Sunday, 24 May 2015

உயிர் தேடும் ரோசேத்தா ..

சென்ற  ஆண்டு நவம்பர் மாதக் கடைசியில் பூமியில் நாங்கள் " பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கம் குருகினத்தால்.. " என்று பாடிக் " கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந்து " திருவெம்பாவை பாடும் நேரம் விண்வெளியில் ஒரு உலக அதிசயம் நடக்கப்போகுது என்று எதிர்பார்த்தது,,,கடைசியில் வெற்றிகரமாக நடந்தது. 

                                பில்லியன் மைல்கள் வின் வெளியில் இருந்து , இருள் வெளிகள் தாண்டி வரும் அந்த மில்லியன் வருடங்கள் பழமையான செய்தி இன்றை வரை நாங்கள் நம்பும் இந்த உலகத்தில் முதல் உயிர் எங்கிருந்து வந்தது என்ற பல அறிவியல்ப் புத்தகங்கள் சொல்லும் உண்மைகளைப் பிரட்டிப் போடலாம், சமய புத்தகங்களின் நம்பிக்கைகளுக்கு ஆப்பு வைக்கலாம் இந்த வால் வெள்ளியில் இறங்கியுள்ள செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்கள். 

                                எங்களின் சித்தப்பு,பெரியப்பு பிரபஞ்சத்தில் வேற ஒரு கிரகத்தில் இருக்கலாம், அத்தை மகளும்,மாமன் மகளும் அன்றமிடா கலக்சியிலும் இருக்கலாம் போன்ற  முக்கியமா இதுவரை அறியாத பல விசியங்களை எங்களுக்காக Comet Churyumov–Gerasimenko பில்லியன் மையில் தூரத்தில் இருந்து ஒரு செய்தியாக கொண்டு வந்து இருக்காலம், சிலநேரம் இதில எதுவும் நடக்காமலும் புஸ்வானம் போலவும் போகலாம், அது என்ன எண்டு சொல்லுறேன்..

                                       பத்து வருடம் முன்  " உன் விழியில் விழுந்தேன் வின் வெளியில் பறந்தேன் கண் விழித்து சொப்பனம் கண்டேன்... "எண்டு சினிமாப் பாட்டுப் பாடிக்கொண்டு, அஸ்டர் பெல்ட் என்ற சனிக்கிரக பாறைத் தொகுதியின் இடியப்பத் தட்டு போன்ற வட்ட வளைவுகளின் விளிம்பில்  இருந்து " இனிக் கூட்டுக் குடும்பம் சரி வராது நான் தனிக் குடித்தனம் போறேன் " எண்டு சனியன் பிடித்து ,தப்பியது ஒரு விண் கல் ,,அது வால் வெள்ளியாகி நீண்டுகொண்டே நீந்தத் தொடங்கியது. 

                               அதுதான்   தடவிக்கொண்டு  எங்கள் சூரியக் குடும்பத்துக்கு உள்ளே  குறுக்க மறுக்க வந்த  கொமெட் என்ற Comet Churyumov–Gerasimenko வால் வெள்ளி. இந்த வால்வெள்ளியின்  " ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த படு முடைப் பருந்து பார்த்திருக்கும் " கூந்தலைப் குறி வைத்துத் தேட அனுப்பிய நூறு கிலோ அழகு தேவதை ரோசேத்த Rosetta (spacecraft) சென்ற மாதம் அது தேடிக்கொண்டு இருந்த வால்வெள்ளியை பில்லியன் மையில்கள் அலைந்து, இடையில சில வருடம் தொடர்பு இழந்து, மறுபடியும்  சென்ற மாதம் 67P/Churyumov–Gerasimenko வால் வெள்ளியைக் கண்டுபிடித்துக்  கண் அடித்து, அதன் கமராக் கண்களைத் திறந்து எங்கள் நெஞ்சில பாலை வார்த்து  வால் வெள்ளிகளின் வாசல்க் கதவைத் தட்டிய Space rendezvous சம்பவம் தான் அது.

                                       எங்களின் சூரியத் தொகுதிக்கு கொஞ்சம் வெளியே ,அதன் விளிம்பில் சூரியனின் ஈர்ப்பு சக்தி கையை விடும் தூரத்தில் என்ன இருக்கு, என்ன நடக்குது எண்டு யாருக்கும்  தெரியாது,அங்கெல்லாம் சட்டலைட் அனுப்பி ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு இன்னும் எங்களிடம் தொழில்நுட்பம் இல்லை. ஒரே வழி அந்த பிரபஞ்ச வெளியில் இருந்து எங்கள் எல்லைக்குள் வரும் ஒரே ஒரு நல்ல தகவல் காவியான வால்வெள்ளிகளை மட்டும் வளைச்சுப் பிடிச்சு விசாரிக்கலாம்,அதுதான் பத்து ஆண்டுகள் முன் ஐரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி அனுப்பிய மில்லியன் டாலர் விழுங்கிய இந்த வால்வெள்ளி 67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளி பிடிக்கும் அந்த விண் வெளித் திட்டம். 

                                 அமரிக்காவின்  நாசா விஞ்ஞானிகள் தான் இதை முதலில் செய்ய இருந்தார்கள். வல்லரசு அமரிக்க பொருளாதாரம் சரிந்து விழ, காங்கிரஸ் " நாயைப்பிடி வால் வெள்ளி வேண்டாம் " என்று அந்த திட்டத்துக்கு காசு கொடுக்கவில்லை. வால்வெள்ளி எங்கள் சூரியத் தொகுதியை அண்மிக்கும் இந்த சந்தர்பத்தை இழக்க விரும்பாத ஐரோப்பிய  விஞ்ஞானிகள் துணிந்து இதில இறங்கினார்கள், நம்பினால் நம்புங்க , இதில மிகப் பெரிய ஆச்சரியம் இந்த  வைர மூக்குத்தியில்ஒரு விண்கலத்தை இறக்கி அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் நிகழ்வை  நடத்தப்போகும் European Astronaut Centre  விஞ்ஞானிகள் குழுவில் முக்கால் வாசிப்பேர் பெண் விஞ்ஞானிகள். 

                                  67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளியை 1969 இல் கண்டு பிடித்தவர்கள் இரண்டு சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த கால இரசிய விஞ்ஞானிகள் , அதனால் அவர்கள் இருவரின்  Churyumov–Gerasimenko பெயரைச்   சேர்த்து வெள்ளிக்கு வைத்துளார்கள். ஒருவர் Comet Churyumov இன்றைக்கு உள்நாட்டு சண்டையில் சாப்பிடவும் வழி இல்லாமல் அகதிகள் அலையும் உக்ரேன் நாட்டவர், மற்றப் பெண் விஞ்ஞானி வலந்தினா Gerasimenko  கசாகிஸ்தான் நாட்டவர். அவர்களின் கணிப்பில் 67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளி ஒரு நாள் எங்களின் எல்லைக்குள் வரும் எண்டு எழுதி வைத்துப்போட்டு மேல போய்ச் சேர்ந்து விட்டார்கள் ,அவர்களால் அப்போது அவளவுதான் செய்ய முடிந்தது,

                                உண்மையில் 67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளி எங்கள் சூரியத் தொகுதிக்குள் வந்த கொஞ்ச வருடங்களில்,எங்கள் கிரகத் தொகுதியில் உள்ள மிகப் பெரிய கோள் ஆனா, பூமிபோல ஆயிரம் மடங்கு ஈர்ப்பு விசை உள்ள வியாழன் என்ற ஜூப்பிடர் கிரகம் வியாழ தோஷம் பிடிச்சோ அல்லது வேற என்ன கோபமோ தெரியாது வால் வெள்ளியைப்  பலமுறை தாறுமாறா இழுத்து எறிந்தது ,அதன் பாதை பல சிரமங்களுக்கு மத்தியில் பில்லியன் மையில்கள் அலைய, அதைத் திரத்தி திரத்தி தேடி எங்கள் சின்னப் பெண் ரோசெத்தா டிசெம்பர்  மாதம் கண்டு பிடித்தா .

                                        நாங்கள் வசிக்கும் இந்த பூமிக்கு ஒரு நாள் ஆபத்து வின் வெளியில் இருந்துதான் வரும், அதோட எல்லாரும் கோவிந்தா தான்,முக்கியமா வால் வெள்ளிகள் ஆபத்தானவை ,எண்பதுகளில் வியாழக் கிரகத்துடன் மோதிய சூமேகர் லேவி என்ற வால்வெள்ளி அந்த கிரகத்தில் மோதி ஏட்படுத்திய பள்ளதுக்குள்ள எங்கள் பூமியைக்  கொண்டுபோய் வைக்கலாம்,அவளவு அகோர அடி,அப்படி ஒரு நிலைமை எங்களுக்கு வரும் போது எல்லா வீராதி வீரன்களும் ஓடிபோய் கெஞ்சப் போவது அஸ்ட்ரோ பிசிக்ஸ் விஞ்ஞானிகளிடம் தான்,அவர்கள் தான் விழிப்பாக விண் வெளியை பார்த்து கொண்டு இருப்பவர்கள் .

                            உயிர் கொடுத்து  உயிர்  தேடிய  ரோசேத்தா சட்டலைட் பல சந்தர்பங்களில் வின் கற்கள்,வேறு பல  சோலார் கதிர்கள்,காமாக் கதிர்கள், குழப்பங்களில் இருந்து இந்த பத்து வருடங்களில் உயிரைக் கையில பிடிசுக் கொண்டு பிராயணம் செய்த பில்லியன் மைல்களில் பலமுறை மயிர் இழையில் தப்பி இருக்கு, மணிக்கு முப்பத்தி ஐயாயிரம் கிலோ மீட்டார் வேகத்தில் ஒரு நீள் வட்டப் பாதையில் பறக்கும் 67P/Churyumov–Gerasimenko வால் வெள்ளியை வண்ணாத்திப்பூச்சியை பிடிக்கிற மாதிரி பிடிக்க முடியாத சந்தர்ப்பம் இருந்தும் ,கடைசியில் ரேசோத்தா நெருங்கிய இந்த திட்டமே ஒரு அதிசயம் இப்படி முடிவில் வெற்றி அளித்தது என்கிறார்கள் விஞ்ஞானிகள்...

                                       ஜெர்மனியில் உள்ள பிரான்க் போர்ட் அருகில் உள்ள  டாரம்ஸ்டேட் Darmstadt  நகரில் உள்ள ஐரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி சென்டரில் European Space Agency (ESA) இருந்து ரோசெத்தாவை இயக்கிய  விஞ்ஞானிகள் சளைக்காமல், செவ்வாய் கிரகம் , வியாழக் கிரகம் இன் மைய நீக்க  சுழற்சி இளு விசையையும், ரோசெத்தாவில் பொருத்தியுள்ள சோலார் சக்கி எஞ்சின்கள், சின்ன ஹிபர்ஜோனிக் ரொக்கெட் உதவியில் அதன் பாதையைக்  கணித்து இயக்கி,அதைத் தேட வைத்து, மண்டையைப் பிச்சு பாதைகளைக் கணித்து இயக்க வைத்தும்,சில வருடம், எங்களை எல்லாம் அந்தரிக்க வைத்துப் போட்டு ரோசெத்தா பில்லியன் மைல்கள் விலகிப் போனதால் பூமியுடன் தொடர்பை இழந்து போய் இருந்தது, 

                              அதன் பாதையில் இப்படி Hibernation நடக்கும் எண்டு கணித்து இருந்தார்கள், கணித்த படியே இந்த வருட ஆரமபத்தில் ரோசெத்தா தொடர்பை ஏற்படுத்திய சில வாரங்களில் அது கண்டு பிடித்த  67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளி இன் அருகில் போய் எடுத்து அனுப்பிய தெளிவான படங்கள் இன்றைவரை மனித வரலாற்றில் முதல் முதல் ஒரு வால் வெள்ளியின்  பயோ டேட்டா எங்க சட்டைப்பையில்க்  கிடைத்து இருக்கு,

                                           பூமியில் உள்ள  தண்ணீர் முழுவதையும் கொண்டு வந்தது, முதல் முதல் உயிரை விண்வெளியில் இருந்து கொண்டு வந்தது வால் வெள்ளிகள் என்ற கொமெட் என்று பல விஞ்ஞான தியரிகள் இருக்கு,இதை உறுதி செய்யும் நிகழ்வாக, இப்ப ரோசெத்தாவிடம்  விஞ்ஞானிகள் நம்பிக்கையோடு எதிர் பார்க்கும் ஒரே  ஒரு கடைசி நிகழ்வு, அந்த நாலு கிலோ மீட்டார் நீள, ஆறு கிலோ மீட்டார் அகல மிதமான ஈர்ப்பு விசை உள்ள, கொஞ்சம் உருளைக்கிளங்கு போல இருக்கும் 

                                67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளியின் நிலப்பரப்பில் பைலே Philae (spacecraft) என்ற சிறிய சட்டலைட் பரிசோதனை ஆய்வு கூடக் கலத்தை இறக்கி,அதில தண்ணீர்,காபன்,வேற உயிர் உருவாகத் தேவையான ஆரம்பக் கட்டுமான கனிப்பொருள்கள்,அல்லது இதுவரை நாங்க பூமியில் அறியாத இரசாயனக் கலவைகளின் ஆதார கனிப்பொருள்கள் இருக்கா என்று அறியும் Docking and berthing of spacecraft நிகழ்வு நடக்கப் போகுது. ரோசெத்தா அது காவிக்கொண்டு பில்லியன் மைல்கள் அலைந்த பைலேயை இறக்கிப் போட்டு,அதில இருந்து தகவல்கள் அனுப்பியபின் மறுபடியும் அதைக் காவிக்கொண்டு வரப்போகுது,..

                                  இந்த திட்டத்தில் நோர்வேயில் இருந்து ஒஸ்லோ UiO யூனிவெர்சிட்டி இன் பிசிச்க்ஸ் டிபார்ட்மெண்டின்   எமிரேட்ஸ் பேராசிரியர்  காரே அக்ச்னஸ் Proff Dr. Kaare Aksnes  றோசெத்தாவின் பாதையை கணக்கிடுவதிலும் , எமிரேட்ஸ் பேராசிரியர் ஆர்னே பேட்டர்சன் Proff Dr.Arne Pedersen  டெக்னிகல் அட்வைஸ் கொடுப்பதிலும் , கொம்புயிடர் எஞ்சினியர் Dr.வோசயொச் மிலோச்  Wojciech Miloch  றோசெத்தாவின்  டேட்டா வை அனலைஸ் பண்ணுவதிலும் என்று இந்த    மூன்று அறிவியளாளர்கள்  European Space Agency (ESA) விஞ்ஞானிகளுடன் பங்கு பற்றி என்னைப்போன்ற மாங்கா மடையார்களும் வசிக்கும் நோர்வேயை ஒரு அறிவியல் நாடு எண்டு கவுரவ ப்படுத்தியுள்ளார்கள்....

                                      67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளி தரப்போகும் தகவல் வெளியே உள்ள பிரபஞ்சத்தை நாங்கள் உள்ளே இருந்து ஆராயக் கிடைத்த ஒரு மிகப்பெரிய சந்தர்ப்பம். யாருக்கு தெரியும் வான வெளியில் உள்ள தேவதூதர்கள் அதை எங்களுக்கு அனுப்பி இருக்கலாம். இதற்க்கு இடையில் பூமியில் உள்ள அசுரர்கள் எங்கள் சூரியக் கிரகத்தில் உயிர் வாழக் கூடிய ஒரே ஒரு கோள் ஆனா எங்கள் இந்த சின்ன பூமிக்  கிரகத்தை  ஆளை ஆள் பங்க்கு போட்டு, ISIS தீவிரவாதிகள் பல அப்பாவி சியா முஸ்லிம் மக்களைக் கொல்லலாம், நைஜீரியாவில் சிறுபான்மை  கிறிஸ்தவ மக்களை ஜிகாத்  தீவிரவாதிகள் போட்டு தள்ளலாம், உக்கிரேன் தீவிரவாதிகள் இன்னும் சில விமானத்தை சுட்டு விழுத்தலாம், இபோலா வைரஸ் மேற்கு ஆபிரிக்க நாடுகள் முழுவதும் பரவலாம், ஹமாஸ் அனுப்பும் ராக்கெட்டுக்கு இஸ்ரேல் இன்னும் இன்னும் ரொக்கெட் அனுப்பி அப்பாவி பலஸ்தீன மக்களைக் கொல்லலாம்...... 

                                 ரோசெத்தா விண்வெளியில் உயிர் இருபதுக்கான சாத்தியங்களை " வித்தாரமும் கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே " என்பது போலத் தேடுது . நாங்க இங்கே இருந்து அல்பிரேட் நோபெல்  தண்டவாளம் போட்டு ரெயில் ஓட வைக்க ரெயில்வே சுரங்கம் அமைக்க பாறைகளை இலகுவாகப் பிளக்கக் கண்டு பிடித்த  " டையினமைட் கன் பவுடர் " வெடி மருந்தை துப்பாக்கி ரவைகளிம் , பீரங்கியின் குண்டுகளி லும் , நீண்ட தூர ரொக்கெட்டிலும்  நிரப்பி வேண்டிய மட்டும்  உயிர்களை அழிக்கிறோம்....  

 (.இந்த படத்தின் பின்னே இருப்பது தான் அந்த வால் வெள்ளி . படத்தில் என்னுடன் நிற்பது நோர்வே அஸ்ட்ரோ பிசிக்ஸ் விஞ்ஞானி Dr, Camilla Andrsen . ரோசெத்தா பற்றிய நிகழ்வுக்கு போன போது எடுத்தேன். )
ஒஸ்லோ 26.28.14

காலம் செய்த கோலமடி......

இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள மக்களில் யாரோ ஒருவர், எப்போதோ  ஒருதரம் தங்கள் வாழ்நாளில் சந்தித்த மிகவும் விரும்பாத விபத்துப் போன்ற சம்பவம் ஒன்று நடந்த சில செக்கன்களில் சொல்லும் வார்த்தை

                               " அட, கொஞ்சம் அசந்திட்டமே, இல்லாட்டி இதை வேற விதமா செய்து இருக்கலாம் " ,

                                         அல்லது

                          " அட இது முதலே தெரியாமல் போச்சே "

                                                         என்பது. அப்படி சொல்லத்தான் முடியும் காலத்தில் ஒரு மில்லி செக்கன் பின் நோக்கிப் போய் அதைத் தடுக்கவோ, அல்லது காலத்தில் மில்லி செக்கன் முன்னோக்கிப் போய் அந்த சம்பவம் நடக்கப் போறதை முன் கூட்டி அறியவோ  முடியாது, 

                          ஆனால் மொடேர்ன் பிசிக்ஸ் சொல்லுது இதெல்லாம் சாத்தியம் எண்டு. எப்படி என்றால், முதலில் காலம் என்ற நேரம் என்றால் சயன்ஸ்படி என்ன எண்டு விளங்கினால்த் தான் மிச்சம் விளக்கும், இதுக்கு மேலே இந்தக் கட்டுரையை வெள்ளி திசை, ஒம்பதில வியாழன்  கிரக பலன் உள்ள நல்ல காலம் நடப்பவர்கள் வாசிக்கவும்.

                                   மற்ற மங்குசனிக்  கால திசை நடக்கும் வாசகர்கள் வாசித்து இன்னும் அதிகம் துன்பம் பெறவேண்டாம். இதோட விட்டுப் போட்டு " கத்தி " படத்தில சமந்தா இடுப்பை நெளித்து உளுந்து அரைப்பது போல ஆடும்  "செல்பி புள்ள..  "  பாடலைப் போட்டு  நேரத்தை மறந்து  ரசித்துக்  கேட்டு புண்ணியம் சேருங்க. 

                                      காலத்தில பிரயாணம் செய்யலாமா எண்டு உங்க எல்லாருக்கு நிறைய குழப்பம் வருவது போல எனக்கும் என்னோட டீன் ஏஜ் வயசில் காதல் வருவதுக்கு பதிலா இந்த சந்தேகம் வந்ததுக்கு முதல் காரணம் இசாக் அசிமோவ் என்ற எழுத்தாளரின் சயன்ஸ் பிக்சன் கதைகள், அதை தொடர்ந்து வந்த ஸ்டார் வார் ,பட்டில் ஸ்டார் கலஸ்டிக்கா போன்ற கற்பனையான சயன்ஸ் படங்களைக் காதல் வரவேண்டிய இளவயதில் நம்பவே முடியாமல் திகிலாப் பார்த்தது.

                                      இன்றைக்கும் தியரி வடிவில் நிறைய சாத்தியங்கள் உள்ள அதை எப்படி நடைமுறையில் பிரக்டிகலா செய்வது எண்டு ஏறக்குறைய இந்த நுற்றாண்டு முழுவதும் மண்டயப் போட்டுக் குழப்ப வைக்கும் காலப்பயணம் என்பது ஆதாரமாக, காலம் என்பதும் இடம் என்பதும் ஒண்டுதான் எண்டு சொன்ன ஐன்ஸ்டைனின் தியரியில்த் தொடங்குது...  

                                      அடிப்படையில் ஒளியில், அதன் வேகத்தில் காலம்  தொடங்குது. அதில்தான் ஓடுது. நிலையாக நிற்கும் ஒருவருக்கும்,வேகமாக ஓடிக்கொண்டு இருக்கும் ஒருவருக்கும் இடையில் நேரம் என்பது பிரபஞ்ச அளவில் வேறுபடும், அதே நேரம் பூமியில் அருகில் நின்று பார்க்கும் எங்களுக்கு அதை உணரமுடியாது. குழப்புறேனா, சரி எளிமையாக  பாட்டி வடை சுட்ட கதை போல சொல்லுறேன் ..!

                                      அதுக்கு முதலில் பிரபஞ்சக் "காலம் அல்லது நேரம் என்றால் என்ன எண்டு தெரிய வேண்டும். நேரம் அல்லது காலம் இயற்கையின் பிரபஞ்ச ஆதார விதிப்படி , முதல் முதல் நடந்த பிரபஞ்சப் பெரு வெடிப்பு என்ற பிக் பாங் இல் இருந்து முன்னோக்கிப் பாயும் ஒளியின் வேகத்தில் தான் காலம் தோன்றியது, அதுக்கு முன்னம் காலம் இல்லை, இடமும் இல்லை,கோள்கள் ,நட்சத்திரங்கள், விண்கற்கள் , வீடு , வாசல் , கார் ஒண்டும்  இல்லை , நமிதாவின் இடுப்பும் இல்லை, உண்மையைச் சொன்னால் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. 

                                           அந்தக்  காலம்,  நேரம் என்ற இயற்பியல் வடிவில் எய்து விட்ட அம்புபோல பல ஃப்ரேம்களாக (Frames) முன்னுக்குத் தான் போகுது, இன்று வரை ஒரு நாளும் பின்னுக்கு போனதில்லை. ஆனால் எங்கள் நினைவுகள் பின்னுக்குப் போவது போல அதால் போக முடியாது.  ஆனால் மொடேர்ன் பிஸிக்ஸ் இல் காலமும், இடமும் ஒன்றாகி அதில நேரத்தை ஸ்பேஸ் டைம் என்ற நான்காவது பரிமாணமாக சொன்னார் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். 

                                    அதை மிகை ஒலி சூப்பர் சொனிக் விமானத்தில் பறக்கும் ஒருவரையும், அதையே நிலத்தில் நின்று பார்க்கும் ஒருவருடன் சார்பு வேகத்தில் ஒப்பீட்டு செய்து மிகை ஒலி வேகத்தில் பறப்பவரின் கால வேகம் மில்லி மில்லி செக்கன்கள் குறைவு என்பதை இலத்திரனியல் அணுக் கடிகாரத்தில் அளந்து எழுபதுக்களில் நிருபித்தார்கள். ஆனால் அந்த மில்லி செக்கன்கள் மிகச் சிறிய காலத்தில் பின்னடைவில் இருப்பதை வைத்து ஒண்டுமே பிரக்டிகலா செய்யமுடியாது.  

                                        ஸ்பேஸ் டைம் என்பதே உண்மையில் அஞ்சாவது பரிமாணம்,  முதலில் ஒரு பரிமாண, இரு பரிமாண மற்றும் முப்பரிமாணங்கள் பற்றி ஒரு சிறிய விளக்கம் சொன்னால் தான் அஞ்சாவது பரிமாணமே விளங்கும் . பரிமாணம் (Dimension) என்பது “ magnitude of something in a particular direction especially length or width or height”ஆகும்.  லூயிஸ் கரோல் எழுதிய குழந்தைகளுக்கான புத்தகம் " அலைஸ் இன் வொண்டர் லான்ட் " உண்மையில் பரிமாணங்களுக்கு இடையில் பயணம் செய்யும் புத்தகம்.

                                            தெருவில கரண்ட் வயரில் -" ஒன் லைனில் " ஒரு குருவி இருக்கு என்று வைப்போம் அந்தக் குருவி  அந்த வயரில்  எங்குள்ளது? வயரின்  ஏதாவது ஒரு மூலையின் தொங்கலில்  இருந்து இரண்டு மீட்டர்  தூரத்தில் எண்டு சொன்னால் அது  ஒரு பரிமாணம் ஆகும். இங்கு அந்தக்  கோடு ஒரு பரிமாணத்தில் இருப்பதால்  இங்கு ஒரு பரிமாணத்திலேயே அந்தக் குருவி இருக்கும் இடம் சொல்லலாம் .

                                               இளம் வயதில் காதலிகளுக்குக்  காதல்க் கடிதம் எழுதிய காகிதத்தில், அதை எழுதி முடித்து கடைசியில், அந்தப் பெண்ணின் இதயத்தைத் திருடும் நோக்கில் எப்பவும் ஒரு இதயம் படம் வரைவமெல்லா, வரைந்த அந்த இதயப்  படம் அந்த காகிதத்தில் எங்கிருக்கிறது என்றால்? முன்பு சொன்னதைப் போல ஒரு பரிமாணத்தில் சொல்ல முடியாது. காரணம், அந்த இதயம் படம் எந்த திசையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

                                   ஆனால்  இப்படிச் சொல்லலாம் அந்த இதயம் அந்த காகிதத்தின் ஒரு மூலையில் இருந்து 3 cm வலமாகவும் (X-Axis), அங்கிருந்து 4 cm வடக்கு நோக்கிச் சென்றால் (Y-Axis) கிடைக்கும் இடத்தில என்று சொல்லலாம். இது விபரம் மிகச் சரியாக அந்த இதயம் இருக்கும் இடத்தைக்  கண்டுபிடிக்கும். இப்பொழுது அந்த இதயம் பேபரில்  இருப்பது இரு பரிமாணங்களில் ! 

                                      அடுத்து ஒரு அறையை எடுத்துக் கொள்ளலாம்.  அறை என்பது, நீளம், மற்றும் அகலம் ஆகிய இரு பரிமாணத்துடன் மூன்றாவதாக “உயரம் / ஆழம்” என்ற பரிமாணத்தையும் சேர்த்துக் கொள்வது. அந்த அறையில் ஓய்விலுள்ள ஒரு  குருவி சரியாக எந்த இடத்தில் இருக்கிறது ? “ஒரு மூலையில் இருந்து ஒரு மீட்டர்  வலமாகவும் (X-Axis), அங்கிருந்து ரெண்டு மீட்டர் வடக்கு நோக்கியும் (Y-Axis), அங்கிருந்து மேல் நோக்கி (Z-Axis) மூன்று மீட்டர்  சென்றால் கிடைக்கும்” எனக் கூறலாம். இங்கு இந்த மூன்று பரிமாணங்களும் இருந்தால் தான் அந்த பறவையின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும்.

                                 இதை  perpendicular முறையில் சொல்ல வேண்டும் எண்டு சொல்லுறார்கள். perpendicular என்றாள் என்ன எண்டு சொல்லுறது எண்டால் அது கொஞ்சம் அட்வான்ஸ் பிசிக்ஸ் விளங்கினால் தான் முடியும் .அதை நான் சொல்ல முயன்றால் எனக்கே  மண்டைக்குள்  இருக்கிற கொஞ்ச சரக்கும் வெளிய போயிடும் .அதால அதை இப்போதைக்கு விடுவம். பெறகு ஒருநாள் சொல்லுறேன்.

                                           நான்காவது பரிமாணம் என்பது “நேரம்”.அதே அறையில், அந்தக் குருவி  பறந்து கொண்டே இருக்கும் பொழுது, அதன் இடம் மாறும். அந்த பறவையின் சரியான / நிலையான இருப்பிடத்தை காண நமக்கு நான்காவதாக ஒரு பரிமாணம் தேவைப்படுகின்றது. இப்பொழுது அந்த பறவை, அந்த அறையில், ஒரு மூலையில் இருந்து ஒரு மீட்டர்  வலமாகவும் (X-Axis), அங்கிருந்து ரெண்டு  வடக்கு நோக்கியும் (Y-Axis), அங்கிருந்து மேல் நோக்கி (Z-Axis) மூன்று மீட்டர் சென்றால், அந்த பறவை ஒரு குறிப்பிட்ட ‘நேரத்தில்’ இருந்த இடம் கிடைக்கும். இங்கு இந்த நான்கு பரிமாணங்களும் இருந்தால் தான்  இயங்க்கிக் கொண்டு இருக்கும் அந்தக் குருவியின்  இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும்...

                               இந்தப் பிரபஞ்சம் என்ற யுனிவேர்ஸ் உண்மையில் நாங்கள் கற்பனை பண்ணிப் பார்க்கவே முடியாத பதினொரு பரிமாணத்தில் இருக்கு என்கிறார்கள். வெறும் நீளம், அகலம், உயரம் என்பனவே நமது அறிவின் வீச்சில் உணரக்கூடியவை ,அப்புறம் நேரத்தை மணிக் கூட்டில பார்த்தாப் போச்சே எண்டு கேட்பிங்க, ஆனால் நாங்க பார்க்கும் நேரம் வேற பிரபஞ்ச நேரம் வேற. நேரமே பிரபஞ்சத்தில் ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு மாதிரி ஓடுது, ஏன் விண் வெளியில் மிதக்கும் ISS விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் விஞ்ஞானிகளின் கைக்கடிகாரம் எங்கள் நேரத்தை விட சில மில்லி செக்கன்கள் வித்தியாசம், ஏன் அப்படி என்றா அதுக்கு நேரத்தை ஈர்ப்பு விசையும் பாதிக்கும் என்கிறார்கள்.  

                                                 நாங்கள் நம்பும் நேரம் உண்மையில் ஒரு மாயை. 6 அறிவு படைத்த மனிதனால் உணரத்தக்க பரிமாணங்களை நேரம் கட்டிப் போட்டு வைச்சுள்ளது. அந்தப் புதிரை விடுவித்தால் நிறைய விசியம் செய்யலாம். காலம் என்பது  நான்காவது பரிமாணம் என்று  Theory ரீதியில் ஏற்கப்பட்டுள்ளது. எப்படி ஒரு மனிதனால் ஒரு பரிமாணம், இரு பரிமாணம், மூன்று பரிமாணம் உள்ள பொருட்களை மட்டுமே உணரமுடிகிறது.? ஏன் எனில் நாங்கள் நான்கு பரிமாண ஆட்கள். எங்கள் எல்லா முயற்சியும் அதுக்குள்ளே தான் கிடந்தது சுழரும்,அதை மீறினால் நிலைமை வில்லங்கம் ஆகும் 

                                         நம்பிக்கையில் எப்பவுமே கை வைத்து, நம்பிக்கையோடு சாத்திரம் சொல்பவர்கள் ,குறி சொல்பவர்களை, கைரேகை பார்பவர்களை ,காண்டம் வாசிபவர்களையும், அதை நம்பிக்கையோடு நம்புபவர்களை தவிர, ஏன்  வேற  ஒருவரால் இன்னொருவரின் எதிர்காலத்தை இறந்த காலத்தை கூறமுடியாமல் இருக்கிறது ?, ஏன்  ஒரு நான்கு பரிமாண ஆளால் நான்கு பரிமாணத்தில் முன்னும் பின்னும் பார்க்க முடியாமல் இருக்கிறது ? போன்ற ஆதாரமான சயன்ஸ் கேள்விக்கு விடை இன்னும் பிரக்டிகலா இல்லை. 

                                         ஆனால் ஒரு சதுரப் பெட்டியை தலை கீழாகப் புரட்டி கையை உள்ளுக்க விட்டும் துலாவிப் பார்க்கலாம், ஹமாஸ் விடும் ஏவுகணையை இஸ்ரேல் இடையில்  பறக்கும் ஏவுகணை விட்டு அடிக்கலாம் ,ஆனால் நேரத்தில் கையே வைக்க முடியாது. அதை விளங்கிக்  கொள்வதே கடினம்தான் . நிறைய முன்னுக்குப்பின் முரணான விசியங்கள் அதில இருக்கும்..

                                           தியறிப்படி உள்ள ஸ்பேஸ் டைம் என்பது பல ஃப்ரேம்களாக (Frames) நடந்து கொண்டிருக்கிறது ,அதை உணர முடிந்தால்,அதுவும் ஓர் ஐந்து பரிமாண ஆளால் ஸ்பேஸ் டைமை உணரமுடியும் என்றால். அவர்களால் எமது இறந்த, எதிர் காலத்தை துல்லியமாக கூற முடியும். என்பது தியரி படி இருக்கு . அப்புறம் நாங்களே பெட்டி படுக்கையைக் காவிக்கொண்டு நாமே ஐந்தாவது பரிமாணத்தில் நுழைந்து விட்டோமானால் காலத்தில் பிரயாணம் செய்யலாம்! இதை தான் "Time Travelling" என்கிறார்கள் . ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது இன்னும் பரிசோதித்துப் பார்க்கப்படவில்லை. அதில ஏகப்பட்ட குழப்பம் இருக்கு. கொஞ்சக் குழப்பத்தை  சொல்லுறேன். 

                                       உண்மையா ஜோசித்துப் பார்த்தால்  காலத்தை நாங்க முன்னும் பின்னும் அறிஞ்சா அதன் பின் சுவாரசியமான வாழ்கை போயிடும்,  ஆனாலும் டைம் ட்ராவல் சம்பந்தமாக, இவ்வளவு நாட்களும் விஞ்ஞானிகளுக்கு தண்ணி காட்டி கொண்டிருக்கிற முக்கியமாக இரண்டு விஷயங்களில் முக்கியமானது  கால வெளியில் பிராயணம் செய்ய வேண்டுமென்றால் ஒளியின்  வேகத்துக்கு இணையான வேகத்தில் பிராயணிக்க வேண்டும்.  ஒளியின் வேகத்துக்கு கிட்ட நெருங்க நாம் பிரயாணம் செய்யும் வாகனத்தின் திணிவு நினைக்கமுடியாத அளவு அதிகரிக்கும் , அதை இயக்க ஒரு நட்சத்திரம் எரியும் அளவு பில்லியன் அளவு சக்கி வேணும்...இப்போதைக்கு அதைக்  கனவுதான் காண முடியும் நம்மளால் . 

                                          அப்படி பிராயணம் செய்ய கூடிய எந்தவித வாகனமும் இப்ப இல்லை. ஒளியின் வேகத்தில் பிரயாணம் செய்ய செய்ய காலத்தில் பின்னோக்கி செல்லலாம், அல்லது இன்னுமொரு இலகுவான ஆனால் தியறிப்படி உள்ள ஒரு விளக்கம்  நாலாவது பரிமாணத்தில் இருந்து அஞ்சாவது பரிமாணத்துக்கு உள்ள போக ஒரு பாதை வேண்டுமே  அந்த பாதைகளை  புழுத்துளைகள் (Worm Holes) என அழைக்கும்  மிக மிக நுண்ணிய குழாய் பாதைகள் இருக்கு எண்டு சொல்லுறார்கள். ஆனால் அதைக் கண்டு பிடிக்கும் அளவுக்கு இன்னும் விஞ்ஞானம்  எங்களிடம் இல்லை

                       ஒரு உதாரணத்துக்கு,

                                    மொடேர்ன் பிசிக்ஸ் நம்பும் பக்தர்களின் கடவுளான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்ன ஒளியின் வேகத்தில்  என்னால்  பயணிக்க முடிந்தால் எனக்கு  வயது கூடாது, குறையாது  நிலையாக நிக்கும் எண்டு சயன்ஸ்படி சொல்வதில்லை ஆனால் நானே  வேற ஒரு பரிமாணம் ஆகிவிடுவேன்  என்கிறார்கள். ஆனால் என்னைச்  சுற்றி இருக்கும் உங்களுக்கும் இந்த உலகத்துக்கும் வயது கூடிக்கொண்டே இருக்கும்! நீங்க எல்லாம் கிழடுதட்டி ,அறளை பெயர்ந்து பிசத்தும் நேரம் நான் நல்ல தெளிவா அப்பவும் இருப்பேன், வயது போகாது  நான் ஏறக்குறைய  இப்ப இருப்பது போலவே இருப்பேன் மாறவேமாட்டேன். நினைக்வே எவளவு சந்தோசமா இருக்கே.

                                     உங்களுக்கு அப்பவும் காலம் ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால் ஒளியின் வேகத்தில் செல்பவருக்கு காலம் ஓடாது. 2014 இல் நான் ஒளியின் வேகத்தில் புறப்பட்டேன் என்றால், 30 வருடத்தின் பின்னரும் நான் அதே 2014 இல் தான் இருப்பேன் . ஆனால் நீங்க  2034 இக்கு போயிருப்பீர்கள் , நான் மறுபடி நோர்மல் வேகத்துக்கு வந்து பார்க்க , உங்களில் சிலருக்கு ஆண்டு திவசமும்,சிலருக்கு பல வருட நினைவாஞ்சலியும் முடிந்து இருக்கும்.

                                                   இப்படி உங்களை வெறுப்பு ஏற்றினாலும், இப்படி ஒளியின் வேகத்தில் செல்லும் ஒருவரை நீங்கள் யாருமே பார்க்க முடியாது! நாங்க ஒவ்வொரு நாளும் பார்க்கும் சூரிய ஒளி Photons என்ற அணு, அது ஒளியின் வேகத்தில் சூரியனில் இருந்து எங்கள் பூமிக்கு வர எட்டு நிமிடம் எடுத்து வருகுது, இது நிகழ்காலத்தில் எங்களுக்கு  நிகழுது. இதே பூமி  இன்னும் தூரத்தில் இருந்தால் இன்னும் தாமதமாகும். எங்களுக்கு வந்த ஒளி சூரியக்குடும்பதில் தொங்கலில் உள்ள புலூட்டோ கிரகத்தை பொறுத்தவரை அந்த செயல் நடைபெறவில்லை. ஏனென்றால் ஒளி இன்னும் சென்றடையவில்லை.

                                              அந்த வேகத்தை நம்மால் பார்க்க முடியாது. கடவுள். தேவர்கள், ஆவிகள் இவைகள் இப்படி இயங்குபவை எண்டு திருமந்திரம், சிவஞானபோதம், போன்றவற்றில் சொல்லி இருக்கு எண்டு எழுதியுள்ளார்கள்.தவம் செய்யும் முனிவர்கள் அவர்களின் ஜோகநிலையில் எழும்பும்  ஏழாவது அறிவில்  இந்த காலப் பரிமாணங்களை முன்னுக்கும் பின்னுக்கும் முக்காலமும் அறியும் ஒரு கலையில் தேர்ச்சி பெற்று இருந்தார்கள் என்று இந்து சமயத்தில் சொல்லுறார்கள். அப்புறம் சயன்ஸ் பிக்சன் எழுத்தாளர் வேற்றுக் கிரக மனிதர்கள் இப்படிப் பிரயாணம் செய்பவர்கள் எண்டு சொல்லி எழுதி,அந்தப் புத்தகங்கள் நல்லா விற்று அதை எழுதியவர்கள் வேற்றுக்கிரக மனிதர்கள் புண்ணியத்தில் கோடீஸ்வரர் ஆகி இருக்குறார்கள். 

                                   இப்ப முக்கியமான ஒரு காலத்தில் பிரயாணம் செய்யும் வசதியான Worm Holes என்பது என்ன எண்டு சொல்லுறேன் , எளிமையான  உதாரணமாக , பண்ணைக்காரன் பெண்டில் பனங்காய் உருடின மாதிரி ,ஒரு பனங்காயை எடுப்பம், பனங்காய் மிகவும் வழுக்கும் தன்மை உடையது. அதை உருட்டும் பனை ஓலைப் பாயும்  மிக மிக தட்டை. இவை இரண்டுமே முப்பரிமாண பொருட்கள், ஆனால் அதை மிக மிக தொழில்நுட்பம் பாவித்தால் அங்கு நிறைய துளைகள் காணப்படும். பனங்காயில்  நிறைய துளைகள் காணப்படும். இவ்வாறன துளைகள் மூன்று பரிணாமங்களிலும் காணப்படுகிறது.  

                                         இது நான்காவது பரிணாமமான ஸ்பேஸ் டைம் என்ற நேரத்திலும்  காணப்படுகிறது . இவை அளவிடமுடியாத அணுவைவிட  மிக மிக சிறிய இடைவெளிகள், ஆனால் ஸ்பேஸ் டைமில் விரைவான குறுக்கு பாதை அவைகள். பல மில்லியன் வருடங்கள் முன்னுக்கும்,பின்னுக்கும் உள்ள  நேரத்தையும், வேறு பிரபஞ்சங்கள் உள்ள  இடத்தையும் அந்த இடைவெளிகள் இணைக்கின்றன ,இந்த மிகச் சிறிய துளைகளுக்கு ஊடாக  எங்களால் பொஞ்சாதி, சின்ன வீடு , பிள்ளை குட்டிகளை இழுத்துக் கொண்டு பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு  போக முடியாதா அளவில் காணப்படுகிறது.

                          அப்படிப்பட்ட மிக நுண்ணிய வார்ம் ஹோல்ஸ்  இந்த பிரபஞ்சம் முழுவதும் இருக்கு. ஏன் நீங்க அதை வாசித்துக்கொண்டு இருக்கும் கொம்புடர் உள்ள அறையிலேயே இருக்கு, இந்த துளைகளில் விஞ்ஞானிகள் செய்ய நினைப்பது இந்த துளைகளில் ஒன்றை பெரிதாக்கி அதற்குள் ஒரு உயிரையும், அந்த உயிரைக் கடத்தும் ஒரு வண்டியையும் நுழைத்து, ஒளி வேகத்துக்கு இணையான வேகத்தில் அனுப்ப வேண்டும். ஏறக்குறையா ஒரு வெண்வெளி வீரனை அனுப்புவது ,அதுதான் தியரி, நடக்குமா , அதுதான் தெரியலை !

                            காலத்தில் பிரயாணம் செய்யும் போது முன்னோக்கி போகலாம்,பின்னோக்கி போக முடியாது, போனாலும் அவர்கள் காட்சிகளைதான் பார்க்க முடியும். செயல் முடிந்து விட்டதால் அதில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது எண்டும்,அப்படி இல்லை அதுக்கு பரலல் யுனிவெர்ஸ் என்று ஒண்டு இருக்கு எண்டு சொன்னாலும் அதில உள்ள " கிராண்ட் பாதர் பரடொக்ஸ் " என்பது ஒரு பெரிய குழப்பம்,உதரணமா நான் காலத்தில் பின்னோக்கிப் போய் என்னோட அம்மா வேம்படியில் படிக்கிற நேரம் சந்தித்து

                    " நான் தான் அம்மா உங்க எதிர்காலத்தில் உங்க நின்மதியைக் கெடுக்கும்  மகன் "

                                                     எண்டு சொன்னால், ஒரு வேளை அம்மா கலியாணமே கட்டாமலே இருந்து இருகலாம் , அதைவிடக் குழப்பம் நான் என் அம்மாவையும்  அப்பாவையும் கலியாணமே கட்ட விடாமல்க் குழப்பினால், அப்புறம் நான் எப்படி எதிர்காலத்தில் பிறந்திருப்பேன் ,சொல்லுங்க பார்ப்பம் , இந்தக் குழப்பம்தான் " கிராண்ட்பாதர் பரடொக்ஸ் " என்பது. ஆனால் காலத்தில்  பின்னோக்கி செல்லுதல் சாத்தியம் எண்டும் ஒரு படம் போல பார்க்கலாம், செயல் முடிந்து விட்டதால் அதில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. அதில எந்த மாற்றமும் செய்ய முடியாது எண்டு சொல்லுறார்கள்.

                                       parallel universe எனும் கோட்பாட்டின் படி இறந்த காலத்துக்கு செல்ல முடியும் சாத்தியம் என்கிறார்கள். negative velocity இல்  எதிர் காலத்திற்கு செல்லுதல் சாத்தியமாகலாம் என்று உத்தரவாதம் தரும் இந்த time travellingபல ஃப்ரேம்களாக (Frames) நடந்து கொண்டிருக்கிறது மில்லியன் வருடங்கள் முன்னால் ,காலத்தில் எங்களுக்கு முன்னால் விஞ்ஞான வளர்சியில்இருக்கும் மனித இனம் , வார்ம் ஹோல் என்ற விஞ்ஞான விந்தையை கையாண்டு , அங்கிருந்து ஏன் பின்னோக்கி எங்களைச் சந்திக்க அட்லீஸ்ட் விஜய்யோட  " கத்தி " படத்தை ஒரு டுரிஸ்ட் போல ஆவது பார்க்க யாருமே வரவில்லையே?   அப்படி விஞ்ஞானம் முன்னேறிய  எதிர்காலத்திலிருந்து நம் காலத்திற்கு யாராவது வந்திருப்பார்களே ? என்று நீங்கள் கேக்கலாம். 

                                           சொன்னா நம்ப மாட்டிங்க, நான் அப்படி எதிர்காலத்தில் இருந்து " வார்ம் ஹோல் " என்ற வழியால வந்த ஆள்தான். வந்த இடத்தில நான்  வந்த " டைம் டவர்லிங் " வாகனத்துக்கு ஒழுங்கா இன்சூரன்ஸ் கட்டவில்லை எண்டு என்னை இங்கே விட்டுப் போட்டு போயிட்டாங்கள், அப்படி தெரியாமல் இங்கே மாட்டிய ஆள்தான், அதால " காலம் செய்த கோலமடி... " எண்டு இப்ப இந்தக் கட்டுரையை  உங்களுக்கு எழுதிக்கொண்டு இருக்கிறேன்...

ஒஸ்லோ 09.11,14

Thursday, 21 May 2015

பொஞ்சாதி குரங்கு வளர்தாளம்...

குடியில் பிறந்த பெண் வயிற்றெரிந்தால் கொடியில் உள்ள துணி எரியும் போல பல குழப்பங்களுக்கு மத்தியில் இருக்கும் சின்னப் பாதைகளில் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் அன்றாடம் இயங்க முடிந்தாலும் நான் வசிக்கும் நோர்வேயில் என்னதான் நடக்குது என்று டெலிவிசனில் செய்திகளில் பார்க்கும் சந்தர்ப்பங்கள்,நாளாந்த தினசரிகளில் வாசித்து அறியும் நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே போகுது.
                                     ஒரு மாதம் பரீட்ச்சாதமாக எங்களின் விண்ணாணத்தை கொஞ்சம் வாசித்துப் பாரேன் என்று சில பத்திரிகைகள் வீட்டு வாசலில் ஓசியில் நியூஸ்பேப்பர் போடுறார்கள், அதன் தலையங்கத்தை தன்னும் வாசிக்க விருப்பமும் நேரமும் இல்லை ,அதைக் காலால தள்ளி உதைஞ்சு போறேதே எல்லாரும் ஏறின குதிரையில் சக்கடத்தாரும் ஏறின மாதிரி பெரிய தலை இடியாக இருக்கு. வயதானவர்கள் தான் இப்பவும் வரிக்கு வரி ஒன்றும் விடாமல் பத்திரிகை எடுத்து விரித்து வைத்து வாசிக்கிறார்கள்.
                                             காலையில் பேப்பர் வாசிப்பது முன்னம் எல்லாம் சுவாரசியம்,இப்ப காலையில் போஸ்டிங் வாசிக்க வேண்டி இருக்கு. பல சமயம் சுப்பர் மார்க்கெட்டில் காசு கொடுக்கும் கசியர் மேசைக்கு முன்னால் பத்திரிகை வைச்சு இருப்பார்கள்,வரிசையில் நேரம் மினக்கெடும் நேரம் அதன் தலையங்கத்தை வாசிப்பது. அதில்தான் கொஞ்சம் தெரியும் போனாப் போகுது என்று உலகம் வியக்கும் பணக்கார நாடான நோர்வேயில் பொஞ்சாதி குரங்கு வளர்தாளம் ஆத்துக்காரன் குழல் ஊதி குடுமி சிரஞ்சானம் போல என்ன நடக்குது என்று,
                               முக்கியமான நோர்வே பரபரப்பு பத்திரிகைகளில் ஐம்பது வருடங்களின் முன் நாசி ஜெர்மனி எப்படி நோர்வேயை சுற்றி வளைத்தார்கள்,எப்படி நோர்வேயை ஆக்கிரமித்து அடிபணிய வைத்தார்கள், நோர்வே ராணுவ உளவாளிகள் எப்படி யுத்தத்தை தந்திரமாக எதிர்கொண்டார்கள், எப்படி நோர்வே பெண்கள் ஜெர்மன் ஆர்மி ஆண்களைக் காதலில் விழுத்தி அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கட்டிலில் வைச்சு அந்தப் பெண்கள் எப்படி ஜெர்மன் நாஸி இராணுவ ரகசியங்களைக் கறந்தார்கள் என்று கடந்த காலத்தில் பின்னோக்கிப் போகும் மனஅழுத்த சம்பவங்களை முன் பக்கத்தில் எழுதுறார்கள்.
                                           மருமகளுக்கு தீவளிக்கு தீவளி எண்ணை தேய்ப்பேன், மகளுக்கு வெள்ளியோடு வெள்ளிதான் தேய்ப்பேன் என்றாளாம் கதை போல நிகழ்காலத்தில் என்னோட நோர்வேயிய நண்பர்களிடம் இதெல்லாம் எப்படி நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டு இருக்கிறேன். நீங்களும் என்னைப்போல சுப்பர் மார்கெட் இல் பேப்பர் தலையங்கம் படிப்பீர்களா என்று கேட்டால் ,அவங்கள் சொன்னது #########
                                    அவங்கள் சொன்னதை இங்கே பச்சைப் படியே எழுத முடியாது உங்களுக்கு கொஞ்சம் மரியாதையாய் சொன்னால் என்ன அதைப் படிக்க விருப்பம் இல்லையாம்..... மழை வருவதும், பிள்ளை பெறுவதும் மகாதேவனுக்கே தெரியாது போல சுற்றிவர கலகலப்பான வாழ்க்கை வளைத்து இருந்த நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து ஸ்கண்டிநேவியாவில் பல வருடம் வாழ்வதால் என் மண்டை இன்னும் மெண்டல் கேஸ் போல பிசாகாமல் இருப்பதே பெரிய விசியம் போல இருக்கு.
.
............................என்ன சீவியமடா இது...........................


.09.04.15

பத்தாம் வகுப்பு மாணவன் 26 வயது ஆசிரியையுடன் ஓட்டம்...

ஒரு ஆண் பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் ஸ்போர்ட் ஸ்டீச்சர் அந்த பாடசாலையில் நல்லா ஸ்போர்ட்ஸ் செய்து ஓடக்கூடிய பையனுக்கு அந்தப் பையனோடு சேர்ந்து கிரவுண்டில ஓடி ஓடுறது எப்படி என்று சொல்லிக்கொடுத்தாங்க...அதைப் பார்த்துப்போட்டு பிரபலமான பேஸ் புக் பதிவாளர் கொழுவி குமாரு போட்ட ஸ்டேட்ஸ்
.
" பத்தாம் வகுப்பு மாணவன் 26 வயது ஆசிரியையுடன் ஓட்டம்...."
.
.........அய்யோ குமாரு , இந்த விளையாட்டுக்கு நான் வரலைப்பா..

Sunday, 17 May 2015

அடிப்படை அரசியல் சாசனம் .

நேற்று  17th of may நோர்வேயின் தேசிய தினம்!  அதிலும் நேற்று  அவர்களின் அடிப்படை அரசியல் சாசனம் எழுதி இருநூற்றி ஓராவது  நிறைவு நாள் . தலைநகரம் ஒஸ்லோவுக்கு கொஞ்சம் வெளியே உள்ள எட்ஸ்வொல் என்ற இடத்தில நோர்வே நாட்டின் அடிப்படை அரசியல் சாசனம் எழுதிய 17th of may நாளை நோர்வே மக்கள் தங்களின் சுதந்திர தினம் போல அனுசரிக்கிறார்கள். அப்படி அவர்கள் இந்த நாளை அனுஸ்டிக்க நிறைய உணர்வுநிறைந்த வரலாறு இந்த வடதுருவ நாட்டில் நடந்திருகிறது.

                                 ஐரோப்பாவில் பல நாடுகளில் "சுதந்திர தினம்" வெகு விமர்சையாக, ஆடம்பரமாககக் கொண்டாடப்பட்டாலும், இங்கே,நோர்வேயில், அதை "அடக்குமுறை விடுதலை தினம்போல" உணர்வாகக் கொண்டாடுவார்கள்  நோர்வேயியர்கள்! முக்கியமாக அவர்களின் அடிப்படை சாசணம் எழுதபட்ட நாளை பள்ளிக் குழந்தைகளின் ஊர்வலத்தின் மூலம் சின்ன வயதில் இருந்தே அந்த நாளின் இறைமையின் முக்கியத்துவத்தை வளரும் சந்ததியின் மனதில் ஏற்றிவைக்கும் ஒரே ஒரு நாடு நோர்வே.

                                தலை நகரம் ஒஸ்லோவிலும் ,நாடு முழுவதிலுமே , வயது,பால்,வேறுபாடு இல்லாமல் , பூர்விகமான இன மாண அடையாளமான அவர்களின் "புன்ணட்" என்ற கலாசார உடை அணிந்து,சிறுவர்கள் ,அணிவகுத்து "விடுதலை எங்கள் உசிர் மூச்சு " என்று வீதியெங்கும் , பூமி அதிர கோசமெழுப்பி, அரசரின் அரண்மனையை சுற்றி வருவார்கள் ! இந்தளவு உசிர் மூச்சாக விடுதலை இங்கே ஒலிப்பதுக்கு ஒரு சோகமாண வரலார்த்று காரணம் எல்லா நோர்வேயிர்களிடமும் இருக்கிறது!

                                   நோர்வேயை பல வருடம் அதன் தெற்கே இருக்கும் குட்டி அயல் நாடான டென்மார்க் காலனிபோல ஆண்டு அதன் இய்ட்கை கனியவளங்களை முடிந்த மட்டும் சுரண்டியபின்,அருகில் கிழக்கே இருக்கும் ,நோர்வே போலவே பரபளவுள்ள ஸ்வீடனிடம் கொடுக்க ,ஸ்வீடன்காரரும் மிச்ச சொச்ச கனியவளங்களை சுரண்டி அள்ளிக்கொண்டு போனது மட்டுமல்ல,இரண்டாம் உலக யுத்தத்தில் ,"நடுநிலை " வகிக்கிறோம் எண்டு பம்மாத்து விட்ட ஸ்வீடன் ,ஹிட்லரின் நாசிப் படைகள், ஸ்வீடனுக்குள்ளல்லா நோர்வேயிட்க்கு வந்து நோர்வேயை நாசம் செய்ய மறைமுகமாக சதி செய்தார்கள் !

                                        நோர்வேயை ஆக்கிரமித்த ஹிட்லரின் நாசிப் படைகள், நாட்டின் வடக்கு ,மேற்க்கு,வடமேற்க்கு நகரங்களை நெருப்பு பத்தவைத்து சாம்பல் ஆக்கி, அவர்களில் பூர்வீக வாழ்விடங்களை அடியோடு தரைமட்டம் ஆக்கி,நோர்வேயில் வசித்த ஒண்டும் அறியா அப்பாவி ஜுதர்களை ,கொத்துக் கொத்தாக கைது செய்த, போலந்துக்கு அனுப்பி ,அவர்களின் ஜூத ஒழிப்பு "ஒச்விச்" என்ற விசவாயு அறையில் தள்ளி கொத்துக் கொத்தாக எமலோகம் அனுப்பினார்கள்! நோர்வேயிடம் அப்போது பெரிய ராணுவ படை இருக்கவில்லை, அதால நோர்வே நாட்டு அரசர் பயத்தில நாட்டை " அம்போ" எண்டு விட்டுபோட்டு இங்கிலாந்து ஓட , உள்ளுரில் இருந்த மக்கள், வேட்டை துப்பாக்கி,சிறிய ஆயுதங்களால், ஹிட்லரின் நாசிப் படைகள கடைசிவரை எதிர்த்து வீரமுடன் போராடி வீரச் சாவடைந்தார்கள்!

                                   இவளவு வெளி ஆட்கள் அநியாயம் செய்தபோதும் "அடக்கம் உடையர் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டாம்" எண்டு பொறுமைகாத்த நோர்வேயியர்களுக்கு ,ஆண்டவன் ,அறுபதுக்களில் " ஓடுமீன் ஓடி உறு மீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு " என்பதுபோல அவர்களின் ,மேட்க்குகரை" North Sea " என்ற வட அத்திலாந்திக் கடலில் , அபரிமிதமாக நிலத்தடி எரிவாயுவையும்,பெற்றோளியதையும் அள்ளிக் கொடுக்க, இண்டைக்கு நோர்வே,உலக அளவில் ஒரு பணக்கார நாடு! ஒரு வேலையும் செய்யாமலே , நூரு வருடங்களுக்கு ,காலுக்கு மேல காலைப் போடுக்கொண்டு,அதை ஆடிக்கொண்டு ஸ்திரமாக இருக்கக் கூடிய "தேசிய வரும்மானம் " இருக்கிறது இந்த நாட்டிடம் !

                          அப்படி இருந்தும், சத்தமே இல்லாமல்,அடக்கமாக , தங்களின் தேசிய வரும்மானதின் கணிசமான பகுதியை ,ஏழை ,வறிய நாடுகளின் அபிவிருத்திக்கு கொடுக்கிறார்கள் ,இதயதில ஈரம் உள்ள நோர்வேயியர்கள் ! இப்ப நீங்களே சொல்லுங்க அவர்கள் தங்களின் சுதந்திர தினத்தை "அடக்குமுறை விடுதலை தினம்போல"உணர்வாககக் கொண்டாடுவதில அர்த்தம் இருக்குதா ,இல்லையா?.

.

Thursday, 14 May 2015

அமைதிக்குப் பெயர் ...

அந்தக் காலம் , மனிதர்கள் , சம்பவங்கள் எல்லாமே ஒரு கனவுபோல மறைந்துவிட்டது . சிலது நிரந்தரமாக மறந்த போதும் , சிலது மறக்கவில்லை. அதில ஒன்று யாழ்பாணத்தில எங்களின் வீட்டுக்கு அருகில் ஆனந்தன் அண்ணை எண்டு ஒருவர் இருந்தார் . அவர் பாக்கிறதுக்கு மார்க்கண்டேயர் போல கருப்பா இருந்தாலும் , நல்ல வாட்ட சாட்டமான எழும்பின ஆம்பிளை.


                                              சாந்தி அக்காவை, எல்லா ஆம்பிளைகளும் ரெம்ப நல்லவங்கள் போல,  நேரம் கெட்ட நேரத்தில விதி விளையாடும் போது விடுற " உன்னைக் கண் கலங்காமல் கடைசிவரை காப்பாற்றுவேன் " எண்டு டயலக் பேசி ,  நல்லாப் படிசுக்கொண்டு கம்பஸ் போற கனவில இருந்த அவாவை காதலித்து கலியாணம் கட்டி , அவாவின் பட்டதாரிக் கனவில மண்ணை அள்ளிப்போட்டுக் குடியும் , குடித்தனமுமா வாழ்ந்தார் !

                                 சாந்தி அக்கா தான் அந்த வீட்டில ஒரே ஒரு பெண் பிள்ளை, மற்ற அஞ்சு பேரும் ஆம்பிளைகள். அதில நாலுபேர் ஜெர்மனிக்கும், பிரான்சுக்கு
ம்,  போயிட்டாங்க,  ஒருவர் …..... என்ற இயக்கத்துக்கு " தமிழ் ஈழம் எடுக்காமல் திரும்பி வரவே மாட்டேன் " எண்டு  போனவர் !  போனவர் போனவர்தான் ,



                                    அவர் எடுக்கப் போனது எடுத்துக் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை அவர் சும்மா தன்னும் வீட்டுக்கு உயிரோடு திரும்பி வந்ததே இல்லை. அவர் பற்றி யாருக்கும் ஒண்டும் தெரியாது.


                                        அரசாங்க வேலை செய்து கொண்டு இருந்த அவாவின் அப்பா, சாந்தி அக்கா சின்னதா இருந்த போதே, அவரோட நடு வயசில் குடியால ஒரு நாள் இதயம் இறுக்க , ரெண்டு தரம் இருமிப் போட்டு இறந்திடார்,

                                     

நாலு அண்ணன்களும் சாந்தி அக்காவை ஏ எல் வரை நல்லா படிக்க வைக்க, எப்படியோ ஆனந்தன் அண்ணை அவாவை எங்கயோ விதியின் விளிம்பில் சந்திச்சு, என்னவோ சிலப்பதிகாரக் கானல் வரிகள் சொல்லி மயக்கி, என்னத்தையோ மன்மதன் அம்புபோலக் காட்டி இளக வைத்து


                                                " படிச்சு என்னத்தைக் இனிக் கிழிக்கப் போறாய்,நீ இல்லாட்டி பொலிடோல் குடிப்பேன் "


                                                         எண்டு எப்படியோ பெண்களின் பலவீனத்தை சாதகமாக்கி மனம் மாற்றி ஒரு நாள் ஊருக்கு அதிகம் தெரியாமல் அவர்கள் கலியாணம் நடந்தது.

                               " தங்கச்சி கட்டும் வரை நாங்கள் கலியாணம் கட்ட மாட்டோம், அவளுக்கு டாகுத்தர் அல்லது எஞ்சினியர் அல்லது அக்கவுன்டன் மாப்பிள்ளை பார்த்து , வீடு வளவு சீதனம் கொடுத்து , நகை நட்டு அள்ளிப் போட்டு , கலியான வீடுக்கு வீதிவரை பந்தல் போட்டு , ஊருக்கு வெத்திலை பாக்கு வைச்சு, வாற எல்லாருக்கும் ரோசாப்பு பன்னீர் தெளிச்சு, புதுத் தம்பதிகள் கால்கள் பூ மியில் படாமல் கோவிலில் இருந்து வீடு வரை நடை பாவாடை விரிச்சு,  பத்மநாதன் மேளக் கோஸ்டி பிடிச்சு, இரவு ரங்கன் கோஸ்டியின் பாட்டுக்கோஸ்டி கூப்பிட்டு ஊரை அதிர வைச்சு .....ராசாத்தி போல வாழ வைப்போம் ...." 


                            எண்டு உறுதிமொழி கொடுத்த நாலு அண்ணன்களும் வெறுத்துப்போய் அதுக்கு பிறகு அவாவோட தொடர்பையே துண்டித்து விட்டார்கள்.

                                     

ஆனந்தன் அண்ணை கலியாணம் கட்டின நேரம் மிக மிக நல்ல மனிதர். பிறகு கொஞ்சம் அவர் வேலை அவரை உலைக்கத் தொடங்கின நேரமும் மிக நல்ல மனிதர் . கொஞ்சநாள் சாந்தி அக்காவோட கதவழிப் பட்டுக்கொண்டு இருந்த நேரமும் நல்ல மனிதர் .


                              அதன் பின் என்ன நடந்ததோ தெரியாது குடிக்காத நேரத்தில மட்டும் அவர் கொஞ்சம் நல்ல மனிதரா இருந்தார். !

                                   

அவர் யாழ்பாணத்தில இருந்து சங்கானை மனியதிண்ட இசுசு லோரியில புகையிலை ஏற்றிக்கொண்டு கொழும்புக்குப் போகும் லோரியில டிரைவரா வேலை செய்தார்.


                                                   மாசத்தில ஒரு கிழமைதான் சாந்தி அக்காவோட வீட்டுக்கு வந்து நிற்பார் ,மற்ற நாட்கள் எல்லாம் நேரம் ,காலம் இல்லாமல் , யாழ்ப்பாணம் - கொழும்பு இரண்டையும் இணைக்கும் கண்டி ரோடில , அந்த இசுசு லோறியக் கலியாணம் கட்டின மாதிரி அதோட தான் அவரோட சீவியம் போகும்.

                                                 

ஆனந்தன் அண்ணை வீடுக்கு வார அந்த ஒரு கிழமை நாட்களில் , கையோட அவர் ஓடுற இசுசு லொறியையும் கொண்டு வந்து எங்களின் வீடுக்கு பக்கத்தில இருந்த பால்ப் பண்ணை இருந்த வெறும் பள்ளக் காணிக்கை விட்டுட்டு , அதை, வேண்டுமெண்டே ஏறக்குறய மறந்த மாதிரிதான் இருப்பார்.


                                                   நான் அதில ஏறி விளையாடுவான் ,கியர் மாத்துவன் ,கோன் அடிப்பன் , அச்சிலேடரை அமத்துவன், அங்கால இன்காலா கையால சிக்னல் போடுவேன் , சில நாட்கள் அந்த லொறியை யாழ்பாணத்தில இருந்து கொழும்புக்கு ஒரு அக்சிடண்டும் படாமலே கண்டி ரோட்டில ஒட்டிக் கொண்டு போய், முருகண்டியில் சயிட் எடுத்து நிற்பாட்டி, இறங்கி பிள்ளையாருக்கு தேங்காய் உடைச்சுப்போட்டு ஒரு சேதாரமும் இல்லாமல் கொழும்புக்கே கொண்டு போயிருக்கிறேன் .

                        ஆனந்தன் அண்ணை நான் லொறி ஓடுறதை பாத்திட்டு , ஒருநாள்

                           " உமக்கு என்ன லொறி ஓடுற டிரைவர் ,வேலை வளர்ந்து செய்ய விருப்பம் போல இருக்கு , ஆனால் அந்த நசல் வேலை மட்டும் செய்யவேண்டாம் , நான் ரோட்டு ரோட்டா வீடு வாசல் இல்லாமல் , பொஞ்சாதி முகத்தைப்பார்த்து மாதக்கணக்கில் சீரளியிர கேவலத்தை பாரும் , நல்லாப் படிச்சு கதிரையில் இருந்து உத்தியோகம் பார்க்கிறதுக்கு படியும், வாகனம் ஓடுறது ஆபத்தான வேலை, சறுக்கினா சில நேரம் சவுக்காலையில் தான் வாழ்க்கை முடியும் "

                                             எண்டு அடவைஸ் போல சொன்னார் ,



                                          அவர் சொன்னது எனக்கு நடந்தது ,அதை  முடிவில் சொல்லுறன் .

                                         

ஆனந்தன் அண்ணை வீட்டுக்கு வந்த முதல் இரண்டு நாளும் ,தலை கரணமாக் குடிப்பார். குத்துவிளக்குப் போல எந்த முக்கியமான சமய நாட்களின் நல்ல நேரமெல்லாம் சாமி அறையில அபிராமி அந்தாதி பாடிக்கொண்டு இருக்கிற சாந்தி அக்காவைப் போட்டு அடிப்பார்.


                                              அயல் அட்டை வீடுகளுக்கு அடிச்சு நொறுக்குற, சத்தம் கேடகாமல் இருக்க ,டேப் ரெகொர்டரில் " ஆனந்தம் விளையாடும் வீடு ,இது அன்பாலே உருவான கூடு ,,,,," என்ற பாடலை உரத்துப் போட்டுடுதான் ,சாந்தி அக்காவுக்கு போட்டு விளையாடுவார் ,


                                              சாந்தி அக்கா ,பிறந்ததே கணவனிடம் உதை வேண்டவும் , காதலித்துக் கலியாணம் கட்டினதே அடி வேண்டத்தான் என்பது போல ,ஒண்டும் சொல்லாமல் , நல்ல அடக்க ஒடுக்கமான குடும்பப்பெண் போல அடி வேண்டுவா !

                                

 இரவு நல்லா வெறி ஏற, அவர்கள் வீடுக்கு முன்னால , எங்களின் வீட்டு மதிலோட ஒட்டிக்கொண்டு நின்ற வேப்பமரத்துக்கு கீழ, ஓலைப் பாயைப் போட்டு , ஆனந்தன் அண்ணை அண்ணாந்து கிடந்து கொண்டு

                            " அமைதிக்குப் பெயர் தான் சாந்தி ,,எடியே சாந்தி , எடியே சாந்தி , என் அமைதியில் ஏதடி சாந்தி ,எடியே சாந்தி ,எடியே சாந்தி ,,உன் உறவினில் ஏதடி சாந்தி,,எடியே சாந்தி ..... "

                                 எண்டு கோவமாப் பாடுவார் , சாந்தி அக்கா சத்தமில்லாமல் அவர்கள் வீட்டு வெளி விறாந்தையில் இருந்து அன்புக் கணவன் மனமுருகிப் பாடுறதைக் கேட்டுக் கொண்டிருப்பா. அவர் படுத்து கிடக்கும் வேப்ப மரம் காத்தில ஆட

                              " ஆரடா அவன் வேப்ப மரத்தை ஆட்டுறவன் , எடியே சாந்தி உன்ற கள்ளப் புருஷன் வந்து மரத்தில ஒளிஞ்சு நிக்குரான் போல "

                                                      எண்டு பேசுறது எங்களின் வீடுக்கு கேட்கும் ,நான் அம்மாவிடமே கேட்டிருகேறேன்

                    " ஏனம்மா ஆனந்தன் அண்ணை , சாந்தி அக்காவை வாய்க்கு வந்தபடி திட்டுறார் ?"

என்று  , அம்மா அதுக்கு

                                          " சாந்தி பாவமடா , சிவானந்தனும் நல்ல பொடியன் தான் , வேலை கஸ்ரத்தில ரெண்டுநாள் குடிச்சுப் போட்டு உளறுறான் , உலகத்தில இப்படி பல வீடுகளில் நடக்குது தானே, குடி மனுசரை நிதானமாய் ஜோசிக்க விடாது , புத்திசாலி நரியே கள்ளைக் குடிச்சுப் போட்டு ஓட்டைப் பானைக்க விழுந்த மாதிரி ஒருநாள் கஷ்டத்தில விழுத்தும்,  நீயும் இந்த குடி வெறியப் பழகி சீரளியாதையடா!"

                                    எண்டு சொன்னது நினைவு இருக்கு !.



                                                 அம்மா நரி ஓட்டைப் பானைக்க விழுந்த மாதிரி ஒருநாள் கஷ்டத்தில விழுத்தும் எண்டு சொன்னதும் எனக்கு நடந்தது ,அதையும் கதையின் முடிவில் சொல்லுறன் .

                                       

ஆனந்தன் அண்ணை தூங்கின பிறகுதான் சாந்தி அக்கா ,அவாவுக்கு விரும்பின , எப்பவுமே பாடும் ஒரு பாடலை பாடுவா ! சும்மா சொல்லவில்லை சாந்தி அக்கா நல்லாப் பாடுவா .  அவா சங்கீதம் படித்தவர்கள் போல " கமகம் , சங்கதி " எல்லாம் வைத்து பாடுவா ,அவா பாடிய அந்த ஒரே ஒரு பாட்டு , அவா அந்த யாழ்ப்பான இரவின் அமைதியில் பாடியதால் மட்டு மே இப்பவும் 25 வருடங்களின் பின்னும் எனக்கு நினைவு இருக்கு ,

                               "ஊரெங்கும் தேடினேன் ஒருவனைக் கண்டேன் , அந்த ஒருவனுக்குள் தேடினேன் உள்ளதைக் கண்டேன் " என்ற அந்த
பாடலின் சரணத்திலவரும்


                     " காண வந்த மாளிகையின் கதவு திறந்தது ,அங்கு கருணையோடு தெய்வம் ஒன்று காத்திருந்தது ,.." 


                                      என்ற வரிகள் அவா படிக்கும் போது விக்கி விக்கி அழுவா ,,அந்த பாடலின் கடைசி வரிகளான 

                           " வாழ எண்டு நீங்கள்சொன்னால்  வாழ சம்மதம் , இல்லை மறைய எண்டு நீங்கள் சொன்னால் அதுக்கும் சம்மதம் ....." 

                                என்ற வரிகளை திருப்பி திருப்பி வேப்ப மரத்தைப் பார்த்துப் பாடிப்போட்டு ,கொஞ்சம் அமைதியாகி , அந்த கடைசி வரியை கொஞ்சம் மாற்றி "

                                        " வாழ எண்டு நீங்கள் சொன்னால்   வாழ சம்மதம் , இல்லை சாக எண்டு நீங்கள் சொன்னால் அதுக்கும் சம்மதம் ....."

                                     எண்டு பாட்டிப்போட்டு, வேப்ப மரத்துக்கு கீழ குறட்டை விடும் ஆனந்தன் அண்ணையை , ஒரு " பெட் சீட் " எடுத்துக்கொண்டு வந்து , காலையில குளிரும் எண்டு நினைச்சோ என்னவோ , இழுத்து மூடிப் போட்டு , வீட்டுக்குள் போய்ப் படுத்துருவா!






காலையில ஆனந்தன் அண்ணை ,வேற மாதிரி இருப்பார் . சாந்தி அக்கா அதேபோல இருப்பா .பொதுவா இப்படி சம்பவங்கள் இரவில நடக்கும் வீடுகளில் அடுத்தநாள் காலை "தாய்குலம்களின் " சூரன் போர் நடக்கும் ! ஆனால் சாந்தி அக்க ஒண்டுமே சொல்லமாட்டா , ஒண்டுமே நடக்காத மாதிரி

                                      " இண்டைக்கு கூனி இறால் வேண்டியந்து , முருங்கை இலை போட்டு சுண்டுவமாப்பா ? "

                                           எண்டு கேட்க ஆனந்தன் அண்ணை , மூலயில் ஒரு பூனைக் குட்டி போல பதுங்கிக்கொண்டு இருந்து , அந்த கேள்விக்கு வாயைத் திறந்து பதில் சொல்லவே சக்தி இல்லாத மாதிரி தலையை மட்டும் ஆட்டுவார் , சாந்தி அக்கா

                                     " மட்டுவில் கத்தரிகாயும் வேண்டிக்கொண்டு வாறன் , உங்களுக்கு விரும்பின வெள்ளக் கறி வைப்பம் ,என்னப்பா !" 


                       எண்டு போட்டு ஒரு பிளாஸ்டிக் கூடை யை எடுத்துக்கொண்டு

                                   " தலை இடிகுதென்டா, நேற்றையான் மிச்சம் கொஞ்சம் கிடக்குதெல்லோ , அதை மட்டும் சாப்பிட முதல் குடியுங்கோ , என்னப்பா "

                                         எண்டு சொல்லி போட்டு சந்தைக்குப் போவா ! ஆனந்தன் அண்ணை தலையைக் குனிஞ்சுகொண்டு இருப்பார்.



ஆனந்தன் அண்ணையையும் ,சாந்தி அக்காவையும் பற்றி ,20 வருடங்களின் பின் ,யாழ்ப்பாணத்தில. சின்ன வயசில்......" நடந்த சம்பவத்தை நினைவில்த் தொடக்கி எழுவதில் ஒருவித அலாதியான இன்பம் கிடைகிறது , தொலைந்து போன ஒரு தொடர்கதையை தொடர்வது போல இருக்கு அதுதரும் நினைவுகளின் இரைமீட்டல்....

                                   
சாந்தியக்கா  போன்ற யாழ்ப்பாணக் ..,"...கதைகளுக்கு "அவுட் லைன் ஸ்கெட்ச் "எழுதி வைத்து ,இன்னும் எழுத நேரம்கிடைக்கவில்லை .  அந்தக் கதைகள் எல்லாம் சாந்தியக்கா வீட்டு வேப்பமரம் போல ஏக்கமா என்னைப் பார்த்துக்கொண்டு இருக்குதுகள் . முதல் பிரசினை எனக்கு கொம்புடரில் தமிழ் எழுதுவது .  அதைவிட தமிழ் இலக்கணம் உதைக்குது.. ஒழுங்கா தமிழ் மொழியில் பூனைக்குட்டி போல பூந்து விளையாடி எழுதமுடிவதில்லை . எப்படியோ

                              ஆனந்தன் அணையையும் ,சாந்தி அக்காவையும் பற்றி நினைவு வந்ததே ...ஒரு முறை பிரான்ஸ் பாரிஸில் இருந்து வைனைக் குடிச்சுப்போட்டு , 


                " வைன் குடிச்சா காத்துப்படத்தான் வெறி ஏறும் " 

                                      எண்டு ஒரு வெறிக் குட்டி சொன்ன அட்வைசை நம்பி , காத்துப் படாமல் இருக்க காரின் ஜன்னல்களை இறுக்கி மூடிப் போட்டு , கார் ஓடிக்கொண்டு பல மணித்தியாலம் பிரான்சில் இருந்து சுவீடன்க்கு , ஜெர்மன் நாட்டு அதிவேக ஓட்டோபான் நெடுஞ்சாலையில் அசராமா , போர்மிலா வன் டிரைவர்  ,மைகள் சூமெகர் போல ஓடிக்கொண்டு வந்து ,பெல்ஜியத்தில் ஒரு சின்ன குறுக்குப் பாதையில் இறக்கி , மெதுவாக ஓடிவந்து , கார் பார்கிங்கில் நிறுத்தி வைத்திருந்த ஒரு காருக்கு ,பின்னால அடிச்சு ,என்னோட கார் எஞ்சின் தீப்பிடிச்சு எரிய ,மயிரிழையில் உயிர் தப்பினேன் !


                                                     20 வருடங்களின் பின், உபதேசம் உறைத்த அதுக்குப் பிறகு இன்று வரை கார் ஓடுவதில்லை !

                                      சின்ன வயசில் அம்மா சொன்ன அட்வைசிலும் , ஆனந்தன் அண்ணை சொன்ன அட்வைசிலும் வாழ்க்கைப் பாடத்தை யாரும் தியரியாப் படிக்கவே முடியாத விசியம் இருக்கு எண்டு விளங்க எனக்கு 20 வருடங்கள் எடுத்து இருக்குது !.


.



" சொல்வதெல்லாம் பொய் "

விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்தில், தமிழ்மொழி எல்லைகளை வரையறுக்க, தமிழ் ஈழம் ஒரு தேசமாக, சுதந்திரமாக போக வர முடியாத சுற்றிவளைப்புகள், கண்களைக் கட்டிக் கடத்தும்  நடு இரவுக் கைதுகள் , இராணுவச் சீருடைகளை  வெறுக்கும் இறுதிக் கனவாக, விடுதலைதான் ஒரே வழி என்று தலைமறைவாகத் தத்துவம் சொன்ன முன்னொரு காலத்தில் " இருந்தால் உசிர் போனால் மசிர் " என்று எல்லா இளையவர்களும் திடீர் திடீர் என்று சொல்லாமல்க் கொள்ளாமல் இயக்கங்களுக்குப் போனார்கள். அதில யார் யார் எந்த எந்த இயக்கத்துக்குப் போனார்கள் என்று அந்த நேரம் சரியாத் தெரியாது, அதுக்குக் காரணம் எல்லாருமே இருட்டில் தான் ஏதோ ஒரு இயக்கத்துகு திசை தெரியாத பறவைகள் போலப்   போனார்கள்.

                                   இளவயதில் எங்களின் குளத்தடிக் குழப்படிக் குருப்பில் இருந்த பலரருக்கு  மீசை அரும்பா முளைச்சு, தோள்ப் பட்டை நடு விலா எலும்பால் விரிஞ்சு, கசகச எண்டு சூரைப் பத்தை போல மயிர் கண் காணாத இடத்தில வளரத் தொடங்கின நேரம் ,நெஞ்சை நிமித்திக்கொண்டு எல்லா இயக்கத்துக்கும் அரசியல் அடிப்படை தெரியாமல் வெளிக்கிட்டுப் போன வீராதி வீரன்களில் முக்கியமான ஒருவன்  கொழுவி குமாரு, முப்பது வருட விடுதலைப் போராட்டத்தில் சிதறு தேங்காய் ஆகாமல் தப்பி இப்பவும் மாதுளம்பூ  நிற  வீராளி அம்மாளாச்சியின் அண்டமெல்லாம் காக்கும் கடைக்கண் பார்வையால்த் தப்பி  யாழ்பாணத்திலயே இருக்கும் ஒரு அதிசய பிறவி அவன்.

                                 கொழுவி குமாரு எப்படி தப்பி இருக்கிறான் என்பது எனக்கு தெரியவில்லை. அதுக்குக் காரணம் துவக்கைக் காட்டி எல்லாரையும் பாப்பா மரத்தில ஏத்தின இயக்கத்துக்கு  ,மலிபன் பிஸ்கட் வேண்டிக் கொடுத்து, முடக்கொத்தான் வேலிக்கை மடக்கி வைச்சு நெஞ்சுச் சட்டைக்கை கையைப் போட்டுத் துலாவி லவ் பண்ணிக்கொண்டு இருந்த, கொழும்பில பிறந்து வளர்ந்து எண்பத்து மூன்று கலவரத்தில்  கப்பலில் அகதியா யாழ் வந்த  சாருலதா என்ற  லைனுக்கும் சொல்லாமல் ஒரு இரவு நாகர்கோவிலுக்கு வான் ஏறி, மணல்காட்டில் வள்ளம் ஏறி , மரவள்ளிக்  கிழங்கு திண்டு ட்ரைனிங் எடுத்து , தேசவிடுதலையை வெறும் காலில் செருப்பும் இல்லாமல் சொல்லிக் கொடுத்த இயக்கத்துக்குப் போனவன், குறைநினைக்க வேண்டாம் ,  சொறி இப்படி சொல்வது பிழை ,அவன் தேசியத்தில்   உள்வாங்கப்பட்டவன் எண்டு தான் சொல்ல வேண்டும் ,இல்லாட்டி வரலாறு என்னை இந்த நுற்றாண்டு முழுக்கவும்  மன்னிக்காது.

                                அவன் போன இயக்கம் தான் அதி நவீன ஆயுதங்கள் வைச்சு இருந்த இயக்கம். மற்ற இயக்கங்கள் எல்லாமே இந்தியா கொடுத்த AK 47 துவக்கை வைச்சு  " பனை மரத்தில வவ்வாலாம் சிங்களவன் சவாலாம்  " எண்டு நேர்சறிப் பிள்ளைகள் போல நோண்டிக் கொண்டு இருந்த நேரம் , கொழுவி குமாரு அவன் இருந்த இயக்கம் வைச்சு இருந்த ஜெர்மன் நாட்டு ஹெக்ளர் அண்ட் கொச் நிறுவனம் தயாரிச்ச G3A3 துவக்கை கொழுவிக் கொண்டு முதல் முதல் படம் எடுத்து எல்லாருக்கும் காட்டினவன். அதுக்காக தான் அவனுக்கு கொழுவி குமாரு என்று பெயர் வந்தது என்று நினைக்க வேண்டாம், அது வேற ஒரு காரணம் சாருலதா கதையில் இருக்கு . பிறகு அதை எழுதுறேன்..

                         குமாரு இப்பவும் யாழ்பாணத்தில் இருக்கிறான். அவன் இயக்க அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கிறான்.  நான் ஐரோப்பாவில் அரசியல் அகதி என்று டமால் டுமில் விட்டு, வெள்ளைக்காரனின் சுதந்திர நாட்டில்  கொக்கத்தடியில் கொம்பு வைச்சு, அதில கோவணத்தைக் கொடி போலக் கட்டித் தொங்கவிட்டு வாழ்கையை  ஒட்டிக்கொண்டு  வசிப்பது அறிந்து, எங்கயோ தேடிபிடித்து ,யார் மூலமாகவோ என் தகவல் பெற்று ஒரு மெயில் என்னைபோல தப்பி ஓடிவந்து வெளிநாட்டில் வசித்துக்கொண்டு, சொத்தி ஆடு எட்டிப் பார்த்ததுக்கு  அடியடா படலையில் எண்டானாம் போல  அது மலருது ,,இது  மலருது .,தேசம் விடியுது ,,கொடி  ஏறுது என்று உசுப்பு ஏற்றும் கோஸ்டிகளை  நார் நாராகக் கிழித்து அனுப்பி இருந்தான்.   அதில அவன் ஏதோ ஒரு சண்டையில் வலது காலை இழந்து, இப்ப ஜெய்பூர் செயற்கை பிளாஸ்டிக் கால் போட்டு இருப்பதாக சொல்லி, அதை உறுதிசெய்ய படமும் அனுப்பி இருந்தான்.

                குமாரு எழுதின , " எடேய்  வம்பில பிறந்த தேவடியாள்  மக...... . ஒருநாள் இல்ல ஒருநாள்  மாட்ட வேண்டி வரும்  அப்ப......... கருக்கு மட்டையால ......விளாசுவேன் ....ஓடிப்போய் நிண்டு......இக்க   குசு குசுதுக்கொண்டு ... முதுகெலும்பு இல்லாத  பச்சோந்தி பரதேசிகள் ,,,,,,அம்பிட்டா .......இழுத்து வைச்சு   அரிஞ்சு  போட்டுதான்  மற்ற  வேலை   பார்ப்பேன்...... ஒருநாள்....... நீங்கள்...... எல்லாம்....க்க ..,,,ஐப்  பிடிச்சுக்கொண்டு . இங்கே வந்து தானே   ஆகவேண்டும் ..  " என்று  எழுதி இருக்கும் உணர்ச்சிப் பிழம்பான அந்த  மெயில் தனியா ஒரு நாள் இங்கே போடுறேன். என்ன அவன் பச்சை பச்சையா படு தூசனத்திலேயே பச்சையா எழுதியுள்ளதால் அதை எடிட் செய்யாமல்  போட முடியவில்லை.

                                        மூன்று தசாப்த காலத்தின் பின் குமாரு உசிரோடு இருப்பது எவளவு ஆச்சரியமோ அவளவு ஆச்சரியம் அவன் தன்னோட அனுபவங்களை எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டுருப்பது. கொழுவி குமாரு எங்களோட குளத்தடிக் குழப்படிக் குருப்பில் இருந்த நேரமே சூடு சொரணை இல்லாதவன், அவனோட கமக்கட்டில காஞ்சோண்டி இலையை சும்மா விளையாட்டாக தடவினாலே, பழங்கிணற்றடிப் பிள்ளையார் போல ஒரு அசுமாத்தமும் இல்லாமல் இருப்பான், அப்படி அவன் கழுவுற மீனில நழுவுற மீன் போல இருந்ததால் ,ஒருவேளை  குளறுபடிகளில் குத்துக்கரணம் போட்டு தப்பி இருக்கலாம் என்று நினைக்கிறன்.

                                   கதை புனைவதில் தயிர் கடைவதைப் போலக் கில்லாடியான கொழுவி குமார எழுதி அண்மையில் வெளி வந்த " சொல்வதெல்லாம் பொய் " புத்தகம் எப்படியோ எனக்கும் வாசிக்கக் கிடைத்தது. யாழ்பாணத்தில ஒரு சின்ன வாசிகசாலை அறையில் தொடக்க நிகழ்வாக  குத்துவிளக்கும் கொழுத்த மனசாட்ச்சி விடாததால் தலைமை தாங்கியவர் நுளம்புத்திரி ஒன்று பத்த வைச்சுப் போட்டு , வெளியீட்டு விழாவிற்கு பெருந்திரளாக வந்திருந்த வாசகர்கள் முன்னால் வாயத் திறந்தால் இன்னும் அதிகம் பொய் வரும் என்பதால், தலைமை தாங்கிய விழாத்  தலைவர் விநாயகமூர்த்தி விதானையார் ,

                       " இது உண்மைக் கதை இல்லை, முழுவதும் கற்பனை. முடிவில் யாவும் கற்பனை என்ற முடிவை  நீங்களே போட்டுக்கொள்ளுங்கள் என்ற சிந்தனையின் போக்கில் வரிக்கு வரி எழுதப்பட்ட புத்தகம் ,ஆனாலும்  எல்லாக் கதைகளில் வரும்  உண்மை மனிதர்களின் கற்பனைக் கதை போல கொழுவி குமாரு  ஆதரங்களுடன் எழுதிய புத்தகத்தைப் பற்றி தன்னடக்கத்துடன் இன்று ஒன்றும் பேசமாட்டார்...."

                                     என்று விநாயகமூர்த்தி விதானையார் , சொல்லி அந்த நிகழ்வு அதோடு முடிந்தது என்று கேள்விப்பட்டேன் .  ஆனால் கொழுவி குமாரே மனசாட்சிக்கு விரோதம் செய்யாமல் நடு நெத்தியில நாராயணா நாராயணா என்று நாமம் போட்டு, கொஞ்சம் ஒத்துக் கொல்லும்படி,  நியாயமா கொஞ்சப் பொய்கள் தான் அதில தேர்ந்தெடுத்து எழுதி இருக்கிறான். அப்படிதான் அந்த இயக்கத்தில் இருந்து காசைச் சுருடிக்கொண்டு அல்வா கொடுத்திட்டு வந்து  ,பின்நாட்களில் சர்வதேசப் பொறுப்பாளர் என்ற பதவியில் இருந்த நேரம் இன்னும் கொஞ்சம் காசை சுருட்டிக்கொண்டு ஓடிய ஜே ,கே . கருத்து சொல்லி இருக்கிறார்.

                                  " சொல்வதெல்லாம் பொய் " புத்தகம் பற்றி எனக்கு விமர்சன ஜாம்பவான்கள் போல விமர்சனம்  செய்ய தெரியாததால் ஒன்றுமே எழுத முடியவில்லை,ஆனாலும் பல கதைகளில் பனை மரங்களுக்கு நடுவால பட்டாம்பூச்சி பறக்குது, கொலை விழுத்திய துவக்குகளின் நுனியில் நாவூறு  படாமல் இருக்க தேசிக்காய் நேர்ந்து தொங்கவிட்டு இருக்கு ,பொம்மைவெளி  பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட சம்பவக் கதையில் ஒரு சின்ன சொப்பின் பாக்குக்க கொத்துரொட்டி கொத்தும் தண்டவாள தகட்டை வைச்சே குமாரு கதைவிட்டு இருக்கிறான். கப்பல் தண்ணியில ஓட்டிச்சா,,அல்லது தண்ணி கப்பலுக்க ஓடிச்சா என்று புரியமுடியாமல் உளுந்துவடையில உளுந்து இல்லாமல் சிந்தாமணிக் கடலை தெரியுது. அப்புறம் குமாரே மண்டையில் போட்ட என்று நாங்கள் கேள்விப்பட்ட சுக்குட்டி, நடுவில், தனபாலசிங்கம் , கொலைகள் பற்றி குமாரு நல்லா ஜட்டியை இறுக்கிப் போட்டு மறைச்சிட்டான் போல இருக்கு.  

              தகடு வைச்சுச், காத்து இறக்கிறதுக்கு முதலே சண்டையில் கால் இழந்ததால் விலத்திப்போக அனுமதிக்கபட்டு , நொண்டி நொண்டி வெளிய வந்து,  இயக்கத்துக்கு போன நேரம் ,காதலும் கத்தரிக்காயும் என்று விட்டுப்போட்டுப் போன பழைய  சாருலதாவைத் தேடி இருக்கிறான்  அவள் ,

                      " நீ செத்தா அடுத்தநாளே மண்ணெண்ணெய் ஊதிக் கொழுத்திப் பத்த வைச்சுப் போட்டு செத்துப்போவேன் "

                                         என்று காதலித்த நேரம் சொன்ன  வசனம்  " சொல்வதெல்லாம் பொய் " என்ற புத்தகம் போலவே உறுதியாகச் சொல்லி அழுது குழறிய   அவள்,   ஹொலண்டுக்கு இன்னொருத்தனோடு கலியாணம் கட்டிப் போனது கேள்விப்பட்டு உடைந்து போய்..... எப்படியோ குமாரு பாவம்,  அவனும் எல்லா உண்மைகளையும் போட்டு எழுதி இருக்கிறான். அதால  பல்லு இருக்கிற நேரம் தானே பகோடா சாப்பிட முடியும் என்று மனித உரிமைகளை மதிக்கும் மனிதாபிமானிகள் அவனுக்காகப் பரிந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அந்தப் புத்தகத்தில் வரும் பாத்திரங்கள் பலரோட பெயர் உண்மையாக இருப்பதால் அதை ஒரு வரலாற்று ஆவணம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வரலாற்று அறிஞர் கறிக்கடை கந்தசாமி சொல்லியுள்ளார்.

                                       ஆனால் அந்தப் புத்தகத்தை பற்றி கொம்புடர் குத்து மன்னன்களில் விமர்சன விசர்த்தனத்தில் அளவுக்கு அதிகமாக பொய் கலந்திருக்கு. பெட்டிசம் பாலசிங்கம் போன்ற நேர்மையான விமர்சகர்கள் தற்சமயம் உசிரோடு இல்லாததால் இதில எது உண்மை,எது பொய் என்று பிரித்தறிய முடியவில்லை என்று இன்னுமொரு பின்கதவால புகழ் பெற்ற  விமர்சகர் அவரோட வயிதெரிச்சல் இணயத் தளத்தில் அற்புதமாக எழுதி இருக்கிறார்.

                           குமாரு அவன் இயங்கிய, அல்லது அவனை வைச்சு இயக்கிய இயக்கத்தின் அலங்கோலத்தை மட்டுமில்லை ,வேற இரண்டு இயக்க அலங்கோலத்தையும் எழுதியுள்ளான், அதில ஒரு இயக்கம் பற்றி வாசிப்பவர்களின் தோளில ஏறி நின்றே ஜேம்ஸ் பொன்ட் படங்களில் வரும் றோயர் மூர்  செய்த சாகச சம்பவங்களை விட , வாயில ஈ போறது தெரியாமல் ஆவெண்டு பார்க்க வைச்சு  காதில பூ சுத்தியுள்ளான்.

                                        பெண்களைப் பற்றிய கதைகள் சிலதில் கொழுவி குமார ஆதரங்களுடன் தக்காளித் தொக்குக்கு கடுகு, சின்ன வெங்காயம் போட்டு தாளிச்ச மாதிரி நல்லாத் தாளிச்சு எடுத்து, சார்லஸ் புயுகொஸ்கி போன்ற  ஒரு சிறந்த கதை சொல்லி போலவே எழுதி இருகிறான்.ஆனால் அந்தக் கதைகள்  ஆணுறை போட்டு பாதுகாப்பாக எழுதப்பட்டு இருந்தாலும்  விரசம் அதிகமா இருக்கு என்று அவனைப் பலர் போட்டு உருட்டவும் இணுவில் அண்ணாக்கோப்பி கம்பனி  நல்லூர் கோவில் திருவிழாவில் அவர்கள் கோப்பி விளம்பரத்துக்கு ஒரு குண்டு மனிதர் சிரித்துக்கொண்டு நிற்கும் படம் போல அதை எல்லாம் அசட்டை செய்யாமல் " அலைஸ் இன் வோண்டர் லான்ட் " கதையில வாற "லூயிஸ் கரோல்  " பூனை போல அவன் இருப்பது ஒரு இலக்கிய ஆச்சரியம்.

                                            உங்களுக்கு மட்டும் உண்மையைச்சொன்னால் என்ன , வாசிக்கிற சராசரி  வாசகனுக்கு என்னமோ  நரிக்குக்  கடைசிப் பல்லு இருக்கும் வரை ஞானம் வராது என்று சொன்ன மாதிரி,  கொழுவி குமாரு உரிச்சு எடுத்து எழுதியிருக்கிற கதைகள் விளக்குமாத்துக்கு குஞ்சரம் கட்டித் தொங்க விட்டு, தென்னம் கள்ளில கோதுமை மாவை வைச்சு  மாவிளக்கு போட்டு அதைத் தீத்தியது போல உள்ள அந்த புத்தகத்தை   , புலனாய்வுப் பின் தொடர்வு ,  நெத்திப்பொட்டில டொக்கு டொக்கு , மின்கம்ப மரணதண்டனை போன்ற சாமானிய மனிதர்கள் கொட்டாவி விட வாயைத் திறந்தாலும் கிடைத்த வீரசுவர்க்க வரலாற்றுச் சாவுக்கும் பயப்பிடாமல் துணிந்து  " சொல்வதெல்லாம் பொய் "  களை   எழுதியுள்ளதை வரவேற்கத்தான் வேண்டும் போல இருக்கு.

.