Wednesday, 18 March 2015

நெஞ்சோடு பதிவு செய்தாய்..

வாடைக் காற்றுக்கு
வாழ்க்கைப்பட்ட
மணக் கோலம்
முடிய முன்னமே
அடங்க மறுத்து 
புறப்பட்டுக்கொண்டிருந்த
அழுக்கான
செம்மண் புழுதியில்....
அவசரத்தில்க்
குறுக்க வந்த மாதிரி
மேகங்களின்
நிறைவேறாத
ஆசையின்
கோபம் போல
நேரம் கெட்ட நேரத்தில்
அழுதுகொண்டே
இறங்கியது
கோடை மழை,
ரசிக்கத் தெரியாமல்
சேற்றில் விளையாடி
வெள்ளம்
போட்டு முடியாத
நீர்க் குமிழிகளைத்
தேடித் தேடி
உடைத்தேன்
நான்.....
கைகளை
முடிந்தவரை
அகலமாக்கி
வான் நோக்கி
விரித்து
முகத்தில் விழுந்து
கன்னத்தில் வழிந்த
துளிகளை
துடைக்க மனமிலாமல்
நெஞ்சோடு
பதிவு செய்தாய்
நீ
பிற்காலத்திலும்
மழைக்கு
குடையாகவும்
வெயிலுக்கு
செருப்பாகவும்
நீ
காத்திருக்க
அலட்சியத்தோடு
அலைந்தே
புயல்களை விலைக்கு
வேண்டி
வீணாகிப் போனேன்
நான்.
நாவுக் அரசன்
ஒஸ்லோ 17.03.15

Tuesday, 17 March 2015

1940 ஆண்டு மொடல் ரேஸிங் சைக்கிளுடன்..

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் ,முக்கியமான வீதியான கால்ஜோஹான்ஸ் காத்தாவில் உள்ள இந்த சிலை ,1940 இல் இருந்து 1945 வரை தொடந்து ஐந்து வருடம் நோர்வே தழுவிய சைக்கிள் மிதிப்புப் போட்டியில் முதலாவதாக வந்த குன்னர் சொன்ஸ்டபிசன் என்ற இந்த வீரனின் சைக்கிகிள் சம்பியன் ஓடின 1940 ஆண்டு மொடல் ரேஸிங் சைக்கிளுடன் நிக்கும் வெண்கலச் சிலையைச் சென்ற கிழமை சாம்சுங் கலக்ஸ்ஸி என்ற என் மஹாலட்சுமி போன்ற மொபைல் போனில் எடுத்தேன்.
                                         நோர்வே அரைவாசி வருடம் குளிர் உயிரை எடுக்கும் நாடு,கோடைகாலத்தில் மட்டும் சைக்கில் ஓடலாம், அதைவிட ஒஸ்லோ நகரம் வாழ்க்கை போல மேடு பள்ளம் அதிகம் உள்ள பிரதேசம், ஆனாலும் என்னைபோல இங்கே சைக்கில் ஓடுவதில் மிகவும் ஆர்வம் உள்ளவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்,கோடையில் வீதிகளில் வயது,பால் வேறுபாடு இன்றி இந்த இரண்டு சில்லு இரும்புக் குதிரைகள் பாய்ந்து போவது இயல்பான காட்சி.
                                          கழுத்தில கமராவைக் கொழுவிக்கொண்டு திரியும் " ப்ரோபோசனால் ஸ்டில் போட்டோ கிராபர் " போலப் பல படங்கள் சரிஞ்சு சுழண்டு, நெளிஞ்சு சுழண்டு ,உருண்டு பிரண்டு ,விழுந்து கிடந்தது பரதநாட்டியம் ஆடி இந்த ஒரு சிலையையே ஒரு மணித்தியாலம் பல கோணங்களில் ,முன்னால ,பின்னால ,பக்கவாட்டில் , என்று பாலு மகேந்திரா போலக் கனவு கண்டு கேவலம் என்னோட மொபைல் போன் கமராவில் எடுத்தேன். அதில வந்த ஒரு நல்ல " டைமென்சன் டீட்டேயில் ", " கொன்ச்பெட் டெப்த் " என்று " ப்ரோபோசனல் ஸ்டில் போட்டோ கிராபர் " சொல்லும் விசியங்கள் தற்செயலாகப் பின் பக்கமாக எடுத்த நிலையில் கமராவிற்குள் அகப்பட்ட படம் இது என்று நினைக்கிறேன்.
                                      நேற்று பெய்த இலற்றோனிக் தொழில் நுட்பம் மழையில் இன்று எங்கள் உள்ளங்கையில் உள்ள இன்றைய டிஜிட்டல் உலகத்தில், காளான்கள் போல முளைச்ச இன்பில்ட் கமரா உள்ள மொபைல் போன் வந்தபிறகு தவிச்ச முயல் அடிச்ச நிண்டவன் வந்தவன் போனவன் எல்லாரும் போட்டோக்கிராபர் போல படங்கள் தாறுமாறா கிளிக் கிளிக் என்று கிளிக்கோ கிளிக்கி , அதுகளை வளவுக்குள்ள ஆரும் வரலாம் ஆரும் போகலாம் என்று படலை திறந்து விட்டுக் கிடக்கும் சமூகம் வலை வீசிக்கொண்டிருக்கும் இன்டர்நெற்றில் எல்லாருக்கும் வேலிக்கு மேலால போட்டுக் காட்டி " பழைய பொஞ்சாதி கை வெல்லத்தைப் பார்க்கிலும் புதுக் காதலியின் கைத் தவிடு ருசிபோல " அமர்களமாக்கி அதிர வைக்கிறார்கள்.
                                       என்னதான் நாங்கள் படம் எடுத்தாலும் ,பல வருடமா புகைப்படக் கலையைப் படித்து, கைகளால் கமராவின் கழுத்து லென்ஸ்சைத் திருகித் தூரம் பார்த்து, தொட்டுத் தடவி எட்ட வைச்சுக் கிட்டப் பார்த்து பிரேம் பிடிச்சு ,உள் நுழையும் ஒளியின் அளவை அப்பாச்சரில் அளந்து விட்டு , கமரா கண்ணடிக்கும் சட்டர் பீட் வேக இமைகளைச் சரி செய்து, நிழல்களால் கமராவின் விழிகளுக்கு மஸ்காரா மை பூசி , நிறங்களைத் தேர்ந்தெடுத்து லிப்ஸ்டிக் தடவி, பளிச் பளிச் என்று பிளாஷ் மின்னல் அடிச்சு , மழை பெய்த மாதிரி விரல்களால் ரீலோட் செய்து " மனுவல் செட்டிங்கில் " உண்மையான கலை அம்சமுடன் ஸ்டில் படங்கள் எடுக்கும் " ப்ரோபோசனால் ஸ்டில் போட்டோ கிராபர்களின் " கலைப்படைப்புகள் செலுலோயிட் திரையில் இல் விழுவது போல தலைகீழாக நின்றாலும் நம்மைப் போன்ற அரை அவியல்களால் அவர்கள் போல சொல்லிவைச்சு எடுப்பது கஷ்டம்தான்.
,
.

Monday, 16 March 2015

ஸ்காபுரோ பெபையர் - ஆற்றம்கரையின் அலை

பருவ வயதில் அடக்கி வைக்க முடியாமல் பாலுணர்வு ஹோர்மோன்கள் தொடக்கிவைக்க மன்மதனின் ஐந்து பாணங்களும் பாயும் நேரம் உலகம் எங்கும் காதலர்கள், தங்கள் காதலை ஆண் பெண்ணிடமோ,அல்லது பெண் ஆணிடமோ சொல்லும் விதங்கள் ஏறக்குறைய நாடுகளின் எல்லைகளைத் தாண்டியும் ஒரே மாதிரி தான் ரொமாண்டிக் கலந்த எதிர்பார்ப்புகளுடன் இருக்குது,
                                           16 வயதினிலே படத்தில வரும்" செந்தூரப்பூவே செந்துரப்பூவே " பாடல் எவளவு காதல் விரகதாபத்துடன் தென்றலைத் தூது விட்டு ஒரு செய்திக்குக் காத்திருக்கும் ஒரு இளம் கிராமத்துப் பெண்ணின் ஏக்கத்தை சொல்லுதோ அதே போல, Scarborough Fair என்ற இந்த ஸ்கொட்லாந்து நாடுப்புற நாட்டார்பாடல் மத்தியகால ஆங்கிலத்தில சொல்லுது. அவளவுதான் வித்தியாசம்,
                                            மற்றப்படி ballad ஸ்டைலில் இருக்கும் இதன் தாளநடையை பலர் பலவிதத்தில பாடியுளார்கள் ,முக்கியமா இதன் வாசனங்கள் "typical of the middle English period " ஆங்கிலத்தில் இருக்கும் இந்தப் பாடலை செல்டிக் யாழ், செல்லோ வயலின் , தம்பரின் போன்ற வாத்தியங்களுடன் ஐரிஸ் மக்கள் பாடுகின்றார்கள். இந்தப் பாடலில் வரும் .Between the salt water and the sea strand என்ற வரியில் வரும் strand என்ற சொல்லு நோர்வே நாட்டு நோர்க்ஸ் மொழியில் உள்ளது அதுக்கு அர்த்தம் கடல்,ஆறு போன்றவற்றின் கரை 
                                    ஒரு கிராமப் பெண்ணின் மீது காதலில் விழுந்த ஒரு இளைஞன் ,அந்தப் பெண்னின் காதலை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் "நடைமுறைக்கு ஒத்துவராத " செயல் ஒன்று அந்தப் பெண் செய்து காட்ட வேண்டும் எண்டும் , "தனக்கு ஒரு ஹம்பரிக் ஷர்ட் தைத்து தரவேண்டும்,ஆனால் அதில துணிகள் வைத்து இனைக்கக்கூடது ,அப்புறம் அதை தண்ணி இல்லாத கிணத்தில தோய்த்து தரவேண்டும் எண்டு , வில்லங்கம் பிடிச்சு " கல்லில நார் உரிச்சுதா " அப்பத்தான் உன் காதலை ஏற்றுக்கொள்வேன் இளம் பெண்ணே என்பதுபோல சொல்லூறான்.
                                         சக்கரவள்ளிக் கிழங்குபோல சிகப்பாக இருக்கும் அந்தப் பாவப்பட்ட இளம்பெண்ணும், தான் அதுகள் எல்லாத்தையும் செய்துவிட்டேன், " Scarborough Fair, சந்தைக்குப் போகும் Parsley, sage, rosemary, thyme என்ற வாசைனை இலை,குழை ,தளைகளே, என் கண்ணாளன் சொன்ன எல்லாத்தையும் நான் செய்துவிட்டேன், என் கண்ணாளனை கண்டால் வீட்டுக்கு வீடுக்கு வந்து என்னை கலியாணம் செய்ய சொல்லுங்க " என்று," tell him to come and he'll have his shirt And he shall be a true love of mine " என்று மனம் உருகி, வஞ்சகம் இல்லாமல் கிராமியத்தனமாக ஆற்றம்கரையில் அலைபாய்ந்து தூது விடுகின்றாள ,
                                       அந்தக் கண்ணாளன் வந்து கலியாணம் காட்டினானா ,அல்லது திருநெல்வேலி இருட்டுக்கடை "அல்வா" கொடுத்திட்டுக் கம்பி நீட்டிணாணா எண்டு இந்தப் பாடலில் இல்லை. எனக்கும் ஐரிஸ் மொழி வரலாறு தெரியாது. ஆனால் இதுவும் காதவர்ராஜன்-ஆரியப்பூமாலை தமிழ் வரலாற்று காதல் நாடகம் போல, ஒரு தொடர் நாடகமாக middle English period இல் இருந்திருக்காம்.
                                            எனக்கு மிகவும் பிடித்தபாடல் "Scarborough Fair" என்பதால் மிகவும் மனதிருப்தியாக சில வருடங்களின் முன் " pan flute " என்ற லத்தின் அமரிக்க பழங்குடியினர் வாசிக்கும் புல்லான்குழல் போன்ற காற்று வாத்தியத்தில் அவர்கள் வாசித்த, CD ஒன்று வாங்கி இருந்தேன் ,அதில இந்த பாடலும் இருந்தது ,அதை எப்போதும் கேட்பேன் , பஸ்சில ,ட்ரெயினில் வேலைக்கு போகும்போதும் வரும்போதும் சக்கரவள்ளிக் கிழங்குபோல சிகப்பாக இருக்கும் இளம் பெண்களைக் கண்டாள் சத்தமில்லாமல் வாயிற்குள் " ஹம் " பண்ணிப் பாடுவேன்.
                                முக்கியமா உலகப் புகழ் பெற்ற பாடகர் டேவிட் வித்தாகர் என்ற ஜெர்மன் நாட்டு பாடகர் பாடிய வேர்சனும் என்னிடம் இருந்தது, அதில இருந்து கிளாசிக்கல் இசை நுணுக்க ஐடியாவை உருவி எடுத்து , இந்தப் பாடலை நானே பிண்ணனி ரிதம் கிட்டார் வாசித்து,சின்னமேளம் வாசித்து  கிளாசிகல் ஸ்டைலில் , அக்கொச்டிக் கிட்டாரில முடிந்தளவு ஒரு " கிளாசிகல் பிங்கர் பிளக்கிங் ஸ்டைல் " என்ற இசைக்கும் முறையில் விரல்களால் மீட்டி கிட்டாருக்கே நோகாமல் நானும் வாசித்துள்ளேன்
https://www.youtube.com/watch?v=TmBNkO4w2Ac

Sunday, 15 March 2015

விழுந்த பூக்களின் வாசம்..

புறக்கணிக்கப்பட்டிருக்கும்
வாசலெங்கும்
வெயில் விழுந்து
இன்னும்
ஈரம் உலராத 
புழுதியின் விரிப்பில்
மிச்சமாயிருக்கிறது
ஒரு
கவிதைத் தொகுதி.....
சுழல் காற்றின்
தாண்டவத்தில்
தவறி
விழுந்த பூக்களின்
வாசம்
அவைகளின்
நினைவுகளை
உயிர்வாழ வைக்க
மரத்துக்குத்
தேவையாக இருக்கிறது....
புயல்
வீசத் தொடங்கிய
பொழுதில்
பாதிக்கப்பட்டு
மலராமலே
சின்னாபின்னமாகி
விடுமோவென்று
அச்சப்படுவது
போலிருந்தது
மொடுக்களுக்கு .
உதிர்ந்து விழுந்த
இலைகளும்
மலர்களும்
உரையாடுவதைக்
கேட்காமல்
வேடிக்கை
பார்த்து விட்டுச் செல்லும்
திசைகளின் காற்று
இன்னுமொருமுறை
விருட்சத்தை
சுழற்றுகிறது..
மலர்களின்
அவல
ஓசைகள்
கேட்டிடக் கூடாதென
காதுகளை மீண்டும்
அடைத்து
கண்களை மூடிவிடுகிறது
அதிகாலைப்
பூச்சிகள்.
.

வர்ஜீனியா நிக்கலோய் நிங்கி ...புத்தம் புதுக் காலை!

இந்த ஹொலண்ட் நாட்டு வெள்ளைப் பெண்மணி நின்கி (வர்யீனியா நிக்கொலோய்(?) ) இளையராஜாவின் ஒர்க்ச்றாவில் என்பதுக்களில் இசை இயற்கையாய் இருந்த காலத்தில் இதயம் வரை இறங்கி இசை தந்த எங்கள் இளைய ராஜாவின் ரேக்கொர்டிங்கில் கிட்டதட்ட மிகப் பிரபலமான இருபது பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்தவா , 

வெஸ்டர்ன் கிளாசிகல் முறையில் புல்லாங்குழல், வெஸ்டேர்ன் கிளாசிகல் சிம்பொனி இசை, வெஸ்டர்ன் கிளாசிகல் பியானோ படித்த மேதையான நிங்கி ,இந்திய இசையில் மயங்கி இந்தியா வந்தவா , தமிழ் நாட்டு சுற்றிப் பார்த்து இளையராஜாவின் புல்லாங்குழல் தமிழ் சினிமா பாடல்களில் அதிசயிக்க வைத்தது கண்டு அவரிடம் போய் அவரின் இசை அமைப்பில் வாசிக்க வேண்டும் எண்டு கேட்டு இருக்கிறா.

அந்த நேரத்தில் சுதாகர் என்பவரும்,பின் நாட்களின் அருண்மொழி என்ற நெப்போலியன் செல்வராச் ராஜாவுக்கு ஒர்க்ச்றாவில் புல்லங்குழல் வாசிதவர்கள் இருந்தும் , இளைய ராஜா நின்கிக்கும் பல பாடல்கள் வாசிக்க கொடுத்தார் ,

அதில் "அலைகள் ஓய்வதில்லை " படத்தில் வரும் "புத்தம் புது காலை வரும் " பாடல், "மூன்றாம் பிறை" படத்தில் சுதாகருடன் சேர்ந்து " பூங்காற்று " என்ற பாடலும் வேறு பல பாடல்களுக்கும் வாசித்து இருக்கின்றா ." ஜானி " படத்தில வார ராஜாவின் "ஆசைய காதில தூதுவிட்டு " பாடலில் நின்கி ,ராஜா கொடுத்த நோட்ஸ் சோடா தன்னோட கொஞ்ச நோட்ஸ் இசையையும் இனைதாவாம், ராஜ சிரிச்சுப் போட்டு ,ஒண்டும் சொல்லவில்லையாம் .

ராஜாவின் ஆஸ்தான புலான்குழல் ஆர்டிஸ்ட் களில் ஒருவரான முதல் மரியாதை புகழ் சுதாகர் பல வெஸ்டர்ன் டெக்னிக்குகள் அவாவிடம் இருந்து கற்றதா ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்,

அந்த " நின்கி என்ற female classical flautists வெள்ளைக்கார அம்மணிக்கு எப்பவுமே நான் நன்றியுடையவன் " எண்டு ஒரு TV பட்டியில் சொன்னார் . நின்கி "one of the top 10 Flutists at that time" என்ற "லெவலில் " தமிழ் கலாசார அடையாள வாத்தியமான புலான்குழல் இல் தமிழ்நாடில கலக்கி இருக்குறா !

நின்கி மிகவும் திறமை சாலி , பாடல் இசை அமைத்து, ரெகார்டிங் தொடங்கமுன் ,மற்ற ஒர்கேச்டிரா வாத்தியகாரர்கள் இளையராஜா எழுதிக்கொடுத்த "நோட்ஸ்" களை வைத்து இசை அமைப்பில் நேரம் எடுத்து பிரக்டிஸ்ட் பண்ணிக்கொண்டு இருந்தபோது, நின்கி அவாவோட புலான்குழல் " ஸ்கோர் நோட்ஸ்" ஐ இளையராஜவுக்கு உடனையே,அழுத்தம் திருத்தமாக,வாசித்துக் காடிப்போட்டு பேசாம,ஒரு ஓரமாக இருந்து ஆங்கில நாவல் வாசிப்பாவாம், சிலநேரம்" ரெகார்டிங் ஸ்டுடியோ"வுக்கு வெளியபோய் ,சின்னப் பையன்களுடன் "பல்லாங்குழி" விலாயாடுவாவாம்.

நின்கி ஹொலண்ட் நாட்டுகாரகளுக்கே உரிய மெலிந்த தோற்றம் உடைய,உயரமான பெண்மணி, மசால் தோசை , சட்னி சாம்பாருடன் விரும்பி சாப்டுவாவாம் ,இந்திய தமிழ் கலாசாரப்படியே இளையராஜாவின் ரேகொர்டிங் ஸ்டுடியோவுக்கு சேலை கட்டி , சாந்துப் போட்டு வைத்து கொண்டுதான் ரேச்ர்டிங்குக்கு வருவாவாம் !

நின்கி "தான் போன பிறப்பில இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும் " எண்டு அவாவோட இளையராஜாவின் ஆர்கிஸ்ராவில் வாசித்த இசைகலைஞ்சர்களுக்கு சொல்லி சிரிபாவாம் ,

நின்கி ஒரு கட்டத்தில ராஜாவின் ஆர்கேச்ற்றாவில் இருந்து விலத்தி,பழையபடி ஹொலண்ட் போயிட்டா ,காரணம் ஒரு சக தமிழ் இசைகலைஞ்சரை காதலித்ததாகவும் , ஏற்கனவே திருமணமான அவர், நின்கிங்கு பொய் சொல்லி அவாவை "பயன்படுத்தியதாகவும்" சொல்லுறார்கள்(?), சரியா தெரியாது!

நின்கி என்ற வர்ஜினியா நிகொலோய் என்ற இந்த ஹோலந்த் ( நெதர்லாந்து ) நாட்டு வெள்ளைகாரி தமிழாநாடு வந்து ,தமிழ் சினிமாவில், இளையராவின் இசையிட்கு புல்லாங்குழல் வாசித்தது அந்த மூங்கில்கள் தவம் இருந்து செய்த புண்ணியதின் பலன் ,வேற என்ன?............

ஒரு கட்டத்தில் யாருக்குமே தன் அடையாளத்தை சொல்லாமல் ,தமிழ் சினிமா இசையில் தன் பங்களிப்பை பதிவு செய்த நின்கி என்ற வர்யீனியா நிக்கொலோய் ஒரு தடயமே இல்லாமல் ஐரோப்பா போய் ,தன் தாய் நாடு ஹொலண்டில் நோய் வாய்ப்பட்டு இறந்துபோய் விட்டதாகவும் சொல்லுறார்கள் !
.


நாவுக் அரசன்
ஒஸ்லோ.

Saturday, 14 March 2015

அலங்கார நகரம்..

எழுதுவதுக்கு எதுவுமே இல்லாத நேரத்தில் என்னத்தை இழுத்துப் பிடிச்சு உக்கார வைத்துக் கவிதை எழுதுவது என்று வெறுப்பாக இருக்கும். சில நாட்கள் முன்னர் நடுவிரவில் வேலை முடித்து வரும் போது என்னோட அப்பார்மென்ட் உள்ள கட்டிடத் தொகுதி, அதுக்கு உள்ளே போகும் நிகழ்வு,போன உடன கொம்புடரை திறந்து பார்ப்பது, அலுத்துப்போய் கிட்டாரை கையில் எடுத்து ரெண்டு தட்டு தட்டுவது, அதுவும் அலுத்துப்போய் தலைமாட்டு கால்மாட்டு தெரியாமல் சுருண்டு கட்டிலில் விழுவது போன்ற சுவராசியமற்ற எப்பவுமே நிகழும் சம்பவத்தை கவிதை மொழியில் எழுத முயற்சிக்கலாமே என்று தோன்றியதின் துன்ப விளைவே இது....
.
மனிதர்கள் 
கவனிக்க மறந்தாலும் 
தன்னுடைய 
பிரகாசமான பக்கத்தை 
மட்டுமே உலகிற்குக் 
காட்டுகிறது 
மாடிக் குடியிருப்புக் 
கட்டிடம்.. 

வெளிக்கதவைத்
அலட்சியமாகத் 
திறந்து 
உள் நுழையும் போதே 
வெளி உலகம் 
கலந்துரையாடலிருந்து 
விடைபெறும்... 

படிகளில்
வலுவாகக் காலுன்றி 
மேலேற 
மனசாட்சியோடு 
பேசிக்கொண்டே 
சந்தோஷங்கள் 
மெதுவாக
படிப்படியாக 
கீழிறங்கி விடும் 

உள்க் கதவில் 
திறப்புப் போட 
உறவுகள் 
வெளியே தள்ளப்பட்டு 
சமாளிப்பு 
மறுபடியும் குறுக்கு 
வழியிலே 
மவுனம் சிந்தும்... 

இதயம் முழுவதையும் 
காதலுக்காக 
கண்ணீரால் நிரம்பிவிட்டு 
ஜன்னல் வழியாகப் 
புன்னகை 
செய்து கொண்டிருக்கும் 
அலங்கார நகரம் 

பொய்யான 
வலைச் சமூகத்தால் 
வளர்க்கப்பட்ட 
கணனியின் 
திரையைத் திறத்தாலும் 
நாலு பேர் 
உருவாக்கியுள்ள 
நாடகத்தில் 
யாருமே தமது 
இதயத்தைத் 
திறப்பதில்லை.....

கிட்டாரில் 
எதோவொரு பாட்டை 
ஏதோவொரு மெட்டில் 
வாசிக்க 
அடைத்து நிரப்பி 
மெல்லிசையாக மாறி 
விழிப்புணர்வு
நின்றுவிட

சோம்பலோடு 
அமைதியில் தள்ளாடும் 
உலகத்தை 
நமக்கேற்றபடி 
நிர்ப்பந்தப்படுத்த முடியாமல் 
இரவு 
முழுவதும் 
காணாமல் போய்விடும்.
.நாவுக் அரசன்
ஒஸ்லோ 13.03.15

சாகனே தேவாலயம்- ஒஸ்லோவின் கதைகள் 003

கோடை காலத்தில் சைக்கிளில் நான் வசிக்கும் உயரமான புறநகர்ப் பேட்டையில் இருந்து கீழே இறங்கி வளைந்து வளைந்து செல்லும் பாதையில் ஒஸ்லோ நகரத்துக்குப் போகும் வழியில் சாகனே என்ற இடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் இந்தத் தேவாலயத்துக்கு போறவழியில் ஒரு கும்பிடு போட்டு விட்டு சைக்கிளில் ஓடிக்கொண்டே போவது.

                                                            நேரம் கிடைக்கும் ஒரு நாள் ராஜகுமாரன் நூல் ஏணியில் ஏறி ராஜகுமாரியை நோகாமல் கைத்தாங்கலாக  இறக்கி வெள்ளைக்குதிரையில் கடத்திக்கொண்டுபோய் கலியாணம் கட்டும் கதைகளில் வரும் மாளிகை போல இருக்கும் இந்த இடத்தை கொஞ்சம் உள்ளிட்டுப் பார்க்க வேண்டும் என்று எப்பவும் நினைப்பது,

                                   ஒஸ்லோவில் உள்ள மற்ற தேவாலயங்களில் இருந்து மாறுபட்ட ஒரு கட்டடக்கலை வடிவில் உள்ள இந்தக் கோவிலை ஆறுதலாக கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க எப்பவுமே நினைப்பது ஒரு வெயில் எறிக்கும் நாளில் கர்த்தரின் கருணையால் சாத்தியம் ஆகியது.

                              விசுக் என்று என்னோட சைக்கில் பறக்கும் போது சில செக்கன் மட்டுமே விசுக் என்று முகம் கொடுக்கும் இந்த சாகனே தேவாலயம் இருக்கும் இடமே, அவசரமான, அலங்கார ஒஸ்லோ நகரத்தின் அபரிமிதமான நவீன நெரிசல்களில் இருந்து கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக .

                                                நகரத்தின் விளிம்பில் , ஒஸ்லோவை ஊடறுக்கும் ஆர்கிஸ் எல்வா நதியின் கரையில் இருக்கும் குன்னர் லொக்கா என்ற ஜெர்மன் பெயரில் இருக்கும் சின்ன டவுனின் நெத்தியில் வைச்ச குங்குமப் பொட்டுப்போல இருக்கும் சாகனே என்ற இடத்தில இருக்கு.

                             குன்னர்லொக்கா என்ற பெயரே ஒஸ்லோவில் உள்ள ஒரே ஒரு ஜெர்மன் எழுத்தில் உள்ள பெயர்,அது எப்படி இங்கே வந்தது எண்டு எனக்கு தெரியவில்லை,ஆனால் குன்னர்லொக்கா பெயரில் உள்ள  ü  என்ற எழுத்து நோர்வேயின் நோர்க்ஸ் மொழியில் இல்லை .

                                                    குன்னர் என்பது குறி பார்த்துச் சுடும் இராணுவ வீரர்களுக்கு மத்தியகால ஐரோப்பாவில் பாவிக்கப்பட்ட பெயர்,  லொக்கா என்பது  முகாம் அல்லது பண்டகசாலை என்ற நோர்வே மொழிப் பெயர் .ஒருவேளை ஜெர்மன் இராணுவ வீரர்கள் அந்த இடத்தில முகாம் அமைத்து நோர்வே நாட்டுப் பெண்களுக்கு பண்டகசாலையில் ரோமன்ஸ் செய்து

                                                       " இச் லைபே டிச், நெய் வர்லேசன், அல்லாஸ் கிழா அல்லாஸ் வுட்ன்டர்பார்  "

                                                                  என்று டொச்சில் சொல்லி வாழ்வு கொடுத்த இடமாக இருக்கலாம் போல

                                        தேவைதைகளின் அட்வென்ச்சர் கதைகளில் வருவது போல உள்ள சாகனே தேவாலயம் பதினெட்டாம் நுற்றாண்டில் ஆர்கிஸ் எல்லா நதியின் தண்ணியை மறித்து அதில நீர்வலு மூலம் இயந்திரங்களை இயக்க வைத்து,உடல் வலுவில் முறிந்து முறிந்து எலும்பை உறைய வைக்கும் குளிரில், பல நுற்றாண்டுகள் முன்னம் வாழ்ந்த எதையும் தாங்கும் இதயமுள்ள உழைப்பை உயிர் வரை நேசித்த நோர்வேயிய மக்கள்,

                                                                 துணி செய்யும் தொழிற்சாலை, ஆணியில் இருந்து ரெயில் தண்டவாளம்  போன்ற இரும்பு பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை போன்றவற்றை உற்பத்தி செய்த உழைக்கும் வர்க்க மக்கள் வாழ்ந்த இடமான சாகனையில் இந்த சாகனே தேவாலயதை கடவுள் நம்பிக்கை உள்ள அந்த தொழிலார்கள் தேவனோடு வாழ்பவர்கள் தேவப் பிள்ளைகள் என்ற நம்பிக்கையில் மத்தியகால நோர்வேயின் கிறிஸ்தவ நம்பிக்கையில் கட்டி இருக்குறார்கள்.

                                       நோர்வேயிலேயே சாகனே தேவாலயம்தான்  கோத்தே ஸ்டைல் அற்கிடேக்சரில் கட்டப்பட்ட முக்கியமான தேவாலயம் ,இந்த தேவாலயக் கோபுரத்தை நியோ கோத்தே ஸ்டைல் என்று சொல்லுறார்கள், வடக்கு ஐரோப்பாவில் இப்படி கோத்தே ஸ்டைல் கட்டிடக்கலை யில் கட்டப்பட்ட தேவாலயங்களில்  சாகனே தேவாலயம் அதன் உள்ளே உள்ள பைன் மரத்தால் செய்யப்பட்ட எண்கோண வடிவ பலிபீட மேடை போல வேற எங்கேயும் இல்லை என்கிறார்கள்.

                                இந்தத் தேவாலயத்தின் கருவறையில் ஜேசுநாதர் சிலுவையில் இருந்து கழட்டி இறக்கப்படும் கிறிஸ்டியன் பேரன் என்ற ஒரு நோர்வே நாட்டு புகழ்பெற்ற வரைஞ்சரின் ஒரு ஓவியம் மட்டுமே தொங்கவிட்டுள்ளார்கள்.மிக மிக அரிதாக Hollenbach organ என்ற மரத்தால செய்யப்பட்ட ஓர்கன் வாத்தியம் உள்ளது,நோர்வேயில் இந்த ஒரே ஒரு தேவலாயதிலையே அது உள்ளதாம்,அது 1891  இல் இருந்து இப்பவும் வாசிக்கப்படுவது ஒரு அதிசயம்.

                               கிறிஸ்தவ நம்பிக்கை,அந்த சமய அனுஷ்டானங்கள் அரிதாகி ஒரு வித நளினமான நாகரிக வாழ்கையில் நோர்வே மக்கள் வேகமாக இயங்கிக்கொண்டு இருக்கும் இன்றைய நாட்களில் சாகனே தேவாலயம் கடந்து போன காலத்தின் ஒரு அடையாள சின்னம் போல இருக்கு  ,

                                                    ஒரு காலத்தில் வாழ்க்கை ஒரு தொடர்ந்த கொண்டாட்டமாக இருந்ததுக்கும் , அதை  விழிப்புணர்வுணர்வோடு சிந்திக்க வைத்து , அந்த  உரிமையை  இப்பவும் பறித்து எடுக்க முடியாதவாறு வரலாற்று சாட்சியாக ஒரு சின்ன ஒதுக்குப்புற நகர விளிம்பில் கம்பிராமாக நிற்கிறது சாகனே தேவாலயம்,

                                                                               அதன் மயக்கும் பிரமிப்பில் சில நிமிடங்களே கரைந்து போக எண்ணம் அனைத்தும் நின்றுவிடும் போல இருந்தது.