Saturday, 1 October 2016

அலங்கார நகரம்

அலங்கார நகரம்- 001
******************************* 

பரபரப்பில்லாமல் உங்களுக்கு பிடித்தமானவரோடு கூடவே இருப்பது போன்றது ஒரு நகரத்தை நாலுவிதமாக ரசிப்பது . வேலையும் வீடும் காசும் பணமும் என்பதை எல்லாம் தாண்டி சந்தோசமான விசயங்கள் நிறைய இருக்கு ஒரு வாழ்கையில் என்று நாங்கள் வாழுமிடம் உத்தரவாதங்கள் தரலாம் . இந்த உலகில் சந்தோசம் எங்கோ பதுங்கி இருக்கு என்பதை உணரும்போது நீங்கள் முழு மனிதராய் உணர்வீர்கள். உங்களுக்கும் இதுதான் தேவையாக இருக்கிறது. எனக்கும்தான் !

                                              ஒஸ்லோ ஒரு சின்ன நகரம். பழமையும் புதுமையும் அருகருகே ஒன்றுக்கு ஒன்று இடைஞ்சல் இல்லாமல் கிளிபோலப் பொஞ்சாதி  இருந்தாலும் குரங்குபோல  வைப்பாட்டி வைத்திருக்கும்  நளின நகரம். என்னோட மொபைல்போனில் அந்த நகரத்தை வேலைக்கு கடந்து போகும்போதும் வரும்போதும் கிளிக் செய்த படங்களை ஒவ்வொன்றாக அலங்கார நகரம் என்ற தலைப்பில்போடுறேன். 


                                இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம் போலவே  எழுதுவதுக்கு  இன்னமும் படங்களும் இடங்களும்  இருக்கு. ஒருவித சலிப்பில்  பதினாறு சின்னப்  பதிவுகளோடு இதை நிறுத்திவிட்டேன் . எதையுமே  அதிகமாய் எழுதினால் வாசிக்கும் உங்களுக்கும்  துன்பமாக இருக்கும். இல்லையா ?

                                                 சிலநேரம் இங்கே  என் மொபைல் போன்  மஹாலக்ஷ்மி எடுத்த   படங்களில் பிரமாண்டமாகப் பிரமிக்க வைத்தாலும் ஒஸ்லோ நோர்வேநாட்டுப் பெண்களின் கொடியிடை இடுப்புப் போல ஒரு அடக்கமான, அவர்களின் கண்கள்போலவே மையிட்ட கண்களில் மான் விளையாடும் நீலமான சின்ன நகரம்...

                                                    


அலங்கார நகரம்- 002
******************************* 
பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னமே, புழக்கத்தில் இருந்த ஒஸ்லோ என்ற பெயரை, 1624 இல் நோர்வே, சுவிடனை ஆண்ட டன்மார்க் நாட்டு சக்கரவர்த்தி கிறிஸ்டியான் IV தன்னோட பெயரையும் ,அவர் அம்மாவின் பெயரையும் இணைத்து கிரிஸ்தானியா என்று மாற்றி இருக்குறார்.


                                             1905 இல் நோர்வே அந்த சக்கரவர்தியின் டேனிஷ் ஆக்கிரமிப்பில் இருந்து சுதந்திரம் பெற்றாலும் 1925 இல் தான் மறுபடியும் , ஆக்கிரமிப்பின் அடாவடித்தனத்தில் இழந்து போன ஒஸ்லோ என்ற பெயர் உத்தியோக பூர்வமாக இந்த நகரத்திக்கு மறுபடியும் கிடைத்திருக்கு.. 

                                             இன்றும் ஒஸ்லோவில் கிரிஸ்தானியா என்ற பெயரில் பல பழைய ஹோட்டல் கட்டிடங்கள் இந்த நகரத்தில் வரலாற்றின் கறுத்தப் பக்கத்தின் சாட்சியாக இருக்கு..

                                                 


அலங்கார நகரம்- 003
******************************* 
நவீன நகரத்தின் நடுவில் பழமையான தேவாலயம் இந்தப் படத்தின் பின்னணியில் உள்ள " ஒஸ்லோ டோம் சிர்கா " என்ற யாழ்பாணத்தில பெரிய பிஷப் பங்க்குதந்தை இருப்பாரே " பெரியகோவில் " அதுபோலதான் இதுவும் நோர்வேயில் முக்கிய தலைமை கிறிஸ்தவ அமைப்பின் சேர்ச் ! 

                                      நோர்வே நுற்றாண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்தவ நாடு இன்றைக்கு வயதான தலைமுறையில் உள்ள சமயப்பற்றான முதியர்வர்களை தவிர ,இளைய தலைமுறைக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலேயே " சேர்ச்" எந்தப் பக்கம் இருக்கு எண்டு தெரியாது !

                                    ஆனாலும் கிறிஸ்மஸ் போன்ற விடுமுறைகளை வேறுவிதமாக குடும்பங்களுடன் சமயம் சார்ந்து இல்லமால், ஒரு இனிய கொண்டாட்டா நிகழ்வு போல கொண்டாடுகின்றார்கள் !


                                                 


அலங்கார நகரம்- 004
*******************************
" ஒஸ்லோ கிராண்ட் ஹோட்டல் ", நோர்வேயின் பழமையான பெருமிதங்களைத் தங்கவைத்து காலத்தையும் தாண்டி நிற்கும் ஹோட்டல். பெயர் போலவே உலகப் புகழ்பெற்ற பிரபலங்கள் வந்தால் இங்கே தங்குவது இன்னும் பெருமை அவர்களுக்கு. அதனால் இங்கே சேவைகள் எல்லாமே " கிராண்ட் " தான்.

                                 ஒவொரு வருடமும் நோர்வே கொடுக்கும் சமாதான நோபல் பரிசு பெறுபவர்கள் இங்கேதான் " நோபெல் சூயுட் " என்றஅதியுயர் ஆடம்பரமாடியில் தங்கவைக்கப்படுவார்கள் ,சமாதான இரவு இங்கே தங்கியிருக்கும் அவர்கள் வெளியே கூடிநிற்கும் மக்களுக்கு " நோபெல் சூயுட் உப்பரிகையில் " இருந்து கையசைத்து நன்றி சொல்வது ஒரு சம்பிரதாயமாக நடக்கும் ஒவ்வொருஆண்டும்.

                                 வடஐரோப்பாவில் நோர்வேயின் முக்கிய அயல்எல்லை நாடுகளான டென்மார்க், சுவிடன் கொடிகள் இந்தக் கொட்டலின் கூரையில் சம அளவில் பறக்கவிட்டு இருப்பது பார்க்க இது ஸ்கன்டிநேவியாவின் அடையாளம் போல இருக்கும்.

                                      இங்கே உள்ள .நோபல் பரிசு பெற்றவர்களின் சுவாசத்தை உணர " நோபெல் சூயுட் " என்ற அதியுயர் ஆடம்பரமாடியில் தங்குவதுக்கு லட்சம் டொலர்களை ஒரு நாளில் விசுக்க முடிந்தவர்கள் "ஒன்லைனில் " பதிவு செய்யலாம்.

                                               
                                                    


அலங்கார நகரம்- 005
*******************************
ஒஸ்லோ நகரத்தை ஊடறுத்து மெதுவாக ஆடி ஆடி நடந்து கொண்டு இருக்கும் நதி என்ற நோர்க்ஸ் மொழிப் பெயரில் ஓடுவதை " ஆர்கிஸ்எல்வா " என்று சொல்லுறார்கள். இதை நதி என்றும் ஆறு என்றும் சொல்ல முடியாது. வெள்ளம் ஓடும் வாய்க்கால் போல இருக்கும், 

                              ஒஸ்லோவின் வடக்கு தொங்கலில் உள்ள " மரியடால்ஸ்வன் " என்ற நீர்த்தேக்கத்தில் இருந்து வழியும் உபரியான தண்ணிதான் உருண்டு பிரண்டு ஒஸ்லோ நகரத்தை வளைந்து நெளிந்து அரவணைத்துக் கொண்டு வெயிலோடும், மழையோடும், உறை பனியோடும் பாடிக்கொண்டு வந்து " ஒஸ்லோ பிஜோட் " கடலில் கரைந்தோடி முடிகிறது.

                                      சாம்பல் புறாக்கள் அடைக்கலம் பெற்று வாழும் நகரத்தின் முக்கிய பச்சைநிறப் புறநகரப் பேட்டையான " க்ருண்லாண்ட் " இல் வைத்து அதுபாட்டுக்கு விடுப்புப் பார்த்துக்கொண்டு போன " ஆர்கிஸ் எல்வாவை " வழிமறித்து , " க்குருண்ட் தோர்க் பார்க்கில் " உள்ள படித்துறையில் நின்று இந்தப் படம் எடுத்தேன். 


                                                          

அலங்கார நகரம் 006
******************************

                                                    அலைபாயும் அவசர நகரம் அமைதியான இடங்களையும் ஆங்காங்கே ஒளித்து வைத்திருக்கு. இந்த ரெஸ்டாரென்ட் இருக்கும் இடம் ஒஸ்லோ நகரத்தின் நடுவில் சீஸ், பெஸ்ட்டோ, பாஸ்டா,பிஸ்ஸா .இப்பவும் கல்அவனில சுட்டு,அதுக்கு நாக்கைத் தொங்கப்போடும் வைன் சகிதம் அடக்கமாக இருக்கும் சத்தமில்லாத ஒரு இத்தாலியன் மூலை. 

                                              இத்தாலி நாட்டு வைன், அந்த நாட்டின் பிரதேசங்களின் பெயரில் உள்ள உணவுகள் மட்டுமே பரிமாறப்படும் இந்த இடத்தில கோடை காலத்தில் இத்தாலியில் இருந்து வந்த பல நிறுவனங்கள் சந்தைபோல தற்காலிகமாக அமைத்து பல பொருட்கள் விற்பார்கள்.

                                 இந்த ரெஸ்ரோறேண்டில் ஆறுமாதம் வேலை செய்தால் இத்தாலியன் குக்கிங் டிப்பிலோமா கொடுப்பார்கள். இங்கே பரிமாறும் வேலை செய்யும் அழகான இளம் பெண்களைப் பார்த்துக்கொண்டு ஒரு வருஷம் வேலை செய்து போட்டு டிப்பிலோமா எடுக்காமல் போனாலும் பரவாயில்லை போல இருக்கும்.




அலங்கார நகரம் 007
******************************
மெடிடேர்னியன் மத்திய தரைக்கடல் நாடுகளில் உள்ள ஓட்டோமான் எம்பயர் கட்டடக்கலை அமைப்பில் ஸ்கண்டிநேவிய பளிங்குத் தாஜ்மஹால் போலவே இருக்கும் இந்தக் கட்டிடம் ஒஸ்லோவில்தான் இருக்கு. ஆனால் ஒஸ்லோவில் வாழும் பலருக்கு தெரியாது. காரணம் இது ஜெர்மன் நாஸிகள் நோர்வேயை ஆக்கிரமித்த கால இரண்டாம் உலக யுத்தகால இராணுவ தலைமை அலுவலகம்,

                                    இதுக்குள்ள இராணுவ மிடுக்கோடு நோர்வே ஆர்மியில் வேலை செய்யும் ஆண்களும் பெண்களும் போறதையும் வாறதையும் பார்த்தேன். என்னைப்போல வந்தேறுகுடிகள் சும்மா கண்டபாட்டுக்கு இங்கே முக்கிய இடங்களை இப்ப படம் எடுக்க முடியாது ,அதால ,என்னைக் கடந்து " லெப்ட் ரைட் லெப்ட் ரைட் " என்று " மாட்ச் பாஸ்ட் " இல் அழகா நடந்து போன ஒரு அழகான ஆர்மிப் பெண்ணிடம்

                                 " படம் எடுக்கவா,படம் எடுத்தால் பிரசினை ஒன்றும் இல்லையா "

                                   என்று அனுமதி கேட்டுக்கொள்கிறேன் பேர்வழி என்று கேட்டன் ,கேட்டுமுடியமுதலே நான் ஏதோ குண்டு வைக்க வந்தவன் போலப் பார்பாள் என்று நினைக்க, அவள் சிரிசுக் கொண்டு செல்பிக்கு போஸ் கொடுப்பது போல நெளிச்சாள் .

                                   நான் , " இந்தக் கட்டிடத்தைப் படம் எடுக்க முடியுமா என்று தான் கேட்டேன் " என்று அவள் போட்டு இருந்த உருமறைப்பு உடுப்புக்கு பயந்துகொண்டு கேட்டேன் ,

                                        " இப்பூ, ,,, நான் என்னமோ என்னைப் படம் எடுக்கப்போற்றாய் என்று எல்லோ நினைச்சேன் " என்று சொன்னாள்,,

                                           ஹ்ம்ம்... இதை எடுத்து என்னத்தைக் கிழிக்கப்போறாய் என்பது போல சிரிச்சுப் போட்டுப் போட்டாள்

                                             ஆனால் இப்பவும் இது இராணுவ தலைமை அலுவலகமா என்று தெரியவில்லை. ஜன்னல்களுக்கு உள்ளே எட்டிப் பார்க்க நல்ல ரொமாண்டிக் செய்யக்கூடிய இடம் போல இருந்தது. அதை விட இது இருப்பது ஒஸ்லோபியோட் கடல் விளிம்பில் உள்ள ஆர்கிஸ்ஹுஸ் பெஸ்டினிங் என்ற கோட்டைக்கு உள்ளே.

                                                      அண்மையில் நடந்தஒரு குழந்தைகளின் களியாட்ட விழாவுக்கு இராணுவம் ஒரே ஒருநாள் இந்த இடத்தை குழந்தைகளுக்காக திறந்துவிட்டார்கள். அந்த சந்தர்பத்தில் நானும் குழந்தைகளுடன் குழந்தையாக வாயுக்குள்ள விரலைவைச்சு சூப்பிக்கொண்டு இதுக்குள்ள உள்ளிட்டு என் மொபைல்போனில அமுக்கினேன்..




அலங்கார நகரம் 008
******************************
மேடை போட்டுக் கூட்டம் கூடிக் கோஷம் எழுப்பி ஆர்பரித்து ஆர்ப்பாட்டம் செய்ய,மேதினத்தில் தொழிலார்கள் தங்கள் உரிமைகளை வாய்கிழியக் கத்த,நோர்வேயில் வந்தேறிகளாக வாழும் அரசியல்அகதிகள் தங்கள் சொந்த நாட்டில்நடக்கும் வன்முறை மனித உரிமை மீறல்களை ஒன்றுகூடி முழக்கித்தள்ள, மரணதண்டனையை எதிர்த்து சர்வதேச மன்னிப்புச்சபை அடிக்கடி இரவுகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து உயிர்காக்கும்படி கேட்கும், 


                                             புரட்சிகர இசை நிகழ்சிகள், திறந்த வெளி அரசியல் விழிப்புணர்வு மேடை நடகங்ககள், என்று எல்லாருக்கும் அனுமதிக்கப்பட்ட விடுதலையின் முகவரியாக இந்த ஒஸ்லோவில் உள்ள பழமையான கட்டிடங்கள் அணிவகுக்கும் சதுக்கத்துக்கு பெயர் " யுங்க்ஸ்தோர்யட் " . 

                                                  நோர்வேயின் முக்கியாமான அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்கங்கள் இந்த சதுக்கத்தின் மூன்று பக்கமும்உள்ளது. ஒரு பக்கம் நோர்வே தழுவிய உழைப்பாளர் உரிமைகளை ஒருங்கிணைக்கும் சம்மேளனம் என்ற LO இருக்கு. 

                                               

                                             
.

அலங்கார நகரம் ..009
********************************
ஒஸ்லோ நகரம் ஒருகாலத்தில் அதன் முக்கியமான பெருமிதங்களை ஒரு சின்ன இடத்துக்குள் வைத்திருந்து இருக்கு போல இருக்கும் அதன் தொன்மையான வரலாற்று இடங்களைப் பார்க்கும்போது. இந்த கட்டிடம் பல்கலைக்கழகம். 


                                               இப்போது ஒஸ்லோ யூனிவேர்சிட்டி நகர விளிம்பில் நவீனமான கட்டிடங்களுக்கு இடம்பெயர்ந்தாலும் இதுதான் ஆதியான அறிவுத் தாயின் இருப்பிடம். இப்பவும் ஒவ்வொரு வருடமும் பட்டமளிப்பு விழா இங்கேதான் நடக்குது. பழமைகளில் இனிமை காணும் நோர்வே மக்கள், இந்தக் கட்டிடத்தில் கையை வைச்சு எந்த மாறுதலும் செய்யாமல் வகுப்பறைகள்,விரிவுரை மண்டபங்கள் நூற்றாண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்ததோ அப்படியே வைத்து இருக்கிறார்கள் உள்ளே. 

                                                    இப்ப சில நிர்வாக அலுவல்கள் இயங்கும் அலுவலம் மட்டும் ஒஸ்லோ யூனிவேர்சிட்டியின் தொடரான வரலாறையும் சம்பிரதாயத்தையும் கைவிடாமல்,பல நோபல்பரிசு பெற்ற விஞ்ஞானிகளை உருவாக்கிய பெருமையில் அதன் கம்பீராமான கல்வி அடையாளத்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கு.

                                                   


அலங்கார நகரம் ..010
********************************
" ட்ராம் " என்ற " நகர்வீதிப்புகைவண்டி" ஸ்கண்டிநேவிய நாடுகளின் தலைநகரங்களில் ஒன்றான ஒஸ்லோவில் அது பொதுமக்களின் அன்றாட பயணங்களுக்கும், அவசரமாக ஏறி இறங்கவும், முக்கிய புறநகரங்களையும் இணைக்கும் போக்குவரத்து சாதனமாகவும் ஓடிக்கொண்டிருக்கு.

" ட்ராம் " உல்லாசப்பிரயாணிகள் ஒஸ்லோ நகரத்தை அதன் வீதிகளில் ஓடிக்கொண்டிருக்கும் போதே விடுப்புப்பார்த்து சுற்றிப்பார்க்கவும் வசதியானது. ஒருகாலத்தில் மரத்தால் அதன் பெரும்பாலான பாகங்கள் வடிமைக்கப்பட்ட " ட்ராம் " வண்டிகள் இப்போது மொடேர்ன் ஆகி ஆடம்பரமாகிவிட்டது.

ஐம்பது வருடம் ஓடிக்களைத்த பழைய வண்டிகளை ஒஸ்லோவின் மஜெச்டுவா என்ற இடத்தில ஒரு மூயூசியம் இல வைத்து அழக்காகப் பராமரிகிறார்கள். ஒழுங்கு செய்தால் ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளை ஒரு நாள் அதில ஏற்றி நகரமெல்லாம் சுற்றிக் காட்டுவார்கள் எப்படி காலமும் கோலமும் வரலாற்றுக்கு சமாந்தரமாய் மாறியது என்று.

நகரத்தின் நடு வீதிகளில் போடப்பட்டுள்ள தண்டவாளங்களில் வழுக்கி நழுவும் " ட்ராம் " ஒரு காலத்தில் குதிரைகள் இழுத்தும், பின்னர் நிலக்கரி எஞ்சினிலும் ,அதன் பின்னர் டீசல் எரிபொருள் வலுவிலும் ஓடியது, இப்பெல்லாம் தலைக்கு மேலே தொங்கும் மின்சாரக் கம்பிகளைக் தடவிக்கொண்டு ஓடுவதால் சூழல் மாசடைவுக்கு அதன் பங்களிப்பு அறவேயில்லை.

இருந்தாலும் அதில் பயணிப்பது காலத்தில் பின்னோக்கி ஐம்பது வருடங்கள் போய் அமைதியான ஒரு காலத்தின் நதி ஓட்டத்தில் இசைந்து அதன் அலைகளில் தாலாட்டும் அசைவுகளில் மிதந்து அவசர வாழ்க்கையின் அர்த்தமற்ற சில மணித்தியாலங்களை மறக்கவைக்கும் அனுபவம் அதில எப்பவும் இருப்பதை பலமுறை உணர்ந்துள்ளேன் .

அயல்நாடான சுவிடனின் தலைநகர் ஸ்டாக்ஹோலமில் அது ஒரு காலத்தில் ஓடியது இப்ப ஓடுவதில்லை, ஆனால் அந்த நாட்டின் இரண்டாவது நகர் கோத்தன்பேர்கில் அது ஓடுவதைப் பார்த்தேன், டென்மார்க் தலைநகர் ஹோபன்கேகனில் அது இப்பவும் ஓடுது


அலங்கார நகரம்..011
******************************
எல்லா முக்கிய நகரங்களுக்கும் " லேன்ட் மார்க் " என்று ஒரு அடையாளப்படுத்தும் இடம்,அல்லது கட்டிடம் அல்லது ஏதோவொன்று இருக்கும். ஒஸ்லோவில் நகர நடுவில் இருக்கும் மத்திய ரெயில்வே நிலையத்துக்கு வெளியே உள்ள இந்தப் புலி தான் இந்த நகரத்தின் அடையாளம் போல இருக்கு.

நோர்வேயில் புலி இல்லை ஒரு கலைப்படைப்பாக புலி சிலை வடிவில் இருக்கு. இந்தப் புலி காட்டில் உள்ள புலி போல இல்லை.உயரமா இருக்கும். இவளவு உயரமா புலி இருக்காது . ஏன் இப்படி உயரமான புலியை வடிவமைத்தார்கள் என்று விளங்கவில்லை.

இந்த இடம் தான் பலரின் அடையாளம் சொல்லிச் சந்திக்கும் இடம். கோடையில் புலியைச் சுற்றி இந்த சதுக்கத்தில் பல நிகழ்வுகள் நடக்கும்,இசை நிகழ்சிகள்,கண்காட்சி என்று ஒரே அமர்களாமா இருக்கும் இந்த இடம் ,புலி அதை எல்லாம் கணக்கில் எடுக்காமல் அது பாட்டுக்கு யாருக்கு மேலே பதுங்கிப் பாயலாம் என்பது போல அதன் சிந்தனையில் எப்பவும் இருக்கும்.

ஒஸ்லோ வந்து போகும் உல்லாசப்பிரயாணிகள் அதிகம் படம் எடுத்தது இந்தப் புலியைதான் என்று சொல்லுறார்கள். பாயும் புலி பண்டாரவன்னியனின் வழிவந்த புலம்பெயர் வீரத்தமிழர்கள் அதிகம்பேர் வசிக்கும் நோர்வேயில் புலி அடையாளமாக இருப்பது ஒருவிதத்தில் தாய்த்திருநாட்டில் ஒரு புலிசிலை வைக்கமுடியாத இனத்திற்கு பெருமையாக இருக்குபோல..


அலங்கார நகரம் 012
******************************
உலகின் எல்லா நாடுகளிலும், முக்கிய நகரங்களில் " ஒபேரா ஹவுஸ் " இருக்கு. அதன் தமிழ் பெயர் எனக்கு தெரியாது. நான் நினைப்பது அதை " செவ்வியல் அரங்கு " என்று அழைக்கலாம் என்று. அதிகமாக இதில பல நூற்றாண்டுகள் முன் இசை அமைக்கப்பட்ட கிளாசிகல் சிம்பொனி, கிளாசிகல் நாடகம்,நடனம் தான் நடக்கும். நிறையப் பொறுமையும் கலைகளில் காதலும் வேண்டும் அதை ரசிப்பதுக்கு. துரதிஸ்டவசமாக அது ரெண்டுமே என்னிடம் இல்லாததால் உள்ளே போய் நேரத்தை வீணாக்க விரும்புவதில்லை..

பத்து வருடங்களுக்கு முன்னர் ,ஒஸ்லோ நகரம் " பழய முறத்துக்கு சாணி, கிழ பொணத்துக்கு சோறு.." எண்ட பழமொழி போல ,சும்மா அலை கரையை அடித்துக்கொண்டு கிடந்த தரவையான இடத்தில இந்த " ஒபேரா ஹவுஸ் " கட்டினார்கள். கொஞ்சம் எழுப்பமா வெளிய தெரியாவிட்டாலும் உள்ளுக்க நல்ல பிரமாண்டமா இருக்கும். நிறைய மில்லியன் குறோணர்களை விழுங்கியது இந்தக் கட்டிடம் இப்படி எழுந்து நிற்க.


அலங்கார நகரம் 013
******************************
வாழ்கையே ஓரு நாடகம் போலவும் , அந்த மேடையில் மனிதர்கள் எப்பவும் பரபரப்பாக இயங்குவது போலவும் மிகவும் அவசர மனிதர்கள் அதிகம் அன்றாட தேவைகளுக்கும், வேலைகளுக்கும் குறுக்க மறுக்க நின்று நிமிர்ந்து பார்க்க நேரமில்லாமல் கடக்கும் இறுக்கமான காற்றில் வரலாற்று வாசம் வீசும் இந்த சுற்று வட்டாரத்தின் பெயர் " ஹென்றிக் இப்ப்சன் சதுக்கம் ".

இந்தப் படத்தில் உள்ள கம்பீரமான, அதன் நிறம் மாறினாலும் புகழ் மங்காத பழையகாலக் கட்டிடம் "நேஷனல் தியட்டர் " என்ற ஹென்றிக் இப்சன் நாடகங்கள் அரங்கேறிய இடம். இதற்கு அருகில் , தங்களில் இலக்கியப் பிதா ஹென்றிக் இப்சனுக்கு வெங்கலத்தில் சிலை வைத்து கவுரவிதுள்ளார்கள் நோர்வேயிய மக்கள்.

இப்சன் எழுதிய நாடகங்கள் இன்றைக்கும் இங்கே நடக்குது ! அவரின் இலக்கியதின் மீது மதிப்புள்ள பல வெளிநாட்டினரே வந்து பார்க்கின்ற முக்கிய காலங்கள் தாண்டிய கலைச் சின்னம் இது ! அலங்கார நகரத்தின் நடுவில் இப்பவும் கசங்காமல் இருக்கும் நசினல் தியட்டர் ஒஸ்லோ வாசிகளின் கலாச்சார அடையாளம்.

ஹென்றிக் இப்சன், நோவேயில் 18ம் நுற்றாண்டில் இந்த அலங்கார நகரத்தில் ஏழையாகப் பிறந்து, அநாதை போல வளர்ந்து , பின் நாட்களில் ஒரு முதல்தர மனிதராக வசித்த ஒரு நடக்க ஆசிரியர். அவரை ஆங்கில மேடைநாடக இலக்கியத்தின் தந்தை வில்லியம் சேக்ஸ்பியருக்கு அடுத்ததாகச் சொல்லுறார்கள் !

இப்சன் எழுதிய உலகப்புகழ் பெற்ற நாடகம் "பொம்மை வீடு " .அது ஒரு சமூகப் பிறழ்வு நாடகம். ஹென்றிக் இப்சன் எழுதிய எல்லா நடகங்களும், அந்தக்கால , வறிய, ஆண் ஆதிக்க , நோர்வேயின் 18 ம் நுற்றாண்டு சமூக வாழ்கையில் பெண்கள் எதிர்கொண்ட அவலங்கள் என்கிறார்கள் !

நோர்வே மக்கள் எதையுமே சிம்பிளாக ஜோசிக்கும் மேலோட்டமான எண்ணம்களில் வாழ்கையின் பிரஞ்ஞையை மிதக்கவிடும் மக்கள். அவர்கள் இண்டலக்சுவல் அறிவு சார்ந்த விடயங்களில் அதிகம் ஆழமாகப் போகமாட்டார்கள். தனி மனிதர்களாக சிந்திப்பவர்கள் ஆனாலும் தங்களின் கலாச்சார அடையாளங்களை பேணிப் பாதுகாப்பதில் ஒரே அலைவரிசையில் சிந்திக்கிறார்கள் என்பதே அலாதியான செய்தி.

நான் ஒரு நாடகமும் இதுக்குள்ள போய் இன்னும் பார்க்கவில்லை ! ஆர்வமும் இல்லை. இதுக்குள்ளே இப்பவும் நாடகம் பார்க்கப் போகும் மக்கள் உண்மையில் காலமில்லாக் காவியங்களின் காதலர்கள் . ஒரு வேளை எனக்கு இன்னும் அந்தளவு இலக்கிய முதிர்ச்சி வரவில்லையோ தெரியவில்லை. பொதுவாக எனக்கு 18ம் நுற்றாண்டு கிளாசிக்கல் வகை இலக்கிய விசியங்கள் கேட்க ,புத்தகங்கள் படிக்க , நாடகங்கள் பார்க்கப் பொறுமை இல்லை ,

இந்த அலாதியான ஒஸ்லோ நகரத்தில் அந்த வரலாற்று முக்கிய இடங்களுக்கு முன்னால நிண்டு வேடிக்கை பார்த்து, படம் எடுத்து அதைப் போட்டு, அறிவுக்கொழுந்து போல அவைகளின் வரலாற்றை எழுதுவதில் மட்டும் ஒரு " அதிரினளின் கிக் " கிடைக்குது. 


அலங்கார நகரம் 014
******************************
ஒரு சமுதாயம் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவ உண்மைகளை கலையினுடாகக் காட்சிப்படுத்தல் என்ற வடிவில் மிக எளிமையாக இந்த உலகிற்கு முன்னோடிகளாக முன் வைக்கும் நகரத்தில் ஒஸ்லோவும் ,அதன் கலாரசனை மக்களும் பிரகாசமான உறுதிமொழிகளோடு இருக்கிறார்கள் என்று அந்த நகரத்தின் தெருக்களில் நடந்து அலையும் எல்லாருமே அவதானிக்க முடியும்.

ஜனநாயக நோர்வேயை கட்டி ஆளும் ஜனங்களின் பாராளுமன்றம் தலைநகர் ஒஸ்லோவில் மிக நவீனமா இடத்தில இருக்கு. அதற்கு முன்னால் எப்பவுமே கலைப்படைப்புகள் உள்ள சிற்பங்கள் ஒவ்வொரு மாதமும் மாற்றி மாற்றி காட்சிக்கு வைப்பார்கள்.

சில நாட்களின் முன் இந்தப் படத்தில் உள்ள ஒரு மரவீட்டை அப்படியே அத்திவாரத்தோடு கிளப்பிக்கொண்டு வந்து பாராளுமன்றதின் முன் காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள். இது சிலை இல்லை உண்மையான மனிதர்கள் வாழ்ந்த ஒரு உயிரோடு உறவாடிய வீடு. ஆனால் இந்த மர வீட்டுக்கு நிறைய வரலாற்றுப் பெறுமதி இருக்கு.

இந்த வீட்டை முதலில் பார்த்த போது யாரோ ஒரு பெரிய வில்லா போன்ற வசந்தமாளிகை வீட்டில் வாசித்த நோர்வே பணக்காரர் " கீப் " போல " செட் அப் " ஆக வைச்சிருந்த வாணி ஸ்ரீ போன்ற ஒரு சின்ன வீட்டுக்கு " கன்னத்தில் தேன் வழிய அதைக் கிண்ணத்தில் ஏந்துகிறேன்.. " என்று பாடி ரகசியமாக ரொமான்ஸ் விடக் கட்டிக்கொடுத்த " சின்னவீடாக " இருக்குமோ என்றுதான் என்னோட குறுக்காலபோன புத்தியில் ஜோசித்தேன்.

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் நோர்வே, மீன்பிடி ,விவசாய, கைத்தொழில் நாடு. அந்த நேர நோர்வே மக்கள் சொல்லும்படியாக
செல்வச்செழிப்பில் சந்தோசமாக வாழ்ந்தார்கள் என்று சொல்லமுடியாது, முக்கால்வாசி மக்கள் நாட்டுப்புறங்களில் வாழ்ந்து உள்ளார்கள். அவர்களின் மிகக்குறைந்த அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய ஒரு மலிவான வீடு தேவையாக இருந்து இருக்கு. இந்த வீடுதான் அது. இது ஒரு " ஸ்டாண்டட் மொடல் " போல நோர்வேயில் அதிகம் கட்டப்பட்டு வசிக்கப்பட்ட வீடு இது.

காட்சிக்கு வைத்துள்ள இந்த வீட்டின் உள்ளேயும் போய்ப் பார்க்கலாம். இப்படியான ஒரு வீட்டுக்கு உள்ளே போகும் சந்தர்பம் எப்போதுமே கிடைத்ததில்லை. அதால் உள்ளிட்டு ஆராய்ந்து பார்த்தேன். மிகவும் எளிமையான உள்ளக அமைப்பு. இரண்டு மாடித் தட்டு. மிகக் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சின்ன இடமும் தேவை இல்லாமல் வீணாகப்படவில்லை. உறைபனிக் காலத்தில் சூடேற்றும் வசதிகள் சென்ற நூற்றாண்டின் தொழில்நுட்பதில் அமர்க்களமாக இருந்தது.

" ஆர்கிடெக்சர் " என்ற கட்டடக்கலையில் ஒரு கட்டிடம் எப்பவுமே " பங்சனல் ப்ரோஸ்பெக்ட் " என்று மிகச் சிறந்த இயங்குநிலையின் முழுமையான சாத்தியங்களில் இருப்பது போல வடிவமைப்பதுதான் சவால் என்று சொல்லுகின்றார்கள். இந்த வீட்டை வடிவமைத்தவர் அந்த விசியத்தில் நிறையவே ஜோசித்து வடிவமைத்த மாதிரி இருக்கு அதன் வெளியைத் தேவையோடு இடம் நிரப்பும் கோணங்களைப் பார்க்கும்போது.

மிகவும் மலிவான, கைக்கு எட்டிய தூரத்தில் உள்ள , அபரிமிதமாக அள்ளி வீசிக்கொண்டு வளரும் மரங்கள்,,கருங்கல்லுகள் போன்ற சுற்றுச்சூழலில் இருந்து கிடைக்கக்கூடிய கட்டுமானப் பொருட்களில் இதைக் கட்டி இயற்கையின் முகவரியை வாசல் படியிலேயே சொந்தமாகிவிட்டுப் போய்விட்டார் இதை வடிவமைத்த ஆர்கிடெக்சர்.

இந்த வீட்டிற்கு உள்ளே நின்ற சில நிமிடங்களே போதுமானதாக இருந்தது ஒரு தேசத்தின் வரலாற்று வாசத்தை முழுமையாக மூச்சில் உள்வாங்கிக் கொள்ள. முன் ஒரு காலத்தில் யாழ்பாணத்தில் இருந்த எங்களின் சொந்த வீட்டில் இருந்த ஆட்டுக்கொட்டிலில் நிற்பது போலவே கனதியாக இருந்தது அந்தக் காற்றின் பெறுமதி .

தங்களின் வாழ்வின் தொடர்ச்சி எப்படி ,எங்கிருந்து,வந்தது என்று நகர மக்களுக்கு யதார்த்தத்தை சொல்லும் விதமாக இந்த வீட்டை காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள். இந்த நாட்டின் முன்னோடிகள் பலர் இப்படியான ஒரு வீட்டில் இருந்தே வந்திருக்கலாம். அவர்களை வாழ வைத்து மனிதர்களாக்கி இந்த வீடு நாட்டுக்குக் கொடுத்து இருக்கலாம்.

ஏன், பின்னுக்கு உள்ள நாடாளும் இந்த பாராளுமன்றத்தில் நாட்டை நிர்வகிக்க சட்டம் இயற்றும் ஒரு அரசியல்வாதியும் கூட இந்த மாதிரியான ஒரு வீட்டில் இருந்து பிறந்து கையைக் காலை உதறித் தவழ்ந்து, ஒரு இலட்சியத்தோடு வளர்ந்து வந்திருக்காலம். யாருக்குத் தெரியும் !


அலங்கார நகரம் 015
******************************
ஆர்கிஸ் எல்வா ஒஸ்லோ நகரை அதன் வடக்கில் உள்ள நோர்ட்மார்க்கா வடக்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகும் நீர்விழ்ச்சிகளின் தண்ணியை மரியடால்ஸ்வன் என்ற நீர்த்தேகத்தில் சேமித்து அதன் உபரித் தண்ணி பரவிப் பாஞ்சு ஆரம்பித்து ,வளைந்து வளைந்து இடம் கிடைத்த இடைவெளிகளில் நுழைந்து,மெல்லக் கடந்து நகரத்தை நளினமாக ஊடறுக்கும் சின்ன ஆறு.

ஒரு காலத்தில் இந்த ஆற்றின் தண்ணியில் இருந்து இயந்திரங்களை இயக்கம் வலுவை எடுத்து கைத்தொழில் தொழிற்சாலைகள் அதன் இரண்டு பக்கமும் இருந்து இருக்கு. இப்பவும் இந்த ஆற்றின் கரையில் அமைக்கப்பட்ட நடைபாதையில் நடந்து போனால் கைவிடப்பட்ட அந்த தொழிற்சாலைகளைப் பார்க்கலாம்.

ஆர்கிஸ் எல்வா நெருக்கமான நவீன குருன்லான்ட் புறநகரத்தைக் கடக்குமிடத்தில் இந்தப் படத்தை எடுத்தேன்.இடங்களை வளைத்துப்போட்டு கட்டிடங்கள் எழும்பியுல்லாதால் நெருக்கமான ஒஸ்லோ நகரத்தை ஆர்கிஸ் எல்வா அண்மிக்கும் போது ஒடுங்கி சின்ன ஒரு வாய்க்கால் போலதான் இப்ப நகருது .

இந்த இரும்புப் பாலமும் மிகப்பழமையான பாலம். இப்படி ஒரேயொரு பாலம்தான் ஒஸ்லோவில் இருக்கு என்கிறார்கள். அதனால் இதை அதன் பழமையில் எந்த மாற்றமும் செய்யாமல் மிகவும் கவனிப்போடு பராமரிகிரார்கள்.

" ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் " என்று தமிழ் முன்னோர்கள் எழுதி வைத்த வரிகளை நிரூபித்துக்காட்டியபடி ,கோடையில் தெளிந்து ஓடியும், உறைபனியில் உறைந்தும், அதன் இரு மருங்கிலும் வளைந்து வழிவிடும் மரங்களோடு பேசிக்கொண்டு ஆர்கிஸ் எல்வா அதன் கரைகளில் சந்தித்த மனிதர்களின் அனுபவங்களை வயசாகச் சேர்த்துக்கொண்டு ஒடிக்கொண்டிருக்கு....


அலங்கார நகரம் 016
******************************
ஒஸ்லோ வீதிகளில் அப்பப்ப அதிசயங்களுக்கு குறைவில்லை. " திசைமாறி அலாஸ்காவுக்கு வந்த ஒட்டகம் ..." என்ற கவிஞ்சர் வ ஐ ச ஜெயபாலன் ஐயாவின் கவிதைதான் நினைவுக்கு வந்தது சட்டென்று பார்த்த போது. என்னைப் போன்ற வெய்யிலும் வெக்கையும் வருடம் முழுவதும் அபரிமிதமாகக் கிடைக்கும் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்த எல்லாருமே சில நாட்களாவது இந்த நகரின் தாங்கமுடியாத குளிரைத் திட்டி இருப்பார்கள். 

                                                           ஒஸ்லோ நகரின் முக்கிய தெருவில் இந்த ஒட்டகத்தைப் பார்த்தபோது அதுவும் எங்களைப் போலவே முகத்தைச் சுழித்து " எங்கே எனது முடிவில்லா மணல் வெளிகளும் பேரீச்சைமரங்களும் ..." என்பது போல விந்தையாகப் பார்த்தது. ஒரு உறைபனிக் குளிர்நாட்டில் அரேபியன் கனவு போலவே இந்த பாலைவனக் கப்பலை வைத்து அழகு பார்கிறார்கள் நோர்வே மக்கள். 


Wednesday, 28 September 2016

பார்வையற்ற உலகம் !!!

கதைகள்  உண்மையாக  இருக்கவேண்டிய அவசியமில்லை. எல்லா  உண்மைகளும் கதைகளாக வரவேண்டிய அவசியமும் இல்லை. தன்னிலையை முன்னிறுத்தி நான், என் அனுபவம், என் வாழ்வினைப் பாதைப் பயணம் என்று எழுதும்  எல்லாவற்றிலும் இருக்கும்  நான் வேறு ,புனைவுகளின் அபரிமிதமான சுதந்திரத்தை எடுத்து நான்  என்று  எழுதும்  நான் வேற . அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது இதுதான் ஒரு கதைசொல்லியின் உண்மையான ஆத்மாவின் குரல் .

                                                அகத்தின்  அழகு  முகத்தில் தெரியும்  இது எவளவு பெரிய உண்மை என்பது சின்னவயசில் அந்த சொல்லாடலைப் படித்த போது பெரிதாக ஒன்றும் அர்த்தம் கொடுத்ததில்லை . வாழ்க்கைப் பாதையில் பலவிதமான அனுபவங்கள் சேர்ந்துகொள்ளும் போது அதன் பரிமாணம் இன்னொரு படிமுறையில் பல்வேறு காரணகாரியங்களுடன் நம்மை அறியாமல்த் தொடுத்துவிடுகிறது. அந்தத் தொடர்சிகள் சுவாரசியமானவையாகவும் இருக்கலாம் .  

                                                    ரயில்ப் பயணங்களும், ரயில்ப் பயணிகளும் எப்போதுமே சுவாரசியமான பல வாழ்க்கை அனுபவதைத் கொடுபார்கள்   என்பது தெரியும். ஆனால்  மேலை நாடுகளில் ரெயில் பயணங்கள் எப்போதுமே திட்டமிட்ட நேர அவதிக்குள் அல்லாடுவதால் பல விசியன்களைப் போகிறபோக்கில் கவனிக்க முடிவதில்லை. பலவருடமாக  காலையும்  மாலையும்  ஒரு ரெயில் பயணியாக நகரத்தை ஊடறுத்துப் பிரயானிப்பதால்  அதை  உணரமுடிகிறது. 

                                               எவளவுதான் இயல்பாக ஒரு பயணத்தில் நமக்கு  அறிமுகமில்லாத  பல  மனிதர்களின் பல சம்பாஷனை உரையாடல்கள் தண்டவாள சத்தங்களுகுச்   சமாந்தரமாய்க்  காதுகளைக் கடந்தாலும் ,ஏறுவதில்   அவசரமும்  ஏறி  இறங்குவதில் இடங்களைத் தவறவிட்டு விடுவோமோ என்ற  எச்சரிக்கையிலும்  சில நல்ல தருணங்கள் தரும் பல படிப்பினைகளையும்  கடன் வாங்கியும் பட்டினி கல்யாணம் பண்ணியும் சந்நியாசி போன்ற ஒரு நிலமையையை உண்டாக்கி விடும். 

                                                          லிண்டருத்  மெட்ரோ  ஸ்டேசனில் நான்  ட்ரைன்  ஏற  நின்றபோது  அவளும் நின்றாள் . வெள்ளைப் பிரம்பைத் தட்டித் தட்டிப் கைப்பிடிக்கும் சட்டங்களைப் பிடித்துப்  பிடித்து  ஒவ்வொரு அடியையும் மேல்நோக்கி கவனமாக வைத்து  படியேறி வரும்போதே அவளைக் கவனித்துவிட்டேன் . பார்வையர்வர்களின் உலகம் எப்படி இருக்குமென்று அறியும் ஆவலில்  அவள் இருக்கைக்கு  முன்னே போய் இருந்து  ,அல்லது அருகில் கவனிப்புக்கள் இடஞ்சலில்லாத ஒரு அருகிலிருந்து  கவனிப்பதுதான் என்னோட பிளான் ஆக அப்போது இருந்தது.

                                                       முக்கியமாகப்  பார்வையற்றவளின் உலகம்  என்று  ஒரு  கவிதை எழுதும் அற்ப  ஐடியாதான்  முதலில் வந்தது. கவிதைமொழியும் நேரடி விவரணை வார்க்கும்  வர்ணனைகளும் கைகோர்க்கும் போது கவிதை  அடுத்த தளத்துக்குப் போகுமென்று புகழ்பெற்ற  கவிஞ்சர்கள்  சொல்கிறார்கள்.   ஏனென்றால் கவிதை  எழுதுவதுக்கு  இந்த  நேர்வே நாட்டில்  சம்பவங்களோ, காட்சிகளோ அதிகம் இல்லை. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது மாதிரி தோண்டித் துருவி  எடுத்து  ஏற்கனவே  நிறைய எழுதி எழுதி எனக்கே அலுத்துப் போய்விட்டது. 

                               ஆனால் இதில  நிட்சயம்  ஒரு  கவிதைக்குக்  கரு கிடைக்குமென்றுதான்  என்னோட  மனது சொன்னது. பார்வையற்ற ஒரு பெண்ணின் புலன் இழப்பைச் சாதகமாகப் பயன்படுத்துவது மனிதாபிமான  இடறலாக இருந்தாலும்  முக்கியமாக  மனசாட்சிக்கு  விரோதமிலாமல் பார்க்க நினைத்தேன் .  அதனால்  அவள்  ஏறிய  பெட்டியில் அவளுக்குப்  பின்னால் ஏறினேன். ஆனால் அதன் பின் நடந்த சம்பவங்கள் அந்த உரையாடல் எதிர்பார்க்காத திசைகளில் ஒரு கதையாக  நகர்த்தும்படி  நிகழ்ந்தேவிட்டது .

                                         ஜன்னலுக்கு சற்று விலகி இருந்த தனி இருக்கையில் தடவித்தடவி இருந்தாள். வெள்ளைப் பிரம்பை ரெண்டாக மடித்துப் பின் நாலாக மடித்துப் பின் எட்டாக மடித்தபோது அது கையடக்கமான ஒரு குச்சி போல வந்துவிட்டது. அதை அருகில் கால்களில் உரசும்படி வைத்தாள் . தோளில் கொழுவி இருந்த பையைப் கழட்டவில்லை. முக்கியமாக அவள் கறுப்புக் கண்ணாடி போட்டுக் கண்களை மறைக்கவில்லை . உடம்பை இயல்பாக்கி அதைவிட இயல்பாக இருக்கையில் சாய்ந்துகொண்டாள் 

                                            நான் அவளுக்கு  முன்னுக்கு இருந்த வெற்று இருக்கையைத்  தேர்வு செய்து  மிக மிக அமைதியாகப் போய் இருந்தேன். அவள் தலையைக் குனிந்து ரெண்டு கண்களின் இமைகளையும் வேகமாக அடித்து அடித்து என்னவோ மனதுக்குள் தேடுவது போல இருந்த நேரம் தான் அவள் கண்களைப் பார்த்தேன். மஞ்சள் பழுப்புக் கலரில் ரத்தநாளங்கள் கோடுகீறி  விழித்திரையில் பாசிபிடித்து வெளிக் கருவளையங்களில்  இருண்டு  இருந்தது 

                                                   அந்த ரெயில் பெட்டியில் அதிகம் பயணிகள் இருக்கவில்லை.  இருந்த சில இளைவர்கள் கையடக்கித் தொலைபேசியில் முகத்தை வலைபோட்டு  ஓடவிட்டுக் கொண்டிருந்தார்கள் . ஒரு வயதான கிழவி பத்திரிகையில் அதிஸ்டலாபச் சீட்டு வெற்றி விபரத்தை வாசித்கொண்டிருந்தா, நடுத்தர வயதான ஒரு நேரமில்லா  வெறிக்குட்டி தொலைபேசியில் அவனோட காதலியோடு  உரத்துக் கத்திச்   சண்டை பிடித்துக்கொண்டிருந்தான். இரண்டு நடுத்தரப் பெண்மணிகள் விண்டர் குளிரில் இருந்து தப்ப இந்தமுறை   சூடேற்ற  எங்கே போகலாம்  என்று விடுமுறை சந்தோசங்களில் கதைத்துக்கொண்டிருந்தார்கள்

                                            இப்போது நான்  அவளை  கொஞ்சம்  பார்த்துவிட்டேன் .அந்த நேரம்   என் நோக்கம்  அவளின்  புற அழகைப் பார்ப்பது அல்ல. கனவில வந்த பணம் செலவுக்கு  உதவாது என்றது போல அழகான பெண்கள் எப்பவுமே என் வாழ்கையில் எம்பிக் குதிச்சு வந்து வீழ்ந்ததேயில்லை .அது   எனக்கு நல்லாவே தெரியும் .  ஆனால்  நான்  நினைத்ததுக்கு மாறாக அவளிடம் ஒரு  நளினம் அவள் தோற்றத்தில் இருந்தது.   அதனால்  அவளைப்பற்றி சொல்கிறேன்.  ஏனென்றால் அந்த நளினம்தான் உரையாடலின் முடிவில் இன்னொரு திசைக்கு  இருவரையும் விரும்பியே தள்ளி இருக்கலாம் என்று நினைக்கிறேன் . 

                                          நேரமொதுக்கி முகத்துக்கு  பவுண்டேசன்  மேக்கப் போட்ட  எந்த அடையாளமும் இருக்கவில்லை. மிக இயல்பான முகம் ,அது அகல் வட்டத்தில்  பெய்த பகல் மழை போல இன்னும் இயல்பாக அக்கம் பக்கம் பார்த்துப்பார்த்துப் பேசக்  கண்களைத்திறந்து மூட ஒருவிதமான சங்கடத்தில் இருப்பது போல இருந்த இமை மயிர்களுக்குத்  தென்னம் ஓலைபோல    கொஞ்சம் மஸ்கார தடவி இருந்தது  ஓரளவுக்கு வெளிப்படையாகத் தெரிந்தது .

                                                        மெல்லிய உடட்பயிட்சி  செய்யும் உ ருவம், என்னைவிடக்   குறைந்தது  நாலு  செண்டிமீட்டர்  உயரம், ஒடுங்கிய அவரைக்காய்  முகம், ஸ்கண்டிநேவியப்   பொன்னிற முடிகள். நடு வகிடு பிரிச்சு பிரில் ஸ்டைலில்  பறக்க விட்டிருந்தாள். கண்களைத் திண்டுவிடும் பூசணிக் கன்னம் , நீண்ட கல்லாடம் போன்ற கழுத்து. அளவான மாதுளை மார்பு, நீண்ட ஹென்னேஷ் அண்ட் மாரிஸ்  ஓட்டுமன் கலக்சன் வூல்  கவுன் போட்டிருந்தாள் , அதே கலரில் முழங்க கால்களைப்  பாதம்வரை மறைக்கும் ச்டோக்கிங்க்ஸ்  போட்டிருந்தாள் .நல்லகுருநாதன்  நாக்கில் வந்து  உக்காருவதால்   உள்ளதை உள்ளபடி சொல்லுறேன் அவள்மிக அழகாக இருந்தாள். 

                                                  எனக்கு  இருந்த மிக முக்கிய பிரசினை அவளோடு எப்படிக் கதையைத் தொடக்குவது. ஏனென்றால் என்னால் இலகுவாக வெட்கமின்றி யாரோடும் கதைக்க  முடியாது. அப்பிடி இல்லை  என்று வில்லங்கமாகத் தொடக்கினால்  கல்லடிச் சித்தன் போனவழி காடுமேடெல்லாம் தவிடுபொடி போல  அது  வேற வேற எங்கேயோ எல்லாம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்  இழுத்துக்கொண்டு போய், முடிவில் நடுமண்டையில் நாரத்தங்காய் தேச்சுப் பித்தம் இறக்கவேண்டிய ஒரு நிலைமைக்குள் கொண்டுவந்து விடும் . அதால சத்தமில்லாமல் இருந்தேன் .

                                            அவள் கைப்பையில் இருந்து ஒரு கட்டு பேப்பர்கள் எடுத்தாள், மடியில் வைத்தாள்  கட கட என்று பத்து விரல்களையும் அதன் பேப்பரில் தடவித் தடவி வாசித்துக்கொண்டு போனாள். அந்தப் பேப்பர்கள் மொத்தமாக இருந்தது. அதில் புள்ளிகள் ஆழமாகக் குத்திய அடையாளங்களை இங்கிருந்தே என்னால் பார்க்க முடிந்தது . ஒவ்வொரு வசனம் முடியும் போதும் ஒவ்வொரு உணர்ச்சி முகத்தில் காட்டினாள். பிரகாசமான  அவள்  வயது சுமாராக  இருவத்தி இரண்டு போல இருக்கலாம் போலிருந்தது. பெண்கள் உணர்ச்சி காட்டும்போது அவர்கள்  வயதை ஓரளவு யூகிக்கலாம் என்று எனக்குத் தெரியும் .

                                       சில நேரம் தலையைச்  சரித்து ஜோசிதாள். சுண்டுவிரலைத் பேப்பர் நுனியில்   தட்டினாள். வாய்க்கும் தெரியாதபடி மெல்லெனச் சிரித்தாள். பக்கங்களைப்  பெருவிரலால் ஒற்றி எடுக்கும் லாவகத்தில் அவள் ஒரு தேர்ந்த படிப்பாளி என்பது நிறுவப்பட்டுக் கொண்டிந்தது. ஒரு பக்கம் முடிந்து அடுத்த பக்கம் புரட்டும்  இடைவெளியில் முகத்தை இறுக்கி வைத்தாள். மற்றப் பக்கம் புரட்டிய முதல்  வசனத்தோடு  அவள் மூக்கு ராகம ஜம்புக்காய் போல சிவத்து விட்டது . ஒரு இடத்தில பத்து விரல்களையும் ஓய்வாக்கி அண்ணாந்து மேலே பார்த்தாள். அவள் கழுத்து வியர்த்திருந்தது.

                                          அவள்  என்ன  கதை படிக்கிறாள் என்று சத்தியமாய்  எனக்கு  விளங்கவில்லை.   ஒருவேளை அவள் மேற்படிப்பு யூனிவெர்சிட்டியில்  படித்துக்கொண்டு இருந்தால்  அவள்  படிப்பது அவள்  ஆராச்சி சார்ந்த பட்டப்படிப்பு  புத்தகமாக இருக்கலாம். அல்லது அவள் வேற என்னவாகவாவது இருந்தால் அதுவும் வேற   என்னவாகவும் இருக்கலாம். ஆனால் எழுத்தும்   வாசிப்பு உணர்வும் சேர்ந்து அவளுக்கென்று ஒரு பிரத்தியேகமான உலகத்தை அந்தக் கணங்கள் வடிவமைத்துக் கொண்டிருந்தது  மட்டும்  என்னவோ உண்மைதான். 

                                         படக்குப் படக்கு என்று பதின்மூன்று  பக்கங்களை வாசிதுப்போட்டு அமைதியாக இருந்தாள். அது எப்படி சரியாகப்  பதின்மூன்று பக்கங்கள் என்று சொல்லுறேனா,,ஹ்ம்ம்,,நான்தான் எண்ணிக்கொண்டு இருந்தேனே. இந்த அமைதியில் கதையைத் தொடக்க நினைத்தேன். முதல் பிரசினை அவள் என்ன மொழி கதைப்பாள் என்று தெரியவில்லை. பார்க்க நோர்வேக்காரி போல இருந்தாள். ஆனால் இந்த ரெயிலில் அதிகமாக ஒஸ்லோ  பிளிண்டரன் யூனிவெர்சிட்டி  வெளிநாட்டு மாணவர்கள் அதிகமாக பயணம் செய்வார்கள். 

                             ஏனென்றால் நான் இறங்கவேண்டிய ஸ்ட்சனுக்கு மற்றப் பக்கம் தான் யூனிவெர்சிட்டி ஸ்டுடண்ட்ஸ் தங்கிப்படிக்கும்  பதினைந்து  வானுயர தொடர்மாடிகள் இருக்கு . அதனால் அவள் ஒரு வெளிநாட்டு மாணவியாக இருக்கலாம். அல்லது நோர்வேநாட்டுக்காரியாக இருக்கலாம் . அதனால் கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம் என்று  நினைச்சு நோர்ஸ்கில் ,நோர்வே மக்கள் முன்னம் பின்னம் தெரியாதவர்களுடன்  எப்பவும் உரையாடல் தொடக்கும் தந்திரமான காலநியையைக் கையில பிடிச்சு 

                   " இன்றைக்கு வெயிலும் அதிகம் இல்லை   குளிர் நல்ல மிதமாக இருக்கு, நாளைக்கு  மழை  பெய்யுமாம்  என்று  சொல்கிறார்கள். உனக்கு  நோர்வேயின் இலையுதிர்காலம்  விருப்பமா  "

                                            என்று  நோர்ஸ்கில்  கேட்டேன் , அவள் சடார் என்று என்னை முகத்துக்கு முகம் பார்க்காமல் தலையைப் பக்கவாட்டில் திருப்பி வலது  காதை எனக்குக்  காட்டி,சக்கரைப்பொங்கலில்   வெல்லக்கட்டி கசிந்து பிசுபிசுத்த மாதிரி    அன்பாகச் சிரித்து ,

                                " யா,  அது  உண்மை,,உண்மையே  தான்,,எனக்கு  இந்த  இலையுதிர்காலக்  குளிர் கன்னத்தில் தடவுவது மிக மிக விருப்பம்,  அப்புறம் நீ வெய்யில்  என்று  சொன்னாய்,,,சொறி  என்னால்  அதைப்  பார்க்க முடியவில்லை..எப்படி  இருந்தது "

                                 " ஒ  சொறி.. நான்  என் பார்வையில் இருந்து  அப்படி  சொல்லிப்போட்டேன் "

                                    " அட,,சொறி  எதுக்கு, இதில  என்ன  இருக்கு ,,நீயும்  பிளிண்டரன் யூனிவெர்சிட்டி கிறிஸ்டானியா  அக்கடமியில்   படிக்கிறாயா , நீ  நல்லா  நோர்க்ஸ் கதைக்கிறாய் ,,நீ  நோர்க்ஸ்கா "

                                " நான்  படிக்கவில்லை,,வேலை  செய்கிறேன் "

                             "  அப்படியா,,,அது  மிகவும்  நல்லது , "

                             " எப்படியோ  உன்னைப் முதன்முதலில்  பார்த்த போது  நான்  நினைத்தது  சரியாகத்தான் இருக்கு, இல்லை  நான் நோர்க்ஸ் இல்லை,,வெளிநாட்டு வந்தேறுகுடி  "

                              "  அப்படியா  நீ  என்ன  நினைத்தாய் ,கனகாலம் நோர்வேயில் வசிக்கிறாய் போலிருக்கே "

                       " நீ ஒரு   யூனிவெர்சிட்டி மாணவியாக  இருக்காலம்  என்று  நினைத்தேன் , யா,,பல வருடம்  வாழ்கிறேன் "

                                 என்று சொன்னேன். அவள் அழகாக நோர்க்ஸ்கில் கதைத்தாள். நோர்வேக்காரிதான்  அந்த  சந்தேகம் அதோடு தெளிவாக 

                          "  என்னோட பெயர் ............."

                           என்று  சொல்லிக்  கையைக்  குலுக்குவதுக்காக  நீட்டினேன் ,அவளும்  கையை நீட்டினாள் 

                       " என்னோட  பெயர்  ஏஞ்சலினா ஹால்ஸ்றோம் ,ஹால்ஸ்றோம் அப்பா  பெயர் , அம்மா  எவான்யளிஸ்ட்  மரியா  ஹால்ஸ்றோம்,  ஆனால்  எனக்கு  உன் கை  எங்கே  இருக்கு  என்று  தெரியவில்லை  அதனால் நீயே  அதைப்  பிடித்துக் குலுக்கிவிடு" 

                              எதற்க்கு அளவுக்கு அதிகமான  குடும்ப விபரம் இருத்தி  வைச்சு  அடிச்சுப்பிடிச்சுச்   சொல்கிறாள் என்று எனக்கு ஆரம்பமே குழப்பமாக இருந்தது. தனிமையில் வாழும் கதைக்க அதிகம்பேர் இல்லாத, நிறையவே   சொல்லிவிட விரும்பும் நோர்வே நாட்டு   மனிதர்கள் இப்படித்தான் கதைப்பார்கள் என்பதை பலமுறை அவதானித்து இருக்கிறேன். இப்படி சம்பவங்கள்தான் ஏதுமில்லா வெற்றிடத்தை நிரப்பும் என்ற அற்ப ஆசை அவர்களிடம் இருக்கு   

                        "  ஓ  சொறி....பார்த்தியா ஏஞ்சலினா,, அதிலும்  நானே  பிழை விட்டுவிட்டேன் "

                        " என்ன  பிழை "

                        " இல்லை  நான்  வழமைபோல  உன்னையும்  எல்லார் போலவும்  நினைத்து  கையைக் குலுக்க நீட்டி விட்டேன்  பார்த்தியா "

                               "  அப்படி  அது  பழக்கம்...அதில  பிழை  இல்லை..மற்றது  ஒன்று சொல்கிறேன்  நானும்  எல்லார் போலவும்தான் "

                             "   அப்படியா,,எப்படி  இவளவு  துணிவா தெளிவா  உன்னால் சொல்லமுடிகிறது  ஏஞ்சலினா"

                       "  இதில  என்ன  கஷ்டம்..நான்  உணர்வதைச்  சொல்கிறேன் "

                           "  சரி,,,அதுவே  பெரிய விசியம்   " 

                            "  உன்  பெயர்  எனக்கு  விளங்கவில்லை..உன்  குரல் அதைத்தான் நான்  பதிவுசெய்து வைத்துள்ளேன்  " 

                        "   அட..அது  போதுமே  "

                           "  மிகவும்  நன்றி..எனக்கு  குரல்கள்தான்  மனிதர்களின்  அடையாளம் "

                            "   நீ போட்டு இருக்கும் இந்த ஹென்னஸ் அண்ட் மாரிஸ் கவுன்  உனக்கு  மிக  மிக  அழகா  இருக்கு "

                              " அட,,,அப்படியா..ஓ  நன்றி..நன்றி..ஆனால் எனக்குதான் நான் போடும்  உடைகளைக்  கண்ணாடியில்  பார்க்க முடியாதே  "

                                 "  அய்யோ..பேந்தும் பார்  சொறி ,,ஏஞ்சலினா "

                               " இல்லை  சொறி சொல்லாதே,  எனக்கு  எவளவு  ஆசையாக  இருக்கு தெரியுமா,,நீ  அழகா  இருக்கு என்று  சொல்லும்போது "

                               "  உண்மையில்  நீ  ஏஞ்சலினா,,ஏஞ்சல்  ,,தேவதை போலதான்  இருகிறாய் "

                            " இதுகொஞ்சம்  ஓவர்,,ஐஸ்  வைக்காதே,,சரி  இந்தக்  கவுன்  ஹென்னஸ் அண்ட் மாரிஸ்  என்று  எப்படி  தெரியும் ,,அதை  சொல்லு "

                             "  கழுத்துக்  கொலர் விழிம்புக்கு  உள்ள  சுவுடிஷ்  H M
 என்று  எழுதி அவர்களின் விற்பனை அடையாளமான உலகப்புகழ் பெற்ற H M  இருக்கே "

                           "  அய்யோ,  நீ  மைக்கிராஸ்கோப் லெவலில்  ஆராச்சி  செய்யுறாயே ,, இந்த  கவுன் என்  சுவுடிஷ் பிரென்ட்  பிறந்தநாள் பரிசாக  வேண்டித்தந்தது "

                        "  சரி,,நீ இப்போது  சில  பேப்பர்கள் வாசித்தாயே  அதில  என்ன  எழுதி இருந்தது "

                          "   உனக்கு  எப்படித்  தெரியும்  ,,நீ எனக்கு முன்னே நான் ஸ்ட்சனில்  ஏறி அமர்ந்த நேரத்தில் இருந்து எனக்கு முன்னுக்கு  இருக்கிறாயா "

                           " யா..அப்படிதான்,,நீ பதின்மூன்று பக்கங்கள் வாசித்தாய் "

                            "  அட அட  அவளவு விபரமாய்க் கவனிச்சியா "

                          "  யா,,நீ வாசித்து முடித்து மேலே அண்ணாந்து பார்த்தாய் ,,அப்போது உன் கழுத்து வியர்த்து இருந்தது "

                             "  அடப்பாவி,,அதையும்  பார்த்தியா "

                           "   யா..எல்லாம்  பார்த்தேன் ஏஞ்சலினா"

                        "எதுக்கு  இவளவு  விபரமாய் நோண்டிப்  பார்க்கிறாய் "

                      "  உன்னை  லின்டரூட் ஸ்ட்சனில்  கண்டபோது  உன்னைக்  கவனித்து  ஒரு  கவிதை  எழுத  நினைச்சேன் "

                    "  அட,,உண்மையாவா,,எவளவு  சந்தோஷமாய்  இருக்கு "

                           "  இப்ப  கதை  மாறிட்டுது "

                      "  என்ன  கதை..எது  மாறியது,ஒன்றும் புரியவில்லை எனக்கு "

                 " ஆரம்பத்தில் உன்னை வைச்சுக்  கவிதை  எழுதநினைத்தேன் " 

                     " அப்படியா  ,,நீ  பெரிய  கவிஞ்சனா,,நீ  வேலை  செய்வதா  சொன்னாய்  முழுநேர எழுத்தாளனா  நீ..அதுவா  உன்  வேலை "

                          "    ஹஹஹஹா ..இல்லை  ஏஞ்சலினா,,நான்  சமையல்காரனாக  வேலை  செய்கிறேன் "

                        "   அப்படியா,,நான்   சைகோலோயியில் கவுன்சிலிங்  திரபி ஸ்பெசலிஸ்ட் ஆக  வருவதுக்குப்  படித்துக்கொண்டு இருக்கிறேன் "

                           "  வாவ்,,,அது  நல்ல படிப்பு  என்று  கேள்விப்பட்டு இருக்கிறேன் ஏஞ்சலினா"

                           "  சரி,,விசியத்துக்கு  வா ,,என்ன  கவிதை  என்றாய்,,என்ன  கவிதை  எழுதுவாய்,,சொல்லு ,,முதல்  என்னை  வைச்சு  என்ன  எழுத  நினைத்தாய் ,,சொல்லுப்பா "

                            "   ஹஹஹா,,அய்யோ,,அந்தக்  கேவலத்தை  ஏன் கேட்கிறாய், கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரியாகி  பிறகு  கப்பல் உடைந்ததால்  பிச்சைக்காரியாகி பிறகு   கழனி பானையில் கைவிட்டமாதிரி கவிதை  எழுதுவேன் "

                         "  என்னப்பா  சொல்லுறாய்,,ஒன்றுமே  புரியவில்லை "

                          " சரி  என் அலங்கோலத்தை விடு ஏஞ்சலினா,நீ  கவிதை  வாசித்து  இருக்கிறாயா "

                        "     யா,,என்னிடம்  ஒரு  குற்றெழுத்து கைப்பிரதியே  சொந்தமாக்  இருக்கு,,அது  ஒன்றுதான்  விரும்பி விரும்பிப்  படிப்பேன்,,அடிக்கடி "

                                   "    அப்படியா  அது  யார்  எழுதியது  ஏஞ்சலினா"

                           "  லேர்ன் போல்தர்,  தெரியுமா,,பிரெஞ்சில்  எழுதியது,,,அவரோட  கவிதைத்தொகுப்புத் தான்  அது, அவரை  நீயும்  படித்து  இருக்கிறாயா "

                                 "  யா,,அவரோட  ஒரு  கவிதைத்தொகுப்பு தமிழ் மொழியில் மொழிபெயர்த்தது  படித்து இருக்கிறேன் ஏஞ்சலினா, அதுவும்  என்  டீன்ஏஜ்  வயசில் "

                              "  அதென்ன  தமிழ்மொழி,  சொல்லு,,டீன்ஏஜ்  வயசில்  வாசிக்கப்படத்தான்  கவிதைகளே  எழுதப்படுகின்றன,,அது  தெரியாதா  உனக்கு "

                             "   தமிழ்மொழி  என்  தாய்மொழி  ஏஞ்சலினா, வயதான  காலத்தில்  கவிதை  வாசிக்கக்கூடாதா "

                          "  வாசிக்கலாம்  அப்போது  அது  இன்னொரு  பரிமாணத்தில்  எல்லைகளை  நீட்டிவைத்து  வரைவிலக்கணம்  இல்லாத  வெறுமையில்  இன்னொரு  அர்த்தம் கொடுக்கும் "

                            "    யப்பா  சாமியோ..இதெல்லாம்  உனக்கு  எப்படித்  தெரியும் ,,போட்டுக்  கொல்லுறியே  தாயி "

                             "  ஹ்ம்ம்,,சைகோலோயி படிப்பதாலும்  ,,லேர்ன் போல்தர் படிப்பதாலும்  ,,ரெண்டையும்  இணைச்சுப் பார்ப்பேன்,,சிம்பிள்,,அவளவுந்தான்  I love sublime poems..."

                             "  ஹ்ம்ம்,,,,ஆனால்  உன்னால்  பார்க்க முடியாத  ஒரு உலக நடப்பை விவரிக்கும்  கவிதையை  எப்படி  உனக்குப்  பார்வையற்ற  அனுபவதில் இருந்து  முழுமையாக  உணரமுடியும்,,சொறி  இப்படிக்  கேட்பதுக்கு "

                        " முதலில்  சொறி..சொறி  என்று  பினாத்தாதே , ஒரு  நல்ல  கவிதை  உன் ஆழ்மனதோடு  உரசி உறவாடும்  அதுக்கு  விசுவல் பிக்ஸர்ரைசேசன் அவசியமில்லை "

                               " அட,,எனக்கு  உன் மீது  நிறைய  மதிப்பு  வருகுது   ஏஞ்சலினா,,நீ  எவளவு  படித்து  இருகிறாய் ,,நான்  எல்லாம் ஒரு வீணாப்போன உதவாக்கரை "

                         "  அப்படிச் சொல்லாதே,  I love sublime poems  ,லேர்ன் போல்தர்  அவரோட   சப்லைம் பொயடிக் ஸ்டைல் பற்றி அருமையாக  சொல்லி  இருக்கிறார்,,அதுவும்  ஆங்கிலத்தில்  தான்  இப்ப நினைவு  இருக்கு "

                                "  என்ன  சொல்லி  இருக்கிறார்  ஏஞ்சலினா,,சொல்லுப்பா,,உன்னை  வைச்சு  நாலு வரி சலாப்பி  கவிதை  எழுதி  உடான்ஸ் விட நெனச்சேன்,,,இப்ப  உன்னிடமே  வந்து  வசமா  மாட்டிக்கொண்டு  நிக்குறேன் "

                          " ஹஹஹஹா,,அப்பிடி  எல்லாம்,,இல்லை,,முதலில்  உன் தன்னம்பிக்கையை  நம்பு "

                                     "  சரி ,,லேர்ன் போல்தர்  அவரோட   சப்லைம் பொயடிக் ஸ்டைல் பற்றி என்ன  சொன்னார் ஏஞ்சலினா "

                             "  அவர்  சொன்னார்  whether you believe in absolutely anything I think it's a great quality to find something beyond self to keep that going, whatever you need , you find it & you do it for that reason. you never quit, you push yourself , fuss & cry , but you pull through . Because you believe in life , a purpose & a reason for your being. "

" அட,,எண்ட வீராளி அம்மாளாச்சி என்னை சிங்க வாகனத்தில வந்து இந்த காப்பியநாயகியிடம் இருந்து காப்பாற்றுமா "

" என்ன சொல்லி பிசதுறாய் You become a poet for the vary fact that you must know the full spectrum of possible problems that a poem can face. Not using the knowledge is not an accurate description of why you would learn that knowledge. "

" அட,, வீராளி அம்மாளாச்சி உன் பக்தன் மிகப்பெரிய சிக்கலில் வாயக்கொடுத்து மாட்டி நிக்கிறான் ஓடி வந்து காப்பாற்று அம்மா தாயே "

" இதையும் அவர் சொல்லி இருக்கிறார்,,கேள் , You DO use it in the sense that you must determine that this piece of knowledge is not a contributing factor to a problem இந்த அவரோட வரிகளில் நானும் எங்கேயோ அழுத்தமாக இருக்கிறேன் ,,நிட்சயமாக இருக்கிறேன் "

" பிறகு என்ன ஆச்சு ,,கவிதைக்கு மொழி முக்கியமா ஏஞ்சலினா "


" அதுக்கும் லேர்ன் போலதர் If languaqge were only taught the 10-20% of knowledge that they use think of the numerous situations that poem would not be treated for. It is kind of too bad that they have to learn the extra knowledge, because more words would have an easier time becoming poems ."

" அய்யோ சாமி நான் இனிக் கவிதையே எழுதமாட்டேன் ,,ஏஞ்சலினா "

" ஏன் அப்படி சொல்லுறாய்..நீ இன்னொருவர் போல இல்லை,,,இன்னொருவர் உன்னைப்போல இல்லை "

" அதெண்டா உண்மைதான்,,நான் உன்னைப்போல உன் அறிவு வீச்சுப் போல இல்லவே இல்லை "

" சும்மா பதறாதே,, லேர்ன் போல்தர் உன்னைப்போல பிரகிரதிகளுக்கும் ஒரு உண்மையை சொல்லி இருக்கிறார் "

" என்ன சொல்லி இருக்கிறார், ஏஞ்சலினா,,அதை சொல்லு தாயி ,,நான் ஏற்கனவே அம்மாவசை இரவில இருட்டு அடி வேண்டினவன் மாதிரி நிக்குறேன் "

" அவர் சொன்னார் , you are supposed to tell the entire world the plan of action for a moments . That's why poets go through all the trouble.!!!. இப்படி சொல்லி இருக்கிறார் பா "

" ஹ்ம்ம் "

" இப்ப நான் சொறி சொல்லுறேன்,,ஏன் மவுனமாக இருகிறாய் "

" ஒன்றுமில்லை,,எனக்கு மூச்சு முட்டுது,,இந்த வரிகளை எப்படி நீ இவளவு கிளியர் ஆக நினைவு வைச்சு இருகிறாய் "

" ஹஹஹா என்னோட மூளையில் நிறைய இடம் இன்னும் கிளியராதான் இருக்கு,,உன்னைப்போல அநாவசியமான பிம்பங்கள் இல்லை I love that."

" அப்படியா, "

" யா,,அப்படிதான் ,,அதனால் எனக்கு இலகுவாக இருக்கு,,கவனக்குறைவாகவும் என்னிடம் கவனச்சிதறடிப்புக்கள் இல்லவே இல்லை,, Sometimes I think mentally ill break , but if I look for something beyond myself it just calms me or something "

" சொறி ஏஞ்சலினா "

" ஏனென்றால் எனக்கு அந்த வழிகள் திறக்கப்படப் போவதில்லை "

" ஹ்ம்ம்..சொறி .சொறி, "

" உனக்கு இரவு இருட்டு,,பகல் வெளிச்சம்,,எனக்கு எல்லாமே இருட்டுதான்,,ஆனால் ஒருநாளின் ஒவ்வொரு நிமிடமும் எனக்குச் சத்தம் .But I love that."

" வாவ்,,,, என்ன ஒரு விளக்கம் "

" யா,,இந்த உலகமே எனக்குச் சத்தங்களும் வாசனைகளும் மட்டுமே,,சிலநேரம் தொடுகை உணர்ச்சி..மற்றப்படி ஒன்றுமில்லை,,ஆனால் நான் சந்தோசமாக இருக்கிறேன் I love that."

" நீ சந்தோசமாய் இருகிறாய் என்பது தெரிகிறது ஏஞ்சலினா, சரி நீ எங்கே வசிக்கிறாய் "

" நான் ...............இல வசிக்கிறேன்,,நீ எங்கே வசிக்கிறாய் "

" நானும்............. ...இலதான் வசிக்கிறேன்,, "

ட்ரைன் இப்போது அவளும் நானும் இறங்க வேண்டிய ஸ்டேஷனுக்கு முதல் ஸ்டேசனில் நின்றது ,அவள் சுதாகரித்து வெள்ளைப்பிரம்பை நீட்டினாள்.தொழில் கொழுவி இருந்த பையை அனைத்துக்கொண்டாள், ஏதாவது தவற விட்டாளா என்று இருக்கையை எச்சரிக்கையாகத் தடவிப்பார்த்து உறுதிப்படுத்தினாள். நான் உதவிசெய்ய நினைத்தேன். அவள் தானாகவே இறங்கினாள்

பிறகு நான் கேட்டுக்கொண்டதுக்கு இணங்கி அந்த ஸ்டேசனுக்கு வெளியே போட்டிருந்த மரவாங்கில் இருந்தாள் . நான் ஒன்றுமே கதைக்காமல் கொஞ்சநேரம் அவளைப் பார்த்து ஜோசிதுக்கொண்டிருந்தேன் . குளிர் கொஞ்சம் கொஞ்சமாக முதுகில் குத்தத் தொடங்கியது. மழை வரும்போல காற்று நிறைய மர இலைகளின் வாசனைகளை இடையில் செருகிக்கொண்டிருந்தது

இந்த உலகத்தில் இவள் எப்படி வாழ்கிறாள், அழகாக இருக்கிறாள் , அறிவாக இருக்கிறாள், நம்பிக்கையோடு இருக்கிறாள்,இதைவிட வேற என்ன வேண்டும் வாழ்கையில், என் குறுக்கால போல கோணங்கிப் புத்தியில் இவளைக் கலியாணம் கட்டினால் எப்படி இருக்கும் என்று நினைக்கும்போது அவளே கதைக்கத் தொடங்கினாள்

" என்ன ஜோசித்துக்கொண்டு இருக்கிறாய்,,சொல்லு,,"

" ஒன்றும்மில்லை ,ஏஞ்சலினா ,"

" இல்லை, இந்த உலகத்தில் இவள் எப்படி வாழ்கிறாள், அழகாக இருக்கிறாள் , அறிவாக இருக்கிறாள், நம்பிக்கையோடு இருக்கிறாள்,இதைவிட வேற என்ன வேண்டும் வாழ்கையில், என் குறுக்கால போல கோணங்கிப் புத்தியில் இவளைக் கலியாணம் கட்டினால் எப்படி இருக்கும் என்றுதானே ஜோசிக்குறாய் "

" ஹஹஹா, ஏஞ்சலினா ,ஹ்ம்ம்,,என்னத்தை சொல்ல,,,ஹ்ம்ம்,,உண்மைதான் ஏஞ்சலினா அப்படிதான் நினைத்தேன் "

" இப்பிடி உன் மனசாட்சிக்கு உண்மையாக இருக்கு "

" சரி,,நான் நினைத்து அப்பிடியே உனக்கு எப்படி தெரியும் "

" எண்ணம்கள் தான்,,அது ஒரு அலை, உன் எண்ணம் அலைகளில் ஏறிவந்து என்னை உணரவைக்குது "

" ஹ்ம்ம்,, இந்த ஸ்டேசனுக்கு கீழே நீ கடக்கும் பாதையில் ஒரு பாதை இருக்கே அதில எப்பவும் வாகனங்கள் தாறுமாறாய் வருமே எப்படி பயமில்லாமல் கடக்கிறாய் "

" வாகனங்களின் எஞ்சின் உறுமல் சத்தத்தை வைத்து அவை எவளவு தூரத்தில் வருகுது என்று கணிப்பேன் , என் காலடிகள் எனக்கு என் பாதையின் வழியில் தப்படிகள் தவறாமல் இடம் காட்டும் "

" ஹ்ம்ம்,என்னைக் கண்டால் ,என்னோடு இன்னொருமுறை கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தால் கதைப்பியா "

" ஹஹஹா,,பிறகும் உன் பழக்கம் குறுக்கிடுகிறது, உன்னை நான் எப்படிக் காண முடியும் சொல்லு "

" அய்யோ சொறி சொறி ,,நான் உன்னைக் கண்டால் கதைக்கிறேன் "

" சரி கதை பிரசினை இல்லை,,என் டெலிபோன் நம்பர் தாரேன் அதில கதை ,

" அதுவும் நல்ல ஐடியாதான் ஏஞ்சலினா "

" நீ சிகரெட் பத்துவியா "

" ஓம் , சிகரெட் ஊதித்தள்ளுவேன் "

"வர்யினியா பில்டர் டொபாக்கோ பிராண்ட் வகையா பத்துவாய் ,,மால்பிரோ ,பரமுன் இந்தவகையா,,சின்ன வயசில் அப்பா அதுதான் பத்துவார் "

" அட, சத்தியமாய் ஆமாப்பா அதுவேதான் ,, "

" எப்பவும் நேர்வேஸ் ஆக இருப்பியா , அலைபாயும் சிந்தனையில் அவதிப்படுவாயா "

" அதெப்படித் தெரியும் "

" இந்த மரவாங்கில் விரல்களால் தட்டிக்கொண்டு இருக்கிறாயே , உன்னிடம் ஒருவித பாதுகாப்புத்தன்மையற்ற பயமிருக்கு "

" ஹஹஹா,,உண்மைதான் "

" அடிக்கடி ட்ரெயினில் பிரயாணம் செய்வாயா "

" இல்லை,,இப்போது குறைவு , ஏனென்றால் பல நாட்கள் நான் சைக்கில் ஓடியே ஒஸ்லோ சிட்டி போவது "

" அப்படியா,,எனக்கு சைக்கிளில் இருந்து பிரயாணம் செய்ய மிகவும் விருப்பம்,,அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று அறிந்ததேயில்லை "

" சரி ஒருநாள் உன்னை என் சைக்கிளில் ஏற்றி ஓடிக்காட்டுறேன் "

" வாவ்,,உண்மையாவா சொல்லுறாய் ,,"


" யா,,,உண்மையாதான் சொல்லுறேன்..நோர்வே முழுவதுமே ஓடிக்காட்டுறேன் "

" ஹஹஹா,,அப்படி எல்லாம் வழியாதே,,சும்மா இந்த ...,,,,,,,,,,,,.. இடத்தையே காட்டு..ஓகே யா "

" ஓகே,,ஏஞ்சலினா "

" உனக்கு ஒரு விசியம் சொல்லவா, அல்லது கேட்கவா,,செய்வியா,, நீ என் கையைப்பிடித்து ஹாய் சொன்னபோது அதை உணர்ந்தேன், "

" அட அது என்ன சொல்லு அப்பிடியே நீ வாசித்த அந்தக் கதை என்ன என்று சொல்லு "

" ஹஹஹா,,அது ஒரு கதை "

" அதுதான் என்ன கதை அது ஏஞ்சலினா ,,எனக்கு கதை கேட்க பயங்கர விருப்பம் ,,ப்ளிஸ் சொல்லு "

" ஒரு பார்வை அற்றவள் ட்ரெயினில் பயணிக்கும்போது மார்பைத் திறந்து அவள் குழந்தைக்குப் பால் கொடுக்கிறாள், அவளுக்கு முன்னே ஒருவன் இருந்து அதைப் பார்க்கிறான் . அவன் நோக்கமே வேற ..பிறகு...ஹ்ம்ம்...பிறகு...... "

" அடப் பாவமே பிறகு என்ன நடந்தது ஏஞ்சலினா "

" அடுத்தமுறை சந்திக்கும்போது சொல்லுறேன்,, "


................தொடரும் ......


Thursday, 22 September 2016

வயது வந்தவர்களுக்கு மட்டும்.....

சின்ன வயசில் எங்களின் குளத்தடி குழப்படி குருப்பின்,கிரிகெட் விளையாடி முடிய ,புளிய மர இருட்டில் நடக்கும், பிந்திய இரவு சம்பாசனைகளில் கொஞ்சம் அறிவுபூர்வமா எப்போதும் பயந்து பயந்து விவாதிக்கும் விசியம் ," அடல்ட்ஸ் ஒன்லி " என்ற வயது வந்தவர்களுக்கு மட்டும் கண்டிப்பாக பார்க்க அனுமதிக்கப்பட்ட ஆங்கிலப் படங்கள் டவுனில எந்த தியடரில் ஓடுது என்பதும்,அந்தப் படம் ஏன் பார்க்க வேண்டும் என்பது போன்ற மிட் நைட் மசாலா விசியங்கள்.

                                              இனி நான் சொல்லப்போறது அந்தப் படங்களை தியேடரில் பார்ப்பதில் உள்ள சிக்கல்கள , " யங் லேடி  சட்டர்லி லவ்வர்ஸ் " என்ற 18 என்ற இலக்கத்தைச் சுற்றி வட்டம் போட்ட கொஞ்சம் வில்லங்கமான படம் பார்த்து பெற்ற " அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப்பெருங் காடு உளரும் அசைவளி போலும் " ஜென்ம சாபல்யம், அதைப் பார்க்க நாங்கள் எடுத்த ரிஸ்க், அதோடு இணைந்த" மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகலஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது" போன்ற வயது வந்தவர்களுக்கு மட்டும் விளங்கும் சம்பவங்கள்.

                                                   டவுனில இருந்த லிடோ ,வெலிங்கடன், ரீகல்,முக்கியமா இசகு பிசகு   மூத்திர முடுக்கில இருந்த சாந்தி  தியடரில்தான் அந்த மாதிர்ப் படங்கள் அதிகம் போடுவார்கள்,போட்டு அதன் விளம்பரத்தில் 18 என்ற இலக்கத்தைப் போட்டு அதைச் சுற்றி ஒரு வட்டம் போட்டு ,சில நேரம் " கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் " எண்டு போட்டு இருப்பார்கள், அது இன்னும் ஆர்வத்தைக் கிளப்பும்,

                                               அந்த இளந்தாரி வயதில, மீசை முளைத்துக்கொண்டும். தோள்ப்பட்டை விரிந்து கொண்டும்,பார்க்கிற சுமாரான பெட்டைகள் வெட்டி வெட்டி அக்சிடென்ட் பட்ட லொறி போல நடக்கும் போதும் அபிநய சுந்தரித் தேவதைகள் போலவும் ,அவர்கள் இளிக்கும் இழிப்பிலும் புன்னகை அரசிகள் போல தெரிந்து கொண்டு இருந்த போதும் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்பதுக்கும் கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் இடையில் உள்ள வரன்முறை எங்களுக்கு அப்போது விளங்கவில்லை,.
                                                         குளத்தடி குழப்படிக் குருப்பின் நண்பர்களில் கொஞ்சம்,வயதுக்கு மீறி விபரம் தெரிந்த பித்துக்குளி தான் அதை கொஞ்சம் விபரமா சொன்னான்,அவன்தான் முதல் முதல் எங்களுக்கு வெள்ளைகாரிகளின் உடுப்பு இல்லாத படம் போட்ட புத்தகம் முதல் முதல் காட்டி எங்க அறிவுக் கண்ணைத் திறந்தவன் எண்ட படியால அவன் சொல்வதை நாங்க எப்பவும் கேட்போம்,அவன் சொன்னது,

                                  " கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் எண்டுபோடுவது கலியாணம் கட்டிய ஆண்கள் பார்க்கும் படம் "

                                        எண்டு, கலியாணம் கட்டிய ஆண்கள்தான் எல்லாத்தையும் ரியலிடியில் லைவ் அக்சனில் பார்க்கலாமே அப்புறம் எதுக்கு அவர்கள் வெள்ளித்திரையில் ஆ வெண்டு கொட்டாவி விட்டுப் பார்க்கவேண்டும் எண்டு நாங்கள் கேட்டதுக்கு அவன் சொன்ன " படு முடைப் பருந்து பார்த்திருக்கும்நெடு மூதிடைய நீர் இல் ஆறே..." போன்ற சங்க இலக்கியச் செறிவுள்ள தெளிவுரையை இங்கே எழுதவே முடியாது,...

                                                      யாழ்பாணத்தில அந்த நாட்களில் படிக்கும் மாணவர்கள் இப்படி இங்கிலிஸ் படம் பார்ப்பது ஒரு பஞ்சமகா பாவச் செயல் என்பது போலதான் இருந்தது,முக்கியமா தியடரில் டிக்கெட் எடுக்க முடியாது எண்டு சொன்னாலும், வீராளி அம்மன் புண்ணியத்தில் டிக்கெட் எடுக்கலாம், அதில சில டெக்னிக்குகள் இருக்கு,   பாடசாலை  வகுப்பைக்  கட் அடிச்சு படம் பார்பது எப்பவுமே  பயங்கர ரிக்ஸ்  , எல்லாப் பாடசாலை மாணவர்களும் கட் அடிப்பார்கள். பிரிஞ்சுபலுக்கு  யாரும்  சொல்லிக்கொடுதுப்  பிடிச்சா வாழ்க்கை அவளவுந்தான். 

                                        அதுக்குதானே  வார  இறுதி  நாட்களில்  ரெண்டுநாள் பாடசாலையில்  லீவு தருவார்களே. அதைவிட அந்த சனி ஞாயிரு  நாட்களில்  தியேட்டரில்  சனம்  அதிகமா இருக்கும். சனத்தோடு  சனமா  கும்பலில்  கோவிந்தா போட்டு  கடல் மீன்கள்  போல  சுழி ஓடலாம் . பொது ஜனம்கள்  எப்பவுமே  நாங்கள்  படிக்கிறமா  கிழிக்கிறமா  என்று  ஆராய்ச்சி செய்வதில்லை.   அரைகுறை  ஆடை  இங்கிலிஸ்  படம்  பார்த்துக்  குட்டிச்சுவர் ஆனாலும் அவர்களுக்கு  கவலை  இல்லை 
                                     முக்கியமா நாங்கள் தியேட்டருக்கு படம் தொடங்க முதலே போக மாட்டோம்,வெளிய ரோட்டில விடுப்பு பார்க்கிற மாதிரி நிண்டுகொண்டு முதலாவது பெல் அடிக்கும் வரை அப்பாவிகள் போல நிற்போம்,அது அடிக்க தியேட்டர் உள்ளுக்க லைட் நிற்பாட்டி போடுவார்கள், அந்த இடை வெளியில் போய் டக்கெண்டு டிக்கெட் கவுண்டரில் கொஞ்சம்,குதிக்காலில் எம்பி நிண்டு கொண்டு " தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி " எண்டு பாடிக்கொண்டு டிக்கெட்  எடுப்போம்,

                                                    ஒருநாளும் எங்களுக்கு வயது வந்துவிட்டதா எண்டு டிக்கெட் கொடுப்பவர் செக் பண்ணியதே இல்லை,அப்படி எடுத்துக்கொண்டு இரண்டாவது பெல் அடிக்க, படம் பற்றிய தொடக்க டைட்டில் விசியம் மிஸ் பண்ணும் கவலை இருந்தாலும், இருட்டில தடவிக்கொண்டு போய், அதிகம் யாரும் இல்லாத மூலையில் இருந்து பார்த்தல் தான் எங்களுக்கு இங்கில்ஷ் இடைஞ்சல் இல்லாமல் விளங்கும் என்பதால் அப்படி இடங்களை செலக்ட் பண்ணி உடைந்த கதிரையில் இருந்து பார்ப்போம்.

                                                 இடை வேளையில்,எல்லா லைட்டும் போடுவார்கள் நாங்கள் போட்டிருக்கிற தொப்பியை நல்லா இழுத்து முகத்தை மூடிக்கொண்டு இருப்போம்,எழும்பி கண்டின் இக்கு போகமாட்டோம்,போனால் பிறகு கதை மறந்து விடும் என்பதால் கதையின் தொடர்ச்சியை மறக்காமல் இருக்க அப்படியே இருப்போம். படம் முடியத்தான் முக்கிய அலுப்பு தொடங்கும்.வெளிய வாறதுதான் பெரிய கவுரவப் பிரச்சினை,அதிலயும் எல்லாரும் எழும்பிப் போன பிறகுதான் பதுங்கி பதுங்கி வெளிய வருவம்,

                                                         அந்த நேரம் தான் வருசத்தில எப்பவாவது கலியான வீடு ,செத்தவீட்டுக்கு மட்டும் தலை காட்டும் சித்தப்பா, பெரியப்பா அல்லது மாமாவை தியேடர் வாசலில் சொல்லி வைச்ச மாதிரி சந்திக்க வேண்டி வரும், தூரத்து சொந்தகாரரே திடீர் எண்டு ரெம்ப அக்கறையான நெருங்கிய ரத்த உறவு  சொந்தமா மாறி வீட்டை வந்து சொல்லி கொடுப்பார்கள்,வெலிங்கடன் தியட்டரில் "யங்  லேடி சட்டர்லி லவ்வர்ஸ் " படம் ரசித்து பார்த்து முடிய " தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! " எண்டு பாடிக்கொண்டு வெளிய வர புண்ணியக் குஞ்சி சித்தப்பு, டவர் கூல் பாருக்கு முன்னால் நிண்டார்,

                                                என்னைக் கண்டார்,  கண்டும் காணதது போல அண்டங்காகம்  போல  தலையை  வேற  பக்கமா திருப்பிக்கொண்டு     நிண்டு   போட்டு ,நான் வீட்டை வரமுதலே அவர் வீட்டை வந்து அம்மாவுக்கு சொல்லிக் கொடுத்திட்டார்.. வீட்டை வர முதலே அம்மா,
                                     " பூனை போலப் பந்துங்குறாய் எங்கடா போயிட்டு வாராய். "

                                             எண்டு கேட்டா, நான் பேசாம நின்டேன்,

                               " ஏனடா இந்த வயசிலேயே தலையால தெறிக்கிறன் எண்டு நிக்குறாய் ,நான் எவளவு கஷ்டப்பட்டு உங்களை எல்லாம் வளர்குறேன், இதெல்லாம் உனக்கு இப்ப தேவையா "

                      எண்டு கேட்டா, கொஞ்சநேரம்  தலையை  மண்டிக்கொண்டு நின்றேன் 

                               " சொல்லு  இப்பவே  தியேட்டர்  வாசலில்  நிண்டி  என்றால் பின்னடிக்கு  நெடுகிலும்   சீவியம்  கிழியப்போகுது "

                                      "    ஹ்ம்ம்,,நல்ல  கருத்து  உள்ள  படம்  எண்டு  பிரெண்ட்ஸ்  சொன்னாங்கள்  அதால  பார்க்கப்  போனேன் "

                                    "    சரி  அது  என்ன  படம்  சொல்லு  "

                               "  குதிரை  லாயத்தில்  குதிரைக்குக்  கொள்ளு வைக்கிற  கதை "

                                    " அது  அப்ப  நல்ல  படம் போல  இருக்கே ,,"

                                "   ஓம்  நல்ல  படம் தான்  ..இப்படி வெள்ளைக்  குதிரையை  இங்கே  எங்க அம்மா  பார்க்க கிடைக்கும்,,இப்பிடி  இங்கிலிஸ்  படதிலதானே  காட்டுறாங்கள் "

                                   "    இதென்னவோ  உன்னோட வயதுக்கு  பார்க்கத்  தேவையில்லாத  படம்  எண்டது போல எல்லோ குஞ்சி  சாடை  மாடையா  பறைஞ்சார் "

                                     " அதுதானே  சொன்னேன்  அவருக்கு  இங்கிலிஸ் விளங்காது  எண்டு "

                                   " அப்பிடியே  சிலமன்,,   அதுக்கு  என்னத்துக்கு  புண்ணியக்  குஞ்சி  குத்தி  முறியுது  எண்டு  ஓடிவந்து  சொன்னார் "

                                    "   ஓம் , அவருக்கு  இங்கிலிஸ்  தெரியாது  அதுதான்  அப்படி  சொல்லி இருப்பார் "

                                   "  என்னதான் இருந்தாலும்  இதெல்லாம்  உனக்கு இப்ப தேவையா  சொல்லு "

                     " தேவைதான், தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! "

                       எண்டு சொல்ல நினைச்சேன்,பயத்தில அதுக்கு ஒண்டும் சொல்லவில்லை, அம்மா

                     " இனி இதெல்லாம் பார்க்க மாட்டேன் "

                                          எண்டு தலையில அடிச்சு சத்தியம் செய்து தரச் சொன்னா, செய்து கொடுத்தேன், அதென்ன பெரிய விசியமா, அம்மா இப்படி எல்லாத்துக்கும் கேட்பா,ஒரு கட்டத்தில் எனக்கே எது எதுக்கு தலையில அடிச்சு சத்தியம் செய்து கொடுத்தது எண்டு நினைவே இல்லை அந்த இளந்தாரி டீன் ஏஜ் வயது  நாட்களில். ஆனாலும் என்னோட நியாயமா

                                    " பள்ளிக்கூடத்தில இங்கிலிஸ் டிச்சர் சொன்னவா,இங்கிலிஸ் படம் பார்த்த இங்கில்ஸ் நோலேச் அதிகம் ஆகும் எண்டு அதால பார்த்தேன் "

                         எண்டேன், நல்ல காலம் அம்மா அது என்ன படம் எண்டு கேட்கவில்லை,புண்ணியக் குஞ்சியும் விபரமா சொல்லவில்லை..

                                              யங்  லேடி சட்டர்லி லவ்வர்ஸ் படக் கதை விக்டோரியா ராணி இங்கிலாந்தை ஆண்ட காலத்தில் நடக்கும் ஒரு கதை ,லோர்ட் என்ற உயர் சமூகத்தில் இருக்கும் கவுரவமான  பிரபு சடர்லி ஒரு பக்கவாத நோயாள திடிர் எண்டு படுக்கையில் விழ,அவரின் இளம் மனைவி லேடி சடர்லி என்ற அழகான் இளம் பெண் வேறு ஒருவரின் படுக்கையில் ஏறும் கதைதையை சுவாரசியமா சொல்லி இருந்தார்கள். பிரபு சடர்லி நல்ல மனிதர் அவரே சொல்லுறார்,

                                      " இனி என்னிடம் திருமண உறவு சந்தோஷ விசியங்களை எதிர் பார்க்க வேண்டாம்,உன் விருப்பப்படியே இன்னுமொரு பிரபுவிடம் உனக்கு விரும்பினால் உன் ஆசைகளை பெற்றுக்கொள் "

                          எண்டு உண்மையாகவே கொஞ்சம் விக்டோரியன் கால நடைமுறைகளில் இருந்து விலத்தி சொல்லுறார்.

                                               லேடி சடர்லி இயல்பாக இருப்பா,நிறைய பிரபுக்களின் பார்டிகளுக்கு பக்கவாத கணவனையும் அழைத்துக்கொண்டு போவா ,லோர்ட் சடர்லி எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு இருப்பார் .ஆனால் காதல் என்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே எண்டு, நீலக் கண்கள்,அதில் ஏக்கம், நுரை போல வழுக்கி விழும் சுருள் முடி, கீழ் நோக்கி வளைந்த கிளி மூக்கு எண்டு அண்டலேசியன் அழகில்  அந்த அம்மணி கைய்க்கு சவுக்காரம்  போட்டுக் களுவிப்போட்டுதான்  காலையே  தொட வேண்டும் போல அவளவு  தங்கப் பதுமைக்   களையா  இருப்பா 

                                  ஆனால்   அழகில் அம்சமாக இருக்கும் அவர் மனைவி லேடி சடர்லி,  உடுப்பு எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சு போட்டு பாய்வது வேறு ஒரு உயர் குல பிரபுவுடன் இல்லை,  பதிலாக அவர்கள் பரம்பரைக் குதிரை லாயத்தில்,குதிரைக்கு கொள்ளு வைக்கும் எடுபிடி வேலை செய்யும் ஒரு சாதாரணமாண வேர்கிங் கிளாஸ் என்ற உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்து  ஒரு இளம் மனிதருடன்.  அதுதான் கதையின் திருப்பம்,.

                                        அந்தப் படம் எடுக்கப்பட்ட திரைக்கதை உண்மையில் டி எச் லாரன்ஸ் என்ற ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் அந்தக் கதையை ஒரு " கொன்பெஸ்சனல் ஸ்டைலில் " நாவலாக எழுதினாராம், விக்டோரியா ராணி அந்தக் கதையை தடை செய்தா. அவரையும் " உதவாக்கரை " எண்டு சொல்லி இருக்குறா.

                                நடு நெத்தியில சந்தனம் பூசி நாமம் போட்ட அந்த கதை அதன் சுருக்கிய வடிவில் நான் பின் நாட்களில் படித்து இருக்கிறேன், அதில நிறைய இலக்கியம் இருந்தது, அதைத் தடை செய்த விக்டோரியா மகா ராணியின் கணவர் இறந்தபின் அவா யாரோடு காதலில் இருந்தா எண்ட விசியம் செமக் காமடி,பாவம் தன் காதல் வாழ்கையை அவா யாருக்கும் சொல்லாமல் செத்துப்போனா விக்டோரியா மகா ராணியின் ரோமன்ஸ் உண்மைக் கதை " யங் லேடி சடர்லி " என்ற இளம் பெண்ணின் விரகதாபத்தை விட சுவாரசியம் ஆனது என்பதையும் படித்து இருக்குறேன்...

                                       உண்மையில் யாழ்பாணத்தில் வெலிங்கடன் தியடரில் பார்த்த " யங்  லேடி சட்டர்லி லவ்வர்ஸ் " படத்தில,லேடி சடர்லி உடுப்பு எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சு போட்டு, கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் புரியும்படி செய்த விசியங்களை விட, அந்தப் படத்தில வார அமரிகன் செடில் பிரெட் வகைக் குதிரைகள்,  அவை பாய்ந்து திரியும் பரந்த புல் வெளிகள், சடை வளர்த்த ஐஸ்லாண்டிக் குதிரை இழுக்கும் குதிரை வண்டிகள், பெரிய பெரிய விக்டோரியன் இங்கிலாந்து வேல்ஸ் நாட்டின் நாட்டுப்புற மாளிகைகளை  வளைத்து எடுத்துப்  படமாக்கி இருந்தார்கள்  

                                                   அதில் நடக்கும் இரவுப் பாட்டிகள், கிளிங் கிளிங் எண்டு மோதும் சம்பெயின் கிண்ணங்கள் , நளினமான இங்கில்ஷ் வால்ஸ் நடனம், மென்மையான மெழுகுவர்த்தி வெளிச்சம், உறவின் பிளிவாக மயக்கும் பின்னணி கிளாசிகல் சிம்பொனி இசை , அழகான பெண்களின் நீண்ட எல்லாத்தையும் இழுத்து மூடிய நிறைய ப்ரில் வைத்த உடை, பெண்களின் தலையில அலைய விட்டு தூக்கி நிமிர்த்தி,சரிய விட்டு நடு வகிடில் நதி பாயும் கொண்டைகள் ,முக்கியமா இலக்கணம் தவறாத விக்டோரியன் ஆங்கிலம் என்னை மிகவும் கவர்ந்த விசியம்...

                                   அந்தப்  படத்தில்  பல  இடங்களில்  திறந்த  மார்பகம்  எப்படி  இருக்கும்  என்று  பார்க்கக் கிடைத்தது. ரொமான்ஸ் கலவிக்கு  எவளவு முக்கியம்  என்று படிப்பினை கற்பித்தது . ஒரு  சீனில்  மரத்தோடு  சாத்தி  வைச்சு  அந்த    மச்சோ  ஆண்மை  குதிரைக்காரன் செந்தூரப்பூப்போல  மென்மையான   லேடி சட்டர்லியை .....................போட்டு  எடுக்க அந்த  மரம் புயலில் அகப்பட்டது  போல  முறியிற மாதிரி  உலுப்பி எடுக்கும். 

                                     செக்ஸ்  இவளவு  சுவாரசியமான  விசியம்  என்று  அந்த வயதில்  கொஞ்சம் மூளையின்   ஹிப்போதலமசில் குண்டுசியால குத்தின மாதிரி  இருக்க , எதிர்கால  வாழ்வின் சில  முக்கிய  காலகட்டம் கனவுபோல  வந்தது. இதெல்லாம்  தெரியாமால் இருப்பதே  தவறுபோல  இருந்தது.  

                                " காந்திருவம் "  என்று மருதன் இளநாகனார் என்ற புலவர் பாடிய  அகநானூறு இல் வரும்   சங்கத் தமிழ் சொல்லும்  " கருத்து ஒருமித்த இருவர் தாமே கூடி இணைவது " என்ற கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் புரியும் விசியங்கள் " யங் லேடி சடர்லி லவ்வர்ஸ் " என்ற அந்தப் படத்தில் அதிகம் கவரவில்லை!  என்  நண்பர்கள்  கதிரை நுனியில் குதிக்கால் குத்தி  நிக்கதான்  அதை  ரசித்துப் பார்த்தாங்கள்.  அதென்னவோ  உண்மைதான்