Sunday, 23 August 2015

பாரதியார் சிலையடி ..

யாழ்பாணத்தில் நம்ம பேட்டை, புவனேகபாகு கோவில் கட்டி , சிங்கை நகர் மன்னன் சங்கிலியன் ஆண்ட நல்லூரில் பாரதி சிலையடி! எங்களின் வீடு இந்த பாரதியார் சிலையிட்கு மிக அருகில் முன்னொரு காலத்தில் இருந்தது. " பொய்யான சில பேர்க்கு புது நாகரகம், புரியாத பல பேர்க்கு எது நாகரீகம்" எண்டு எண்டு சொல்லிக்கொண்டே . பாடிகொண்டே போய்கொண்டு இருக்கின்ற உலகத்தில் வாழ்ந்து முடிய முன் வாசம் இழந்துபோன வீடு! 

                                    சென்றமாதம் யாழ்பாணம் போன நோர்வே வாழ் நண்பர் , புல்லாங்குழல் ஆசிரியர் , திருச்செல்வம்

                            " அரசன் இவடம் நினைவு இருக்கா ? " என்று கேட்டு இந்தப் photo அனுப்பி இருந்தார் !

                                மிகச் சிறிய வயதில் இந்த சிலை இருந்த இடத்தில அரசமரம் நின்றது.சடைச்சு வளர்ந்த விசாலமான அந்த மரம் சந்தி முழுவதுக்கும் நிழல் கொடுத்து கொண்டு இருந்தது. அது பட்டுப்போய் ஒரு கட்டத்தில் அதை ஒரு முதியவர் கண்டக் கோடாலி போட்டு அடிமரத்தில் இருந்து தறித்து விழுத்தியது நினைவு இருக்கு. அரசமர நினைவுகளில் தான் இவடத்தை அரசடி என்பார்கள்.

                                 இந்த சந்தியில் ஏன் எட்டயபுரம் சுப்பிரமணிய பாரதியாருக்கு சிலை வைத்தார்கள் என்று தெரியவில்லை. எப்படியோ பாரதியார் வந்தபின் இந்த இடத்தை பாரதி சிலையடி என்பார்கள்.விடுதலைப் போராட்டம் அகோரமாக நடந்த காலத்தில் எல்லா இயக்கங்களும் தங்கள் எழுச்சிப் பாடல்கள் , வீர மரணம் ,நினைவு நாட்கள் எல்லாத்துக்கும் மஹாகவி பாரதியாரில தான் லவுட் ஸ்பிகர் கட்டி அலற விடுவார்கள்.

                                   தெருப் புழுதி எல்லாம் அள்ளிக்கொட்டி இந்த சிலை எப்பவும் பனங்காய்க்கு திருநீறு அள்ளி அடிச்ச மாதிரி இருக்கும் , ஆனால் பாரதியார் நினைவு நாளுக்கு மட்டும் ,சிலையைக் கழுவித் துடைத்து யாழ்பாணம் முனிசிப்பால்டி நிர்வாகம் இந்த சிலைக்கு மாலை போட்டு,கந்தர்மடப் பள்ளிகூடப்பிள்ளைகள் வந்து சுற்றி நின்று " வந்தே மாதரம்... வந்தே மாதரம்... " என்று பாடி இருக்கிறார்கள். அன்றைக்குத்தான் பாரதியார் மாலை போட்டு கொஞ்சம் பளிச் என்று சந்தோசமாக இருப்பது போல இருக்கும் .

                                      பலர் பல இயக்கங்களுக்கு அள்ளுப்பட்டுப் போக இந்த சிலையடி ஒரு காரணம். நல்லூர் திருவிழா நேரம் எல்லா இயக்கங்களின் தெருக்கு கூத்து, எழுச்சி நாடகம் சிலையடியில் நடக்கும். ஈபிஆர்எல்எப் இயக்கப் பேச்சாளர் டேவிட்சன் அவர்களின் புரட்சிகர அறைகூவல் சொற்பொழிவுகள் நடக்க, முதல் முதல் பிப்டி கலிபர் வான்நோக்கி சுடும் சுடுகலன் துப்பாக்கி பெரிசுக்கு வந்த நேரம் அதை அவர்கள் பிக்கபில் பொருத்தி சிலையடியில் காட்சிக்கு வைத்தார்கள்.

                                       இருவத்தி ஐந்து வருடங்களின் முன் இந்த இடம் இப்ப இந்தப்படத்தில உள்ள மாதிரி இருக்கவில்லை. முக்கியமா இவளவு வெளிச்சம்,பரபரப்பு ,விளம்பரங்கள்,சீமெந்துச் சுவர்கள் ,அகலமான வீதிகள் இல்லை. மிகவும் அடக்கமாக நிறைய மரங்கள் கிடுகு வேலியில் சாந்து கொள்ள ,அடம்பர அவசரம் இல்லாத மனிதர்கள் ஆசுவாசமாக நின்று கடக்கும் ஆத்மாநாமின் கவிதை போல ஒரு வித ஆனந்தக் கிளர்சியில் இருந்தது.

                                      1989 இல் இந்திய அமைதிப்படை ராணுவத்துடன் நடந்த முதல் சண்டையில பாரதியாரின் சிலை உடைந்து தலை பறந்தது ! பின்னர் சிலைக்கு முன்னால் இருந்த வீட்டில் காம் அமைத்து சென்றி இல் இருந்த பஞ்சாப் ரெஜிமென்ட் சீக்கிய ஜவான்கள் ,பாரதியாரின் தலைப்பாக்கட்டு , முண்டாசுத் தாடி, அருவாள் மீசையைப் பார்த்த அந்த ஜவான்கள்

                        " அட இவரு நம்மட பஞ்சாப் சிங் ஆளுப்பா " என்று சொல்லிச் சொல்லி இந்த சிலைய மறுபடியும் திருத்தி அழகான சிலை ஆக்கினார்கள் !

                                         அண்மையில் பாரதியார் கவிதைகள் பல Amazen ஒன்லைனில படித்தேன், அதோட பாரதியார் வாழ்ந்தவிதம் பற்றியும் ஒரு புத்தகம் படித்தன் ,பள்ளிபடிக்கிற காலத்தில அப்பா ஒரே இம்சை அதுகளை படிக்கச்சொல்லி,அப்போதெல்லாம் ஆர்வம் இல்லை, கரணம் பாரதியாரின் தமிழ் பண்டிதர்களின் தமிழ் எண்டு நினைத்துருந்தது,ஆனால் அவரின் தமிழ் ஒருவித கவிதைக் கவர்ச்சியான தமிழ் என்று இப்போது அறியமுடிகிறது .

                                   நான் கிடாரில ஆங்கில பாடல்கள் பாடும்போது, அவைகளின் Lyrics கொஞ்சம் ரசித்து நோண்டி பார்ப்பவன். பாரதியார் பாடல் படித்தபோது,அவரும் அதே Lyrics ஸ்டைலில பாடல்கள் எழுதியுள்ளார், இசை அமைக்க தேவையான மாதிரி அவரே அழகா எழுதி இருக்கிறார். அதில் பல கவிதைகள் பாடல்களாக வந்துள்ளது உங்களுக்கு தெரியும்.

                                                     பாரதியார் ஏழை , அவரோட அன்பு மனைவி செல்லம்மாவுக்கு ஒரு பட்டுசேலை வாங்கவே தையதக்க தையதக்க போட்டிருகிறார், ஆனால் கற்பனையில கன்னம்மா என்ற காதலிக்கு பட்டு கரு நீல சேலை கட்டினால் எப்படி இருப்பா எண்டு,அந்த சேலையில வைரங்களைப் பதித்து கவிதை எழுதியுள்ளார், அது இப்படி முடியும் " பட்டுக் கருநீல புடவை பதித்த நல் வைரம் நட்ட நடு நிசியில் தெரியும் நடச்சத்திரங்களடி " எண்டு இயலாமையில் விலாசம் எழுப்பி எல்லா வறுமையான கவிஞ்சர் , புலவர் போலப் பாடியுள்ளார்.

                                                   பாரதியார் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் பிறந்த பிராமண சமுகத்தை விமர்சித்தவர், அதுக்கே அந்த நேரம் நிறைய " தில்" வேண்டும் ,அவர் எட்டயபுர கவிஞ்சன் ஆனபின் பல்லகில் ஏறி பவனிவர வாழ்நாள் முழுவதும் விரும்பி இருக்கிறார், ஆனால் அது நடக்கவே இல்லை .கடைசியாக அவரை யானை தள்ளி விழுத்தியத்தில் இருந்து எழுந்துவர முடியாமல் அவர் இறந்தபோது வெறும் 20 பேர் தான் போனாப்போகுது எண்டு பாடை தூக்க வந்திருகிறார்கள்.

                                              இந்தப் பதிவு போனவருடம் இதே நாள் எழுதியது. பாரதியார் சிலைக்கு அண்மையில் பிறந்து வளர்ந்ததாலோ என்னமோ தெரியலை நானும் இப்பெல்லாம் கவிதை போல சிலதுகளை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.இந்த சிலைக்கு அருகில் இருந்த " ஞானப்பிரகாசம் ஹோட்டல் " என்ற சாப்பாடுக் கடை பற்றி ஒரு சிறுகதையும்,இவடத்தில கிடந்தது அலைந்த எங்கள் உள்ளூர் தத்துவஞானி " சிங்கி மாஸ்டர் " என்ற சிறுகதையும் சென்ற வருடம் எழுதிப்போட்டு அதைப் பலர் ரசித்து வாசித்தார்கள்.

.

.
.

Saturday, 22 August 2015

கப்பல்காரன் வீடு

யாழ்பாணத்தில எங்களின் வீடுக்கு கொஞ்சம் தள்ளி, எங்கள் வீதியின் முடிவில், கப்பல்காரன் வீடு இருந்தது! அந்த வீட்டில் என்னோட மிக சிறிய வயசில், அரச மரக்காலையில் ஸ்டோர் கீப்பர் வேலை செய்த கனகசுந்தரமும் ,அவரின் மனைவி ஸ்டோர் கீப்பர் மாமியும், அவர்களின் ஒரே ஒரு அழகு மகள் வக்சலாவும்,ஊருக்கும் இடைஞ்சல் இல்லாமல் , ஒருவருக்கும் இடைஞ்சல் இல்லாமல் அதில வாழ்ந்ததால " ஸ்டோர் கீப்பர் " வீடு எண்டுதான் ஆரம்பத்தில் ஊருக்குள்ள சொல்லுவார்கள் !

                                               அது எப்படி பின்னாட்களில் " கப்பல்காரன் வீடு " எண்டு மாறியது எண்டு சொல்லுறதுக்கு காரணம் யாழ்பாணத்தில 80 களில், எங்கோ அரபிக் கடலிலும் ,அத்திலாந்திக் கடலிலும் ஓடிய கப்பல் யாழ்பாணத்தில் சமூக, பொருளாதார மாற்றத்தை உண்டுபண்ணியதுதான் காரணம் எண்டு உங்களுக்கு நல்லா தெரியும்! இந்தக் கதை கப்பல்காரன் ,வக்சலா என்ற இரு மனிதர்களைப் பற்றியதால், கப்பலைப் பற்றியோ, அது ஓடின கடல் பற்றியோ மேற்கொண்டு அதை நீட்டி முழக்கப் போறது இல்லை!

                                  கனகசுந்தரம் அமைதியான மனிதர், அவரின் மனைவி ஸ்டோர் கீப்பர் மாமியும் அதிகம் வெளிய வராத வீடு உண்டு, வீட்டு வேலை உண்டு என்று இருக்கும் பெண்மணி. வக்சலா ஓரளவு அட்வான்ஸ் லெவல் வரைக்கும் படித்து ,மேற்கொண்டு படிக்க வைக்க வேண்டிய தேவை இல்லாததாலும் , அவா வெளிய போய் உத்தியோகம் பார்க்க ஸ்டோர் கீப்பர் குடும்பம் விரும்பாததால, ஒரு ப்ரோக்கர் பேசிக் கொண்டு வந்த, காங்கேசன்துறை தனபாலசிங்கத்தின் கப்பல் கொம்பனியில வேலை செய்த கப்பல்காரன், எழும்பின ஆம்பிளையா இருந்ததை விட ,கப்பலில வேலை செய்தது கவர்ச்சியா இருக்க ,மறு பேச்சு இல்லாமல் காதும் காதும் வைச்ச மாதிரி பேசி முடித்து, பொன் உருக்கி, பந்தல் கால் போட்டு, கன்னிக்கால் முள்முருக்கு நட்டு,மெட்டி அணிந்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, நல்ல நேரதில கலியாணம் கட்டி வைக்க, நாலாஞ்ச சடங்கோட ஸ்டோர் கீப்பர் வீடு கப்பல்காரன் வீடு என்று மாறியது !

                                           எங்கள் அயல் அட்டையில் இருந்த ஒரே ஒரு, ரன்கூன் தேக்குமர தூண்கள் தாங்கி நிக்கும், மலையாளத்து ஓடு போட்ட, வீட்டுக்கு நடுவில திறந்த இடம் உள்ள, நடு வீட்டில ஆவெண்டு நீல வானம் தெரியும், வெயில் விழும் , மழை அடித்து ஊத்தும். ஒரே ஒரு நாட்சார் வீடு ஸ்டோர் கீப்பர் வீடுதான் , ஸ்டோர் கீப்பர் மாமி,அந்த திறந்த நடு இடத்தில மேலே வலை போட்டு காகம் குருவி உள்ளுக்க வராமல் தடுத்து,நல்ல வெயில் வாசியா எறிக்கும் நாட்களில் வேப்பம்ப்பூ வடாகம், மோர் மிளகாய், மிளகாய் வத்தல், நாரத்தங்காய் உறுகாய், புழுக் கொடியல் எல்லாம் காயப்போட அந்த இடம் கம கம எண்டு சாம்பாரு வாசம் அடிக்கும் , 

                                   அந்த திறந்த நடு இடத்தில ஒரு கண்ணன் சிலை இருந்தது, சிலைக்கு கீழே கோபியப் பெண்கள் குழந்தைக் கண்ணனின் பின் அழகை பார்த்து சொக்கி நிக்க, கண்ணன் அந்தப் கன்னிப் பெண்களுக்கு அந்த சின்ன வயசிலேயே மாய லீலை காட்டிக்கொண்டு இருக்க, அதை சுற்றி துளசி மரங்கள் வைத்து வக்சலா அதுக்கு தண்ணி ஊற்றி வளர்த்தா, கிருஷ்ன ஜெயந்திக்கு அதில பூசை வைச்சு எங்களுக்கு அவல் நிறையக் கிடைக்கும்.

                                        ஆனாலும் கப்பல்காரன் வந்தவுடன ,முதல் வேலையா அந்த வீட்டின் முன் பக்கத்தை மொடேர்ன் ஆக்கினார், ஸ்டோர் கீப்பர் மாமி அவாவின் பரம்பரை நாட்சார் வீட்டை உள்ளுக்கு மாற்ற விடாப்பிடியா விடவில்லை, என்றாலும் வெளியே முன்னுக்கு மொடேர்ன் ஆக மாற்ற, அந்த வீடு கொஞ்சம் அவமானம் தாங்கி அமரிக்கன் ஸ்டைலுக்கு மாறியது, பின்ன என்ன கப்பல்காரன் வீடு கட்டுமரம் போல இருந்து சரி வராதே, கப்பல் போலதானே இருக்க வேண்டும், நீங்களே சொல்லுங்க பார்ப்பாம் . 

                     நல்ல தேகக்கட்டுடனும் ,விசாலமான தோள்கள் ,கொஞ்சம் துள்ளி துள்ளி நடை என்று   கப்பல்காரன் வடிவான வலிகாமம் வடக்கு பக்கம் தோட்ட வேலை செய்யும் ஆண்கள் போல உறுதியான இறுக்கிப் பிடிக்க வைக்கும் ஆம்பிளை. கன்னத்தில நீண்ட கிருதா விட்டு முகத்தை எப்பவும் சேவ் செய்து இருப்பது முன்னால பார்க்க நடிகர் ரவிச்சந்திரன் போல இருக்க,பின்னால சுருள் முடியை அக்கறை இல்லாமல் பறக்க விட்டுருப்பதை பார்க்க சுருளிராஜன் போல இருப்பார். பாடசாலை நாட்களில் நல்ல விளையாட்டு வீரன் போல இருந்து இருக்கலாம்  உண்மையைச்சொன்னால் என்ன உங்களுக்கு அவர் அழகுக்கு உத்தரவாதமாக பெண்கள் சுழறுவார்கள்.

                                   கப்பல்காரன் கலியாணம் முடிந்து கொஞ்ச நாளிலேயே, கலியான மஞ்சள் குங்கும வாசம் அடங்க முதலே, கப்பலுக்குப் போயிட்டார், போயிட்டு ஆறு மாதம் கழித்து ஒருநாள் டாக்சியில் வந்து இறங்கினார், அவர் கொண்டுவந்த பெரிய பெரிய சூட்கேசை டக்சிகாரன் இழுக்க ஏலாமல் இழுத்து இறக்க ,கப்பல்காரன் பென்சன் அண்ட் கெட்சஸ் வெளிநாட்டு சிகரட் தங்க நிறப் பெட்டியில இருந்து எடுத்து ,அதன் பின் பக்கத்தை பெட்டியிலேயே தட்டி,கொஞ்சம் விரல்களுக்கு இடையில வைச்சு சுள்ளட்டி போட்டு , வாயில வைச்சு லைட்டரை டக் எண்டு அமத்தி , ஒரு தங்கநிற லைடரில அதைப் பத்தவைத்து கொண்டு இருக்க ,நாங்கள் எல்லாரும் வேடிக்கை பார்கப் போக எங்களுக்கு, இன்னொரு பெட்டியில இருந்து சொக்கிலட் எடுத்து தந்தார், வக்சலா முகம் முழுவதும் சிரிப்போட சந்தோசமா ரோட்டுக்கே வந்து அவரின் கையைப் பிடிச்சு,

                           " இதில நிண்டு சிகரட் குடிக்க வேண்டாம் , பரிசுகேடு ,ஆட்கள் விடுப்பு பாக்குதுகள்,உள்ளுக்கு வாங்கப்பா "

                                   எண்டு இழுத்துக்கொண்டு போனா , அதுக்கு பிறகு வந்த முதல் கொஞ்ச நாள் கப்பல்காரன் வெளியவே வரவேயில்லை,

                                          சில கிழமையில் அவராவே வெளிய வந்தார் ,எங்களின் வீட்டுக்கு சில நாள் வருவார்,முக்கியமா அவர் எங்க வீராளி அம்மன் கோவிலுக்கு முன்னால இருந்த நயினாரின் பாருக்கு போக தொடங்கினார், அவர் ஏன் அங்கே போறார் எண்டு எல்லாருக்கும் தெரிந்தாலும் அவர் கப்பல்காரன் அதலா அதிகம் அதை யாரும் பெரிதா எடுக்கவில்லை. 

                                                ஊருக்குள்ள கஷ்டப்பட்ட ஆட்கள் குடிச்சா " வெறிக்குட்டி " என்பார்கள் , கொஞ்சம் மத்திய தர ஆட்கள் குடிச்சா " குடிகாரர் " என்பார்கள்,அதுவே பணக்கார ஆட்கள் குடிச்சா அவர் " சாதுவா ட்ரிங்க்ஸ் பாவிப்பார் " என்பார்கள்,கப்பல்காரன் நையினாரிட்ட என்ன குடித்தாரோ தெரியலை,அவர் அந்த பார்ல இருந்து குடிச்சிட்டு எங்க வீட்டுக்கு வருவார், சேர்ட் மேல் பட்டன் திறந்து, நெஞ்சில தொங்கிற புலிப் பல்லு போட்ட இரட்டை வடம் சங்கிலி வெளிய தெரிய கப்பல் போல கொஞ்சம் ஆடிக்கொண்டு வருவார், பின்னக் கப்பல்காரன் கப்பல் போல ஆடாமல் வேற எப்படி ஆடுறது ,நீங்களே சொல்லுங்க பார்ப்பாம் .

                            கடைசியா கப்பல்காரன் கப்பல் போறதுக்கு முதல் நாள் இரவு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்,அவர் கப்பலில் என்ன வேலை செய்தார் எண்டு எங்களுக்கு தெரியாது, நான்அவரிடம் சும்மா

                    " இரும்பில செய்த கப்பல் என்னண்டு தண்ணியில மிதக்குது "

                       எண்டு கேட்டேன், அவர் கொஞ்சம் ஜோசிதார்,

                       " நீரே சொல்லும் " எண்டார் ,நான் அப்ப சயன்சில படிச்சுக்கொண்டு இருந்த ஆக்கிமிடிஸ் தத்துவத்தில்

                      " ஒரு பதார்த்தத்தின் கொள் அளவு அந்தப் பதார்த்ததின் நிறை அளவை விட,,,,,,"

                      எண்டு சொல்ல தொடங்க , என்னோட அம்மா இடையில மறிச்சு,

                            " இவனுக்கு விசர் தம்பி, நீர் சொல்லும் தம்பி ,கப்பலில வேலை செய்தா சிங்கப்பூர் செயின் கஸ்டமில டக்ஸ் கட்டாமல் கொண்டு வரலாம் எண்டு கேள்விப்பட்டேன் மெய்தானே "

                        எண்டு கேட்க,கப்பல்காரன் சொண்டை சுளிச்சு சுளிச்சு சிரிச்சு சிரிச்சு

                " ஓம் அன்டி ,கொஞ்சம் உண்மைதான் ,உங்களுக்கு அடுத்தமுறை ஒண்டு கொண்டுவாரன் "

           எண்டு போட்டு ,எனக்கு

                         " நீர் சொல்லுறது எனக்கு விளங்கேல்ல ஆனாலும் கப்பல் தண்ணியில மிதக்கிறதாலதான்,நாங்கள் உசிரோட போட்டு உசிரோட வாறம் "

                     எண்டு சொல்லி சொண்டை சுளிச்சு சிரிச்சுப்போட்டு ,

                    " அன்டி இந்த முறை வேலைக்குப் போற கப்பல் ஹம்பேர்க் போகுது "

                        எண்டு சொல்லி கொஞ்சம் சந்தேகமா சிரிச்சார்,

                       அம்மா " அதெங்க இருக்கு " எண்டு கேட்டா
                       
                       அவர் " அது அன்டி, யுரோபாவில ஜெர்மனியில இருக்காம் " எண்டுசொல்ல

                      அம்மா " மெய்தானே,நீரும் எல்லா இடமும் பார்த்து எங்களுக்கும் கதைகளை பின்ன வந்து சொல்லுமன் " எண்டு சொல்ல,கப்பல்காரன் அப்பவும் கொஞ்சம் சந்தோசமா,   ..அதே நேரம் சந்தேகமா சிரிச்சார்.

                           அவர் போன சில வாரத்தில் இருந்து வக்சலா வீராளி அம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை சுமங்கலி தாலி பூசை செய்தா,செய்து முடிய அதில கொளுத்திய குத்துவிளக்கை கோவிலில் இருந்து அணையாமல் வீட்டுக்கு கொண்டுவருவா, ஸ்டோர் கீப்பர் மாமி சுளகால அந்த விளக்கு காற்று அடிச்சு அணையாமல் இருக்க பிடிச்சுக்கொண்டு வர ,வக்சலா கப்பல்காரன் கொண்டுவந்த நகை எல்லாம் ஆள்ளிப் போட்டு ,அவா குத்துவிளக்கை கொண்டு வாறது, ஒரு குத்துவிளக்கு இன்னொரு குத்துவிளக்கை தூக்கிக்கொண்டு வாற மாதிரி இருந்தது, கொஞ்சநாள் எல்லாம் வழமைபோல இருக்க, கிட்டதட்ட ஆரம்பத்தில் அவர் எப்போதும் போல டக்ஸியில் வந்து இறங்குவார் எண்டு வக்சலா வாசலைப் பார்த்து காத்து இருக்க, ஒரு கட்டத்தில் தாபால்காரனை தேடியே போய்

               " எங்களுக்கு கடிதம் ஏதும் இருக்கா "

                             எண்டு கேட்டு கொஞ்சம் சந்தேகம் வர தொடங்க ,எப்படியோ அவாவுக்கு மனதளவில் ஒரு ஏக்கம் இருந்த மாதிரி இருக்க, துளசி மரங்களுக்கு தண்ணி ஊத்திரத்தை நிப்பாட்ட, அவை வாடதொடங்க, ஒரு நாளும் கோவில் குளம் பக்கம் போகாத ஸ்டோர் கீப்பர் திடீர் எண்டு திருநீறு பூசிக்கொண்டு கோயிலுக்கு போக வெளிக்கிட, ஸ்டோர் கீப்பர் மாமி அடிக்கடி தலை சுத்துது எண்டு பிரசர் செக் பன்ண தொடங்க, ஏறக்குறைய அந்த வீடில இடி விழுந்து, பழையபடி கப்பல்காரன் வீடு ஸ்டோர் கீபர் வீடுபோல மாற, கப்பல்காரன் வரவே இல்லை, 

                            எங்களின் பெரிய மாமாவின் மகனும் கப்பலில் வேலை செய்தார் ,அவரும் இந்தக் கப்பல்காரனும் பல வருடம் முன் எண்ணைக் கப்பலில் வேலை செய்த போது தெரியும், அவர் ஒரு முறை வந்த போது ,

                        " சின்ன மாமி,விசியம் தெரியுமே "

                          எண்டு அவர் கேள்விப்பட்ட ,, கப்பல் காரன் போன கப்பல் ஜெர்மனி போனது அங்கே அவர் ஹம்பேர்க் ஹபர்ல கப்பல் நங்கூரம் போட இறங்கி , இரவு நடன களியாட்ட விடுதிக்குப் போனது ,அங்கே ஒரு ஜெர்மன் வெள்ளை குதிரையைக் கண்டது,அவள் அவரை இழுத்துக்கொண்டு போய் ஏழு கடல் தாண்டி சொர்க்கம் காட்டியது, அவர் அங்கேயே அகதியா பதிந்தது , எல்லாம்

                         " சின்ன மாமி ஒருத்தரும் சொல்லிப் போடாதயுங்கோ உங்களுக்கு மட்டும் சொல்லுறன் "

                             எண்டு என்னோட அம்மாவிடம் சொல்ல,அம்மா அந்த தகவல் ரகசியமா வைச்சால் தொண்டைக் குழி க்குள்லால சோறு தண்ணி இறங்காத மாதிரி தவிச்சு, கடைசியில் ஒருநாள் அதை கீரை விக்கக் கொண்டு வாற ப்ரேகிங் நியூஸ் குஞ்சரதுக்கு சொல்ல,,குஞ்சரம் அதை வக்சலாவின் சொந்தகாரருக்கு

                " அம்மளாச்சியான ஒருத்தரும் சொல்லிப் போடாதயுங்கோ உங்களுக்கு மட்டும் சொல்லுறன் "

                    எண்டு சொல்ல ,எப்படியோ கதை கசிந்து பெட்டிசம் பாலசிங்கத்துக்கு போக, திரைக் கதை வசனம் தொடங்கியது .....

                              அதுக்குப்பிறகு பல நாட்கள் நாட்சார் நடுவில இருந்த கண்ணன் சிலையை பார்த்தபடி, ஒருவருடனும் பேசாமல் ,கப்பல் கவுண்டதுபோல வக்சலா இருப்பதைப் பார்த்து இருக்கிறேன் ,எனக்கு அந்தக் கண்ணன் ஜெர்மன் பெண்களுடன் குத்து டான்ஸ் ஆடுற மாதிரி இருந்தது அந்த சிலையைப் பார்க்க...

                               அதுக்கு பிறகு சண்டை நாட்டில அமோகமாக தொடங்க வீட்டுப் பிரைச்சனைகளை மேவி நாட்டுப் பிரச்சினை வர ,,நான் வேற நிழல் விசியங்களை ஈடுபடத் தொடங்க ,,ஒரு கட்டத்தில் வக்சலாவுக்கு என்ன நடந்தது எண்டு எனக்கு அதிகம் தெரியாது ,தொண்ணுற்றி ஐந்து சூரியகதிர் இராணுவ நடவடிக்கையில் இடம்பெயர்ந்த போது , நாங்களும் இடம்பெயர்ந்து ,அதன் பின் நானும் புலம் பெயர்ந்து வந்திட்டேன் ..

                              அந்த சம்பவம் நடந்து கிட்டதட்ட இருபது வருடங்களின் பின் நான் ஜெர்மனி சுற்றிப் பார்த்த போது, எங்களின் அபிமான கப்பல்காரன் கடைசியா இறங்கிய ஹம்பேர் நகரமும் போனேன், ஆனாலும் கப்பல் காரன் பெயர்த் தெரியாமல் எப்படி தேடுறது எண்டு குழப்பமா இருக்க, நிறைய தமிழ் ஆட்கள் கார்ல வந்து இறங்கி சூப்பர் மார்கெட் போறதும்,வாறதுமா இருக்க, ஜோசித்துப் போட்டு யாரிடமும் ஒண்டும் கேட்கவில்லை ,

                                பின்னேரம் ஹம்பேர்க் ஹபருக்கு அருகில் ஒரு இரவு விடுதியில் தண்ணி அடிப்பம் எண்டு போக,அதில ஒரு வயதான தமிழர் ஜெர்மன் வெள்ளைகளுடன் இருந்து ஜெர்மன் பாசையில் சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தார் ,அவர் சிரிக்கிறதைப் பார்க்க கப்பல் காரன் சொண்டை சுளிச்சு சுளிச்சு சிரிக்கிற மாதிரி இருக்க,அவருக்கு கிட்டப் போய்

                     " நீங்கள் தமிழா எண்டு " கேட்டேன்,அவர் " ஓம் " எண்டார்,

                     " நீர் எங்க இங்க ஹம்பெர்கில் இருகுர்ரீரோ, உம்மை நான் ஒரு நாளும் கண்டதில்லையே" என்றார்,

                  நான் வசிக்கும் நாட்டை சொன்னேன்,

                            அவர் " அப்ப இதில இருமன், இவங்கள் டொச்சில தான் கதைபான்கள், இவன்கள் என்னோட நண்பர்கள் ,உமக்கு டொச் தெரியுமோ " என்றார்

                நான் கொஞ்சம் தெரியும் எண்டேன். 

                    கொஞ்சம் ஜோசித்துப் போட்டு ,

                      " உங்களுக்கு வக்சலாவை தெரியுமா " எண்டு கேட்டேன்,

                      அவர் திடுக்கிட்டார், என்னை காலில் இருந்து தலை வரை பார்த்தார், நெத்தியில பெரு விரலை வைச்சு தேச்சார் , நாடிய உள்ளங்கையால தடவ,அவரோட இருந்த ஜெர்மன் காரர் என்னை ஏதோ கலகக்காரன் போல பார்த்து, அவரிடம் என்னவோ கேட்க , அவர் அவர்களுக்கு என்னவோ சொல்லிப்போட்டு,

           "வெளியால வாரும் ,உம்மோட கதைக்க வேணும் , " என்றார் ,

                           ஒரு ஜெர்மன் பெண் அவரை சந்தேகமா என்னவோ கேட்க, அவர் கையால ஒண்டும் இல்லை என்பது போல சைகை செய்து,

                    " நீர் வெளியால வாரும் ,உம்மோட கதைக்க வேணும்,சிகரட் பத்துவீரா "

                             எண்டு ஒரு சிகரட் எனக்கு தர நான் வெளியாளகொஞ்சம் துள்ளி துள்ளி நடையில்  கன்னத்தில நீண்ட கிருதா விட்டு முகத்தை அப்பவும்  சேவ் செய்து நான் தேடின ஆள் போலதான் இருந்தார். வெளிய வந்தவுடனே நான் சிகரட்டை வாயில வைச்சு பத்த வெளிக்கிட அவர்

                        " உமக்கு இங்கத்தை  சிஸ்டம் தெரியாது போல,, கொஞ்சம் பொறும் ஐசே , இங்க எல்லா இடமும் பத்த முடியாது போலிசே கண்டால் அமத்துவான், "

                     எண்டு ஒரு பச்சை சதுரம் போட்ட இடத்துக்கு கொண்டு போனார் ,,போய் அதில நிண்டுகொண்டு சிகரெட்டை, பெட்டியின் பின்னால சரிச்சு தட்டி, கொஞ்சம் விரல்களுக்கு இடையில வைச்சு சுள்ளட்டி போட்டு , வாயில வைச்சு லைட்டரை டக் எண்டு அமத்தி ,உள்ளுக்க இழுத்து போட்டு சொல்ல தொடங்கினார்,,,,,,

               நான் கேட்டேன்,,கிடத்தட்ட ஒரு அரைமணித்தியாலம் சொன்னார், சொல்லிப்போட்டு

              " அவ்விடர் சேன் " (போட்டு வாறன் )

                     எண்டு ஜெர்மன்காரர் போல டொச்சில சொல்லிப்போட்டு போயிட்டார்,,நான் அவர் தந்த சிகரட்டை பத்தவில்லை,காலுக்கு போட்டு மிதித்து நசி நசி எண்டு நசித்தேன்,பிறகு அதுக்கு மேல காறித் துப்பினேன், அவர் அந்த பப்புக்கு வெளிய நிண்டு பார்த்துக்கொண்டு இருந்திட்டு,ஜெர்மன்காரர் போல, தோளைக் குலுக்கி ,கை இரண்டையும்

                                 .." நடந்தது நடந்து தான் " ... என்பதுபோல காற்றுக்கு சொல்லிப் போட்டு உள்ளுக்க போட்டார்..
 .

Thursday, 20 August 2015

புறாக்களுடன் பேசியவள் ...

வாழ்வாதார  வலிகள்  நம்மைச்சுற்றி  இருக்கும்  மனிதர்களுக்கு   எப்பவுமே  வாழ்வா  சாவா  என்ற  விளிம்புநிலைக்  கோடுகள்  வரைந்து வைக்கும்  வட்டம். எனக்கு  எந்தவிதமான  பிரச்சினைகளும்  இல்லை  என்ற  சுயநல  புத்தியில்  நாங்கள் நழுவிவிடுகிறோம் . அதன் ஒருகண வலி நம்மை  அதிகம் பாதிப்பதில்லை. ஆனால் சில மனிதர்கள் வருவார்கள்  அவர்களின் கதை போட்டது போட்டபடி அவளவு  இலகுவாக  நம்மை விட்டுப் போகாது .

                                                         வேலை நாட்கள்  நேரத்தை செக்கன்  கணக்கில்  விழுங்கும் ஒஸ்லோவில் அதிகம் அவசரமான  பிரயாணிகள் மெட்ரோ நிலத்தடி ட்ரைனில் இருந்து அவசரமாக இறங்கும் மத்திய நிலத்தடி நிலையத்தில் இருந்து ,  வெஸ்ட்லி லின்சே என்ற மேற்கு  முடிவை நோக்கிப் போகும் திசையில் மூன்றாவதாக உள்ள டேசனுக்கு வெளியே புறாக்களுக்கு தீனி போட்டுக்கொண்டு, கையில  " போல்கட் ஆர் போல்கட் " என்ற நோர்வே மொழி சஞ்சிகையைக் கையில் வைச்சுக்கொண்டு கணுக்கால் வரை  நீண்ட பாவாடை அணிந்து,கைகளில் நிறையப் பாசிமணி மாலைகள் போட்டுக்கொண்டு  புறாக்களுடன் ருமேனிய ஜிப்ப்சி மொழியில் அவள்  பேசிக்கொண்டு இருந்தாள்.

                                         முன்னைக் கலாச்சார நினைவிடங்கள் நவீன காலத்துக்கு சமாந்தரமாய் இப்பவும் வரலாறு சொல்லும் பகுதியில் இருக்கும் அந்த ஸ்டேசனில் அடிச்சுப் பிடிச்சு இறங்க எனக்கு எப்பவுமே அவசரமான அலுவல்கள் இருப்பதில்லை, ஆனாலும் வில்லோ மரங்கள் வளைந்து வழி விடும் மரத்தோப்புக்கள் இன்னும் மிச்சம் இருக்கும் அந்த இடத்தில காலாற நடக்கும் நடைபாதைகளில் எப்பவுமே சுவாரசியமான மனிதர்கள் ஏதாவது எப்பவுமே எதிர்பாராமல் செய்துகொண்டு இருப்பதால், அந்த ஸ்டேசனில் இருந்து கொஞ்சம் வெளியே விடுப்புப் பார்த்துக்கொண்டு நடப்பதில் ஒரு அலாதியான இன்பம் உத்தரவாதமாக இருக்கும் .


                                       பல நாட்கள்  மனித நடமாட்டம்  குறுக்கமறுக்க நேரமில்லாமல் வேகமாகக்  கடக்கும்  சதுக்கம் போன்ற அந்த  இடத்தை வேடிக்கை  பார்த்துக்கொண்டே  நடக்கும்  போது அவளைக் கண்டு இருக்கிறேன். அவள் நட்பாகச் சிரிப்பாள். கையில உள்ள சஞ்சிகையை தூக்கிக்  காட்டுவாள் , நானும் நட்பாகச் சிரிச்சு கையைத் தூக்கி ராணுவ மரியாதை  போல சலுட் அடிச்சுப்போட்டு அவசரமாக நெரிசலில் நழுவிக்கொண்டு இருப்பேன். காற்றிலேயே ஈரமான அனுதாபம் ஒட்டிக்கொண்டு இருக்கும் அவள் பதிலுக்கு நன்றியோடு சிரிக்கும்போது .

                                        ஒருநாள் ,    முதல் முதல் அவளைச் சந்தித்த போது


                          "ஹலோ பிரென்ட் ,  சிமோல் மணி  பிக்  ஹெல்ப்   ,  பிரெண்ட் ,டூ மச் பிரப்பிளம் லிவ்விங் நோர்வே  , பை வன் மகஸின்  ,,ப்ளிஸ் பிரெண்ட்  "


                                 என்று உடைந்த ஆங்கிலத்தில் சொல்லி , அந்த " போல்கட் ஆர் போல்கட் " என்ற சஞ்சிகையை ஏறக்குறைய என் முழங்கையில திணித்து கட்டாயம் வேண்டச் சொல்லி சிரித்தாள்.


                                   " போல்கட் ஆர் போல்கட் " என்ற அந்த நோர்வே மொழி சஞ்சிகையின் தமிழ் மொழிபெயர்ப்பு " மனிதர்கள் எப்பவுமே மனிதர்கள் "  என்ற அர்த்தம் கொடுப்பது. அதை நாடு இல்லாத ரூமேனிய ஜிப்சிகளுக்காக  இரக்கப்படும் நோர்வே நாட்டு மனிதாபிமானிகள் வெளியிட்டு அதை விற்கும் காசை அவர்களுக்கு கொடுகிறார்கள் .


                               " போல்கட் ஆர் போல்கட் " சஞ்சிகையை விட அவளின் அப்பாவித்தனமான சிரிப்பு கவர்சியாக இருக்க, அவள் அடிக்கடி உடம்பை வெட்டி வெட்டி பேசுவது பந்தல் காலில் பரிசம் போட்ட பவள மல்லிகை போல மின்னிக்கொண்டு இருக்க , அவளோடு பேச்சுக் கொடுக்க நினைக்க முதலே அவளே பேச்சைத் தொடக்கினாள்.

                                         தன்னோட பெயர் மாரியா என்று சொன்னாள். தன்னுடைய நாலு பிள்ளைகளும் ருமேனியாவில் புசாராஸ் இல் தன்னோட வயதான அப்பா,அம்மாவோடு என்றும், அவள் மட்டும் தன் கணவனுடன்  ஒஸ்லோவின் தெருக்களில் வசிப்பதாகச் சொன்னாள்.  திருப்பியும்,


                       " பிரெண்ட்,,மை  குட் பிரெண்ட் ,,... சிமோல் மணி  பிக்  ஹெல்ப் .  .....ப்ளிஸ் மை பிரெண்ட் . பை வன் மகஸின்....சிமோல் மணி நத்திங் போர் யூ ...பிரெண்ட் ..."


                        " ஹஹஹஹாஹ்  நல்ல டிப்பிலோமாடிக் டெக்னிக் ,,,உன் வியாபர உத்தி  "  என்றேன் 

                          " ஒ அதுக்கு என்னத்துக்கு ஹஹஹஹஹா என்று சிரிப்பு வருகுது ,,,அதை கொஞ்சம் சொல்லு "

                                  " இல்லை,,இந்த உலகத்தில வாழுற எல்லா மனிதர்களுக்கும் ஒரு நாள் , சிமோல் மணி நத்திங் போர் , என்ற ஒரு நிலை வரும்  அந்த நேரம் ஏழை,பணக்காரன் என்ற ஒரு தகுதியே இருக்காது  அதை நினைச்சேன் சிரிப்பு வந்தது "

                              " ஒ ,,அப்படி  கடைசிக் கட்டத்தை ஜோசிச்சியா,  பிரெண்ட்,,மை  குட் பிரெண்ட் ,,... சிமோல் மணி  பிக்  ஹெல்ப் .  .....ப்ளிஸ் மை பிரெண்ட் . பை வன் மகஸின்..."

                                           என்று உடைந்த ஆங்கிலத்தில் சொல்லி , அந்த " போல்கட் ஆர் போல்கட் " என்ற சஞ்சிகையை ஏறக்குறைய கையில திணித்து வேண்டச் சொல்லி சிரித்தாள். புத்தகம் சஞ்சிகை வாசிக்க நேரம் இல்லாததால் ,அதை வேண்டி  சும்மா எங்காவது வைச்சுபோட்டு போவது  அதில் வேலை மினக்கெட்டு எழுதிய எழுத்தாளர்களை அவமதிப்பது என்று எப்பவும் நினைப்பதால் அதை வாசிக்க  விரும்பாத நிலையில்  நான் அதை வேண்ட ஆர்வப்படவில்லை.


                                   "  சஞ்சிகை வேண்ட காசு இல்லைப்போல இருக்கு,,,பரவாயில்லை , சரி சில்லறை இருந்தா தா , கொக்கக் கோலா வேண்டிக்குடிக்க ஆசையாக இருக்கு "


                                       என்றாள்  ,சில்லறை கொடுத்தேன். அவள் பிளாஸ்டிக் போத்தலில் அடைத்த கொக்கக் கோலா குடிப்பதில்லை என்று சொன்னாள் , கண்ணாடி போத்தலில் அடைத்து வரும் கொக்கக் கோலா தான் குடிப்பேன் என்றாள் . அதிகம் கண்ணால் பேசினாள்.வித்தைக்காரி போல அவள் கண்கள் ஒரு வட்டத்துக்குள் அடங்க மறுத்து எப்பவும் காளிதாசனின் மேகதூதத்தை

வரிக்கு வரி  இமை வெட்டில் வழிய விட்டது.

                                              " ஏன் அப்படி அதில என்ன விசேஷம்,நான் வேலை செய்யும் இடத்திலும் கண்ணாடிப் போத்தல் கொக்கக் கோலா தான் பரிமாறப் பாவிப்பது,,அதுக்கு நிறையக் காரணம் இருக்கு,,உனக்கு என்ன வந்தது பிளாஸ்டிக் போத்தலில் அடைத்த கொக்கக் கோலா குடிப்பதுக்கு  "  என்று கேட்டேன்


                                                    " பிளாஸ்டிக் போத்தலில் அடைச்சு வாறது குடிக்கிறதும் பச்சைத் தண்ணியை கையில பிடிச்சு வாயால் உள் இழுத்துக் குடிக்கிறதும் ஒன்றுதான்,,அதில ஒரு அலாதியான சுவையும் இல்லை .." என்றாள்.


                               இவள் விளக்குமாத்துக்குப் பட்டுக்  குஞ்சரம் கட்டின மாதிரி  கொஞ்சம் ரசனை உள்ளவள் போல இருந்ததால் கையோடு அவளைப் பற்றிப் பேச்சுக் கொடுத்தேன் . வழமை போல வறுமை அவள் உரையாடலில் முதன்மையாக இருக்க ,  இப்போது கர்ப்பமாக இருப்பதாக சொன்னாள். அதாலவோ என்னவோ தெரியவில்லை அவள் நாலு பிள்ளை பெற்றும் இன்னும் அவரைக்கொடி போல அங்கங்களில் இளமையாக இருந்தாள் . வெள்ளரிக்காயின் வெளித் தோல் போல வெளிறி இருந்தது அவள் முகம்.


                            என்னைப் பலமுறை கவனித்து இருக்கிறாள்.என்னை இந்தியா நாட்டவர் என்று நினைச்சாளம், புச்சாரஸ்சில்  அவள் வீட்டில் குடும்பமாக எல்லாரும் இருந்து இரவில் ஹிந்திப் படம் விடியோ கேசட்டில் போட்டு  பார்ப்பாளம் என்றாள். " ஆச்சாரே போல் தி ஹே ஹை சோரா..   " என்று என்னமோ ஒரு பாட்டு பாட்டிக்காட்டினாள் . அவள் குரல் முகேஷ் இன் ஆம்பிளைக் குரல் போல இருந்தது , அவள் பாடுற முகத்தைப் பார்க்க ஹேமமாலினி காஸ்மீர்  ஏரிக்கரையில் மிதந்து வெள்ளித்திரை வாற மாதிரி இருந்து . கடைசியில் அந்தப் பாதையால் நான் போவதையும் வருவதையும் தான் கண்டுள்ளதாக சொன்னாள்.உண்மையா சொல்லுறாளா அல்லது பொய்க்கு சொல்லுறாளா என்று அந்த நேரம் அவள் கண்களில் கண்டுபிடிக்க எந்த சலனமும் இல்லை.


                                  " ஏன் எப்பவும் அவசரமாக இந்த வீதியால் போய்க்கொண்டு இருக்கிறாய்,,ஒரு நாள் கூ ட கொஞ்சம் நின்று நிதானமாய் புறாக்களை இரசித்ததை நான் கண்டதே இல்லையே அப்படி என்னதான் வேலை செய்கிறாய் " என்று சிரித்து சிரித்து கேட்டாள் .


                                      நான் " ரெச்டோறேண்டில் குக் ஆக வேலை செய்கிறேன்  உன்னைப் போல வீதி எங்கும் அலையும் விதி போல எனக்கு அமையவில்லையே. வேலைக்கு போகும்போதும் வரும் போதும் மட்டுமே வீதிகளை வேடிக்கை பார்க்க வாவது நேரம் கிடைக்குது " என்றேன் .


                                   "  ஒ.... அப்படியா நீ வேலை செய்யும் ரெச்டோறேண்டில் எனக்கும் ஒரு சின்ன எடுபிடி வேலையாவது எடுத்து தாவேன் , இந்தப் புத்தகம் வித்து கால் வயிறும் அரை வயிறுமா அல்லாடுகின்றேன் , மரக்கறி வெட்ட ,கோப்பை கழுவ தெரியும் ,சின்ன வேலையாவது எடுத்துத் தாயேன் புண்ணியமாப் போகும் "   என்று அரைகுறை ஆங்கிலத்தில் கேட்டாள்.


                                " இங்கே நோர்வே பாசை தெரியாமல் ,சுடுகுது மடியப்பிடி என்று நிண்டுகொண்டு  வேலை எடுப்பது கஷ்டம்பா ,நீ வேற என்ன வேலை உன் நாட்டில் செய்து இருகிறாய் அதை சொல்லு "

                              " கோடை காலத்தில் உள்ளூர் தோட்டத்தில் உருளைக்கிழங்கு அறுவடை நேரம் இழுக்கப் போவேன், உருளைக்கிழங்கு வேண்டிய மாதிரி வேண்டிய ஸ்டைலில் சமைக்க தெரியும் பிரெண்ட்.."

                                "  உனக்கு தோட்டப் பராமரிப்பு வேலை தெரியுமா,தெரிந்த நோர்வே நண்பர்களுக்கு சொல்லி வைச்சால் சில நேரம் அவர்களின் தோட்டத்தை பராமரிக்க வேலை சில வாரங்கள் வெய்யில் நல்லா எறிக்கும் கோடை காலத்தில் கிடைக்கலாம் "

                          "   ஹ்ம்ம்,,எனக்கு தோட்டத்தில போய் மலர்களை மட்டும் ரசிக்கத் தெரியும்,,அதில வேலை செய்யத் தெரியாதே  பிரெண்ட்  " என்றாள் 

                       " அப்ப கஷ்டம் தான், எனக்கு தெரிந்தவரை நோர்வே ஒரு அகராதி பிடிச்ச நாடு ,இங்கே வேலை தேடி எடுப்பது இலகு அல்ல,,அதுவும் நீ ருமேனியா நாட்டு ஜிப்ப்சி ,,கொஞ்சம் ஜோசிப்பாங்க இந்த நாட்டவங்க "

                         " சரி, பிரெண்ட் ,,,அப்ப நீ வேலை செய்யும் ரெச்டோறேண்டில்,,உன் செல்வாக்கைப் பயன்படுத்தி கதைத்து பாரேன்,,பிரெண்ட்   " என்றாள்  

                                 நான் அதுக்கு சும்மா அனுதாபமாக சிரிச்சுப்போட்டு கதையை மாத்த புறாக்களைப் பார்த்தேன். நோர்வேயில் ரோமானிய மக்களை கள்ளர் என்று தான் பொதுவாக நினைகிறார்கள். ஒரு கதைக்கு இவளை என்னோட வேலை இடத்துக்கு கொண்டு போய் என்னவும் பார்ட் டைம் வேலைக்கு கதைத்தாலே முதலில் என்னையும் சேர்த்து வெளியே அனுப்பத்தான் அலுவல் பார்ப்பார்கள் அங்கே வேலை செய்கிறவர்கள்.


                             " புறாக்களுக்கு எப்பவும் ஏதாவது நொறுக்குத்தீனி வீசிக்கொண்டு இருக்கிறாயே அது எங்கிருந்து கிடைக்குது,உனக்கு உணவு கிடைப்பதே குதிரைக்கொம்பு, இங்கே எப்படிப்பா உன்னால் இப்படி வீசி எறிஞ்சு விளையாட  முடிகிறது "


                        என்று கேட்டேன் . அதுக்கு அவள் சிரித்தாள். பதில் சொல்லவில்லை,ஒரு சின்னப் பையில் இருந்து இன்னும் கொஞ்சம் நொறுக்குத்தீனி உள்ளங்கையில் என்னவோ அவளோட ரோமானிய ஜிப்ப்சிப் பாசையில் சொல்லி எறிஞ்சாள் அது  சோளகக்  காத்தில வேப்பம்பூ உதிர்ந்து விழுந்த மாதிரி விழ முதலே பல புறாக்கள் அந்தரத்தில் அதைக் கவ்விப் பிடித்தன .
 இப்படி வீசி எறிஞ்சு விளையாட  முடிகிறது பார்த்தியா  இதுதான் உன் கேள்விக்கு விடை என்பது போலப் பார்த்தாள் 

                                      " எனக்கு இன்றைக்கு கொக்க கோலா வேண்டாம்,அப்பிள் சாபிட்ட வேண்டும் போல இருக்கு, வேண்டித்  தாறியா, அல்லது வேண்ட காசு தாறியா ,எனக்கு சில்வண்டு ஸ்டிக்கர் ஒட்டின பச்சைக் கலர்  அப்பிள் தான் விருப்பம் அதில தான் ஒரியினல் அப்பிள் மாச்சத்தும் சீனியும் கலந்த   சுவை இருக்கும்  " என்றாள்.


                      அவளுக்கு இதுக்கு மேலே கதைக்க நேரமில்லையோ,அல்லது பசி போலவோ பார்த்தாள்,பொக்கட்டில் கிடந்த சில்லறையை வழிச்சு எடுத்து அந்தக் காசைக் கொடுத்தேன் ,


                                " தேங்க்ஸ் ப்ரென்ட் , ஹவ் எ நைஸ் டே பிரெண்ட்,......மீட்ஸ் யூ நெக்ஸ்ட் டைம்  "  என்று போட்டு போயிட்டாள்.


                                           அதுக்கு பிறகு சில வாரம் அந்த இடத்தைக் கடந்து போனபோது அவளை தற்செயலாகவும் காணவோ,சந்திக்கவோ முடியவில்லை. ஆனால் ரோமானிய ஆண்கள் பெரிய செல்லோ பேஸ் வயலின், கிளாரினட்,  கொன்கோட் றம், அக்கொச்டிக் கிட்டார் வைச்சு கொண்டு பழைய ஸ்பானிஷ் பாடல்கள் ஒரு மூலையில் பாடி வாசித்துக்கொண்டு இருந்தார்கள்.


                                                சில வாரங்களின் பின் ,நோர்வேயின் தேசிய சுதந்திர நாள் அண்மித்துக்கொண்டு வர  , நசினல் தியேட்டர் ஸ்டேஷன்,அதை அண்டிய கால் ஜொஹான்ஸ் காத்தா, ஒளி விளக்கு  சோடனை ,பாதையோரப் பதாதைகள் , நோர்வே தேசியக்கொடிகள்  என்று அமளிதுமளியாக கொண்டாடதுக்கு தயாராகிக்கொண்டிருந்த ஒருநாள் மறுபடியும் மரியாவை பழைய இடத்தில சந்தித்தேன்.


                                            கோபமாக பேசிக்கொண்டு ஓடிவந்தாள் . படக்கு படக்கு எண்டு அரைகுறை ஆங்கிலத்தில் வார்த்தைகள் வேகமாக வெளியே வந்து விழ அழாத குறையாக எனக்கு என்னவோ சொல்லவேண்டும் போல அந்தரிச்சாள்


                                   "  அந்தக் கழிசடை, அந்த தே...... மவன் , அவன் மட்டும் இப்ப கையில கிடைச்சா தலையைத் திருகி கண்ணை நோண்டி எடுதுப்போட்டுதான் விடுவன், சீ எவளவு கேவலப்பட்டுப் போய் விட்டேன் தெரியுமா, எனக்கு ஒரு கணவன் இருக்கிறான்,,,அவன்  மட்டும் தான் இன்றுவரை கணவன்,,அவனுக்கு மனதாலும் நான் துரோகம் செய்ததில்லை,,,என்னோட நாலு பிள்ளைகள் மேல சத்தியமா சொல்லுறேன்,,இந்த கழிசடை கையில அம்பிடடும் ஒரு அவனுக்கு,,குடலை உருவாமல் விடமாட்டேன் "


              என்று யாரோ ஒருவனை பேசினால்,,,பேசிக்கொண்டே  இருந்தாள்..


                                      "  என்னாச்சு உனக்கு இன்று ,நீ ஒருநாளும் இவளவு டென்சனா இருப்பதில்லையே என்று கேட்டேன் ."


                                        "   பொறு உனக்கு சொல்லுறேன் ப்ரென்ட் ,,கொஞ்சம் பொறு ,,ப்ரென்ட் ,,"


                                       என்று தன்னை கொஞ்சம் அமைதியாக்கிக் கொண்டு அவளின் கோவத்துக்கு காரணம் சொன்னாள் .அவள் சொன்னது


                                 மாரியா என்னைப்போலவே வீதியில் சந்தித்த ஒரு நோர்வே நாட்டுக்காரனை,நல்லவன் என்று நம்பி, ஆங்கிலத்தில் சொல்லி அதை   நோர்க்ஸ் மொழியில் ஒரு காட் போட் மட்டையில் பின்வருமாறு எழுதித் தரச்சொல்லி கேட்டு இருக்கிறாள் ,அவள் ஆங்கிலத்தில் சொன்னது


                                                  "    எனக்கு நான்கு பிள்ளைகள் ,மிகவும் கஷ்டம் அவர்களின் தேவைகளை நிறைவு செய்து , அவர்களை சமாளித்து அன்றாடம் வாழ்வது,தயவு செய்த என் நாலு பிள்ளைகளையும் வாழ வைக்க கொஞ்சம் சில்லறை தாருங்கள்,ஆண்டவன் உங்களை ஆசிர்வதிப்பான்  " என்பது


                                        ஆனால் அந்த நோர்வே நாட்டவன் அதை நோர்க்ஸ் மொழியில் எழுதிக்கொடுதுப்போட்டுப் போனது இப்படி


                                              "  எனக்கு நான்கு கணவன்மார்கள்  ,மிகவும் கஷ்டம் அவர்களின் தேவைகளை நிறைவு செய்து , அவர்களை சமாளித்து அன்றாடம் வாழ்வது,தயவு செய்த என் நாலு கணவன்மார்களையும்  வாழ வைக்க கொஞ்சம் சில்லறை தாருங்கள்,ஆண்டவன் உங்களை ஆசிர்வதிப்பான் "என்பது


                                           நோர்வே மொழியில் பிள்ளைகளை " பார்ன் " என்பார்கள், கணவனை " மான் " என்பார்கள். அதால் இது தற்செயலாக சின்ன ஒரு சொல்லில் வந்த பிழை இல்லை, வேண்டும் என்றே செய்த விஷமத்தனம் என்று தெரிந்தாலும் அதை செய்தவன் யார் என்று தெரியாமல் ஆகக் குறைந்தது " ஏன் இப்படிச் செய்தாய் " என்று கேட்க முடியாத ஒரு கையறு நிலைதான் விளிம்புநிலை மனிதர்களின் இயலாமை     


                                      நோர்வே மொழி தெரியாத  மரியா அந்த மட்டையை வைச்சுக் கொண்டு நசினல் தியட்டர் மெற்றோ ஸ்டேஷன் வாசலில் குந்தி இருந்து பிச்சை எடுத்து இருக்கிறாள் ,பலர் சந்தேகமாகப் பார்த்து அதை வாசித்துக்கொண்டு போய் இருக்கிறார்கள்.ஒரு நோர்வே பெண்மணி வந்து அது பற்றி விசாரித்த போது தான் மரியாவுக்கு உண்மை தெரிய வந்தது. அந்த மட்டையை தூக்கி சுழட்டி எறிஞ்சு போட்டு இப்ப அவனைத் தேடிக்கொண்டு இருக்கிறாள்.இதுதான் அவள் உடைந்து உடைந்து மூக்கைச் சிந்திகொண்டு சொன்ன கதையின் காரணம்.

                                           நான் ஒண்டும் சொல்லவில்லை.அவளும் இது பற்றி என்னிடம் ஒண்டுமே கேட்கவில்லை, நோர்வேயில் வேற்று நாட்டவர் மீது துவேஷம் உள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள். அதை அவளுக்கு சொல்ல வேண்டியதில்லை.அவளுக்கே நல்லா தெரியும் . ஆனால் மறுபடியும் இங்கேயும் அங்கேயும் தேடிக்கொண்டு


                         " அந்தக்  கழிசடை, அந்த தே...... மவன் , அவன் மட்டும் இப்ப கையில கிடைச்சா தலையைத் திருகி கண்ணை நோண்டி ,,"


                    என்ற பழைய பல்லவியை மறுபடியும் தொடக்கித் திட்ட ..


                                      "   மரியா இப்ப உனக்கு என்ன வேணும்,,கொக்கக் கோலா வேணுமா,,அல்லது  பச்சை அப்பிள் வேணுமா வேண்ட சில்லறைக்   காசு தாரேன் " என்றேன்


                                      அவள் கோபமாக "  இப்ப நஞ்சு ....நஞ்சு  வேண்டக்  காசு  தா,,அதைக் குடிச்சிட்டு சாகலாம் போல இருக்கு " என்றாள் ..நான் ஒன்றும் சொல்ல வில்லை .


                                  "  இன்னொரு மட்டை எடுத்து அழகாக நோர்க்ஸ் மொழியில் உனக்கு எழுதித் தரவா "  என்று கேட்டேன் ,சந்தேகமா என்னையும் பார்த்தாள்.


                                          "   உண்மையாகவா சொல்லுகின்றாய் ப்ரென்ட் ,,,நீ நல்லவன்  போல தான் அரம்பத்தில இருந்தே பழகிறாய்  பிரெண்ட் ,ப்ளிஸ் ,நீயே அதை எழுதித்தா,,"  என்று சொன்னாள்.


                      கதைத்துக்கொண்டு இருக்கும் போது நோர்வே குதிரைப் படை பெண்  போலிஸ் அதிகாரிகள் இரண்டு பெரிய அமரிக்கன் செடில்பிரெட் குதிரையில் எங்களைக் கடந்து மெல்ல மெல்ல நோட்டம் விட்டுக் கொண்டு நகர் வலம் போனார்கள். மரியா போலிஸ்காரரை வாய்க்குள்


                 " சாத்தானின்.......  இக்கு......    நேரம் .......பிறந்த       கோவேறு கழுதைகள்  இரவில் தூங்க விடாமல் எழுப்பிக் கலைத்து ...   .சாத்தானின்.......  இக்கு......    நேரம் .......பிறந்த       கோவேறு கழுதைகள்.....எங்களை     மனிதர்களாகவே மதிப்பதில்லை " என்று திட்டினாள்.


                          "  சரி விடு ,,நானும் அவர்களை நரகத்தில்  இருந்து வந்தவர்கள் என்றுதான் நினைப்பது ,,,ஹ்ம்ம்  சரி விடு ,,உன்னைக் கேவலப்படுத்தி எழுதித் தந்த அந்த துவேசம் பிடித்தவனை விட இவர்கள் கொஞ்சம் பரவாயில்லை,கருணை உள்ளவர்கள், "


                                 "  அதை  எப்படி  சொல்கிறாய் "

                              " இது  அவர்கள்  நாடு, அவர்களின் மக்களை  அவர்கள்  பாதுகாக்கிறார்கள் ,நானும்  நீயும்  வேண்டாத விருந்தாளிகள்,,மரியா  "

                            "   ஆனால்  நீ இங்கே  பலவருடம்  வசிப்பது போல இருக்கே "

                          "அது  உண்மைதான்,,ஆனாலும் நாங்கள் வந்தேறிகள்  அதில  சந்தேகமே  இல்லை,  அவர்களைப்  பொறுத்தவரை மரியா  "

                               "     நான்  இந்தத்  தெருவோரம்  வசிப்பதில்  எவளவு  கஷ்டம்  தெரியுமா  உனக்கு "

                                   "தெரியும்  மரியா  ...,அதுக்குக்  காரணமே  வேற "

                                      "    என்ன  காரணம் "

                                      "    அதை  சொல்ல  முடியவில்லை ,,அதுக்காக  போலிஸ் காரரைத் திட்டாதே  மரியா "


                                " ஹ்ம்ம்,,சரி,,நீ சொல்வதை  கேட்கிறேன் "

                                   " அவர்கள் நகரத்தை இரவில் பாதுக்காக்க அப்படி செய்கிறார்கள், கொஞ்சம் பொறு நான் ஒரு மட்டை எடுத்துக்கொண்டு வாறன் முதலில்  " என்றேன் .அவள் பொறுமையாக இருந்தாள்

                                   நான் கொஞ்ச தூரத்தில் முடக்கில் இருந்த " றேமா தூசன் சூப்பர் மார்க்கெட்டில் " போய் அவர்களிடம் ஒரு காட் போட் மட்டை கேட்டு வேண்டிக்கொண்டு வந்து அதில எனக்கு எழுத முடிந்த அளவு நோர்வே மொழியில் கொஞ்சம் கொஞ்சமா எழுத்துக்களை ஜோசித்து ,இப்படி எழுதிக் கொடுத்தேன் ..


                                            "    இன்றைக்கு இந்த நகரம் உங்கள் எல்லாருக்கும் அழகாக இருக்கு, வீட்டில் நாலு சின்னஞ் சிறு வயிறுகள் பசியோடு காத்திருக்க, அவர்களுக்கு உணவளிக்க உங்களிடம் இருக்கும் சின்னஞ்சிறு   சில்லறைகள் போதுமானதாக இருக்கும்போது, உங்களையும் என்னையும் படைத்த ஆண்டவன் பேரில்  இந்த உலகமே அழகாக இருக்கும்  "


                                எண்டு எழுதிக் கொடுத்துப்போட்டு புறாக்களைப் பார்த்தேன். வழமையாகப் புறாக்கள் நிக்கும் ,பறக்கும் இடத்தில ஒரு புறாவும் இல்லை


                             " ,உன்னை இன்னொரு முறை சந்திக்கிறேன் மரியா "


                                " இதில  என்ன  எழுதி  இருக்கிறாய் "

                              "  கொஞ்சம் இதயங்களை  உலுப்புவது  போல  எழுதி  இருக்கிறேன் "

                                       "அதென்ன  சொல்லு "


                                    "  மரியா,,இந்த  நாட்டு மக்களுக்கு  இளகிய  இதயம்  இருக்கு,,ஆனால்  வாழ்கையில்  அவர்கள்  எதையும் சொந்தமாகப் பொறுப்பு எடுப்பதில்லை "

                                       "அப்படி  என்றால்  என்ன,,எனக்குப் புரியவில்லை "

                                      " மரியா  இவர்கள் வேகமாக  இயங்கும்  மனிதர்கள் ,,இவர்களை  ஒரு கணம் நிறுத்தி வைத்து மனசாட்சியைக் கேள்வி கேட்க வைத்தால்  சுருண்டு விழுவார்கள் "

                                       " அப்படியா,,இது  ஆச்சரியமாக  இருக்கே "

                                          " அதுதான்  உண்மை ,,சுள்  எண்டு  நெஞ்சைத்தொடுற   மாதிரி  எழுதி இருக்கிறேன் "

                                          "  உண்மையாவா  சொல்லுறாய் ,,நான்  ஏற்கனவே  கேவலப்பட்டுப் போய்  பிஞ்சு  நொந்து  இருக்கிறேன் "

                                               "  கட்டாயம் இந்த முறை உனக்கு சில்லறைகள் விழும், நீ சந்தோசப்படுவாய்,,,,வேற என்ன வேண்டும்,,ஹ்ம்ம்  ,,ஆண்டவன் புண்ணியத்தில்  நீ சந்தோசமாக இருப்பாய் "

                                         என்று சொல்லி இருந்த சில்லறைகள் எல்லாத்தையும் முதல்ப்  பிச்சையாக அவளுக்கு கொடுதுப்போட்டு  வேலைக்கு போய் விட்டேன் .


                                                "  அதுக்கு பிறகு இன்னும் கதை விட நீ மரியாவை சந்திக்கவில்லையா ? "  


                                         என்று மிச்ச விடுப்பு அறியிற ஆர்வத்தில நீங்க கட்டாயம்  கேட்பிங்க .துரதிஸ்டவசமாக அவளை நான் அதன் பின் காணவே இல்லை இன்றுவரை.ஆனால் இடைப்பட்ட காலத்தில் நோர்வே டெலிவிசன் செய்தியில்ஒஸ்லோ வீதிகளில்  நிறைய வீதியோர  ரோமானிய மக்கள் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டு அவர்கள் நாட்டுக்கு பலவந்தமாக திருப்பி அனுப்பட்டது பெரிய விவாதமாக கொஞ்சநாள் போய்க்கொண்டு இருந்தது.
.
.
.

Wednesday, 19 August 2015

புல்லாங்குழல் மாஸ்டரின் கோமதி அன்ரி..

எங்களின் ஊரில சின்ன வயசில எங்களின் வீட்டுக்கு அருகில் ஒரு புல்லாங்குழல் மாஸ்டர் இருந்தார், அவர் எங்கள் ஊர் ஆரம்ப இடைத்தர பள்ளிக்கூடத்தில சங்கீத ஆசிரியராகப்  படிப்பித்தார், அவர் பள்ளிக் கூடத்தில புல்லாங்குழல் வாசிக்கமாட்டார் என்றுதான் நானே அதில் படித்த காலத்தில் கண்டிருக்கிறேன். . சரி கம ப த நி ச எண்டு சங்கீதம் மட்டும் படிப்பிப்பார்.

                                      ஆனால் வீட்டில ஒவ்வொரு சைசில புல்லாங்குழல் மேசையில கிடக்கும், சிலதை சுவரில கட்டி தொங்க விட்டிருப்பார் . அரசம் இலையில குழந்தை மாயக்கண்ணன் படுத்துக் கிடந்தது கொண்டு புல்லாங்குழலை வாயில வைச்சு அதைக் கரும்பு கடிக்கிற மாதிரி கடிச்சுக்கொண்டு கோகுலத்துப் பெண்களை  பார்த்து சிரித்துக்கொண்டிருக்கும் ஒரு படம் அவர்கள் வீட்டில ஹோலில பெரிதாகா ப்ரேம் செய்து மாட்டி இருக்கும் .

                                        புல்லாங்குழல் மாஸ்டர் வீடிலையும், புல்லாங்குழல இரவு நேரம், வீட்டு கதவு, ஜன்னல் எல்லாத்தையும் இறுக்கிச்  சாத்திப் போட்டுதான் வாசிப்பார். அதன் குழல் ஓசை  " பன்னீர் மழை சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய் அழகைப் பாடுங்களே..."   என்று மயங்கி மயங்கி காற்றில் வரும்,ஆனால் புல்லாங்குழல் மாஸ்டர் அதைக் கையில் வைத்து வாசித்ததை எங்கள் அயலட்டையில் யாருமே பார்த்ததில்லை 

                                                     புல்லாங்குழல் மாஸ்டருக்கு எல்லாமே சங்கீதம் ,அவரோட வீட்டு வெளிப் படலையில்  தபால்க்காரன் மணி அடிச்சா அவனிட்ட கடிதம் வேண்டமுதல் அந்த  பெல் சத்தம் காரிகாம்போதி ராகம் போல இருக்கு எண்டுவார் ,அவன்  மண்டையைச் சொறிஞ்சு சிரிப்பான்.  பாண் விக்கிறவன் காலையில் வண்டிலில் அடிக்கிற ஹோர்ன் சத்தத்தை  ஆபேரி எண்டுவார், அவன் வாயத் திறக்காமல் இளிப்பான்.  பக்கத்துக்கு வீட்டு  அம்பலவாணர் தாத்தா அடித் தொண்டையில் ரெயில் போற மாதிரி  குரலில் இருமினா அது கரகரப்பிரியா எண்டுவார், நல்ல காலம் அம்பலத் தாத்தாவுக்கு காது கேட்காது.

                                                      புல்லாங்குழல் மாஸ்டர்  வீராளி அம்மன் கோவிலுக்கு பின்னால , விளாத்தி ஒழுங்கை தொடங்கிற முதல் முடக்கு வீட்டில அவரின் மனைவியோடு அவரோட அம்மா வழியில் வந்த   கல் வீட்டில வசித்தார்கள், நாங்கள் அன்பாக அவரோட மனைவியை மாஸ்டர் அன்ரி எண்டு சொல்லுவோம் , மாஸ்டர்  அவர் பாட்டில, காலையில பூபாள ராகம் ,மாலையில நீலாம்பரி ராகம் எண்டு ரகசியமா வேணுகானம் வாசித்துக்கொண்டு வசித்தாலும் ,அவர்களுக்கு வீடு முழுவதும் புல்லாங்குழலும் ,அதன் மயக்கும் இசையும் இருந்தது ஆனால், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை!.

                                            இளவயதில் அவர் வீட்டுக்கு சும்மா புல்லாங்குழல் தொங்கிரத்தை, மாஸ்டர் சில நேரம் பாடுறதை  வேடிக்கை பார்க்க போவேன். ஆனாலும் மாஸ்டர்  வாயதை திறந்தால் சங்கீதம் வெளிய போயிடும் போல அதிகம் கதைக்க மாட்டார், புறங்  கையால மட்டும் தொடையில் தட்டி தாளம் போட்டுக் கொண்டு ,வாயிட்குள்ள ஏதாவது ஒரு ராகத்தின் ஆரோகணம்,அவரோகணத்தை முணுமுணுத்துக்கொண்டு இருப்பார்,

                                               மாஸ்டர்  அன்ரி நல்ல  பெண்மணி .அன்பாகக் கதைப்பா  அம்மாவை விசாரிப்பா ,படித்தவா , நாலு நல்ல விசியம் தெரிந்தவா ஆனால் அநாவசியமா தனக்குப் பல விசியம் தெரியும் எண்டு காட்டிக்கொள்ள மாட்டா . அவாவின் அப்பா ஒரு அப்புக்காத்து என்ற வழக்கறிஞ்சர் எண்டு சொல்லுவார்கள். ஆனால் மாஸ்டர் அன்டி எங்கேயும் வெளியே போக மாட்டா. கோவிலுக்கே போக மாட்டா. சந்தியில் இருந்த  சில்லறைக்கடை மனியதிட்ட கடைக்கு மட்டும் மரக்கறி.சரக்குச் சாமான் வேண்டப் போவா. 

                                    தாய் வழிச் சொத்தான தென்னம் தோப்புக் காணியை தன் பெயரில் மாற்றிக்  காணி உறுதி எழுத பிரக்கிராசியிடம்  போன புல்லாங்குழல் மாஸ்டர் , அந்த நேரம் இளமை ஊஞ்சல் ஆடிய அன்ரியின் மோகன ராக அழகிலும் ,சிவரஞ்சனிக் கலர்  நிறத்திலும், ஹம்சத்வனி நனைத்த  இளமையிலும் கண்ணை வைச்சு, வயசாகி  பைல் கட்டைத்  தூக்கிக் கொண்டு கோட்ர்ஸ் இக்கு போகவே தடுமாறிய , கொஞ்சம் வருமானத்துக்கு அல்லாடிய அப்புக்காத்துக்கு வாயால வெட்டி வங்காளம் போற புண்ணியக்குஞ்சியைத் தூது  அனுப்பி,  பள்ளிக் கூடத்தில படிப்பிக்கிற அரசாங்க உத்தியோகத்தை முன்னால தூக்கிப்போட்டு .

                     " சட்டத்தரணி  மாஸ்டர் நல்ல மனுஷன்,  கலியாணம் கட்ட வயதைப்பற்றி  விசுவாமித்திரர் போல ஜோசிக்க தேவையில்லைக் காணும் , என்னதான் சொன்னாலும் கலியாணம் ஆயிரம் காலத்துப் பயிர் அது தான் ஒரு பொம்பிளைக்கு மரியாதை,பாதுகாப்பு, மாஸ்டர் படிச்ச மனுஷன் ,உம்மட பிள்ளையை கண் கலங்காமல் வைத்துக் காப்பாற்றுவார் , நீர் பயப்பிடாமல் ஓம் எண்டு சொல்லும் காணும்  , மிச்சம் நான் பார்க்கிறன் காணும் "

                              எண்டு வசியம் வைச்சு, ஒரு மாதிரி அன்ரியை சப்த ரிஷிகள் சாட்சியாக  மணவறைக் கோலத்தில அம்மி மிதிச்சு அருந்ததி பார்க்க வைச்சிட்டார் ஒரே ஊருக்குள்ள  ரெண்டு கலியாணம் கட்டி, மூன்றாவதா ஒரு சின்ன வீடும் அரசல் புரசலா வைச்சு இருந்த புண்ணியக் குஞ்சி என்ற புண்ணிய மூர்த்தி சித்தப்பு. இப்படிதான் பிரக்கிராசியின் கடைசி மகள் புல்லாங்குழல் வீட்டுக்கு மகாலஷ்மியாக வந்து கொஞ்சநாளில் மாஸ்டர் அன்டி ஆகின இதிகாசம். 

                            எப்பவும் போல சும்மா விடுப்புப் பார்க்க மாஸ்டர் வீட்டை போவேன். அப்படிப்  போன ஒருமுறை அவர்கள் வீட்டு ஈசி செயாரில மாஸ்டர் படுத்து இருந்துகொண்டு ஏதோ ஒரு ராகத்துக்கு மேல ஏறி உக்காந்து அதன் ஆலாபனையில் மேகத்தில பறந்துகொண்டு இருந்த நேரம் நானும் சும்மா கேட்டுக்கொண்டு இருந்தேன் அவர் என்ன  வாயுக்குள்ள பாடுறார் என்று .

                            அவர் பாடி முடிய , கண்ணை மூடிக்கொண்டு படுத்து இருந்த புல்லாங்குழல் மாஸ்டரிடம் , நான் அவருக்கு முன்னால சீமெந்து நிலத்தில குந்தி இருந்துகொண்டு

                      " மாஸ்டர் எனக்கு கன நாளா ஒரு சந்தேகம் , புண்ணாகவராளி ராகம் வாசித்தா பாம்பு மயங்குமா? "

                        எண்டு என்னோட சந்தேகத்தை கேட்டேன், அவர் அதுக்கு

                       " திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை அதை நாதஸ்வரத்தில் வாசித்தால் பாம்பு அதைக் கேட்டு மயங்கும், அந்த ராகத்துக்கு  நாக ராம பத்திரன் இராகம் என்றும் பெயர் , வராளிக்கு  மயங்காத நாக பாம்பும் உண்டோ என்ற ஒரு  பாபநாசம் சிவன் உருப்படியே  இருக்கு , "

                                           எண்டு சொல்லி அந்த ராகத்தின் சரளி வரிசையைப் பாடிக்காட்டினார்.

                       " திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை பாம்புப் புத்துக்கு அருகில் இருந்து வாசித்தாரா "

                           எண்டு கேட்க நினைச்சேன் ஆனால் அது அவளவு முக்கியம் இல்லை எண்டு நினைச்சு,வேற ஒரு கேள்வியைக் கேட்டேன். அதையும் கொஞ்சம் ஜோசித்து தான் கேட்டேன், நான் கேட்டது

                            " பாம்புக்கு காது இல்லை ,என்று சொல்லுறார்கள் பிறகெப்படி மாஸ்டர் அதுக்கு இராகம் வாசிப்பது கேட்கும், அதுவும் இது புன்னாகவராளி ராகம் தான்  என்று அதுக்கு எப்படித்  தெரியும்  ?"  

                                எண்டு ,என்னோட இன்னுமொரு நீண்டநாள் சந்தேகத்தை அவரிடம் கேட்டேன் , புல்லாங்குழல் மாஸ்டர் கொஞ்சம் ஜோசிச்சுப் போட்டு

                                 " பாம்புக்கு காது இருக்கிறபடியால் தான் கேட்டு மயங்குது " எண்டு சொல்ல ,நான்

                              " பாம்புக்கு காது இல்லை  "

                          என்று  உறுதியாகச்  சொன்னேன் ,அவர் ஜோசிச்சுப் போட்டு

                             " இஞ்சேருமப்பா , இவன் பொடியன் என்னவோ அகராதி கரைசுக் குடிச்சவன் போல பாம்புக்கு காது இல்லை எண்டு சொல்லுறான் , நீர் ஒருக்கா வடிவா விளக்கமா சொல்லும் "

                               எண்டு குசினிப் பக்கம் பார்த்து சொல்ல ,மாஸ்டர் அன்ரி , சேலைத் தலைப்பால கையை துடைச்சுக்கொண்டு வந்து , குசினி கதவில சாஞ்சுகொண்டு, கொஞ்ச நேரம் ஜோசித்து , நாங்கள் கதைத்துக்கொண்டு இருந்ததை கேட்டது போல , என்னையும் மாஸ்டரையும் மாறி மாறிப் பார்த்தா. அவா பார்த்ததைப் பார்க்க  மாஸ்ட அன்டிக்கு பாம்புக் காது என்று சொல்லுவார்களே அது இருக்குமோ என்று எனக்கு சந்தேகமா இருந்தது. அன்டி வேற என்னவோ நினைவில் நிற்பதுபோல 

                                         "பாம்புக்கு காது இல்லை, அது உண்மை, பாம்புக்கு காது இருந்தால் என்ன இல்லாட்டி என்ன ,உயிருள்ள மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத உலகத்தில ,பாம்புக்கு காது இருந்தால் என்ன இல்லாட்டி என்ன ",

                                   எண்டு விரக்தியா அன்ரி மெல்லிய குரலில் சொல்ல ,புல்லாங்குழல் மாஸ்டருக்கு சின்னக் கோபம், ஏமாற்றம் வந்திட்டது,.மாஸ்டர் ஈசி செயரை விட்டு எழும்பி , குசினிவாசலை பார்த்து 

                                  " இப்ப நீர் என்ன சொல்லுறீர் " எண்டார், அந்த அன்டி பயபிடமா

                                   " பாம்புக்கு காது இல்லை, அது உண்மை, மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத உலகத்தில ,பாம்புக்கு காது இருந்தால் என்ன இல்லாட்டி என்ன ",

                                   என்று அலட்சியமா சொன்னா. இப்ப மாஸ்டடருக்கு கோபம் அண்டம் குண்டம் எல்லாம் பத்திக் கொண்டு வர,

                                            " என்னடி சொன்னனி, செத்தேல கிடந்ததுகளைத் தூக்கி மெத்தையில வைச்சா இப்பிடித்தான் ,வாய்க் கொழுப்பு காட்டுங்கள் " எண்டு சொல்லிக்கொண்டு, என்னைப் பார்த்து

                                    " இனி நீ இந்த வீடுப்பக்கம் வரக் கூடாது,சொல்லிபோட்டன் இனி நீ இந்த வீடுப்பக்கம் வரக் கூடாது ",

                                   எண்டு போட்டு ,கையில கட்டி இருந்த மணிக்கூட்டைக் கழட்டி மேசையில எறிஞ்சு போட்டு குசினிக்கு உள்ள போய் புல்லாங்குழல் மாஸ்டர் அந்த அன்ரியை , ரூபக தாளம் திஸ்ர நடையில குசினியில் போட்டுக் கும்மி எடுக்க ஆச்சரியமா இருந்தது ,

                                     "  என்னை எதிர்த்து பேச வெளிக்கிட்டுட்டாய், நான் ஆர் எண்டு இண்டைக்கு உனக்குக் காட்டுறேன், நண்டுக்கு .சதை கெண்டு  கிளப்பிக்கொண்டு   வந்தா  வளையில சும்மா கிடக்காதாம் ...என்னையே  எதிர்த்து பேச வெளிக்கிட்டுட்டாய்  தூமை , நான் ஆர் எண்டு இண்டைக்கு உனக்குக் காட்டுறேன் பாரடி இப்ப,,,இப்ப  காட்டுறேன் ,,"

                                அந்த அன்டி ஒரு எதிர்ப்பும் சொல்லாமல் அடி வேண்டிக்கொண்டு இருந்தா, மாஸ்டர் மிருதங்கம் மத்தளம் அடிக்கிற மாதிரி  அவாவின்  சீலையை சுருட்டிப் பிடிச்சு அதே கையால தலை மயிரையும் சேர்த்துக்  கும்மி பிடிச்சு மற்றக் கையால முதுகில போட்டுக் கும்மி எடுத்து வெளுத்துக்கொண்டிருக்க  நான் திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டமா ஓடி வந்திட்டேன்.  

                                         புல்லாங்குழல் என்ற மென்மையான காற்று வாத்தியத்தை வாசிக்கும் மனிதனுக்குள் இவ்வளவு வைராக்கிய கோபம் எப்படி இருக்கு எண்டு ,என்றாலும் பொது வெளியில் பெரும்பாலானா ஆண்கள் ரெம்ப நல்லவர்கள் போலதானே இமேச்சை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் ,நான் சத்தம் இல்லாமல் நழுவி வீட்டை வந்து ,ஹோல் மூலையில பிள்ளையார் சிலைக்கு முன்னால இருந்து கொண்டு சமயப் புத்தகத்தை எடுத்து கையில வைச்சுக்கொண்டு  ,

                                      " பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் , நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்ச் செய்   ....," எண்டு பிள்ளையார் காலுக்க நசிபடுற மூஞ்சூறை நினைத்துப் பாட , அம்மா பார்த்திட்டு ,

                                           " என்ன இண்டைக்கு பக்தி அமோகமா பரவசமா வழியுதே ,,நீ என்னவோ குழப்படி செய்துபோட்டு பம்முற மாதிரி கெடக்கே எண்டா  செய்தனி "  எண்டு சந்தேகமாக் கேட்டா, நான்

                                   " புல்லாங்குழல் மாஸ்டர்  வீட்டை சும்மா போனேன் , என்னவோ கதைவெளி வர  மாஸ்டர் அந்த அன்ரியை இண்டு அடிச்சுப் போடார் ,  அதை நான் பார்த்திட்டு ஓடி வந்திட்டேன் ," எண்டேன் ,

                                   " மாஸ்டர் அடிச்சவரோ ,,என்ன கதை சொல்லுறாய் ,,முதல் உனக்கு அதெல்லாம் என்னண்டு தெரியும் ?"

                                        எண்டு அம்மா கேட்டா ,நான் பாம்புக்கு காது இல்லாத கேள்வியில் தொடங்கி .. சண்டை வந்தது...மாஸ்டருக்கு கொதி வந்தது ... முழுவதும் சொல்லி முடிய அம்மா ,

                                                " இப்ப உனக்கு எதுக்கடா இந்த தேவை இல்லாதா கேள்வியும் ,சந்தேகமும், ஊர் சண்டையும் "

                                                    எண்டு பேசப்போராவே எண்டு நினைக்க.அம்மா என்னைப் பேசவில்லை, பதிலா அவாவும்

                                  " பாம்புக்கு காது இல்லை எண்டு உனக்கு எப்படி தெரியும் "
                                         
                                      எண்டு கேட்டா, நான் சயன்ஸ் புத்தகத்தில படிசேன் எண்டேன் ,அம்மா அதுக்கு ஜோசிசுப்போட்டு ,

                                              " அப்ப பாம்பு எப்படி இருட்டில தவளை பிடிக்குது "

                                              எண்டு கேட்டா, நான் அது ஒலி அதிர்வுகளிலும் , வெப்ப உணர்வு உணரிகள் என்ற கலங்கள் மூலம் கண்டு பிடிக்கும் எண்டேன் , அம்மா ஒண்டு மட்டும் சொன்னா

                                             " கோமதி ,பாவம், அவள் நல்லாப் படிச்சுக்கொண்டு கம்பஸ் போற அளவில  இருந்த நேரமே,  சிவநாஜகம்   மாஸ்டர் அரசாங்க உத்தியோகம் பார்கிரதால ,கோமதியிண்ட தகப்பன் பிறக்கிராசி  , இந்த மனுசனை செய்து வைக்க, மனுஷனுக்கு மூலக் கொதி வருமாம் ... இப்படி கன வீடுகளில் பிரச்சினை வருகுது, நீ  என்னத்துக்கடா தேவை இல்லாமல் அடுத்தவர் வீடுகளுக்குப்  போய் அனாவசியமா பாம்புக்கு காது இருக்கா , பாம்பு அந்தக் காதில தோடு போட்டிருக்கா எண்டு கேள்வி எல்லாம் கேட்கிறாய் ,,பேசாம உன் வேலயப்பார்துக்கொண்டு  இரடா  "

                                எண்டு சொல்லிக்கொண்டே போயிட்டா, அங்கே அந்த வீட்டில சண்டை அடிக்கடி நடக்கிறது அவாவுக்கு தெரியும் போல ,அல்லது எங்கட வீட்டுக்கு கீரை விக்கக் கொண்டுவாற கடகத்துக்க ஊர் விடுப்பு விண்ணாணம் சேர்த்து அடிக்கிக் கொண்டு வாற ப்ரேகிங் நியூஸ் குஞ்சரம் ஆச்சி சொல்லி இருக்கும் எண்டு நினைக்கிறேன்.....,

                       புல்லான்குழல் அன்ரியை நினைக்க பாவமா இருந்தது, சில வருடங்களின் முன் அந்த அன்டி தான் படிச்ச புத்தகங்கள் எல்லாத்தையும் ஒரு அறையில அலுமாரியில அடுக்கி வைச்சு இருந்தா, நான் அந்த இங்கிலிஸ் புத்தக தலைப்புகளை சும்மா படம் பார்த்துக்கொண்டு இருந்தேன்

                                    ஒரு நாள் அந்தப் புத்தகங்களில் ஒரு புத்தகத்தைத்  திறந்து பார்த்தேன் , " Biology: A Functional Approach " என்ற அந்தப் புத்தகத்தில சிவப்பு பேனையால பல இடத்தில அடிக்கோடு கீறி,பென்சிலாலா குறிப்பு எழுதி, மிகவும் ஆர்வமாக அந்த அன்டி படிச்ச அடையாளங்கள் அதில அழியாமல் இருந்தது. அன்டி படிப்பில புலி எண்டுதான் ஊருக்குள்ள பலர் சொல்லுவார்கள். ஆனால் கலியாணம் இடையில் வர படிப்பைத் தொடர முடியவில்லை

                        அந்தப்  புத்தகத்தில் ஒரு மயில் இறகு வைத்த ஒரு இடதில

                         " உன்னோடு ஒருநாள் ,,,,இல்லாடி ஒருநாளும் இல்லை ........"

                                         எண்டு ஒரு காதல் கவிதை எழுதி இருந்தது .  அந்த  அன்ரி நல்லாதான் படிக்கிற காலத்தில படிச்சு இருக்குறா போல இருந்தாலும் ,யாரையோ ,யாருக்கும் சொல்லாமல்  மனதோடு பேசிக்கொண்டே காதலித்து இருந்தா போலவும் இருந்தது. அதில பிழையும் இல்லை. இள வயதில் காதல் வரமால் குடுகுடுக் கிழவியான பிறகு அது வந்து என்ன பிரயோசனம் .

                                       நான் புத்தகம் பிரட்டிப் பார்க்கிரத்தை பார்த்திட்டு அந்த  அன்ரி அந்த புத்தகத்தை வேண்டி,கொஞ்சநேரம் பார்த்தா,அவாவின் கண்ணில இருந்து கண்ணீர் வழிந்து. அது முத்து முத்தா புத்தகதில டொக்கு டொக்கு எண்டு விழுந்திச்சு, நான் பயந்திட்டன்,

                          " ஏன் அன்ரி அழுகுறீங்க "

                                  எண்டு கேட்க நினைச்சேன்,ஆனால் அன்ரி வாய்விட்டு அளவில்லை முகத்தை ஏமாற்றதில் தொலைத்த மாதிரி வைத்துக்கொண்டிருக்க, கண்ணில இருந்து கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டு இருந்தது  ,கடைசியில் பொறுக்க முடியாமல்

                              " ஏன் அன்ரி அழுகுறீங்க "

                                            எண்டு கேட்டேன். அவா அதுக்கு பதில் சொல்லவில்லை, பதிலா மயில் இறகை கையில எடுத்துப் பார்த்தா , இன்னும் கொஞ்சம் டொக்கு டொக்கு விழுந்தது, அதுக்கு மேல இனி டொக்கு டொக்கு விழ கண்ணீர் இல்லை போல இருந்த நேரத்தில ,புறங் கையால கண்ணைத் துடைத்துப் போட்டு, அன்ரி புத்தகத்தை கையில விரிச்ச படியே வைச்சு ஜோசித்துகொண்டே ,

                                   " நாங்கள் எல்லாம் பொம்பிளையள் ,எங்களின் கனவு வெறும் கனவு, நீங்க எல்லாம் ஆம்பிளையள் உங்களின் கனவு எல்லாம் எதிர் கால இலட்சியங்கள், "

                             எண்டு சொல்லிப்போட்டு, மயில் இறகை அதே இடத்தில நோகாமல் வைச்சுப்போட்டு,என்னைப் பார்த்தா

                          " அன்டி ,,நீங்க நல்லா சிவப்புப் பேனையால அடிக்கோடு , பென்சிலால குறிப்பு எல்லாம் குறித்து ஆர்வ் ஆர்வமா படித்து இருக்குரிங்க,,நீங்க  மேற்கொண்டு படிக்க சான்ஸ் கிடைச்சு இருந்தா கட்டாயம் கம்பஸ் போய் இருப்பிங்க "

                             " ஹ்ம்ம்..அதுதான் நடக்கவில்லையே,,,அதுமட்டுமில்லை  ,,இன்னும் எவளவோ கனவுகளும் அதோட அடியுண்டு போயிட்டுது .."

                             " சொறி அன்டி,,நான்  உங்களை நினைக்க ,,நீங்க அழும்போது பாவமா இருக்கு "

                                  "  பரவாயில்லை,,நான் எப்பவுமே அழுவதில்லை,இன்று தான் எவளவோ வருசத்துக்குப் பிறகு அந்த மயில் இறகையும் ,,அந்த பக்கத்தில் நான் எழுதியதையும்  ,,ஹ்ம்ம், உண்மையைச் சொன்னால் நான் நானாக இருந்த போது  எழுதிய அந்தக் கவிதை வரிகளை வாசிக்க கண்ணீர் அடக்க முடியாமல் வந்திட்டுது .."

                       "  அந்தக்  கவிதை  நானும்  பார்த்தேன் ,,அது  உங்கள்  வரிகளா "

                       "  ம் , கலில் ஜிப்ரான் போல நானும் ஆங்கிலத்திலேயே கவிதை எல்லாம் எழுதி இருக்கிறேன் "

                                "     ஒ அப்படியா ,,எழுதி என்ன செய்திங்க "

                                "    எழுதிப்போட்டுக் ,,கிழித்து எறிவேன் "

                                   " ஏன் அப்படிச் செய்திங்க "

                                  " அதை யார் வாசிக்கப்போறாங்க ,,என்னோட  குரல் எப்பவோ அடங்கிப் போய்விட்டது "

                                   " ஒ ,இப்ப இந்தப் புத்தகத்தில் ,இந்த மயில் இறக்குக்கு ஒத்தடம் கொடுக்கும் கவிதை  நான் முழுதும் வாசிக்கவில்லை,,ரெண்டு வரி வாசித்தேன்  அதுவே  ஆடி  வெள்ளி தேடி எடுத்து  அள்ளி எறியுதே "

,,                                " ஹ்ம்ம் இது  என் இதய வரிகள் ,,இதயம் எழுதிய வரிகள் ,,கைகள் அதை பேபரில் எழுதியது,,இதயம் அந்த வரிகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தது "

                           " சரி,,அன்டி,,நான் போகப்போறேன் ,,இன்னொருநாள் கதைக்கவா உங்களோடு  "

                                 " ஓகே ,  நீ பயோ சயன்ஸ் படிக்கிறியா , இது அநோடோமி டெக்ஸ் உள்ள புத்தகம் ,  இந்தப் புத்தகம் உனக்கு வேணுமென்டா எடுத்துக் கொண்டு போ  "

                      எண்டு சொன்னா அன்ரி. எனக்கு தமிழில் அநோடோமி எழுதினாலே அதை வாசிக்க விளங்காது அதைப் பார்க்கவே கண்ணுக்குள்ள பூச்சி பறக்கும் , அதால அந்த ஆங்கிலப் புத்தகத்தை  நான் கொண்டுபோகவில்லை, இந்த சம்பவம் பாம்பால சண்டை நடப்பதுக்கு மூன்று அல்லது நாலு வருடங்களுக்கு முன் நடந்தது 

                                       பாம்பால சண்டை நடந்து , அதன் பின்  வந்த இடைப்பட்ட காலத்தில் நானே நிழலாக, இயங்கிக்கொண்டு வேறு பல விசியன்களில் அலைப்பட்டுக் கொண்டு இருந்ததால் ஊருக்குள் என்ன நடக்குது என்பதை விட நாட்டின் நிலைமையில் அதிகம் அக்கறையாக இருந்த காரணத்தால் இரவுகளில் மட்டும் நடமாடினேன்,நான் எங்கே போனேன் என்ன செய்யுறேன் எண்டு யாருக்கும் தெரியாது போல தான் நான் நினைச்சுக்கொண்டு இருந்த மாதிரி நிலைமை உண்மையில் இல்லை, என்னோட அம்மாவே

                       " நான் பொத்திப் பொத்தி வளர்த்த பொடியை ,,,எடுபட்டவங்கள் ......இழுத்துக்கொண்டு ......திரியுறாங்களே "

                                               எண்டு வாற போற சனத்துக்கு சொல்லி ஒப்பாரி வைச்சுக் கொண்டு இருந்து இருக்கிறா. எப்படியோ யாரும் என்னை எடுப்பட்டு வா எண்டு சொல்லி இழுக்கவில்லை,நானாதான் இழுபட்டுப் போனேன், அந்தக் குழப்ப நிகழ்வுகளாலும் ,பாம்பால சண்டை வந்து புல்லாங்குழல் வீட்டுப் பக்கமே சில வருஷம் நான் போகவில்லை

                                                ஒரு நாள் பின்னேரம் ,இருட்டுப் பட்ட நேரம் சந்தி சில்லறைக்கடை சுப்பிரமணியம் கடை வாசலில் இருந்த நேரம் புல்லான்குழல் அன்ரி, கடைக்கு சாமான் வேண்ட வந்தவா , காத்தவராயன் போல நெஞ்சை நிமிர்த்தி ,தோள்பட்டை விரிஞ்சு, கை எல்லாம் கறுத்து இருந்த என்னை சந்தேகமாப் பார்த்து ,

                               " மனோன்மணி அக்காவோட மகன் போல இருக்கே, ஆள் அடையாளம் தெரியாமா மாறிட்டீர் ,,இப்ப ஊருக்குள்ள உம்மட சிலமன் இல்லைப்போல இருக்கே ,,மன்னாரில நிக்கிரிர் எண்டு ஒருக்கா கேள்விபட்டேன்,,மெய்தான  அந்த செய்தி " ,

                                        எண்டு கிட்ட வந்து ஏதோ கன நாளாய் என்னகு சொல்ல வேண்டிய விசியம் இருக்கு போல சில விசியம் சொல்ல தொடங்கினா , அன்ரி முகத்தில்  அதிகம் மாறவில்லை , அவாவின் முன் தலைமயிர் கொஞ்சம் நரைத்து வெள்ளையாக இருக்க ,கண்ணைச் சுற்றி கருவளையம் போட்டு இருக்க, கொஞ்சம் மெலிந்து இருந்தா ,என்ன விசியம் சொல்லுங்க எண்டு கேட்டேன் 

                               " மாஸ்டர் உம்மை கண்டால் கையோட கூ ட்டிக்கொண்டு வரசொன்னவர் " எண்டா,

                                நான் " ஏன் " என்றேன் ,

                             " நீர் வீட்டை வாரும் அவரே சொல்லுவார் " எண்டா ,

                                          நான் " நாளைக்கு வாறன் " எண்டேன் ,சுப்பிரமணியம் வாயில சுருட்டை வைச்சு சுழட்டிக்கொண்டு என்னை சந்தேகமா பார்த்துக்கொண்டு இருந்தார் ,

                                                நான் வீட்டை வந்து மறந்து போன புல்லான்குழல் எப்படி இப்ப இருக்குறார் எண்டு அம்மாவிடம் கேட்டேன் ,அம்மா

                                         " வாத்திக்கு ஒரு கையும்,காலும் இழுத்துப் போட்டுது ,வேலைக்கு பென்சன் போட்டுட்டு  வீ ட்டோட இப்ப ,கோமதி தான் முறிஞ்சு முறிஞ்சு அவரை இழுத்துப் பறிச்சுப் பார்க்கிறாள் "

                                                  என்றா ,நான் கொஞ்சம் ஜோசித்தேன் , பாம்பு வந்து படம் எடுத்து ஆட்டிப் போட்டு களைப்பில சுருண்டு விழற மாதிரி இருந்தது அம்மா சலிப்பாக அதைச் சொல்ல.  புல்லான்குழல் மாஸ்டரை , கோமதி அன்ரியை நினைக்க பாவமா இருந்தது ,

                                 " கை இழுத்தா அவர் எப்படி இனி புல்லான்குழல் வாசிக்க முடியாதே "எண்டு அம்மாவிடம் சொன்னேன் ,

                                      அம்மா  "   கண்டறியாத புல்லாங்குழல் " எண்டு கோவத்தில சொன்னா. 

                                           அடுத்தநாள் காலையில நான் புல்லான்குழல் வீட்டை போனேன், போய் வெளிய நிண்டன் புல்லான்குழல் அன்ரி  வந்து ,," இடுப்பில ஊமல்க் கொட்டை ஒண்டும் இல்லைதானே, எதுக்கும் வெளிய நில்லடா , ஒண்டு கிடக்க ஒண்டு நடந்தா எல்லாரும் ஒரே நேரத்தில எமலோகம் போக வேண்டி வந்தாலும் வரும்,,,,,,,, " எண்டா, நான் பேசாம வாசலிலேயே  இருந்தேன், வெளிக்கதவில நிண்டு பார்க்க புல்லாங்குழல் எல்லாம் சுவரில தொங்க புல்லான்குழல் ஈசிச்  சேர்ல படுத்து இருந்தார், என்னைப் பார்த்து சிரித்தார் ,பாம்புக்கு காது இல்லை எண்டு சொன்னார் ,

                                  " இப்பத் தான் கன நாட்களா புத்தகம் படிக்கிரன் அதில பாம்புக்கு காது இல்லை எண்டு எழுதி இருந்தது "

                                              எண்டு சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவருக்கு இருமல் வர அதோட சளிபோல வாயால வடிய , புல்லான்குழல் அண்டி சேலைத் தலைப்பால அதைத் துடைத்து விட்டா ,நான் அன்டியின் முகத்தைப் பார்த்தேன்,அதில ஒரு வித அனுதாபம் இருந்தது , நான் ஒண்டும் சொல்லவில்லை பேசாமா வந்திட்டன் ,வந்து பழையபடி போயிட்டன் . அதுக்குப்பிறகு நானே ஊரில இல்லை,,,,,,

                               சில வருடம் முன் " லங்கா சிரி " இணையதளத்தில் இலங்கையில் என்ன நடக்குது எண்டு எப்பவுமே பார்ப்பது போல ,முக்கியமா ஊரில யார் யாருக்கு விசா கிடைத்தது எண்டு அறிய  மரண அறிவித்தல் பார்க்கும் போது, அதில பதின் மூன்றாம் வருடாந்த நினைவு அஞ்சலி படம் போட்டு ,

                                           " இமைப் பொழுதும் என்னை மறவாமல் , அனுதினமும் அன்பிலும் பாசத்திலும் என்னை ,கருணையோடு வாழ வைத்த என் கணவருக்கு .."

                                          எண்டு வருடாந்த நினைவு அஞ்சலிக் கவிதை போல ஒரு நீண்ட கவிதை அன்பொழுக  எழுதி, முடிவில்   

                           " இப்படிக்கு உங்கள் அன்பை என்றும்  மறவாத அன்பு மனைவி கோமதி "

                                                   எண்டு எழுதி இருந்தது , அந்தப் படத்தில புல்லங்குழல் மாஸ்டரின் இளமையான படம் போட்டு, அதன் இரண்டு பக்கமும் இருண்டு குருவிகள் கொஞ்சிப் பேசும் படம் போடிருந்தது.

.
21-02-14