Friday, 28 October 2016

இரவின் மடியில் இதயம் வரை....

காலம் மிக மிக வேகமாக முன்னோக்கிப் பாய்ந்து போகுது.  கூடவே அகாலமாக துன்பங்களும் மூஞ்சூறு  விளக்குமாத்தை தூக்க முடியாமல் காவிக்கொண்டு போனமாதிரி சேர்ந்துகொள்கிறது. சேர்ந்துகொள்கிறதா ? அல்லது  சேர்ந்து கொல்கிறதா ? என்பதுதான் மிக முக்கியமான கேள்வியாக பதில்களில் சிக்கிக்கொண்டு திணறிக்கொண்டிருக்கு . இதுக்கு  இன்றைய உலக மயமாக்கல் முகத் திரையில்  முன்னேறிய நாடுகள் கொடுக்கும் விலை கனதியாகத்தான் இருக்கு .

                                சென்ற தலைமுறையின் தேவைகள் மிகக் குறைவு. அல்லது அப்படியான ஒரு திருப்தியான கட்டமைப்பை உருவாக்கி மிகக்குறைந்த வாழ்க்கைத்தரதில் மிகப்பெரிய சந்தோசங்களை அவர்களால் தன்னிறைவாக்க முடிந்திருக்கு. அதுதான் அவர்களின் வெற்றி .அதன் சில படிப்பினைகளையாவது மீள்விக்கப்பட்ட ஒரு மனநிலையில் இருந்து நின்றுகொண்டு  நிதானமாக  ஜோசிக்கவே நேரமில்லாமல் எகிறும் இன்றைய காலத்தில் ...

                                                    இரண்டு வருடங்கள் முன்   வசந்தகாலம் விடைபெறும் கடைசி மாதத்தில், பேர்ச் மரங்களும் வில்லோ மரங்களும் அவைகளின் கடைசி இலைகளைக் கழட்டி மஞ்சளாகிய இலையுதிர்கால வாரம், ஒஸ்லோவில் " எதிர்கால இலற்றோனிக் சாத்தியங்கள் " என்ற தலைப்பில் இலற்றோனிக் கண்காட்சியும்  கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டினது  போல விற்பனையும், தலைநகரின் நடுவில் உள்ள ஒரு பெரிய மகாநாட்டு மண்டபத்தை வளைச்சுப் பிடிச்சு நடத்தினார்கள்.

                         ஜப்பான்,தென் கொரியா, தாய்வான் ,சைனா இல இருந்து பல்தேசிய இலற்றோனிக் உற்பத்தி நிறுவனங்கள் அவர்களின் சந்தைப்படுத்தல் முகவர்களை அனுப்பி வைச்சு, அந்த நிறுவனங்களின் அதி நவீன இலற்றோனிக் உற்பத்திகளின்  கண்காட்சி என்ற பெயரில், முடிந்தளவு  அவர்களின் வேறு சில தயாரிப்புகளையும் அதைப் பார்க்க வந்தவர்களின் தலையில் " நடக்கமாட்டாத லவாடிக்கு நாலு பக்கமும் சவாரி " பழமொழி போல பாசல் கட்டி ஏத்தி அனுப்பிக் கொண்டு இருந்த ஒரு இடத்துக்குப்  போனேன்  

                           கொஞ்சம் டெக்னிகலா  பார்வையாளரக்  கவர   " எதிர்கால இலற்றோனிக் சாத்தியங்கள் " என்ற தலைப்பில் அந்த விற்பனையும் கண்காட்சியும் நடந்தது. மொடேர்ன்  சயன்ஸ், அஸ்ரோ பிசிக்ஸ்  இவைகளில் மிகவும்  ஆர்வம்  இருப்பதால்  அந்தத்   தலைப்பின்  ஈர்ப்பு விசையில் கொஞ்சம் கவரப்பட்டு உள்ளுக்க வலது காலை எடுத்து வைச்சுப் போய்  சுற்றிப் பார்த்தேன். பார்த்த போது  உண்மையில்  அந்தக்  கண்காட்சி இன்றைய நவநாகரிக  நுகர்வோர் கலாச்சரத்தின் பொழிப்புரை போல இருந்தது .

                                                அந்த மண்டபத்துக்கு வெளியேயும், உள்ளேயும் அடிச்சுப் பிச்சு இளம் பெண்கள்தான் குறுக்க மறுக்க " மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது " குறுந்தொகை போல நிறைந்து இருந்தார்கள். மண்டப வாயிலில் இன்னும் கொஞ்சம் இளம் பெண்கள் ஒரு " கட்லோக் " என்ற கடைகளின் விபரம் அவை விற்கும் பொருட்கள் பற்றி ஒரு சின்னக் குறிப்பு உள்ள துண்டுப்பிரசுரம் தந்தார்கள். 

                                  அந்த இடமே ஏறக்குறைய " வண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறை அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர் " அகநானூறு கால இளமையா இருக்க, அதையும் வேண்டிக் கொண்டு " தந்தன தந்தன தாளம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் " எண்டு பாடிக்கொண்டு உள்ளுக்கு சும்மா சுற்றினேன். அதிலும் சும்மா  கிடக்கிற  வாய்க்கு  அவல் போட யாரவது ஒரு மெல் இடையாள் அம்பிடுவாளா  என்றுதான்  சுற்றினேன் 

                                           எல்லா சின்ன சின்ன கடைகளிலும் நிறைய அதி நவீன , " பிளாஸ்மா " , " மட்ரிக்ஸ் ", " ஹை டேபிநிசன் ", " லேமொட்த் "தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள் உலக அழகு ராணிகள் போல " என்னைப் பார் என்னைப் பார் " எண்டு ப்ளஸ் ஏற்ற  புரோட்டான்களும், மைன்ஸ் ஏற்ற இலத்திரன்களும் ஓடிப்பிடிச்சு விளையாட அவைகளுக்கு நடுவில்  நடுநிலை நியுற்றோன்கள் போல  ஒரு ஓரமாக ஒதுங்கி நிண்ட போது  அவைகளின் பாவனை ஏன் இப்ப எங்களுக்கு தேவை எண்டு ஜோசிக்க வைத்தது...

                              அந்த கண்காட்சி உண்மையில்  பணமும் பத்தாயிருக்க, பெண்ணும் முத்தாயிருக்க, முறையிலேயும் அத்தை மகளாயிருக்க பிரமிப்பா இருந்து, எதிர்கால " ஹை டெக் "  தொழில் நுட்பம் உண்மையில் பயப்பிடுத்தும் போல இருந்து, டெலிவிஷனை ஒரு சீலை போல சுருடிக்கொண்டு போய் விரும்பின சுவரில வைச்சு தப்பிப்போட்டு வேண்டிய சனல் பார்க்கலாம் எண்டு ஒரு செய்முறை விளக்கம் செய்து காட்டினார்கள் அதைப் பார்க்க குதிக்காலில சீனி எறும்பு கடிக்கிற மாதிரி திரிலா இருந்தது.

                                       அந்தப் பொருட்களை உலகத்தின் வேற ஒரு மூலையில் இருந்து கொண்டு எப்படி யாரோ ஒருவர் கண்டு பிடிக்கிறார் என்ற ஆச்சரியதைவிட,  இவளவு அழகான பெண்கள்  ,அவைகளை வாயில தேன் போத்திலை வைச்சு சரிச்சு ஊத்தின மாதிரி தேன் ஒழுகப் பேசி , சிக்கலான டெக்நோலோயில் உருவான சாதனங்களை இலகுவாக விளங்கப்படுத்தி விற்பனை செய்த இளம்பெண்களை  யார் எங்கிருந்து கண்டுபிடித்து இங்கே கொண்டு வந்தார்கள் என்ற கேள்வி மிகவும் ஆச்சரியமா இருந்தது.

                             எல்லாக் கடைகளிலும் இருந்த விற்பனைப் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல எண்டு " ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க.... " அபிராமிப் பட்டருக்கே சவால் விடுற மாதிரி இருக்க பேசாமல் இந்த கண்காட்சிக்கு " எதிர்கால இலற்றோனிக் சாத்தியங்கள் " என்ற பெயரை விட " எதிர்கால வாழ்க்கைத் துணைகளின் சாத்தியம் " எண்டு பெயர் வைச்சிருக்கலாம் போல இருந்தது..,,

                               வளர்ச்சியடைந்து கொண்டு வரும் நாடுகளின் உற்பத்திப்பொருள்கள்,  வளர்ச்சியடைந்த மேலை நாடுகளில் அதிக விலைக்கு விற்பனை ஆகுது.  அதுக்கு காரணம் மேலை நாடுகளில் உள்ளவர்களிடம் திருப்பி இல்லைப் போல இருக்கு, அதிகமாக இளம் பிள்ளைகள் தான் விடுத்தது விடுத்தது கேள்வி கேட்டு அதுகளை வேண்டி  " பத்தியத்துக்கு முருங்கைக்காய் வாங்கிவா என்றால், பால் தெளிக்கு அவத்திக்கீரை கொண்டு வந்த மாதிரி " பாவித்துப் போட்டு, அதன் நவீனம் கொடுக்கும்  பெறுமதி குறைய,  ஏற்கனவே வீட்டில் இருக்கும் மற்றபல இலற்றோனிக் குப்பைகளுடன் அதை எறிஞ்சு போட்டு மறுபடி அதி நவீனம் தேடுவார்கள்,

                                இப்படியான கண்காட்சி விற்பனை ஒழுங்கு செய்பவர்கள் அவர்களுக்கு கடன் கொடுக்க கையோடு சில " பேங்க் " குகளையும் ஒழுங்கு செய்து வைச்சு இருப்பார்கள், அந்த விற்பனை நிலத்திலேயே " நோர்வேயின் பொருளாதரத்தை நிமிர்த்திப் பிடிக்கிறோம் "  எண்டு பெருமையா விளம்பரம் எப்பவும் டெலிவிசனில் செய்யும் ஒரு பேங்க்,                                        
                                  
                                "  ஓடியா.. ஓடியா ..கையில காசு வாயில தோசை, கையில காசு வாயில தோசை, போனா வராது ,வந்தாப் போகாது  ...ஓடியா.. ஓடியா ..கையில காசு வாயில தோசை, கையில காசு வாயில தோசை .."

                                   எண்டு விளம்பரம் செய்து கொண்டு, எவன் வந்து மாட்டுவான் " நோர்வேயின் பொருளாதரத்தை நிமிர்த்திப் பிடிக்க " என்று ஒரு " மினி பேங்க் ஸ்டால் " திறந்து வைச்சுக் கொண்டு இருந்தார்கள். வங்கிகள் கொடுக்கும் கடன்தான்  மிகப்பெரிய தந்திரம். ஆரம்பத்தில்  எல்லாமே  நல்லாவே  இருக்கும் . கடைசியில்தான்  அவர்களும் கழுத்துக்குக்  கயிறு போட்டு இழுப்பார்கள்.

                                          கொள்ளை அடிப்பவர்கள் இப்படிதான் எப்பவுமே திட்டம் போட்டு கும்பலாகக் கொள்ளை அடிப்பார்கள் என்று கொமினிசம் சார்ந்த புத்தகங்களில் சின்ன வயசில் படித்து இருந்தாலும் அன்றுதான் நேரடியாப் பார்க்க முடிந்தது. அதிலும் ஆற்றம்  கரையில்  கொள்ளிக்கட்டை  அடுப்பங்கரையில் கொழுக்கட்டை  போல  இப்பிடியும்  துணிந்துவெளிப்படையாகவே கொள்ளை அடிப்பார்கள்  என்றும்  அன்றுதான் அறியமுடிந்தது 

                          ஒரு கட்டத்தில் இப்படி பேங்க் கடனுக்கு  அழுது வடிந்து வேண்டிய இலற்றோனிக் பொருட்கள்  கழுதை வளையற்காரன் கிட்டபோயும் கெட்டது, வண்ணான் கிட்டபோயும் கெட்டது  போல நீர்த்துப்போனாலும் பேங்க் இல் எடுத்த கடன் முடியும் வரை கட்டத் தான் வேண்டும். அதைதான் பேங்க்காரங்கள் " வந்தாப் போகாது " எண்டு சொல்லி சொல்லியே எல்லாரையும் மயக்கும் வித்தை போல இருந்தது.

                                  நான் அந்த இடம் முழுவது சுற்றி,பல விஞ்ஞானம்  விந்தைகளில் ஆர்வம் உள்ளவன் போல பல அதி நவீன பொருட்களையும்,  அழகுப் பெண்களையும் மேஞ்சு போட்டு, அந்த மண்டபத்தின் நடுவில் பேப்பர் கப்பில் கோப்பி விக்கும் கடை போட்டு இருந்தார்கள் அதில இருந்து ஒரு கோப்பியை வேண்டி உறுஞ்சிக்கொண்டு, சின்னப் பிள்ளைகள் உலகம் மறந்து கேம்ஸ் விளையாடும் விளையாட்டு சாதனங்களுடன்  தோற்று தோற்று விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். 

                                 வயதான ஒரு பெண்மணி " ரிமொர்ட் கொன்றோல் " போல இருக்கும் பழைய நோக்கியா பழைய போனை வைச்சு ஆருக்கோ நம்பர் தேடி தேடி அதில குத்திக்கொண்டு எனக்கு முன்னால வந்து இருந்தா, 

                         " ஹாய் "

                            எண்டு சொல்லி  என்னைப் பார்த்து சிரிச்சுப்போட்டு,

                         " என்னோட பேரப்பிள்ளைகள் வந்து நிக்குதுகள் அதுகளோட வந்தேன், "

                            " அப்படியா ,அது  மிகவும் நல்லதே   இன்று  குளிரும்  அதிகம்  இல்லையே "

                               " ஓம்..  என்னோட பென்சன் காசில கொஞ்சம் கொஞ்சமா சேமித்த காசு கொண்டு வந்து அதுகளுக்கு சில பொருட்கள் வேண்டிக் கொடுக்கத்தான் நானும் வந்தன், "

                                 " அட,இது  இன்னும்  நல்லா  இருக்கே  கேட்க,,என்ன  வேண்டிக் கொடுக்கப்போரிங்க "

                                "  அதுதான்  குழப்பமா  இருக்கு..இங்கே  எவளவோ  சாமான்கள்  அடுக்கி  வைச்சு  இருகுறாங்கள்,,,இதில  இருக்கும்  பல  சாமான்கள்  நான்  என்  வாழ்கையில்  கண்டதேயில்லை "

                          "    உங்க  தலைமுறை  வேற,,,இப்ப  உள்ள  தலைமுறை  வேறைதானே "

                             "  ஓம்,   இப்ப என்னடா எண்டால் என்னோட சேமிப்பு காசு  முழுவதுக்கும் ஒரு வழி பண்ணிப்போட்டு தான் அதுகள்  வெளிய வரும்கள் போல இருக்கு "

                      எண்டு விபரமா சிரிச்சு சிரிச்சு சொல்லி முடிய, 

                   " நீ ஒண்டும் வேண்டவில்லையா ,"

                      "    இல்லை,,,"

                     " ஏன்   உனக்கும்  என்னைப்போல  இதுகள்  பரீட்ச்சயம்  இல்லையா  "

                         "   அப்படி  இல்லை.. நான்  இரண்டுங்கெட்டான்   இடைப்பட்ட தலைமுறை ,ஆனால்  எல்லாம்  விளங்காது "

                     "  பிறகென்னதுக்குக்  கப்பல்  கவுண்ட  மாதிரி   ஜோசித்துக்கொண்டிருக்கிறாய் "

                               "   இங்கே போட்டுள்ள  விலைகள்  எனக்குக் கட்டுபடியாகாது "

                           " அதுக்கென்ன  உள்ளே  நாலு  பாங்  கடன்  கொடுக்க ஏற்பாடு  செய்து  வைச்சுக்கொண்டு  நிக்குரான்களே,,கடனா வேண்டி  கொஞ்சம் கொஞ்சமா கட்டு  " 

                       "  அந்த  பாங்கில்  கடன்  எடுத்தா  போட்டிருக்கிற  ஜட்டியையும்  உருவிப்போட்டுதான்  விடுவாங்கள் கடைசியில்  " 

                  " ஹஹஹஹா,, ஒ,,அதுவா  பிரசினை ,  நிறைய மொபைல் டெலிபோன் எல்லாம் போட்டு இருகுரான்களே, "

                        " ஓம்,,ஓம்,, அதெல்லாம்  மொடேர்ன் டேக்னோலோயி ,,இலற்றோனிக் போய்  இப்ப  பிளாஸ்மா,குவாண்டம் ,,ஹைடேபிநிசன்  எல்லாம்  வந்திட்டுதே "

                            " என்னப்பா  சொல்லுறாய்,,,ஒண்டுமே  விளங்கவில்லை,,,என்னவோ உள்ளதைச்   சொல்லுறன்  எல்லாம் வந்திட்டுது  ஆனால்  இருந்த நின்மதி  போயிட்டுது "

                          "   ஹஹஹஹஹஹா...அதெண்டா  உண்மைதான் "

                            "  அதைத்தான்  என்னோட  மனுசனும்  சொல்லுவார்,,அவர் நோர்வே நேர்வியில் பலவருடம்  இருந்தவர், இப்பவும் சுங்கானிலதான்  புகையிலை  அடைஞ்சு  சுருட்டுப்பிடிக்கும் ஆள்  "

                          "  நீங்க கையில  வைச்சிருக்கிற  இந்த  மாசிக்கருவாடு  போல  இருக்கும்  பழைய  மொபைல்  போனை  எறிஞ்சு போட்டு   நவீன  மொபைல்  போன்  வேண்டவில்லையா "

                        "   ஓம்,,ஓம்..நானும்  கொஞ்சம்  விபரம்  கேட்டேன்  அப்பிள்  ஐபோன்  எண்டு  ஒண்டு  ஒரு  பெட்டை  காட்டினாள்  வேண்டச் சொல்லி "

                           "   ஓம்,அது  அன்றோயிட்  போன்  எல்லோ "

                              "  அதென்ன  அ ந்தி ரோ யிட் , இவளவு காலமும்  அப்பிள்  பழம் தான்  இருக்கு  எண்டு  நினைச்சேன்  இங்க  பார்க்க  அப்பிள்  பெயரில  ஒரு சூப்பர் மார்கெட்  நிறப்பிர  அளவில  சாமான்கள்  கிடக்கே "

                                 "  ஹ்ம்ம்,,தொடுதிரை ,,ஐபோன்  ஒன்று  சும்மா  எப்படி  இயங்குது  என்று  பார்த்திருக்கலாமே   "

                       "   ஓம் ,,பார்த்தேன் , அதில விரலை வைக்கவே  கொன்றோல்  இல்லாமல்  இழுத்துக் கொண்டு தண்ணியில அன்னம்போல வழிக்கிக்கொண்டு போகுதே "

                          "  அட,,அதுதான்   தொடுதிரை,,டச்ஸ்கிரீன்   எண்டுறது,, " 

                             " ஒரு சேர்விஸ் பெண் பிள்ளை எனக்கே செய்து காட்டி வேண்டச் சொன்னாள் " , 

                               என்று போட்டு மறுபடியும் கையில வைச்சு இருந்த பழைய நோக்கியாவில் கல்லு உரலில நெல்லு நிரப்பி  உலக்கையால குத்துற மாதிரி குத்திப்போட்டு, 

                   " என்ர  மனுசன் போன் எடுக்குதில்லை, அந்தாளுக்கு காதும் ஒழுங்கா கேட்காது , "

                    எண்டு போட்டு மறுபடியும்

                " நீ ஒண்டுமே வேண்டவில்லை  என்பது  கவலையா  இருக்கு  ,ஏன் உன்னிடம் காசு இல்லையா,அல்லது நீ அகதியா வந்து அகதி முகாமில் இருக்குறியா  "   எண்டு   சணப்பன் வீட்டுக்கோழி தானே விலங்கு பூட்டிக்கொண்டது போலக்  கேட்டா,, 

                            நான் "  ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, இதுக்குள்ள ஒரு மண்ணும் வேண்ட விரும்பவில்லை "  

                                 "  ஏன்பா  வாழ்கையில்  அவளவு  வெறுப்புப் போல சொல்லுறாய்,, வாழ்கையில்  எவளவோ  நல்ல  விசியங்கள்  இருக்கு ,,ஒருநாள்  ஒரு பொழுது  என்று  வாழப்பார்   " 

                                   "ஹ்ம்ம்,,,அதுவும்  உண்மைதான்  ஆனால்  சிலநேரம்  பழஞ்சீலை புறுபுறுத்துக்   கிழிஞ்ச  மாதிரி   என்ன  சீவியமடா  இது  என்பதுபோல  வெறுப்பு வருகுது   " 

                             " என்ன  சீவியமடா  இது ,,,இப்படி  சொல்லுறாய்  இதுக்கு என்ன  அர்த்தம்  " 

                                 "   அதுதானே  உங்க  ஆட்கள்  சிலநேரம்  சொல்லுவாங்களே  hva i helvete med dette livet   எண்டு  அதை  என்  தாய்மொழியான  தமிழ்  மொழியில்  சொல்லுவேன்   "

                                 எண்டு நல்ல  கவுரவமான நோர்க்ஸ் உச்சரிப்பில் சொல்லி சிரிச்சேன்,மனுசி நான் வெறியில இருக்றேன் எண்டு நினைச்சோ என்னவோ கொஞ்சம் என்னை சந்தேகமாப் அக்கம் பக்கம் பார்த்திட்டு 

                       " போட்டு வாறன்,நோர்வே சரியான வாழ்க்கைத் தரம் உயர்வான ,அதே நேரம் வாழ்க்கைச் செலவு அதிகமான நாடு, கவனம்பா காசு கண்டபாட்டுக்கு செலவழிப்பதும் நல்லதில்லை, ஹா டே ப்ரோ , ஹா டே குட்  , ஹா என் பின் டாக் " 

                            எண்டு சொல்லிப்போட்டு எழும்பிப் போயிட்டா . 

                                  நோர்வே போன்ற நாடுகளில் வீடுகளில், அன்பாக ஆதரவாக நாலு வார்த்தை அக்கறையாகப் பேச யாரும் இல்லாமல்,  நிறைய மனிதர்கள் பேசுவதுக்கு உயிர் உள்ள மனிதர்கள் இல்லாமல் தனியாக இருக்குறார்கள்,ஆனால் அவர்கள் வீடு முழுவதும் இலற்றோனிக் தொடர்பு சாதனங்கள் நிறைந்து கிடப்பதைக் கண்டு இருக்குறேன். அவர்கள் தாங்கள் வளர்க்கும் நாய், பூனையோடு கதைத்துக்கொண்டு வாழுங்கள்.

                                     ஏன் அவங்களைச் சொல்லுவான் " சேணியனுக்கு ஏன் குரங்கு? " என்று அந்தக் காலத்தில் பழமொழி  எழுதி வைச்ச மாதிரி என்னுடைய வீட்டிலேயே நிறைய இலற்றோனிக் டீவி, டிவிடி , சிடி பிளையர், மைகிரோவேவ் அவன், அறுவத்தெட்டு டெலிபோன்,மோடெம், சடளைக்ஹ்ட் பொக்ஸ், அதிவேக ஜிகா மெகா வேக இன்டர்நெட் இணைப்பு .லாப் டாப் கணணி,டிஜிட்டல் கமரா , இசைக்கருவி சம்பந்தமான அம்பிளிபயர் சாதனங்கள் எல்லாம் கச கச எண்டு வீடு முழுக்க லொட்டு லோடுக்கு இலத்திரன் ஓடும் சாதனங்கள் அம்முக்கி கொண்டு குவிந்து கிடக்குது, 

                                  அதை எல்லாம்  வைச்சு உலகத்தை வேகமாக இயக்கலாம், மிக மிக வேகமாக இருப்பின் அர்த்தத்தைத் தொலைக்கலாம் , தொலைத்துப்போட்டு இன்னும் வேகமாக நாலுநாள் தாக்குப்பிடிக்கும் நண்பர்களைத்  தேடலாம் , அப்படமாகச் சொன்னால்    வாழ்க்கையை அடுத்தவனுக்கு கலர் படம் காட்ட   " ஹை டெக் லெவலில் மெயின்டேயின் " பண்ணலாம்.... ஆண்டவன் புண்ணியத்தில் அவளவுதான்செய்யலாம்! 

                                           
ஆனாலும் உண்மையில்  சின்ன வயசில்   எங்க வீட்டு ஹோலில் இருந்த மரத்தால செய்த பெட்டி போன்ற  பழைய ட்ரான்ஸ்சிஸ்டர் ரேடியோ  இரவின் மடியில் இதயம் வரை தந்த இன்பம் இதுகளில் இல்லை. அதில்  சில்லையூர் செல்வராசனின்  " தணியாத தாகத்தை "  எங்கள்  எல்லோரோடும்  சேர்ந்தே தொடர்ந்த  அம்மாவே  வடஅமரிக்கக்  கண்டத்துக்கு  ஓடிப் போட்டா, 

                                                  அதில் " இசையும் கதையும் " எழுதிய காவேரி அக்கா ஜெர்மனியில் டுசில்டோபில்  வாழ்க்கையையே  கந்தலான கதை ஆக்கி சொதப்பிப்போட்டு  நிக்கிறா ,

                                   இதை  எல்லாம்  ஜோசிக்க வந்த விசருக்கு அரைவாசி குடிச்சு முடிஞ்ச   கோப்பிக் கோப்பையை ஊத்திப்போட்டு  உள்ளங்கையில் வைச்சு நசிச்சு போட்டு குப்பைக் கூடையில் எறிஞ்சு போட்டு வெளிய வந்தேன். வேற  எப்படி  இவளவு  மண்டைக் குழப்பத்தில் இயல்பாக  இருக்க முடியும் ,,சொல்லுங்க  பார்ப்பம், 

                                        வந்து வெளியே என்ன சோடினை போட்டு இருக்கிறாங்கள் எண்டு பார்த்தேன்,மண்டபத்தின் முக்கிய வாசலுக்கு மேலே நியோன் குழாய் விளக்கில் வளைச்சு ,  " அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கின கதை  போல வெளியால விசியங்கள் வேற மாதிரி இருந்தது,  

                         " நாளைய உலகம் இன்றைக்கு ஒஸ்லோவில்  "

                               என்று அந்த லைட் சுழண்டு சுழண்டு ஓட,  

                         " இந்த உன்னத நிகழ்வில் இணைவதில் ஒஸ்லோ நகரம் பெருமைப்படுகிறது "

                                          என்று ஒஸ்லோ நகரத்தின் நகரபிதா மேன்மை தங்கிய பேபியான் ஸ்டெங் வாழ்த்து சொல்லும்  பெரிய விவரண வர்ணப்  படம்  இணைத்த இன்னுமொரு அழகான விளம்பரப் பலகை அதுக்குக் கீழ வைச்சு இருக்க,  அதுக்குக் கீழே இரண்டு வசிக்க வீடு இல்லாத தெருவோரம் வசிக்கும் வெள்ளை இன நோர்வேயிய ஹோம்லெஸ் மனிதர்களில் ஒருவன் பேப்பர் கோப்பி கோப்பையை நீட்டி பிச்சை எடுத்துக்கொண்டு இருக்க ,மற்றவன் கம்பி அறுந்து போன கிடாரில்

                                 " jeg sto i skyggene i regn og vind
                          
                                  jeg var en fremmed til du åpnet deg og lot meg inn

                                 jeg sto alene helt til du steg frem " 

                                    " நான் ஒரு வீடு இல்லாத மழையிலும்,குளிரிலும் வாழும் மனிதன்,தயவு செய்து கதவை திறந்து உள்ளே அனுமதி , " என்ற ஜோஹனாஸ் பிஜெல் என்ற நோர்வே நாட்டவர் பாடிய  நோர்வே மொழிப் பாடலை இரவின் மடியில் இதயம் வரை உலகம் இறந்து கொண்டு இருப்பது போன்ற குரலில்ப்  பாடிக்கொண்டு இருந்தான்....

.

Wednesday, 26 October 2016

மனசாட்சியின் மறுமொழிகள்

முட்டாள்தனமாகக்   கேள்வி  கேட்டு அதுக்குப் புத்திசாலித்தனமாகப்   பதில்  சொல்வது போல  பல  கவிதைகள்  ஒரு பரிசோதனை முயற்சியாக  சென்ற வருடம்  சில  மாதங்கள்  எழுதினேன்.  அது ஒருவிதமான ஆத்மவிசாரணை செய்வது போன்ற ஸ்டைல். 

ஏனோ தெரியவில்லை ஒரு கட்டத்தில் அந்த ஸ்டைல் இல் எழுதுவதும் சலிப்பை ஏற்படுத்தி விட்டதால். நிறுத்திவிட்டேன் . சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன் என்றது  போல  ஒரே  ஸ்டைலில்  எழுதி  வாசகர்  கழுத்தை  அறுக்க விரும்பாததால் நானே நிலைமை   கலவரம்  ஆகுமுன்று  நிறுத்தி விட்டேன்  . 

அந்தக் கவிதைகள் எல்லாவற்றையும்  சேர்த்து " மனசாட்சியின் மறுமொழிகள்  " என்று தொகுப்பு ஆக்கியுள்ளேன். இவை  உங்களுக்கு  புரியுமா புரியாத  என்று  எனக்கு சரியாகச் சொல்லமுடியவில்லை. ஏனென்றால்  இவைகள்  வேற ஒரு தளத்தில்  பரிமாணங்களை  உணர்ச்சியோடும், சம்பவங்களோடும் உள்ளிறங்கிப் போய் கொஞ்சம்  விபரமாக இடுக்குகளில்  விசாரிப்பவை. பிடித்து இருந்தால் உங்கள் கருத்தை சொல்லுங்கள் , 
..............................................................................................
வெளிச்சங்களைக் 
கூட்டி ஒதுக்கி

அள்ளிக்கொண்டு போய் 
ஒழித்துவைத்து 
நிரவல் செய்வதன் 
தெளிவு என்னவென்று 
இரவைக் கேட்டேன்
அது 
அடேய் விழிக்கமுடியாதவனே 
இறுக்கிப் பிடித்து 
அடைந்து கொள்ள 
நாங்கள் என்னவுன் 
கள்ளக் காதலியா?
இல்லாத
இடத்திலும் நாங்கள்
உள்ளத்தின் 
ஒளி விளக்கு, 
விளக்கை அணைக்கும் 
அவசரத்தில்
காமம் இருக்கும்போது 
விளங்கப்படுத்த 
எங்களுக்கு 
அவகாசம் யாரும் 
தருவதில்லையே, 
பூங்காக்களில் 
மின்மினிப்பூச்சியோடு 
ஹைக்கூ 
கவிதையே எழுதுகிறோம்,
தரவைக் கடலில் 
மெதேன் காற்றோடு 
மரபுக் கவிதை எழுத 
அதைக் 
கொள்ளிவால் பேயென்று 
பூச்சாண்டி காட்டுறீங்கள், 
அடர் இரவில்தான்
மேகங்களை 
அந்தரங்கமாக
இறுக்கியனைத்துக்கொள்கிறோம்
எரிந்து முடியும் 
வடதுருவ விடி வெள்ளிகள் 
யாருக்காகவும்
நடிப்பதில்லை, 
நிமிர்ந்து பார் 
நட்சத்திர மைதானத்தில் 
சலசலத்து 
விடிய விடிய 
விழித்துக்கொண்டுதானிருக்கிறோம்,
வாசல்களைத் 
திறந்த வெளியை வந்து பார் 
அழகான பால் வீதி 
அதுதான் எங்கள் 
படுக்கை விரிப்பு, 
உனக்கு நித்திரை 
எங்களுக்கு 
நித்தமும் யாத்திரை என்றது .



கொண்டாட்டங்களின் 
மதுவில் 

மறக்க வைத்த 
ஏமாற்றங்களை
இம்முறையும் 
விடி காலையில் 
விரக்தியாக்கித் 
தருமாவென்று 
பண்டிகைக் காலத்தை
மன்றாட்டமாகக் 
கேட்டேன், 
அது 
பரிகசிப்புக்களை 
உன் 
பாதை எங்கும் 
பரப்பி வைக்காதே,
நிராகரிப்புகள் 
நிரந்தமானவை என்பதை
நீயாகவே 
நிறுவிக்கொள்ளாதே,
தூக்கி விடும்
உற்சாகத்தை
கணக்கில் எடுக்காமல் 
தள்ளி விடாதே,
வெளிச்சமான 
விழாக் கோலத்தை 
புதியதோர் 
பிறப்பென்று 
ஏற்றுக்கொள், 
உனக்கு 
யாரெல்லாம் 
என்ன செய்ய வேண்டுமென்று 
நினைக்கிறாயோ 
அதை 
மற்றவர்களுக்குச் 
செய்து விடு, 
பண்டிகை 
ஒரு 
தண்டனையல்ல 
பல 
நம்பிக்கைகளின் 
பிராத்தனை, 
வருடத்தில் ஒருமுறைதானே
மனம் போல 
வலம் வருகிறோம் 
அதிலேறி 
உலாத்திவிட்டுப் போவேன் என்றது.



பஞ்சு போல 
அன்பிருந்தும் 

தடுக்க முடியாமல் 
பாஞ்சு வருவதன்
கையாலாகத்தனத்தனம் 
என்னவென்று 
கோபத்திடம் கேட்டேன் 
அடேய் வீணாப்போனவனே
அது 
தன் மீதே நம்பிக்கை 
இல்லாதவனின் 
வெளிப்படை ஒப்புதல் 
வாக்குமூலம்,
விட்டுக்கொடுப்பின் 
சாத்தியங்கள் 
பின்வாங்கிய நிரந்தரமான 
நிராகரிப்பு ,
பொறுமையின் 
கட்டுப்பாட்டை 
இழந்து வெளியேறிய 
திரும்பப்பெற முடியாத 
ஆளுமை ,
இதயத்தின் 
இரத்தச் சுற்று ஓட்டம் 
இரட்டிப்பாகும்
அபாய கட்டம், 
அற்பமானதை 
நியாப்படுத்த
கவுரவமானதைத் 
தூக்கி முன் வைக்கும் 
அடமானம் , 
ஆத்திரத்தைக் அதிகம் 
கொடுத்து 
அவமதிப்பை
இன்னுமதிகமாகவே 
வேண்டிக்கொள்வது,
நீயே உனக்குத் தூக்கு 
மாட்டிவைத்துக்கொண்டு
மற்றவன்
சாகவேண்டுமென்று
எதிர்பார்ப்பது, 
தேவையில்லாத 
நேரத்தில் 
தேவைக்கதிகமான
சக்தி இழப்பு,
உன் அழிவுக்கு 
நீயே தேர்ந்தெடுத்து 
நடு நெஞ்சில் நட்டு வைக்கும் 
நச்சு விதை, என்றது .



நிமிர்ந்து 
பார்ப்பதற்கு 

யாருமில்லாத போதும் 
விரித்து வைத்திருப்பதன் 
விந்தை என்னவென்று 
வானத்தைக் கேட்டேன்
அது 
அடேய் நாகரீகக் கோமாளியே 
நீல நிறம் 
பரிசம் போட்ட 
நீண்ட கல்யாணக் 
கனவின் தொடர்ச்சி, 
அதிகாலை 
இதழ் வாழை நிறம் 
வரம் தந்த 
வயதுக்கு வந்த வேளை, 
அந்தி மாலை
குங்குமப் 
பொட்டு வைக்கும் 
நிட்சயதார்த்தம், 
நுதல் மேகங்கள் 
எங்களைத் 
தள்ளி விட்டுத் தாலாட்டும்
முதல் முதலிரவு, 
விடிய விடிய 
வெள்ளி விரிப்புக்கள் 
சொல்லித் தரும் 
காமங்களின் 
மன்மத பாடங்கள்,
இரவின் 
மழை முகில்கள்
இறக்கிவைக்கவேண்டிய 
இதழ் ஈரமான 
முத்தங்கள், 
மஞ்சள் தடவிய 
விடிகாலை 
மிச்சங்களோடு 
நெருங்கும் 
எச்சங்களின் கெஞ்சல் , 
நிலவு 
தள்ளியே நின்றாலும் 
விடி வெள்ளிகள் 
நம்பிக்கையின்
நட்சத்திரங்கள்,
புயல் இப்பவும் 
எங்களுக்குப் 
புரிந்துகொள்ள முடிந்த 
பொறாமையின் புதிர், 
யாருக்கும் இடைஞ்சலில்லாத 
ஒரு இரவுக்கும் 
ஒரு பகலுக்கும் 
இதைவிட வேறென்ன 
வேண்டுமென்றது !



வலை வீசி 
அலையின் நுரை போல 

அடங்க முடியாமல் 
ஆர்ப்பரிக்கும் 
இச்சைகளின் 
வரைவு இலக்கணம் 
என்னவென்று 
காமத்திடம் கேட்டேன் 
அடேய் அலங்கோலமாய்ப் பிறந்தவனே 
அது 
அத்திவாரமில்லாத
அணி அலங்காரத்தின்
பிரதி பிம்பம்,
நிமிடங்களின் 
ரசிப்பில் 
வருடங்களைத் 
தவறவிட்டவனின் 
சுயசரிதை, 
நேசிப்பை ரசித்துப் 
பாட முடியாத
அவதி நேரத்தின் 
தலைக்கேறிய ஒப்பாரி,
சொந்தமில்லாத
இங்கிதங்களைத் 
திருடி எடுத்து ருசிக்கும்
சிற்றின்பம்,
நின்று பேச விரும்பும் 
தென்றலை 
விரட்டி ஒரங்கட்டும் 
சூறாவளி, 
அழகைக் 
கற்பனையில் 
நிர்வாணமாக்கும் 
அழுக்கு, 
நீண்ட நிலையான 
சந்தோசத்தைக் 
கடக்க நினைக்கும் 
குறுக்கு வழி,
நன் நடத்தையை 
நடுத் தெருவில் வைத்து 
விலை பேசும் 
மனசாட்சி என்றது !



இலைகளை 
இழந்துகொண்டிருப்பதில் 

அப்படியென்ன 
இங்கிதம் இருக்குதென்று
என் 
தூங்கு மூஞ்சி 
முகத்தைத் 
தூக்கி வைத்துக்கொண்டு
இனி 
நிமிர முடியாத 
மரங்களைக் கேட்டேன் 
அது
அட மோட்டுக் கழுதை 
வேர்களில் 
எங்கள் விலாசத்தை 
எழுதி வைத்து இருக்கிறோம் 
கிளைகளில் 
கிளுகிளுப்பு 
வேண்டுமளவு எஞ்சி இருக்கு 
மலராத மொட்டுக்களில் 
வண்டுகளின் வாசம் 
சேமித்தே இருக்கு 
சுவாசம் 
தளர் தண்டுகளில் 
சுற்றி ஓடுது 
நாங்கள் மரங்கள் 
இறப்பை 
நிரந்தரமான இறுதியெண்டு 
மனிதர்கள் போல் நேசிப்பதில்லை 
பொறுத்திருந்து 
பருவம் வர 
துள்ளி எழுந்து 
துளிர்துவிடுவோம் என்றது ! 



மெல்லெனவே 
கொல்லப்படுவதற்கா 

வடதுருவத்துக்கு 
குடிபெயர்ந்தேன் 
என்று
கும்மிருட்டை 
மூடிவைத்துக்கொண்டிருந்த 
இலையுதிர் குளிரைக் 
கேட்டேன்
அட பரதேசியே 
இரட்சிக்கத் தவறிய 
இதயத்தின் 
இடைவெளிகளைக் 
காதலால் 
நிரப்பிக்கொள்
அதை 
எப்போதும் 
நினைத்துக்கொள்ளும்படி 
உண்மை 
ஒளியை ஏற்றிவை 
அதிகாலையே 
வெள்ளிகளை எண்ணி
ஆரம்பித்து 
விபரிக்க முடியாத 
வெளிச்சங்கள்
நடு இரவுவரை 
வீசி எறிந்துகொள்ளும் என்றது



பிடிச்சு 
இழுத்து வைத்தமாதிரி 

நேசத்தை 
உதாசீனம் செய்ய முடியாமல்
அவள் பாசமிருப்பதன் 
காரணங்கள் 
என்னவெண்டு 
காதலிடம் கேட்டேன்
அது 
அடேய் விபரமில்லாதவனே 
அவள் அன்பு 
உன் மீதான அக்கறைகளின் 
அணைக்கட்டு 
அவளின் கருணை 
கனவுகளின் காப்பியம் 
அவள் கண்ணீர் 
நெருப்பையும் நனைக்கும் 
தண்ணீர் 
அவளின் அனுமதிகள் 
அடிமைகளின்
சுதந்திரப் பாடல் 
அவள் நெருக்கம் 
பிரிக்க முடியாத 
திருக்குறளின் சுருக்கம் 
அவள் வியர்வை 
வெண் முத்து 
அவள் வாசம் 
இன்னொரு பிறப்பு 
அவள் பொறுமை 
உன் அதிஸ்டம் 
அவள் 
விருப்பங்கள் 
உனக்கேயான 
நிறைவான திருப்பங்கள் 
அவள் மவுனம் 
முழுதான உன் எண்ணம்
எதையும் தாங்கும் 
அவளை மட்டுமே 
காதலித்துப்பார் 
உலகம் 
உனக்காகவே விடியும் என்றது .



அர்த்தமில்லாமல் 
ஓடுவதன் 

விளக்கம் என்னவென்று
காலத்தைக் 
நிறுத்தி வைத்துக் 
கேட்டேன்
அது
அட அவசரம் பிடிச்சவனே 
காலம் 
மரணத்தின் 
கைக் கடிகாரம்
முந்திப் பிந்தி விடாமல் 
உன்னோடு 
சேர்ந்தே ஓடும் 
முடிந்தால் 
நாடித்துடிப்புள்ள போதே 
பொழுதுகளை
மணித்தியாலங்களாக்கி 
உழைப்பாக்கிவிடு 
நிமிடங்களைப் பிரித்து 
சந்தோஷ 
விநோதங்களை
இதயத் துடிப்போடு 
இணைத்து விடு
செக்கன்களை
இழக்க விரும்பாத 
வெற்றிக்கென 
ஒதுக்கி வை
முக்கியமாக 
உன் 
புரியாத கேள்விகளுக்கு 
தெரியாத பதில் 
தேடும் நேரத்தை
குறுக்க கடந்து 
வீணாக்காதே என்றது.



விருப்பமில்லாதவனை 
என்னத்துக்கு 

விடியாத முகத்திலடிச்சு 
வெளிச்சம்
ஜன்னலைத் தேர்ந்தெடுத்து 
தட்டி எழுப்புகிறதென்று 
அதிகாலைப் பறவையிடம் 
கேட்டேன்
அட விளக்கமில்லாதவனே 
இருப்பின் 
அற்ப கேள்விகளில் 
உற்சாகமாகி
சிறகுகள் அசைத்துப்
பறப்பதின்
பக்குவத்தில் சொல்கிறேன் 
சூரிய உதயங்களை
யாரும்
உறை போட்டு
மூடி வைக்க முடியாது
நேர்த்தி பிசகாத 
ஒரு நாளின்
சுழற்சியை
பூமிக்கு
நிறுத்தி வைக்கத் தெரியாது
காலநிலை 
உன்னை அடக்கும்
சமாதிநிலையல்ல
அது
புதுக்கவிதை
தட்டி எழுப்பும் 
ஆழ் மன நிலை
இந்த நாளை
உனக்கேற்ற மாதிரி
சமநிலையில் 
வடிவமைத்துக்கொள்
அதுவே
விலையேதுமற்ற 
என்றைக்குமான திருநாள் என்றது ! 



அழுத்திக்கொண்டே 

இயங்க முடியாமல் 
விழுத்திக்கொண்டிருப்பதன்
வீரியம் என்னவென்று 
ஆத்மாவைக் 
கேட்டேன்
அடேய் இலக்குகளில்லாதவனே 
அது 
தனக்கு வெளியே
எதுவுமில்லையென்று 
வெட்ட வெளியில்
ஒடுங்கிப் போகும் 
தனிமை, 
எதையெல்லாம் 
தள்ளிப் போடமுடியுமோ 
அதையெல்லாம் 
முன்னிறுத்தும் 
ஓரங்க நாடகத்தின் 
ஒத்திகை,
பெரிய 
வழிகள் இருக்க 
வேண்டுமென்றே 
சின்ன 
வேலியைத் தாண்டுவது,
காற்று வெளியில் 
ஆயுள் கைதிபோலக் 
கதவுகளைப் 
பகலில்தேடுவது , 
முடியுமென்ற 
வார்த்தையில்லாத 
அகராதியை
மனப்பாடம் செய்யும் 
பைத்தியக்காரத்தனம்,
முடிவாக அது 
சோம்போறிகள் 
தேர்ந்தெடுத்த 
சந்தனம் தடவிய 
சமாளிப்பு வார்த்தை என்றது.


நுழைய முடியாத 
இடுக்குகளிற் 

புகுந்து வெளியேறி 
மெல் உணர்வை
சொல்லாமலே 
இழுத்தெடுக்க 
எப்படி முடிகிறதெண்டு 
கவிதையிடம் கேட்டேன் 
அது 
அடேய் உணர்ச்சியில்லாதவனே 
இன்பமான 
சொற்களையே 
இழவு வீட்டிலும் 
சொந்தம் கொண்டாடு,
வரிகள்
வலைவீசியே
வசந்தகால 
வாழ்க்கையைத் தேடட்டும், 
தேவையான அளவு 
கற்பனை 
உண்மை வார்த்தைகளில்
கலந்திருக்கட்டும்,
புதிதாக்கி 
நேரே பார்ப்பதில்
பழசாகிப் போன 
அடிவேண்டிய பரிமாணங்களைச் 
செருகி விடு, 
அனுபவத்தை 
அதன் அனுமதியின்றியே 
அங்கங்கே 
இறுக்கி அறைந்து விடு, 
புதுமைகளைக் 
கேட்டுக் கேள்வியில்லாமல் 
அதன் போக்கில் 
அவிட்டு விடலாம்,
மொழியிலுள்ள 
இருள் வழியும் 
படிமங்கள் 
வெளிச்சமாகட்டும், 
இலக்கணத்தை
எல்லாத் திசைகளிலும்
முடிவுகள் வரையில்
தள்ளியே வை, 
கவி விதைகள் 
உன்னாலும் முடியுமென்றது.

கடினமான 
பொழுதுகளை நெரிக்கும் 

காற்றிலும் 
உன் இயல்பான 
குணாதிசயத் 
தோற்றத்தை 
வரைந்து விடுகிறாயே 
எப்படிச் சாத்தியமென்டு 
மெல்லிசையைக் கேட்டேன் 
அது 
அடேய் மட்டிமடையா 
காதுகளைத் 
திறக்க மறுப்பவனின் 
இதயத்தை 
நாங்களாவே
இடித்துப் பார்ப்பதில்லை, 
எல்லாவித இரைச்சலும்
எங்களின் 
பிரகடனப்படுத்தப்பட்ட 
பொது எதிரி ,
நிஷப்தம்
நிழல் போலத் தொடரும் 
நீண்டகால நட்பு ,
சப்த சுரங்களின் 
அடி நாதங்கள் 
நம்மைத் தேர்ந்தெடுத்த
சதுர் வேதங்கள்,
நாங்கள் 
மறந்தாலும் சுருதி
விட்டுவிலகி 
நம்மை மறைப்பதில்லை, 
தாளங்கள் 
செப்பனிடப்பட்ட 
தலைமுறையின் வாசல்க் 
கோலங்கள்,
இசைந்து பார்
இராகங்களில்லாத 
அமர கீதங்கள் 
ஒலிக்கவிட்டு 
நீ மறந்த இன்பத்திலும்
இசைந்திருப்போம் என்றது!


டிசெம்பர் வருமுன்னே 
வெள்ளை விரிப்புக்களை 

எதற்காக நீ
வெள்ளனவே
நவம்பரில் 
இறக்கி விடுகிறாயென்று 
உறைபனியிடம் 
விரக்தியாகக் கேட்டேன் 
அது 
அடேய் ஒளித்துக்கொண்டிருப்பவனே 
அவசரம் 
அப்படி எதுவுமேயெங்கள் 
கரைந்துவிடும் 
அடி மனதிலுமில்லை, 
வருடத்தின் மாதங்கள் 
உங்களுக்குத் தான் 
கட்டளைகளை 
அடிபணிய வைக்கும் 
கண்டுபிடிப்பு, 
எங்களுக்கும் 
தள்ளிப்போட முடியாத 
பிரசவ நேரங்களின் 
அவஸ்தை உண்டு,
வான அந்தரத்தில்
மானம் அலைக்கழிந்து
இறங்கிப் பரவிவிடத்தான்
விடுதலைஅடைகிறோம்,
உருண்டு பிரண்டு
விளையாடக் காத்திருக்கிற 
குழந்தைகள்
உன்னைப்போலக் 
குறை சொல்வதில்லையே,
உன் நடையை 
நிதானமாக்கி
வெண் பஞ்சுகளில் 
ஏறிநடந்து பார், 
நாலு பக்கமும் 
மேலாடை முடிய 
பாலாடைகளைத் 
திறந்து பார், 
புதிய பனியின் 
இளமை வாசத்தை
அள்ளியெடுத்து 
முகர்ந்து பார்,
வழுக்கி விழுந்தால் 
சாபங்களால் சபிக்காமல் 
ஆசையாக எங்களை 
ஒரு முத்தமிட்டு விடு, 
இறக்கி மூடிய
ஜன்னல்களை வெளிச்சமாகத் திற 
வெளியே 
வெள்ளை நிறம் 
உனக்காக அரங்கேகேற்றிக்
காத்திருந்து
விறைத்துப்போன
கவிதையே இருக்கும் என்றது !



                                                       கவிஞன்தான்  கற்பனையின் 
                                                     காதலி  என்றால் 
                                                அதெப்படி காலத்தில் அதன் 
                                     கனவுகள் களவாடப்பட மறந்து விடுவாயாவென்று   
                                                    மரணத்திடம்   கேட்டேன் 
                                           அதற்கது  அறுதியாகச்சொன்னது 
                                                                        அடேய்   
                                                      உறுதிகள்  இல்லாதவனே,  
                                                                     கவிதை
எழுதத் தொடங்கும்
முதல் வரியில்
மூச்சுவிடத் 
தொடங்குகிறது......,
எழுதி முடித்த
முடிவு வரியுடன்
அதுவாகப்
பேசத் தொடங்குகிறது.......
அதன்
உயிருக்கு
எழுத்துக்கு கொடுத்து ,
வரிகளுக்கு
வாழ்வு கொடுத்த,
அதன் வார்த்தைகளுக்கு
உணர்வுகொடுத்து ,
அனுபவத்துக்கு
ஆத்மா கொடுத்த,
அதன் சம்பவத்துக்கு
சாட்சி கொடுத்து ,
கவலைகளுக்கு
கண்ணீர் கொடுத்த........,
அதன் இருப்புக்கு
நம்பிக்கை கொடுத்து
இறுதிவரை
இதயம் கொடுத்த........
அந்தக் கவிஞ்சன்
கால விளிம்பில்
காணாமல்ப் போனாலும்,
காலமுள்ள
காலமெல்லாம்
அந்தக்கவிதை
அதுவாகவே
பேசிக்கொண்டேயிருக்கும்  என்றது 


.