Sunday, 3 January 2016

வெல்வெட்டின்..

சைனிஸ் வெல்வெட்டிங் இது முக்கியமான ஒரு சைனிஸ் இறைச்சி வகையை வாய்க்குள் கடிபடாமல் சுவிங்கம் போல மென்மையாக ரசித்து உள் இறக்க வைக்கும் சமையல் டெக்னிக். கொஞ்சம் பொறுமையும் நேரமும் வேணும் இதை இப்படிப் பதப்படுத்தி எடுப்பதுக்கு. 

                                          நீங்கள் எல்லாருமே சைனிஸ் ரெஸ்டோரென்ட் போய் இருந்து, பல வகையான டெவில், சொப் சூயிய் ஓடர் கொடுத்து சாப்பிட்டு இருப்பிங்க. அந்த டெவில் இல் இருக்கும் இறைச்சி வகை மிக மிக மென்மையாக வெளித்தோற்றதில் வெளிச்சம் பட்டுத் தெறிக்க வெல்வெட் போல வழு வழுப்பாக இருக்குமே.உண்மையில் பலருக்கு அதன் மர்மமான பதம் தெரியாமல் அலாலதியாக சாப்பிட்டும் இருபிங்க.

                                               டெவில், சொப் சூயிய் என்ற இந்த ரெண்டுவகை உணவிலும் சேர்க்கப்படும் இறைச்சித் துண்டுகள் உண்மையான சைனிஸ் முறைப்படி வெல்ட்டிங் முறையில் பதப்படுதப்பட்டே பின்னர் டெவில், சொப் சூயிய் செய்யும் போது அதை அதில போட்டு செய்ய வேண்டும். அது தான் அங்கீகரிக்கப்பட்ட சைனிஸ் கலுனேறி சமையல் முறை

                                                 ஆனால் சைன்ஸ் அல்லாத பல ரெஸ்ரோறேன்ட்களிலும் இப்பெல்லாம் இந்த டெவில், சொப் சூயிய் செய்கிறார்கள். முக்கியமாக இலங்கையில் நீங்க பல சிங்கள ரெஸ்ட்ரோறேன்ட்களில் டெவில், சொப் சூயிய் சாப்பிட்டு இருக்கலாம், எனக்கு தெரிந்தவரை அங்கே அவர்கள் வெல்வெட்டிங் டெக்னிக் பாவிப்பதில்லை. கொதி நிலை எண்ணையில் இறைசியப் பொரித்து எடுத்து செய்கிறார்கள்

                                         இந்த சைனிஸ் வெல்வெட்டிங் அதுதான் சைனிஸ் சாப்பாடுகளைப் பதப்படுத்தப்படுதுவதில் ஒருவித சிதம்பர இரகசியம் போல பல நூற்றாண்டுகளாய் இருந்தது. இப்ப அப்படி நிலைமை இல்லை. என்னைப்போல சமையல் தொழிலில் வேறு வழியில்லாமல் சைனிஸ் குக்மாருடன் வேலை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்த பலர் அந்த இரகசியத்தை உடைத்து வெளியே கொண்டுவந்துள்ளார்கள். எனக்குத் தெரிந்த ரெண்டு முறையில் இலகுவான ஒரு முறையை உங்களுக்கு சொல்லித்தாறேன்.

                                              தேவையானவை முட்டை வெள்ளைக்கரு, முக்கியம் மஞ்சள்கரு சேர்பதில்லை. கோரன்பிளவர்என்ற சோளம் மா, சைனிஸ் ரைஸ் வயின், கொஞ்சம் உப்பு, கொஞ்சம் சீனி ,சைனிஸ் டார்க் சோயா சோஸ். இறைச்சியைக் கழுவி சிறிய குயுபிக் துண்டுகளாக வெட்டி அதற்குள் மேலே சொன்னவற்றைப் பிரட்டி எடுத்து ஒரு இரவு மெல்லிய பொலித்தீன் கொண்டு மூடி அதன்ஈரலிப்புத் தன்மையை வெளியேற்றாமல் குளிர்சாதனப்பெட்டியில் வையுங்கள்.

                                                 இதில ஒரு முட்டையை கையில் வைத்தே உடைத்து அதில உள்ள மஞ்சள் கருவை இரண்டு பாதியிலும் மெல்ல மெல்ல நயன்தாராவின் இடுப்புப் போல அசைத்து டெக்னிகலாக வெளியேற்றுவது ஒரு சமையல் டெக்னிக். அதை எழுத எனக்கு முடியவில்லை. செய்து தான் காட்டவேண்டும். நீங்கள் வீட்டில் ஒரு சின்னப் பாத்திரத்தில் ஒரு முட்டையைத் தட்டி உடைத்து ஊற்றி அதிலிருந்து மஞ்சள் கருவை வேறாக்கி கரண்டியால் எடுக்கலாம்.அது எவளவு தூரம் வொர்க்அவுட் ஆகும் என்றும் எனக்குத் தெரியலை

                                                   பின்னர் தண்ணியைக் கொதிநிலையில் கொதிக்க வைத்து அது ஆவி பறக்கக் கொதிக்கும் போது, வெல்வெட்டின் முறையில் மரினேட் செய்த இறைச்சியை அதில போட்டு ஒன்றோடு ஒன்று ஓட்ட விடாமல் அரைவாசியில் அவித்து எடுங்கள். போடும் போது கவனம் கொதி தண்ணி தெறிக்கலாம்.பிறகு கையைக் காலைச் சுட்டுப் போட்டு என்னைத் திட்ட வேண்டாம்

                                                      அப்படி எடுத்த இறைச்சியை சைனிஸ் வூக் தாச்சியில் கொஞ்சம் எண்ணை விட்டு ,அதில் டெவில் செய்யும் போதோ,,அல்லது சோப் சூய் செய்யும் போது ஒயிஸ்டர் சோஸ் கொஞ்சம் சேருங்கள் ,போடவேண்டிய வூக் மரக்கறிகள் அரைப்பதத்தில் வேகும் போது வெல்வெட்டின் முறையில் மரினேட் செய்த இறைச்சியை அதில போட்டு கிளறிக்கொண்டே இருங்கள். இறக்கும்போது கொஞ்சம் செசமி ஒயில் சேர்த்து விடுங்கள்.

                                                         வெல்வெட்டின் முறையில் மரினேட் செய்த இறைச்சியின் மெதுவான, வழுவழுப்பான சுவையை சைன்ஸ் நூடில்ஸ் செய்யும் போதும் சேர்க்கலாம் ,சஞ்சுவான் மண்டரின் சிக்கின் என்பதுக்கும் அதைப் பயன்படுத்தலாம் .அதிலும் அதன் சுவை அமர்களமாக இருக்கும்.

.

லசானியா..

புது வருடத்துக்கு .பழைய நோர்வேயின் நண்பர்கள் வீட்டுக்குப் போய் அவர்கள் இடத்திலேயே சமைச்சேன் எண்டு சொல்ல பல நண்பர்கள் " என்னத்தை சமைச்சுக் கிழிசாய் ? " எண்டு ஆதங்கமாகக கேடார்கள் ! நான் செய்து கொடுத்தது உடன் " லசானியா " 

                                               லசானியா இத்தாலியின் தேசிய உணவு ! ஒரு இளம் பெண்ணின் பெயரில் இருக்கும் அந்த உணவு மார்க்கோ போலோ என்ற இத்தாலியன் கடலோடி சீனாவுக்குப் போனபோது கண்டு அதிசயித்து ,அதை அப்படியே சுட்டுக்கொண்டு வந்து ,இத்தாலியன் "சீஸ் , "மீட் சோஸ " இரண்டையும் அதில இணைத்து ,ஒரு கீழைத் தேச உணவின் கொஞ்சம் மொடிபய் பண்ணிய இன்னொரு வடிவம் எண்டு என்னோட வேலை செய்த மார்கோ என்ற இத்தாலி நாட்டு "செப் "சொன்னார் !

                                              இங்கே பொதுவாக ஐரோபிய உணவுகளை ஏதோ ஒருவிதத்தில சமைக்க கற்றுக்கொள்வது இலகு காரணம் அவர்களுடன் இங்கே நாங்களும் சேர்ந்து குப்பை கொட்டுவதால் ! நான் நோர்வேயியின்" அஸ்கர் பாரும் " என்ற ஒரு ஒஸ்லோவுக்கு வெளியே உள்ள ஒரு சிறிய நகரத்தில் ஒரு சுடுதண்ணி "இத்தாலியன் செப்" போடு வேலை செய்தேன் !

                                               அவன் அதிகம் சாப்பாட்டு ஓடர் வந்து குவிஞ்சது எண்டால் என்னை அறம்புறமா இத்தாலியன் பாசை தூசனதில திட்டுவான் ,வார்த்தைகள் கொதிதண்ணி போல சரமாரியா வந்து விழும் ,,அவன் என்னை மட்டுமல்ல , அந்த ரேச்ற்றோரன்ட் அப்பாவி முதலாளியையும் அறம்புரமா அடுக்கு மொழியில் பேசித் தள்ளுவான் .

                                     " அதிகம் சாப்பாட்டு ஓடர் வந்து குவியிற நேரம், நீ ஏன்பா இப்படி டென்சன் ஆகி எல்லாரையும் வாய்க்கு வந்தபடி திட்டுறாய்?"

                                    எண்டு ஒருமுறை ஆங்கிலத்தில் கேட்டேன்

,                                " அது எங்கள் நாட்டு கிட்சென் சமையல் கலுணறி கலாசாரம்,கைக்கு வேலை கொடுக்கும்போது வாய்க்கும் வேலை கொடுப்போம்

                                  எண்டு சொல்லிப்போட்டு ,என்னைப் பார்


                                       "நீ ரெம்ப நல்லவன்பா எப்படித்தான் படு தூசனத்தில உன்னை திட்டினாலும் ,சிரிகிறியே!"

                                       என்றான் , எனக்கு அந்தப் பாசை தெரியாது அதலா வேற என்ன செய்ய எண்டு கேட்டு

                                   " நீ என்னை எப்படி திட்டுறாய் எண்டு ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா ? "

                                    எண்டு கேட்டேன் ,அவன் அரைகுறை ஆங்கிலத்தில்

                                    "நான் உன்னை மட்டமில்லை , உன்னோட அம்மா , உன் னோட அம்மம்மா , அக்கா,,தங்கசி,,உன்னோட காதலி எல்லாருமே வம் ........ பிறந்த தேவ .......கூட்டம் "

                                  எண்டு திட்டுவேன் எண்டு சொன்னான் ,,நான் அதுக்கும் அப்பாவியா சிரிச்சேன் !

                                    இதாலியர்களுக்கு தூசனம் "திருவாசகம் " படிகிரமாதிரி,,என்னதில , எண்ணத்தைப் பற்றி பேச தொடங்கினாலும் கடைசியில் "..............மம்மா மியா ,,,,,," எண்டு முடிப்பதை அதிகம் கவனிக்கலாம் ! மற்றப்படி அவர்கள நாட்டு செப் மாரோடு வேலை செய்தால் சைனிஸ் செப் போல ,சமையல் ரகசியம் சொல்லி தரமாட்டார்கள் !

                                    நாங்களா எதாவது கற்றுக்கொண்டால் வழியே மற்றப்படி ஒரு பிரிஜோசனமும் இல்லை ! முக்கியமான சில "இணைப்பு ருசி கொடுக்கும் " இன்கிரிடீன்ஸ் போடுற நேரம் பிளேட் கழுவ சொல்லுவார்கள் ,அல்லது வேற எதாவது வேலை சொல்லுவார்கள் !

                                   இத்தாலியர்களுக்கு , தக்காளி எவளவு முக்கியமோ அதுபோல Parsley, sage, rosemary, and thyme...இந்த வாசனை இலைகள் போடாத ஒரு இத்தாலியன் உணவே இல்லை ! எங்களுக்கு கறிவேப்பிலை போல அவர்களுக்கு அது மிக முக்கியம்

                                        மேடிடேர்நியன் என்ற மதிய தரைக்கடல் மிதமான தட்ப வெட்ப நிலையில் வளரும் இந்த Parsley, sage, rosemary, and thyme...போட்டு ஒரு "பெச்டொ " எண்டு ஒரு இலை குழை தளை அரையல் இருக்கு ,அது இத்தாலியின் ஒவ்வொரு ப்றோவின்சே என்ற பெரதேச நிலப்பரப்பின் பெயரில் சொல்லுவார்கள் !

                                            இத்தாலியன் பெண்கள் அதை எல்லாம் சாப்பிடுவதால் தான் , தக்காளி போல "தக தக " உடம்போட , உயரமான கால்களுடன் ,நீலக் கண்கள் விழியெங்கும் " வைன்" போல மயக்க ,உலகப் புகழ் பெற்ற அவகளின் பின் அழகு , வில்லுப்போல "வின் "எண்டு இருக்குது போல

                                            லசானியா " பர்மசின் சீஸ் " என்ற உலர்ந்த இத்தாலியன் சீஸ் மேல போட்டு சாப்பிட , நாதம் பேசும் அலாதியா இருக்கும் ,,ரெட் வைன் கொஞ்சம் போல உள்ளுக்கு விட்டிடுடு ட்ரை பண்ணிபாருங்க ! எனக்கும் இத்தாலி ரெச்ற்றோன்ட் லசானியா பிடிக்காது ! அதலா எப்பவும் எச்ராவ ஜெலபிநோஸ் என்ற மெக்ஸ்சிகன் நாட்டு "குட மிளகாயை " , அப்படியே அதில செருகி போடுதான் சாப்பிடுவேன்

                                                இதில உள்ள பச்சை நிற சலாத் இலைக்கு பெயர் " ரக்குளா சலாத் "பார்க்கப் பசாசுபோல இருக்கும் அதால் அப்படி சொலுரார்கள் !எப்படியோ நான் மேல சொன்ன மாதிரி ரெட் வைன் கொஞ்சம் போல உள்ளுக்கு விட்டிடு ட்ரை பண்ணிபாருங்க !( நான் சொன்னது கொஞ்சம் ரெட் வைன் லசானியாவுக்கு உள்ளுக்க விட்டுடு ...)

.

Saturday, 2 January 2016

முஸ்தப்பா

பெண்கள் பற்றிய புரிந்துணர்வு  அதிகமில்லாத  வாழ்க்கையில் கடக்க முடியாத  சுவர்கள்  இல்லை  என்று படிப்பறிவு சொல்லிக்கொடுத்த அனுபவம் எப்போதும்போல உண்மையாக  இருப்பதில்லை.  அதன் பாதிப்பில் ஒவ்வொருவரும்  ஒவ்வொருவிதமான புளியமரம் ஏறிப்  குருட்டுப்  பேய்க்கு வாழ்க்கைப்பட்டது போன்ற  படிப்பினையைப் பெற்றுக்கொள்ள அப்பப்ப முஸ்தப்பா போல சில நண்பர்கள் வந்துதான் போகிறார்கள்.

                                             வாழ்க்கை அனுபவத்தில் சுத்துமாத்து  என்ற வார்த்தையை சந்தி முடுக்குகளில் எடக்கு முடக்கா சந்தித்த அனுபவம் நிறையவே இருக்கு , ஆனால் அதுக்கு  சுருக்கமான பெயராயும் சில் மனிதர்கள் இருந்து இருக்கிறார்கள் , அவர்களே அதுக்கு விரிவான பெயராயும் இருந்தார்கள்  என்பதை புரிந்து கொண்ட நாளில் அவன்  என் சிந்தனைகளை விட பிஸியாக இருந்தான்  . அவன் நல்லவனா கெட்டவனா என்று எனக்கு இன்றுவரை தெரியவில்லை. ஒரு நாளின் முடிவில் அமைதியாக இருந்து ஜோசிதால் அவன் வாழ்கையின் சுவாரசியமான ஓரங்களில் உரசிக்கொண்டு பயணிக்கும் ஒரு மனிதன்.

                                               ஒஸ்லோவின்  கடைநிலை  நகர விழிம்பில் ,வெளிநாட்டவர் அதிகம் நோர்வே மக்களுடன் கலந்து  வசிக்காத  க்ரிங்க்சு இல் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கும் உயரமான தொடர்மாடி வீடுகளுக்கு மெட்ரோ ரெயில்வே ஸ்டேசனில் வந்து இறங்கி இடதுகைப் பக்கமாக சொங்க்ஸ்வான் நெடும் சாலையைக் கடந்து கீழ்நோக்கிப் போகும் இறக்கமான படிகளில் இறங்கத் தொடங்கும்போது வலது பக்கம் உள்ள மூலையில் சின்னதாக முகத்தை இழுத்து மூடிக்கொண்டு " யார் வருவார் எப்போது " என்பது போல துருகிக் கடை இருந்தது.

                                      க்ரிங்க்சு  நவீன ஒஸ்லோ நகரத்தின் கட்டை விரலில் போட்ட மாணிக்க மோதிரம் .வில்லோ மரங்களை  தென்றலே அசைக்க விரும்பாத பின் அந்தி மாலை போல அமைதியான பிரதேசம், பழமையான நோர்பேறி சிர்க்கா என்ற தேவலாயம் இருக்குமிடம். அன்பான மனிதர்களின் சரணாலயம் . பத்து நிமிட நடை தூரத்தில் சொங்க்ஸ்வான் ஏரிக்கரை. கப்பல் ஓடி திரைகடல் திரவியம் தேடிய பணக்கார நோர்வே மனிதர்கள் அதிகம் ஆடம்பரமாக  வசிக்கும் பகுதி .அநாவசியமாக இரைச்சல்  கையை விட்டு நோண்டாத அதன் அமைதி பிரமிக்க வைக்கும் . அதன் அழகு யாருமே எழுத முடியாத ஒரு கவிதை மொழி .

                                           முஸ்தப்பா அந்தக் கடையை ஒரு வருடம் வாடகைக்கு எடுத்தான், அவன்தான் முதலாளி , ஆனால்   சில மாதங்கள் மட்டுமே நடத்தினான், அப்போதுதான்  அவனுக்கு நான் நண்பன் ஆனேன். நானாக அவனோடு நண்பன் ஆகவில்லை. ஏதோவொரு உள்மன எச்சரிக்கையில் அவனை நானாக நல்ல நண்பன் எண்டும்  சொல்வதில்லை .ஆனால் முஸ்தப்பா என்னை ஒரு நல்ல நண்பன் எண்டு எப்பவும் அந்தக் கடைக்கு போகும் எல்லாருக்கும் சொல்லிக்கொண்டு திரிந்தான்.

                                           தனிப்பட எனக்கு முஸ்தப்பா மிகவும் பிடித்த ஒருவன் . நல்லவனுக்கு நல்லவன் போன்ற அவன் தத்துவம் எப்பவுமே என்னோடு கை கொடுத்ததும் கை கோர்த்தும் பயணித்தது . மன அழுத்தத்தில் ஒரு மூலையில் ஒடுங்கிப்போய் இருந்த நேரம் " வாழ்க்கை வாழ்வதுக்கே " என்று ஜன்னல்களை அகலமாகத் திறந்து விட்ட உண்மையான நண்பன் . அவனோட லைப் ஸ்டைல் ஒரு பாம்பும் ஏணியும் விளையாட்டு. அதில் அவன் எப்பவுமே ஏணியா இருக்க விரும்பினான்,,எடேன் தோட்டத்தில் புசிக்க விரும்பிய கனியைக் கொடுத்துப்  பாம்புபோலப் பெண்கள் வந்தார்கள்

                                       அவனோட கடைக்கு க்ரிங்க்சு இல் உள்ள ஒரேயொரு வெளிநாட்டவர் அதிகம் வசிக்கும் ஒன்பது மாடி தொடர் குடியிருப்பில் வசிப்பவர்கள்தான் வாடிக்கையாளர் .நோர்வே வெள்ளை மக்கள் அந்தக் கடைக்கு சூப்பர் மார்கெட் மூடி உள்ள வார இறுதி நாட்களில் , அல்லது இரவு பதினோரு மணிக்குப் பிறகு தான் வேறு வழியிலாமல் என்னவாவது வேண்ட அவசரத்துக்குப் போவார்கள்.முஸ்தப்பா  அந்த வியாபாரத்தில் தான் சிலந்திபோல தொங்கிக்கொண்டு  அதை ஓட்டிக்கொண்டிருந்தான் .

                                        காரீம் அல்ஜுமைரி முஹம்மது  முஸ்தப்பா  வடக்கு ஈராக்கில் உள்ள உலகின் முதல் நாகரீகம்  தோன்றிய சுமேரியர்களின்  ஆணி வேரடியில்  யுபிரடிஸ் டைகிரிஸ் என்ற இரண்டு நதிகள் பாயும் கழிமுகத்தில் உள்ள ஒரு இடத்தில பிறந்தவன். தன்னை எப்பவும் அசுமேரி என்று பெருமையாகச் சொல்லுவான், ஈராக்கி என்று சொல்லவே மாட்டான் ஈரான்நாட்டுக்கும்  ஈராக் நாடுக்கும்  எல்லைச் சண்டை புருஷன் பொஞ்சாதி சண்டை போல நடந்த வருடங்களில் இள வயதில் நோர்வேயிட்கு அரசியல் அகதியாக வந்தவன் ,நோர்வே மொழி அரபிச் சத்தத்துடன் உரத்துப் பேசுவான்.

                                      நோர்வேயிய மொழியில் பீய்பாண் என்று ஒரு இடறலான வார்த்தை இருக்கு. அதுக்கு அர்த்தம் டேய் சனியன் என்பது. நோர்வேயிட்கு வரும் வெளிநாட்டவர் முதன் முதலில் அறிந்துகொள்ளும் வார்த்தை அது. அந்த வார்த்தையை நோர்வே மக்கள் கோபம் வரும்போது அல்லது நெருங்கிய நண்பர்கள் உரையாடும்போது மட்டுமே பாவிப்பார்கள். முஸ்தப்பாவுக்கு அது எப்பவுமே என்னோட கதைக்கும்போது உரையாடலின் தொடக்கத்தில் அல்லது முடிவில் வந்து விழும். அது எனக்கும் நெருக்கமாக இருக்கும். அதன் தரக்குறைவான அர்த்தம் அவனைப் பொறுத்தவரை யானையில் நுளம்பு கடிச்ச மாதிரி

                                     சதாம்உசேன் போல  உயரமானவன் முஸ்தப்பா , அவரைப் போலவே எடுப்பான அடர்த்தியான மீசை . எப்பவுமே விலை அதிகமான டிசைன் கடைகளில் விற்கும் உடுப்புகள் தான்  செலக்ட் செய்து வேண்டிப் போடுவான் அவனோட வடிவு அது ஒரு மன்மத அம்புகள் பாயும் கந்தர்வக் கவர்ச்சி. தலை மயிர் ஈச்சம் பத்தை  போல அடர்த்தியான சுருள் முடி , முகம் வச்சிரம் போட்டு அடிச்சது போல வனிலாக்  கலர் கலந்த  வெள்ளை நிறம் . கண்ணில எப்பவுமே ஒரு அவசரமாக  அடைக்கலம் தேடும் அவதி, அவன் சிரிப்பு எந்தப் பெண்ணையும் நின்று நிமிர்த்து நேராகப் பார்த்து சில நிமிடம் ரசிக்க வைக்கும், அப்படி குழந்தைப்பிள்ளைகள் போல கன்னத்தில் குழிவிழ சிரிப்பான்.

                                        அவன்  எப்பவுமே உரலில அவல் இடிச்ச மாதிரி கதைச்சுக்கொண்டு இருப்பான், ஒன்று அவன் வைச்சு இருக்கும்  மொபைல் போனில் கதைச்சுக்கொண்டு இருப்பான், அவன் கடையில் வேலைக்கு வைத்து இருக்கும் இளம் பெண் பிள்ளைகளோடு கதைச்சுக்கொண்டிருப்பான், அல்லது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள இழுத்து வைச்சுக் கதைச்சுக்கொண்டிருப்பான்,  அல்லது கடைக்கு வெளிய வந்து ரோட்டால போற யாரையாவது கூப்பிட்டு வைச்சுக் கதைச்சுக்கொண்டிருப்பான், சில நேரம் என்னக்கே போன் போட்டு வரச்சொல்லி கதைச்சுக்கொண்டிருப்பன்,

                          "  மாலிக்,  பீய்பாண் , உனக்கு ஒரு விசியம் தெரியுமா , பீய்பாண்,  எனக்கு    யாரோடயாவது கதைக்காம அஞ்சு நிமிஷம் இருந்தா நடு   மண்டை வெடிச்சு சிதறும் போல இருக்கும், பீய்பாண் ,  பல  சனங்களுக்கு வாய் என்னத்துக்கு இருக்கு எண்டே தெரியாது, பீய்பாண்  இந்த நோஸ்கங்களுக்கு வாய் எங்கே இருக்கே எண்டே தெரியாது ,பீய்பாண் இவங்களுக்கு சிரிக்க முதல் தெரியாதே , பீய்பாண்   இவங்கள் சிரிச்சாங்கள் எண்டால் செத்த பிணம் சிரிக்கிறது மாதிரி இருக்கும் எனக்கு ,, பீய்பாண் "

                                      எண்டு சொல்லுவான், அவனோட அவதானிப்புகள் கொஞ்சம் உண்மைபோலதான் எனக்கும் இருக்கும். ஆனால் அதை அலட்டிக்கொள்ளாமல் சும்மா கேட்பது. பாணும் பருப்புக்கும் நடுவில் உம்பளக்கட மாசி சம்பல் வந்தது போல இருக்கும் அவன் அப்படி சொல்வது 

                                         அவனோட கடையில் அவன் ஒருநாளுமே கையைக் காலை ஆட்டி குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்யிறதைப் பார்த்ததே இல்லை.எப்பவும் ஒரு இளம் பெண்ணை சாமான் அடுக்க ,சாமான் எடுக்க வேலைக்கு  வைச்சு இருப்பான். ஒட்டகத்தில் ஏறி இருக்கிற மாதிரி கசியரில் உயரமான ஸ்டுல் இல் அவன் இருப்பான். க்ரிங்க்சு பல்கலைக்கழக மாணவர்கள் தங்கிப் படிக்கும் இடம், அது அவனுக்கு வாசியாகப் போயிட்டுது. அதால் எப்பவுமே அவனுக்கு பார்ட் டைம் வேலைக்கு மாணவர்கள் கிடைப்பார்கள். அதில இளம் பெண்களை மட்டும் தான் வேலைக்கு எடுப்பான். அவர்கள் அழகாக இருப்பார்கள் .

                                        அவனோட மிகப்பெரிய பலம் அல்லது புத்திசாலித்தனம் எந்த ஒரு பெண்ணுடனும் அஞ்சு நிமிஷம் பேசினான் என்றால் அந்தப் பெண்ணின் சைகோலோயியை சிரிச்சு சிரிச்சே அடியோடு பிரட்டி பிரதி எடுத்திடுவான். அப்படி உருவி எடுக்கிறது அவனோட பிறவிக் கலை. அப்படிதான் ரிஸ்வாணாவும் சொன்னாள்,சிசிலியாவும் சொன்னாள், அவன் கடையில் ஒரு கிழமை மட்டுமே வேலை செய்த ரெண்டு இளம் பெண் பிள்ளைகளும் சொன்னார்கள் ,அந்தக் கடைக்கு தபால் போட வந்த தபால்காரியும் சொன்னாள்  அது ஏறக்குறைய அவனோட மிகப்பெரிய பலவீனம் போலவும் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும் .

                                       அவனோட கடைக்கு நான் எப்பவுமே ஏதாவது பொருட்கள் வேண்டப் போவது. அந்தப் பொருட்கள் மிக அருகில் உள்ள நோர்வே நாட்டவரின் சூப்பர் மார்க்கெட்டில் வேண்டாலாம். ஆனாலும் அவனும் ஒரு வெளிநாட்டவன் அவனும் பஞ்சம் புழைக்க வேண்டும் என்று நினைத்து பஞ்சியப் பார்க்காமல் பாதைகளில் ஏறி இறங்கிப் போவது. அது எப்படி முஸ்தப்பாவுக்கு இந்த விசியங்கள் அவளவு இலகுவாகக் கை வருகுது என்று அவனோட பழகிய சில நாட்களிலேயே கேட்டேன், அவன் என்னை எப்பவும் மாலிக் என்றுதான் சொல்லுவான் அதுக்கு அரபியில் என்னோட பெயரின் அர்த்தம் எண்டு சொல்லுவான்

                             " முஸ்தப்பா  என்னடா,,ரெண்டு நாளைக்கு முன் வேலை செய்த அந்த நோர்க்ஸ் பெட்டையைக் கானேல்லேயே,,இது யாரடா ஒரு புது பெட்டைய வேலைக்கு வைச்சு இருகிறாய் "

                               " ஹ்ம்ம்,,மாலிக்,,அவள் ஒரு உதவாக்கரை,,வேலைக்கு உதவ மாட்டாள்,,அதால வீட்டுக்கு அனிப்பிட்டேன் "

                                " என்ன வேலைக்கு உதவமாட்டாள்கள் எண்டு சொல்லுறாய் முஸ்தப்பா "

                                   " ஹிஹிஹிஹி ,,இவளுகள் சோம்போறிகள் மாலிக்,,நான் ஒண்டு சொன்னா இன்னொன்னோடு செய்யுராளுகள் "

                                 " முஸ்தப்பா ,,நீ சொல்லுறது அவளுக்கு விளங்காமல் இருக்கலாம் தானே "

                                        "  ஹிஹிஹிஹிஹி,,இவளுகளா ,,ஹிஹிஹி பழுத்த பழத்தையும் மிஞ்சி வெம்பிப் பழுத்த பிஞ்சுப் பழங்கள் "

                                   " என்னடா இப்பிடி சொல்லுறாய் "

                                     "  மாலிக்,,உனக்கு இதெல்லாம் விளங்காது ,,இந்த உலகம் ஏன் சுத்துது சொல்லு பார்ப்பம்,"

                                          " அது சூரியனின் ஈர்ப்பு விசையில் அப்படி சுத்துது எண்டு நினைக்கின்றேன் "

                               " மாலிக்,, உலகம் சுத்துது ஏனென்றால் பெண்களால் தான் காரணம் ,,உனக்கு இது புரியாது சனியனே "

                                 " அப்படியா,,இப்பிடி ஒரு விளக்கம் இன்றுதான் கேள்விப்படுறேன் "

                                      " சரி அதை விடு மாலிக் ,,ரிஸ்வானா ஏன் இப்ப கடைக்கு வாறதில்லை ,அவளைப் பாற்றி என்னவும் அறிஞ்சியா "

                                  " ரிஸ்வானா  யார்பா ,,அவளை எனக்கு தெரியாதே "

                                    " அவள் தான் உன்னோட அப்பர்த்மேண்டில் வசிக்கிறாலே ஈரான் நாட்டுக்காரி "

                                   " அப்படியா,,எனக்கு அவளைத் தெரியாது "

                                  " டேய்  சனியன் ,,அண்டைக்கு நீ பேரீச்சம்பழம் வேண்ட வந்தநேரம் என்னோட கதைச்சுக்கொண்டு நிண்டாளே அவள் டா,,அவள் உன்னைத் தெரியும் எண்டு சொன்னாளே "

                                          " நான் உன்னோட கடைக்கு வாற நேரமெல்லாம் நீ யாரோ ஒரு பென்னோடுதானே கதைச்சுக்கொண்டு நிக்குறாய்,,இதில யாரை எவளை நான் நினைவு வைச்சு அடையாளம் காணுறது சொல்லு பார்ப்பம் முஸ்தப்பா "

                                         " ஹிஹிஹிஹி டேய் சனியன் , நானா கதைக்குறேன்,அவளுகள் தானே  வழிஞ்சு வழிஞ்சு கதைகிராளுகள்,,சூடு ஏதிப்போட்டுப் போற பாலைவனப் புயல்கள் அவளுகள் "

                                         " நீ ரிஸ்வானாவோடு என்னவும் விசர்க்கதை கதைச்சு இருப்பாய் அதால அவள் இங்கால வரப் பயப்படுவாள் "

                                             " டேய்   சனியன் ,,அவள் தாண்டா டபிள் மீனிங் இல கதைப்பாள்,,நீ சும்மா பொத்திக்கொண்டு இருக்கு,,ஆனால்  ஒரு சின்னப் பிரச்சினை நடந்தது "

                                           " ஒ, உனக்கு சின்னப் பிரச்சினை ,,உன்னோட அளவுகோலில் ,,ஆனால் ,நீ சின்னப் பிரசினை எண்டு சொன்னால்,,அது  உலகமாக பெரிய பிரசினையாதன் இருக்கும் "

                                            " டேய் சனியன்,,அவள்  போன் அடிச்சா எடுக்கிறாள் இல்லையடா , வொயிஸ் மெயில் ரெக்கொர்டிங்கில போகுது "

                                        " ஒ அப்ப அவள் எச்சரிக்கை ஆகி இருக்கிறாள் என்று அர்த்தம் "

                                       " ஹிஹிஹிஹி,,டேய் சனியன் ,,,பொறு அவளுக்கு செய்யிறன் வேலை ,,உன்னோட அப்பார்ட்மெண்ட் இல்  எட்டாவது மாடியில் இருக்கிறாள் எண்டு சொன்னாள், "

                                     " சரி அதென்ன அந்த சின்னப் பிரச்சினை ,,எனக்கு சொல்ல விரும்பினால் சொல்லு முஸ்தப்பா "

                                    " ஹிஹிஹிஹி ,,அது,,,ஹ்ம்ம்,,அதை விடு சனியன் ,,பெண்கள் ஆண்களுடன் கதைச்சுக்கொண்டு இருக்கும் நேரத்தை விட கதைக்காமல் இருக்கும் நேரம் தான் அதிகம் ஆண்களை ஜோசிப்பாளுகள் ,,அதுதான் வுமன்  சைகோலோயி ,,ஆனால் இவள் கிறுக்குப் பிடிச்சவள் போல இருக்கிறாளே "

                                " நீதான் வுமன்  சைகோலோயி இல் மாஸ்டர் டிகிரி முடிச்சவன்,,நீ சொன்னால் அது சிக்மண்ட் பிரெய்ட்  சொன்ன மாதிரி உண்மையாத்தான் இருக்கும் "

                                   " ஹிஹிஹிஹி   சரி அதை விடு சனியன் ,,அவளைக் கண்டாள் ஒரே ஒருக்கா கடைக்கு வந்திட்டுப் போகச்சொல்லி சொல்லுவியா,,அதோட நான் இந்த சின்னப் பிரச்சினை முடிச்சு வைக்கிறேன் எண்டு சொல்லு,,நீ சொன்னாள் சிலநேரம் கேட்பாள்,,நீ ரெம்ப நல்லவன் எண்டு அவளுக்கு சொல்லி வைச்சு இருக்றேன் மாலிக் ,,ப்ளிஸ்  சொல்லுவியா "

                                  "  பார்க்கலாம் முஸ்தப்பா,,அவளைக் கண்டால் கேட்குறேன்,,ஆனால் நான் இதுவரை அவளோடு கதைத்ததே இல்லை,,"

                                " டேய்,,சனியன்  உன்னை என்னோட பெஸ்ட் பிரென்ட் எண்டு நினைக்கிறன்,,இப்பிடித்தான் நல்ல நண்பர்கள் அவசரத்துக்கு உதவ மாட்டாங்கள் எண்டு சொல்லுறது "

                               " சரி உன்னோட பிரச்சினையை சொல்லு இப்பவாவது "

                              " டேய் சனியன்,,,அது  ஊசி போற இடத்தில உலக்கையை வைச்சு ஓட்டுறது போல கொஞ்சம் குழப்பம் ,,ஹ்ம்ம்,,,அது உனக்கு இப்ப தேவை இல்லை,,பிறகு சொல்லுறேன் "

                              " முஸ்தப்பா,,இப்ப உன்னோட கதைச்சுக்கொண்டு நிக்க நேரம் இல்லை,,நான் வேலைக்கு போக வேண்டும் பா "

                               " என்னடா ரெண்டு நிமிஷம் கதைச்சுதுக்கு வருஷம் முழுக்க கதைச்ச மாதிரி சொல்லுறாய் டேய் சனியன் "

                                      " அடப்பாவி,,இப்ப அரை மணித்தியாலம் கதைச்சே காற்றோடு போயிட்டுது ,நான் போறேன் பிறகு வந்து கதைகுறேன் "

                                   " சரி,,போய்த்தொலை,,ரிஸ்வாணாவை கண்டால் மறக்காமல் கேள் ஓகே தானே , வெளிய தட்டில டுரியான் பழம் பழுத்து மணக்குது ரெண்ட எடுத்துக்கொண்டு போ. அதுவும் கையை விடும் போல இருக்கு கொண்டு போ .காசு வேண்டாம் ,, "

                                         நான் ஒரே ஒரு டுரியான் பழத்தை சொப்பிங் பாக்கில் எடுத்து வைச்சுக்கொண்டு வந்திட்டேன்.  அன்று முஸ்தப்பா அவனோட சின்னப் பிரச்சினையை எனக்கு சொல்லவில்லை , முதல் அதைக் கேட்டு அதுக்கு தீர்வு சொல்ல நான் என்ன சைகோ அனலைசிங் கவுன்சிலிங்கா  செய்துகொண்டு இருக்கிறேன் நீங்களே சொல்லுங்க பார்ப்பம் . நானே குருவி தலையில பனங்காய் போல தேவை  இல்லாத பிரச்சினைகளில் தலையைக் கொடுத்துப்போட்டு சேனப்பன் வீட்டுக் குரங்கு இழனிக் கோம்பைக்க கையை விட்ட மாதிரி   போற பாதை தெரியாமல் தடுமாறிக்கொண்டு பம்மிக்கொண்டு இருக்கிற ஆள் .

                                                  ரிஸ்வானாவுக்கு ரிஸ்வானா என்ற பெயரே முஸ்தப்பா சொல்லித்தான் எனக்கு தெரியும்.ஆனால் அவள் என்னோட அப்பாட்மென்டில் இருந்தாள். கன்னத்தில  கோபுர சந்தனம் தடவின மாதிரி அழகான நடுத்தர வயது, கொஞ்சும் இளமை ஆடாமல் தீர்க்கமாக நடப்பாள் ,தனியாவா அல்லது கணவனுடம் இருக்கிறாளா எண்டு தெரியாது.மூன்று சின்னப் பிள்ளைகளுடன் எப்பவும் வெளிய போவாள் . அடக்கமான பெண்.   ஊமத்தம்பூப்போல  பெரிய முகம் . கோடையில் நானும் என் நோர்ஸ்க் நண்பர்களும் வெளியே மர வாங்கில் பியர் அடிச்சுக்கொண்டு இருக்கும்போது  நிமிர்ந்தே எங்ககளைப் பார்க்க மாட்டாள். 

                              அரபி நாட்டவர்களுடன் நாங்கள் அவர்கள் வழியில் குறுக்கிட்டு வழமையாக எல்லாருக்கும் சொல்லும்  " ஹாய் " என்பதைக்  கூடச் சொல்ல மாட்டோம். அதுக்கா அவர்கள் புதினமான மனிதர்கள் என்று இல்லை. நட்பானவர்கள் .ஆனால் எப்பவுமே அவர்களின் கலாச்சார எல்லைகளை இலகுவில் விட்டுக்கொடுத்துத்  தாண்டமாட்டார்கள் .முக்கியமாகப் பெண்களோடு வெளி ஆட்கள்  யாருமே கதைக்க மாட்டார்கள் , அவர்களும் தங்கள் பாட்டில் போவார்கள்,வருவார்கள் 

                                                   ஒஸ்லோவில் சாமத்தியப்பட்ட பெண் தலை முழுக முகமெல்லாம் பூசிக்கொண்டது போல   பூசுமஞ்சள் வெயில் வெளிச்சமாக அடிச்சுக்கொண்டு இருந்த   ஒரு நாள் , வெளியே மரவாங்கில் இருந்துகொண்டு பேர்ச் மரத்தில  குருவிகளுக்கு தீனி கட்டித்  தொங்க விட்ட குழாயை மோர்க்கோ பறவைகள் சந்தேகமாகப் பார்த்துக்கொண்டு இருந்ததை நானும் சந்தேகமாகப் பார்த்துக்கொண்டு  இருந்தேன் ,ரிஸ்வான அவளோட மூன்று பிள்ளைகளோடு என்னைக் கடந்து சூப்பர் மார்கட்டில் பொருட்கள் வேண்டிக்கொண்டு அப்பாட்மென்ட் நோக்கி வந்துகொண்டு இருந்தாள்  , என்னை கொஞ்சம் விபரமாகப் பார்த்தாள் ,நான் முதல் முறையாக அரபியில்

                           " ஹேப கால  "

என்று கேட்டேன் ,,அவள் அதுக்கு சடார் என்று ஜோசிக்காமலே,

                             " அல் ஹம்துல்லா "

                                  என்று சொன்னாள், எனக்கு கொஞ்சம்  " அட்டிகைக்கு ஆசைப்பட்டவள்   இடுப்பில எருமைச் சங்கிலியைக் கட்டிக் கொண்டாளாம் .." போல அரபி மொழியில் வணக்கம் போன்ற சில விசியங்கள் சொல்ல தெரியும். துருக்கிகாரர்களின் ரேஸ்டோறேண்டில் கோப்பை கழுவும் வேலை சுவிடனில் செய்த போது பாடிப் பாடி அவர்களிடம் இருந்து கொஞ்சம் அரபி படித்தேன், அந்த மொழியில் எப்பவுமே ஒரு கவர்ச்சிகரமான சந்தம் இருப்பதைக் கவனித்து இருக்கிறேன்  

                               " கேபகாலக் கேவந்த சிலோனோக் சபாரக் ஐவோக் கல்லா அல்லாக் கரீம் அல்ல்லாமோ சல்லம் "

                                        என்று சொன்னேன்,அவளின் குழந்தைகள் என்னோட அரபியில் ஆச்சரியாமாகி என்னைப் பார்க்க, அவள் அதுக்கும்

                      " சுக்கிரியா ,,சுக்ரியா  அல்ஹம்துல்லா அல்ஹம்துல்லா ,,இந்த மாலும் அரபி " 

                              என்று  நன்றி நன்றி,,ஆண்டவன்  ஆசிர்வாதம் ,,நீ அரபி கதைப்பியா என்று அரபியில் கேட்டாள் ,நான் 

                         " அனா அரப் மாபி,,அனா வோல்லா மாந்தி மாய் அரப் "

                    நான் அரபு கதைப்பவன் இல்லை,,கொஞ்சம் தெரியும் என்று அரபியில் சொன்னேன் 

                         சுக்கிரியா ,,சுக்ரியா  அல்ஹம்துல்லா அல்ஹம்துல்லா 

                           என்றாள், நான் முஸ்தப்பா கேட்ட கேள்வியைக் கேட்டேன்

                                   " முஸ்தப்பா உன்னுடன் பேச வேணும் எண்டு சொன்னான்,,ஒரே ஒரு முறை கடைக்கு வந்திட்டுப் போகச் சொல்லிச் சொன்னான்,,அவன் கேட்ட தகவலை உனக்கு சொல்லுறன் "

                                                என்று நோர்ஸ்ச்கில்  சொன்னேன்,அவள் கன்னம் சிவப்பாகி விட்டது, பிள்ளைகளை தள்ளிப் போய் விளையாடச் சொன்னாள்,என்னை நேராகப் பார்த்து, வறுத்த மிளகாய்த்தூள் தடவின  நோர்ஸ்ச்கில்

                       "  என்ன?????????????? "

                                               என்று மிகக் கடுமையான அழுத்தம் கொடுக்கும் நோர்ஸ்ச்கில் இடியன் கட்டுத் துவக்கு வெடிச்ச மாதிரிக் கேட்டாள் ,பெண்கள் மென்மையாவர்கள், அவர்களின் உலகத்தில் கடுமை என்பது கடுகு போல . அவர்கள் ஒரு போதுமே கோபமாக " என்ன???????????? " என்று கேட்க மாட்டார்கள்,ஆனால் " என்ன????????????? " எண்டு இறுக்கிக்கொண்டு கேட்டால் அது முகத்தில கையை வைச்ச மாதிரி , நான் மறு முறையும்

                           " முஸ்தப்பா,துருகிக் கடை ஓனர் ,,கடை வைச்சு இருக்கானே அவன் ,, உன்னுடன் பேச வேணும் எண்டு சொன்னான்,,ஒரே ஒரு முறை கடைக்கு வந்திட்டுப் போகச் சொல்லிச் சொன்னான்,,அவன் கேட்ட தகவலை உனக்கு சொல்லுறன் "

                           என்று மென்மையான  நோர்ஸ்ச்கில்  சொன்னேன், அவள் கை ரெண்டையும் இடுப்பில பின்னோக்கி வைச்சுக்கொண்டு

                            " என்ன ???????????????????"

                                என்று நோர்ஸ்ச்கில் கேட்டாள், பெண்கள் ரெண்டாம் முறையும் " என்ன????????????????? " எண்டு உதைக்கிற மாதிரிக் கேட்டால் அது மாட்டுச் சாணியில் கையை வைச்சு அந்தக் கையை மூஞ்சியில் அறைஞ்ச மாதிரி, ரிஸ்வானா என்னை முறைச்சுப் பார்த்திட்டு தன் மூன்று பிள்ளைகளையும் தாய்ப் பறவை குஞ்சுகளை காப்பது  போல நெருக்கமாக பாதுகாப்பாக அணைத்துக்கொண்டு கூட்டிக்கொண்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்  என்பது போல உள்ளுக்கு போயிட்டாள்.

                                      நான் மரவாங்கில் இருந்துகொண்டு காலை ஆட்டிக்கொண்டு பேர்ச் மரத்தில  குருவிகளுக்கு தீனி கட்டித்  தொங்க விட்ட குழாயை மோர்க்கோ பறவைகள் சந்தேகமாகப் பார்த்துக்கொண்டு இருந்ததை நானும் சந்தேகமாகப் பார்த்துக்கொண்டு  இருந்தேன் ," மவனே ..இங்கே என்னதான் நடக்குது  " என்பது போல மோர்க்கோ பறவைகள் சந்தேகமாக என்னைப்  பார்த்துக்கொண்டு இருந்தன

                                   கொஞ்ச நேரத்தில் ரிஸ்வானா அப்பாட்மென்ட் வெளிக் கதவை வேகமா உதைத்து  தள்ளித் திறந்துகொண்டு வெளிய வந்தாள்,,வந்து எனக்கு நேரே வந்து , தலையில் மூடி இருந்த ஸ்கர்ப்பை சரி செய்து கொண்டு, சொண்டை வெங்கனாந்திப் பாம்பு  போல இறுக்கி வைத்துக்கொண்டு

                                                " உன்னோட கொஞ்சம் சீரியஸ் விசியம் பேச வேண்டும் இப்ப பேச முடியுமா "

                                           என்று கேட்டாள். இந்த  " உன்னோட கொஞ்சம் சீரியஸ் விசியம் பேச வேண்டும் இப்ப பேச முடியுமா  " என்ற வார்த்தைப் பிரயோகம் நோர்வே வெள்ளை மக்கள் சொல்லும் வார்த்தை. ஏதாவது முக்கிய விசியம் பேசவேணும் என்றால் இப்படிதான் சொல்லுவார்கள்.சும்மா வாய்க்கால் தண்ணி வள வள எண்டு ஓடின மாதிரி முக்கிய விசியங்களை அவர்கள் போகிற போக்கில் பேச மாட்டார்கள். ரிஸ்வானா அப்படிக் கேட்டது அவளுக்கு நோர்ஸ்ச்கில் ,நோர்வே கலாசாரத்தில் நிறைய விசியம் தெரியும் போல இருந்தது ,அல்லது ஈரானில் அப்படிதான் பேசுவார்களா என்று எனக்கு தெரியாது.

                                    " நீ முஸ்லீமா "

                                " இல்லை "

                                 " பிறகு எப்படி அரபி கதைக்குறாய் "

                                  " கொஞ்சம் அங்கே இங்கே சுரண்டிக் கற்றுக் கொண்டது ,முஸ்தப்பா கொஞ்சம் சொல்லி தந்தான் "

                                   " ஒ அதுமட்டுமா சொல்லித் தந்தான் ,,வேற ஏதும் சொல்லித் தந்தானா? "

                                  " இல்லை,,வேற ஏதும் சொல்லித்தரவில்லை "

                                   " இன்ஷா அல்லா,,அதோட உன்னை விட்டானே,,அதுக்கு அல்லாவுக்கு நன்றி "

                                  " ம்,,"

                               " நான் முன்னம் பின்னம் தெரியாத ஆண்களுடன் பேசுவதில்லை,,இப்ப உன்னோட பேசியே ஆக வேண்டும்,,,இல்லாட்டி என்னோட நெஞ்சு வெடிக்கும்  போல இருக்கு ,,முஸ்தப்பா என்ன சொன்னான்  அதை சொல்லு முதலில் "

                                 " அவன் ,, உன்னுடன் பேச வேணும் எண்டு சொன்னான்,,ஒரே ஒரு முறை கடைக்கு வந்திட்டுப் போகச் சொல்லிச் சொன்னான்,,அவன் கேட்ட தகவலை உனக்கு சொல்லுறன் "

                                        " ஒ அப்படியா,,முதலில் உன்னோட பெஸ்ட் பிரண்டுக்கு சொல்லு,,ஆட்களை நரி வெருட்டின மாதிரி வெருட்ட வேண்டாம் எண்டு "

                                 "அவன் என்னோட் பெஸ்ட் பிரெண்ட் எண்டு யார் சொன்னது "

                               " அவனே தான் சொன்னான்,,நான் யார் தெரியுமா,,,,என்னோட  அப்பா ஈரானின் ஆர்மியில் ஜெனரல் ஆக இருந்தவர்,,இவன் ஒரு சுண்டங்காய்,முஸ்தபாக்கு ,சொல்லு,,ஆட்களை  வெருட்ட வேண்டாம் எண்டு முக்கியமா பெண்களை வெருட்ட வேண்டாம் எண்டு,,எனக்குப் பயமில்லை எண்டு சொல்லு "

                            " ஹ்ம்ம் "

                            " விபரம் தெரியாத என்னோட பிள்ளைகளே என்னைக் கேட்குதுகள்  ஏனம்மா அழுகுரிங்க ,,ஏனம்மா பேய் அறைஞ்ச மாதிரி இருகுரிங்க எண்டு "

                             " ம் ,,சொறி,,எனக்கு தெரியாது உங்க பிரச்சினை என்ன எண்டு "

                          "  ஹ்ம்ம்,,என்னக்கும் தான் தெரியவில்லை,,என்னோட பிரச்சினை என்ன எண்டு,,அதுதான்  பிரச்சினையே "

                               " அய்யோ,,எனக்கு மண்டை எல்லாம் சுத்துது,,இதைக் கேட்க "

                                       " நான் ஆம்பிளைகளுக்கு முன்னால் இப்பிடிக் கதைக்கவே மாட்டேன்,,ஆனால் என்னோட அப்பா என்னக்கு சொல்லி சொல்லியே வளர்த்தார் என்னை ,பிழை நடந்தால் அதைத் தட்டிக் கேள் எண்டு,,என்னோட அப்பா ஒரு ஆர்மி ஜெனரல் "

                              " ம்  ம் "

                           " முஸ்தப்பா நல்லவன், எனக்கு விசர் வருகுது , நான் என்ன சொன்னாலும் உலக்கதுக்கு உண்மை தெரியாது,,நான் ஒருநாளும் மனத்தால் யாருக்கும் ஒரு சின்னத் தீங்கு நினைக்காதவள் ,ஹ்ம்ம் ஆனால் அவன்,,உன் பெஸ்ட் பிரென்ட் முஸ்தப்பா  நல்லவன் இல்லை,,எனக்கு அழவேண்டும் போல இருக்கு,," 

                                  " ஹ்ம்ம் ,,இங்கே அழாதே பிறகு ஆட்கள் என்னைத் தப்பாக நினைப்பார்கள்,நான் ஏற்கனவே பிச்சைக்காரன் போல பிஞ்சு போய் இருக்கிறேன்  " 

                              " பாவம் எண்டு அவனுக்கு உதவி செய்தேன், அவன் நல்லவன் எண்டு , இன்ஷா அல்லா , அதுவும் அகமத்துக்கு தெரியாமல்..... "

                         " அப்படியா "

                               " நான் ஒரு மடைச்சி,,முட்டாள்..அறிவே இல்லாத ஜென்மம்,,ஆனால் முஸ்தப்பா நல்லவன், ஹ்ம்ம் அன்பானவன் , அவனை நினைச்சால் அடி வயிறே நோகும்,,ஆனால் அவன்  நல்லவனில்லை ,அதுவும் எனக்கு தெரியும்  "

                                      " ஹ்ம்ம்  அதை அவனும் சொல்லுறான் இல்லை,,நீயும் சொல்லுறாய் இல்லை  மாதன முத்தா மண்பானையில் மண்டையைச் சுத்தி  மூக்கைத் தொட்ட மாதிரி இடையில நான் கிடந்தது தடுமாறுறேன் "

                                     " என்னோட ஸ்பார கொண்தோர் பாங்  அக்கவுண்டில் எவளவு பணம் இருக்கு எண்டு அகமத் ஒருநாளும் என்னைக் கேட்டதில்லை,,அவர் அன்பான ஒரு நம்பிக்கையான மனிதர் ,,நான் அதை என் பிள்ளைகளுக்காக சேமித்துக் கொண்டு வந்தேன் "

                                   " ஹ்ம்ம்,,அது நல்ல விசியம் தானே "

                                          நான் இதென்னவோ இதுக்குள்ள  கும்முடிப்பூண்டு குச்சுப்பிடி விளையாட்டு  இருக்கும் எண்டுதான் நினைச்சேன்,,ஆனால் இது என்னவோ காசு கொடுக்கல் வாங்கல் பிரச்சினை போலத்  தான் மேலோட்டமாக இருந்தது ,என்றாலும் ஆழமாமாக என்னத்தை ரெண்டு பேரும் சுழி ஓடினார்கள் என்று அனுமானிக்க முடியவில்லை

                                 "  ஹபீபி ஹபீபி எண்டு கொஞ்சிக் கொஞ்சி,,,என்னை சித்திரவதை செய்தான்,,அதால் உதவி செய்தேன் ...இப்ப அகமதுக்கு தெரிஞ்சா அவர் என்னைத் தலித் தலித்  எண்டு மூன்று முறை சொல்லி   தள்ளி வைச்சாலும் வைக்கலாம் அதுவும் நடக்கலாம் "

                                  " ஹ்ம்ம்,,அகமத் யார் "

                              " அவர் என்னோட புருஷன் "

                              " ஒ ,,நான் கண்டதே இல்லையே அவரை இங்கே உன்னோடு "

                               " அவர் அக்காவோடு இருக்கிறார்,,"

                                  " ஒ உன்னோட அக்கவோட இருக்கிறாரா,,இல்லை அவரோட அக்காவோடு இருக்கிறாரா ,,ஒண்ணுமே புரியலையே    "

                               " இல்லை,,அது அவர் முதல் மனைவி,,நான் அவாவை அக்கா எண்டுதான் சொல்லுவேன்,,என்னோட கூடப்பிறந்த அக்கா போலதான் ,,நல்ல உயிர் போல என்னோட  பாசமானவா "

                           " ஒ ,,இப்பிடி எனக்கு ஒரு துவரம்பருப்பு சுண்டல் போல வாழ்க்கை  ஒண்டும் கிடைக்குதில்லையே "

                              " என்ன கிண்டலா, துள்ளார் டு மேய் ..,நான் எவளவு கோவத்தில் இருக்கிறேன் தெரியுமா "

                                      " ஹ்ம்ம்  "

                                 " சரி,,,உன்னோட மட்டும்  ஒரே ஒரு விசியம் சொல்லுறேன் ,அதை மட்டும் முஸ்தப்பாவுக்கு போய்ச் சொல்லுவியா ."

                                      இந்த உலகத்தில் பெண்கள்தான் எல்லாவிதமான வலியையும் சுமக்கிறார்கள்.அவர்களின் வலி இந்தப் பூமித்தாயின் வலி. அது எனக்குத் தெரியும் .ஆனாலும் அவர்கள் தான் அன்புக்கு ஏங்கும் இதயத்தில் எதோ ஒரு வழியில் தடம்புரண்டு போகிறார்கள் ....

                                   

,,,,,,,,,,,,,,,தொடரும் .............

...



Friday, 1 January 2016

கதையல்ல நிஜம்

யாழ்பாணத்தில எங்கட வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி வீராளி அம்மன் கோவில் ரோடில ,ஒரு பாரதநாட்டிய டீச்சர் மாடி வீட்டில இருந்தா, அந்த டீச்சர் பார்ப்பதுக்கு நாட்டியப் பேரொளி போல மின்னிக்கொண்டு, அவா சும்மா நடக்கும் போதே  நிருத்தம் நிருத்தியம நாட்டியம் மூன்றும் கால்கள் எடுத்து வைக்கும் அடிக்களில் தாளம் போட , தில்லானாவிற்கு அழகு சேர்க்கும் நீண்ட கூந்தலை அலைபாய விட்டு  சிலப்பதிகார மாதவிபோல  தக தக என்று தக்காளி போல இருந்ததால் எப்போதும்  அவா உதவி கேட்கும்  நேரம் நான்  எடுபிடி உதவிகள் மறுப்பு சொல்ல மனம் வராமல், பரதநாட்டியம் மீது உள்ள அபிமானத்தால் செய்வேன்  என்று சொன்னால் நீங்க " அடி செருப்பால " என்று உடனேயே சொல்லுவிங்க, ஆனால் நான் சொல்லுறதுதான் வீராளி அம்மன் மேல சத்தியமா உண்மை . 

                     என்னோட பள்ளியில் சக வகுப்பில் படித்த , பல விதத்திலும் என் " ரோட் சைட் ரோமியோ " நாடகத்தில் என்னோடு தோளோடு தோள் நின்ற நெருங்கிய  நண்பன் ஒருவன் அந்த வீட்டின் மேல் மாடியில் மாச வாடைக்கு இருந்தான் . அடிக்கடி அவனைப் பார்க்கப் போகும் போதெல்லாம் அழகான இளம்பெண்கள் அந்த டீச்சர் தட்டுக் கழி  மன்னை  என்ற பலகையில் கட்டையால தட்டிக்கொண்டு 

              "  நவரச நாயகி சிவனை மணந்த கதை ,புது ரசமாணதடி  கிளியே ..." 

                                             எண்டு பாட அந்தப் பெண்கள், "தா,  தீ,  தொம் , நம், தரிகிட , திரிகிட" எண்டு ஆட, மேல்வீடு அதிரும். எங்களுக்கு அந்தப் பெண்கள் ஆடுவதைப் பார்க்க விஷுவல் சந்தர்ப்பம் இல்லாததால்,கட்டை தட்டும் சத்தம் கும்மி ,கோலாட்டம்,வசந்தன் பள்ளு நாட்டுப்புற நடனம்  போல தான் அவற்றின் தாள கதி சத்தம் கேட்கும் 

                                      நானும், அவனும் போகும்போதும், வரும்போதும் கடைக்கண்ணால அந்த பெண்களைப் பார்பம் ,டீச்சர்ரும் போகும்போதும், வரும்போதும் கடைக்கண்ணால எங்களைப் பார்ப்பா. டீச்சர் தரையிலதட்டி தாளம்போடுற கட்டையால முதுகில" பளார்" எண்டு போடுவாவோ என்ற பயத்தில நேரடியாகப் பார்க்கப் பயம்,ஆனாலும் அந்தப் பெண்கள் ஒவ்வொருவரும்  அலாரிப்பு , ஜதிசுரம், சப்தம், வர்ணம், பதம் ,தில்லானா ,விருத்தம் ,மங்களம் போன்றவற்றுக்கு உதாரண  வரைவிலக்கணம் போல ஜொலிக்க  அந்த  இளம் பிள்ளைகளின் இடுப்பு " எப்படா ஒடிஞ்சி விழுமோம்னு " கெஞ்சுவது போல மெலிந்து இருக்க, அந்தப் பெண்களும் ஏதோ தேவலோகத்தில இந்திரனோட ஆடிக் களைச்சு  மந்திர உலகத்தில் இருந்து குதிச்சு வந்த இந்திரலோகத்து சுந்தரிகள்  மாதிரிதான் நிலத்தில கால்படாமல் நடந்து போவார்கள்...

                                 யாழ்பாணத்தில ஓரளவு வசதியானவர்களின் பெண்பிள்ளைகள்தான் பரதநாடியம் பயில்வார்கள், பயின்று ,மண்டபம் எடுத்து சோழ மன்னன் திருமாவளவன் முன்னிலையில் மாதவி அரங்கேறிய மாதிரி ஊருக்கே வெத் திலை  பாக்கு வைச்சு அழைப்பிதழ் கொடுத்து அரங்கேற்றம் செய்வார்கள், அதோட அவர்களின் கலைப்பயணம் முடியும்  . அப்புறம்

                          ‘ அங்கச்  சடச்சி  அக்கா வீட்டுக்குப் போனாளாம்,  அக்கா தூக்கி மச்சான் கிட்டப் போட்டாளாம் ’  

                                      கதை போல அந்தப் பிள்ளைகளை, சங்கீத அறிவே இலாத ஒரு ஞானசூனியதுக்குக் கட்டிவைக்க, அவனும் வந்த முதல் வேலையா  " அவுக்கு அவுக்கு "  எண்டு அஞ்சாறு பிள்ளைப் பாக்கியம் கொடுக்க, அந்த நாட்டிய தாரகைகள், சில வருடங்களில் நாட்டிய நர்த்தகி நளினத்தில் இருந்து இறங்கி வந்து , உடம்பு பெருத்து  பொம்முக் குட்டி அம்மா போல இருப்பார்கள். சிலர் கெட்டித்தனமா நடன ஆசிரியைகள் ஆகி அன்றாட குடும்ப சுமையோடு அதை மற்றவர்களுக்கும்  தொழில் ரீதியாகவும்  சொல்லிக்கொடுப்பார்கள்.

                         பரத நாட்டியம் ஆன்மீக பக்தி உணர்வுள்ள நடனம், மேடையில் ஆடுவதை ரசிகர்கள் பார்க்கும் நடனம். ஆனால் எல்லா வெஸ்டர்ன் டான்சும் மனதுக்கு உற்சாகம் தரும் சோசியல்  நடனம், எல்லா வெஸ்டர்ன் நடனமும் ஜோடி சேர்ந்து ஆடுவதுக்கு வடிவமைக்கப்பட்டது,பரதம் அப்படி இல்லை .ஆனால் இரண்டிலும் ஆபாசம் இருக்கு என்றால்  அது பார்பவரின் மன ஒழுக்கத்தைப் பொருத்தது. ரெண்டிலும் ஆபாசம் இல்லை என்றால்  அதுவும் பார்பவரின் மன ஒழுக்கத்தைப் பொருத்தது..

                      பரதமும், கர்நாடக சங்கீதமும் உயர் குடி இன் அடையாளமா,மிகவும் சாஸ்திரிய வித்தக நுட்பங்களுடன் இருந்தது,,அது இரண்டையும் கீழ இறக்கி எல்லா மக்களும் ரசிக்க வைத்தவர்கள் பரதத்தை பொறுத்தவரை தேவ அடியார்களும், கர்நாடக சங்கீதத்தை பொறுத்தவரை நாதஸ்வரக் கலைஞ்சர்களும் என்பது என் அவதானிப்பு.மற்றப்படி அந்த நடனத்தில் காமம் இருக்கு ,இல்லை என்பது " கல்லு உரலுக்கு மேல கொடியில காஞ்சு கொண்டு இருந்த சேலை தவறிவிழ அந்த கல்லு உரலை ஒருவன் இரவு இரவா ஒருதருக்கும் தெரியாமல் சுமந்துகொண்டு போனானாம் பொம்பிளை எண்டு நினைச்சு " என்ற கதை போல...

                பரதநாட்டியம் அளவுக்கு டான்ஸ் டெக்னிக் உள்ள நடனம் உலகத்தில் வேற இல்லை, காரணம் அவளவு சாஸ்திரிய நுட்பம் அந்த கிளாசிகல் நடனத்தில் இருக்கு. அதை நாட்டுக் கூத்து ரேஞ்சுக்கு எளிமைபடுத்த முடியாது அப்படி இல்லை என்று அதை எல்லாருக்கும் விளங்கிற மாதிரி எளிமைப்படுத்தினால் அதன் " ம்யுசிகல் ரோயல்னஸ் "  என்ற மேன்மைநிலை இல்லாமல் போயிடும்.பரதம் போல வேறு வெஸ்டர்ன் டான்ஸ் இல்லை.  உங்களுக்கு தெரியுமா கர்நாடக சந்கீததில் 35 தாளம் இருக்கு ,வெஸ்டர்ன் டான்சில், அல்லது லத்தின் அமரிக்க டான்சில் ,அந்தளவு  பீட் என்ற டெம்போ தாளம் இல்லை. வேற எந்த டான்சிலுமே அந்தளவு இல்லை ...

                      பரதநாட்டியதை எல்லாரும் உள்வாங்கி முழுமையா ரசிக்க முடியாது ,இதுதான் பரதநாட்டியம் நிறையப்பேரை சென்ற அடையவும் தடையா இருக்கு ,அதன் கண்கள், உடலசைவு, உடல்நிலை (posture). கை முத்திரைகள், முக பாவம் போன்ற   விடயம் விளங்கினால் தான் சரியா அதன் இம்பிரசன் கிடைக்கும். இப்பெல்லாம் சும்மா தங்கள் காசின் பவர் காட்ட புலம்பெயர் தமிழர் நடன அரங்கேற்றம் செய்வார்கள். அவர்களின் மாமன்,மச்சான்,சித்தப்பன்,பெரியப்பன், போன்ற உறவினர் போய் இருந்து சுரக் கோர்வைகளும் ஜதிக்கோர்வைகளும் இருக்கும் ஜதிசுரம் என்றா என்ன என்றே விளங்காமல்  தலை ஆட்டுவார்கள். அவர்களில் எத்தின பேருக்கு அடவு, குத்தடவு, முத்திரைகளின் அர்த்தம் தெரியும், சும்மா டி ராஜேந்தர் பட சினிமாவில் பரதநாட்டிய சீன் பார்க்கிற மாதிரி பார்க்கவேண்டியதுதான்..

                      எங்கள் ஊர் வீராளிஅம்மன் கோவில் திருவிழாவில, அம்மனை வெளிவீதிக்கு உலாக் கொண்டு வரும்போது, ஒரு நடுத்தர வயதுள்ள அழகான பெண் , அம்மன் ஊர்வலதிட்கு முன்னால் தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர்,  நாட்டியம் ஆடிக்கொண்டு வருவா, என்னோட அம்மாவிடம்

                     "  ஏன் அம்மா அந்த  அன்ரி , பக்கவாத்தியம் , தடல் புடலான ஆடை அலங்காரம் இல்லாமல் சிம்பிளா அப்படி ஆடுற ?" எண்டு கேட்டதுக்கு,

                      " தெருவில ஆடுறவள் தேவடியாள், என்ன நீயும்போய் அவளோட சேர்ந்து ஆடப்போறியா "

                 எண்டு கோபமாகக் கேட்டா. இதுக்கு மேல விளக்கம் கேட்டா என்னோட அம்மா என்னை அனுமன் ஆட்டம் போட வைப்பா என்ற பயத்தில கேட்கவில்லை.

                       பரதம் பார்க்கும் பொழுது பாலியல் உணர்வு வருவதும் ,வராததும் அதைப் பார்பவர்களின் கண்களிலும்,மனதிலும் இருக்கு. என்னைப்பொருத்தவரை பரதத்தில் கஜுரோகோ சிற்பங்ககளில்,காம சூத்திராவில்,ராமாயணம்,மகாபாரதம் இல் உள்ள அளவு விரசம் இல்லை, ஆனால் அதை கவர்சியா ஆடினால் அது கவர்சியாதான் இருக்கும். சம்பிரதாயமான சாஸ்திரிய மேடைகளில் ஆடும் பரதத்தில் கவர்சி இல்லை, ஆனால் சினிமாவில் ஆடும் நடனத்தில் அது இருக்கு . முதல் சினிமாவில் ஆடுவது பரதமா என்பது வேறு ஒரு குழப்பம்.

                              நான் கொஞ்சம் தங்கோ,சலசா, பிளமிங்கோ  என்ற லத்தின் அமரிக்க டான்ஸ் பழகி இருக்கிறேன், சுவிடனில் அதை சொல்லித்தந்த  அழகான இளம் ஆசிரியை இடுப்பைக் கட்டிப்பிடிச்சு அதை சொல்லி தந்தாள்,நானும் அவள் இடுப்பை கலை ஆர்வமாக  இறுக்கிக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு  அதைப்  பழகினேன். அந்த டீச்சரும் சொன்னா  பரதநாட்டியம் போல கடினமான சங்கதிகள் உள்ள டான்ஸ் உலகத்தில இல்லை என்று. நானும் எல்லாரும் போல " கெட்ட கழுதை ஆத்துக்குப் போச்சாம், அங்க ரெண்டு கழுதை மறைவுக்கு வான்னுச்சாம்  "  என்பத  போல சும்மா பரதநாட்டியம் எல்லாரும் போல பார்ப்பேன்,  மேலோட்டமாய் ரசிப்பேன் அவளவுதான், அதுக்குமேல உள்ளே போய்  ரசிக்கும் அறிவு வீச்சு இல்லை,

                                  யாழ்பாணத்தில கலைகள் பழகுவதயையே பொருளாதாரம்தான் தீர்மானிக்கும், வசதியானவர்களின் பிள்ளைகள்தான் பரதநாடியம், வீணை ,வாய்ப்பாட்டு ,ஓர்கன் ,பியானோ,மிருதங்கம் ,கிட்டார் ,வயலின் பயில்வார்கள். வருமானம் குறைந்த ஏழைகள் அன்றாட வாழ்வே "தரி கிட தத் தம்" போடுவதால், திறமை உள்ளவர்களுக்குகூட சந்தர்பம் கிடைபதில்லை,

                   அப்படி இல்லை என்றால் அவர்கள் வீட்டில வயதான பெரியவர்கள் வாசித்த ஆர்மோனியப் பெட்டியை வைத்து அமுக்கி "நொயிங்ங்  ,நொயிங்ங்  " என்று வாசித்து பழகி கலைஞ்சர் ஆனாலும், அவர்களின் ஆர்மோனியப் பெட்டி, வில்லுப் பாட்டு,  நாடகம், நாடுக்கு கூத்து என்று கிராமிய அடையாளங்களைதான் சுற்றும். அதுக்குமே அவர்கள் கவனிக்கப்படவேமாட்டார்கள்! ஆர்மோனியப்பெட்டியை வாசிபத்தைக் கேவலமாகவும் ,அதை வாசிப்பவனை " பெட்டி வாசிப்பவன் " என்ற சுத்த பட்டிக்காட்டான் எண்டும் நினைத்த மனநிலையும் இருந்தது " யாழ் பாடி " வாசித்து காரணப் பெயர் வந்த யாழ்பாணத்தில!

                     பல மேடை நிகழ்சிகள்,பழைய  ஸ்டுடியோ ஒலிப்பதிவு விடியோக்கள் பார்க்கும் போது  மெல்லிசை மன்னரும் , இசைஞாணியும், திரைஇசைத் திலகமும் ஆதாரமாக ஆர்மோனியப் பெட்டியை வைத்துப் பின்னி எடுத்ததைப் பார்க்கும்போது , யாழ்பாணத்திலும் அப்படி ஒரு உலகத்தரமான இசைமேதை கவனிப்பாரற்று காணாமல்போய் இருக்கலாம்....

.

ஓசிச் சாப்பாடு

வருடத்தில் மார்கழி மாதம் ஒஸ்லோவில் ஓசிச் சாப்பாட்டுக்குக் குறைவு இல்லாத மாதம். ஜுலபோர்ட் என்று சுத்திச் சுத்தி கிறிஸ்மஸ் பாட்டிக்கள் குறைவில்லாமல் நடக்கும். இதுகள் தனிப்பட்ட கிறிஸ்மஸ் பாட்டிகள் அல்ல கும்பலில் கோவிந்தா போல அன்னக்காவடி தூக்கிக்கொண்டு அல்லாடும் மக்களுக்காக நோர்வே மக்கள் தங்கள் தராதரங்களில் இருந்து கொஞ்சம் இறங்கிவந்து எல்லாருக்காகவும் வைக்கும் பாட்டிகள். இவை அதிகம் முன்பு வேலைசெய்த, இப்ப செய்யும் இடங்களில், ரெஸ்டோறேண்டில், பொது இடங்களில்,கப்பலில், நடக்கும்

                            ஒஸ்லோவில் நிறைய உதவும் உள்ளம் உள்ள கிறிஸ்தவ அமைப்புக்கள் உள்ளன. அவர்கள்தான் இந்த நகரத்தின் விளிம்புநிலை மனிதர்களைத் தாங்கிப்பிடித்து வைத்து இருப்பவர்கள். நோர்வே அரசாங்கம் வரிகளில் இருந்து கணிசமான அளவு இந்த அமைப்புகளுக்குக் கொடுத்தாலும் சென்ற தலைமுறையில் வசதியாக இருந்து இப்ப வயதுபோன நிறையப் பணக்கார மனிதர்கள் தான் அந்த கிறிஸ்தவ அமைப்புக்களின் பொருளாதார நாடித்துடிப்பு.

                                  சென்ற நூற்றாண்டில் விவசாயிகளாக இருந்த நேரம் நோர்வே மக்கள் என்ன இயற்கையாகப் பதனிடப்பட்ட இறைச்சி, மீன் உணவை உண்டு வாழ்ந்தார்களோ அந்த உணவுதான் இப்ப நோர்வே கிறிஸ்மஸ் இராப்போசன மேசையில் இருக்கும் அவர்களின் சம்பிரதாய உணவு. மார்கழி மாதம் இங்கே குளிர் அதிகம் அந்த கிறிஸ்மஸ் சம்பிரதாய உணவில் கொழுப்பு அதிகம், குளிரைத் தாங்க கொழுப்புக் கொஞ்சம் தேவை . அதால வேண்டிய மாதிரி சாப்பிடலாம் போல இருக்கும்.

                                  கிறிஸ்மஸ் இரவு 24 ம் திகதியில் இருந்து முதலாம் திகதிவரை நோர்வே மக்கள் தங்களின் குடும்பங்களுடன் தனிப்பட்ட குடும்பப் பாட்டிகள் வைப்பார்கள். அதில் மிகவும் நல்ல நெருக்கம் உள்ள நண்பர்கள் குடும்ப உறுப்பினர், உறவினர் இவர்களுடன் சேர்ந்து அவர்கள் வீட்டுகளில் நடக்கும். கிறிஸ்மஸ் இரவு 24 ம் திகதியில் இருந்து முதலாம் திகதிவரை நோர்வே மக்கள் ஒரு வேலையும் செய்யமாட்டார்கள் .அணுக்குண்டு வெடிச்சாலும் அசையமாட்டார்கள்

                                    கிறிஸ்மஸ் இரவுப் பாட்டிகள் அதுக்கு என்னைப்போல வந்தான் வரத்தான் எல்லாரையும் தங்கள் வீடுகளுக்குள் உள்ளே எடுக்க மாட்டார்கள். அதைவிட நோர்வே நோர்க்ஸ் மக்களுடன் அவர்கள் வீடுகளுக்கு உள்ளே நடக்கும் பாட்டிகளில் நடக்கும் கலந்துரையாடல்களில் அதிகம் சுவாரசியம் இல்லை. கிளியைப் பிடிச்சு வைச்சு அதுக்கு இன்னொருமுறை பச்சைப் பெயின்ட் அடிச்சுக்கொண்டு இருப்பது போல இருக்கும்.

                                    என்னைபோல வந்தேறுகுடி மனிதர்கள் எவளவு கலாச்சார ,மொழி, பண்பாட்டில், பழக்கவழக்கத்தில் வேறுபட்டவர்கள் என்பதை நோர்வே மக்களுடன் அவர்களின் கொண்டாடங்களில் நாக்கு நனைச்சு நெருங்கிப்பழகும் போதுதான் நல்லாத் தெரியும். அவர்களுக்கும் என்னைப்போல தமிழ் அடையாளம் உள்ள ஆட்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு நோர்வே மக்கள் தங்களின் இன மக்களுடன் உண்மையானவர்கள் ,நேர்மையானவர்கள். என்னதான் நாங்கள் தலைகீழாக நிண்டு நல்லவன் எண்டு நிரூபித்தாலும் எங்களில் அதிகம் நம்பிக்கை அவர்களுக்கு இல்லை.

                                 இரட்சணிய சேனை என்ற கிறிஸ்தவ அமைப்பின் ஒரு கிளையின் குசினியில் சில வருடம் வேலை செய்து இருக்கிறேன். அந்த அமைப்பிடம் இருந்து கிடைத்த அழைப்பால் இன்று டென்மார்க்க்கும் ஒஸ்லோவுக்கும் இடையில் ஓடிக்கொண்டு இருக்கும் DFDC என்ற உலாசப்பிரயான கப்பலில் இந்த வருடமும் ஓசியில் சாப்பாடு கிடைத்தது.

                                 அந்த நிறுவனத்தில் வேலை செய்த போது கொஞ்சம் நல்ல பெயர் இருந்தது அதால பல வருடமாக இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்துக்கொண்டு இருக்கு. என்னவோ பெரிய வெள்ளைக்காரன் போல இந்தக் கப்பலுக்குப் போனாலும், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் நிலைமையை ஜோசிக்க மனதளவில் உண்மையில் பிச்சைக்காரன் போலத்தான் உணர்ந்தேன்.

                                     இந்த வருடம் கப்பலில் ஏறும் போதே, ISIS தீவிரவாதிகள் புண்ணியத்தில் பிரயாண ஆவணங்கள்உறுதிப்படுத்தல்,ரகசியப் பொலிஸ் கண்காணிப்பு என்று பயங்கரப் பாதுகாப்புக் கெடுபிடி அந்த உல்லாசப்பயணிகள் கப்பல் தரித்து நின்ற இடத்தில. போதாக்குறைக்குக் " கடி நாய் கவனம் " என்று யாழ்பாணத்தில் ஒரு போட் படலையில் தொங்கவிடுவார்களே அதுபோல கழுத்தில ஒரு அடையாள அட்டையையும் கட்டாயம் கொழுவிக்கொண்டே இறங்கும் வரை இருக்கவேண்டும் எண்டு சட்டம் போட்டு இருந்தார்கள்,


                                          வாழ்கையில் பல விசியங்கள் ஏன் " அடைமழைக்குக் குடை இல்லாதவனுக்கு ஐந்து பெண்டாட்டியாம் .." போல திடிர் திடீர் ஆக நடக்குது என்று யாருக்கும் சொல்ல முடிவதில்லை.
                                 அழைப்பிதழில் அந்த நிகழ்வில் " அல்கஹோல் பரிமாறப்படாது " என்று எழுதி இருந்தார்கள், நான் முன்னம் வேலை செய்த நேரமே கொஞ்சம் பிரச்சினையான ஆளா இருந்ததால் ," மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக் கூடாது, கையாலும் காட்டக்கூடாது " என்பது போல பிரச்சினை வரும் என்று தெரியும் .
                                    ஆனாலும் என்ன வெளியேதான் வேண்டிய அளவு அல்கஹோல் வேண்டிய மாதிரி வேண்டலாமே,,அதால வெளியேயே நல்லா நாலு கட்டைக்கு சுருதி ஏத்திக்கொண்டு, சதுஸ்ரசாதி திரிபுடை தாளம் போட்டுக்கொண்டு " குறை ஒன்றும் இல்லை மறை மூர்திக் கண்ணா...." என்று பாடிக்கொண்டு போனேன்...
                                      சில பழைய வேலை நண்பர்களை சந்திக்கவும் ,பல அழகிய இளம் பெண்களை ஜோள்ளுவிடவும் மட்டும் முடிந்தது .ஒரு நோர்வே வாழ் சாதாரணமான மனதுள்ள தமிழ் எழுத்தாள நன்பரையும் அந்த நிகழ்வுக்கு வரச்சொல்லி சந்திக்க நினைத்து இருந்தது சில பிரக்டிகல் காரணங்களால் சாத்தியம் ஆகாமல் போனது கவலையான விடயம்.
                                        மற்றப்படி அதில என்னதைப் பார்த்தேன் என்பதை " வீட்டுக்கு இருந்தால் வெங்கலப் பெண்டாட்டி வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி ..." பழமொழிபோல தான் என் வாழ்கையே இங்கே. இருப்பதால் .நேற்று இரவே வெறுப்பின் விழிம்பில் சில வரிகளில் கவிதை போல எழுதிப்போட்டேன்,
                                        அந்த நிகழ்வை கொஞ்சம் படங்கள் எடுக்க விரும்பி கமரா மொபைல் போனை எடுக்க ,அந்தக் கப்பலில் வேலை செய்யும் ஒரு இளம் டெனிஷ் பெண் வந்து டெனிஷ் பாசையில் ,கொஞ்சம் கடுமையாக " இங்கே படம் எடுக்க அனுமதி இல்லை " என்று சொன்னாள்.நான் ஆவலுடன் அவளிடம் அவள் அழகு பற்றிக் கதைத்தேன்,
                                                முக்கியமா அவளுக்கு ஒஸ்லோ பற்றி என்ன தெரியும் என்று கேட்டேன்,,என் நெஞ்சில பாலை வார்க்கிற மாதிரி ஒண்ணுமே தெரியாது என்று சொன்னாள்." மைலங்கி மைலங்கி பூ எங்கே வைத்தாய், வாடாதே வதங்காதே அடுப்பிலே வைத்தேன் " கதை போல அவளுக்கு கயிறு திரிக்கலாம் போல இருந்தது..

                               " என்னோட ஒரு நண்பன் நோர்வேயின் புகழ் பெற்ற போடோகிராபர் அவன் எடுக்கும் பெண்களின் படங்கள் நோர்வேயின் முக்கிய மொடல் மாத சஞ்சிகையில் முதல் பக்கத்தில் வரும் , அவன் நான் என்ன சொன்னாலும், நான் சொல்லும் பெண்களை தலை கீழாக நின்றும் மறு பேச்சு இல்லாமல் படம் எடுப்பான் ,அப்புறம் உன் விருப்பம் " என்றேன்
                  அவள் கொஞ்சம் ஜோசித்துப்போட்டு 
                               " உண்மையாகாவா சொல்லுறாய் , நான் இந்தக் கப்பலில் நாலு வருடம் வேலை செய்யுறேன் , நீ சொல்லும் அந்த நோர்வே மொடல் சஞ்சிகையின் பெயர் என்ன,உன் போடோகிரபி நண்பன் பெயர் என்ன "  

                      என்று கேட்டாள். நான் வாயில வழுக்கி வந்த ஒரு நோர்வே நாட்டவர் பெயரை சொல்லி,வாயில சறுக்கி வந்த ஒரு மொடல் மகசின் பெயரை சொல்லி

                           " அப்புறம் உன் இஸ்டம் ,," 

                என்று ஆர்வம் இல்லாத மாதிரி சொன்னேன் ,அவள் மிகவும் ஆர்வம் ஆகி என்னுடைய மொபைல் போன் நம்பர் கேட்டாள், நான் அஞ்சு வருசம் முன பாவித்து இப்ப பாவனையில் இல்லாத நம்பரைக் கொடுத்தேன்..
                                          " நான் இன்று இரவு இந்தக் கப்பலில் கோபன்ஹேகன் இரவு கப்பலில் போறேன்,,நாளண்டைக்கு ஒஸ்லோ இந்தக் கப்பல் திரும்பி வரும்,வந்தவுடன் உனக்கு டெலிபோன் அடிக்கவா,இதுபற்றி கொஞ்சம் உன்னோடு பேசவேண்டும் " 

                       என்று மிக மிக ஆர்வமாக் கேட்டாள். அவளைப் பார்க்க " ஏற்கனவே மாமி பேய்க்கோலம், அதிலும் மாரி காலம் கொஞ்சம் மாக்கோலம் போல " இருந்தாள். 
                             " அப்புறம் உன் விருப்பம் " 
                                            என்று சொல்லி முடிக்க முதலே ...அவளே என் கமரா போனை வேண்டி சில படங்கள் என்னை எடுத்தாள்,அதில ஒரு படம் தான் இது. புத்திசாலித்தனத்தை குதிரை மேல் ஏற்றி, சட்ட திட்டத்தின் தலையிலே புல்லுக் கட்டை வைத்தடிக்கிற காலத்தில வாயுள்ள பிள்ளை தான் வங்காளம் போகும் ,,இல்லையா ,,சொல்லுங்க பார்ப்பம் .....

..                                        .....என்ன சீவியமடா இது...



Tuesday, 29 December 2015

மனம் ..

வருமா வராதா அல்லது வரமா சாபமா என்று வெண்பனிப் பொழிவுக்குக், காத்திருக்க நேற்று இரவு திருவாதிரை நட்சத்திரத்தில் அது இறங்கி இருக்கு. நோர்வேயில் கிறிஸ்மஸ் விடுமுறை நாட்கள் வெண்பனி இல்லாமல் இருப்பது முதலிரவு இல்லாமல் கலியாணம் போல , அவளவு வாழ்க்கை முக்கியத்தும் அதுக்கு இருக்கு .
                                முக்கிய காரணம் நோர்வே வெண்பனி வெண் இரவுகளில்தான் வளைகாப்புக் பெண்ணின் புது வெட்கம் போல அள்ளி அணிந்து கொண்ட ஜவ்வனங்களுடன் ஜொலிக்கும். அது வந்தாலும் திட்டியும் வராட்டியும் திட்டியும் எப்பவுமே எழுதும் ஒரு மண்டைப்பிழையான ஒரே ஒரு நோர்வேவாழ் இலங்கைத் தமிழன் நானாகத்தான் இருக்க முடியும்.
                                       நான் வசிக்கும் இடத்தில ஸ்கி என்ற பனிச்சறுக்கு தளம் அமைத்து ஓடும் இடமே இருக்கு. ஒரு தமிழ் நண்பர் குடும்பமாக இலண்டனில் இருந்தே நாலு நாள் விடுமுறையில் பிள்ளைகளோடு சில நாட்கள் முன் வந்திருந்தார். அவர் முன்னர் நோர்வேயில் தான் பாஸ்போட் கிடைக்கும் வரை அரசியல் அகதியா வசித்தார்,
                                          பிறகு நோர்ஸ்க் பாஸ்போட் கிடைச்ச கையோடு நோர்வே பிரசை ஆகி இலங்கை போய்க் கலியாணம் கட்டிக்கொண்டு வந்து, பிள்ளைகள் பிறந்து முடிய மனைவியுடன் பிள்ளைகளை ஆங்கிலத்தில் படிக்க வைக்க வாழ்வு கொடுத்த நோர்வேயை வாயும் வயிறுமாக விட்டுப்போட்டு மான்செஸ்டர் இக்கு எஸ்கேப் ஆகிப் போனவர். நேற்று ட்ரம்மன் என்ற இடத்தில இருந்து போன் எடுத்து ,வெறுப்பாக

                               " ஒரே கடுப்பா இருக்கு, இன்னும் சினோ விழவில்லையே,போன வருஷம் நல்ல என்ஜாய், இந்த வருடம் என்ன இப்படி அல்லைப்பிட்டி தரவை போலக்கிடக்கு , உம்மோட பக்கம் வரவே அலுப்பா இருக்கு, வரேக்க கேட்விக் ஏர்போட்டில் ரெண்டு புறா வேண்டிக் கொண்டு வந்தனான் "
                               
                                                 என்று சொன்னார். எனக்கும் கவலையாக இருந்தது அவர் என்னோட பக்கம் வந்தால் எப்பவுமே போத்தல் கொண்டு வருவார் .லண்டனில் போத்தல் நல்ல மலிவு .புறா என்பது புறாப் படம் போட்ட போத்தலில் நிரப்பி வரும் பேமஸ்குருஸ் என்ற ஸ்கொட்லாந்து விஸ்கி. பல வருடம் முன்னர் ஒன்றாக ஒரு இடத்தில இருந்தோம் அதை நினைவுகொள்ள எப்பவுமே நடக்கும் கிறிஸ்மஸ் பாட்டியில் புறா ரெம்பவே அனுசரணையாக இருக்கும்

                                          " சில நேரம் இரவு இறங்கலாம் என்று வானிலையில் சொன்னார்கள், இறங்கத்தான் வேண்டும் இல்லாட்டி எனக்கும் வாழ்க்கை வெறுக்கும். மான்செஸ்டர் இல இருந்து ஒஸ்லோ வந்ததே சினோவில உருண்டு  பிரள ."

                                  " அதெண்டா உண்மைதான் போல இருக்கு "

                                 " சினோ இல்லாட்டியும் என்ன நாலு பெக் அடிச்சுப்போட்டு பழைய கதைகள் கதைப்பம்..அதுக்கும்  சான்ஸ்  இருக்கும்  தானே  "

                                "பிரசினை  இல்லை,,வாங்கோ ,  கதைகளுக்கு  என்ன  குறைச்சல்,,அதுவும் போத்தில் மூடி திறக்கவே கதையள் அவிழுமே  " 

                                  " பழைய ஆட்கள் எல்லாம் இப்ப எங்க இருக்கினம் கொண்டக் இருக்கோ "

                                          " பழைய ஆட்கள் எல்லாம் இப்ப பழசாகிப் போனார்கள்,,ஒருவரோடும் தொடர்பு இல்லை,,,சும்மா கண்டா காதுக்க விரலை விட்டுக்கொண்டு கதைக்கிறது "

                                   "   என்ன நடந்தது "

                                 " என்ன நடக்க வேணுமோ அதுகள் தான்  நடந்தது,, எல்லாரும்  இப்ப தனித் தனியா குடும்பம் வாழ்க்கை  எண்டு போட்டாங்கள் "

                                  "   ஹ்ம்ம்,, அது  உண்மைதான்,,நல்லா  இருகுரான்களோ "

                                  "   அது  தெரியாது,,உண்மையில் வெளிய தெரியாது,,துண்டைக் காணோம் துணியைக் காணோம்  எண்டு ஓடிக்கொண்டு இருக்கலாம் "

                        "மோகனுக்கு  அக்செப் பண்ணி பேப்பர் கிடைசிட்டுதோ    "

                                 "  எந்த மோகன்  " 

                              "  அலவாங்கு  மோகன்,,வன்னிப் பொடியன்  " 

                               "அவனைப்  பிடிச்சு  திருப்பி அனுப்பிப்போடான்கள்     " 

                             "  எண்ட  கடவுளே,,அவன்  இயக்கத்தில  இருந்தவன்  எல்லோ "

                            " ஹ்ம்ம்,,,இங்கே  உண்மையான அரசியல் அகதிக்கு வதிவிட  அந்தஸ்து  பேப்பர்  கொடுக்க மாட்டாங்களே,,ஹ்ம்ம்,,,இதைக்  கதைச்சால்  கொதி  வரும்  "

                            "  படிச்ச மனோவும் ,மொக்கு மனோவும் இப்பவும் ஒன்டாவே இழுபடுராங்கள்.. ரெண்டு பேரோடும் கதைச்சே  பலவருடம் "

                             "  படிச்ச  மனோ  கழுவல் துடையல் கொம்பனி பிர்மா வைச்சு நடத்துறான்,,மொக்கு மனோ ஒஸ்லோ கொமுயுன் இல டெக்னிகல் அட்வைசர் வேலை  செய்யுறான் "

                             "  என்னது  நம்பவே முடியவில்லையே,,ரெண்டு  பேரும்  செய்யிற  வேலையே  சம்பந்தா சம்பந்தம் இல்லாமலிருக்கே "

                           "  நம்ப முடியாமல் சம்பந்தா சம்பந்தமில்லாமல் சம்பவங்கள் நடக்கிரதுக்குப் பெயர்தான்  வாழ்க்கை "

                                    "   ஹஹஹஹா "

                           "    ஹ்ம்ம்,, ஆனால் ரெண்டு மனோவும்  இப்ப ஒஸ்லோவுக்கு வெளிய சொந்த வீடு வேண்டி இருகிறாங்கள் "

                                        " சாம்பாரு மணியோடும் கொண்டக் இல்லையா அவன் உன்னை விட்டுப் போக மாட்டனே, ரெண்டு பேரும் நல்ல ஓட்டே எப்பவும் , ரெண்டு பேரும் நேரம் காலம் இல்லாத தண்ணிச் சாமிகளே "

                                                 " ஹஹஹ்ஹா,,,சாம்பாரு மணி இப்ப திருந்திட்டான்,,குடிக்கிறது இல்லை,,இப்ப சாமியார் போல ஒஸ்லோ முருகன் கோவில்ல தேவாரம் பாடுறது , சாமி தூக்கிறது , மண்டக்கப்படியில சுண்டல் குடுக்கிறது எல்லாம் அவன்தான் "

                                         " என்ன ,பழைய பம்பல் ஒண்டும் இல்லைப்போல இருக்கே,,என்ன நடந்தது "

                                      " ஒன்டும் வித்தியாசமா நடக்கவில்லை,முன்னம் தனிக் கட்டைகள் எலிகள் போல ஓடித் திரிந்தோம் இப்ப அவர் அவர் வாழ்க்கை அவர் அவர் பாதையில் குடும்பமாகிப் பெருத்து பெருஞ்சாளிகள் ஆகி சுமைகள் அதிகமாகி விட்டது "

                                     " போன வருஷம் ஹோவ்செத்ரா இருந்திச்சே அமல்ராச் இன் பிச்சா கடை அதிலயா இப்பவும் வேலை "

                                             " இல்லை,,அது போன வருசமே நாமம் போட்டு இழுத்து மூடியாச்சு "

                                     "   நீர்  வேலை  செய்த சாப்பாட்டுக் கடைகள் ஒரு வருஷத்தில் இழுத்து மூட  வேண்டிவரும்  என்று  மொட்டை மனோ எப்பவும் சொல்லுவானே "

                                           " ஹஹஹ்ஹா,,உண்மைதான்,,,ஆனால் அமல்ராஜ்  நடத்தின  பிட்சா கடையில் வேற பிரசனை  வந்தது "

                               " என்ன பிரசினை,,,,சொல்லுமன்,,எனக்கும் அமல்ராஜ் போஸ்ட்குருன் இல இருந்த நேரம்   நல்ல பழக்கம் முன்னம் "

                                  "  ஹ்ம்ம்,,அவர்  ஒரு சப்பட்டை  வியட்நாம்காரியை  பெட்சிளிங் ஓடர் டெலிபோனில எடுக்க கொண்டு வந்து வைச்சு இருந்தார் "

                          "   அட,,,பிறகு,,சொல்லும்  சொல்லும் ,,இளம்  பெட்டையோ "

                         " ஓம்...அவள்  படிக்கிற பெட்டை,,பாட் டைமா  பின்னேரம் வருவாள் வேலைக்கு "

                           " பிறகு  சொல்லும்  சொல்லும்  என்ன நடந்தது,,,"

                          " பிறகு  என்ன நடக்கும்,,,தெரியும்தானே,,அமல்ராஜ்  அவளுக்கு  கீழ வேலைக்கு  நிக்கிற மாதிரியும்,,அவள் முதலாளி போலவும் நிலைமை வந்திட்டுது "

                                "   பிறகு  என்ன நடந்தது "

                                "  பிறகுதான்  பிரசினை வந்தது,  ஒருநாள் இசகு பிசகா அவள் அமல்ராஜ் மடியில் இருந்து கொண்டு ஹம்பெக்கர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள் "

                         "  அட அட...அதில  என்ன பிரசினை,,கதிரை மேசை  இல்லையோ  என்னத்துக்கு  மடியில  இருந்து சாப்பிட்டாள்  "

                             "  கதிரை  மேலை  வேண்டிய மட்டும்  இருந்தது,,,நல்லகாலம்  கட்டில்  தான்  இல்லை "

                               "  ஹஹஹஹா,,,சொல்லும்  சொல்லும்  மிச்சத்தை "

                         " அந்த நேரம் அமல்ராஜ் மனுசி வந்திட்டா ,,வந்து அதைப்  பார்திட்டா ..."

                                       "     அட,  ரீட்டா  அக்கா தானே ,,இதென்ன குளறுபடி,,பிறகு  சொல்லும்  சொல்லும்  என்ன நடந்தது  எண்டு "

                                  " ஓம்  அவாதான்,  பிறகென்ன மொப்  அடிக்கிற தடியால எடுத்து விளாசி விளாசி   அவியல்  பூசை  புனஸ்காரம்  மண்டகப்படி அகோரம்  தான்,,,எனக்கும்  நல்ல  பேச்சு தந்தா, அதோடு  அதை நடத்திரத்தை அமல்ராஜ் மனுசி விரும்பவில்லை  

                                           " என்னது,,அமல்ராஜ்ச் எப்படி இருக்க வேண்டிய ஆள்,,இப்ப ஆள் எங்க இருக்கு "

                           " இப்ப அமல்ராஜ்ச் பஸ் முன் சீட்டில இருக்கிறார்  "

                                               " என்னது "

                                   " ஹ்ம்ம், ஆள் பஸ் ஓடுது, பஸ் டிரைவர் , இப்பத்தான் ஆள் இருக்க வேண்டிய இடத்தில இருக்கிறார்,,அவருக்கு ரெஸ்டாரென்ட் சரி வராது எண்டு சொல்லச்சொல்ல கேட்கவில்லையே,,இப்ப நல்ல முன்னேற்றம் "

                                  " ஒ அப்பிடியியே அப்ப தாங்கள் ,,இப்ப என்ன மாதிரி,,வாலை அடக்கி சுருட்டி வைச்சுக்கொண்டு இருகிறியா,,அல்லது இப்பவும் ஹக்கடால் இல் இருந்த மாதிரி... டேய் தம்பி யோக்கியன் வர்றாண்டா சொம்ப தூக்கி உள்ள வைடா போலவா ...இருகிறாயா "

                                      " ஹிஹிஹிஹி நானும் இப்ப கொஞ்சம் நல்லவன் போல வெள்ளைப் பெயின்ட் அடிச்சுக்கொண்டு திரியிறன், தனிமைக்கு மாறிட்டன் "

                                       " ஓம்,,ஓம்,,அப்படியும் சில நேரம் நடக்கலாம் தான் ,ஏன் நானும் இப்ப அப்பிடித்தானே,,ஒரு பழைய தொடசல்கள் ஒண்டும் இல்லை,,மனுசியோட மட்டும் தான் இருக்கிறேன்  "

                                  " சரி விடுங்க ,, போத்தில் இருக்குதானே ,,பிறகென்னதுக்கு அடிக்க முதலே குழம்புரிங்க ,,அடிச்சுப்போட்டு பிறகு குழம்புவம் ஜோசிக்காம வாறதெண்டா காலையில் போன் அடியுங்கோ ,எழும்பி குளிச்சு வெளிக்கிட்டு சாமி கும்பிட்டு ரெடியா நிக்கிறன் "
                                   
                                  என்று அவருக்கும் ,எனக்கும் சேர்த்து ஆறுதல் சொன்னேன். சொன்ன மாதிரி இன்று அள்ளிக்கொட்டி இருக்கு .நண்பர் இன்னும் போன் எடுக்கவில்லை . கோவத்தில கொண்டுவந்த புறாவை நேற்றும், முந்தநாளுமே கொஞ்சம் கொஞ்சமா பறக்க விட்டிருப்பாரோ என்றும் ஜோசிக்கிறேன்.
                                
                               இன்று காலையில் சிசிலியா போன் அடிச்சாள். அவள் என் பிரியமான சகி .    சிசிலியா  சும்மா  ஆள் இல்லை. பெரிய  உடையார் மணியகாரன் போன்ற ரேஞ்சில் உள்ள கொலர் தூக்கி விட்டு சபைசந்தியில் எழும்பிப் பேசிய  நோர்க்ஸ் குடும்பத்தை சேர்ந்தவள், அவளைப் பார்த்தாள் அவள் உயரத்தையும் நடையையும் நீல அக்குவா மரைன் நிறக் கண்களையும்  வைச்சே மிச்ச சாதகம் சொல்லலாம். அவளோட தாத்தா நிலச்சுவான்தார் குடி , கப்பலோடிகள்  கோத்திரம் , அவருக்கு  ஸ்பிலபேர்க்  நகரின்  சந்தியில் வெண்கலச் சிலையே வைச்சு இருக்கிறார்கள் .

                                       " ஹாய் ,என்ன செய்யுறாய்,,  மண்டைப்பிழை ,"

                                       " ஒருமண்ணும் இல்லை சும்மா சூடாகக் கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்கிறேன் சிசில் "

                                         " அப்படியா,,சினோவைப்  பார்த்தால்  என்னவும்  எழுதி அறுப்பியே  இண்டைக்கு   என்னமும்  கதை வைச்சு இருக்கிறியா "

                               " ஹஹஹா,,எப்படித்  தெரியும்  சிசில் "

                            "  இவளவு  நாள்  உன்னோடு  இழுபடுறேன்  இது தெரியாமல் இருக்குமா கழுதை ,,நீ கொஞ்சநேரம் எதையாவது  உற்றுப் பார்த்தால்  அதுக்குள்ளே ஒரு கதை  குந்திக்கொண்டு இருக்குமே "

                            " அட அட  இதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம் தெரியுமா  சிசில்  " 

                         "  அப்படியா,  மோட்டுக்  கழுதை  ,அதை  நீ சொல்லுறாய்  எனக்கு,,நீ சும்மா  காத்தையே  பிடிச்சு வைச்சு அதையும் உருவிக்    கதை எடுத்து விடுறவன்  ஆச்சே  "

                               " ஹஹஹா,,,அதெண்டா  கொஞ்சம் உண்மைதான் ,,நீ என்ன பிளான் போட்டு வைச்சு இருகிறாய்  இண்டைக்கு "

                                    " ஒ, சினோ ஸ்கி ஒடப்போறேன் வாரியா,சொங்க்ஸ்வான் பக்கம் வரவா, எப்படி உன் பக்கம் சினோ கொட்டுதா "

                                       " ஆமாடி,,அள்ளிக்கொண்டு கொட்டுது ஹ்ம்ம்,,வாவேன் ,"

                                       " உனக்கு வேற பிளான் ப்ரோக்ராம் ஒண்டும் இல்லையா இன்று "

                                  " ஒரு மயிரும் இல்லை ,,நீ வாடி கழுதை "

                                   " பசிக்குமே,,சாப்பாடு என்ன செய்வது,,கிறிஸ்மஸ் ஜூலசிங்கே, சிவைன் ரிப்ப இருக்கு அவனில வைச்சு எடுத்துக்கொண்டு வரவா "

                                         " என்ன எல்லாம் மிச்சம் கிடக்கோ எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வா,,கொலைப் பசியில் நிக்குறேன் "

                                          "அப்படியா ,,ஆச்சரியம் ,உனக்கு சாப்பாட்டில் இண்டரஸ்ட் வந்தது,,பொதுவா உனக்கு கணகணப்பா உள்ளுக்கு இறக்க என்னவும் வேண்டுமே சினோவைக் கண்டதால் "

                                                  " ஹ்ம்ம்,,அதுக்கு ஒருவர் வர இருந்தார். புறா வைச்சு இருக்கிறேன் என்று சொன்னார்,,ஆனால் போன் இன்னும் அடிக்கவில்லை "

                                          " அப்படியா,,போன் அடிச்சால் போயிடுவியா "

                                      " இல்லடி,,அந்தாள் ஒரு செம அறுவை,,பழைய பஞ்சாங்கம் போல சிஞ்ச்ச் சக்க சிஞ்ச்ச் சக்க எண்டு சுயபுராணம் பாடிக்கொண்டு இருக்கும் "

                                         " ஒ ,,என்றாலும் உன் நாட்டு மக்களுடன் உன் மொழியில் பேசுவது அலாதிதானே "

                                     " ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை ,அந்தாள் இருக்கிற என்னோட அரைவாசி உயிரைத்தான் எடுக்கும் ,நீ வாடி என் கப்பக்கிழங்கு "

                                            " பரவாயில்லை,,,என்னட்ட மான் இருக்கு ,,டென்மார்க் கப்பலில வேண்டிக்கொண்டு வந்தது,வேற என்னவும் வேணுமா "

                                             " இதுக்கு மேல என்னடி வேணும் "
                                        
                                           மான் என்பது மான் படம் போத்தலில் போட்ட ஜேகமாஸ்டர் என்ற மூலிகைகளில் செய்யப்படும் அல்கஹோல் குடிவகை. டென்மார்கில் அதைப் பாதிரிமார்களின் வடிசாலையில் உற்பத்தி செய்வார்கள். அதன் ரெசிப்பி அந்தப் பாதிரிமாருக்கும் பரமபிதாவையும் தவிர வேற ஒருவருக்குமே தெரியாது .பூச்சிகளுக்கு அடிக்கிற டி டி டி போல வாசம். கஷாயம் போலக் கசக்கும் குடிக்க, குடிச்சு முடிய நுனி நாக்கு அரிநெல்லி போல இனிக்கும் .
                                          
                                           சிசிலியா டெலிபோனைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு தொடர்ந்தாள், எனக்கு அவளின் சொண்டுதான் முன்னுக்கு வந்தது . சிசிலியாவின் சொண்டு அது ஒரு சிதம்பர நடராஜா ரகஸியம் . சும்மாவே அவள் சொண்டு மொங்கன் வாழைப்பழக் கலர். அதுக்கு விக்டோரியா சீ க்கிரெட்  தயாரித்த லிப்ஸ்டிக்  போட்டாள் என்றால் ரெண்டு தென்னம் கிளி நடுவில கொவ்வைப் பழத்தை வைச்சு உறிஞ்சுற மாதிரி அட்டகாசம் போடும். விக்டோரியா சிகிரெட் உலகப்புகழ் பெற்ற பசைன் டிசைன்  உடுப்பு  விக்கும்  கடை , ஒஸ்லோவில் அதுதான் மிக்கப்பிரபலம்  ,அவர்கள் தயாரித்து  வெளியிடும்  லிப்ஸ்டிக் பயங்கர விலை, ஆனால் நம்பர் வன் என்று சிசிலியா அவள் சொண்டை சாட்சிக்கு வைத்துச் சொல்லுவாள் ,,,

                                            " ஒ ,,நல்ல உடுப்பு போடு இது வேட் குளிர்,எலும்பில பிடிக்கும்,கழுத்துக்கு மப்பிளர் சுத்து,,இந்த லேட் வின்டர் நல்லதில்லை . மண்டையில் லூவர் ஸ்கோ கொழுவு,,இல்லாட்டி தலைக்கால தண்ணி இறங்கும் பிறகு உனக்கு சைனஸ் வரும் பா "

                                    " அடியே வீக்கிபீடியாவை விழுங்கினாவளே,,ஜெகமாஸ்டர் போதுமடி,,குளிரை சமாளிக்க "

                                       " சரி,,உனக்கு நான் நன்மைக்கு சொன்னாலும் கிண்டல் போல இருக்கு மாடு ,,ஜெக மாஸ்டர் முக்கால் லீட்டர் கிளாசிகல் பிரீமியம் போத்தல் தான் கொண்டு வாறன் "

                                              " அதைக் கொண்டுவா,,முதல் கதைச்சுக்கொண்டு இருக்காமல் வேலையில் இறங்கடி மவளே "

                                                " விண்டர் புல் கவர் ஓவர் ஒல் போட்டுக்கொண்டு வாறன் ,புது லீமாரோஸ் ஜக்கட் கிறிஸ்மஸ் பரிசில் கிடைததுடா "

                                             " அடியே,,என்னத்தையாவது போட்டுக்கொண்டு வாடி,,இலகுவாக் கழட்டக்கூட்டியதைப் போட்டுக்கொண்டு வாடி என்சைக்கொலோப்பிடியாவுகுப் பிறந்தவளே "

                                                  " அடி செருப்பால ,,மவனே உன்னோட உயரத்துக்கு உனக்கு நினைப்பு அதிகம் பா "

                                          " வாவ்,,வாவ்,,நீதாண்டி எண்ட ராசாத்தி ,, என்னைவிட்டால் யாருமில்லை என் உயிரே உன் கை அணைக்க "

                                                        " டேய் ,,என்னடா ஸ்ரீலன்கிஸ்கா மொழியில் பாட்டு எல்லாம் பாட்டு பாடுறாய் எ ன் னை வி ட்டா ல் யா ரு மில் லை,,இதுக்கு என்னடா அர்த்தம் மோட்டுக் கழுதை "

                                                  " எண்ணை விட்டால் என்னைப் போல கார் ஓட ஒருவரும் இல்லை எண்டு அர்த்தமடி அகராதி பிடிச்சவளே ,முதல் இறங்கு வெளியே "

                                    " ஹஹஹஹா, ஜெகமாஸ்டர் பெயரைக் கேட்டால் உனக்கு நாக்கு வெளிய தொங்குமே "

                                                " ஹ்ம்ம்,,எல்லாம்தான் வெளிய தொங்குது,,முதல் வெளிக்கிட்டு வாடி "

                                              " சரி,,உன் ப்ரென்ட் புறாவோட வந்தால் என்ன செய்வாய்,,அவரோடு போவியா தண்ணி அடிச்சுக் கும்மாளம் போட "

                                                       " அந்தாள் நோர்வேயை விட்டுப்போட்டு லண்டனுக்கு ஓடிப்போன ஒரு ஆள்..அவர் எனக்கு முக்கியமில்லை ,,நீதானே வேணும் என்ற ஏங்குறேன் ,,அன்பே வா அருகிலே குளிர் காதில கிளிப் பேச்சுக் கேட்க வா "

                                                 " என்ன,,இண்டைக்கு நல்ல குஷி மூட்டில நிக்குறாய் போல,,பாட்டு எல்லாம் பறக்குது .."

                                          " நீ வாவேன் மிச்சம் இருக்கு உனக்கு இண்டைக்கு,,ஒரு வெள்ளை மழை இங்கு பொழிகின்றது ,,ஒரு கொள்ளை நிலா உடல் நனைகின்றது ,"

                                                " அப்புறம் பாடு மிச்சத்தையும்,,நல்லா இருக்கே பாட்டு மெலோடி "

                                            " மனம் சூடான இடம் தேடி அலைகின்றது ஹஹஹஹா மனம் சூடான இடம் தேடி அலைகின்றது ஹஹஹஹா "

                                               " எதுக்குப்பா,,ஹஹஹாஹ் ஹஹஹா எண்டு வட துருவக்கரடி போல இழிகிறாய் இதுக்கு என்ன அர்த்தம் சொல்லு "

                                           " ... ............................. "

                                                       " ஒ அடப்பாவி... கசபிளங்கா படத்தில வார சீன் போல சொல்லுராயே , ஆனாலும் நீ சும்மா வெறும் வாயல ஹோலிவுட் படம் ஓட்டுற ஆள் தானே ,,சரி,,இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கே ..அப்படியா ,,,பார்க்கலாம்,,,ஹ்ம்ம் ,,வந்து சொல்லுறேன் மோட்டு எருமை மாடு "
                                  
                                     அவள் குரலைக் கேட்க இண்டைக்கு " கட்டிப்பிடி கட்டிபிடி டா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடி டா " கதை போலதான் போகும் போல இருக்கு..
.

.