பை 
மோதல்களில்
மையம் கொண்டு 
நகர்த்திப் பார்க்கிறது... 

அவமதிப்புகளை
மௌனமாக ஏற்கிற
சீரழிவுக்கு
வெளிப்படையான
காரணமோ
தீர்வுகளோ இல்லாத 
வாக்குறுதிகளை 
பழையபடி
ஏற்றுக் கொள்ள
முடிவதில்லை.....

வழக்கம் போலதான் 
வரலாறு சொல்லும்,
"மீண்டும் மீண்டும் 
தோற்கடிக்கப்பட்டோம்".
என்பதில்  
நெஞ்சு வலிக்க
ஆரம்பிக்கிறது
அதனாலேயே 
அழிவுகளுக்குப்  பிறகும் 
அமைதி  
தேவையானதாக 
இருக்கிறது  !
..........................................................................................................

ஒன்றுமே 
வெளிய தெரியவிடாமல் 
பனைமரங்கள்
செம்பாட்டுப் பாதையில் 
முகத்தை 
மறைத்துக் கொண்டு
மனதுக்குள்
குமுறிக்கொண்டிருக்கு

சுற்றுவட்ட வயல்
வரப்புக் காணிகளோடு
இனி
ஒண்றிலுமே
சம்பந்தப்படவிரும்பாத
அதன்
அசைவுகளைக்
கார்த்திக்கை காற்றும்
தொட விரும்பவில்லை

ஒவ்வொன்றிலும்
நம்பிக்கை இழந்து
ஒதுங்கியிருக்க
விதிக்க வைத்து விட்டுப்
போனவர்களைக்
குறித்துக்
குயில்கள் எழுப்பிய
அவலச் சத்தம்
இப்பவும்
நல்ல நினைவிருக்கு

ஒற்றுமையின்
பலம்
தாய் மண்ணின்
நிலமென்று
சூறாவளிகள் வருமுன்
காவோலை
தத்துவம் சொல்ல
குருத்தோலை கேட்கவில்லை

தந்திரமாக
யுத்தம் செய்து
கோட்டையைப் பிடித்தவர்கள்
ராஜதந்திரங்களில்
கோட்டைவிட்டதை
வேற வழியின்றி
இளம் வடலிகள்
வரலாறாக எழுதிப்பார்க்குது

பழைய
தனிப் பனைகளுக்கு
அடியும் நுனியும் வயதாக
அறளை பெயர்ந்து
ஒரு
விடியாத தேசத்தின்
வரலாற்றை
முழுமையாகச்
சொல்லவே முடியாமல்
இடையில் இறந்து
போகலாம்.

Saturday, 29 October 2016

தலைப்புக்கவிதைகள் இரண்டாம் தொகுப்பு

என்னைப் போல மன உளைச்சலை  வார்த்தைகளில் ஏற்றி எழுதி வைத்து அமைதி காணவிரும்பி எல்லாருக்கும் புரியும்படி எளிமையான கவிதைமொழியில் எழுதும் பலர் இருக்கிறார்கள். எங்களின் கவிதைகள் காற்றில புடைக்கிற சுளகில இருந்து பறக்கிற உமி போல. அற்பமான ஆயுள் உள்ள ஒருமுறை வாசிக்கவே விளங்கும்படியான ஒரு பொழுது ஒரு உணர்வு என்ற வகையைச் சேர்ந்தவை, அவற்றால் நிரந்தரமான தலைஇடி இல்லை.

அப்படி இருந்தும் பல கவிதைகள் விளங்கவில்லை என்று கேட்பார்கள், அதுக்கு முடிந்த விளக்கம் கொடுப்பது எழுதியவர்களின் மதிப்பை அதிகரிக்கும். அப்படிக் கேள்வி கேட்பவர்களுக்கு கட்டாயம் விளக்கம் சொல்லவேண்டும் என்று சட்டம் ஒன்றும் இல்லைதான். விளங்கவில்லை என்று சொல்ல கட்டாயம் தில் வேணும்.ஏனென்றால் கீழைத்தேய மன ஓட்டத்தில் ஒன்று எங்களுக்கு விளங்கவில்லை என்று கேட்டால் அவர்களைப் படுமுட்டாள்கள் என்ற வகையில் சேர்ப்பார்கள். உண்மையில் மேலைநாட்டு பழக்கத்தில் தெரியவில்லை என்பவர்களிடம்தான் தேடலே அதிகமிருக்கும் 


அம்மாவின் ஞாபகம்....
..................................................
உறை பனி

சறுக்கி விழுத்தும்

ரகசியாமாக 
அந்நியமான 
இருண்ட
மாலைப் பொழுதில்
தவிர்க்க முடியாத 
துயரங்களுடன்
மூக்கு நுனியை 
துருவக் குளிர் 
விறாண்டிச்  செல்ல...

சில
நினைவுகள் 
வேகம் பிடித்து
தூக்கி எறிந்த வேகத்தில் 
எல்லைக்கு அப்பால்
ஓடின...

சில
சம்பவங்கள் 
உரிய இடத்தில்
வந்து நின்ற போதும்
காற்றை விசாரிக்க  
கதவைத் தாண்டவே இல்லை...

கடந்து செல்லும் 
பாதையின் 
தனி மரத்தில் 
மிக இறுக்கமான
இயற்கையின் 
கை விடப்பட்ட 
கால நிலையில்
சின்னக் குருவி
சிதிலமான  கூட்டை 
மறுபடியும் 
சீரமைக்கும் 
நேர்த்தியைப் பார்க்க  
அம்மாவின்  ஞாபகம்
வந்து விடுகிறது.

மாமரங்களுக்கு வயதாகி விட்டது..

........................................................................

சுருக்கம் விழுந்து 

இறுக்கமாகி

இதுக்கு மேலும் 
வேர்கள்  
ஓட மறுத்து  
மாமரங்களுக்கு 
வயதாகி விட்டது..

நல்ல 
நினைவாக 
பூரண கும்பத்திலும் 
துன்ப நிகழ்வாக 
தோரணங்களுடனும் 
மாவிலைகள் 
வருடம் தவறாமல் 
பழங்களோடு 
நெருங்கி வந்தன..

உறுஞ்சி எடுத்த
குருவிச்சைகள்
அதிகமாக 
ஊஞ்சல் கட்டிய
வடுக்களில் 
அணிலும்
புலினிகளும்
ஆர்ப்பரிக்க 
நடு இரவு  
நத்துக்களும்
நடுங்க வைத்த
நாட்குறிப்பு.... 

ஒன்றாய் 
வளர்ந்தவர்கள் 
ஓடிப் போனபின்
புதியவர்கள்
வந்த நேரத்தில்  
புதுக்கவிதை
எழுத முடியாமல்
இருந்திருக்கலாம்....  

கிளைகளின்
நடுவே 
கூடு கட்டிக் 
குஞ்சு பொரித்த 
சின்னப் பறவை 
நன்றியாக 
ஒரு 
சின்னச் சிறகை 
விட்டுச் சென்ற 
சம்பவத்தில் 
பழையவர்களின்
நினைவுகள்
மீட்டப்பட்டிருக்கலாம்.


...........................................................
நடக்கப்போற 
நல்லதையே 
நாலுவிதமாய்
பேசிக்கொண்டேயிருக்குது 
தென்றல்...

தூறல் மழை 
தூவிக்கொண்டு
போகும்  
கருத்துக்களுக்கு 
நடுவில்  
நல்ல எண்ணம்களும் 
நனையத்தான் 
செய்கிறது......

எரிச்சல்  தருகிற
குளிரிலும் 
பரபரப்புத் தேடும் 
செய்திகளோடு
உவமானம் 
சேர்த்து வைக்க  
அலையுது 
இயற்கை....

எப்போது 
சிரிக்கலாமென 
எதிர்பார்த்து நின்று 
வழிந்து ஓடிப் போன
வசவுகளை  வரவேற்ற
வாழ்க்கை   
இதயத்தை மட்டும் 
அசைக்கவேயில்லை...

ஆனாலும்
சாரலாகி ஓடிப் போன
கடந்தகாலம் 
காதலுக்காக மட்டும்  
அப்பப்ப 
ஆடிப்போனது 
என்பதென்னவோ 
உண்மைதான்...

.........................................................
வழமை போலவே 
கோபத்தைக் 
கணக்கில் எடுக்காமல் 
சுவர்க்கத்தை அடைய
அவர்களின்   
மன்னிப்புக்காக
மன்றாடும் 
ஒவ்வொரு முறையும் 
இதயம்  பலவீனமடைகிறது.....

ஒரு
கச்சிதமான
பொய்யை 
நாலு பக்கமும் 
கற்பனையில்   உருவாக்கி
அதை ஆராதிக்கிறார்கள்... 

திட்டிப்  பேசுகிற
நேரங்களில்
மிக இயல்பான
ஆரோக்கியமான 
அமைதியான  வாழ்வு
அடி வேண்டுவதை 
சாத்தியமாக்கும்
பின் விழைவுகளை 
தவிர்க்க முடியவில்லை.... 

இந்தப்
விரிசல்கள் 
தொடுவான எல்லையில்
போய் முடிய முன் 
வசதியான இடத்தில 
முழுவதும்
உடைய முன்னர் 
நிறுத்திக்கொள்ள வேண்டும் 

ஒவ்வொரு
செயலுக்கும்
ஒருஅர்த்தம்
முக்கியத்துவமாயுள்ள
தீர்மான உணர்வு
நிரந்தர திருப்தியை அளிக்க
எவ்வளவு தூரம்
பறக்க முடியுமோ
அவ்வளவு தான்
மனித எல்லை.

வெளிப்படையாகவே வைத்திருக்கிறேன்....

..................................................................................

இந்த 
குளிர் காலம் முழுவதும் 
ஒளிந்து பிடித்து 
விளையாடும்
குழந்தைகளின் 
உற்சாகம் போல  
கவிதைகள் 
கவனித்துக்கொண்டேயிருந்தன.. 

மைய உணர்வுக்குள்
இணைத்துக்கொண்ட
தருணம்களில் 
ஒதுக்குப் புறத்தில் 
வார்த்தைகளை 
உருவக் காரணமாயிருந்தது
தனிமை.....

விமர்சனங்கள்
வெளியடையாத
அதில் தேர்ந்த கவிஞ்சனின் 
கர்வமோ 
புத்திசாலித்தனமோ 
அடிப்படையிலுமில்லை....

பார்த்த போது ஏற்பட்ட
விந்தையான 
எண்ணத்தைத்
இழுத்தெடுத்து 
உருகிப்  போகாத 
உறைபனியில் 
எழுதி வைத்தேன்.

சறுக்கி 
நடக்கும்போதோ
வழுக்கி  நகரும்போதோ
மாற்றுமுயற்சிகளிலும்
புதிய இரசனைகளிலும்
தீவிர உரையாடல்களிலும்
அவைகளின் 
பங்களிப்பும்
இணைந்திருக்கவில்லை.. 

நம்மையறியாமல் 
நம்பிக்கையில் 
கொண்டு வந்து
நிறுத்தும்  
மனசாட்சி
அதுவாகவே  
என்னை இயக்கியது
எனச் சொல்லலாம்.

அந்நியமான வரிகள் 
உருவானதற்குப் 
பின்னணியில்
இருந்தவர்கள்
பற்றிச்  சொல்லேன் என
நீ  
ரகசியமாகக் கேட்டால்  
நீ
என்ன பதில்
வைத்திருக்கிறாயோ 
அதேயே தான் நானும்
வெளிப்படையாகவே 
வைத்திருக்கிறேன். 



தெருவிளக்கின் விளக்கம்...

............................................................

மங்கலான 
தெருவிளக்குகள் 
நடைபாதைகளின்  
அமைதியோடு 
மல்லுக்கட்டினாலும்  
வழி நெடுகிலும்
நிழல் வழிந்து கொண்டே  
வரத்தான் செய்கின்றன

யாருமேயில்லாத 
பொழுதுகளிலும்
இருட்டுக்கு 
அளவுகடந்த
எதிர்ப்புக்  காட்டி
ஆழ்மனத்திலும்
அவைகள் ஒரு பிடிப்பு
வைத்திருக்கின்றன

வாழ்வில்
எங்கேயாவது  
காதல் இருக்கட்டும்,
சாகசம் ஏதாவது
கிடைக்கும் வரை 
பரிசோதனை
செய்து பார் என்பதுபோலப்
பார்க்கின்றன

கொஞ்ச நேரம் 
நின்று நிமிர்ந்து பார்க்க 
உனது இதயத்தில்
தேடுவதுக்கு ஏதாவது 
இருக்கிறதா
இல்லையென்றால்
நேரத்தை வீணடிக்காமல் 
வீட்டுக்குப் 
போய்ச்சேரும் 
நேரத்தைச் சொல்லியது

புரிந்துகொண்டு 
பிறர்மீது கடினமாக
இருப்பது மறையத் தொடங்க
என்ன தான் 
செய்யமுடியும்
வெளிச்சத்தில் 
கிடைக்காத விளக்கம்
பின் தொடர்வுகள் 
நிகழும்போது
நிகழ்ந்துவிடுகின்றன.

சிற்பியின் மொழி
............................................
பல கற்கள் 

காலுக்குள் 

மிதிபட 
சிலது மட்டுமே 
கடவுளாகித்  
தொட்டுக் கும்பிடும் 
தகுதி பெறுகின்றன..

பிரம்மாண்டமான 
கற்பனையில் 
ஈரத்தைக் கசியவிடும் 
எல்லாக் பாறைகளுக்குள்ளும்
வாழத் துடிக்கும்  
பெண்களின்  
சிலைகள் இருக்கலாம்.... 

சிற்பியின் மொழி 
கருங் கல்லுக்குப் 
புரியும் நேரம் 
உளிக்கு வலிக்குமென்று 
தெரிந்தும் 
தேவையற்றதை
தேடி ஒதுக்கி   
நீக்குவதால்  
வெளியே வருகுது
தெய்வத்தன்மை... 

அவை 
திருப்திகளின் 
உத்தரவாதத்தில் 
நம்பிக்கைகளை 
உடுத்தியபடி 
கலாச்சாரங்களை
ஆவணப்படுத்தி 
பண்பாட்டைப்
பிரார்த்தனை செய்கின்றன..

கால ஓட்டத்தில் 
சிற்பி 
உயிரோடு 
இல்லாத காலத்திலும் 
 பேசமுடியாத  சிற்பம் 
காலமுள்ளவரை 
உயிரைப் பிடித்து
வைத்துக்கொண்டுதான்  இருக்கு 

நல்லவர்களுக்கு நடுவில்.....

................................................................

குழந்தையைத்

திருத்துவது போல

வளர்ந்தவர்களைத் 
திருத்த முடியுமாயின் 
எத்தனை சுகமாக
இருந்திருக்கும்.......

எதிர்பார்க்காமல் உதவும்
நண்பர்கள்
எப்போதாவது தென்பட 
எதிர்பார்ப்புடன்
உதவும் நண்பர்கள்
கை தட்டும் கிட்டத்தில் ,

நம்மை 
அழிக்கத் துடித்து  
உணர்வுகளைப் 
பொருட்படுத்தாத
உறவுகளுடன்தான்
இப்பவும் வாழ்க்கை 
வேண்டா வெறுப்பாக  
பிணைக்கப்பட்டிருக்கிறது.....

தகுதியற்ற 
மனிதர்களுக்கு
முக்கியம்  கொடுத்து 
முகஸ்துதிக்கு
முகவரி  வரைந்து வைத்து 
அவர்களிடம் 
சுய கவுரவத்தையும் 
கொடுத்து வைக்கிறோம்....

நமக்காக
வாழும் வரையில்
அவர்களின்
நேர்மையின்மை
துன்புறுத்தும்
அவர்களுக்காக
நாம் வாழ
ஆரம்பிக்கும்போது
அது அங்கீகரிக்கப்படும் ...

முழுக்க முழுக்க
நல்லவர்களுக்கு 
நடுவில் நம் வாழ்க்கை
அமைந்திருந்தால்...
ஒரு வேளை 
இத்தனை இதமாக 
இருந்திருக்குமென்று 
உலகத்தை
சின்னக் கைகளில் 
விரிக்கும் 
குழந்தைகளின் 
குதூகலம் 
நமக்கும் கிடைத்திருக்கலாம் !

தெரியாமத்தான் கேட்கிறேன், 
....................................................................
நன்றாகவே
நினைவிருக்கு
விழுதுகளை  அறுத்த 
புது உலக தந்திரம்
சும்மா கிடைக்க
இறந்துபோன
வாழ்க்கை
ஒவ்வொரு நாளும்
கிள்ளித் தந்து  போன  
சந்தோசங்கள் ..

பழைய வீட்டின் 
கதை சொல்லும்
வேப்பமரக் கதவுகள் 
தாழ்வாரமெங்கும்
பாட்டியின் 
நினைவைத்தின்னும்
நிழல்.

கன்னிக்கால்
முள் முருக்கின் 
வேலியோட
ஓதியமரக் கிளையெங்கும் 
வளைந்து ஓடி
இருட்டிலும்  ரகசியமா
இலை தடவும் அம்பலவி,

பின்னால கொய்யாவும்
மறக்காத மாதுளையின் 
நடுவே
அடர் பாசி
அள்ளிக் கொட்டி
இருள் போல
துலாக் கிணறு.

இடையில
எலுமிச்சை
நாவுற நாரத்தங்காய் ,
தெற்கால தென்னையும்
கரை எல்லாம் கமுகோடு 
வாசல் வரைக்கும்
குலை தள்ளி
வாழ்வாங்கு வாழ வைத்த
வாழைமரம் ,

தெரியாமத்தான் கேட்கிறேன், 
குளத்தையும் ,
கோவிலையும்
குடும்பங்களையும்,
கும்மாளத்தையும் 
உறவுகளையும்
ஊர்களையும் 
இருபதாயிரம் மைல் தள்ளி 
இழந்து போட்டு வந்து
அப்படியென்ன
சுதந்திரம்
அடுத்தவனின்  நாட்டில் ?

...............................................................
இருப்பதில் 

எடுத்துக் கொடுத்து 

உதவி செய்வதில்
திருப்தியடையும்
மனமுள்ளவர்கள்
உற்சாகமாக
இருக்கிறார்கள்.... 

விழியாக இருந்து
வழி காட்டிக் கொண்டே 
கடந்து செல்லும் 
நிமிடங்களை 
மற்றவர்களுக்காக
இழக்கத் தயாராக
இருப்பவர்களை   
உலகப் 
பார்வையற்றவர்களுக்கு
தெரிவதில்லை... 

உதவ தயாராக
இருப்பவர்களுக்கு
இது சாதாரண செயல் 
உதவி கோருபவருக்கு
இது சரியான
நேரத்தில் கிடைத்த
உயிர் மூச்சு... 

உதவுபவர்கள் 
பயனாளிகள்
இருவரையும் 
மற்றவர்கள் 
மதிப்பீடு செய்யலாம்
முடிவில் 
உதவி மட்டும்
நியாயத் தீர்ப்பு நாள் 
தாரசு முள்ளின் 
நடுவில் இருக்கும்

ஆய்த எழுத்துக்கள் மட்டும் 

.....................................................
ஒரு

பரிசுத்தமான 

பின்னிரவில் 
உயிர் மெய் 
எழுத்துக்கள் 
காணாமல்ப் போனது.... 

அதைக் 
களவெடுத்த 
கவிதாயினிகள் 
விதவையாகிக் 
கவிதையாக்க
கவிஞ்சர்கள்
மொழியின் வீரியத்தை
நலமடித்தார்கள் ..

பலர் 
சிறுகதையாக்கி 
சிறுமைப்படுத்த
புனைகதை  எழுதிய சிலர்
உயிரையும்
மெய்யையும்
பிரித்தே வைத்து
புதிர் ஆக்கினார்கள்.. 

மொத்தமாகக் 
கொள்ளையடித்த 
ஒருவர் 
நாவல் எழுத
கடைசி வரிகளில் 
காட்டிக் கொடுத்து சிலர் 
கட்டுரை எழுதினார்கள்...

சுய நிர்ணய உரிமை 
இழந்த மிஞ்சிய எழுத்துக்கள் 
அதை எதிர்த்து 
இலக்கணம் 
தவறாமல் ஊர்வலம் போக..

அதிகம் அறியப்படாத 
ஆய்த எழுத்துக்கள் மட்டும் 
ஆக்ரோஷமாக 
முழங்கி
வன்முறையால்  
தங்கள் தலை எழுத்தை 
மாற்றப் போவதாக 
சபதம் எடுத்துள்ளன.

மறந்த இறுதி நிமிடத்தில்...
..................................................
காதல் 
எந்தத் தந்திரத்திலும்  
விட்டுக்கொடுப்பதில்லை
விட்டு விடுதலையாகிச் 
சுதந்திரத்தில் 
பறப்பது.....
பறந்து 
இரந்து கெஞ்சிப்  
பிச்சை எடுப்பதில்லை
கொடுத்த கவுரவத்தை
இழக்காது திருப்பி
இதயத்தைத்  திறந்து  
எடுப்பது...

எடுத்த 
புரிந்துணர்வை
அபத்தங்களில் 
வளர்ப்பதில்லை
புரிந்தே கொடுத்த 
பந்தங்களின் 
உணர்வாக
இருப்பது....

இருந்த 
வரை முழுவதும்
இயல்பாகவிருந்து
தவறியும் நினைக்க 
 மறப்பதையே
ஜோசிக்க 
மறப்பது..

மறந்த
இறுதி நிமிடத்தில்
மரண உறுதியாக 
வரும் போது 
நினைத்த
ஒரேயொரு  முகம்
உன்னுடையதாக
இருக்குமாயின் 
இறக்க மறுத்திருக்கலாம் 
உனக்காவும் 
எனக்காகவும் 
அந்தக் காதல்.


.....................................................
மீட்டிய 

சட்ஷமம் 

முதல் தருணம்  
சுரம் கொடுத்த  
நாதங்களுக்கும் 
விரல்களுக்கும்
நீ  சரணம் ..

பின் 
எழுந்த 
பஞ்சமங்கள் 
பட்டாம்பூச்சியாகி
இதயமெல்லாம் 
காரணமேயில்லாமல்
நீ  பல்லவி  

சங்கீதம் 
தளிர்விடுமோவென   
நடுவில்
பன்னீரைத் தூவி
பதங்கள் 
பாதயாத்திரை போக
நீ சிம்மேந்திரமத்யமம்

இன்னொருமுறை
கிடைக்காவிட்டாலும் 
பார்வைகள் 
இடையே
தவறி விழுந்த
கற்பனை ஸ்வரங்கள்
பேசிய
உன்  உருத்திரவீணையில்  
மட்டும் ்
நான் இப்பவும்    
அனுபல்லவி.  


ஏமாந்து போகிறேன்...

...........................................................

அளவோடு அமைதி
ஓட்டிக்கொண்டிருக்கும்
நிலத்தடி மின்சாரஊர்ந்தில் 
அலட்சியமாக
ஏறுபவர்களை பார்த்து 
ஆர்வமின்றி
இறங்குபவர்கள்
மனங்களில்
தேக்கம் இல்லாமல் 
கடக்கிறார்கள்

நீட்டி
நிமிர்ந்திருக்க 
போட்டி
போட்டுக்கொண்டு
இடம் பிடிக்க
தேவையே இல்லாத 
நிலை தான்
இடைவெளி  உள்ள
ஒரு சித்திரம் 

பனிச் சறுக்குப்  
பயணிகள் 
அதிகம் 
கதைத்துகொண்டு 
வந்ததில்  விழுந்தெழும்பிய 
தாக்கங்கள் உள்ள 
அனுபவங்களின்  
வார்த்தைகளே அதிகம் 
சறுக்கி சறுக்கி 
வழுக்கி விழுகிறது 

முன்னிருக்கையில் 
அருகருகேயிருந்தும்  
மன அளவில்
வெகுதொலைவு
இடைவெளி உள்ள
அவனும் அவளும்    
தரையில் விழுகிற கால்கள் 
ஒன்றையொன்று
தற்செயலாகத்
தொட்டுக்கொள்ள
எச்சரிக்கையாகி
சட்டென்று
 விலகிக்கொள்கிறார்கள் 

அதிகம் 
யாருமற்ற 
மெற்றோவை 
புதிய எண்ணப்போக்கில் 
இன்று மட்டும் 
ஆக்கிரமித்து   
உறைபனி  சிதறும்  
ஜன்னல்களில் 
என் முகத்தை  
முதல்ப் பக்க 
செய்தி ஆக்கிப் பார்த்து
ஏமாந்து போகிறேன்

ஆனாலும் 
பழகிய  எண்ணப் போக்கில்  
உருவாகும்
எதுவும்
ஏற்கனவே இருந்த
அனுபவத்தின்  
பிரதிபலிப்பாகத் தெறித்து 
அடங்கும் 
இதன் தொடர்ச்சியை
யாரும்
முறிக்கவே  முடியாது.


கடந்து கொண்டே போய் விடுகின்றன..

...................................................................................
அநேகமாகப் 
பெறுமதியான நாட்களை 
யாரும் 
செலவழிக்கத்
தேவையில்லை 
சொல்லாமல்க் 
கொல்லாமல் 
அவைகளாவே 
கடந்து கொண்டே 
போய் விடுகின்றன..

வெப்பக்
காற்றுக்  கசியும்
சாம்பல் வண்ணம்
தீட்டப்பட்ட
புற்களோடு கலந்த
மண்வாச நகரத்தை 
பார்த்துப் பார்த்துக்
கண்களுக்கு
அலுத்துவிட்டது .... 

கதவைத் திறந்தவுடன்
தடவி உறைக்கும்  
குளிரில் நடக்கும்
சக்தியைக்
கால்களுக்குள்
இழுத்துப்போட்டு ஏற்றுவது
இனியும் 
அவ்வளவு
சுலபமாக இல்லை...

நிரந்தரமில்லா வேலை
தப்பி வாழும் 
ஆர்வத்தைக்
குறைத்து விடுகின்ற
கடை நிலைத்
தருணங்கள்  
முட்டிமோதிக் கொண்டு
பயப்படுத்துகிறது...

சிதறியிருக்கும்
உடன் பிறப்புக்களின் 
நினைவுகள்  
நனைத்து  விட்டுப்  போன 
பழைய வீட்டின்
நிரம்பி வழியும்
கடந்த காலத்தையும் 
சேர்த்துத்
தூக்கிக் கொண்டு..

கால்களில்
நடப்பதற்கான
தெம்பும்
கண்களில்
காண்பதற்கான
கனவும்
நிரம்பிய வரை 
வருகின்ற 
வருடத்தின்
வார்த்தைகள் தரும் 
உத்தரவாதத்தில்
தங்கியிருக்கலாம்.