Sunday, 1 November 2015

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

ஸ்வீடனில்  வசித்த போது சில வருடங்கள் , வாழ்கை வெறுத்து தனிமையில் இருந்த காலத்தில் , சந்தோசத்தை வெளியே அன்றாட உலகத்தின் இயல்பில்த்  தேடிப்பிடித்துப் போகாமல், குறுக்கு வழியில்த் தேட முயற்சித்து,  மூடிகளைத் திறந்த மதுப்போத்தல்கள்  முடியும் வரை இருந்த சின்ன சந்தோசம்,  அந்தப் போத்தல்களைத் தூர வீசி எறிந்த போது அவைகளுடன் போன அவலத்தில் , மாதன முத்தாவின் மண் பானை ஆட்டிண்ட தலைக்க போன மாதிரி மது  கடைசியில் கழுத்தில கயிறு போட்டு அலங்கோலப்படுத்தியது.

                                       அதனால் உடலும்,மனமும்  பாதிக்கப்பட்டு  தற்காலிக  இன்பத்தின் முடிவில் நிரந்தர  துன்பமாக , இது இனி வேலைக்கு ஆகாது என்று நினைத்து மருத்துவ உதவிக்கு சரணடைந்தேன் . அதனால் கிட்டத்தட்ட  ஒரு வருடம் ," அல்ஹோலிக்ஸ் " என்ற திருந்த முடியாத மடாக்குடியரை திருத்தும் "புனர்வாழ்வு சமூக" அமைப்பில் கவுரவ நோயாளியா /உறுபினரா ,அவர்களுக்கும்   , முடிந்தவரை அவர்கள் தந்த புணர்வாழ்வுகும்  சவாலாக இருந்தேன்!  

                                 அந்த  கவுன்சிலிங்/ குரூப் திரபி என்ற சிக்கிசை கொடுக்க எனக்கு நியமிக்கப்பட்டவள் கத்தரீனா  என்ற ஸ்வீடிஷ் 40 கிலோ தாஜ்மகால் ! அவளை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாலே ஜீவாத்மாவும் பரமாத்மாவும் தாறுமாறா எகிறும் . அவள் அசையாமல் நிண்டாலே அபிராமிப் பட்டர் " இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்துவடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு..    " என்ற அந்தாதியை அவளை நினைச்சு எழுதின மாதிரி இருப்பாள்.  அவள் நடந்து திரிந்தால் அதே அபிராமிப்பட்டர் அவளுக்கு பின்னுக்கும் முன்னுக்கும் திரிந்து  "  நடங்கொண்ட கொள்கை நலங் கொண்ட நாயகி , நல் அரவின் வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே......."  எண்டு எழுதி முடிச்ச மாதிரி அம்சமா இருப்பாள் .

                                     அதை விட அவளே எங்களைப் போல திருந்த முடியாத மடாக்குடிய நிலையில் இருந்து மீண்டு வந்து "புனர்வாழ்வு சைகொலோயி " மாஸ்டர் டிகிரி படித்தவள் !  அதலா அந்த சமூக நிறுவனத்தில் வேலை செய்தாள்.  அவளை முதல் முதல் சந்தித்தபோது,  நான் இந்திய, இலங்கை  ரெண்டும் கெட்டான் உருளைக்கிளங்கு  நிறத்தில் இருந்ததால் அவள் கொஞ்சம் அதிர்ந்து,

                  " ஓ , இண்டேறேச்டிங் , உன்னை சந்திப்பது, நீ இந்தியாவைச்  சேர்ந்தவனா , என்னோட வாழ்கையை மாற்றிய குருநாதர் சுவாமி பிரபுபாதாவும் இந்தியர் ,அவர் தொடக்கிய ....ஹரே ராமா ஹரே கிருஷ்ணா.... அமைப்புதான் என்னை வழி நடத்தி இப்ப இப்படி இருக்கிறேன் "

                         என்றால் ,அப்படி அவள் அதிர்ந்து சொன்னதுக்குக் காரணம்  , அவள் "ஹரே ராம, ஹரே கிருஷ்ணா " அமைப்பில் இருந்து, அந்த அமைப்பின் இணைப்புதான் அவளை "மடாக்குடிய நிலையில்"  இருந்து மீண்டவர உதவியதாக சொன்னது எனக்குக் குழப்பமாக இருந்தது. நான் நினைச்சேன் அவள் என்னைப் பார்த்த முதல் சந்திப்பிலேயே எனக்கு கரண்ட் பிடிச்சாதான் மூளை பழைய நிலைக்கு வரும் என்பது போல ஏதும் பிரைன் மெடிக்கல் விசியம் தான் முதலில் சொல்லுவாள் என்று நினைத்தேன் !
                                         
                            " நான் இலங்கையைச் சேர்தவன்,  சுவிடனில் அரசியல் அகதியா  வாழுறேன்,குடியுரிமை கிடைத்த நாளில் இருந்து ,அறம்புறமா குடிக்க உரிமை கிடைத்தால் குடிக்க ஆரம்பித்தேன் ,அந்த குடி உரிமையை கொஞ்சம் அதிகமா பாவித்து இப்ப அல்ககோல் மிஸ்யூஸ் டிஸ்ஓடர் என்ற மெடிக்கல் கொண்டிசன் நிலையில் இருக்கிறேன் ,சில நேரம் உனக்கு குழப்பமாக இருக்கும் இலங்கையை  ஸ்ரீலங்கா என்றுதான் ஆங்கிலத்தில் சொல்லுறார்கள்  " என்று விருப்பம் இல்லாமல் விழுங்கி விழுங்கிச் சொன்னேன் . அதுக்கு அவள்

                               " ஸ்ரீலங்கா,,,இலங்கை ,,,என்கிறாய் அந்த நாடு  எங்க இருக்கு என்று கேள்வியேபட்டதிலேயே " என்றாள்,

                                அதுக்கு நான்  

                 " இலங்கை தான் ஸ்ரீலங்கா, இந்தியாவின் தென் கோடியில் மாம்பழம் போலத் தொங்கிக்கொண்டு இருக்கும்,நாலு பக்கம் கடலால் சூழப்பட்ட  , தமிழர் என்ற ஒரு  சிறுபான்மை இனத்துக்கு நிம்மதி இல்லாத குட்டி தீவு தான் என் தாய்த்திருநாடு " எண்டு சொன்னேன் .

                                    ஹரே ராமா ஹரே கிருஷ்ணா  அமைப்பு பற்றி படித்து முன்னமே இருக்கிறேன். உங்களுக்கு உண்மையைச் சொன்னாலென்ன சின்னவயசில்,   சைவசமய முறைப்படி மூன்று தீட்சை சைவாசாரிய  குருவிடம் பெற்றேன்,  ஆனால்  வளர்ந்தபின் ஒரு நாளும் அதுகள் செய்ததில்லை, ஆனாலும் ஆன்மிக விசியங்கள் கொஞ்சம் தெரியும்.  என்னிடம் ஆரம்ப விசாரணை முடித்தபின் ,

               "  உனக்கு PTSD , கிளினிகல் டிபிரசன்  இருக்கே,  அதை விட சொல்லபட்ட  அன்டபுஸ் , மருந்தே உதவி செய்யவில்லை போல இருக்கே ! கொஞ்சம் முத்தின கேஸ் போல இருக்குறியே " எண்டு ஜோசிதுப்போட்டு, அமைதியாக 

                               " எங்கள் ஆசிரமத்தில ,போய் சில வாரம் தங்கி இருந்து ...தியம்பகம் ஜெயாமகே சுகந்திம் புஸ்திவச்தனம் உருவாகுக விசி அமுதாத் தயே..... என்ற மந்திரம் சொல்லி மனதை கட்டுப்படுத்து, தியானம்,சத் சங்கம்,பஜன் ,இவைகளை கற்றுக்கொள்,உனக்கு மனதளவில், பொசிடிவ்வாக எண்ணங்கள் உருவாகும்,நான் இப்படி இப்ப இருப்பதுக்கு அதுதான் உதவி செய்தது"

                                      என்று ,அவளோட நண்பிகள் ஆசிரமத்தில் ,பருத்தி சேலை கட்டி, நெற்றியில் நாமம் போட்டு, கோகுலத்து கோபியர் போல ஆடிப்பாடும் குரூப் போட்டோ காடினாள் ! அவர்களுக்கு நடுவில சில வெள்ளை ஆண்களும் மேளம் போல ஒன்றைத் தோளில கொழுவிக்கொண்டு,குடுமி வைச்சு,பஞ்சகச்சம் போல வேட்டியை ஐயங்கார் ஸ்டைலில் கட்டிக்கொண்டு ஆனந்தத்தில்  கோபியரே கோபியரே கோவிந்தன் பெயரைச்சொல்லி ,,,எண்டு ஆடிக் கொண்டு இருந்தார்கள் .

                                          வெள்ளைக்கார  ஸ்வீடிஷ்  பெண்களுக்கு சேலை கட்டினால் , முன்பக்கம் ஸ்பானிஷ் கிட்டார் போலவும், பின் பக்கம் ஹவாயன் கிட்றார் போலவும் இருக்கும் , அவர்கள் எப்பவுமே ஒல்லியா வெள்ளையும் சொள்ளையுமா இருப்பது சேலைக்கு நல்லா எடுபடும் , அங்கங்கே பார்காட்டியும், பார்க்காமலே பத்த வைக்கும் அவர்களின் வசீகரம் ஒரு வித ஆன்மிகதை அறிய ஆரம்பிக்கிறவனுக்கு  வைக்கும் முதல் சோதனை போல இருந்தது .அது பார்க்க அழகா மட்டுமில்லை,  நிறய  ஆர்வ கோளாறையும் , கற்பனைகளையும்  கிளப்பிவிடும் ! அதால

                  " இதில உள்ள மாதிரியா,உங்கள் ஆசிரமதிள்ள உள்ள பெண்கள் எல்லாரும் இருப்பார்கள் எண்டு ?"

              கேட்க ,அவள்             

                             "இதில உள்ள மாதிரியா, எண்டு எண்ணத்தைப் பார்த்து சொல்லுறாய்?"

                   எண்டு ,சந்தேகமா என்னோட கண்னுக்குள்ள நேராப் பார்த்துக் கேட்டாள், நான் , சாமாளித்து 

                "படத்தில அவர்கள் முகத்தில ,தெரியுற மாதிரி ,ஆன்மீக  களையுடனையா ,இருப்பார்கள் ?"

                           ,எண்டு கேட்க, சைகொலோயி " மாஸ்டர் டிகிரி" படித்த அவள் சிரிச்சுப்போட்டு,

                          " முதலில்,ஆசிரமம் போ, முதலில் கெட்ட சிந்தனைகள் அறவே வராது !"

                           எண்டு அழுத்தம் கொடுத்து என்னோட மனசாட்சிக்கு சொன்னதுபோல சொன்னாள் !

                    நான் அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் நான் என்னமோ ஆன்மிகம் பற்றி தீவிரமா ஜோசிகுரன் எண்டு நினைச்சு

                                  " நீ எப்பவாது தியானம் செய்ய முயற்சி செய்து இருக்கிறாயா, தியானம் எவளவு முக்கியமான விடயம் எண்டு இந்தியர்கள் தான் ஆயிரம் வருடம் முன்னமே கண்டு பிடித்துள்ளார்கள்,..." 

                                     என்று சொன்னாள், நான் அதுக்கும் பேசாமல் அவள் சொல்வதை ஆர்வமா கேட்பது போல ஜோசிதுக்கொண்டு  , அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் என்னோட ஆர்வத்தில் இன்னும் அதிகம் கவரப்பட்டு, 

                         " முழுமையான நிறைவான த்யானம்தான் வாழ்வின் உயரிய இன்பங்களை வழங்கும் என இந்திய சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. சரி த்யானத்தின் பொருளை ஆராய்ந்தால் ஆச்சர்யகரமாய் "த்யான நிர்விஷ்யம் மனஹ" என்கிறார்கள், அதாவது எதுவுமற்ற வெறுமையான மனநிலையும் அதையொட்டிய எண்ணங்களும். என்று எங்கள் குரு நாதர் பிரபுபாதா சுவாமிகள் மெடிடேசன் வேய் ஒப் லைப் புத்தகத்தில் எழுதியுள்ளார் " என்றாள்  
                                                  
                                                        நான் அதுக்கும் பேசாமல் அவள் சொல்வதை ஆர்வமா கேட்பது போல ஜோசிதுக்கொண்டு  , அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு, ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன்.  அவள் என்னோட ஆர்வத்தில் இன்னும் அதிகம் கவரப்பட்டு, 

                             " சரி...தியானத்தை அறியாதவர்கள் Material world எனப்படும் வாழ்வியல் இன்பங்களை எப்படி அடைவதாம்? சாமானியர்களும் தங்கள் ஆசைகளையும், இலக்குகளையும் அடைவதற்காகவே பண்டைய மகரிஷிகள் வழங்கிய "சாதனா" எனப்படும் "யந்திர,தந்திர,மந்திர" சாஸ்த்திரங்கள்.  இவை பற்றிய குறிப்புகள் இந்து சாஸ்திரங்களில் மட்டுமல்லாது பௌத்த, சமண, இஸ்லாமிய, கிருத்துவ மத நூல்களிலும் காணக்கிடைப்பது நான் சைகொலோயி மாஸ்டர் டிகிரி படிக்க ஒரு புத்தகம் ரிசர்ச்  பண்ணிப் படித்த போது அதில இருந்தது ஒரு ஆச்சரியமான விசியம், இதுக்கு மேல சொன்னால் உனக்கு அறுவையா இருக்கும் என்றால் சொல்லவில்லை " என்றாள் 

                            நான் அதுக்கும் பேசாமல் அவள் சொல்வதை ஆர்வமா கேட்பது போல ஜோசிதுக்கொண்டு  , அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் என்னோட ஆர்வத்தில் இன்னும் அதிகம் கவரப்பட்டு  இன்னும் கொஞ்சம் சொல்லுவாள் எண்டு நினைக்க அவள்,  

                " கொஞ்சம் பொறு,சில பேப்பர் வேலை இருக்கு, அதெல்லாம் முடிக்க வேண்டும்,நீ கையெழுத்து போட வேண்டும் " 

                           எண்டு சொலிப்போட்டு கொஞ்சம் பேப்பர்களில் குனிந்து எழுத , நான் கோபியப் பெண்கள் போல இருந்த அந்த சேலை கட்டிய ஸ்வீடிஷ் பெண்களின் " குருப் " படத்தை ஆன்மீகம் பித்தம்  தலைக்கு ஏற்றப் பார்த்துக்கொண்டு இருந்தேன் .சொன்ன மாதிரியே ரெண்டு கிழமை என்னை அங்கே  அவளோட காரிலேயே கொண்டுபோய் விட்டாள் கத்தரீனா, நான்    

                           " அந்தப் பெண்கள் எங்கே ஒருவரையும் காணவில்லையே " எண்டு கேள்வி கேட்க தொடங்க முதலே அவள் ,

                          " இதுதான் உனக்கு கடைசி சான்ஸ் ,இதையும் குழப்பினாய் எண்டால் அந்த கிருஷ்ண பரமாத்மாவே  நேர்ல வந்தாலும் உனக்கு விடிவு இல்லை"  எண்டு போட்டுப் போயிட்டாள் !

                             அந்த ஆசிரமம் கொஞ்சம் இந்திய முறைப்படி கட்டியது போல இருக்க ,வெளியே ஒரு கிருஷ்ணர் சிலை கோபியப் பெண்களுக்கு நடுவே ஆடுவதுபோல இருக்க , கோகுலத்து மாடுகள் கிருஷ்ணர் வாசிக்கும் புல்லான் குழகுக்கு மயங்க்கி பார்த்துக்கொண்டு இருக்க ,,ஆரம்பமே கொஞ்சம் அடகாசமா இருக்கும் போல இருந்திச்சு .ஆனால் நான் நினைத்த மணிரத்தினம் படத்தில வாற மங்கலான கனவு ஸீனில கதாநாயகி மிதந்து  நடந்து வருவது போல போல அங்க ஒண்டுமே உற்சாகம் தருவதுபோல இருக்கவில்லை.  

                                      அந்தக்  ஆச்சிரமத்தில " கோகுலம்" என்ற பெயர் உடைய மாடுப்பப்பன்னையில் நிறைய கறவை மாடுகள் ,கன்றுக்குட்டிகளுடன் நிண்டது, அதுக்கு பொறுப்பான ஸ்வீடிஷ்காரர் , நான் மாடுப்பப்பன்னையில் ஒவ்வுருநாளும்  என்னவெல்லாம் செய்யவேண்டும் எண்டு பொறுப்பாக சொன்னார், நான் பொறுப்பில்லாமல் கேட்டுக்கொண்டு இருந்தேன்!

                                          உங்களுக்கு  உண்மையை சொன்னா  என்ன,  " அல்ஹோலிக்ஸ் "வியாதியால் அவஸ்தைப் பட்டதால் நான் ஒண்டுமே அங்கே திட்டமிட்டபடி செய்யவில்லை ,24 மணித்தியாலமும் ஓடி ,ஆடி வேலை செய்யும் அதுக்கு பொறுப்பான  சாமியார் போல இருந்த  ஸ்வீடிஷ்காரர்  என்னிடம்  வந்து

                         " மன்னித்துக்கொள்,ஆரம்பமே  என்னோட பிழை , நீ வந்தவுடனே இதைக் கேட்டிருக்க வேண்டும் , பார்க்கும் போது நீ  நல்ல திடகாத்திரமாய்  இருந்ததால் நானும் உன்னை எல்லார் போலவும் நினைத்து பல வேலைகள் செய்யச் சொல்லி உன்னைக் கேட்டேன், உண்மையில்  உனக்கு ஏதாவது உருப்படியான வேலை செய்யத் தெரியுமா அதைச் சொல்லுப்பா ? குறை நினைக்காமல் அதை மட்டும் எனக்கு சொல்லுவியா "

                             எண்டு ஒரு நோயாளியை டாக்டர் கேட்பது போல அன்பாகக் கேட்டார்,

                               நான்  "சமையல்காரனாகதான் வேலை செய்தேன்  , நான் அதுக்காக தான்  பயிறுவிக்கப்பட்டு, அதில் தான் பலவருடம் அண்டா,குண்டா சட்டி பானைகளுடன் மல்லுக்கட்டி வேலை செய்தேன் !"

                                               என்றேன்,அவர் ,நாடிய தடவிக்கொண்டு

                       "அப்ப நீ ,ஸ்டோக்கொலமில் உள்ள எங்களின் "கோவிந்தா" ரேச்டோறேண்டில் போய் மிகுதி நாட்களைஅவர்களின் சமையல் வேலையிலும். அங்கே உள்ள கோவிலில் பயனை பாடி அவர்களுக்கு உன்னால் முடிந்தளவு உதவி செய் ,அங்கெ எங்கள்  பிருந்தாவனம்  கோயிலும் அதோடு உள்ளது"என்றார் 

                       " நான் அது எப்படி இருக்கும் " 

                                                  என்டுகேட்டேன், இப்படி இருக்கும் எண்டு ஒரு DVD செருகி படம் போட்டுக் காட்டினார்!

                                          சும்மா சொல்லவிலை, மாட்டுப்பண்ணையை விட நிறைய இண்றேச்டிங் விசியன்கள் கலர் கலரா தெரிந்ததால், " ஆதிசங்கரர் போல  " கோவிந்தா கோ "  எண்டு அந்த இடைத்தை முதலில் விழுந்து கும்பிடுடு , வலது காலை எடுத்து வைத்து உள்ளுக்குப் போய் " ஆன்மிகம் பாடல்கள் கிடாரில் நல்லா வாசிப்பேன் " எண்டு பொய் சொல்லி அங்கே  ஒரு கிழமை இருந்தேன், அங்கேதான் M .S .V யின் "கிருஷ்ணா காஹனம் "LP ஐ முழுமையாகக் கேட்க சந்தர்பம் கிடைத்தது ! 

                                   அதோட  முன்பக்கம் ஸ்பானிஷ் கிட்டார் போலவும், பின் பக்கம் ஹவாயன் கிட்றார் போலவும்  இருந்த ஸ்வீடிஷ் பெண்களிடம் இருந்து எப்படி " கோவேறு வளஞ்சேர் கோவிந்தா " எண்டு வாற  ஆழ்வார் பாடலுக்கு என்ன உண்மையான அர்த்தம் என்பதையும் கண்டு பிடித்தேன் .  

                                 நீட்டி முழக்கி கதை எழுதிப்  போட்டு உங்களை அறுக்க விருப்பமில்லாததால் ,மிகுதிக் கதையை இரண்டாம் பகுதியாக எழுதுறன்,சரிங்களா?.....
.

Saturday, 31 October 2015

இடங்களைப் பெயர்ந்த கதைகள்..001

சரியாக இருவது வருடங்களின் முன் இன்றைய தினம்,யாழ் குடாநாட்டை தரைவழியாக கைப்பற்றும் சூரியகதிர் இராணுவ நடவடிக்கை அகோராமாகி , வலிகாமம் வடக்கு, யாழ் நகரம் முழுவதிலும் வசித்த ஐந்து லட்சம் மக்கள் தென்மராட்சிக்கு உள்நாட்டு அகதிகளாக இடம்பெயர வைத்த வலி நிறைந்த வரலாற்று நிகழ்வு நடந்த நாள் என்று சொல்கிறார்கள்.
                                     அதில் நானும் என்றுமே விட்டு விலக நினைக்காத யாழ்பாணத்தை விட்டு நிலத்தால் இடம்பெயர்ந்தேன். என்னோட அம்மாவும் இரண்டு உடன்பிறப்புக்களும் தென்மராட்சியில் வந்து ஒரு தெரிந்தவர்கள் வீட்டு வேப்ப மரத்துக்கு கீழே குந்தி இருந்தோம். பலர் வடமராட்சிப் பக்கமும் உறவுகள்,நண்பர்களை அண்டிப்போனார்கள்.
                                  " உள்ளுக்க இறங்கவிட்டு பொக்ஸ் போட்டு அடிப்பார்கள் " என்று ஆள் ஆளுக்கு கதைக்கொண்டு இருந்ததால். என்னமோ சில மாதங்களில் குந்தி இருந்த இடத்தில தற்காலிகமாக ஒட்டின குண்டி மண்ணைத் தட்டிப்போட்டு மறுபடியும் சொந்த வீட்டுக்குப் போகலாம் என்றுதான் நானும் நினைத்தேன் , பலரும் அப்படிதான் நினைத்து இருந்தார்கள்.
                                          தென்மராட்சி மக்கள் அன்பாக தங்கள் இடங்களில் இட்டு முட்டு பட்டாலும் அதைப் பொறுத்து இடம் கொடுத்தார்கள் முடிந்தவரை ,குழைக்காடு என்று கிண்டலாக அழைக்கப்பட்ட அந்தப் பிரதேசம் ஓரளவுக்கு இடம்பெயர்ந்த மக்களை முடிந்தளவு இயல்பு நிலைக்கு உள்வாங்கி கொட்டிலிலும் குடிசையிலும் ,கோவில் வெளி மண்டபங்களிலும் இயங்க வைத்தது.
                                          வன்னிக்குப் போக விரும்பும் மக்களை,வன்னியில் குடிசைக் கட்ட நிலம் ,கப்பு வளை போட தடி கம்பு , அதுக்கு கூரை மேய தென்னம் ஓலை தருகிறோம் " இதயபூமிக்கு இடம்பெயர்ந்து வாருங்கள் " என்று சொல்லி இலவசமாக படகு சேவை கொடுத்து ஏற்றிப் பறித்தார்கள். சிலநேரம் ராணுவத்தால் நேரடியாகப் பிடிக்கப்படும் சந்தர்பங்களில் மோசமான பின் விளைவுகள் வரலாம் என்று பயந்த வீரமான இளையவர்களை நாட்டுக்கு கொடுத்த குடும்பங்கள் எல்லாருமே அப்படியே வன்னிக்கு போய்க்கொண்டு இருந்தார்கள்.
                                               எப்படியோ சில மாதத்தில் என் குடும்ப உறுப்பினர்கள் வன்னிக்குப் போய் விட்டார்கள் . நான் வேலை செய்த நிறுவனத்தின் நிவாரணத்திலும்,அரசாங்க நிவாரணத்திலும் தொங்கிக்கொண்டு கிட்டதட்ட ஆறு மாதம் தென்மராட்சியில் இருந்தேன்.
                                             அதுக்கும் ஆப்பு வைக்கிற மாதிரி ஒரு நாள் காலை சரசாலையை நோக்கி முன்னேறி இராணுவம் அதை சண்டை இன்றியே கைப்பற்றி ,பின் வழிமறிப்பு சண்டை ," கவுண்டர் அட்டாக் " என்று வானவேடிக்கை அகோரமாகினாலும் , ராணுவம் மீசாலை வரை முன்னேறினார்கள் . அதில் வைச்சு தான் " லவுட் ஸ்பிகரில் " மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்துக்கு வருமாறு அறிவிக்க நிறைய மக்கள் உள்ளே போனார்கள்.
                                                  மீசாலை வீரசிங்கம் மகாவித்தியால சந்தியில் ராணுவம் நிற்பதையும், " விடமாட்டாங்கள் அடிப்பாங்கள் பிடிப்பாங்கள் " என்று உசுப்பு ஏத்திக் கொண்டு இருந்த பலரே ராணுவத்துக்குள் போவதைப் பாத்துப்போட்டு, சில நாட்களில் கிளாலிக் கடலால் நேவிக்காரனின் " லேசர் ரவுன்ஸ் " அடி தலையத் தடவிக்கொண்டு போக மறுபடியும் கடலால் இடம்பெயர்ந்து வன்னிப் பெருநிலப்பரப்பில் காலடி வைத்து கிளிநொச்சியில் மறுபடியும் என் சகோதரியைத் தேடிப்பிடித்து, தங்க இடம் இல்லாமல் கிளிநொச்சி முருகன் கோவிலில் அகதிகளோடு அகதியாக இருந்தேன்,
                                  நல்ல காலம் நான் யாழ்பாணத்தில் வேலை செய்த நிறுவனம் பரவிப்பாஞ்சானில் இடம்பெயர்ந்து இயங்கியது, அதால் அதில வேலை கிடைக்க கொஞ்சநாள், நுளம்புக்கடி செல்லடி போல இருந்தாலும் ஒண்ட வந்த பிடாரி பிஞ்சுபோன அகதி போல இயங்குவதுக்குப் பரவாயில்லாமல் இருந்தது.
                               வன்னியில் ஸ்கந்தபுரம் ரெண்டாம் வாய்க்காலில் ஒரு சின்ன இடம் காட்டு விழிம்பில் ஒரு உறவினர் வீட்டுக்கு அருகில் கிடைத்தது. அதில கொட்டில் ஒன்று போட்டு கொஞ்சநாள் இருப்போம் என்று காட்டை வெட்டிக் குத்துக்கால் போட " இந்தக் காட்டுக்க மனுஷன் இருப்பானா " எண்டு சொல்லி அவர்கள் இருவரும் சந்தில சிந்து பாடிப்போட்டு வவுனியாவுக்கு எஸ்கேப் ஆகி கொழும்புக்கே போய் விட்டார்கள் அதன் பின் வன்னியில் இருந்த காலம் முழுவதும் தனியாத்தான் தவில் அடிச்சுக்கொண்டு இருந்தேன்.
                                      சில மாதங்களில் கிளிநொச்சி நகரைப் பிடிக்க பரந்தன் பக்கம் இருந்து ஆனையிறவு இராணுவம் முன்னேற ,கிளிநொச்சியைக் கைவிட்டு காட்டுப்பகுதியான, முறிப்பு, கோணாவில், யூனியன்குளம், ஸ்கந்தபுரம், அக்கராயன் என்று குட்டி போட்ட பூனை குட்டிகளைத் தூக்கிக்கொண்டு போன மாதிரி பொம்பர் அடிக்கு பாலைமரத்தையும் கிபீர் அடிக்கு முத்திரைமரத்தையும் சுற்றி ஓடி ஒளிச்சுப்பிடிச்சு, செல்லடிக்கு வாய்காலில் கவர் எடுத்து, ஹெலி அடிக்கு விழுந்து படுத்து,சின்னாபின்னமாகி அலைந்து...
                                              வன்னியின் காட்டுப்பகுதியில் மலேரியாக் காச்சல் ரெண்டு முறை மூளை மலேரியா ஆக்கி பிசதிக்கொண்டு அதில தப்பி,அகோரப் பசிகிடக்கும் குளத்து முதலைகள்,விஷம் காவிக்கொண்டு திரிந்த புடையன் பாம்புகளுக்கு உச்சி விளையாடி , ஒருமுறை கோட்டைகட்டிய குளத்தில் அலியன் யானையிடம் இரவு மயிரிழையில் தப்பி, சொந்த வாழ்க்கையையும் கண்டறியாத காதலில் சொதப்பி ரெண்டு வருடங்கள் இருந்து,
                                                 ஒரு மாதிரி பாஸ் எடுத்து, உயிலங்குளம் , மன்னார், செட்டிகுளம்,பறையணாளங் குளம் ,பூந்தோட்டம் , வழியாக வவுனியா வந்த பின் தான் பெருமூச்சு விட்டு ஒரு உடம்பைத் தடவிப்பார்த்து உயிர் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு திருப்பி ஆர்மி பாஸ் இக்கு சுத்துமாத்து செய்து கள்ளமாக கொழும்புக்கு களைச்சுப்போய் வந்த போதுதான் நாக்கில் தண்ணி வந்தது.
                                                 போட்டிருந்த அண்டவியர் கிழிஞ்சு தொங்கும் அளவுக்கு வழியெல்லாம் கஷ்டம் தந்த இந்தப் பாதையில் இன்னும் திரும்பிப் போகவில்லை, எப்படியோ ஒரு பிரயாணம், இடங்கள், சம்பவங்கள் என்று சுருக்கமாக மேலே ஒரு " ஸ்கெட்ச் " போல சொல்லியுள்ளேன். ஆனால் இந்த இவ்வளவு இடங்களிலும் நடந்த சம்பவங்கள் ஒரு வாழ்நாளுக்குப் போதுமடா சாமி என்பது போல அவளவு அலங்கோலமாய் வாழ்க்கை சிதறியது,
                                              பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி கிரவல் மண்ணோடு மண்ணாகப் பிரண்டு உருண்டு ,எமனோட கை குலுக்கி ,அதிஷ்டம் அரைவாசியாவது அனுதாபப்பட்டதால் உயிர்தப்பிய அதையெல்லாம் " இடங்களைப் பெயர்ந்த கதைகள் " என்ற தலைப்பில் எழுத நினைப்பது. நினைப்பது அவளவுதான் இன்னும் எழுதவே தொடங்கவில்லை,,சிலநேரம் நினைப்பது எழுதித்தான் என்னத்தைக் கிழிக்கிறது என்று வெறுப்பும் வரும்.
                                                                தென்மராட்சி இடபெயர்வில் ,என்னிடம் இருந்த இரண்டு கிட்டார்களை இழந்தேன்,அவை இரண்டும் நானும் என்னோட தச்சுத் தொழில் செய்யும் நண்பனும் சேர்ந்து சொந்தமாக கையால் உருவாக்கியது.வன்னியில் இருந்து மன்னாருக்கு தவளை போலப் பாஞ்ச நேரம் வைத்து இருந்த மூன்றாவது கிட்டாரையும் இழந்தேன். அதெல்லாம் ஒரு இழப்பே இல்லை மற்ற மனிதர்களின் இழப்போடு ஒப்பிடும்போது .
                                                 திசைகள் தெரியாமல் திட்டிக்கொண்டு , பழங்கஞ்சிக்கும் அல்லாடி பழஞ்சீலை கிழிஞ்ச மாதிரி புறுபுறுத்தாலும், இந்த உலகத்தின் அழகான பல அறியப்படாத பிரதேசங்களில் வாழ்ந்து , பல்வேறு மக்களுடன் உறவாடி உணர்ந்து, அன்பு, பாசம், கருணை, இழப்பு, வெறுப்பு ,உதவி, உழைப்பு, பொறுமை,துரோகம் எல்லாவற்றையும் இன்னுமொரு " வொல்காவில் இருந்து கங்கை வரை " போல புதிய கோணங்களில் இருந்து வாழ்க்கை யதார்த்தத்தை திறந்து விட அதில் இடறி விழுந்து எழும்பிய அனுபவங்கள் இப்படி ஒரு இடபெயர்வில் அலைக்கழிக்கப்படாமல் நிட்ச்சயமாக் கிடைத்தே இருக்காது
                                            இன்றைக்கு யாழ்பாணத்தை " யூ டுயுப் " போன்ற கானோளிகளில் பார்க்கும்போது அதன் அலங்கார நாகரிகம், நாயைப்பிடி பிச்சை வேண்டாம் என்பதுபோல இனி பழசையெல்லாம் கொத்திக் கிளறி புரட்டி எடுத்தால் எடுபடுமா என்று பிரமிக்க வைக்குது. ஒரு காலகட்டத்தில் மனிதர்கள் எப்படி விடுதலைக்கு சமாந்தரமாக அதன் வீரம்மிக்க அர்பனிப்புகளுக்கு தங்கள் விலையைக் கொடுத்தார்கள் என்று கதைகள் போல எழுதினால் அதை யாரும் வாசிப்பார்களா என்று தெரியவில்லை.
                                                    ஒரு வரலாற்று ஆவணம் போலவாவது இருந்திட்டுப் போகட்டுமே என்ற ஒரு அற்ப ஆசை எட்டிப்பார்க்க சொல்ல வேண்டியதை சொல்லித்தான் ஆகவேண்டும் எண்டு ஆத்மாவை அரிக்குது அடிமனது அதனால் பார்க்கலாம்...
.
.30.10.15
,

Friday, 30 October 2015

மென்மையான கிட்டார் இசை அதிசயம் எரிக் கிளப்டன் ,

யாழ்பாணத்தில நான் கிட்டார்  படித்தபோது , என்னோட இசை ஆசிரியர் ஒரு இங்கிலீசுப் பாட்டும் சொல்லிதரவில்லை ,ஆனால் அவர் தனக்கு விருப்பமான சில கிடார் வாத்தியம் வாசித்துப் பாடிய சில பாடகர்களின் பெயர்களையும் , அவர்களின் திறமை , ஏன் அவர்கள் உலக அளவில் கிடார் இசையில் கவனிக்கப்பட்டார்கள் என்பதையும் சுருக்கமா சொன்னார் ! அப்படி அவர் முலமாக அந்த நாட்களில் வெறும் பெயர் மட்டும் அறிந்த ஒருவர் எரிக் கிளப்டன் !

                                           மென்மையான , மேலோடி ஸ்டைலில், சோகமானா தத்துவ , பிரிவின் வதையையும் , காதலின் ஆழத்தையும் , கருணையின் நீளத்தையும் , மரணத்தின் தவிர்கமுடியாத தலை விதியையும் ஆங்கிலப் பாடல்களில் இசை அமைத்து , அதில் அவரே கிடார் வாசித்துப் , கொஞ்சம் அவரே கர்கரப்பானா, ஆனால் கவர்ச்சியான குரலில் எல்லாரயும் பாடி மயக்கிய எரிக் கிளப்டன் ,இந்த நுற்றாண்டின் ஒரு மென்மையான, Rock and Roll  ,Pop,Blues ,Mild pop ,Mild Blues , Blues grass மேலோடி "அக்கோஸ்டிக் கிடார் " இசை அதிசயம் !

                                                எரிக் கிளப்டன் இங்கிலாந்தில் 16 வயது அம்மாவுக்கும், ஒரு "சைலர் " என்ற கப்பல் நாடோடிக்கும் பிறந்தவர் ,அவர் பிறந்தவுடனயே ,தாத்தா பாட்டியிடம் அவரை தள்ளிவிட்டு பெற்றோர் பிரிய,அவரோட "டீன் ஏஜ் "வயசிலதான...் , தானோட தாத்தா பாட்டி எதுக்காக தன்னை சின்னவயசில் இருந்து வளர்த்தார்கள் என்பதும் ,அவரோட பெற்றோர் .சொந்த சோகக், கதையை கொஞ்சம் எக்ஸ்ட்ரா சோகமாகா, தட்செயலாக நடந்த ஒரு குடும்ப சம்பவத்தில் அறிந்தார்! அந்த அதிர்ச்சி அவரின் வாழ்நாள் முழுவதும் மனதளவில் தாக்கியது !
                                                       
                                              எப்படியோ தன்னோட சிறுவயதுப் பின்புலம் ,அம்மா அப்பாவின் அன்புக்கு ஏங்கி தவித்தாலும் , அவரில் இளவயதிலேயே எரிக் கிளப்டன்" றொக் அண்ட் ரோல் "lead கிடாரிஸ்ட் ஆக உலகம் எங்கும் பரவலாக அறியப்பட்டபோதும் ,அவர் சொந்தமாக இசை அமைத்த பாடல்கள் எல்லாம் மரப்பலகையாள செய்த "அகோச்டிக் " கிடாரில், மென்மையாக,மெதுவாக ,டெக்னிகலால split chords என்பதை வைத்து, வாங்கு, வாங்கு என்று வாங்கி உலகாலவில் பலரோட மூகில விரலை வைத்து ஜோசிக்குமலவுக்கு அசத்தி தள்ளினார். இப்படி ஸ்லோவாக இவர் வாசித்தால் இவரை " Mr slow hand " எண்டு கிண்டல் பண்ணினார்கள், அப்படி தன்னை சொல்வதை "பெருமையாக" நினைப்பதாக ,அடக்கமாக பின்னாளில் ஒரு TV பேட்டியில் சொன்னார் எரிக் கிளப்டன்.

                                               இவளவு "ROCK & ROLL " கிட்டார் பேமஸ் ஆனா எரிக் கிளப்டன், சொந்தவாழ்க்கை அலங்கோலமானது ,அவரோட முதல் மைனைவி லைலா ,அவரை விட்டு பிரிந்துபோக, "கொக்கைன்" போதைவஸ்துக்கு அடிமையானார், ஆனால் "லைலா " எண்டு ஒரு அல்பம் அவரே " What'll you do when you get lonely ,And nobody's waiting by your side? எஎன்று கதறி கதறிப் பாடி  த்தனிமையின் கொடுமையை  " Layla, you've got me on my knees., I'm begging, darling please. Layla, darling won't you ease my worried mind."   என்று இசை அமைத்தார், அந்த " லைலா "அல்பத்தில் உள்ளா இன்னுமொரு உலகப் புகழ் பெற்ற பாடல்  "WONDERFULL TO NIGHT!  அதை Ballet என்ற ரொமாண்டிக் ஆங்கில நடன தாள கதியில் இசைஅமைத்துப் பாட அந்தப் பாடல் இன்ற்றையா நாளில்  இந்த உலகத்தில ஒலிக்காத மேடைகளே இல்லை!

                                                 அவரோட முக்கியமான , மெலஞ்சொலிக் ஸ்டைலில்,  சோகமான , ஒருவித சர்ரியலிஸ்டிக் தத்துவ வரிகள் உள்ள  "Tears  In Haven " என்ற  பாடல் ,அவரோட நாலு வயசு மகன், நியூ யோர்க்கில் 53வது மாடியில் இருந்து தவறிவிழுந்து இறந்து போக ,"I didn't feel the loss anymore, which is so much a part of performing this song" என்று சொல்லி .அந்த சோகத்தில எழுதி இசைஅமைத்த பாடல் எண்டு சொன்னார் ,இழப்புகள் எப்போதுமே அவரை சுற்றி சுற்றி வந்தபோதும் அசங்காமல் இசை அமைப்பில் இப்பவும் புதுமை செய்கிறார் எரிக் கிளப்டன்.

                                                 எரிக்கிளப்டன் அவரோட தந்தைக்காக When I look in my father's eyes.  என்று ஒரு பாடல் படித்திருக்கிறார் , அந்த பாடல் ஒருவித ஏக்கம் நிறைந்த ,Then the light begins to shine .And I hear those ancient lullabies.போன்ற 18ம் நூற்றாண்டு, மறைந்துபோன  ஆங்கில வார்த்தைகள் எல்லாம் போட்டு இசைஅமைத்த பாடல் அதில ,கொஞ்சம் வில்லங்கமான , ஆன்மீகம் சம்பந்தமான ,,Praying for the healing rain , To restore my soul again. போன்ற வரிகளும் வருவதால் சிலர் அந்தப் படலை ஜேசுநாதருக்காகப் பாடியதும் எண்டும் சொல்லுறார்கள் , எப்படியோ அந்தப் பாடலைப்போல வேறு  ஒரு பாடல் இன்னும் வரவே இல்லை.

                                    அமைதியான,அடகமான் இந்த கிடாரிஸ்ட்,எல்லா முன்னணி இசைமேதைகளுடனும் கிடார் வாசித்து இருக்கிறார் , 2005, இல் சுனாமி  அடிததபோது பாதிக்கப் படவர்களுக்கா இசை நிகழ்ச்சி செய்து அந்தப் பணனதை பாதிக்கப் பட்ட வர்களுக்குக் கொடுத்தார்  இந்த இசைமேதைய கவுரவிக்க, அவர் எப்போதும் விரும்பி வாசிக்கும் "fenders " எலெக்ட்ரிக் கிடார் நிறுவனம்,சென்ற ஆண்டு "ERICK KALPTAN . E SERIES " என்று தங்களின் அதிநவீன கிற்றாருக்குப் பெயர்வைத்து " கிட்டார்  " என்ற வாத்தியத்தை பெருமைப்படித்தினர்கள்!
.
.

Wednesday, 28 October 2015

இரவின் மடியில் இதயம் வரை...

வசந்தகாலம் விடைபெறும் கடைசி மாதத்தில், பேர்ச் மரங்களும் வில்லோ மரங்களும் அவைகளின் கடைசி இலைகளைக் கழட்டி மஞ்சளாகிய சென்ற வாரம், ஒஸ்லோவில் எதிர்கால இலற்றோனிக் சாத்தியங்கள் என்ற தலைப்பில் இலற்றோனிக் கண்காட்சியும் " கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டினது " போல விற்பனையும், தலைநகரின் நடுவில் உள்ள ஒரு பெரிய மகாநாட்டு மண்டபத்தை வளைச்சுப் பிடிச்சு நடத்தினார்கள்.

                         ஜப்பான்,தென் கொரியா, தாய்வான் ,சைனா இல இருந்து பல்தேசிய இலற்றோனிக் உற்பத்தி நிறுவனங்கள் அவர்களின் சந்தைப்படுத்தல் முகவர்களை அனுப்பி வைச்சு, அந்த நிறுவனங்களின் அதி நவீன இலற்றோனிக் உற்பத்திகளின்  கண்காட்சி என்ற பெயரில், முடிந்தளவு  அவர்களின் வேறு சில தயாரிப்புகளையும் அதைப் பார்க்க வந்தவர்களின் தலையில் " நடக்க மாட்டாத லவாடிக்கு நாலு பக்கமும் சவாரி " பழமொழி போல பாசல் கட்டி ஏத்தி அனுப்பிக் கொண்டு இருந்த ஒரு இடத்துக்கு சும்மா  " எதிர்கால இலற்றோனிக் சாத்தியங்கள் " என்ற தலைப்பில் கொஞ்சம் கவரப்பட்டு உள்ளுக்க வலது காலை எடுத்து வைச்சுப் போய்  சுற்றிப் பார்த்தேன். 

                                                அந்த மண்டபத்துக்கு வெளியேயும், உள்ளேயும் அடிச்சுப் பிச்சு இளம் பெண்கள்தான் குறுக்க மறுக்க " மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது " குறுந்தொகை போல நிறைந்து இருந்தார்கள். மண்டப வாயிலில் இன்னும் கொஞ்சம் இளம் பெண்கள் ஒரு " கட்லோக் " என்ற கடைகளின் விபரம் அவை விற்கும் பொருட்கள் பற்றி ஒரு சின்னக் குறிப்பு உள்ள துண்டுப்பிரசுரம் தந்தார்கள். அந்த இடமே ஏறக்குறைய " வண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறை அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர் " அகநானூறு கால இளமையா இருக்க, அதையும் வேண்டிக் கொண்டு " தந்தன தந்தன தாளம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் " எண்டு பாடிக்கொண்டு உள்ளுக்கு சும்மா சுற்றினேன்.

                                           எல்லா சின்ன சின்ன கடைகளிலும் நிறைய அதி நவீன , " பிளாஸ்மா " , " மட்ரிக்ஸ் ", " ஹை டேபிநிசன் ", " லேமொட்த் "தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள் உலக அழகு ராணிகள் போல " என்னைப் பார் என்னைப் பார் " எண்டு ப்ளஸ் ஏற்ற  புரோட்டான்களும், மைன்ஸ் ஏற்ற இலத்திரன்களும் ஓடிப்பிடிச்சு விளையாட அவைகளுக்கு நடுவில்  நடுநிலை நியுற்றோன்கள் போல  ஒரு ஓரமாக ஒதுங்கி நிண்ட போது  அவைகளின் பாவனை ஏன் இப்ப எங்களுக்கு தேவை எண்டு ஜோசிக்க வைத்தது...

                              அந்த கண்காட்சி உண்மையில் " பணமும் பத்தாயிருக்க, பெண்ணும் முத்தாயிருக்க, முறையிலேயும் அத்தை மகளாயிருக்க " பிரமிப்பா இருந்து, எதிர் கால " ஹை டெக் " தொழில் நுட்பம் உண்மையில் பயப்பிடுத்தும் போல இருந்து, டெலிவிஷனை ஒரு சீலை போல சுருடிக்கொண்டு போய் விரும்பின சுவரில வைச்சு தப்பிப்போட்டு வேண்டிய சனல் பார்க்கலாம் எண்டு ஒரு செய்முறை விளக்கம் செய்து காட்டினார்கள் அதைப் பார்க்க குதிக்காலில் சீனி எறும்பு கடிக்கிற மாதிரி திரிலா இருந்தது.

                                       அந்தப் பொருட்களை உலகத்தின் வேற ஒரு மூலையில் இருந்து கொண்டு எப்படி யாரோ ஒருவர் கண்டு பிடிக்கிறார் என்ற ஆச்சரியதைவிட,  இவளவு அழகான பெண்கள்  ,அவைகளை வாயில தேன் போத்திலை வைச்சு சரிச்சு ஊத்தின மாதிரி தேன் ஒழுகப் பேசி , சிக்கலான டெக்நோலோயில் உருவான சாதனங்களை இலகுவாக விளங்கப்படுத்தி விற்பனை செய்த இளம்பெண்களை  யார் எங்கிருந்து கண்டுபிடித்து இங்கே கொண்டு வந்தார்கள் என்ற கேள்வி மிகவும் ஆச்சரியமா இருந்தது.

                             எல்லாக் கடைகளிலும் இருந்த விற்பனைப் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல எண்டு " ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க.... " அபிராமிப் பட்டருக்கே சவால் விடுற மாதிரி இருக்க பேசாமல் இந்த கண்காட்சிக்கு " எதிர்கால இலற்றோனிக் சாத்தியங்கள் " என்ற பெயரை விட " எதிர்கால வாழ்க்கைத் துணைகளின் சாத்தியம் " எண்டு பெயர் வைச்சிருக்கலாம் போல இருந்தது..,,

                       வளர்ச்சியடைந்து கொண்டு வரும் நாடுகளின் உற்பத்திப்பொருள்கள்,  வளர்ச்சியடைந்த மேலை நாடுகளில் அதிக விலைக்கு விற்பனை ஆகுது.  அதுக்கு காரணம் மேலை நாடுகளில் உள்ளவர்களிடம் திருப்பி இல்லைப் போல இருக்கு, அதிகமாக இளம் பிள்ளைகள் தான் விடுத்தது விடுத்தது கேள்வி கேட்டு அதுகளை வேண்டி  " பத்தியத்துக்கு முருங்கைக்காய் வாங்கிவா என்றால், பால் தெளிக்கு அவத்திக்கீரை கொண்டு வந்த மாதிரி " பாவித்துப் போட்டு, அதன் நவீனம் கொடுக்கும்  பெறுமதி குறைய,  ஏற்கனவே வீட்டில் இருக்கும் மற்றபல இலற்றோனிக் குப்பைகளுடன் அதை எறிஞ்சு போட்டு மறுபடி அதி நவீனம் தேடுவார்கள்,

                                இப்படியான கண்காட்சி விற்பனை ஒழுங்கு செய்பவர்கள் அவர்களுக்கு கடன் கொடுக்க கையோடு சில " பேங்க் " குகளையும் ஒழுங்கு செய்து வைச்சு இருப்பார்கள், அந்த விற்பனை நிலத்திலேயே " நோர்வேயின் பொருளாதரத்தை நிமிர்த்திப் பிடிக்கிறோம் "  எண்டு பெருமையா விளம்பரம் எப்பவும் டெலிவிசனில் செய்யும் ஒரு பேங்க்,  
                                      
                                  "  ஓடியா.. ஓடியா ..கையில காசு வாயில தோசை, கையில காசு வாயில தோசை, போனா வராது ,வந்தாப் போகாது  ...ஓடியா.. ஓடியா ..கையில காசு வாயில தோசை, கையில காசு வாயில தோசை .."

                                   எண்டு விளம்பரம் செய்து கொண்டு, எவன் வந்து மாட்டுவான் " நோர்வேயின் பொருளாதரத்தை நிமிர்த்திப் பிடிக்க " என்று ஒரு " மினி பேங்க் ஸ்டால் " திறந்து வைச்சுக் கொண்டு இருந்தார்கள். கொள்ளை அடிப்பவர்கள் இப்படிதான் எப்பவுமே திட்டம் போட்டு கும்பலாகக் கொள்ளை அடிப்பார்கள் என்று கொமினிசம் சார்ந்த புத்தகங்களில் சின்ன வயசில் படித்து இருந்தாலும் அன்றுதான் நேரடியாப் பார்க்க முடிந்தது.

                          ஒரு கட்டத்தில் இப்படி பேங்க் கடனுக்கு  அழுது வடிந்து வேண்டிய இலற்றோனிக் பொருட்கள்  " கழுதை வளையற்காரன் கிட்டபோயும் கெட்டது, வண்ணான் கிட்டபோயும் கெட்டது " போல நீர்த்துப்போனாலும் பேங்க் இல் எடுத்த கடன் முடியும் வரை கட்டத் தான் வேண்டும். அதைதான் பேங்க்காரங்கள் " வந்தாப் போகாது " எண்டு சொல்லி சொல்லியே எல்லாரையும் மயக்கும் வித்தை போல இருந்தது.

                                  நான் அந்த இடம் முழுவது சுற்றி,பல விஞ்ஞானம்  விந்தைகளில் ஆர்வம் உள்ளவன் போல பல அதி நவீன பொருட்களையும்,  அழகுப் பெண்களையும் மேஞ்சு போட்டு, அந்த மண்டபத்தின் நடுவில் பேப்பர் கப்பில் கோப்பி விக்கும் கடை போட்டு இருந்தார்கள் அதில இருந்து ஒரு கோப்பியை வேண்டி உறுஞ்சிக்கொண்டு, சின்னப் பிள்ளைகள் உலகம் மறந்து கேம்ஸ் விளையாடும் விளையாட்டு சாதனங்களுடன்  தோற்று தோற்று விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். வயதான ஒரு பெண்மணி " ரிமொர்ட் கொன்றோல் " போல இருக்கும் பழைய நோக்கியா பழைய போனை வைச்சு ஆருக்கோ நம்பர் தேடி தேடி அதில குத்திக்கொண்டு எனக்கு முன்னால வந்து இருந்தா, 

                         " ஹாய் "

                            எண்டு சொல்லி  என்னைப் பார்த்து சிரிச்சுப்போட்டு,

                         " என்னோட பேரப்பிள்ளைகள் வந்து நிக்குதுகள் அதுகளோட வந்தேன், என்னோட பென்சன் காசில கொஞ்சம் கொஞ்சமா சேமித்த காசு கொண்டு வந்து அதுகளுக்கு சில பொருட்கள் வேண்டிக் கொடுக்கத்தான் நானும் வந்தன், இப்ப என்னடா எண்டால் என்னோட சேமிப்பு காசு  முழுவதுக்கும் ஒரு வழி பண்ணிப்போட்டு தான் அதுகள்  வெளிய வரும்கள் போல இருக்கு "

                      எண்டு விபரமா சிரிச்சு சிரிச்சு சொல்லி முடிய, 

                   " நீ ஒண்டும் வேண்டவில்லையா ,நிறைய மொபைல் டெலிபோன் எல்லாம் போட்டு இருகுரான்களே, சும்மா அதில விரலை வைக்கவே இழுத்துக் கொண்டு தண்ணியில அன்னம்போல வழிக்கிக்கொண்டு போகுதே ஒரு சேர்விஸ் பெண் பிள்ளை எனக்கே செய்து காட்டி வேண்டச் சொன்னாள் " , 

                               என்று போட்டு மறுபடியும் கையில வைச்சு இருந்த பழைய நோக்கியாவில் கல்லு உரலில நெல்லு நிரப்பி  உலக்கையால குத்துற மாதிரி குத்திப்போட்டு, 

                   " என்ர  மனுசன் போன் எடுக்குதில்லை, அந்தாளுக்கு காதும் ஒழுங்கா கேட்காது , "

                    எண்டு போட்டு மறுபடியும்

                " நீ ஒண்டுமே வேண்டவில்லையா ,ஏன் உன்னிடம் காசு இல்லையா,அல்லது நீ அகதியா வந்து அகதி முகாமில் இருக்குறியா  "   எண்டு  " சணப்பன் வீட்டுக்கோழி தானே விலங்கு பூட்டிக்கொண்டது " போலக்  கேட்டா,, 

                            நான் "  ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, இதுக்குள்ள ஒரு மண்ணும் வேண்ட விரும்பவில்லை "  

                                 எண்டு நல்ல  கவுரவமான நோர்க்ஸ் உச்சரிப்பில் சொல்லி சிரிச்சேன்,மனுசி நான் வெறியில இருக்றேன் எண்டு நினைச்சோ என்னவோ கொஞ்சம் என்னை சந்தேகமாப் அக்கம் பக்கம் பார்த்திட்டு 

                       " போட்டு வாறன்,நோர்வே சரியான வாழ்க்கைத் தரம் உயர்வான ,அதே நேரம் வாழ்க்கைச் செலவு அதிகமான நாடு, கவனம்பா காசு கண்ட பாட்டுக்கு செலவழிப்பதும் நல்லதில்லை, ஹா டே ப்ரோ , ஹா டே குட்  , ஹா என் பின் டாக் " 

                            எண்டு சொல்லிப்போட்டு எழும்பிப் போயிட்டுது. 

                                  நோர்வே போன்ற நாடுகளில் வீடுகளில், அன்பாக ஆதரவாக நாலு வார்த்தை அக்கறையாகப் பேச யாரும் இல்லாமல்,  நிறைய மனிதர்கள் பேசுவதுக்கு உயிர் உள்ள மனிதர்கள் இல்லாமல் தனியாக இருக்குறார்கள்,ஆனால் அவர்கள் வீடு முழுவதும் இலற்றோனிக் தொடர்பு சாதனங்கள் நிறைந்து கிடப்பதைக் கண்டு இருக்குறேன். அவர்கள் தாங்கள் வளர்க்கும் நாய், பூனையோடு கதைத்துக்கொண்டு வாழுங்கள்.

                                     ஏன் அவங்களைச் சொல்லுவான் " சேணியனுக்கு ஏன் குரங்கு? " என்று அந்தக் காலத்தில் பழமொழி  எழுதி வைச்ச மாதிரி என்னுடைய வீட்டிலேயே நிறைய இலற்றோனிக் டீவி, டிவிடி , சிடி பிளையர், மைகிரோவேவ் அவன், அறுவத்தெட்டு டெலிபோன்,மோடெம், சடளைக்ஹ்ட் பொக்ஸ், அதிவேக ஜிகா மெகா வேக இன்டர்நெட் இணைப்பு .லாப் டாப் கணணி,டிஜிட்டல் கமரா , இசைக்கருவி சம்பந்தமான அம்பிளிபயர் சாதனங்கள் எல்லாம் கச கச எண்டு வீடு முழுக்க லொட்டு லோடுக்கு இலத்திரன் ஓடும் சாதனங்கள் அம்முக்கி கொண்டு குவிந்து கிடக்குது, அதை வைச்சு உலகத்தை வேகமாக இயக்கலாம், வாழ்க்கையை அடுத்தவனுக்கு கலர் படம் காட்ட  " ஹை டெக் லெவலில் மெயின்டேயின் " பண்ணலாம்.... ஆண்டவன் புண்ணியத்தில் அவளவுதான்செய்யலாம்! 

                                           ஆனாலும் உண்மையில்  சின்ன வயசில் யாழ்பாணத்தில்  எங்க வீட்டு ஹோலில் இருந்த மரத்தால செய்த பெட்டி போன்ற  பழைய ட்ரான்ஸ்சிஸ்டர் ரேடியோ  இரவின் மடியில் இதயம் வரை தந்த இன்பம் இதுகளில் இல்லை. கோப்பிக் கோப்பையை உள்ளங்கையில் வைச்சு நசிச்சு போட்டு குப்பைக் கூடையில் எறிஞ்சு போட்டு வெளிய வந்தேன்..

                                        வந்து வெளியே என்ன சோடினை போட்டு இருக்கிறாங்கள் எண்டு பார்த்தேன்,மண்டபத்தின் முக்கிய வாசலுக்கு மேலே நியோன் குழாய் விளக்கில் வளைச்சு ,  " அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கின கதை  போல வெளியால விசியங்கள் வேற மாதிரி இருந்தது,  

                         " நாளைய உலகம் இன்றைக்கு ஒஸ்லோவில்  "

                               என்று அந்த லைட் சுழண்டு சுழண்டு ஓட,  

                         " இந்த உன்னத நிகழ்வில் இணைவதில் ஒஸ்லோ நகரம் பெருமைப்படுகிறது "

                                          என்று ஒஸ்லோ நகரத்தின் நகரபிதா மேன்மை தங்கிய பேபியான் ஸ்டெங் வாழ்த்து சொல்லும்  பெரிய விவரண வர்ணப்  படம்  இணைத்த இன்னுமொரு அழகான விளம்பரப் பலகை அதுக்குக் கீழ வைச்சு இருக்க,  அதுக்குக் கீழே இரண்டு வசிக்க வீடு இல்லாத தெருவோரம் வசிக்கும் வெள்ளை இன நோர்வேயிய ஹோம்லெஸ் மனிதர்களில் ஒருவன் பேப்பர் கோப்பி கோப்பையை நீட்டி பிச்சை எடுத்துக்கொண்டு இருக்க ,மற்றவன் கம்பி அறுந்து போன கிடாரில்

                                 " jeg sto i skyggene i regn og vind
                           
                                   jeg var en fremmed til du åpnet deg og lot meg inn

                                   jeg sto alene helt til du steg frem " 

                                    " நான் ஒரு வீடு இல்லாத மழையிலும்,குளிரிலும் வாழும் மனிதன்,தயவு செய்து கதவை திறந்து உள்ளே அனுமதி , " என்ற ஜோஹனாஸ் பிஜெல் என்ற நோர்வே நாட்டவர் பாடிய  நோர்வே மொழிப் பாடலை இரவின் மடியில் இதயம் வரை உலகம் இறந்து கொண்டு இருப்பது போன்ற குரலில்ப்  பாடிக்கொண்டு இருந்தான்....
 .
.
.

ஜோர்ச் ஹரிசன், இந்தியாவை நேசித்த இதயம்!

யாழ்பாணத்தில, என்னோட இளவயதில் கிடார் பயின்றது மட்டுமில்ல , பின்னாட்களின் அதை சொல்லித்தந்த மாஸ்டரின் இசைக் குழுவான, திருநெல்வேலி ,கலாசாலை வீதியில் இயங்கிய " அபர்ணாலயா " என்ற அவரின் சிறிய, உள்ளுர்ப் பாடகர்கள் பாடிய , கோவில் திருவிழாவில விடிய விடிய இசை மழை பொழிந்த, ஒரு இசைக்குழுவில் bass கிடார் வாசித்த போது, நீண்ட தாடி, நீண்ட தலைமயிர் வளர்த்து இருந்தேன் . பார்க்க ராப்பிச்சைகாரன் ஒருவன் தவறுதலா  கிட்டாரோடு மேடையில் தோன்றியது போலவே ஒரு  ஸ்டைலில்  வாசித்தேன்!                                                         

                       பலநண்பர்கள் , உறவுகள் அந்த நேரம்  நேரடியாவே கேடார்கள்                                                                                     
                               "உனக்கு என்ன ஏதும்  காதல் தோல்வியா? அல்லது வேற என்னவும் பிரசினையா,,,,என்னத்துக்கு இப்பிடி  பிடிவாதமாக அலங்கோலமாக  , ஏன்  இப்படி தலைமயிரையும் ,தாடியையும்  விசர் ஆசுப்பத்திரியில் இருந்து தப்பி வந்தவன் மாதிரி வளத்துக்கொண்டு திரியிறாய்,  " என்று கேட்பார்கள். அதுக்கு  நான் எப்போதும் சொல்வது                                              

                                    " ஜார்ஜ் ஹரிசன் என்ற கிட்டாரிஸ்,,,அவரின்  பாதிப்பு இது ,,அவரை மாதிரி கிட்டார் வாசிக்க முடியாவிட்டாலும் அவரைப்போல தாடி,,தலைமயிராவது  வளர்த்து  என் ஆசையை  நிறைவு செய்கிறேன்,,,ஹ்ம்ம்,,,பார்க்கலாம் ஒரு நாள் அவர் போலவே கிட்டார்  கையில் எடுத்து இசைமழை  பொழியும் நிலைக்கு  வரவேண்டும் என்று வெறியிருக்கு  " எண்டு சொல்லுவது                                                          

                                      இப்ப எப்படியோ தெரியாது ,,ஆனால் பலருக்கு அந்தகால யாழ்பாணத்தில விளங்கவில்லை நான் என்ன சொல்லுறன் எண்டு ! அதனால ஒரு குத்துமதிப்பா எனக்கு மனநிலை சரி இல்லை எண்டு என் காதுபடவே புரளியக் கிளப்பி , அதையே கொஞ்சம் நாலு பக்கமும், உண்மை போலவே ஊதி விட்டார்கள் ! ஜோசிதுப்போட்டு, அவர்களின் கேள்விக்கு வாயை அடைக்கும் பதில் ஒன்று சொல்லாமல் அவர்களின் புரளியை நிறுத்தமுடியாது என்று நினைத்து ,அதுக்குப்பிறகு என் அடையாளத்தைக் கேலி செய்பவர்களுக்கு                                   

                                   "செல்வ சன்னதி முருகனுக்கு நேர்த்திக்கடனுக்கு வளர்கிறேன்" 

                                         என்று சொல்லத் தொடங்கினேன் , அதன் பின் பலர் நண்பினார்கள் ! இப்படிதான்,தமிழ் கலாசார சூழலில் ஒருவன் தாடி ,மீசை ,தலைமயிர் வளர்க எப்பவுமே வலுவான காரணங்கள் தேவை!                                                    

                                      சரி ஜார்ஜ் ஹரிசன் யார் எண்டு இப்ப உங்களுக்கே குழப்பாம இருக்கும் இல்லையா ? சொல்லுறன் .

                                பீட்டில்ஸ் ,இந்தப் பெயர்  உலகைக் கலக்கிய பெயர். ,இந்த  இசைக்குழு உலகத்தின் அதிகம் பேர் கேட்ட பாடல்களை இசைஅமைத்து பாடிய இசைக்குழு , அவர்களின் இசை,பாடல், வரலாற்றின் பெறுமதி இன்றய நிலவரத்திலும் பில்லியன் டாலர்கள் வருமானம் புரட்டிய அதிசயம், நான்கு இசைக்கலைஞர்கள்  சேர்ந்து அந்த சாதனையைச் செய்தார்கள். அவர்களின் இசை நாடித்துடிப்புப் போல தாளம் போட வைக்கும் "ராக் அண்ட் ரோல் " என்ற வகை அதில் இருந்த கிடாரிச்ஸ் ஜோர்ச் ஹரிசன்                                    
                                                     
                                      யாழ்பாணத்தில அந்த ஜார்ஜ் ஹரிசன் என்பவர் ககிட்டார்  வாத்தியக் கலைஞ்சரா இருந்த, " பீடில்ஸ் "இசைக் குழுவின் பாடல்கள் ஆங்கிலப் பாடல்கள் கேட்பவர்களுக்குத்தான் தெரியும் அந்த நேரம் ,எங்களின் வீட்டுக்கு அருகில் வசித்த, " கஸ்சுப் புஸ்சு " எண்டு கொடுப்புக்குள்ள இங்கிலிசு கதைக்கும் அப்போதிகரி டாக்டர் ஒருவர் ,அவரின் மகனுக்கு கணக்கு சொல்லிகொடுக்கப் போன என்னோட பெரிய அண்ணனனுக்கு அவர் விரும்பிக் கேட்ட " பீடில்ஸ் " பாடல் அடங்கிய ஒரு கேசட் கொடுக்க அதை அண்ணன் வீட்டில கொண்டுவந்து போட, அந்த பாடல்களின் இசை அண்ணனை மயகாமல், ஏனோ என்னை மயக்கியது , 

                                          அதுக்குப் பிறகு " பீடில்ஸ் " இசைக்குழுவின் விபரம் அறிய , "ஜப்னா முநிசிபால்டி பப்ளிக் லைபெறேரியில்" இருந்த " insider story of Beatels " என்ற புத்தகத்தை வரிக்கு வரி படிக்க , என்னோட நெஞ்சினில் " பீடில்ஸ் " நெருப்பு பத்தியது. அவர்களின் பாடல்கள்,,இசை  இந்த உலகத்தை திருப்பி மற்றப்பக்கமா சுழற விடுவது போல இருந்தது                                               

                                              அந்த பீடில்ஸ் இசைக்குழுவின் கலர்ப்படம் ஒன்று முகம் பார்க்கும் கண்ணாடியின் மேலே ஒட்டி வைச்சு இருந்தேன் .அதில அந்த இசைகுழு அங்கத்தவர் எல்லாருமே ஜிப்ப்சி ஸ்டைலில் தாடி ,மீசை,தலைமயிர் எல்லாம் அக்கறை இல்லாமல் வளர்த்து, மாதக்கணக்கில் தோய்க்காத டெனிம் காற்சட்டை போட்டுக்கொண்டு நிற்பார்கள். இவளவு கேவலமாக இருந்தாலும் அவர்கள் உலகத்தின் நம்பர் வான் இசைக்குழுவின் இசைக்கலைஞர்கள்.                                              

                                 அந்தப் படத்தை , முகக் கண்ணாடியில் முகம் பார்க்க மறந்து எப்பவுமே மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த என்னோட அம்மாவே ஒரு கட்டத்தில்                                    " 

                                  " டேய்..இவங்கள் யாரடா,, பார்க்கப் பரதேசிகள் போல இருக்கிறவன்களோட படத்தை ஒட்டி வைச்சு ஒவ்வொருநாளும் பார்த்துக்கொண்டு இருகிறாயே  ,,மூதேவி வாலாயம் பிடிச்சவங்கள் போல இருக்கே இவங்கட மூஞ்சியும் முகரக்கட்டையும் ,,இது   வீட்டுக்கு முழுவியளத்துக்கே உதவாத படமடா,, இதை  நீயா இப்ப கிழிச்சு எறியப்போறியா, இல்லாட்டி இப்ப நானே  கிழிச்சு அடுப்பில நெருப்பில  எறியப் போறேன்.."                                 

                                    என்று ஒரு நாள் சண்டை பிடிச்சா. ஒரு மாதிரிக் கெஞ்சி மன்றாடி அதைக் உரித்து எடுத்து கொண்டு வந்து என்னோட அறையில் இரகசியமாக வைச்சு சில வருடம் அந்த இசைக்குழுவின் மானத்தைக்  காப்பாற்றினேன்.                                                 

                                       ஜார்ஜ் ஹரிசன், இங்கிலாந்தின் மேற்க்கு கரையில் உள்ள துறைமுக நகரமான ,லிவர்பூலில் ஏழ்மையான  உழைக்கும் வர்க்கப் பெற்றோர்களுக்கு பிறந்தவர், அவரோட லிவர்பூலில் நகரத்தில் பிறந்த , பள்ளிக்கால நண்பர்கள் மூன்று பேருடன் இணைந்து உலகப் புகழ்பெற்ற "Beatels "இசை குழு உருவாகிய போது  , அந்த இசைக்குழுவில் lead கிடாரிஸ்ரா இருந்தவர்,

                                பின்னர் அந்த இசைக்குழுவில் இருந்த உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர் ஜோன் லென்னன் உடனும் ,லென்னனின் ஜப்பான் நாட்டுக்  காதலி ஜோகோ ஓனோவுடன் ஏற்பட்ட  மனஸ்தாபத்தில் பீட்டில்ஸ் இசைக்குழுவை விட்டு  பிரிந்து போய் தனியாக அல்பம் இசை அமைத்தவர் , அவரின் பாடல்கள் இசைக்காத நாடுகளே இல்லை, பாடாத மேடைகளே இல்லை , மயங்காத மனிதர்களே இல்லை என்கிற அளவுக்குக் கலக்கியவர் !                                                  

                                                       பின்னர்  அவரின் செவ்விகளில் விமானத்தில் பறந்து சென்று இசைநிகழ்ச்சி செய்ய பயந்து, அதை ஒரு காரணமாக சொன்னாலும் ,  ஜான் லனன்னின் ,காதலி  ஜோகோ ஓனோ இன் இம்சையைப்  பொறுக்கமுடியாமல் ,அந்த குழுவில் இருந்து விலகி தனியானதா சொன்னார் ! 

                                                  ஜோர்ச் இன் ஆழ்மனது  இசைப்பொறி உண்மையில் " ராக் அண்ட் ரோல் "  இல்லை.  இசையின் உண்மையான சோடனைகள் அற்ற அதன் உண்மையான முகத்தை அவர் தன்னுளே தேடினார். அவரின் அந்த  இசைத் தேடல் கீழத்தேய இந்தியாவுக்கு அழைக்க , இந்தியாவுக்கு போய் ரவிசங்கரிடம் சித்தார் பயின்றவர்,"here comes the sun " என்ற உலகப் புகழ் பெற்ற பாடலில் கிடாரில் , ரவிசங்கரின் சிதார் போல இசை அமைத்து வாசித்தவர்!                                              

                                                               இந்தியாவின் ஆன்மிகத்தில அலாதியான அமைதி இருப்பதை உணர்ந்து , ஹரிசன் ஒரு கட்டத்தில் "ஏகம் தத், அகம் பிரம்மாஸ்மி " எண்டு சொல்லி முழுவதும் இந்திய ஆன்மீகத்தில் இறங்கியவர்! இமயமலை அருகில் , ரிசிகேஸ் மலையடிவாரத்தில , ஜோகி ஒருவரின் ஆசிரமத்துக்குப் போய், உலகத்துடன் தொடர்பைத் துண்டித்து வருடக்கணக்கில் தியானம் செய்தவர் ! அவரின் இசை  அடையாளம் ஒரு கலாச்சார  அடையாளமாகவே மாறியது.                                     

                                                   இந்திய ஆன்மீகப் பாதிப்பால் ,அதன் பின் அவர் இசை அமைத்த பாடல்கள் எல்லாம் "everything must pass "  ,"Oh ,my sweet loard " ,"while my guitar gently weeps..."  எண்டு பாடிய அவரோட ஆன்மீகத் தேடல்கள் நிரம்பி வழிந்து," ஆன்மீக வரட்சி " நிரம்பிய மேலை நாடுகளில் பிரபலம் ஆகிக்கொண்டு இருந்த "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா " பக்தி இயக்கம், அவரின் பாடல்களைப் பாட , இன்றைக்கு ஜார்ஜ் ஹரிசன் யார் எண்டு, இசை உலகில் எல்லாருக்குமே தெரியும்.

                                                 அவர் நிறைய ஆன்மிக தேடல் ,நிலையாமை , கடவுளின் கருணை,பாவங்களின் மன்னிப்பு என்று  நிறைய ஆன்மீகப் பாடல்கள் இசை அமைத்து அல்பங்களாக வெளியிட்டார்,கோடிக்கணக்கில் அவை விற்றன . எழுபதுகளின் இறுதியில் ஹிப்பிஸ் ஸ்டைலில் வாழ்ந்த இளையவர்கள் அவர் பாடலைப் இபேச என்ற ஸ்பானிஸ் தீவில் பாடி,ஆடிப் பிரபலம் ஆக்கினார்கள். ஜார்ஜ் ஒரு சாமியாரா இருந்து  இருக்க வேண்டிய ஆள், தவறாக கிட்டாரிஸ்ட் ஆகிவிட்டார் போல இருந்தது அன்றைய வருடங்கள் என்று சொல்லலாம்.                                               

                                                        ஜார்ஜ் ஹரிசன் ,பங்களாதேஸ் வெள்ளத்தில் மிதந்தபோது "Banagaladesh we love you " என்று பாடி"  live concert "  இசை நிகழ்ச்சி செய்து வந்த காசு முழுவதையும் அந்த நாட்டு மக்களுக்கு கொடுத்தவர்! தான் இறந்தால் உடலை எரித்து அதில் ஒரு பகுதியை புனித கங்கை நதியில் வீசும்படி சொன்னவர்! ஜார்ஜ்சோட ஆன்மீக தேடல் வித்தியாசமானது,அப்படி இருந்தும் ,பைபிளையும்,ஜேசுநாதரையும் கிண்டல் அடித்து எடுக்கப்பட்ட  படமான "life of brian "எண்ட படத்தையும் அவர் தான் காசு  கொடுத்து  தயாரித்தார்!                                             

                                                             ஜார்ஜ் புற்று நோய் வந்த இறந்து அவரோட பூதவுடல் வைக்கப்படிருந்த அறையில் எந்த விளக்குகளுமே இல்லாமல், அந்த அறை மிகவும் பிரகாசமாக இருந்ததாக அவரோட மனைவி ஒலிவியா எழுதியுள்ளா!.இதைவிட வேற என்ன ஆத்மா விடுதலை வேண்டும் இந்தியாவை நேசித்த இதயத்துக்கு .
.

.